ஸ்ரேடியத்தின் ரகசியம்.

அங்கம்  –  15

நாம்  முன்னைய அங்கம் ஒன்றில் குறிப்பிட்ட அஸ்பெஸ்டஸ் கூரைத்தகடு உற்பத்தி செய்யும் மஸ்கன்ஸ் நிறுவனத்திற்கு முன்னால் செல்லும் பண்டாரநாயக்கா மாவத்தை பற்றி அறிந்திருக்கிறீர்களா?

களனி கங்கை தீரத்தில் தலைநகரில் அமைந்துள்ள ஏனைய வீதிகளைப்போன்றதுதான் இந்த மாவத்தையும். ஆனால், இந்த வீதியிலும் பல சுவாரஸ்யமான கதைகள் உள்ளடங்கியிருக்கின்றன.

ஏன் இந்த வீதிக்கு இலங்கையின் முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவின் பெயர்வந்தது…?அவர் அத்தனகல்லை தொகுதியில் ஹொரகொல்லையில் பிறந்தமையால் அந்தப் பிரதேசத்தை ஹொரகொல்லை வளவ்வை என்றும் அழைப்பர். அவரது தந்தையாரின் பூர்வீகக்காணியில்தான் வியாங்கொடை ரயில் நிலையமும் அமைந்துள்ளது என்றும் ஒரு செய்தி இருக்கிறது.

அதனால் அந்தப்பாதையினால் பயணிக்கும் அனைத்து ரயில்களும் அங்கே நிச்சயம் தரித்துச்செல்லும். பண்டாரநாயக்கா குடும்பத்தினருக்கு இந்தப்பத்தியில்  நாம் குறிப்பிடும்  மாவத்தையிலும் ஒரு வளவ்வை  (பெரிய காணி) முன்பிருந்திருக்கிறது.

பண்டாரநாயக்காவுடன் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ஒரு ஒப்பந்தம் செய்துகொண்ட தமிழரசுக்கட்சியின் தலைவர் (அமரர்) தந்தை செல்வநாயகத்திற்கும் இந்த மாவத்தையில் ஒரு காணி முன்பிருந்தது. அங்கிருந்த ஒரு இல்லத்திலிருந்துதான்  சுதந்திரன் பத்திரிகை  1947 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் திகதி வெளிவரத்தொடங்கியது.

முதலில் நாளிதழாக வெளியான சுதந்திரன்,  1951 ஆம் ஆண்டு முதல் வார இதழாக 1977 வரையில்  வெளிவந்து, தலைநகரில் அதற்கு பாதுகாப்பில்லை என்பதனால் யாழ்ப்பாணத்திற்கு இடம்பெயர்ந்து 1983 வரையில் வெளியாகி நின்றது.

பண்டாரநாயக்கா மாவத்தையில் சுதந்திரன் பத்திரிகை தொடங்கப்பட்டவேளையில் அதன் முதலாவது ஆசிரியராக இருந்தவர் தேசபக்தன் என்னும் பட்டம் பெற்ற கோ. நடேசய்யர். அதன்பின்னர் பல எழுத்தாளர்கள் அங்கு ஆசிரியபீடத்தில் பணியாற்றியிருக்கிறார்கள்.

எஸ்.டி. சிவநாயகம், செ. இராசதுரை, அ.ந. கந்தசாமி, சில்லையூர் செல்வராசன், பிரேம்ஜி ஞானசுந்தரன் ஆகியோரும் இறுதிக்காலத்தில் கோவை மகேசனும் சுதந்திரனில் பணிபுரிந்துள்ளார்கள்.

கவியரசு கண்ணதாசன் இலங்கைக்கு வந்த சமயத்தில் சுதந்திரன் காரியாலயத்திற்கும் வருகை தந்துள்ளார்.

பல ஈழத்து எழுத்தாளர்களின் கன்னிப்படைப்புகளுக்கு அக்கால கட்டத்தில் களம் வழங்கி அறிமுகப்படுத்தி ஊக்குவித்துள்ள சுதந்திரன்,  காலப்போக்கில் கோவை மகேசன் ஆசிரியரானதும் 1970 இற்குப்பின்னர் தீவிர தமிழ்த்தேசிய  நிலைப்பாட்டினை எடுத்தது. 1970 ஆம் ஆண்டில் பதவிக்கு வந்த ஶ்ரீமாவோ – என். எம். பெரேரா, பீட்டர் கெனமன் ஆகியோரின் கட்சிகள் இணைந்த கூட்டரசாங்கத்திற்கும் தமிழரசுக்கட்சிக்கும் இடையே இனப்பிரச்சினை தொடர்பாக முரண்பாடுகள் உக்கிரமடைந்தமையாலும் 1972 இல் நடைமுறைக்கு வந்த புதிய அரசியலமைப்பினாலும் சுதந்திரனில் தமிழ் உணர்வைத்தூண்டும் செய்திகளுக்கும் ஆக்கங்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டது.

சுதந்திரன் வெளியான குறிப்பிட்ட இல்லத்தில் கவிஞர் காசி ஆனந்தன், வாகரை வாணன் முதலான எழுத்தாளர்களும் தங்கியிருந்துள்ளனர். தந்தை செல்வநாயகத்திற்குப்பின்னர் அவரது தனயன் சட்டத்தரணி சந்திரகாசனின் நிருவாகத்தின் கீழ் சுதந்திரன் வெளியானது. இங்கிருந்து சுடர் என்ற கலை, இலக்கிய இதழும் வெளியாகியது. இதன் ஆசிரியராக மட்டக்களப்பு கிரானைச்சேர்ந்த கனகசிங்கமும் பணியாற்றியுள்ளார்.

பண்டாரநாயக்கா வளவ்வை இருந்த  காணியில் தற்பொழுது பாத்திமா மகளிர் பாடசாலையும் சுதந்திரன் வெளியான காணியிலிருந்து கணபதி வித்தியாலயமும் தற்போது இயங்குகின்றன.

இந்த மாற்றங்களுக்கு  மிகவும் சக்திவாய்ந்த ஒரு சிங்கள  அரசியல் தலைவரின் மறைகரமும் இருந்ததாகச்சொல்லப்படுகிறது.  கணபதி வித்தியாலயம் முன்னர் இந்த மாவத்தையில் எழுந்தருளியிருக்கும் ஶ்ரீசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தின் பின்புறம்தான் அமைந்திருந்தது.

இந்தப்பிரதேசம் முன்னர் தட்டாரத்தெரு என்று அழைக்கப்பட்டது. இங்கு திருவிளங்க நகரத்தார் சமூகத்தினர் செறிந்து வாழ்ந்தமையால் அவர்களின் குடும்பத்துப்பிள்ளைகளின் ஆரம்பக்கல்விக்காக ஒரு செட்டியாரின் பேருதவியினால் கணபதி வித்தியாலயம் 1954 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.  கடந்த 2014 ஆம் ஆண்டு இந்த வித்தியாலயம் தனது வைரவிழாவை கொண்டாடியது.

ஶ்ரீசிவசுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ள காணியில் பல குடியிருப்புகளுக்கு மத்தியில் முன்னர் அமைந்திருந்த கணபதி வித்தியாலயத்தில் புகழ்பெற்ற வானொலிக்கலைஞர் வித்துவான் இ.சி சோதிநாதன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.

பாடசாலை விடுமுறை நாட்களில் மேற்படி ஆலயத்தில் திருமணங்கள் நிச்சயிக்கும் பட்சத்தில்,   கணபதி வித்தியாலய மண்டபத்தில்தான் திருமண வைபவமும் நடைபெறும். தற்போது கணபதி வித்தியாலயமும் மக்களின் இடப்பெயர்வு போன்று தரமுயர்த்தப்பட்டு முன்னர் சுதந்திரன் பத்திரிகை பணிமனை இருந்த காணிக்கு இடம்பெயர்ந்துள்ளது.

இந்த மாவத்தையில்  ஆலயத்திற்கு முன்புறம் வசித்த திருவிளங்க நகரத்தார் சமூகத்தைச்சேர்ந்த வடிவேல் செட்டியார் என்பவர் பீடிக்கைத்தொழிலகமும் நடத்தியிருப்பவர். அவரது பவுண் பீடி அக்காலத்தில் பிரசித்தமானது. அவரும் அவருடைய புதல்வர் ஒருவரும் மலையகத்திற்கு சென்றிருந்தவேளையில் ஒரு நீர்வீழ்ச்சியில் குளிக்கச்சென்று எதிர்பாராதவிதமாக மூழ்கி இறந்தனர்.

  கொல்லப்பட்ட மனிதர் ஒருவரின்  தலைமாத்திரம் பொதி செய்யப்பட்டு அந்த மாவத்தையில் வீசப்பட்டிருந்த செய்தியையும் படித்திருப்பீர்கள். அந்நபர் பாதாள உலககோஷ்டியினால் கொல்லப்பட்டதாகவும் அவரது உடல் வேறு ஒரு இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இத்தகைய துன்பியல்களையும் பண்டாரநாயக்கா மாவத்தை தன்னகத்தே வைத்துள்ளது.

மஸ்கன்ஸ் அஸ்பெஸ்டஸ் தொழிலகம் அமைந்துள்ள ஆமர் வீதியிலிருந்து தொடங்கும் பண்டாரநாயக்கா மாவத்தை நீதிமன்றங்கள் அமைந்துள்ள ஹல்ஸ்டோர்ப் பிரதேசத்தில் முடிவடைகிறது.

இந்தப்பிரதேங்களை உள்ளடக்கிய பகுதியை புதுக்கடை எனவும் அழைப்பர். நானாவித தொழிலகங்கள் இயங்கும் இப்பிரதேசத்தில் மூவின மக்களும் செறிந்து வாழ்கின்றனர்.

நீதிமன்றங்களுக்கு வரும் சட்டத்தரணிகள் தொடக்கம் வழக்குவிசாரணைகளுக்கு தோன்றும் சாட்சிகள் மற்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களின் உறவினர்கள், நண்பர்களும் பண்டாரநாயக்கா மாவத்தையில் எழுந்தருளியிருக்கும் ஶ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்திற்குச்சென்று வழிபடுவதையும் அவதானிக்க முடியும்.

சட்டத்தரணிகளுக்கோ தாம் ஆஜராகும் வழக்குகளில் வெற்றி கிடைக்கவேண்டும் என்ற பிரார்த்தனை! குற்றவாளிகளுக்காக அவர்களின் உறவினர்களும் நண்பர்களும் விடுதலை வேண்டிப்பிரார்த்தனை! அந்த சுப்பிரமணியக்கடவுள் எத்தனைபேரின் வேண்டுதலை நிறைவேற்றுவார் என்பது அவருக்கே வெளிச்சம்!

பண்டாரநாயக்கா மாவத்தையின் மற்றும் ஒரு எல்லையில் அமைந்துள்ள வாழைத்தோட்டம் பிரதேசத்தில்தான் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவும் பிறந்தார். அவரது இல்லத்தின் பெயர் சுசரித்த! அவர் பிரதமராகவும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராகவும் பதவி வகித்த காலகட்டத்தில் இந்தப்பிரதேசத்தின் அபிவிருத்திக்கும் முன்னுரிமை கொடுத்தார்.

இலங்கைத்  தலைநகரத்தில் ஒரு காலகட்டத்தில் அமைந்திருந்த கட்டிடங்கள் ஒல்லாந்தர் காலத்திலும் அதன்பின்னர் பிரிட்டிஷாரின் காலத்திலும் உருவாக்கப்பட்டவை. சுதந்திரத்திற்குப்பின்னர் பதவிக்கு வந்த ஆட்சியாளர்கள் காலத்திற்கு காலம்  தலைநகரத்தை நவீனமயப்படுத்திவந்தார்கள்.

கொழும்பு மாநகர சபையில் தொடர்ச்சியாக பெரும்பான்மை பலத்தை கொண்டிருப்பது ஐக்கிய தேசியக்கட்சியே. அதன் வாக்குவங்கியை தக்கவைத்துக்கொள்வதற்காக அக்கட்சியினால் தெரிவாகும் மேயர்களும் அக்கட்சியின் கொழும்பு மத்திய தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் பிரதேச அபிவிருத்தியில் கூடுதல் கவனம் செலுத்திவந்துள்ளனர்.

ஏற்கனவே பிரிண்ஸ் ஒஃப் வேல்ஸ் வீதியில் சுகததாச ஸ்ரேடியம் அமைந்திருக்கத்தக்க நிலையில் ரணசிங்க பிரேமதாசா ஏன் கெத்தாராமை என்ற இடத்தில் மற்றும் ஒரு பெரிய ஸ்ரேடியத்தை அமைக்கிறார் என்ற கேள்வியும் முன்னர் எழுந்தது!

சோலியான் குடுமி சும்மா ஆடாது என்று எமது முன்னோர்கள் சொல்வார்கள்.

கொழும்பு மத்திய தொகுதி மூவின மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதனால் மூவின மக்களின் ஆதரவும்பெற்ற மூவினத்தலைவர்கள்தான் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகவேண்டும்.

ஒருதடவை ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து ரணசிங்க பிரேமதாசாவும் ஜபீர் ஏ. காதரும் தெரிவானார்கள். ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து ஹலீம் இஷாக் எதிர்பாராதவகையில் தெரிவாகிவிட்டார்.

இப்படி ஒரு தேர்தல் முடிவு வரும் என்று பெரும்பான்மையினத்தின் பௌத்த மேலாதிக்க சிந்தனை கொண்டிருந்தவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. ரணசிங்க பிரேமதாசா  தலைநகரத்தின் எதிர்காலம் குறித்து தீர்க்கதரிசனம் கொண்டிருந்தவர்.

கெத்தாராமை பிரதேசத்தில் வாழும் மக்களை இடம்பெறச்செய்வதற்கு வகுத்த திட்டத்தின் பலன்தான் இன்று அங்கு விளங்கும் பெரிய ஸ்ரேடியம். அங்கு வாழ்ந்த மக்களுக்கு கொழும்பின் புறநகரத்தில் முக்கியமாக நவகம்புர, மற்றும்  மாளிகாவத்தை பிரசேங்களில் குடியிருப்புகளை அமைத்துக்கொடுத்து,  வாக்கு வங்கியை இனரீதியாக நேர்செய்துகொண்டார்.

சமகாலத்தில் தேசிய விளையாட்டு வீரர்கள் பயிற்சிபெறுவதற்கும் கெத்தாரமை விளையாட்டு அரங்கத்தில் நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.  கெத்தாராமையில் தற்போது 18 வலைப்பயிற்சி கூடங்களும், ஸ்ரீலங்கா கிரிக்கெட் அகடமியின் பயிற்சியகமும் அமைந்திருக்கின்றன.

ரணசிங்க பிரேமதாசா அவர்கள் இந்த ஸ்ரேடியத்தின் மைதானத்தில் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு பந்தை உதைந்து  உதைபந்தாட்டத்தை தொடக்கிவைத்த படங்கள் அக்காலப்பகுதியில் ஊடகங்களில் வெளியாகியிருக்கின்றன.  அத்துடன் அவரது துணைவியார் நெட்போல் விளையாடிய படங்களும் வெளிவந்துள்ளன.

பின்னாளில்  கொழும்பு மாநகர மேயராகியிருக்கும் ரோஸி சேனாநாயக்கா முன்னாள் திருமதி அழகுராணியாகவும் தெரிவானவர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

அதனால் தலையிடி மாத்திரைக்கான பெணடோல்  விளம்பரத்திலும் அவர் தோன்றியிருந்தார்.

இவற்றை அவதானித்த எதிர்க்கட்சியினர்,  தங்கள் மேடைகளில் பிரேமாட்ட ஃபுட்போல்! ஹேமாட்ட நெட்போல்! ரோஸிட்ட பெனடோல்! அபிட்ட பொலிடோல்!! என்று பிரசாரமும் செய்துள்ளனர். காலம் இந்த சுவாரஸ்யங்களையும் பதிவுசெய்துகொண்டு களனி கங்கையைப்போன்று துரிதமாக  நகர்ந்துகொண்டிருக்கிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: