தமிழகத்தில் உள்ள பண்ணையில் எனக்குவேலை கிடைத்ததால் அங்குள்ள மக்களுடன் பழகி நான் பெற்ற அனுபவங்கள் எனக்கு நிறைவானவை .

இதற்குக் காரணமாக இருந்து மறைந்த தலைவர்
வி. பொன்னம்பலம்அவர்களுக்கு
இந்தநூல் சமர்ப்பணம்.
என்னுரை:-
மதவாச்சியில் 1980ம் ஆண்டில் எனக்கு மிகச் சாதாரணமான சிங்கள மக்கள் மத்தியில் வேலை செய்யக் கிடைத்த அனுபவங்கள் வண்ணாத்திக்குளத்தில் மட்டுமல்ல பிற்காலத்தில் எழுதிய கானல்தேசத்திற்கும் உதவியது.
தமிழகத்தில் எண்பத்தி நாலாம் ஆண்டு இறுதிப்பகுதியில் பண்ணையொன்றில் கிடைத்தவேலை இந்த நாவலுக்குக் கருப்பொருளாகியுள்ளது.
வாழ்ந்த இடங்கள் ஒரு நாவலாசிரியனாகத் தகவல்களைப் பெறுவதற்கு மட்டுமல்ல எனது சிந்தனையின் ஓட்டத்தை மாற்றுவதற்கும் உதவியது.
இவைகள் எனக்கு உயர்கல்வி கற்கக் கிடைத்த பல்கலைக்கழகங்கள். இங்கு சாதாரண மனிதர்களே பேராசிரியர்கள் .
யாழ்ப்பாணத்தின் மத்தியத்தர குடும்பத்தில் பிறந்து பேராதனைப் பல்கலைக்கழகம் சென்ற எனக்கு இப்படியான இடங்களில் கிடைத்த அனுபவங்கள் என்னையறியாது என்னில் பலமாற்றங்களை ஏற்படுத்தியது. அதிலும் இளமையில் எனக்குக் கிடைத்த கல்விபோல் இவை பேருதவி புரிந்தன. இந்த அனுபவங்கள் என்னையே செதுக்கின.
தமிழகத்தில் உள்ள பண்ணை ஒன்றில் நான் கண்டவையில் முக்கியமானது சாதிரீதியான ஆழமான பிரிவுகள். இலங்கையில் உள்ளதையும் விட வித்தியாசமானவை. ஆழமானவை. அவற்றின் பாதிப்புகள் தொட்டிலிலிருந்து சுடுகாடு வரை நிழலாகத் தொடர்கின்றன. அவை இறப்பு போல் நிரந்தரமானவை.
மனிதர்கள் சகமனிதர்களுக்கு இழைத்த கொடுமைகளிலிருந்து விடுதலையை கனவில் காணவாவது முடியும். ஐரோப்பியர்கள் ஆபிரிக்கரை அடிமைகளாக செய்த வியாபாரம் முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் மதத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட இந்த வேறுபாடு எப்பொழுது முடிவுக்குவரும் என்று சொல்ல முடியுமா?
இந்தியாவில் சாதி மத வன்முறையிலிருந்து நாட்டின் பிரிவினைவரைக்கும் தோற்றுவாயாக இருப்பது இந்த சாதி பேதமாகும்.
பிறப்பின் அதிஸ்டத்தால் உயர்சாதி என்ற சமூகச்சூழலில் பிறந்தவர்களுக்கு அதனால் ஏற்படும் சிறிய நன்மைகளை அவர்கள் இழக்க விரும்பாததால் பெரிய துயரங்கள் தொடர்கின்றன. அதேவேளையில் தாழ்த்தப்பட்ட மக்கள் அதற்கு எதிராகப்போராடாது இருப்பதும் துயரமே. அவர்களுடைய தலைவர்கள் அதைத் தங்கள் அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். சாதி வேறுபாடுகளைப் பேணிப் புதையலைக்காக்கும் பூதங்களாகிறார்கள் .
நான் கண்ட உண்மை இப்பொழுது பிராமணர் போன்ற உயர்சாதியினரைவிட ஒடுக்குமுறையில் ஈடுபடுவது வன்னியர், நாடார், தேவர் போன்ற இடைச்சாதியினரே. அவர்களே எண்ணிக்கையில் அதிகமாகவும் வன்முறையில் ஈடுபடுகிறார்கள். இதற்குப் பொருளாதார நோக்கமும் உள்ளது.
இந்தியாவில் இதுவரையில் தொழிற்சாலைகளிலும் விவசாயிகளிடமும் ஏற்பட்ட தொழிற்சங்க அமைப்புகள் எதுவும் பெரிதாக விவசாயக் கூலி மக்களிடம் உருவாகவில்லை . காகிதங்களில் புரட்சி நடத்தும் இடதுசாரிகளுக்கு தலித்மக்கள் தொழிலாளர்களல்ல.
இந்தமக்கள் சாதி ரீதியாகப் பிரிக்கப்பட்டிருப்பதால் ஒடுக்குமுறையின் விளைநிலமாகவிருக்கிறார்கள் .
இவர்கள் கிராமங்கள் நகரமயப்படும்போது பண்ணைக்கூலிகளிலிருந்து குவாறித் தொழிலாளர்களாகி பின்கட்டிடத்தொழிலாளர்களாக உயர்வு பெறுகிறார் என்பது கசப்பான உண்மை.
இதைமேலும் அணுகிப்பார்த்தால் அங்கு மிகவும் அடித்தளத்தில் இருப்பது கூலிப்பெண்களே. இரவுகளில் அவர்களது ஆண்களால் இவர்கள் வீடுகளில் ஒடுக்கப்படுகிறார்கள். பகலில் அவர்கள் வேலைசெய்யுமிடங்களில் பலவிதமாகத் துன்புறுத்தப்படுகிறார்கள். இவர்களுக்கு எட்டுமணிநேரம் வாரவிடுமுறை மற்றும் மருத்துவ விடுப்பு என்ற விடயங்கள் கானல்நீரே .
இவர்களே தற்கால இந்தியாவை உருவாக்கும் சிற்பிகள் . விவசாயப் பண்ணைகள், கல்லுடைக்கும் குவாறிகள், பெரிய கட்டிடங்கள் எங்கும் இவர்களே நிறைந்துள்ளார்கள் .
அப்படியானவர்களில் சிலரே இந்த சிறிய நாவலின் கதாபாத்திரங்கள். மிகுதியை உங்களிடம் விடுகிறேன்.
என்னுரையை முடிக்கு முன் மீண்டும் அழுத்தம் கொடுக்க விரும்புவது நாவலின் காலம் 1984-1986 ன் ஆரம்ப மாதங்கள் .
அத்துடன் இந்தப்பண்ணை மற்றும் அதைச்சுற்றிய கிராமங்கள். தற்பொழுது சென்னை நகரமயமாக்கத்தால் விழுங்கப்பட்டு விட்டது.
- நடேசன்.
மறுமொழியொன்றை இடுங்கள்