
நடேசன்
வேலை
1985, மாசி மாதம் 18 ஆம் திகதி, திங்கட்கிழமை காலை பத்துமணி
“டாக்டர், உங்களுக்கு எல்லாம் சொல்லியிருப்பார்கள். ஆனால் நான் சொல்லப் போவது அவர்கள் சொல்லாத விடயம். இதற்கு முன்னர் இங்கிருந்த டாக்டர், வேலை செய்யும் பெண்ணோடு தகாத முறையில் நடந்து கொண்டதால் வேலையிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு வேலை போனது பெரிய விடயமல்ல. ஆனால், அந்தப் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதுதான் மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது. இதன் பின்னர் ஆறு மாதங்களாக இந்தப் பண்ணையில் டாக்டர் இல்லை.”
இரண்டு நாட்களுக்கு முன்னர் வந்த வேலைக்கான கடிதத்தை எடுத்துக் கொண்டு இன்று இந்தப் பண்ணைக்கு வந்த சில நிமிடங்களில் அங்குள்ள மேஸ்திரியால் இருண்ட அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டேன்.
அவருக்குப் பதில் சொல்ல எனது நெஞ்சில் ஈரமில்லை. நெஞ்சில் மட்டுமல்ல, நாக்கும் உலர்ந்து விட்டது. அப்படியே ஒடுங்கிவிட்டேன். பாதையில் சென்ற என்னை வாகனமொன்று மோதி நிலத்தில் தள்ளியது போன்ற நிலையை அடைந்தேன். பழய நிலையை அடைய சில நிமிடங்கள் எனக்குத் தேவைப்பட்டது மேஸ்திரியின் வார்த்தைகள் துளைத்த காயத்தில் இருந்து மீண்டும் சுயமாகி, என்னைச் சமாளித்தபடியே பாடசாலைச் சிறுவனைப்போல் தலையை பலமாக இரு பக்கமும் ஆட்டினேன். அப்போதும் உலர்ந்த நாக்கில் வார்த்தைகள் சிக்காமல் கள்ளன் பொலிஸ் என ஒளித்து விளையாடின. தளர்ந்து போயிருந்த உடலுக்கு எனது கையிலிருந்த சிறு பெட்டி ஈயக்குண்டாகியது. அங்கிருந்த கட்டிலில் எனது பெட்டியை வைத்து விட்டு நான் நின்ற அறையை அந்த இடத்திலே அசையாமல் நின்று, கண்களால் சுற்றி மேய்ந்தேன்.
எதிர்பாராதபோது யாரோஒருவர் முகத்தில் கொதிநீரை நேரெதிரில் நின்று எற்றியது போன்று அவர் சொன்ன வார்த்தைகள் என்னைச் சுட்டன. எனது வாழ்க்கையில் இப்படி யாரும் என்னை அவமானப்படுத்தியதில்லை. நண்பர்கள் எவராவது இப்படிச் சொல்லியிருந்தால் இந்த இடத்தில் அவர்களில் கை வைத்திருப்பேன்.
எனது கலங்கிய நிலையை உணர்ந்து கொண்ட மேஸ்திரி “இதுதான் நீங்கள் தங்கும் அறை” என்று வார்த்தைகளை எறிந்து விட்டு எனது பதிலை எதிர்பார்க்காது வெளியே சென்றார். அவரது குரலில் ஆத்திரமோ அல்லது கட்டளை இடும் தொனியோ இல்லாத போதிலும் தகரக்கூரையில் பெருமழை அடிக்கும்போது எழும் ஓசை போல இருந்தது.
அவர் வெளியே சென்றபோது என்னையறியாது எனது கண்கள் அவரைப் பின் தொடர்ந்தது. அவர் உயர்த்தி மடித்துக் கட்டியிருந்த வெள்ளை வேட்டியின் இடுப்பின் பின்பகுதியில் ஒரு அரிவாள் செருகியிருந்தது.
தேவை இல்லாத ஒரு இடத்தில் வந்து சிக்கி விட்டேனோ? என்ற எண்ணம் உள்மனத்தில் எட்டிப் பார்த்து இதயத்துடிப்பை அதிகரித்தது. நெருப்பு பற்றிய வீட்டிலிருந்து வெளியேறும் அவசரம் மனதில் உருவாகியது
கொஞ்சம் பொறு. உன்னால் முடியும். போர் மேகங்கள் படிந்த இலங்கையில் ஏற்கனவே ஐந்து பேரை வைத்து நான்கு வருடங்களாக அலுவலகம் நடத்தியிருக்கிறாய். பயப்படாதே .
உள் மனம் எனக்களித்த ஒத்தடம் துணிவாகி, வாய் வழியே வெளிவரத் துடித்த எனது இதயத்தை கொஞ்சம் உள்ளே தள்ளி அமைதியாக்கியது.
ஒழுங்காகத் தச்சு வேலை செய்யப்படாத அறையின் யன்னலை, அதன் கதவுகளால் ஒழுங்காக மூடமுடியவில்லை. அப்படி மூடிய யன்னல் கதவுகளின் இடைவெளியால் ஊடுருவிய சிறிய வெளிச்சத்தில் அவரது உருவம் புகைப்பட நெகரீவாக தெரிந்தது. ஐந்தரை அடிக்கு மேலான உயரமும், கருங்கல்லில் செதுக்கிய உடலுக்குரிய மனிதர். இரண்டு பக்கமும் தொங்கிய புடலங்காயாக வழிந்த அடர்த்தியான மிளகும் உப்பும் கலந்தது போன்ற மீசை. கிராமத்தின் எல்லையில் பட்டாக்கத்தியுடன் நிற்கும் ஐயனாரின் பயமுறுத்தும் பெரிய சிவந்த கண்கள் என்பன அவரது முக்கியமான அடையாளங்கள். தலையில் முன்பகுதி வழுக்கையாக இருந்தது. பின்பகுதியில் நீளமான நரைத்த மயிர், நனைந்த லெக்கோன் கோழியின் இறகுபோல் தலையை ஒட்டியிருந்தது.சட்டையில்லாத மார்பில் சிவப்பு பருத்தி டவல் அவரது தோளிலிருந்து தொங்கியது. நெஞ்சில் மட்டுமல்ல, முதுகிலும் உரோமம் தெரிந்தது. வயிறு உப்பி வெளித் தள்ளியதாகத் தெரிந்தது. அவரது உடலுக்குப் பொருத்தமாக இல்லாது கால்கள் மெலிந்து, ஆனாலும் உறுதியாக நிலத்தில் அழுத்தமாகப் பதிந்திருந்தது. தன்னை அறிமுகம் செய்யாது, பித்த வெடிப்புள்ள பாதத்துடன் வெளியே சென்றவருக்கு ஐம்பது வயது இருக்கலாம்.
காலை பத்து மணியளவிலும் அந்த அறை இருளாக இருந்தது. ஏனோ தானோ என வெள்ளையடிக்கப்பட்ட சுவரில் கிழக்குத் திசையில் ஒரு சிறிய யன்னல், அதனருகே பலகைக் கட்டிலில், சிவப்பு விரிப்புடன் புதிதாக வெள்ளை உறையிட்ட தலையணை இருந்தது. அதை விட மூலையில் ஒரு மேசை. இரண்டு கதிரைகள் அதனருகில் வெள்ளைக் கயிற்றால் கட்டிய இரண்டு நெளிந்த தகரப்பெட்டிகள். யன்னலுக்கும், சுவரில் உள்ள ஆணியையும் இணைத்த கயிற்றுக்கொடி. அதில் ஒரு வெள்ளை டவல் தொங்கியது.
மீண்டும் என் மனதில், இப்படியான இடத்தில் , அதுவும் அறிமுகமற்றவர்கள் மத்தியில் இந்த வேலை தேவையா அல்லது பணம் அவசியமா? என்ற சிந்தனை வந்தது. பணத்திற்காக வரவில்லை. வேலை என்பது என் ஆன்மீகத்திற்கும் அகந்தைக்கும் அவசியம் என்ற காரணத்தால் வேலை தேடினேன் என்ற எண்ணம் எழுந்தது.
இலங்கை உள்நாட்டுப் போரில் தப்புவதற்காக இந்தியாவிற்கு வந்தேன். மனைவி ,இரண்டு சிறு குழந்தைகள், மாமா, மாமி எனச் சென்னையில் ஒரு மாடி வீட்டின் கீழ்த்தளத்தில் ஆறு மாதங்களாக வசிக்கிறோம். அமெரிக்காவிலிருந்து மனைவியின் அண்ணாவினது உதவி, சீவியத்திற்குப் போதுமானதாக இருந்தது.
எத்தனை நாள்கள் வேலையில்லாது இருப்பது?
பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறி நான்கு வருடங்கள் மட்டும் இலங்கையின் தென்பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தேன். அதற்குள் இனக்கலவரம் புற்றை விட்டு வெளியே வந்த கருநாகமாக என்னைத் துரத்தியது. அதன் சீற்றத்திற்குப் பயந்து ஊரை விட்டு பெட்டி படுக்கைகள் மட்டுமல்ல, திருமண புகைப்படம் கொண்ட அல்பத்தைக்கூட கையில் எடுக்காது அயல்நாட்டிற்கு ஓடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. எனக்கு மட்டுமல்ல. பல்லாயிரக்கணக்கானவர்களுக்குத் தலையில் எழுதிய விதியாகிய காலம் அது.
சென்னையில் இருந்த ஆறு மாத காலமாக தமிழ் சினிமாப்படங்களும் நூலகங்களுமாகப் பொழுது போனது. பொழுது போனது என்பதைவிட பொழுதைப் பலமாகத் பிடித்து கைகளால் தள்ளியபடியிருந்தேன். குழந்தைகளைப் பராமரிப்பதற்கு மனைவியின் பெற்றோர் இருந்தனர். காய்கறி, மீன் வாங்குவது மட்டுமே எனக்கு வீட்டில் செய்யும் நிரந்தரத் தொழிலாக இருந்தது. 28 வயதான எனக்கும் 68 வயதில் ஓய்வூதியம் எடுத்த மாமாவுக்கும் வேலையில் அதிக வித்தியாசம் தெரியவில்லை.
அக்காலத்தில் இலங்கையைச் சேர்ந்த சிங்களப் பெண்மணியொருவர் தமிழ் நாட்டவரைத் திருமணம் செய்தபின் சமூகசேவை செய்தவர். அவர் செங்கல்பட்டை அடுத்த பிரதேசத்தில் வாழும் சிறிய விவசாயிகளுக்கு மிருக வைத்தியரை நியமிக்க ஒருவரைத் தேடுவதாகத் தாம்பரம் வங்கி மனேஜர் சொன்னார். அந்தப் பெண்மணியை நான் சந்தித்தபோது அவருக்கு என்னைப் பிடித்ததால் வேலைக்குத் தெரிவு செய்துவிட்டு, வெளிநாட்டிலிருந்து தங்கள் நிறுவனத்திற்குப் பணம் வரும்வரையில் கீழ்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் வேலை செய்யும்படி கூறினார்.
அந்த அலுவலக வேலை, வீட்டிற்கு மீன், காய்கறி வாங்குவதை விடச் சுவாரசியம் குறைந்ததாக இருந்தது. எனக்கு வேலை எதுவும் பிரத்தியேகமாக ஒதுக்கப்படவில்லை. ஏற்கனவே வைத்தியர்கள் மூலம் சில கிராம மக்களுக்கு வைத்திய முகாம் நடத்தினார்கள். அந்த விடயத்தில் அங்குள்ளவர்களுக்கு உதவுவது எனது வேலையாக இருந்தது. தியேட்டர் அருகில் அலுவலகம் என்பதால் பல நாட்கள் மாலையில் தியேட்டரில் என் நாட்கள் கரைந்தன.
இரண்டு கிழமைகளை இப்படியாக விரயமாக்கிய என்னிடம் அந்த வங்கி மனேஜரே, “செங்கல்பட்டுக்கு அருகில் ஒரு மாட்டுப்பண்ணை உள்ளது. அங்கு அதனை மேற்பார்வை செய்யவும், அதே நேரத்தில் வைத்தியர் ஒருவரும் தேவை என்பதால் அந்த வேலை உங்களுக்குப் பொருத்தமாக இருக்கும் ” எனச் சொல்லிவிட்டு, என்னை கீழ்பாக்கத்தின் அருகிலிருந்த அலுவலகத்திலிருந்து இடமாற்றம் செய்தார். ஏற்கனவே மாடுகளுடன் இலங்கையில் வேலை செய்த அனுபவம் உள்ளதால் தற்பொழுது தமிழ்நாட்டின் கிராமப்புறப்பண்ணையில் வேலை செய்வது வித்தியாசமான அனுபவமாக இருக்குமென நான் சம்மதித்தேன்
—-
சென்னையில் இருந்து மின்சார ரயில். அதன் பின்பு பஸ் எடுத்து பண்ணைக்கு வரவேண்டும். காலை எட்டு மணிக்கு கோடம்பாக்கம் மக்கள் கூட்டத்தோடு இரயில் நிலையத்தில் இரயில் ஏறினேன். திங்கள் காலையில் வேலைக்குச் செல்லும் கூட்டம் அலைமோதியது.
முதல் தடவையாக அந்தப்பகுதிக்கு ரயிலில் வருவதால், “தாம்பரம் எத்தனையாவது ரயில் நிலையம்…? ” என ஒருவரிடம் கேட்டபோது, “அதுதான் கடைசி இரயில் நிலையம் ” என்று சொல்லி விட்டு, அடுத்த நிலையத்தில் இறங்குவதாக எனக்குத் தனது ஆசனத்தைக் கொடுத்து விட்டு எழுந்தார். என்னை மறந்து ரயிலின் யன்னலோரத்தில் கிடைத்த இடத்தையும் முகத்தில் தழுவிச் சென்ற காற்றையும் அனுபவித்தபடி கையில் வைத்திருந்த சஞ்சிகையை வாசித்தபடி, மெய்மறந்திருந்தேன்.
கால் மணிநேரத்தின் பின்பு ஓடிவந்த வண்டி திடீரென கீச்- சர்- சர்- ர் என்றபடி நின்றது. ரயில் நிலயத்தில் மெதுவாக ஓடி நிற்பதுபோல் அல்ல. திடீர் பிரேக் அடித்ததுபோல் இருந்ததால் உடலை உலுப்பி, வலைப்பந்தாக வீசி எறிந்தபோது, அந்தரத்தில் முன்னால் இருந்த இளைஞனுடன் மோதும் நிலை உருவாகியது. மோதியபின் சிரித்துச் சமாளித்தபடி தலை நிமிர்ந்து யன்னல் ஊடாகப் பார்த்தால் ரயில் நிலையம் எதுவுமில்லை. தண்டவாளத்தின் இரு பக்கமும் தகரங்களால் வேய்ந்த குடிசைகள். ஆங்காங்கு மாட்டு சாணியடித்த குட்டி மதில்கள் மட்டுமே முளைத்திருந்தன.
எதிரில் நான் மோதவிருந்த கண்ணாடியணிந்த இளைஞனிடம் “என்ன? “எனக் கேட்டபோது மீனம்பாக்கம் கடந்ததும் இரயிலில் ஒரு பெண் பாய்ந்து தற்கொலை செய்துவிட்டதாக அவன் கூறினான்.
நாரையாக கழுத்தை நீட்டி யன்னலூடாக பின்னால் திரும்பிப் பார்த்தபோது, குடித்துவிட்டு வழுக்கல் செதுக்கி எடுத்த பாதி இளனிபோல், தலை மட்டும் பிளந்தபடி தலையின் மயிர் கொண்ட பின்பகுதி, தண்டவாளத்திற்கு மிக அருகே கிடந்தது. இரட்டைப் பின்னல் மட்டும் தெரிந்தது. மற்றைய பகுதிகள் தெரியவில்லை . உடலின் மிகுதிகள் இரயிலின் கீழ் இருக்கவேண்டும். ஆங்காங்கு இரத்தம் சிறிதாகச் சிந்தியிருந்தது. அடிபட்ட இடத்திலிருந்து இரயில் முன்னே வந்துவிட்டது.
பாவம், நிச்சயமாக இளம் பெண்ணாக இருக்கவேண்டும் என்று கருதி எனக்கு நெஞ்சில் ஊறிய சோகத்தை முன்னால் இருந்த இளைஞனோடு பகிர்வோமென நினைத்தபோது, “இந்தத் தண்டவாளத்தில் ரயிலின் முன்னால் குதித்தல் ஒரு பாஷனாகிவிட்டது” என ஐம்பது வயது மதிக்கத்தக்க பக்கத்தில் இருந்த மூக்குக் கண்ணாடி அணிந்த மனிதர் அலுத்துக் கொண்டார். இப்பொழுது எனது சோகம், கோபமாகியது, அந்த மனிதர் மேல்.
ஓர் உயிரின் இழப்பைப் பற்றி இப்படிச்சொல்கிறாரே , அதுவும் இளம் பெண்ணொருத்தியின் உயிர். இந்த மனிதரின் மனதில் சிறிதாவது ஈரமில்லையா? இவருக்கும் பிள்ளைகள் இந்த வயதில் இல்லையா?
பலவிதமாக எண்ணியபடி மற்றவர்களது முகங்களைப் பார்த்தேன். அவரைப்போல் வாய் விட்டுப் பேசாத போதும் குறித்த நேரத்துக்கு வேலைக்குப் போக முடியவில்லையே என்ற ஆதங்கம், அதிருப்தி பலரது முகங்களில் தெரிந்தது. மரணத்தைத் தள்ளிப்போடவோ இல்லை, மரணத்தை வெல்லவோ முயலும் மனிதர்கள் மத்தியில் மரணத்தைக் கேட்டு வரவழைத்துக் கொள்பவர்களிடம் இந்தச் சமூகம் அனுதாபம் காட்டத் தயாரில்லை. போராடி வாழ்பவர்கள், போராட்டமின்றி தனது வாழ்வை வீணாக்குபவர்களிடம் பரிதாப உணர்வை வீணாக்க விரும்பவில்லை என்ற உண்மை, தெளிந்த நீரில் விம்பமாக அனைவரது முகங்களிலும் தெரிந்தது.
எனது எண்ணங்களைக் கூடையில் மூடிய கோழிக் குஞ்சுகளாக எனக்குள் பாதுகாத்தேன். நான் வாய் திறக்காததற்கு முக்கிய காரணம், சென்னையில் இலங்கைத் தமிழ் பேசும்போது, குறைந்த பட்சம் இரண்டு தரம் உச்சரிக்கவேண்டும். அதாவது ஒரு விடயத்தை அவர்களுக்குப் புரிய வைக்க இரண்டு தரம் சொல்லவேண்டும். இந்த இடத்தில் இரண்டு முறை பேசுவதால் என்ன பலன் ஏற்படும் என்பதால் நான் பேச வேண்டிய வார்த்தைகளை கசப்பு மாத்திரைகளாக கஸ்டத்துடன் விழுங்கிக் கொண்டேன்.
தண்டவாளத்தருகே இருந்த சிறிய வீடுகளிலிருந்த பலர் வெளியே வந்தனர். அவர்களுடன் இரயிலிலிருந்து இறங்கியவர்களும் சேர்ந்து கூட்டமாகக் கூடி நின்றதால் அந்தப் பிளவுண்ட பாதித் தலையை என் பார்வையிலிருந்து மறைத்துவிட்டார்கள். காட்சி மறைந்ததால் எனது மனதில் ஏற்பட்ட சோகமும் வடிந்துவிட்டது. சடலம், சுடுகாட்டிற்குப் போனதும் உணவிற்காக இலையில் உட்காரும் மனிதர்கள்தானே நாமெல்லோரும் . வாழ்வு முழுவதும் சோகங்களை காவவா முடியும்? மறதி என்பது மனிதர்களுக்கு ஒரு கொடை.
என்னைச் சுற்றிவர இருந்த பலரும் பொறுமை இழந்து வேலைக்குத் தாமதமாகச் செல்வதைப்பற்றி பேசத் தொடங்கினர். நானும் எனது புது வேலையை நினைத்துக் கொண்டேன். ஆனால் அந்த வேலை பற்றி எதுவும் என்னால் கற்பனை செய்யமுடியவில்லை.
பத்து நிமிடத்தில் மீண்டும் அந்த இரயில் உயிர் பெற்ற சர்ப்பமாக சீறியபடி புறப்பட்டது.
தாம்பரத்தில் இருந்து பஸ் எடுத்து மாட்டுப்பண்ணையருகே இறங்கி நடந்து, அந்தப் பண்ணையை அடையக் காலை பத்து மணியாகிவிட்டது. அன்று பண்ணையைப் பார்த்து விட்டு மாலையில் வீடு திரும்புவதற்காக கையில் ஒரு சிறிய தோல் பெட்டியில் அவசரத்திற்காக ஒரு சோடி உடுப்பு மட்டுமே வைத்திருந்தேன்.
——-
மேஸ்திரியின் வார்த்தைகளின் பின்பு, அந்தப் பெட்டி கனமாக இருந்ததால் கட்டிலில் வைத்துவிட்டு வெளியே வந்தபோது, சேர்ட் அணியாமல் பச்சைக்கோடிட்ட லுங்கி அணிந்த, மாநிறமான மீசையற்ற அறுபது வயது மதிக்கத்தக்க ஒருவர் சிரித்தபடி வந்தார். தொலைந்து விட்ட பற்களுடன் அவர் குழந்தையாக சிரித்தார். அவர் கையை தூக்கி வணங்கியபடி “சார் எப்படி? நீங்கள் சிலோனா” எனக்கேட்டார்.
நான் “ஆமாம்”என்று பதில் வணக்கம் செலுத்தியபோது “நான் துரை நாயக்கர். இராமநாதபுரம் ஜில்லா” என்று சொல்லிவிட்டு “ராமசாமி… டே, சாருக்கு செயர் ஒன்று கொண்டு வா” என்றபோது, கறுப்பாக, மீசையுள்ள, வெள்ளைச் சேட்டை முழங்கை வரையும் மடித்து, லுங்கியை மடித்து அண்டவெயர் தெரியக் கட்டியிருந்த இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க இளைஞன் பிறவுண் நிற பிளஸ்ரிக் நாற்காலியைக் கொண்டு வந்தான்.
திண்ணையில் வைக்கப்பட்ட நாற்காலியில் அமர்ந்தபோது “ராமசாமிதான் இங்கு பண்ணையில் பால் கறக்கிறவர். உங்களுக்கு உதவியாக இருப்பார். ” என்றார்.
“அப்படியா? என்றபோது ? “ஏன் சார் உனக்குக் குடும்பம் இலங்கையிலா இங்கையா? ” எந்த ஒரு தயக்கமும் இல்லாது கேட்டான் அந்த ராமசாமி.
“அவர்கள் சென்னையில் வாழ்கிறார்கள் எனக்கு இந்தப் பண்ணையைப் பார்க்க வேண்டும் ” என்றேன்.
“வா சார்”
இருவருமாக வரப்புகளில் நடந்து பண்ணையைச் சுற்றிப்பார்த்தோம்.
பண்ணை கிட்டத்தட்ட நூற்றைம்பது ஏக்கர் இருக்கும். ஒரு பக்கம் மலைக்குன்றுகள். மறுபக்கத்தில் பெரிய குளம். அதற்கப்பால் அயனாவரம் என்ற கிராமம். முன்பகுதியில் சிறிய பொட்டல் வெளி அதை ஊடறுத்து மேற்குத் திசையில் சாலையொன்று மகாபலிபுரம் செல்கிறது.
அந்தப் பண்ணையில் அறுபது பால் மாடுகள் இருந்தன. பண்ணையில் மலையடிவாரத்தை ஒட்டியபகுதி சவுக்கம் தோப்பாக இருந்தது. மிகுதி இடத்தில் நிலக்கடலை மற்றும் காய்கறிகள் பயிரிட்டிருந்தனர். பண்ணையின் மத்தியில் வீட்டிற்கு எதிரில் பெரிய கிணறு இருந்தது. ஒரு அடி சுவர் கிணற்றைச் சுற்றி எழுப்பப்பட்டு அருகே நீர்த்தொட்டியிருந்தது. அருகே சிறிய மோட்டார் அறையிருந்தது.
மாட்டுத் தொழுவத்தில் ஒவ்வொரு மாட்டிற்கும் பெயர் இருந்தது. ஒவ்வொரு மாட்டையும் பெயர் சொல்லி அறிமுகப்படுத்தினான் ராமசாமி. மூக்கன் என்ற ஒரு சிவப்பு நிற ஜேர்சி இனக் காளை மூக்கணாங்கயிற்றுடன் அங்கு நின்றது. பண்ணையில் ராசு, ராமு, மற்றும் சுப்பு என மூன்று பதினைந்து வயது மதிக்கத்தக்க சிறுவர்கள் காக்கி அரை டிராயருடன் மேல் உடலில் சேட்டற்று வேலை செய்தார்கள். மாடுகளுக்கு உணவு, தண்ணீர் தருவது, மாட்டுத் தொழுவத்தை சுத்தப்படுத்துவது அவர்களது வேலைகள். பாடசாலை போயிருக்க வேண்டி வயதில், காலையில் ஐந்து மணியிலிருந்து மாலை மூன்று மணிவரையும் இங்கு வேலை செய்வார்கள். மாட்டுப்பண்ணையைச் சுற்றிய பகுதியில் பல ஏக்கர் வெளியாக இருந்தது. “மாட்டுக்குப் புல் வளர்ப்பதற்கான திட்டம். ஆனாலும் இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை” என்றான் ராமசாமி.
“சினையான மாடுகளை நீங்கள் சோதிக்கவேண்டும்” என்றான் அவன்.
“நான் நாளையிலிருந்து செய்கிறேன்” “என உறுதியளித்தேன்.
கடலைச் சாகுபடி செய்த இடத்தில் மூன்று இளம் பெண்கள் களைகளைக் குனிந்து கொத்தியபடி நின்றார்கள்.
மரக்கறி பயிராகும் நிலத்தில் மாணிக்கம், வீரராகவன் , கிருஸ்ணன் என மூவர் தோட்டவேலை செய்து கொண்டிருந்தனர். எல்லோரிடமும் என்னை அறிமுகப்படுத்திய ராமசாமி, “துரை நாயக்கரின் உறவு சார்; கிருஸ்ணன். இராமநாதபுரத்தைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் பக்கத்தூர், இதான் அயனாவரம் .குளத்துப் பக்கம் ”
“மேஸ்திரி எங்கே? வந்தபோது நின்றார் . அவரைக் காணவில்லையே?” என்றேன்.
“அது கறுப்பையா சேர்வை. அவரும் ராமநாதபுரம். அவர் அகம்படையர் சார். மாட்டுக்குத் தீனி வாங்க தாம்பரம் போயிருக்கிறார்” என்றான்.
நான் இதுவரையும் கேள்விப்படாத சாதி என்றாலும் ஏதோ தெரிந்ததுபோல் தலையாட்டி வைத்தேன். மேலும் ஒருவரைக் கேட்கும் போது அவரது ஊரைச் சொல்லி சாதியைச் சொல்லும் பழக்கம் எனக்கு விந்தையாக இருந்தது
நான் சிறுவயதில் கிராமத்திலிருந்த காலத்தில் அங்கு வெள்ளாளர் என்ற சாதியினர் பலர் இருந்தார்கள் . கட்டாடியண்ணை என்ற அழுக்குத் துணியெடுப்பவர், மாதமொரு முறை அடுத்த ஊரிலிருந்து வரும் தலைமயிர் வெட்டும் சின்னத்தம்பி அண்ணை, அத்துடன் பனைமரத்தில் ஏறி கள்ளிறக்கும் மூன்று குடும்பங்கள் என சிறிய சாதி உலகத்திலிருந்து வந்தபோது எனக்கு சேர்க்கஸ் புலி, வனத்திற்குச் சென்றதுபோல் தமிழ்நாட்டு உலகம் ஆச்சரியத்தைக் கொடுத்தது. முக்கியமாகப் பெயருடன் தங்களது சாதியையும் சேர்த்துச் சொல்லும் உயர்சாதியினர் வழக்கம் புதுமையாக இருந்தது. கிராமங்களில், உயர் சாதியினரது ஓட்டு வீடுகளும் அதற்கு ஒதுக்குப்புறத்தில் தாழ்த்தப்பட்டவர்களது குடிசைகளும் இருக்கும். உயர்சாதியினர், தாழ்த்தப்பட்டவர்கள் என்பது நாடியும் நாளமும் உடலில் பக்கத்திலிருந்தாலும், பிரிந்து இருப்பதுபோல் தெரிந்தது.
சிறிய பண்ணை வீடு, திண்ணையுடன் அமைந்த தாழ்வாரம், முன்னறையும் அதன் பின்னால் மற்றும் ஒரு அறையும் கொண்ட அந்தப் பண்ணை வீட்டில் நுழைந்து உடையை மாற்றிக்கொண்டேன். வாசலில் சடைத்து வளர்ந்த ஒரு வேப்பமரம் நிழல் குடை விரித்திருந்தது. பன்னிரண்டு மணி உச்சி வெய்யிலில் வேர்த்ததால், கொண்டு வந்திருந்த சாரத்தை அணிந்தபடி, மேலங்கியற்று வேப்பமரத்துக் காற்று தேகத்தைக் குளிராக்கும் என்ற நினைப்பில் வெளியே வந்து நாற்காலியை இழுத்து வேப்ப மர நிழலில் போட்டு அமர்ந்தபடி, ஏற்கனவே நான் கொண்டு வந்த உணவை உண்ணத் தயாராகினேன்.
உணவுப்பாத்திரத்தைத் திறந்து வஞ்சிர மீன் பொரியலைப் பார்த்து முகர்ந்தபோது வயிற்றில் பசி அலையாக மேலெழுந்தது.. ஆவலுடன் சோற்றில் கை வைத்தபோது பதட்டத்துடன் ராமசாமி வந்து “ என்ன சார், மேலே துணியற்று இருக்கிறீர்கள். நீங்கள் டாக்டர். அப்படி இருக்கக்கூடாது ” என்றான்.
“ஏன்?”
“கொஞ்சம் டீசன்டாக இருக்க வேணும் ”.
” அப்ப… சேர்ட்டிலா எனது டீசன்ட் ? ” என்று சிரித்தபடி கேட்டு விட்டு உள்ளே சென்று சேர்ட்டை எடுத்து அணிந்து கொண்டேன்.
“இப்ப நல்லா இருக்கிறது “.எனக்கு எதிரில் திண்ணையில் குந்திய ராமசாமியின் முகத்தில் புன்னகை, இருளில் தனித்து எரியும் வெண்மையான குழல் விளக்காக ஒளிர்ந்தது. என் வாழ்நாளில் நான் சேர்ட் அணிந்ததையிட்டு மகிழ்ச்சியடைந்தவர்களை பார்த்ததில்லை.
இதுவரையும் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் அந்த மரத்தடியில் என்னைச்சுற்றியிருந்து மதிய உணவு உண்டார்கள். அவர்கள் என்னிடம் எத்தனை குழந்தைகள், என்ன வயசு எனப் பல கேள்விகளைக் கேட்டார்கள்.
ராணி என்ற பெண் பல கேள்விகளைக் கேட்டபோது, அன்பரசி என்ற பெண் சிரித்தபடியிருந்தாள். மூன்றாவது பெண் தேவி குனிந்தபடியிருந்தாள். இதுவரையும் அவளது கண்ணையோ முகத்தையோ பார்க்க முடியவில்லை. அவளது உருவ அமைப்பு பதினாறு அல்லது பதினேழு வயதாக இருக்கலாம் எனத் தெரிந்தது. ராணி மட்டும் இருபத்தைந்து வயது. எல்லோரையும் விட மூத்த பெண்ணாகத் தெரிந்தாள். நேரான பேச்சும் ,பார்வையும் அவளிடமிருந்தது. அன்பரசி சிவப்பு நிறம். கண்ணுக்கு மை போட்டு சிரித்தபடியிருந்தாள். கன்னத்தில் இருந்த முகப்பருக்கள் அவளுக்கு அழகூட்டின. அவளுக்கு இருபது வயதை மதிக்க முடியும். எவரும் திருமணமாகாதவர்கள். இதனாலேயே மேஸ்திரி எனக்கு எச்சரிக்கை தந்திருக்க வேண்டும்.
உணவு முடிந்ததும் அவர்கள் வேலைக்குப் போய் விட்டார்கள். ராமசாமியிடம் பண்ணையில் மாடுகளுக்கு வைத்தியம் பார்க்க என்ன மருந்துகள் வைத்திருக்கிறார்கள் என்பதையும் கேட்டுப் பார்த்தேன். அதிக மருந்துகள் அங்கு இல்லை என்பதைப் புரிந்துகொண்டேன்.
“இன்று போய், மருந்துகளை நாளை வாங்கி வருகிறேன் ” என்றதும், “இல்லை சார். இன்று மாடுகளைப் பாருங்கள். பண்ணையில் தங்கிவிட்டு நாளை போய் வாங்குங்கள். மருந்துகளுக்கு அவசரமில்லை ” இராமசாமி கட்டாயப்படுத்தினான்.
” இன்று இரவு சாப்பிட உணவு எதுவுமில்லை! உடைகள் கூட அதிகம் எடுத்து வரவில்லை ” என்றபோது, துரை நாயக்கர், “சார் இன்றைக்கு நான் சமைக்கிறேன். கறுப்பையாவும் நானும் கிருஸ்ணனும் வழக்கமாக ஒன்றாக சாப்பிடுவோம். எங்களோடு நீங்களும் சாப்பிடுங்கள். ” என்றார். வெற்றிலை வைத்து அழைக்காத குறையாக,
அந்தச் சிறிய முன்னறையின் ஒரு பகுதி ஏற்கனவே சமையல் அறையாக மாறியிருந்தது. ஒரு காஸ் அடுப்பும் சில தட்டு மூட்டுப்பாத்திரங்களும் இருந்தன. மூன்று ஆண்களது சமையலில் என்னையும் சேர்க்க முனைந்தார்கள். முதல் நாளே அவர்களது வேண்டுகோளைத் தட்டவிரும்பாமல் தலையாட்டியபடி நானும் சேர்ந்துகொண்டேன்.
மேஸ்திரி, மாட்டுத் தானியங்களுடன் கோழி இறைச்சியும் வாங்கி வந்து அவரே உணவு தயாரித்தார். அன்றிரவு அவர்களுடன் சேர்ந்து உணவு உண்டேன். அன்றைய இரவில் முன்பு அங்கிருந்த பழைய வைத்தியர் சம்பந்தமாகப் பேச நினைத்தாலும் பேசவில்லை. அவர்களுடன் ஒன்றாகச் சாப்பிடும்போது சுமுகமான உறவு ஏற்படலாம் என்ற நம்பிக்கை பிறந்தது.
அதிக நேரம் ராமசாமி இருந்து பேசிவிட்டு வீடு செல்ல நேரமாகியது. இரவு ஒன்பது மணியளவில் நான் அறையில் படுக்கச் சென்றபோது கறுப்பையா மேஸ்திரி திண்ணையிலும், துரை நாயக்கரும் கிருஸ்ணனும் முன்னறையிலும் படுத்தனர். படுத்தவுடனே அவர்கள் தூக்கத்திலாழ்ந்து விட்டார்கள் என்பதற்கு அவர்கள் விட்ட குறட்டை ஒலி எனது செவிகளை அடைந்து சாட்சியமாகியது. அவர்கள் உடலால் உழைப்பவர்கள். படுத்தவுடன் தூங்கிவிட்டார்கள்போலும் என நினைத்துக்கொண்டேன்.
அறையில் நான் படுத்தபோது புழுக்கத்தைக் குறைக்க யன்னலைத் திறந்து விட்டிருந்தேன். யன்னலுக்கு வெளியே கையை நீட்டினால் வானம் கையில் வசப்படும்போல் அருகிலிருந்தது இருந்தது. நிலா தென்னைமரங்களிடையே தங்கத்தாமரையாக பூத்திருந்தது. நட்சத்திரங்களற்று வெளிர் நீலமாக வானம் சுத்தமாக யாரோ சற்றுமுன் துடைந்து வைத்திருந்ததுபோல் தெரிந்தது.
புதிய இடத்தில் முதல் நாள் படுக்கும்போது பாதுகாப்புணர்வின் காரணமாக நித்திரை வருவதில்லை என்று எப்போதோ படித்தது என் வரையில் பொருத்தமாக இருந்தது. படித்தபடி நேரத்தைக் கரைத்திருக்கலாம் என நினைத்தபோது எந்தப் புத்தகத்தையும் கொண்டு வரவில்லை. கொண்டு வந்த சஞ்சிகையை ஏற்கனவே படித்தாயிற்று என்று என்னை நானே நொந்து கொண்டேன்.
நிறைந்த நிலவாக இருப்பதால் வெளியே சிறிது நேரம் உலாவி வருவோமா என நினைத்து முன்னறையிலும் திண்ணையிலும் படுத்திருந்தவர்கள் நித்திரை கலையாமல் இருக்க பூனைபோல் அடியெடுத்து வெளியே சென்றேன்.
வேப்பமரத்தின் கீழ் நின்று சுற்றிப்பார்த்தேன். எங்கும் மின்சார வெளிச்சமில்லை. உருகிய நிலவின் ஒளியில் பண்ணை அமைதியாக உறங்கியது.
கொஞ்ச நேரம் காலாற நடப்போம் எனப் புற்களற்ற நடைபாதையில், பண்ணையின் வெளிவாசல் கேட்டை நோக்கி சிறிது தூரத்திற்கு நடந்தபோது, ஒரு மெல்லிய கீற்றான சத்தம் கேட்டது. நடப்பதை நிறுத்தி , செவியைக் கூர்மையாக்கிக் கேட்டபோது ஒரு பெண்ணின் அழுகைச் சத்தம் போன்று கேட்டது. கழுத்தை மட்டும் திரும்பிப் பார்த்தபோது கிணற்றடியிலிருந்து அந்தச் சத்தம் கேட்பதாக உணர்ந்தேன். கிணற்றடியில் மோட்டார் அறை அருகே சிறிது இருளாக இருந்தது. மற்றைய பகுதிகளில் நிலவெறித்தது. நிலவெறித்த பகுதியில் எதுவும் தெரியவில்லை . போய்ப் பார்ப்பதா இல்லையா அல்லது மீண்டும் அறையுள் சென்று படுப்பது நல்லதா என மனதில் ஒரு நாணயத்தைப் பல முறை சுண்டிப் பார்த்தேன். அழுகை மீண்டும் கேட்டது. ஆனால், இப்பொழுது வேதனையில் அழுதபின் வரும் கேவல்போல் இருந்தது. நின்ற இடத்திலிருந்து பார்த்தபோது எதுவும் தெரியவில்லை.
என்னவென்றாலும் பார்த்து விடுவோம் எனத் திரும்பி கிணற்றை நோக்கி நடந்தேன். அருகில் சென்று பார்த்தபோது மோட்டார் அறையின் முன்பகுதியில் எதுவும் தெரியவில்லை. மீண்டும் பண்ணை வீட்டை நோக்கித் திரும்ப, அதே கேவல் ஒலியிருந்த அவலம் இதயத்தைக் கசக்கிப் பிழிந்தது. கடந்து போக முடியாது என்ற நினைப்புடன் மோட்டார் அறை பின்பகுதியை நோக்கி சுற்றி நடந்தேன். இருளான பகுதிக்குச் சென்றபோது அறையின் பின்பகுதியில் நிழலாக ஒரு மனித உருவம் நிற்பது போலத் தெரிந்து. அருகில் சென்றால் சேலைணிந்த பெண்ணுருவம். அச்சத்தில் உறைந்தேன். இதயம் துடித்தபடி மார்பின் வெளியே வரத்துடித்தது. .
யார் இந்தப்பெண்?
இந்த நேரத்தில் எப்படி வந்தாள் ?
ஏன் ஒரு பெண், ஆண்கள் மட்டும் தங்குமிடத்திற்கு வரவேண்டும்?
முன்னே செல்வோமா?
வேண்டாம் திரும்புவோம் என நினைத்தபோது கால்கள் யுத்தகளத்தில் போர்வீரனோடு ஒத்துழைக்காத குதிரையாகியது, திரும்ப முடியவில்லை. சிறிது நேரம் மனதையும் கால்களையும் திடப்படுத்திக்கொண்டு சில அடிகளை வைத்து முன்னேறியபோது அந்தப் பெண்ணின் உயரம் மற்றும் பருமனில் பார்வைக்கு அன்பரசிபோல் தெரிந்தது. மறுகணம் அன்பரசியிலும் சிறிது உயரமாக ஆனால், கறுப்பாக, பூசி மெழுகிய வாளிப்பான உடலாகத் தெரிந்தது. எடுப்பான மூக்கில் வெள்ளைக்கல் மூக்குத்தி நிலவில் மினுங்கியது. வெங்காயக் கலரில் சேலை அணிந்திருந்தாள்.
பெண் உருவத்தை அருகே பார்த்தபோது காலையில் மேஸ்திரியின் எச்சரிக்கை நினைவுக்கு வந்தது. முதல் நாளே தேவையற்ற பிரச்சனையில் அகப்பட்டு விடுவோமா? விலகி மீண்டும் அறைக்குச் செல்வோமா என்றால் கால்கள் உதவ மறுத்து காரின் பார்கிங் பிரேக்காகின. அதே நேரத்தில் நெஞ்சில் ஒரு பறவை சிறகடித்து அழும் பெண்ணுக்கு ஆறுதல் கூறாது விலகிச்செல்லுதல் ஆண்மையில்லை. அது கோழைத்தனம் என்றது.
என்ன நடக்கிறது பார்ப்போம்?
மீண்டும் தைரியத்தை வரவழைத்தபடி சில அடிகள் அருகில் சென்றபோது அந்தப் பெண் பாய்ந்து எனது கையைப் பிடித்தாள். அவள் கரம் பனிக்கட்டியாகக் விறைத்தது. அந்தக் கையிலிருந்து உடலெங்கும் மின்சாரம்போல பாய்ந்ததால் குளிரூட்டிய அறையில் நிற்பதுபோன்ற உணர்வுடன் உயிரைக் கையில் பிடித்தபடி சிலையாகினேன். என் உணர்வுகளை இழந்தேன். கண் மங்கியது. காது அடைத்தது. எனது அறிவு மட்டும் அபாய அறிவிப்பு மணியாக இந்த இடத்தை விட்டு ஓடு -ஓடு ஓடு எனத் துரத்திய போதிலும் அசையாது நின்றேன்.
“சார் ஒரு உதவி வேணும் ” என்றாள் எனது கையை விடாமல்.
அவளுக்குப் பதில் சொல்ல வார்த்தைகளைத் தேடியபோது எனது பதிலை எதிர்பார்க்காது என்னை இழுத்தபடி சவுக்கம் தோப்பை நோக்கி நடந்தாள். கடலை பயிரிட்ட வயல்களிடையே நடந்தோம். எதிர்ப்பில்லாது எசமானோடு கையில் உள்ள தோல்வாரில் கட்டப்பட்டுச் செல்லும் நாயாக அவளுடன் நடந்தேன். எனது கால்களின் கீழ் கச்சான் பயிர்கள் நசிந்தன. அவளது கால்களுக்கு செடிகள் தேரின் வீதி வலத்திற்கு மக்கள் விலகுவதுபோல் ஒதுங்கி வழிவிட்டன. தொடர்ச்சியான அவளது இழுவையில் தற்பொழுது கச்சான் செடிகளைக் கடந்து சவுக்கம் தோப்பருகே சென்று விட்டேன்.
அவளது இழுவை நின்றது. கையை எடுத்து விட்டு எனது எதிரில் நின்றாள். இப்பொழுது நின்ற இடம் சவுக்கம் தோப்பானதால் நிலா வெளிச்சம் தங்கப் பாளங்களாகவும் தெரிந்தது. காற்றில் மரங்கள் அசைந்ததால் வெளிச்சம் ஓடிப்பிடித்து விளையாடியது. பெரும்பாலான இடத்தில் இருளே படர்ந்திருந்தது . அவளது உருவமும் இருளோடு கலந்து தோன்றியது. காற்றில் சவுக்குமரம் அசைந்தபோது அவளது வயிற்றுப்பகுதியில் நிலா வெளிச்சம் கீறலாகத் தெறித்தபோது , அது வீங்கித் தெரிந்தது. இடது நெற்றியில் பிறைவடிவத்தில் வடு ஒன்று தெரிந்தது. எடுப்பான நாசியும் வீங்கிய கீழ் உதடுகளும் கொண்ட கவர்ச்சியான பெண்ணாகத் தெரிந்தாள்.
இவள் கர்ப்பிணியோ?
எதிரில் நின்று, விக்கியபடி அழுது முனகும்போது முகத்தை கையால் பொத்தியபடி அசையாது நின்றிருந்தாள்.
பொறுமையிழந்தேன்.
“ நான் இந்தப்பக்கம் வரவில்லை. பாம்புகள் அலைந்து திரியும் நேரம். நான் போகிறேன்” எனத் திரும்பியபோது, அவளது கைப்பிடி எனது கையின் மணிக்கட்டில் மீண்டும் பற்றி இறுகியது.
அப்பொழுது எனக்கு எரிச்சல் கூடியது “விடயத்தைச் சொல்வதென்றால் சொல். இல்லை நான் போறன்” என்று திரும்பியபோது, இதுவரையில் தொங்கிய தாவணியை மறு கையால் இடுப்பில் சொருகியபடி, மீண்டும் கையை இழுத்தாள். இழுத்த விதம் எனக்குப் பிடிக்கவில்லை. உதவிக்குச் சென்ற என்னை இப்படிப் படுத்துகிறாளே என நினைத்து ஆத்திரத்துடன் நான் இழுத்தபோது இருவருக்குமிடையில் ஒரு விதமான கயிறிழுப்பாக இருந்தது.
இவ்வளவு பலமா? அதுவும் பொம்பிளைக்கு என்று நான் வீராப்புடன் உதறி இழுத்தபோது அவள் நிலத்தில் விழுந்தாள். ஆனால், கையை விடவில்லை. எழுந்து இழுபட்டாள். ஒரு விதமான கயிறுழுப்பாக நானும் தர தர வென இழுத்து மீண்டும் கடலைப் பயிர்களைக் கடந்து கிணற்றடிக்கு மீண்டும் வந்தோம்.
எனக்கு வேர்க்கத் தொடங்கிகி விட்டது. மூச்சு வாங்கியது. களைத்துப் போனேன். எனது உடலின் சக்தியெல்லாம் இழந்தது போன்ற நிலையில் கிணற்றுக்கட்டில் சாய்ந்தபடி “ இஞ்ச வா, உனக்கு இதுதான் கடைசி சந்தர்ப்பம் . நீ இளம் பெண். நான் ஒரு ஆண். இந்தப்பண்ணையில் இதுதான் எனது முதல் நாள் . தேவையில்லாத சங்கடங்கள் ஏற்படும் என்பதால் நான் அதிக நேரம் இங்கு இருக்க விரும்பவில்லை. ” என்று கையை உதறியபோதும் அவள் விடவில்லை. கையைப் பிடித்தபடி அவள் கிணற்றின் கட்டில் ஏறி நின்றாள். அவளது தலைக்கு மேல் நிலாத்தெரிந்தது. அவளது முகம் விகாரமானது. சிறிது நேரத்தில் அவளது பெண்ணுருவம் மாறாமல் முகம் மட்டும் சிவப்பு நிற கன்றுக்குட்டியின் முகமாகியது . அப்பொழுது இது பெண்ணல்ல பேய் என்பது எனக்குப் புரிந்தது. அவளை உதறிவிட்டு ஓடுவதற்குத் தயாராகப் பண்ணை வீட்டை நோக்கித் திரும்பினேன்.
“ அப்படியென்றால் நீயும் என்னை இந்த கிணத்தில் தள்ளிவிட்டுத்தான் போவாய். எல்லோரைப் போலத்தான் தூ “ என்று பின் கழுத்துப் பகுதியில் துப்பியதுபோல் இருந்தது. கையால் கழுத்தைத் தடவியபடி, திரும்பிப் பார்த்தபோது அவளைக் காணவில்லை. அந்தக் கிணற்றில் வேகமாக ஏதோ விழும் சத்தம் கேட்டது.
அடப்பாவமே, என்னால்த்தானே என்ற குற்ற உணர்வுடன் பதறியபடி எட்டிப் பார்த்தபோது முகத்தில் கிணற்றுத் தண்ணீர் ஓங்கியடித்தது.
—
படுக்கையில் இருந்து எழுந்து, திறந்த கதவால் பார்த்தபோது துரை நாயக்கரது முகம் டவலால் மூடியிருந்தது
கிருஸ்ணன் சிறிது புரண்டு படுப்பது தெரிந்தது. திண்ணையில் படுத்திருந்த மேஸ்திரியின் குறட்டைச்சத்தம் குகையில் சிங்கமொன்று தனது இரையைப் பங்கு கொடுக்க மறுத்து மற்றைய சிங்கத்தை நோக்கி உறுமுவதுபோல அந்த இரவின் அமைதியைக் குலைத்தது.
யன்னலின் கதவை மூடினேன். ஆனாலும் காலையில் சூரிய வெளிச்சம் வந்த அதே இடைவெளியூடாக இப்பொழுது நிலவின் ஒளி, கீற்றாகப் புகுந்தது. மூக்குத்தியணிந்த அந்தப் பெண்ணின் முகம் அந்த கீற்றின் மத்தியில் தெரிந்தது.
மறுமொழியொன்றை இடுங்கள்