இந்திரன் —  வ. ஐ . ச. ஜெயபாலன்-கவிதை அனுபவம்

நடேசன்.

சமீபத்தில் சென்னையில் கவிஞர் இந்திரனைச் சந்தித்தபோது அவர் இந்திரன் – வ .ஐ . ச. ஜெயபாலன் –  இருவரதும்  கவிதை அனுபவம் என்ற உரையாடல் புத்தகத்தைத் தந்தார். ஏற்கனவே இருவரும் நண்பர்களானதால் எனக்கு கவிதை அனுபவம் பெரிதும் அற்றதாகினும் வாசித்தேன். ஒருவிதத்தில் எனக்குக் கவிதை பற்றிய பாடப் புத்தகமாக இருந்தது.  இலங்கை கவிதைகள் பற்றிய விளக்கங்கள் ஜெயபாலனூடக வந்தது. இந்திரனின் விளக்கம் விரிவாகவும் அகலமாகவும் இருந்தது.

அதன் பின்பாக இருவரதும் சில கவிதைகளை  வாசிக்க முடிந்தது. ஏற்கனவே ஜெயபாலனது சில கவிதைகளை வாசித்திருந்தேன் என்பதால் மீள் வாசிப்பாக இருந்தது. முக்கியமாக  அவரது ஆரம்ப கால கவிதைகள் படிமமானவை.

தொட்டதெல்லாம் பொன்னாக

தேவதையின் வரம்பெற்ற

 மாலை வெயில்

மஞ்சட்பொன் சரிகையிட்டு

நிலப்பாவாடை

நீள் விரிகிறது.

அதேபோல் பாலியாறு நகர்கின்றது முதலான  கவிதைகளும் மனத்தில் நிற்பவை. இதைப்போல் பல கவிதைகளை  எடுத்துச் சொல்லமுடியும்.

ஜெயபாலனின் சறுக்குமிடம்  அவரது அரசியல் சார்ந்த  கவிதைகள்தான்.  அவை ஜெயபாலனைப்  பாமரனாக்குகின்றன. புதுவை இரத்தினதுரையினது பாடல்கள் பல இதைவிடக் கவித்துவமானவை.

அரசியல் கவிதைகள் அதிக உழைப்பைக் கேட்பவை . மறைமுகமான பொருள் கொண்ட வார்த்தைகள் கவிதைக்கு அழகு சேர்ப்பன.     டி எஸ் எலியட்டின் கம்யூனிசத்திற்கு எதிரான கொடுமையான சித்திரை மாதமென்ற கவிதையை  கம்யூனிஸ்ட் கவிஞர்களே விரும்புவார்கள்

The Waste Land

  April is the cruellest month, breeding

Lilacs out of the dead land, mixing

Memory and desire, stirring

Dull roots with spring rain.

T. S. ELIOT

அதற்கப்பால் தமிழில், பல கவிஞர்கள்,  ஊரில் உள்ள சில்லறை வியாபாரிகள்  போன்று  தங்களுக்குத் தெரிந்த மொழியை மட்டும் விற்பவர்கள். தங்கள் அறிவை ஆழமாக்குவதில்லை. அதிக வாசிப்பில்லை. பலர் புத்தகங்களையே வாசிக்காதவர்கள். சிலர் காசநோயாளன் இருமலை நினைத்து மகிழ்வதுபோல்  அதைப் பெருமையாக வெளியே சொல்லுவார்கள்.

இந்த விடயத்தில் கவிஞர் இந்திரனோடு ஒப்பிடும் போது ஐரோப்பாவில் வாழும் ஜெயபாலன்,  தனது உள்ளடக்கத்தை ஆழமாக்கவில்லை என்பது தெரிகிறது. ஐரோப்பாவில் கவிஞராக வாழும்போது புராதன கிரேக்கக் கவிதைகளிலிருந்து தற்கால ஐரோப்பியக் கவிதைகளைச் சாறுபிழிந்து நமக்குத் தரும் சந்தர்ப்பத்தைத் தவறவிட்ட வழி தவறிய ஒட்டகமாகவே பார்க்க முடிகிறது. எனது நண்பனாகவும் விருப்பத்துக்குரிய கவிஞனாகவும் உள்ளதால் இந்த விமர்சனததை வைக்கிறேன். தமிழ் திரைத்துறையில் அதிக பட்சம்  வி கே ராமசாமி போல் பத்தோடு பதினொன்றாகிவிடும் ஒரு நிலை  அவருக்குள்ளது.

இங்கே ஜெயமோகனது உதாரணம் உள்ளது. தன்னை ஒரு திரைத்துறைக் காதாசிரியனாக எக்காலத்திலும் அவர் பெருமைப்படுவதில்லை. இலக்கியம் செய்யத்  திரைப்படத்துக்குக் கதை எழுதுகிறேன் என்பார் . முக்கிய காரணம் திரைபடத்துறை கோடிக்கணக்கானவர்களிடம் சென்றாலும்,  பார்ப்பவர்கள் மனதிலிருந்து முதல்நாள் சாராயமாக மறைந்துவிடும். திருக்குறள் அரங்கேற்றத்தில், திருவள்ளுவரை எத்தனை பேர் கேட்டிருப்பார்கள் – பத்துப்பேர்?  – ஆனால்,  அவர்கள் அறிஞர்களானதால் தொடருகிறது.   கவிஞனாக மட்டும் ஜெயபாலன் தமிழ் உலகில் சிரஞ்சீவியாக முடியும்.

இந்திரன்

தன்னை ஒரு நகரக் கவிஞராகச் சொல்லி  தன்னைச்  சுற்றி வட்டத்தைப் போட்டபோதிலும்,  கவிதைகளில் உலகமயமான தன்மை தெரிகிறது. நத்தை எனும் அர்த்தநாரி கவிதையை வாசித்தபோது மிருகவைத்தியனாக  அது என்னைச் சிலிர்க்கவைத்து.  இருபால் உறுப்புகளை தன்னகத்தே கொண்டதாக இருக்கும் நத்தையின் இயற்கைத்தன்மை பல விடயங்களில்  நமக்கு படிமமாகிறது.

அதேபோல்

இரவின் நெற்றியில்

விடியலின் நறுமணம்

நிலவின் கனனத்தில்

சூரிய நகக்குறி

முதலான கவிதைகளின்  வார்த்தைகள் பல முறை மீண்டும் என்னைப்  படிக்கவைத்தது.

ஆங்கில நவீன கவிஞரான டி எஸ் எலியட் , ஒரிசா கவிஞர் மனோராமா பிஸ்வாஸ் போன்றவர்களை உரையாடலுக்குள் கொண்டு வருவதன் மூலம் இந்திரன் நமக்கு அவர்களை அறியவேண்டுமென்ற  ஆவலை ஏற்படுத்துகிறார்.

விமர்சகர்கள் படித்து நிறை குறை   மதிப்பிடவேண்டிய புத்தகம்.

இங்கே இரு கவிஞர்களும் வேறு வேறு தளங்களிலும் இருந்து வந்தவர்கள்.  போரில் பாதிக்கப்பட்டு அகதியாகி நாடுதேடி  அலைந்த  நண்பரையும் நிரந்தரமான தொழிலுடன் வாழ்ந்து உலகத்தில் பல நாடுகள் சென்ற இந்திரனையும் நான் ஒப்பிடவில்லை. இந்த உரையாடலில் உள்ளவற்றையும் அதன் கவிதைகளையும் எடுத்து அத்துடன் எனது கவிதை வாசிப்பு அனுபவத்தையும்  வைத்தே இந்த குறிப்பு எழுதப்படுகிறது.

—0—

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: