கொழும்பு மாநகரத்தின் தலைவர்கள்

அங்கம் –  17

களனி கங்கைக்கும் காலிமுகத்தை தழுவும் இந்து சமுத்திரத்தாய்க்கும் மத்தியில் இலங்கையின் தலைநகரமாக மிளிரும் கொழும்பில் மூவின மக்களும் செறிந்துவாழ்கின்றமையால் இங்கு 1865 ஆம் ஆண்டு முதல் தெரிவாகும் நகரபிதாக்களை நினைத்துப்பார்க்கும்போது, சுதந்திரத்திற்கு முன்னர் இங்கு பிரித்தானிய பிரஜைகள் தலைவர்களாகவும் அதன் பின்னர் இலங்கைப்பிரஜைகளான மூவினத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் மேயர்களாகவும் தெரிவாகியிருக்கும் தகவலை அறிந்துகொள்ள முடிகிறது.

2015 ஆம் ஆண்டு, கொழும்பு மாநகர சபையின் 150 ஆவது பிறந்த தின கொண்டாட்டங்கள் மிகவும் கோலாகலமாகவும் நடந்திருக்கிறது. பிரித்தானியாவின் ஆளுகைக்குள் இருந்தமையால் இந்த விழாவுக்கு பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் பிரதம விருந்தினராக வருகைதந்திருந்தார்.

முன்னைய தொகுதிவாரி தேர்தல் முறையின்போது, கொழும்பு மத்தி – கொழும்பு வடக்கு – கொழும்பு தெற்கு என மூன்று பிரதேசங்களிலுமிருந்து நாடாளுமன்றிற்கு பிரதிநிதிகள் தெரிவாகினர்.

மாநகர சபைத்தேர்தல்களிலும் வட்டார ரீதியில் உறுப்பினர்கள் தெரிவாகினர். நாடாளுமன்றத்திற்கு எம்.பி.க்களாகச்சென்ற பலருக்கும் முதலில் கொழும்பு மாநகரசபைத் தேர்தல்களில் போட்டியிட்டு தெரிவானதன் பின்னரே நாடாளுமன்ற ஆசனங்களின் கனவுகளும் வந்துள்ளன.

அதற்கு ஏணிப்படியாக அமைந்ததுதான் கொழும்பு மாநகர சபை.

பிரித்தானியரான சேர் சார்ள்ஸ் பீட்டர் லெயார்ட்  (1806 – 1893) என்பவர் கொழும்பு மாநகர சபை உருவாக்கப்பட்டதும் முதலாவது மாநகரத் தலைவராகத் தெரிவானார். இவரே அக்காலப்பகுதில் கொழும்பு பிரதேசத்தின் அரசாங்க அதிபராகவும் பணியாற்றியவர்.

                                 1866 ஆம் ஆண்டு முதல் 1937 ஆம் ஆண்டுவரையில் கொழும்பு மாநகரத்தின் தலைவர்களாக பதவிவகித்தவர்கள் அனைவரும் முடிக்குரிய பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் பணிப்பின்பேரிலேயே நியமிக்கப்பட்டவர்கள். அதனால் அவர்கள் பிரித்தானிய பிரஜைகளாக விளங்கினார்.

அதன்பின்னர், ரட்ணசோதி சரவணமுத்து என்ற தமிழர்தான் முதல் முதலில் கொழும்பு மாநகரின் நகரபிதாவாக 1937 இல் தெரிவானார். எனினும் இவரது பதவிக்காலம் அதே ஆண்டில், டிசம்பர் மாதம் முடிவுக்கு வந்திருந்தாலும் 1946 ஆம் ஆண்டுவரையில் மாநகர அங்கத்தவராகத்தான் திகழ்ந்தார்.

இவரையடுத்து மருத்துவகலாநிதி வி. என். சொக்மன் மேயரானார். இவர் அதன்பிறகு செனட்டராகவும் விளங்கியவர். இவரையடுத்து மேயரானவர் ஏ.ஈ. குணசிங்ஹ. இவரையடுத்து மீண்டும் ரட்ணசோதி சரவணமுத்து மேயரானார்.

ஏ.ஈ. குணசிங்க பின்னாளில் மாநகர சபை உறுப்பினரான ரணசிங்க பிரேமதாசாவின் ஆஸ்தான குருநாதர். இவரிடம் அரசியல் பயன்ற பிரேமதாச, காலப்போக்கில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் துணை அமைச்சராகவும் வீடமைப்பு அமைச்சராகவும் பிரதமராகவும் இறுதியில் ஜனாதிபதியாகவும் படிப்படியாக உயர்ந்த இடத்தில் அமர்ந்து முடிசூடாத சக்கரவர்த்தியாகத்திகழ்ந்த அதே மாநகரில் கொல்லப்பட்டார்.

ரத்தினசோதி சரவணமுத்து, ஏ.ஈ. குணசிங்க, ஜோர்ஜ் ஆர்.டீ. சில்வா, ஆர்.ஏ.டீ. மெல், குமரன் ரட்ணம், ருத்ரா, என்.எம். பெரேரா, வி.ஏ. சுகததாச, வின்சன்ட் பெரேரா, ஜபீர் ஏ. காதர், ஏ. எச்.எம். பௌசி, ஶ்ரீசேன குரே, கே. கணேசலிங்கம், கரு ஜயசூரிய, பிரசன்ன குணவர்தனா, ஓமர் காமில், உவைஸ் முகம்மட் இம்தியாஸ், ஏ.ஜே. எம். முஸம்மில் உட்பட சிலர்  கொழும்பு மாநகர முதல்வராகினர். இவர்களின் சிலரது பெயர்களில் தலைநகரத்தில் வீதிகளும் அமைந்துள்ளன.  இறுதியாக நடைபெற்ற தேர்தலில் முதல்தடவையாக ஒரு பெண்மணி போட்டியிட்டு அதிகப்படியான வாக்குகள் பெற்று முதல் தடவையாக கொழும்பு மாநகர வரலாற்றில் முதல் பெண் மேயர் என்ற பெருமையைப்பெற்றார்.

அவர்தான் திருமதி ரோஸி சேனாநாயக்கா. திருமதி அழகுராணியாக 1985 இல் தெரிவானவர்தான் இவர். ரோஸி சார்ந்துள்ள ஐக்கியதேசியக்கட்சி இம்முறை இத்தேர்தலில் ஒரு இலட்சத்து 31 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளையும் 60 ஆசனங்களையும் பெற்று தொடர்ந்து கொழும்பு மாநகரசபையை தங்கள் கட்சிக்கு தக்கவைத்துக்கொண்டுள்ளது.

இவர் முன்னர் மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவராகவும் பணியாற்றியிருப்பவர். இவருடைய குடும்பத்தைச்சேர்ந்த சேனாநாயக்கா என்பவர் முன்னர் இலங்கையில் பொலிஸ்மா அதிபராகவும் இருந்தார்.    இலங்கையில் அரசியலில் பிரவேசிக்கும் எவருக்கும் முதலில் வாசல் திறப்பது கிராம சபை, நகர சபை, பிரதேச சபை, மாவட்ட சபை, மாநகர சபை முதலான அமைப்புகள்தான். அரசியலில் ஈடுபட்ட கணவர்மார் மறைந்ததும் அவ்விடத்திற்கு வந்த மனைவிமாரும் அரசியல் தலைவிகளாகியுள்ளனர்.

பண்டாரநாயக்காவின் திடீர் மறைவையடுத்த அவருடைய மனைவி ஶ்ரீமாவோ உலகின் முதல் பெண் பிரதமராக இலங்கையில் தெரிவானார். இவருக்கு அதற்கு முன்னர் அரசியல் அனுபவம் எதுவும் இருக்கவில்லை. முன்னாள் பிரதமரின் பாரியார் என்ற தகுதி மாத்திரமே இருந்தது. எனினும் அவர் பிரதமரானதும் இலங்கையில் பல முன்னேற்றகரமான மாற்றங்கள் நிகழ்ந்தன.

இலங்கை பிரித்தானிய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, சோஷலிஸ ஜனநாயக குடியராசானதும் இவரது காலத்தில்தான். அத்துடன் அணிசேரா நாடுகளின் தலைவியாகவும் தெரிவானவர். தனது பதவிக்காலத்தில் முதல்தடவையாக இலங்கையில் அணிசேரா நாடுகளின் மாநாட்டையும் முன்னின்று நடத்திப்பெருமைதேடிக்கொண்டவர்.

அரசியலில் ஈடுபடும் பெண்களுக்கு ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா ஒரு முன்மாதிரியாக இருப்பதுபோன்று உள்ளுராட்சி அரசியலில் ஈடுபட முன்வந்து மேயராகும் தகுதியை பெறவிரும்பும் இலங்கையின் மூவின பெண்களுக்கும் திருமதி ரோஸி சேனாநாயக்கா முன்மாதிரியாகத்திகழுவார்.

—0—

முருகபூபதியின் இதர நூல்கள்

சிறுகதை :

சுமையின் பங்காளிகள் ( தேசிய சாகித்திய விருது பெற்றது 1976)

சமாந்தரங்கள் –   வெளிச்சம் –   எங்கள் தேசம் –    கங்கை மகள்

                  நினைவுக்கோலங்கள் – கதைத் தொகுப்பின் கதை

நாவல் : பறவைகள்  ( தேசிய சாகித்திய விருது பெற்றது 2003)

பயண இலக்கியம் :   சமதர்மப்பூங்காவில்

கட்டுரை இலக்கியம்

நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள்

இலக்கிய மடல்

எம்மவர்

மல்லிகை ஜீவா நினைவுகள்

ராஜஶ்ரீகாந்தன் நினைவுகள்

அம்பி வாழ்வும் பணியும்

உள்ளும் புறமும்

 வாழும் வரலாறு மல்லிகை ஜீவா ( மின்னூல் )

ஆய்வு:  இலங்கையில் பாரதி

சிறுவர் இலக்கியம்:  பாட்டி சொன்ன கதைகள்

நேர்காணல் :   சந்திப்பு

கடித இலக்கியம் :  கடிதங்கள்

புனைவு சாராத இலக்கியம்

சொல்ல மறந்த கதைகள்

சொல்லவேண்டிய கதைகள்

சொல்லத்தவறிய கதைகள்

சிங்கள மொழிபெயர்ப்பு

மதக்க செவனெலி   ( Shadows of Memories )

 நடந்தாய் வாழி களனி கங்கை – முருகபூபதி

கார் மேகம் கருவுற நீர் நல்கும் கடல் சார்ந்த நீர்கொழும்புப் பிரதேசத்தில் பிறந்தவர் லெட்சுமணன் முருகபூபதி. இளமைக்காலம் முதல் இன்றுவரை ஓயாத அலைகளாய் எழுதிக்கொண்டிருப்பவர். இவரின் எழுத்துக்களில் எமக்குத் தெரியாத பல இலங்கையின் அரசியல், பொருளாதார, சமூகத் தகவல்கள் எளிய நயத்துடனும், சிறு எள்ளலுடனும் சொல்லப்பட்டிருக்கும். திரைகடல் ஆழத்துத் திரவியங்களை மூழ்கி எடுத்து வந்து தெளிவுறக் கொடுப்பதை போன்றது இவரின் இடைவெளியில்லாத எழுத்துச் சேவை. நீரைப் போலவே வேற்றுமை காட்டாத ஈரம் கொண்டவர். இதனால், பெரும் இலக்கிய, சமூக ஆளுமைகள் முதல் இளையோர், எளியோர் வரை என்றுமே மாறாத நட்புப் பாராட்டுபவர்.

‘நடந்தாய் வாழி களனி கங்கை’ களனியின் கரையோரம் எங்கணும் நடந்த கதைகளைச் சொல்லும் நூல். அரசியல், வர்த்தகம், கலை எனக் கலந்து தருகின்ற கட்டுச்சாதக் கூடை. நாம் முன்பு அறிந்திராத பல வரலாறுகளின் உண்மைப் பின்னணிகளை இலக்கியச் சுவையுடன் பதார்த்தங்களாக்கிப் பரிமாறப்பட்டுள்ளது. ஆற்றின் போக்கையும், வேகத்தையும் அங்கங்கே மாற்றியமைக்கும் பாறைக்கற்கள் போல, ஆன்மிகம் தொடங்கி ஆடல் பாடல் திரையரங்குகள் வரை ‘அரசியல்’ எனும் ஒன்று, அடியில் இருந்து ஆட்டி வைப்பதை எல்லா அத்தியாயங்களும் குறிப்பிடுகின்றன.  சினிமாப்பாடலின் சுகமான விளக்கத்தோடு ஊற்றெடுக்கும் பல அத்தியாயங்கள், சிந்திக்க வைக்கும் முகத்துவாரங்களில் போய் முடிகின்றன. தகவல் தாகமுள்ளோர் தாராளமாகப் பருகலாம்.  

                                                            சுபாஷினி சிகதரன் 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: