”- லெ முருகபூபதி
வடபுலத்தின் ஆத்மாவை இலக்கியத்தில் பிரதிபலித்த படைப்பாளி தெணியானின் வாழ்வும் பணிகளும்

கதைக்கும் கதைசொல்லிகளுக்கும் பாத்திரங்கள் தேவை. பாத்திரங்கள் (Characters ) இல்லாமல் ஒரு கதையை சொல்லமுடியாது. காவியமும் படைக்கமுடியாது.
கதைகளுக்கும் காவியங்களுக்கும் மனிதர்கள், தெய்வங்கள், உயிரினங்கள், தாவரங்கள், பருவகாலங்களும் பாத்திரமாகலாம். வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தப்படும் பாத்திரங்களே, கதைக்கு பாத்திரமாக முடியுமா? முடியும் என்கிறார் எங்கள் ஈழத்தின் மூத்த எழுத்தாளர் தெணியான்.
வீட்டில் பயன்படுத்தப்படும் பாத்திரத்திற்கு ஏதனம் என்றும் பெயர், ஏனம் என்றும் அழைப்பர். “இந்த சமூகத்தில் வாழ்ந்த – வாழ்ந்துகொண்டிருக்கும் சராசரியான சாதாரண மனிதர்களின் வரலாறு கூறும் நாவல். சுமார் எழுபத்ததைந்து ஆண்டுகளுக்கு முன் தொடங்கி இற்றைவரை தமிழ்ச்சமூகத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் மாற்றங்களை ஏதனத்தை பிரதான பாத்திரமாகக்கொண்டு இந்தச் சமூக வரலாற்று நாவல் படைத்திருக்கின்றேன். அந்த மாற்றங்களுக்குள்ளே மாறாது கட்டித்துக் கருங்கல்லாக உறைந்து கிடக்கும் சாதியத்தை இந்த நாவல் வெளிச்சத்துக்குக்கொண்டுவருகிறது.” என்ற குறிப்புடன் தெணியான் தான் எழுதிய “ஏதனம்” நாவலின் பிரதியை என்னிடம் தந்தபோது, அவரது துணைவியார் மரகதம், ” எப்படித் தம்பி சுகமா? பிள்ளைகள் நலமா?” எனக்கேட்டுக்கொண்டு வந்து என்னை உபசரிக்கின்றார்.இறுதியாக கடந்த 2017 ஆம் ஆண்டு வடபகுதிக்கு நான் சென்றிருந்தபோது, தெணியானை அவரது கரவெட்டி கரணவாய் இல்லத்தில் சந்தித்தேன். அவரது வடமராட்சி எனது வாழ்வில் மிகவும் நெருக்கமானது. நான் இலக்கியப்பிரவேசம் செய்த 1970 காலப்பகுதியில் எங்கள் நீர்கொழும்பூரில் வதிரியைச்சேர்ந்த சதாசிவம் அய்யா, பூட் எம்போரியம் என்ற பெயரில் பிரதானவீதியில் ஒரு பாதணிக்கடை வைத்திருந்தார். இலக்கிய ஆர்வலர். இடதுசாரி சிந்தனையாளர். இவர்தான் எனக்கு தோழர் வி. பொன்னம்பலத்தையும் அறிமுகப்படுத்தியவர். கே. டானியலின் பஞ்சமர் நாவலின் முதல் பாகமும் படிக்கத்தந்தவர்.
1971 முதல் மல்லிகையுடனான உறவு தொடங்கியபோது, அதன் ஆசிரியர் டொமினிக்ஜீவா நண்பரானார். அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் மல்லிகை நீர்கொழும்பு பிரதேச சிறப்பிதழை வெளியிட்டோம். மல்லிகையில் தெணியானின் கதைகளை அடிக்கடி படித்தேன். அவை எனக்கு புதிய ஒரு உலகத்தை அறிமுகப்படுத்தியது. மல்லிகை ஜீவா எனக்கு கே. கணேசலிங்கனின் நீண்ட பயணம் நாவலை வாங்கிப்படிக்குமாறு சொன்னார். அதனையும் கொழும்பு வெள்ளவத்தை சென்று விஜயலக்ஷ்மி புத்தகசாலையில் வாங்கிப்படித்தேன். எங்கள் ஊருக்கு வந்திருந்த கவிஞர் காசி.ஆனந்தன், கணேசலிங்கனின் தரையும் தாரகையும் நாவலையும் படிக்குமாறு பரிந்துரை செய்தார். அதனையும் படித்தேன்.
கல்கி வெள்ளிவிழா பரிசு நாவல்களான உமாசந்திரனின் முள்ளும் மலரும், ரா.சு. நல்லபெருமாளின் கல்லுக்குள் ஈரம், பி.வி.ஆரின் மணக்கோலம் ஆகிய தொடர்களை கல்கியிலேயே படித்து முடித்திருந்த எனக்கு தெணியான், டானியல், கணேசலிங்கன் ஆகியோரின் கதைகள், நாவல்கள் புதிய வெளிச்சத்தை காண்பித்தன.
ஒருநாள் மல்லிகை ஜீவாவிடம், “தெணியான் எங்கே இருக்கிறார்?” எனக்கேட்டேன். ” அவர் வடமாரட்சியில் பொலிகண்டியில் இருக்கிறார். யாழ்ப்பாணம் வரும்பொழுது மல்லிகை காரியாலயத்திற்கும் வருவார். அங்கு வந்தால் மல்லிகை அச்சிற்குச்செல்லும் முன்னர் ஒப்புநோக்குவார். பலவழிகளிலும் எனக்கும் மல்லிகைக்கும் பக்கபலமாக இருக்கிறார். அவர் ஒரு ஆசிரியர். வடமராட்சி வதிரியில் தேவரையாளி இந்துக்கல்லூரியில் பணியாற்றுகிறார்.” எனச்சொன்னார்.
அக்காலப்பகுதியில் எனக்கு வீரகேசரியில் நீர்கொழும்பு பிரதேச நிருபர் வேலை கிடைத்தது. அதனால் அடிக்கடி கொழும்பில் கிராண்ட்பாஸ் வீதியில் அமைந்திருக்கும் அதன் தலைமையலுவலகத்திற்கும் சென்றுவருவேன்.வீரகேசரி பிரசுரமாக தெணியானின் விடிவை நோக்கி நாவல் வெளியானது. அதனைப்படித்தவுடன் அந்த நாவலுக்கு எங்கள் ஊரில் அறிமுகவிழா நடத்துவதற்கு நாள் குறித்தேன். அன்பர் சதாசிவம் ஊடாக தெணியானின் முகவரி பெற்று கடிதம் எழுதி வருமாறு அழைத்தேன்.
வீரகேசரி நிருவாக முகாமையாளரும் வீரகேசரி பிரசுரங்களை பதிப்பித்து வெளியிட்டவருமான எஸ். பாலச்சந்திரனிடம் நேரில் சென்று, விடிவைநோக்கி நாவலுக்கு எங்கள் ஊரில் அறிமுகவிழா நடத்தவிருப்பதாகச்சொன்னதும், அவர் என்னை எற இறங்கப்பார்த்தார்.
“தங்கள் பெரிய நிறுவனத்திற்கு நாடெங்கும் விநியோக விற்பனை நிலையங்கள் இருக்கின்றன. அங்கு வீரகேசரி பிரசுரங்களை தொங்கவிட்டால் போதும். தங்கள் பத்திரிகையில் அவற்றுக்கு தினமும் விளம்பரம் பதிவாகின்றது. மக்களிடத்தில் அதன் பிரசுரங்களுக்கு எளிதாக வரவேற்பு கிடைத்துவிடும். இவன் யாரடா வலிய வந்து தங்கள் பிரசுரத்திற்கும் அதனை எழுதிய எழுத்தாளருக்கும் விளம்பரம் தேடித்தருகின்றான்” என்று யோசித்திருக்கக்கூடும்.
அவர் புன்னகையுடன் சம்மதித்தார். அவரும் வடமராட்சியைச்சேர்ந்தவர்தான். அக்காலப்பகுதியில் வட இலங்கையில் வதிரி தேவரையாளி இந்துக்கல்லூரியிலும் மேற்கு இலங்கையில் நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்திலும் தெணியானின் விடிவை நோக்கி அறிமுகவிழாக்கள் நடந்தன.
வடக்கில் நடந்த நிகழ்வுக்கு பாலச்சந்திரனும் சென்றிருந்தார். எங்கள் ஊரில் நடந்த நிகழ்வுக்கு தந்தியில் ஒரு வாழ்த்துச்செய்தி அனுப்பியிருந்தார். தெணியான் தனது நண்பர்கள் சதானந்தன் மாஸ்டர், கிளாக்கர் அய்யா இராஜேந்திரம் ஆகியோருடன் வருகை தந்தார். சதாசிவம் அய்யாவின் கடையில் அவர்கள் தங்கினார்கள்.நீர்கொழும்பு விழாவிற்கு மல்லிகை ஜீவா, தெளிவத்தை ஜோசப், மு. கனகராஜன், இலக்கிய ஆர்வலர் எம்.ஏ.கிஸார் ஆகியோர் வருகை தந்து உரையாற்றினர். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி பத்திரிகை தேசாபிமானியில் விழாவில் நிகழ்த்தப்பட்ட உரைகளை கனகராஜன் சுருக்கமாக தொகுத்து எழுதியிருந்தார்.
இவ்வாறுதான் எனக்கு தெணியானுடன் நட்புறவுதோன்றியது. பின்னாளில் சகோதர வாஞ்சையாக வளர்ந்தது. வடபுலத்திற்குசெல்லும் வேளைகளில் தெணியானின் ஊருக்கும் வந்துவிடுவேன். நண்பர்கள் பிறப்பதில்லை என்பதை எனது வாழ்நாளில் பார்த்திருக்கின்றேன். அவர்கள் எப்படியோ உருவாக்கப்பட்டுவிடுவார்கள். தெணியானுடான விக்கினமற்ற நீடித்த உறவினால் வடமராட்சியில் எனக்கு பல இலக்கிய நண்பர்கள் கிடைத்தார்கள்.
நான் யாழ்ப்பாணம் செல்லும் வேளைகளில் அவரிடமும், அவர் கொழும்புக்கு வரும் சந்தர்ப்பங்களில் அவர் என்னிடமும் வருவார். எமக்கிடையே கடிதத் தொடர்புகளும் நீடித்தன. இருவரும் சில இலக்கிய நிகழ்வுகளிலும் கலந்துகொண்டோம். அவற்றுள் யாழ். பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் கைலாசபதி ஒழுங்கு செய்த நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கு, எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நல்லூர் நாவலர் மண்டபத்தில் நடத்திய கருத்தரங்கு என்பவை முக்கியமானவை.
தெணியானின் தம்பி நவம், கொழும்பு விவேகானந்தா கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றியவேளையில் வீரகேசரியில் நான் ஒப்புநோக்காளராக இருந்தவாறு வாரவெளியீட்டில் இலக்கியப்பலகணி பத்தி எழுத்துக்களை வாரம் தோறும் எழுதிவந்தேன். தெணியான், வடபகுதி இலக்கியப்புதினங்களையும் நவம் கொழும்பு இலக்கியச்செய்திகளும் தருவார்கள்.1983 கலவரத்தின் பின்னர் நவம், குடும்பத்தினருடன் சென்னைக்கு புலம் பெயர்ந்தார். ஏற்கனவே அங்கு சென்றுவிட்ட நண்பர் காவலூர் ஜெகநாதன் என்னை 1984 இல் சென்னைக்கு அழைத்து தீபம் பார்த்தசாரதியின் அலுவலகத்தில் இலக்கிய விமர்சகர் தி.க. சிவசங்கரன் தலைமையில் எனக்காக ஒரு சந்திப்பு நடத்தினார். பல தமிழக எழுத்தாளர்களுடன் நவமும் மு. கனகராஜனும், கணபதி கணேசன் என்ற எழுத்தாளரும் கலந்துகொண்டனர்.
நவம் கனடாவில். நான் அவுஸ்திரேலியாவில், தெணியான் வடமராட்சியில். மு. கனகராஜன், புளட் இயக்கத்தின் சார்பாக திம்பு பேச்சுவார்த்தைக்கும் சென்றவர். பின்னாளில், புற்றுநோய் வந்து மரணமானார். காவலூர் ஜெகநாதன் சென்னையில் கடத்தப்பட்டு காணாமலேயே போனார்.
வாழ்க்கை இவ்வாறு எங்களை ஓடஓட விரட்டியது. தெணியான் அந்த மண்ணையும் மக்களையும் விட்டு நகரவேயில்லை. இயக்கங்களுக்கும் இரண்டு தேசங்களின் இராணுவத்திற்கும் மோதலும் – முறுகலும், சமாதானமும் வந்த காலங்களிலெல்லாம், இடம்பெயர்ந்தும், பெயராமலும் தனது ஆசிரியப்பணியையும் இலக்கியப்பணியையும் தங்கு தடையின்றி தொடர்ந்தார்.
வீரகேசரி ஆசிரிய பீடத்தில் இணைந்தபின்னர் தொடர்ச்சியாக வட -கிழக்கு போர்ச்செய்திகளே எழுதி எழுதி மனச்சோர்வடைந்திருந்தேன். 1986 இறுதியில் வடமராட்சியில் லலித் அத்துலத் முதலி காலத்தில் நிகழ்ந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான செய்திகளை சேகரிக்கச்சென்றவேளையில் தெணியானையும் சந்தித்தேன்.
அவர் எமது தமிழினத்தின் எதிர்காலம் பற்றிய தீர்க்கதரிசனமான சிந்தனையுடன் இருந்தார். தொடரும் போரில் யார் மிஞ்சுவார், யார் காணாமல்போவார் என்பதில் அவருக்கு ஒரு பார்வையும் இருந்தது.
வடபிரதேச அடிநிலை மக்களின் தொடர்ச்சியான போராட்டத்திற்கும் இனரீதியான அடக்குமுறைக்கு எதிராக இயக்கங்கள் ஆரம்பித்த ஆயுதப் போராட்டத்திற்கும் மத்தியிலிருந்த வேறுபாடுகளை, இலங்கையின் மேற்குப்பகுதியைச்சேர்ந்த எனக்கு விளக்கினார்.நானும் எதிர்பாராத சூழ்நிலையில் அவுஸ்திரேலியாவுக்கு 1987 இல் புலம் பெயர்ந்தேன். எனது வெளியேற்றம் , என்னை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்திய மல்லிகை ஜீவாவுக்கு உவப்பாக இல்லை. ஆனால், நான் எங்குசென்றாலும் ஏதும் உருப்படியாக செய்வேன் என்ற நம்பிக்கை எனது இலக்கிய சகோதரன் தெணியானிடம் இருந்தது.
அவரது நம்பிக்கையை காப்பாற்றியதையிட்டு எனக்கு மிகுந்த மனநிறைவுண்டு. அவரும் நானும் பரஸ்பரம் கடிதத்தொடர்புகளை பேணிவந்தோம்.
நீடித்துக்கொண்டிருந்த போரினால் பெண்களும் குழந்தைகளும்தான் மோசமாக பாதிக்கப்படுவார்கள் என்ற தீர்க்கதரிசனமான வார்த்தையை அவர் 1986 இறுதியில் என்னிடம் சொல்லியிருந்தார்.
அது எனக்கு வேதவாக்குத்தான். இறுதியில் அவரது வாக்குப்பலித்தது. 1988 இல் நீடித்தபோரில் பெற்றவர்களை இழந்த ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் ஒரு தன்னார்வத்திட்டத்தை அவுஸ்திரேலியாவில் ஆரம்பித்தேன். தெணியானுடன் தொடர்புகொண்டு, அவரது பிரதேசத்தில் அவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவர்களின் விபரங்களை கோரினேன். அதுபோன்று தெல்லிப்பளையில் ஆசிரியராக கடமையாற்றிய எழுத்தாளரும் ஆசிரியருமான கோகிலா மகேந்திரனிடமிருந்தும் மாணவர் விபரங்கள் பெற்றேன். இவர்கள் இருவரும்தான் கடந்த 31 வருடங்களாக தங்கு தடையின்றி இயங்கி, ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கலங்கரை விளக்கமாக விளங்கிய எமது இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் தொடக்ககால மாணவர் கண்காணிப்பாளர்கள் – தொடர்பாளர்கள்.ஒருநாள் தெணியான் யாழ். பொது மருத்துவமனைக்கு ஒரு நோயாளரை பார்க்கச்சென்றுள்ளார். அவரை அங்கே சந்தித்த மருத்துவ தாதி ” சேர், என்னைத் தெரியுமா..? உங்களது ஏற்பாட்டில், கல்வியை இடைநிறுத்தாமல் தொடர்ந்து, இன்று ஒரு மருத்துவ தாதியாக நியமனம் பெற்றுள்ளேன்” எனச்சொல்லிவிட்டு, அவருடைய கால்களை பணிந்து வணங்கினாராம். இவ்வாறு தெணியானிடம் கற்றவர்களும் தெணியானால் பயனடைந்தவர்களும் உலகில் எங்கோ வாழ்ந்துகொண்டிருப்பார்கள்.
ஆனால், அவர் அந்த வடமராட்சி மண்ணையே தனது சைக்கிளில் சுற்றிச்சுற்றிவலம் வந்து, தற்போது முதுமை தந்துள்ள உபாதைகளுடன் வீட்டிலேயே முடங்கிவிட்டார்.
தொண்ணூறுகளில் வடமராட்சியைச்சேர்ந்த மற்றும் ஒரு இலக்கிய நண்பரும் தினகரன் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியருமான ராஜஸ்ரீகாந்தன், தெணியானின் ‘பொற்சிறையில் வாடும் புனிதர்கள்’ நாவலின் சில பிரதிகளை அவுஸ்திரேலியாவுக்கு வருகைதந்த ஒரு குடும்ப நண்பரிடம் கொடுத்தனுப்பியிருக்கிறார்.
அந்த நண்பரின் குடும்பம் அவுஸ்திரேலியாவில் வசிப்பதற்கு குடியுரிமை பெற்றுவந்தது. கொழும்பு சர்வதேச விமானநிலையத்தில் அவர்களின் பொதிகள் சோதனையிடப்பட்டன. பாதுகாப்புக்காரணங்களின் நிமித்தம் நடக்கும் வழக்கமான சோதனைதான். அவர்களின் பொதியில் தெணியானின் நாவலைப்பார்த்ததும் சோதனையிட்டவர்களுக்கு அதிர்ச்சி வந்துவிட்டது.
தமிழ் ஓரளவு வாசிக்கத்தெரிந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், நாவலின் பெயரைப்பார்த்துவிட்டு யோசிக்கத்தொடங்கிவிட்டனர்.
அதில் ‘சிறை’ என்ற சொல்தான் அவர்களை யோசிக்கவைத்துவிட்டது. தேசிய இனப்பிரச்சினையும் தமிழினப்போராட்டமும் முடிவில்லாமல் தொடர்ந்துகொண்டிருக்கும்பொழுது, அவுஸ்திரேலியாவுக்குச்செல்லும் ஒரு தமிழ் குடும்பத்திடம் ‘சிறை’ என்ற சொல் இடம்பெற்ற புத்தகமா?
வெலிக்கடை சிறையில் 1983 கலவர காலத்தில் குட்டிமணி, தங்கத்துரை மருத்துவர் இராஜசுந்தரம் உட்பட பலர் துடிதுடிக்க கொல்லப்பட்டனர். மட்டக்களப்பு சிறையுடைப்பிலிருந்து பலரும் உயிர்தப்பினர்.
‘பொற்சிறையில் வாடும் புனிதர்கள்’ நாவலை அந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பின்னர் எழுத்துக்கூட்டி வாசித்தார்களா? அல்லது ஏதும் ஆவணங்களுடன் வைத்து பாதுகாக்கின்றார்களா? அல்லது எங்காவது எறிந்துவிட்டார்களா? என்பதும் தேசிய இனப்பிரச்சினைக்கு முடிவுதெரியாதது போன்றே பதில் தெரியாத வினாக்கள்தான்.
ஆனால், புனிதர்கள் இன்னும் பொற்சிறைகளில் வாடிக்கொண்டுதானிருக்கிறார்கள்.
இலங்கையின் வடபுலத்தில் கோயில்களில் பூசைசெய்துவரும் பிராமண சமூகத்தைச்சேர்ந்தவர்கள் கோயில் நிருவாகஸ்தர்களினாலும் முதலாளிமாரினாலும் எப்படி பாதிக்கப்படுகிறார்கள்? என்பதைச்சித்திரித்து அவர்களுக்கு சோஷலிஸ யதார்த்தப்பார்வையில் தெணியான் தந்த தீர்வுகுறித்துப்பேசுகிறது அந்த நாவல்.
இந்த நாவல் குறித்த எனது வாசிப்பு அனுபவத்தை மெல்பனில் இலக்கிய நண்பர் தெய்வீகன், எமது கலை இலக்கியச்சங்கத்திற்காக இம்மாதம் ஒழுங்குசெய்யும் வாசிப்பு அனுபவப்பகிர்வில் தெரிவிக்கவுள்ளேன்.
தெணியான் யார்? தனது பூர்வீகத்தின் குறியீடாக , அந்தப்பெயரைச்சூட்டிக்கொண்டு இலக்கியத்தில் தடம் பதித்த கந்தையா நடேசன்! டானியல், ரகுநாதன், ஜீவா ஆகியோர்தான் சாதியம் குறித்த அதிக சிறுகதைகளை எழுதியிருக்கிறார்கள் என்றுதான் ஈழத்து இலக்கிய விமர்சகர்கள் நினைக்கக்கூடும்.ஆனால், அது தவறு. நூற்றி ஐம்பதுக்கும் அதிகமான சிறுகதைகளை எழுதியுள்ள தெணியான்தான் சாதியம் குறித்து அதிகப்படியான சிறுகதைகளையும் தந்துள்ளார். வடபுலத்தில் அடிநிலையில் வாழ்ந்த மக்களின் வாழ்விலும் போராட்டங்களிலும் கலந்துகொண்டவர். அவர்களின் ஆலயப்பிரவேசப்போராட்டங்களிலும் பங்கேற்றவர், ஆலயத்துக்குள் ‘மூலஸ்தானம்’ வரையில் சென்று பூசைசெய்யும் ஐயர்களின் வாழ்வை சித்திரித்ததன் மூலத்தை – ரிஷிமூலம், நதிமூலம் போன்று நாம் ஆராயப்புகுந்தபொழுது, எனக்கு தெணியானின் வாக்குமூலத்திலிருந்தே பதில் கிடைக்கிறது.
ரத்னசபாபதி ஐயர் என்ற மற்றுமொரு எழுத்தாள நண்பரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தெணியான், ஈழத்து இலக்கிய வரலாற்றில் முக்கியத்துவம் பெறும் அந்த நாவலை எழுதியிருக்கிறார். இலங்கை பிராமணர் சமூகத்தில் பல எழுத்தாளர்கள் இலக்கியம் படைக்கின்றனர். ஆனால், தங்கள் குலத்தைச்சேர்ந்த பூசகர்கள் கோயில் தர்மகர்த்தாக்களிடமும் மேட்டுக்குடி அறங்காவலர்களிடத்தில் எவ்வாறு ஒடுக்கப்பட்டனர் என்பதை எழுதவில்லை.
பொற்சிறையில் வாடும் புனிதர்கள் மூத்தபத்திரிகையாளர் எஸ். திருச்செல்வம் ஆசிரியராக பணியாற்றிய முரசொலி பத்திரிகையில் தொடராக வந்தபோது, அதில் ஒரு அத்தியாயம் நீக்கப்பட்ட தகவலும் தெணியானின் முன்னுரையிலிருந்துதான் தெரியவருகிறது.
தெணியான் வெறுமனே சாதிப்பிரச்சினைகளை மாத்திரம் கருப்பொருளாகக்கொண்டு சிறுகதைகளையோ நாவல்களையோ படைக்கவில்லை. சமூகத்தின் பல தளங்களிலும் நிகழும் ஒடுக்குமுறைக்கு எதிராகவே எழுதியவர். அதனால்தான் வடபுலத்தில் ஒடுக்குமுறைக்கு ஆளாகியிருக்கும் மற்றுமொரு சமூகத்தைச்சேர்ந்த கோயில் ஐயர்களின் பிரச்சினையை தனது பேனாவுக்கு எடுத்துள்ளார்.
அவரது குறிப்பிட்ட ‘பொற்சிறையில் வாடும் புனிதர்கள்’ இலக்கிய வாசகரிடத்திலும் விமர்சகர்களிடத்திலும் மிகுந்த கவனத்தைப்பெற்றது.
லண்டனில் வதியும் தெணியானின் மாணவர் ஒருவர், இந்த நாவலை இயக்குநர் பாரதிராஜாவின் ‘வேதம் புதிது’ திரைப்படத்துடன் ஒப்புநோக்க முயற்சித்தார் என அறிந்தேன்.
தெணியானின் ‘கழுகுகள்’ நாவல் மருத்துவபீட பேராசிரியரும் எழுத்தாளருமான டொக்டர் நந்திக்கு அதிர்வை ஏற்படுத்திய படைப்பு. அதனைப்படித்துவிட்டு தமது மாணவர்களுக்கும் படிக்கக்கொடுத்ததுடன், அதில் வரும் பாத்திரமான சேர்ஜன் கருணைநாயகம் போன்று வாழத்தலைப்பட்டுவிடாதீர்கள் என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.இந்த விமர்சன ரீதியான அபிப்பிராயங்களில் இருந்துதான் தெணியான் ஏனைய பல எழுத்தாளர்களிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறார். இலங்கையில் கோயில் முதலாளிகள், ஐயரை மாத்திரமல்ல நாதஸ்வர, தவில் வித்துவான்களையும் எப்படி நடத்தினார்கள் என்பதற்கு பல கதைகள் உண்டு. பலரும் தெணியானை டானியலின் வாரிசு என்றும் சொல்லக் கேள்விப்பட்டுள்ளேன்.
ஆனால், டானியலின் அரசியல் கருத்துக்களில் இருந்தும் வேறுபட்ட தெணியான், பல சந்தர்ப்பங்களில் அவரிடமிருந்தும் வேறுபடுகிறார்.
டானியலின் மோட்டார் சைக்கிளில் ஏறிச்சென்று, ஒருகாலத்தில் நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிட்ட இடதுசாரி வேட்பாளர் பொன். கந்தையாவுக்காக மேடையேறி பிரசாரம் செய்த தெணியான்தான், பிறிதொரு சந்தர்ப்பத்தில், தமிழர் விடுதலைக்கூட்டணி வேட்பாளர் இராஜலிங்கத்துக்காக வடமராட்சியில் மேடையேறினார்.
டானியல் வர்க்கமுரண்பாடுகள் குறித்த தெளிவுடன்தான் எழுதினாரா? என்று அவரிடமே நேரில் கேட்டும் விவாதித்துமிருக்கின்றேன்.
தெணியானின் எழுத்துக்களில் அந்தத்தெளிவு இருந்தது. அதனால்தான் அடிநிலைமக்களைப்பற்றி எழுதிய அதேசமயம் ஐயர்களைப் பற்றியும் அவரால் எழுத முடிந்திருக்கிறது. உளவியல் ரீதியாகவும் எழுத முடிந்திருக்கிறது. உதாரணம்:- காத்திருப்பு, கானலில் மான், மரக்கொக்கு ஆகிய நாவல்கள்.
தான் கல்வி கற்ற பாடசாலையிலேயே ஆசிரியப்பணியை மேற்கொண்ட பெறும்பேறு பெற்றவர். மாணவர்களுக்கு ஆசிரியராகவும் ஆசிரியர்களுக்கு மாணவனாகவும் ‘மாணவாசிரியர்’ நிலையில் வாழ்ந்த தெணியான், தனது சம்பளத்தை தந்தையிடமும் தாயிடமும் பின்னர் சகோதரிகளிடமும் கொடுத்து, வீட்டு நிருவாகத்தை அவர்களிடம் ஒப்படைத்தவர். மனைவி வந்ததும் அவரிடம் கொடுத்து தனது செலவுகளுக்கு வாங்கிக்கொள்ளும் பழக்கத்தை இன்றளவும் – ஓய்வூதியம் பெறத்தொடங்கிய பின்பும் நடைமுறையில் வைத்திருக்கும் முற்றிலும் வித்தியாசமான மனிதர்.இங்குதான் ஒரு குடும்பத்தின் அச்சாணியின் மகிமை புலனாகிறது. அவர் ஒரு நிறுவனம் என்றும் ஒரு இயக்கம் என்றும் முழுமையில் ஆளுமையுள்ளவராகவும் ஏனைய எழுத்தாளர்களுக்கு முன்னுதாரண புருஷராகவும் காண்பிக்கின்றது.
பொதுவாக எழுத்தாளர்கள், கலைஞர்கள் சிறந்த நிருவாகிகளாக இருக்கமாட்டார்கள் எனச்சொல்லப்படுவதுண்டு.
மல்லிகையில் பூச்சியம் பூச்சியமல்ல என்ற வாழ்க்கைச்சரித தொடரை 24 அத்தியாயங்களில் எழுதியிருந்தார். அதனைத்தொடர்ந்து படித்தபொழுதுதான் தெணியான், தனது அன்றாடச்சம்பவங்களையெல்லாம் திகதி குறித்து பதிவுசெய்திருக்கிறார் என்பது தெரிந்தது. முன்தீர்மானத்துடன் வாழ்ந்திருக்கும் ஒருவரிடம்தான் இத்தகைய விந்தையான இயல்புகள் இருக்கும்.
இந்த இடத்தில் எனக்கு வட இந்திய எழுத்தாளர் அருண்ஷோரியின் கருத்தொன்று நினைவுக்கு வருகிறது. அவர் சொல்கிறார்:-“ இயல்புகள்தான் ஒருவரது விதியைத்தீர்மானிக்கும்” தெணியானின் இயல்புகள் அவரது வாழ்வை- குடும்பத்தை- இலக்கியத்தை- தொழிலை- இயக்கத்தை தீர்மானித்திருக்கிறது.
அவரது படைப்புலகமும் அவரது ‘இயல்பு அச்சாணி’யிலிருந்தே சக்கரமாக சுழல்கிறது.சிறுகதை, நாவல், குறுநாவல், விமர்சனம், கட்டுரை, கவிதை, பத்தி எழுத்து, நாடகம், தொகுப்பு, பதிவுகள் என அவரது உலகம் சுழல்கிறது.
இலக்கிய விவாதங்களையும் தொடக்கிவைத்தவர். அதன்மூலம் வட இலங்கைக்கு அப்பாலிருக்கும் இலக்கிய வாசகர்களும் அறிந்திராத பல பக்கங்களை தரிசிக்க வைத்தவர். தெணியானின் பாதுகாப்பு என்ற சிறுகதை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஜீவநதியில் வெளிவந்தது. இச்சிறுகதை தற்போது இலங்கைப்பாடசாலைகளில் 11 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான தமிழ் பாட நூலிலும் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.
யாழ்ப்பாணத்திலிருந்து முன்னர் வெளியான விவேகி இதழில் 1964 இல் தெணியானின் முதல் சிறுகதை பிணைப்பு வெளியாகியது. அதனைத்தொடர்ந்து, மல்லிகை, ஞானம், யாழ். முரசொலி, வீரகேசரி, தினக்குரல் உட்பட பல இதழ்களில் அயராமல் எழுதியிருப்பவர்.இவருடைய கழுகுகள் (நாவல்) சொத்து (சிறுகதைத்தொகுதி) என்பன தமிழ்நாட்டில் பிரபல பிரசுர நிறுவனங்களான நர்மதா பதிப்பகம், என்.சி.பி.எச் வெளியீடுகளின் ஊடாக தமிழக வாசகர்களையும் சென்றடைந்துள்ளன.
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இயங்கிய காலத்தில் யாழ்ப்பாணக்கிளையின் செயலாளராகவும் இயங்கியிருக்கும் தெணியான், தமது படைப்புகளுக்காக இலங்கை தேசிய சாகித்திய விருது, வடகிழக்கு மகாண அமைச்சுப்பரிசு, யாழ். இலக்கிய வட்டத்தின் பரிசு, தமிழ்க்கதைஞர் வட்டம் (தகவம்) பரிசு, இலங்கை தேசிய கலை இலக்கியப்பேரவை – தமிழ்நாடு சுபமங்களா இதழ் ஆகியன இணைந்து வழங்கிய பரிசு, மற்றும் தமிழ்நாடு கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது, கொடகே விருது, கலாபூஷணம் விருது, இலங்கை அரசின் உயர் விருதான சாகித்திய ரத்னா விருதும் பெற்றிருப்பவர்.
தெணியானின் தம்பி நவம் நடத்திய நான்காவது பரிமாணம் இதழின் சார்பில் வெளியான மரக்கொக்கு நாவல் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
1964 முதல் அரைநூற்றாண்டுக்கும் மேலாக அயராமல் இலக்கியப்பிரதிகளை எழுதிவரும் தெணியானுக்கு கடந்த 2003 ஆம் ஆண்டில் நடந்த மணிவிழாக்காலத்தில், பல இலக்கிய ஆளுமைகள் இவர் பற்றி எழுதியிருக்கும் மணிவிழா சிறப்பு நூலை எழுத்தாளர் கொற்றை கிருஷ்ணானந்தன் தொகுத்திருக்கிறார்.
இலங்கையில் மல்லிகை, ஞானம், கனடா காலம் முதலான கலை, இலக்கிய இதழ்கள் தெணியானை அட்டைப்பட அதிதியாகவும் பாராட்டி கௌரவித்துள்ளன.
வடமராட்சியின் பொலிகண்டி கிராமத்தில் அந்தப்பனங்கூடல்களுக்கூடாக சைக்கிளிலும் கால் நடையாகவும் உலாவந்துகொண்டிருந்த இந்த மானுடநேசரின் வாழ்வும் பணியும், அந்தக்கிராமங்களின் உயிர்ப்பையும் மறந்து, பனங்கூடல்களுக்கூடாக பரவும் பருவக்காற்றையும் சுவாசிக்கமுடியாமல் அந்நிய தேசங்களில் குளிரிலும் பனியிலும் கோடையிலும் வாடிக்கொண்டிருக்கும் வாசகர்களின் கவனத்தையும் ஈர்த்திருப்பதாகவே கருதுகின்றேன்.
அந்தக்கிராமத்தையும் அந்த மக்களையும் விட்டு அகலாமல், அவர்கள் சந்தித்த போராட்டங்களையும் பாரிய இடப்பெயர்வுகளையும் அவலங்களையும் ஜீரணித்தவாறு இன்றும் அயர்ந்துபோகாமல் இயங்கிக்கொண்டிருக்கும் தெணியானுக்கும் எனக்குமிடையே பரஸ்பரம் தொடர்புகள் நீடித்திருக்கின்றன. குழந்தைகள் அனைவரையும் திருமணம் செய்துகொடுத்து தனிக்குடித்தனத்திற்கு அனுப்பினாலும் தெணியான் என்ற குழந்தை மாத்திரம் எங்கும் செல்லாமல், தொடர்ந்தும் துணைவியாரின் கால்களைத்தான் சுற்றிக்கொண்டுவருகிறது.
அவர்களின் மகள் ஜானகி, என்னோடு பேசுகையில் ” மாமா உங்களிடமிருந்துதான் அப்பாவுக்கு இன்று முதலாவது வாழ்த்து வந்திருக்கிறது என்று பெருமிதம் பொங்கச்சொன்னார். மீண்டும் பிரான்ஸிலிருந்து வெளியாகும் ” நடு” இணைய இதழின் ஊடாகவும் எமது மூத்த இலக்கிய சகோதரனை வாழ்த்துகின்றேன்.லெ முருகபூபதி- அவுஸ்திரேலியா
மறுமொழியொன்றை இடுங்கள்