நோயல் நடேசனின் “அந்தரங்கம்” கதைகள்

நம் அந்தரங்கத்தினுள் மறைந்திருக்கும் ஆன்மாக்கள்

-ஜிஃப்ரி ஹாசன்

நோயல் நடேசனின் படைப்புலகு சமூக அறத்தின் பக்கம் சாய்வு கொண்டது. அவரது அந்தரங்கம் தொகுப்புக் கதைகளோ அல்லது ஏனைய கதைகளோ மையமாகப் பேசுவது அரசியல், மதம் போன்ற பேரதிகாரங்களால் புறமொதுக்கப்பட்ட சாமான்ய மனிதர்களின் புற வாழ்க்கையையும், அகவுணர்ச்சிகளையுமே என்று சொல்லிவிட முடியும். அவரது கதைகளினதோ, நாவல்களினதோ மிக முக்கிய தரப்பு இத்தகைய மனிதர்கள்தான்.

நோயல் நடேசன் ஒரு படைப்பாளியாக தான் புழங்கும் சூழலில் பலராலும் மிகையாக ஏற்கப்படுவதும், புனிதமாகப் போற்றப்படுவதுமான அரசியல், மதப் பண்பாட்டு அமைப்புகள் மீது கறாரான விமர்சனப் பார்வைகளை சமரசமின்றி முன்வைக்கும் ஒரு கலகப் படைப்பாளியாகவே இயங்குகிறார்.  இதனால் அவரது படைப்புகள் நமது சூழலில் கலகத்தன்மை வாய்ந்தவை என்று கணிக்கத்தக்கவையாகத் தெரிகின்றன. அவருடையது வெறும் பரபரப்புக்கான குரலல்ல. உண்மையில் இந்தப் புலத்தில் மறைக்கப்பட்ட அல்லது வேண்டுமென்றே பேசாமல் விடப்பட்ட பேசாப்பொருளைப் பேசும் குரலாகவே அவருடைய படைப்புகளை அணுக வேண்டி இருக்கிறது.

புனைவும், அது சார்ந்த நுட்பங்களும் சார்ந்து அவர் அடைந்திருக்கும் உயரத்தை விடவும் அவரது படைப்புலகின் சமூக அரசியல் மற்றும் அறம் சார்ந்த நோக்குகளுமே நமக்கு முக்கியமானதாகத் தெரிகிறது. போராட்டம், அரசியல், மதம் போன்ற பேரமைப்புகளுக்குள்ளும், கோஷங்களுக்குள்ளும் சிக்கி குரலிழந்து போன மனிதர்களுக்காவும், அவர்களுக்கான நீதிக்காகவுமே அவர் எழுதி வருகிறார் என அவரைப் படிக்கும் போது எண்ணத் தோன்றுகிறது. அவரது படைப்புகள் புனைவிலக்கியத்தின் மகத்தான அடைவுகள் அல்லாவிட்டாலும் படைப்புலகின் மனச்சாட்சிக்காரனின் மகத்தான பதிவுகள் என அடித்துக்கூறுவேன்.

அவரது அந்தரங்கம் கதைகளால் உருவாகும் படைப்புலகு தமிழர் விடுதலைப் போராட்டத்தின் குறிப்பாக அதனை முன்னெடுத்த விடுதலைப்புலிகளின் உள்அரசியல் மீதும், அவர்களின் ஏற்பற்ற செயல்பாடுகள் மீதும் சமரசம் செய்துகொள்ளாத விமர்சனப் பார்வையை முன்வைக்கும் மனிதர்களாலும் சம்பவங்களாலும் புனையப்பட்டிருக்கிறது. இத்தகைய அரசியல் பார்வைகளுக்கு அப்பால் தனிமனித உணர்ச்சிகளுக்கெதிராக மதம், கலாசாரம் போன்ற பண்பாட்டு அதிகாரங்கள் எப்படித் தொழிற்படுகின்றன என்பதையும் இதிலுள்ள சில கதைகள் பேசுகின்றன. இன்னொரு புறம், அத்தகைய அதிகாரங்களின் இரும்பு விதிகளுக்குள்ளிருந்து மீள முடியாத மனிதர்களின் அகக்கொந்தளிப்பு பீறிடும் காட்சிகளையும் உருவாக்கிக் காட்டுகிறார். அவரது நாவல்கள்கூட இந்த வரையறைக்குட்பட்டவைதான். ஈழத்துப் போர்க்கால அரசியலின் வெவ்வேறான உள்முகங்களை அவை தெளிவாக முன்வைப்பதோடு ஒருபக்க முன்வைப்புகளை மறுத்து நமது பொது நம்பிக்கைகளுக்கு அப்பாலான புதிய சாளரங்களை திறக்கின்றன.  அவரது நாவல்களான கானல் தேசம், வண்ணாத்திக்குளம், அசோகனின் வைத்தியசாலை ஈழப் போராட்டத்தை மையமாக வைத்து அதன் பல்வேறு பரிமாணங்களை, சமூகக் காட்சிகளை முன்வைப்பவை. ஒருதலைப்பட்சமான நியாயப்படுத்தல்களோ, முரட்டுத் தர்க்கங்களோ இன்றி சமநிலைத்தன்மையான அரசியல் பார்வையையுடன் விரிபவை.

அரசியல், மதம் போன்ற அதிகார அமைப்புகளின் முன்னால் பணிய மறுக்கும் மானுடக் கதாபாத்திரங்களும், சமூக அநீதிகளுக்கும், தனிமனித ஒடுக்குதல்களுக்கும் எதிரான கலகத்தன்மையும் கதைகளின் பிரதான பண்பாக வெளிப்படுகிறது. அரசியல், போராட்டம், விடுதலை, மதம், பண்பாடு போன்றவற்றின் பேரால் இன்று நிகழும் அபத்தங்களை குறிப்பாக ஈழத் தமிழ்ச் சூழலைக் களனாகக் கொண்டு தொடர்ச்சியாகப் பதிவு செய்பவர் என்ற வகையிலும் ஈழ இலக்கியத்தில் நோயலுக்கு ஒரு இடம் உருவாகி இருக்கிறது. அது அவரது படைப்புகளில் அழுத்தமாகச் சொல்லப்படும் சமூக அறம் சார்ந்த பரிமாணத்தின் விளைவாகும்.  அந்த வகையில் அவரது படைப்புகள் தனக்கான முக்கியத்துவத்தைப் பெற்றுக்கொள்கிறது. புனைவுசார்ந்து,மொழி அழகியல் சார்ந்து வாசகனுக்கு இரசனையூட்டும் எண்ணங்கள் எதுவும் நடேசனுக்கு இல்லை. ஆனால் இன்றைய அபத்தமான அரசியல், சமூக, பண்பாட்டுச் சூழலை இலக்கியப் படைப்பாக்க வேண்டும் என்ற மாபெருங்கனவுதான் அவரை இயக்குகிறது.

தவிர, இத்தகைய பேரதிகார அமைப்புகளின் அந்தரங்கச் சிறையிலிருந்து வெளியேற முடியாத மனிதனின் அந்தரங்க தவிப்புகள், ஆணுக்கும்-பெண்ணுக்குமிடையிலான உறவும், அதன் பின்னுள்ள அந்தரங்க உணர்ச்சிகளின் ஊடுபாவுகையும் என அவரது கதைகள் விரிந்து கொண்டே செல்கின்றன.

அவரது கதைகள் ஒப்பனைகளற்ற, ஒரு புனைவுக்கான அதீத மொழி அலங்காரங்களோ, அதற்கான உழைப்போ அற்ற மிகச் சாதாரண மொழியில் நிகழ்த்தப்பட்ட இலக்கியப் பதிவுகள் என்றளவில் நிற்பவைதான். தமிழில் ஆதவன், அசோகமித்ரன், யுவன் சந்திரசேகர், மா.அரங்கநாதன் போன்ற படைப்பாளிகள் கூட இத்தகைய எழுத்தைக் கொண்டவர்கள்தான். ஆழமாக இலக்கியம் சொட்டும் மொழியைக் கையாளாமல் மனித வாழ்வின் அக-புற பக்கங்களை இயல்பாகவும், வெளிப்படையாகவும் பேசும் கதைகளை அவர்கள் எழுதினர். அந்த வரிசையில்தான் நோயலையும் இருத்த முடியும் என நினைக்கிறேன்.

பெரும்பாலான ஈழப்படைப்பாளிகள் ஈழப் போராட்டம் குறித்து ஒருதலைப்பட்சமான அரசியல் நோக்குகளை மட்டுமே முன்வைத்து போராட்டத்தின் உட்பரிமாணங்களை வேண்டுமென்றே மறைத்து வந்த அல்லது தான் கொண்டிருந்த நிலைப்பாடுகள் மீது ஒரு சிறு விமர்சனப் பார்வையைத்தானும் முன்வைக்க முடியாத மனமுதிர்ச்சியின்மைக்குள் சிக்கி தமது பக்க அரசியலை மட்டும் நியாயப்படுத்தும் அரசியல் குறிப்புகளை கொண்டே படைப்புகளை உற்பத்தி செய்துகொண்டிருந்த ஈழ இலக்கியச் சூழலில் ஷோபாசக்தி, நோயல் நடேசன் போன்ற வெகுசிலரே ஒரு தொடர்ச்சியான மாற்றுக் குரலாக, ஈழப் போராட்டம் குறித்து நேரிய பார்வையை முன்வைத்து, அதன் உட்பரிமாணங்களை திறந்தநிலையில் விவாதத்துக்குட்படுத்தும், இலக்கியக் குரலாக ஒலிக்கத் தொடங்கினர்.

அந்தரங்கம் அண்மையில் வந்த நோயல் நடேசனின் சிறுகதைத் தொகுப்பு. 15 கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. ஈழப் போர் அதன் விளைவான வாழ்க்கையைப் பற்றியே இதிலுள்ள பல கதைகள் பேசுகின்றன.

இத்தொகுப்பிலுள்ள ஜூலி, ஆவி எதைத் தேடியது, அலைந்து திரியும் ஆவிகள் போன்ற கதைகள் ஒருவகையில் மனித வாழ்வு குறித்த மேலைத்தேய நம்பிக்கைகள், நோக்குநிலைகளுக்கு மறுதலையான ஒரு கீழைத்தேய விசாரணையை, நோக்குநிலையை முன்வைப்பவை. ஆவி பற்றிய ஆன்மீகரீதியான நம்பிக்கை மேற்கில் ஒருகாலத்தில் நிலவி இருந்தாலும் ஆனால் நவீன மேற்கத்தேய வாழ்க்கை முறையில் அமானுஷ்ய சக்திகள் மீதான நம்பிக்கையை உண்மையான அர்த்தத்தில் காணமுடிவதில்லை. மேற்கின் சில வணிக சினிமாக்களின் வியாபார உத்தி சினிமாவில் மட்டுமே ஆவி நம்பிக்கை காட்சிகளாக உள்ளன. பெரும்பாலும் மேற்கத்தேய சிந்தனைமுறை என்பது மனித வாழ்வு பற்றிய புரிதல்களை, அடிப்படைகளை அறிவியல்ரீதியாகவும், பகுத்தறிவு சார்ந்து தர்க்கரீதியாகவும்தான் முடிவுசெய்கிறது. ஆனால் நடேசனின் இந்தக் கதைகள் மனித வாழ்வு குறித்த கீழைத்தேய அறிதல் முறைகள், நோக்குநிலைகள் மீது அதாவது கனவு, ஆவியுலகு, ஆத்மா சாந்தியடைதல் போன்ற இந்திய மெய்யியல் அடிப்படைகள் மீது நாட்டங் கொண்டிருக்கிறது. நீண்ட காலமாக அவர் மேலைத்தேய சமூக சூழலில், அவுஸ்திரேலியாவில் ஒரு மிருக வைத்தியராக வாழ்ந்து வருபவர். அந்த வாழ்க்கைச் சூழல் ஏற்படுத்திய சலிப்பு கீழைத்தேய பண்பாட்டு, சிந்தனை மரபுகளை நோக்கி அவரை ஈர்த்திருக்கலாம் என நினைக்கிறேன்.

ஜூலி

கதையில் ஈழத்திலிருந்து சென்று அவுஸ்ரேலியாவில் வாழ்ந்து வரும்  மிருக வைத்தியரான கதைசொல்லி, ஜூலி வாக்கர் எனும் அவுஸ்திரேலிய வெள்ளைக்காரப் பெண் மீது ஒருதலைப்பட்சமாக காதல் கொள்கிறான். அவளும் ஒரு மிருக வைத்தியராக கதை சொல்லியின் விலங்கு மருத்துவமனையில் சில காலம் பணி செய்கிறாள். கதைசொல்லி தன் காதலை அவளிடம் வெளிப்படுத்தும் முன்னரே ஒரு வைபவத்தில் அவள் தன் பெண் பார்ட்னரான பார்பராவுடன் சேர்ந்து வாழும் திருமணத் திட்டத்தை அறிவிக்கிறாள். அப்போதுதான் அவள் ஒரு லெஸ்பியன் என்பதை கதைசொல்லி அறிந்து கொள்கிறான். அவளை மனதிலிருந்து அகற்றினாலும் அவள் அரூபமாக கதைசொல்லியின் மனதில் வாழ்ந்து கொண்டே இருப்பதை கதைப் போக்கிலிருந்து வாசகன் அறிந்து கொள்கிறான். மிக நீண்ட நாட்களுக்குப் பின் கதைசொல்லி ஜூலியையும் பர்பராவையும் சந்திக்கிறான். பின்னர் அவ்வப்போது ஜூலி கதைசொல்லியை சந்திப்பதுண்டு. ஒருநாள் பார்பரா ஒரு 60 எடையுள்ள பெக்செய்யப்பட்ட இறந்த நாயின் உடலை எரியூட்டுவதற்காக கதைசொல்லியின் மருத்துவமைனயில் ஒப்படைத்துச் செல்கிறாள். பெக் செய்யப்பட்டிருந்ததால் திறந்து பார்க்காமலே அப்படியே அது எரியூட்டப்பட்டவிட்டது. பிறகு சிலநாட்களாக திடீரென்று அவள் மாயமாகிறாள். ஜூலியையும் அதன் பின் காண முடிவதில்லை. அவள் என்ன ஆனாள் என்ற பதட்டம் கதைசொல்லியைத் தொந்தரவு செய்கிறது. பின்னர் அந்த சம்பவம் அவனுக்கு கனவாக வருகிறது. ஒரு மர்மக்கதைபோல் நீளும் கதையில் ஜூலிக்கு நடந்த மர்மங்கள் கதைசொல்லிக்கு கனவின் மூலமே அவிழ்க்கப்படுகிறது.

கதையில் ஜூலிக்கு குழந்தை பெறவேண்டும் என்ற ஆர்வம் உருவாகிறது. பார்பராவுக்கு அதில் நாட்டமில்லை. ஒரு ஆண் நண்பன் மூலம் ஜூலி கர்ப்பமடைகிறாள். அதன் விளைவாக ஜூலிக்கும் பர்பராவுக்குமிடையில் முரண்பாடு வலுக்கிறது. தற்செயலாக பர்பரா தாக்கியதில் ஜூலி இறந்துவிடுகிறாள். இந்த மர்மங்களை கதைசொல்லி கனவு மூலமே அவிழ்க்கப்படுகிறது. பின்னர் பொலிசுக்கு அறிவித்தது பார்பரா விசாரணை செய்யப்படுகிறாள். உண்மை வெளியாகிறது.

எனவே கதையில் கனவு ஒரு அறிதல் முறையாக சொல்லப்படுகிறது. இது மிக முக்கியமான ஒன்று. அதேவேளை இந்தக்கதை மேலைத்தேய வாழ்க்கை ஒழுங்கின் மீதான ஒரு புகாரையும் முன்வைக்கிறது. லெஸ்பியன், கே உறவுகள் மனித சமூகத்தின் இருப்புக்கும், தொடர்ச்சிக்கும், இயற்கையான கட்டமைப்பபுக்கும் பொருத்தமற்றது என்பதையும் கதை சொல்கிறது.

ஆவி எதைத்தேடியதும் , இதேபோன்று ஆவியுலகம் போன்ற அமானுஷ்ய நம்பிக்கையைப் பேசும் கதைதான். கதையின் முதல்பகுதி மேலைத்தேய சூழலை ஒரு தமிழ்வாசகனுக்கு விபரிக்கிறது. அவுஸ்திரேலிய ஆங்கிலேய சூழலில் வீடு என்பது அநேகமாக ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை விற்கப்படுவதும் புதிய வீடு வாங்குவதும் அவர்களின் வாழ்வியலோடு இணைந்த ஒரு சமூகவியல் பரிமாணமாக முன்வைக்கப்படுகிறது. அதுவும் வீடு விற்பனை என்பது ஏலத்தில் விற்பது வாங்குவது எனும் நடைமுறை நமக்கு மிக அந்நியமான ஒன்று. இந்த வாழ்வியலை தமிழ் வாசகன் உற்றுநோக்குவதற்கான சாளரமாக நோயலின் இந்தக் கதை விரிகிறது.

ஏலத்தில் வீடொன்றை வாங்கி அங்கு குடி இருக்கத் தொடங்கும் கதை சொல்லிக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் ஏற்படுகிறது. அந்த வீடு ஏற்கனவே கணவன் மனைவியான இரண்டு முதியவர்கள் குடியிருந்த வீடு. மனைவி இறந்துவிட தனித்துப் போனவரை மகன் முதியோர் இல்லத்தல் சேர்த்துவிடுகிறான். அவரும் இறந்த பிறகு அந்த வீட்டை மகன் ஏலத்தில் விற்கிறான். அந்த வீட்டையே கதைசொல்லி வாங்கி வசித்து வருகிறார். இரவில் தூங்கும் போது பற்களைக் கடிப்பது போன்ற ஒலி வந்து கதைசொல்லியின் தூக்கத்தை கெடுக்கிறது. எவ்வளவு தேடியும் எந்த சிலமனுமில்லை.

கடைசியில் அந்த வீட்டில் வசித்த இறந்த முதியவரின் கட்டுப் பற்கள் அந்த வீட்டில் கழற்றி வைக்கப்பட்டிருந்ததை கண்டறிகின்றனர். இந்த பல்லைத் தேடித்தான் முதியவர் இங்கே வந்திரக்கிறார் என கதைசொல்லி வேடிக்கையாகச் சொல்கிறான். 

கதையில் வரும் சத்தம் முதியவரியின் ஆவியால் எழுப்பப்பட்டது என்பதே கதையின் நம்பிக்கையாக இருக்கிறது. நவீன விஞ்ஞான வாழ்க்கை முறையில் தத்துவார்த்த மற்றும் மானுடவியல் வாசிப்பற்ற ஒருதட்டையான வாசகன் இத்தகைய நம்பிக்கைகளை வெறும் படைப்புலக மாயையாக மட்டுமே நோக்குவான். இது தொன்மங்கள் சார்ந்து அகமனதால் நிகழும் அறிதலாகும்.

அலைந்துதிரியும் ஆவிகள், ஈழப்போர்ப்பின்னணியில் விரியும் கதை. விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து போராடும் ஒரு இளைஞன் போரில் கண்ணொன்றை இழந்த பின் போர் நடவடிக்கைகளிலிருந்து விடுவிக்கப்பட்படு புலிகளின் சித்ரவதை முகாமொன்றுக்குப் பொறுப்பாக்கப்படுகிறான். பின்னர் இராணுவத்திரால் அந்த முகாம் அழிக்கப்பட்டதில் அவனும் கொல்லப்படுகிறான். அவனது உடல் அந்த முகாம் அமைந்திருந்த வீட்டுக்குள்ளேயே இராணுவத்தினரால் புதைக்கப்படுகிறது. அவனுக்கு என்ன நடந்தது என்பதை அறியாத அவனது முதிய தாய் நோயில் விழுகிறாள். பின்னர் அவளது மகன் இராணுவத்தினரால் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட செய்தியை அம்மா அறிந்து அவளது மற்ற மகனிடம் தம்பியின் உடலின் எச்சத்தை எடுத்து எரித்து அஸ்தியை இராமேஸ்வரத்தில் கரைத்துவிடுமாறு சொல்லிவிட்டுச் சாகிறாள். அதன்படி செய்யும் அண்ணன் கதைசொல்லியிடம் பகிர்ந்துகொள்ளும் அனுபவங்களே கதையாக நகர்த்தப்படுகிறது.

போரில் இறந்த ஆன்மாக்களுக்கு அதிலும் குறிப்பாக கெட்ட ஆன்மாக்களுக்கு திதி செய்தல் அந்த ஆன்மாக்கள் சாந்தியடைவதற்கான ஒரு வழிமுறையாகச் சொல்கிறார். மகாபாரதத்தில் போரில் இறந்தவர்களுக்கு பாண்டவர்கள் திதிசெய்ய முடிவுசெய்த போது பீஷ்மருக்கே தர்மர் முதல் பிண்டம் வைப்பதற்கு முன்வருகிறார். அதைத் தடுத்த கிருஷ்ணர் தர்மனிடம், இல்லை சகுனிக்கே முதல் அவி வைக்க வேண்டும். அதுவே பாரத தேசத்திற்கு நல்லது எனக்கூறினார். இந்த சம்பவத்தை எடுத்தாளும் நடேசன் ஈழப்போரில் கொல்லப்பட்ட சில ஆன்மாக்கள் கெடுதி செய்தவர்களுடையது, முறையாக அவற்றுக்கு திதிசெய்யப்படாமையினாலேயே இலங்கையில் தொடர்ந்தும் அமைதியின்மை நீடித்து வருகிறது என்றொரு மதப் பரிமாணம் கொண்ட ஒரு புதிய பார்வையை இக்கதையினூடே முன்வைக்கிறார். இன்றைய பகுத்தறிவுசார்ந்த விஞ்ஞானச் சூழலில் இக்கதையின் மையக் கருத்து அர்த்தமற்றதாகத் தோன்றுகிறது. ஆனால் கீழைத்தேய அறிதல் மற்றும் நம்பிக்கை மரபில் அதற்கான உள்ளார்ந்த அர்த்தம் இல்லாமலில்லை. அதனை ஒரு பிற்போக்குக் குரலாகப் பார்க்க வேண்டிய எந்தத் தேவையும் இல்லை.  

அந்த ஆறு மாதங்கள்  கதை ஆசாரக் கிறிஸ்தவத்தின் மீதான தனது மறுபார்வைகளை முன்வைக்கும் கதை. சுயசரிதைத் தன்மையான கதையாக இருப்பதால் கதைக்கட்டுமானத்தில் பிசிறுகள் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால் அது பதிவுசெய்யும் தனிமனித உணர்ச்சிகளும், அவை மதத்தின் புனிதங்களால் ஒடுக்கப்படும் அபத்தமும் ஏதோ ஒருவடிவில் பதிவுசெய்ய வேண்டியவையாகவே இருக்கிறது. மனிதனின் இயற்கையான பாலியல் தேவையை மத ஆசாரங்களின் பொறுட்டு அடக்கிவைப்பதால் நிகழும் சீரழிவுகள் மீது கதை கவனங் கொள்கிறது. கிறிஸ்தவ மதக்குருக்களான பாதிரிமார் பல பெண்களை கற்பழிப்பு, பலாத்கார உறவுகொள்ளும் செய்திகள் இப்போது உலவுகின்றன. இந்த சீரழிவுக்கான அடிப்படைகள் மீதே இக்கதை கனம்கொள்கிறது. தன் மனைவியை விட்டுப் பிரிந்து வெறும் ஆறு மாதங்களே பிரம்மச்சாரியாக வாழநேரும் ஒருவனின் மன அவஸ்தைகளைச் சுற்றி நகரும் இக்கதை வாழ்க்கை நெடுகிலும் பிரம்மச்சாரியாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட பாதிரிகளின் பாலுணர்வினதும், மனவுணர்வினதும் பக்கம் நின்று நியாயம் பேசுகிறது.

அந்தரங்கம் கதை தலைமுறை இடைவெளியை நினைவூட்டுகிறது. பெற்றோரின் 30 வருட திருமண நிறைவுநாள் நிகழ்வொன்றை பிள்ளைகள் ஏற்பாடுசெய்கின்றனர். பிள்ளைகளின் தந்தையான கதைசொல்லி அதனை உற்சாகமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய காலகட்டத்தை கடந்துவிட்டிருந்த சூழலில் கதை சொல்லப்படுகிறது. இது புலம்பெயர் தமிழர் வாழ்வின் பல பரிமாணங்கள் குறித்த பேசுகிறது. புலம்பெயர் தேசங்களில் நிகழும் இனக்கலப்புகள், புதிய பண்பாட்டு மாற்றங்கள் மீது கதை நம்மைக் கவனப்படுத்தகிறது. அவுஸ்திரேலியாவின் புலம்பெயர் தமிழர்களின் இரண்டாவது தலைமுறை பல்லினக் கலாசாரக் கலப்பை பிரதிநிதித்துவம் செய்பவர்கள். இவர்களின் தமிழ்மொழிப் பிரயோகம் மண்வாசனையற்றிருக்கிறது. கதையில் மாமாவுக்கும் மருமகளுக்குமிடையில் நிகழும் உரையாடல் ஈழத்தமிழ்ப் பாரம்பரிய வாசத்திலிருந்து முற்றிலும் விலகி நிற்கிறது. எழுத்துநடையான மொழியாக அது இருக்கிறது. இந்த மண்வாசனையான மொழிப்பிரயோகம் என்பது நோயல் நடேசனின் படைப்புகளில் காணக்கிடைக்காத ஒன்றாகவே இருக்கிறது. சிலவேளை இந்த உரையாடல் தமிழில் நடைபெறாமல் இருந்திருக்கலாம். அல்லது நோயலுக்கு மண்சார்ந்த மொழிக்கூறுகளை இலக்கியத்தில் பயன்படுத்துவதில் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். அல்லது அது அவருக்கு கைகூடி வராமலும் போயிருக்கலாம். எது எப்படியோ ஒரு படைப்பின் ஆளுமையான பக்கமொன்று நடேசனின் படைப்புகளிலிருந்து நழுவிக்கொண்டு செல்கிறது என்றே நான் உணர்கிறேன். இக்கதைக்குள் வரும் எமிலியின் கதை கதைக்குள் கதையாக வடிவங் கொள்கிறது. எமிலியின் நிர்க்கதியான வாழ்வு, ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலான பாலியல் சிக்கல்கள், அந்தரங்கமாக அந்த சிக்கல்கள் வெற்றிகொள்ளப்படுவது என கதை வாசகனுக்கு மேலும் அனுபவங்களைத் திறக்கின்றன. விருந்து நிகழ்வில் புலம்பெயர் தமிழர்களின் உணவுப் பண்பாட்டில் நிகழ்ந்துவிட்ட மாற்றங்கள் கூட மேலோட்டமாகப் பதிவாகிச் செல்கின்றன.

தொகுப்பின் பெரும்பாலான கதைகள் ஈழப் போராட்டமும் அதன் மனிதர்களும் பற்றியே பேசுகிறது. போராட்டக் கற்பிதங்களால் தன்னிலையை இழந்த சாமான்ய ஆண்களினதும்-பெண்களினதும் வாழ்வு சொல்லப்படுகிறது. கரும்புலி கதையில் வரும் கங்கா என்ற பெண் இலகுவில் கடந்துவிடக்கூடியவள் அல்ல. போராட்டம் கொடுத்த வலியும், கனவுகளும் அர்த்தமற்றுப் போய் ஏமாற்றமடைகிறாள். போருக்குப்பின் கங்கா சமூக வாழ்வில் இணைக்கப்படும் போது சமூகம் அவளைப் புறக்கணிக்கிறது. அதைத்தான் அவள் மிகப் பெரிய வலியாக உணர்கிறாள். சமூகத்தில் ஒரு உறுப்பினராக தன்னால் வாழ முடியாதளவு அந்த வலி பெருகும் போது தற்கொலைசெய்துகொள்ள முயற்சித்து காப்பாற்றப்படுகிறாள். இளைஞர், யுவதிகளான முன்னாள் விடுதலைப்புலிகள் தமிழ் சமூகத்தில் புறக்கணிக்கப்படும் சூழல் குறித்து பல ஈழத்துப் படைப்பாளிகளால் பேசப்படுகிறது. யோ.கர்ணனின் கொலம்பஸின் வரைபடங்கள் நாவலும் மையமாக இதனையே பேசுகிறது.

நடேசனின் ருத்ரம் கதையும் போராட்டத்தின் இன்னொரு விளைவைப் பேசுகிறது. ருத்ரகுமாரன் போன்ற தமிழீழப் போராட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டவர்களின் இப்போது வரைக்கும் தொடரும் இயந்திரத்தனமான இயக்க விசுவாசத்திலிருந்து தன்னை மீட்டுக்கொள்ளாத மடமையின் கோரத்தை இக்கதையில் பேசியிருக்கிறார்.

அந்தரங்கம் தொகுப்புக் கதைகளின் கதாமாந்தர்கள் அதிகமும் கனவுகளால் அலைக்கழிக்கப்படுபவர்கள். ருத்ரம் கதையில் உருத்திரன் வெடிப்பது போன்று கனவு காண்கிறான். அலைந்து திரியும் ஆவிகளில் தம்பி தன்னைக் கொல்வதற்கு துப்பாக்கியோடு துரத்துவது போன்று அண்ணன் கனவு காண்கிறான். இந்த மனிதர்களின் ஆழ் மனக்காயங்களினதும் அன்றாட வாழ்வினதும் வெளிப்பாடுகளே இந்தக் கனவுகளாக அவர்களது அந்தரங்கத்தின் வார்ப்புகளாக இந்தக் கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. போரால் பிழியப்பட்ட மனிதர்களின் வாழ்க்கைப் பாடுகளை நினைவுகொள்ளல், அதிகாரத்துக்கெதிரான கலகக் குரல் என்பதற்கு அப்பால் இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் வேறு தளங்களை நோக்கி மிக அபூர்வமாகவே செல்கின்றன.

கதைக்குள் பேசும் பொருள் சார்ந்து எல்லாவற்றையும் சொல்லிவிடும் முனைப்பு நடேசனிடம் ஒரு பிடிவாதம் போன்று எல்லாக் கதைகளிலுமே தொடர்ந்து வருகிறது. ஒரு சிறுகதைக்குள் எல்லாவற்றையும் சொல்லும் போது அது கதைத்தன்மையை இழந்து விவரணமாக மாறிவிடுவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளது. அங்கு வாசகனுக்கு ஊகிக்கவும், புரிதல்களை நிகழ்த்துவதற்குமான சாத்தியங்கள் வழங்கப்பட வேண்டும். அந்த இடத்தையும் படைப்பாளியே எடுத்துக் கொள்வது ஒரு கதையில் நிகழ வேண்டிய படைப்பாளி-வாசகன் உறவை மிக மோசமாகப் பாதித்துவிடுகிறது. சிறுகதையின் முழுமை என்பது படைப்பாளியும், வாசகனும் இணையும் ஒரு புள்ளியில்தான் நிகழ்கிறது. வாசகனின் வெவ்வேறுவிதமான புரிதல்கள், வாசிப்புகள் கதையை மேலும் ஆழமானதாகவும் அர்த்தபூர்வமானதாகவும் மாற்றுகிறது.

நன்றி அம்ருதா

அந்தரங்கம் ஒரு புலம் வெளியீடு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: