பவளவிழாக்காணும் கலைஞர் மாவை நித்தியானந்தன்.

அவுஸ்திரேலியாவில்  பாரதி பள்ளியை முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்து இயங்கவைத்து வரும் ஆளுமை !!

                                            முருகபூபதி

“ தமிழ்க்குழந்தைகளை மகிழவைக்கக்கூடியதான காட்சி ஊடகத்தின் வளர்ச்சி தமிழர் புலம்பெயர்ந்த சூழலில் மட்டுமல்ல, தாயகச் சூழலிலும் மிக அவசியமான ஒன்றாக உள்ளது. இத்தேவையை நிறைவுசெய்வது எப்படி என்பதைப்பற்றி எமது சமூகம் சிந்தித்தல் அவசியம்.”என்று பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே in எழுதியும் பேசியும் வந்திருக்கும் கலைஞரும் எழுத்தாளருமான மாவை நித்தியானந்தன் இந்த ஆண்டு தனது 75 வயதினை அடைந்து பவள விழாக் காண்கின்றார்.

மாவை நித்தியானந்தன், சிறுவர்களுக்காக நாடகம் எழுதி இயக்கியவர் மாத்திரமல்ல, கல்வி, விவசாயம், தொடர்பாக சமூக அக்கறை கொண்ட அயராத செயற்பாட்டாளருமாவார்.

பிறந்த ஊருக்குப்பெருமை சேர்ப்பித்த கலைஞர்கள், எழுத்தாளர்கள் வரிசையில் நித்தியானந்தனும் தாம் பிறந்த மாவிட்டபுரம் ஊருக்கு தனது வாழ்வும் பணிகளும் ஊடாக புகழைச் சேர்ப்பித்தவர்.

அரைநூற்றாண்டுக்கு முன்பிருந்தே எழுத்து, நாடகம் முதலான துறைகளில் ஈடுபட்டு வந்திருக்கும் மாவை நித்தியானந்தன்,  தென்னிலங்கை கட்டுப்பெத்தை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பட்டதாரியாகவும், பின்னர் பிரிட்டிஸ் கவுன்ஸிலால் தெரிவாகி லண்டன் சென்று படித்தும் மேலதிக பட்டம் பெற்றவர்.  தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் முன்னாள் மாணவரான நித்தியானந்தன், அக்கல்லூரியில் பயின்ற காலத்திலேயே கவிதை, நாடகம்  முதலான துறைகளில் எழுதத் தொடங்கினார்.

கட்டுப்பெத்தை பல்கலைக்கழகத்தில் இணைந்த காலப்பகுதியில் கொழும்பில் கலை, இலக்கிய நண்பர் கழகம், மற்றும் தேசிய கலை இலக்கியப் பேரவை முதலான அமைப்புகளிலும் அங்கம் வகித்து மல்லிகை முதலான இதழ்களிலும் இலக்கியப்பிரதிகள் எழுதியவர்.

இலங்கையின் முன்னணி திரைப்பட இயக்குநர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிசை சந்தித்து, அவர் பற்றிய அறிமுகக் கட்டுரையை அக்காலப்பகுதியில் மல்லிகையில் எழுதி தமிழ் வாசகர்களுக்கும் அந்தத் திரையுலக மேதையை அறிமுகப்படுத்தியவர்.

கட்டுப்பெத்தை  மாணவர்களின் தமிழ்ச்சங்கத்தின் வெளியீடான நுட்பம் மலரிலும் எழுதியதுடன், அச்சங்கத்தின் ஆண்டு விழாவில் தனது ஐயா லெச்சன் கேட்கிறார் என்ற நாடகத்தையும் எழுதி, இயக்கி மேடையேற்றினார். இந்நாடகம் பல வருடங்களுக்குப்பின்னர் அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் மேடையேற்றம் கண்டது.

மாவை நித்தியின் மற்றும் ஒரு நாடகம் திருவிழா. பாடலும் வசனமும் இசையும் கலந்த அரசியல் அங்கத  நிகழ்வு.  யாழ்ப்பாணம் குடாநாடெங்கும் மேடையேறிய இந்நாடகம், வவுனியாவிலும் ஒரு பாரதி விழாவில் இடம்பெற்றது.

இவ்வாறு நாடத்துறைக்கும்  வளம் சேர்த்துள்ள மாவை நித்தியானந்தன், சிறுவர் நாடகத்திலும் தனது கவனத்தை தீவிரமாக்கியவர்.

ஆஸ்திரேலியாவுக்கு 1989 இல் புலம்பெயர்ந்த பின்னர், இங்கு வளரும் தமிழ்க்குழந்தைகளின் தேவை கருதி மெல்பன் மொனாஷ் பல்கலைக்கழகத்தில் “ பெற்றோர் பிள்ளைகள் உறவு  “ என்ற தொனிப்பொருளில் முழுநாள் கருத்தரங்கையும் 1992 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடத்தினார்.

புகலிட நாடுகளில் தலைமுறை இடைவெளியினால் தோன்றும் முரண்பாட்டுச் சிக்கல்களுக்கு அர்த்தமுள்ள தீர்வு காணும் நோக்கில் நடத்தப்பட்ட அக்கருத்தரங்கின் தொடர்ச்சியாக மெல்பனில் தமிழ்க் குழந்தைகளுக்காக  பாரதி பள்ளி என்ற பாடசாலையை ஆரம்பித்தார்.

தனது கல்லூரி ஆசானும் ஈழத்தின் மூத்த கவிஞருமான அம்பி அவர்களை அழைத்து இந்த தமிழ்ப் பாடசாலையை ஆரம்பித்தார். பாரதி பள்ளி விக்ரோரியா மாநிலத்தில் சில பிரதேசங்களில் வளாகங்கள்  அமைத்து தங்கு தடையின்றி சீராக இயங்கி வருகின்றது.

வெள்ளிவிழாவையும் கண்டுவிட்ட பாரதி பள்ளி மாணவர்களை பயிற்றுவித்து பாப்பா பாரதி என்ற குழந்தைகளுக்கான  நிகழ்ச்சிகளை தொகுத்து காணொளி இறுவட்டினையும் மூன்று பாகங்களில் வெளியிட்டார்.

அத்துடன் மெல்பன் கலைவட்டம் என்ற கலை, இலக்கிய அமைப்பினையும் உருவாக்கி, இலக்கிய கருத்தரங்குகளும் நடத்தி நாடகங்களையும் எழுதி மேடையேற்றினார்.

அவற்றுள் கண்டம் மாறியவர்கள், அம்மா அம்மா என்பன முக்கியமானவை.  கொழும்பு மெயில் என்ற பாடலும் இசையும் இணைந்த  நிகழ்ச்சியையும் மாவை நித்தி தயாரித்து மேடையேற்றினார். இந்த நிகழ்ச்சியும் பல மேடைகளைக் கண்டிருக்கிறது.

பாரதி பள்ளியில்  தமது குழந்தைப்பருவத்தில் பயின்ற மாணவர்கள், பின்னாளில் பல்கலைக்கழகம் பிரவேசித்து  பட்டதாரியானதன் பின்னர், அவர்களில் சிலரும் இதே பாரதி பள்ளியில் ஆசிரியர்களாக நியமனம் பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தகுந்த செய்தி.

பாரதி பள்ளியின் ஆண்டுவிழாக்களிலும் மாவை நித்தியின் சிறுவர்  நாடகங்களுக்கு குறைவிருக்காது.  அவுஸ்திரேலியாவில் பல்கலைக்கழகங்களில் பிரவேசிப்பதற்காக தோற்றும் மாணவர்கள் தமிழையும் ஒரு பாடமாக கற்று, தமிழ் மொழிப்பரீட்சையை எழுத முடியும்.  இந்த ஏற்பாட்டை முன்னின்று செய்தவர்களில் மாவை நித்தியும் ஒருவர்.

தமிழ் ஆசிரியர்களுக்கான கருத்தரங்குகளை நடத்துவதிலும் தமது நேரத்தை தொடர்ச்சியாக செலவிட்டு வந்திருக்கும் மாவை நித்தியானந்தன், கல்வி,  கலை, இலக்கியத்துடன் மாத்திரம் தனது  சமூக அக்கறையை வரையறுத்துக்கொள்ளாமல் அகலக்கால் பதித்து, எமது தாயகத்தில் வடக்கில் மாவிட்ட புரத்தில் தனது தந்தையின் நினைவாக திருநாவுக்கரசு  விவசாயப்பண்ணை  பயிற்சி முகாம் ஒன்றையும் பல வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்தார்.அதற்காகவும் அவர் வருடந்தோறும் அடிக்கடி இலங்கை சென்று வருபவர்.

இரவு பகல் என்று பாராமல்  ஓய்வு ஒழிச்சலின்றி இயங்கி வரும் மாவை நித்தியானந்தன்  பன்முக ஆளுமையாக எம்மத்தியில் திகழுகின்றார்.

சிறிது காலம் மெல்பனில்  எழுத்தாளர் நடேசன் வெளியிட்ட உதயம் இருமொழி மாத இதழிலும் மாவை நித்தியானந்தன் துணை ஆசிரியராக பணியாற்றியவர். அத்துடன் இங்கு விமல் அரவிந்தன் வெளியிட்டு வந்த மரபு இதழிலும் இலக்கியப்பிரதிகள் எழுதினார்.

சமகாலத்தில் இலங்கை எதிர்நோக்கியிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளுர் உணவு உற்பத்தியின் மூலமும் ஓரளவு தீர்வு காணமுடியும். இத்தகைய நெருக்கடி எதிர்காலத்தில் தோன்றக்கூடும் என தீர்க்கதரிசனமாக மாவை நித்தியும் சிந்தித்திருப்பாரோ என்றும் அந்த மாதிரி விவசாய பண்ணையை பார்க்கும்போது எவருக்கும் தோன்றலாம்.

அங்கே பல விவசாய ஆராய்ச்சி மாணவர்களும் பயிற்சி பெற்றுவருகின்றனர்.  பல்கலைக்கழகங்களில் விவசாய பீடத்தில் பயிலும் மாணவர்களும் அங்கே சென்று மேலதிக அனுபவங்களை பெற்றுவருகின்றனர்.

மாவை நித்தியின் ஆளுமைப்பண்பில் துலக்கமாகியிருப்பது அவரது தீர்க்கதரிசன இயல்புகளே.

பவள விழாக்காணும் மாவை நித்தியானந்தன், நல்லாரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றோம்.

மாவை நித்தியின் நூல்கள் பற்றிய எமது மதிப்பீடு:

மாவை நித்தி  வெளியிட்டுள்ள நான்கு நூல்கள் தமிழ் இலக்கிய உலகில்,  குறிப்பாக சிறுவர் இலக்கியவரிசையில் மிகுந்த கவனிப்புக்குரியவை.

சின்னச்சின்ன நாடகங்கள், நாய்க்குட்டி ஊர்வலம், சட்டியும் குட்டியும், சின்னச்சின்ன கதைகள்.

இந்நான்கு நூல்களில் சின்னச்சின்ன கதைகள் நூல் தவிர்ந்த ஏனைய மூன்றும் சிறுவர் நாடகங்கள்.

சின்னச்சின்ன கதைகள் சிறுவர் இலக்கிய வரிசையில் ஏற்கனவே நாம் தெரிந்துவைத்திருக்கும் கதைகள்தான். காகமும் தண்ணீரும், கொக்கும் நரியும், நரியும் பழமும், ஓநாயும் நிழலும், பொன்முட்டை வாத்து, முயலும் ஆமையும், மாடும் சுண்டெலியும், காற்றும் சூரியனும், கறுப்பும் வெள்ளையும், சிறுவனும் ஓநாயும், நியாயம், எறும்பும் புறாவும், குழந்தையும் ஓநாயும், கழுதையும் மனிதர்களும், நாயும் எலும்புத்துண்டும் ஆகிய சின்னச்சின்ன கதைகள் ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு செய்தியை தருகின்றது. சிறுவர் புரிந்துகொள்ளும்விதமாக எளிய தமிழில் செல்லப்பட்டிருப்பதனால் அவர்களின் சிந்தனையிலும் ஊடுருவிக்கொள்ளும்.

தாயக வாழ்வில் பாட்டிமாரினால் அல்லது முன்னோர்களினால் எமக்குச்சொல்லப்பட்ட அல்லது தாயகத்தில் சிறுபராய வகுப்பில் ஆசிரியர்களினால் சொல்லித்தரப்பட்ட இக்கதைகள் புகலிடத்தில் வளரும் தமிழ்க்குழந்தைகளுக்கும் பொதுவானவைதான்.

தமிழகத்தில் புகழ்பெற்ற ஓவியர் மருதுவின் வண்ணப்படங்கள் கதைசெல்லும் மாவை. நித்தியானந்தனின் சிறுவர் இலக்கியம் குறித்த உணர்வுக்கு உயிரூட்டுகின்றன.

மொத்தம் 16 சின்னச்சின்ன நாடகங்களின் தொகுப்பு 5 முதல் 10 வயதினர் நடிக்கவும் ரசிக்கவும் ஏற்றது எனச்சொல்கிறார் மாவை. நித்தியானந்தன்.

இச்சந்தர்ப்பத்தில் தமிழ் அறிஞர் மு.வரதராசன் எழுதியிருந்த நூல் ஒன்றில் குறிப்பிட்டிருந்த கருத்து நினைவுக்கு வருகிறது.

நடிப்பதற்காக எழுதப்படும் நாடகங்கள். படிப்பதற்காக எழுதப்படும் நாடகங்கள். நடிப்பதற்கும் படிப்பதற்கும் எழுதப்படும் நாடகங்கள். என்ற தலைப்பில் மு.வ. விரிவாக நாடக இலக்கியம்குறித்து அந்த நூலில் ஆராய்ந்திருந்தார்.

மாவை. நித்தி நடிப்பதற்காகவும் படிப்பதற்காகவும் எழுதியிருக்கும் சின்னச்சின்ன நாடகங்கள், அவுஸ்திரேலியாவில் சில மாநிலங்களிலும் இங்கிலாந்திலும் மேடையேற்றப்பட்டவை. இந்நூலின் இறுதியில் தயாரிப்புக்குறிப்புகள் பதிவுசெய்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள கருத்து முக்கியமானது.

அவர் சொல்கிறார்:- ஒரு நாடகத்தின் ஒவ்வொரு மேடையேற்றமும் தனித்துவமானது என்பர். ஒவ்வொரு இயக்குநனர் கையிலும் நாடகம் வெவ்வேறு பொலிவினைப் பெறும்.

• இந்நூலிலுள்ள நாடகங்களில் ‘குழுவினர்’ அல்லது ‘கதை சொல்வோர்’ வருகின்றனர். இவர்கள், அல்லது இவர்களிற் சிலர், நாடகப்பாத்திரங்களும் ஆகலாம்.

• பல நாடகங்களில், பங்குபற்றுவோரின் எண்ணிக்கையை இலகுவில் கூட்டவும் குறைக்கவும் முடியும். உதாரணமாக, ‘கரடி’ நாடகத்தில் ஒரு கரடியும் இரு நண்பர்களும், இரு கரடிகளும் நான்கு நண்பர்களும் ஆகலாம். சில நாடகங்களில் பொருத்தப்பாட்டுக்கேற்ப மேலதிகமான மிருகங்களையோ மனிதர்களையோ சேர்க்கலாம்.

இவ்வாறு ஏழு யோசனைகளை இந்நாடகங்களை தயாரித்து இயக்கவிரும்புபவர்களுக்கு தெரிவிக்கின்றார் மாவை. நித்தி.

பொதுவாகவே நாடகப்பிரதிகள் எழுதும் நாடகாசிரியர்கள் தமது நாடக நூலில் குறிப்பிடும் வாசகம் ஒன்றிருக்கிறது. ‘இந்நாடகங்களை மேடையேற்ற விரும்புவோர் முன் அனுமதி பெறவேண்டும்’

இந்தப்பொதுவான விதிமுறையை மாவை நித்தி தமது நாடக நூல்களில் பிரகடனப்படுத்தவில்லை.

சட்டியும் குட்டியும் ஒன்பது நாடகங்களின் தொகுப்பு. இந்நாடகங்கள் 8 முதல் 13 வயதினர் நடிக்கவும் ரசிக்கவும் ஏற்றவை என்று சொல்கிறார் மாவை. நித்தியானந்தன்.

நாய்க்குட்டி ஊர்வலம் ஐந்து நாடகங்களின் தொகுப்பு.

இதில் இடம்பெற்றுள்ள நாடகங்கள் 13 வயதிற்கு மேற்பட்டோர் நடிக்கவும் ரசிக்கவும் ஏற்றவை என்று குறிப்பிட்டுள்ளார்.

இதிலிருந்து சிறுவர் நாடக இலக்கியப்பிரக்ஞையுள்ள ஒரு கலைஞரின் தெளிவான சிந்தனை வெளிப்படுகிறது.

இந்நாடகங்களை நடிப்பவர்கள் சிறுவர், சிறுமியர். அதனைப்பார்த்து ரசிக்கவிருப்பவர்களும் சிறுவர், சிறுமியரே. அவர்களை அழைத்துவரும் பெற்றோர்கள் மூத்ததலைமுறையினராக இருந்தபோதிலும் அவர்களும் ரசிக்கத்தக்க நாடகங்களாக அவை விளங்குகின்றன. அதனால் நித்தியானந்தனின் உழைப்பு வீண்போகவில்லை.

தமிழ்ச்சூழலில் நாடகப்பிரதிகளுக்கு பற்றாக்குறை நீடிக்கிறது. மாவை நித்தியானந்தன் தன்னால் இயன்றவரையில் மட்டுமல்லாமல் தனது சக்திக்கு அப்பாற்பட்ட முறையிலும் இந்தத்துறையில் கடினமாக உழைத்திருக்கிறார். அடுத்தடுத்து மூன்று பாகங்களில் வெளியாகி தற்போது ஒரு குறுந்தகட்டில் பதிவாகியுள்ள ‘பாப்பா பாரதி’ உட்பட இந்நாடக நூல்கள் மாவை நித்தியானந்தன் தமிழ்ச்சிறார்களுக்கு வழங்கியுள்ள வரப்பிரசாதம்.

தமிழ்ப்பெற்றோர் இவற்றை தகுந்த முறையில் பயன்படுத்திக்கொள்வதன் ஊடாக சிறுவர் நாடக உலகையும் சிறுவர் இலக்கியத்தையும் மேம்படுத்த முடியும்.

letchumananm@gmail.com

—-0—-

“பவளவிழாக்காணும் கலைஞர் மாவை நித்தியானந்தன்.” அதற்கு 4 மறுமொழிகள்

 1. அருமையான பதிவு. மாவை இவ்வளவு அரும் சேவைகள் புரிந்த ஒரு மனிதர் என்பதை தெரியப்படுத்தியமைக்கு நன்றி.

 2. Letchumanan Murugapoopathy Avatar
  Letchumanan Murugapoopathy

  Thanks for sharing. Poopathy

 3. அருமையான தகவல் ஆக்கம். மிகச் சிறப்பு.
  முருகபூபதி ஐயாவுக்கு நன்றி.
  பன்முக ஆளுமை மாவை நித்தி ஐயாவுக்கும் பவளவிழா பாராட்டுக்கள்.
  கமலன்

 4. அருமையான தகவல் ஆக்கம். மிகச் சிறப்பு.
  முருகபூபதி ஐயாவுக்கு நன்றி.
  பன்முக ஆளுமை மாவை நித்தி ஐயாவுக்கும் பவளவிழா வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்
  கமலன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: