பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்.

காதலை அனுபவிக்க வேண்டும் -அதை எழுத
———————
“இதுவரையும் எந்தப்பெண்ணையும் தொடவில்லை. குறைந்தபட்சம் பெண்ணின் எச்சில் எப்படி இருக்கிறது எனப்பார்க்க விரும்புகிறேன்”
கார்த்திகாவிடமிருந்து எதுவித பதிலும் வரவில்லை.
“நான் இயக்க கட்டுப்பாட்டுடன் இருந்தேன். 2002இல் தலைவர் என்னைத் திருமணம் செய்ய வற்புறுத்திய போது பார்ப்போம் எனச் சொன்னேன். பின்பு இந்தியாவிற்கு இயக்க அலுவலாகச் சென்றதும் அந்த விடயம் மனதை விட்டுப் போய்விட்டது. அப்பொழுதுதான் உனது அண்ணனையும் கண்டேன்.”
மீண்டும் சாந்தன் “நான் பேசிக்கொண்டிருக்கிறேன். நீ அமைதியாக இருக்கிறாய். தூங்கிவிட்டாயா?”
“என்னத்தைப் பேச? எனக்கு இயக்கத்தில் பயிற்சியைத் தவிர வேறு அறிவோ அனுபவமோ இல்லை. படிக்கும்போது ரீச்சராக வர நினைத்திருந்தேன். அம்மா அவுஸ்திரேலியாவுக்கு அண்ணனிடம் அனுப்ப நினைத்திருந்தார். எதுவும் சரிவரவில்லை. குறைந்த பட்சம் செல்விக்கு கிடைத்த உயிராயிதமாக மாறும் சந்தர்ப்பம்கூட எனக்குக் கிடைக்கவில்லை”
“அதற்கு கவலைப்படுகிறாயா?”
“பின்ன என்ன? ஏதோ ஒரு விதமாக உயிர் போவது
நிச்சயம் என எண்ணும்போது இனத்திற்காக உயிர் போவது நல்லதுதானே?”
“உனது சிந்தனை இயக்கத்திற்கு பொருத்தமாக இருக்கு. உனக்கு நிச்சயமாக சந்தர்ப்பம் வரும். இப்பொழுது கடலை தரமாட்டாயா”
கைகளை நீட்டிக் கொடுத்தாள்.
“கடலை உருசையாகத்தான் இருக்கு”
‘வேறு இருக்கா”
“வாயில் உடைந்து மாவாக இருக்கு. பரவாயில்லையா”
“அது கூட ருசியாக இருக்கும்”
நீட்டி கையில் வைத்தாள்.
“என்ன இப்படி இருக்கு? சூடான களியாக”
“எனது வயிற்றுக்குள் போனதை கக்கி எடுத்தால் எப்படியிருக்கும்?”
“தாய்ப்பறவை குஞ்சுக்கு ஊட்டுவதுபோல் எனக்கு உணவு ஊட்டுகிறாய். இதற்கு என்ன கைமாறு செய்வேன். உன் கையை நீட்டு. இயக்கத்தின் கட்டளையை மீறி இந்தக் கையை மட்டும் தொட்டபடி இன்று உறங்குகிறேன். மிகுதி இயக்க அனுமதியுடன்தான்.”
அன்றிரவு முழுவதும் இருவரும் தூங்காமல் படுத்திருந்தனர்.
மறுமொழியொன்றை இடுங்கள்