ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா கொலை

அங்கம்  –  12

கிராண்ட்பாஸ் வீதி நெருங்கும் ஆமர்வீதிச் சந்தி இலங்கை அரசியல் வரலாற்றிலும் உலக அரசியல் வரலாற்றிலும் தவிர்க்கமுடியாத ஒரு அத்தியாயத்தை எழுதிவைத்துள்ளது.

1993 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் திகதி உலகத்தொழிலாளர்களுக்கான மேதினம். அன்றைய தினம் ஊர்வலத்திற்கு தலைமைதாங்கி வந்துகொண்டிருந்த அன்றைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா ஒரு தற்கொலை குண்டுதாரியின் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இச்சம்பவம் குறிப்பிட்ட கிராண்ட் பாஸ் வீதியும் ஆமர் வீதியும் சந்திக்கும் நாற்சந்தியில் நடந்தது.

“விதி வலியது “ என்பார்கள். அவர் கொல்லப்படுவதற்கு சுமார் ஏழு நாட்களுக்கு முன்னர் தலைநகரின் புறநகரான கிருலப்பனை என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசாரக்கூட்டம் ஒன்றில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி சுட்டுக்கொல்லப்பட்டார்.

அவரைச்சுட்டவர் யார்..?  என்பது இதுவரையில் ஊர்ஜிதப்படுத்த முடியாத செய்தி…! எனினும் அக்காலப்பகுதியில் லலித்தும் காமினி திஸாநாயக்காவும் பிரேமதாசவுக்கு எதிராக இயங்கினார்கள். அதனால்  லலித்தின் கொலைச்சம்பவத்தில் பிரேமதாசவுக்கும் பங்கிருக்கலாம், அல்லது அவ்வாறு ஒரு சம்பவம் கிருலப்பனையில் நடக்கும் என்று பிரேமதாசவுக்கு முற்கூட்டியே தெரிந்திருக்கலாம் என்ற வதந்தி தலைநகரில் பரவியிருந்தது.

இந்த வதந்தி பிரேமதாசவையும் எட்டியிருந்தது. அத்தகைய வதந்தி விஷம்போல் பரவிவருவதை தனக்கு நம்பிக்கையான புலனாய்வாளர்கள் ஊடாக தெரிந்துகொண்ட பிரேமதாசா, தன்னை சுத்தமான தலைவராக நிரூபிக்கவேண்டிய தேவையும் வந்திருக்கவேண்டும்.

லலித் கொல்லப்பட்ட இடத்திலேயே சில தினங்களில்  மற்றும் ஒரு கூட்டத்தில் கலந்துகொண்ட பிரேமதாசா, சில நிமிடங்களே பேசிய வார்த்தைகளும் அக்காலப்பகுதியில் வெளியான ஊடகங்களில் பதிவாகியிருக்கின்றன.

” என்னைக்கொல்லுங்கள். ஆனால், என் வாழ்நாள் முழுவதும் நான் பேணிப்பாதுகாத்திருக்கும் எனது பெயருக்கு களங்கம் கற்பித்துவிடாதீர்கள்” இதுவே அவரது இறுதி  மேடைப்பேச்சு.

அத்துடன் நின்றுவிடாமல், தான் எப்பொழுதும் மக்களின் தொண்டன், மக்களுடன்தான் நிற்பேன் என்ற மனவைராக்கியத்துடன், பாதுகாப்பு தேவைகளையும் கவனத்தில் எடுக்காமல் மே 1 ஆம் திகதி மக்களோடு இணைந்து ஊர்வலத்தில் வந்தார்.

ஆமர் வீதியும் கிராண்ட் பாஸ்வீதியும் சந்திக்கும் இடத்தில் ஒரு பொலிஸ்நிலையமும் இருப்பதை நெடுங்காலமாக அவதானித்திருப்பீர்கள். அத்தகைய பாதுகாப்பான பிரதேசத்தில்தான் காலன் அவரைத்தேடி வந்து அவர் உடலை சிதைத்து உயிர் குடித்தான்.

அவ்விடம் அவர் நீண்டகாலமாக நாடாளுமன்றத்திற்கு தெரிவான கொழும்பு மத்திய பிரதேசமாகும். அந்தப்பகுதியில் வாழைத்தோட்டம் என்ற பிரதேசத்தில் ஒரு சாதாரண ஏழைக்குடும்பத்தில் ரிச்சர்ட் ரணசிங்க – என்சினிஹாமி தம்பதியரின் மூத்த புதல்வனாக 23-06-1924 இல் பிறந்திருக்கும் பிரேமதாசா இளைமைக்காலத்தில் ஏழ்மையில் வாடியிருப்பவர்.

தாயார் தயாரித்துத்தரும் லெவரியா என்ற சிற்றுண்டியை விற்றுவந்து குடும்பத்தின் பசிபோக்கிய சிறுவன், படிப்படியாக கற்று, அநகாரிக தர்மபாலவின் போதனைகளினால் பெரிதும் கவரப்பட்டு, தனது வயது இளைஞர்களுடன் இணைந்து வாழைத்தோட்டம் பிரதேசத்தில் சுசரித்த இயக்கம் என்ற சமூகசேவை அமைப்பை உருவாக்கினார். சிரமதானம், மக்கள் சேவை என்று இளம் வயதிலேயே மக்கள் மத்தியில் பிரபலமாகத்தொடங்கி, தனது 26 வயதில் கொழும்பு மாநகர சபைத்தேர்தலில் 1950 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு வென்றார். அன்றுமுதல் அவர் மரணித்த 1993 ஆம் ஆண்டுவரையில் அவரது வாழ்க்கை ஏறுமுகம்தான்.

மெத்தப்படித்தவர்களும் சமூக அந்தஸ்தும் செல்வச்செழிப்பும் கொண்டவர்கள்தான் அரசியலுக்கு வரமுடியும் என்றிருந்த பொது விதியை மாற்றி,  ஒரு கீழ்மட்ட சாதாரண பிரஜையும் தேசத்தை ஆளமுடியும் என்று நிரூபித்துக்காண்பித்த ஒரு சாதனையாளர்தான் ரணசிங்க பிரேமதாச.

கொழும்பு மாநகர சபைக்குத் தெரிவாகி, ஐந்து ஆண்டுகளில் பிரதி மேயராகவும் அதன் பின்னர் மேயராகவும் தெரிவாகி, 1960 இல் கொழும்பு மத்திய தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகி, 1965 இல் டட்லி சேனாநாயக்கா தலைமையில் உருவான கூட்டரசாங்கத்தில் நியமன எம்.பி.யாக தெரிவான மு. திருச்செல்வம் உள்ளுராட்சி அமைச்சரானபோது அவருக்கு துணை அமைச்சரானார்.

திருச்செல்வம் பதவி விலகியதும் சுமார் மூன்று ஆண்டுகள் உள்ளுராட்சி அமைச்சரானார்.  இரவில் நேரம் கடந்து உறக்கத்திற்குச்சென்று, அதிகாலையே துயில் எழுந்து, பொதுமக்களின் தேவைகளை தனது வாசஸ்தலத்திலிருந்தே கவனித்து மக்கள் தலைவராக வளர்ந்தவர்தான் பிரேமதாசா.

அவருடைய கடும் உழைப்பும் மக்களிடம் அவர் பெற்றிருந்த செல்வாக்கும் அவரை 1977 இல் பதவிக்கு வந்த அரசில் பிரதமராக்கியது.

சுறுசுறுப்பும் திட்டமிடலும், சாமர்த்தியமும் அவரது இயல்புகள். அதனால்தான் அவரால் தேசத்தின் ஜனாதிபதியாவதற்கும் வழிகோலியது.

நம்பிக்கையானவர்களை எப்பொழுதும் தன்வசம் வைத்துக்கொண்டிருந்த அவர், தனது முக்கிய பொறுப்புகளை கவனிக்கும் பணிகளை ஐந்து தமிழ் லிங்கங்களிடம் வழங்கியிருந்தார்.

பாஸ்கரலிங்கம், சுந்தரலிங்கம் உட்பட மேலும் மூன்று லிங்கங்கள் அவரது அதிகாரிகளாக விளங்கினர். நாடேங்கும் ஆயிரக்கணக்கான வீடமைப்புத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி, கிராமோதயம் என்ற பதம் நாடெங்கும் ஒலிக்கச்செய்தவர்.

உதாகம (கிராம எழுச்சி) – கம்உதாவ ( கிராமோதயம்) ஆதரவற்ற குழந்தைகளுக்கான செவன சரண திட்டம், ஜனசவிய என்ற வறுமை ஒழிப்புத்திட்டம், பாடசாலை மாணவருக்கு இலவச சீருடை, சத்துணவு, இலவச பாடப்புத்தகங்கள் விநியோகம் என்பன அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஏழைமக்களுக்கான மறுமலர்ச்சித்திட்டங்களாகும்.

அவர் அரசியல்வாதியாக மாத்திரம் இயங்கவில்லை. அவரும் ஒரு எழுத்தாளர் என்பதை பலரும் அறியமாட்டார்கள். கதைகள், கட்டுரைகள், சிறுவர் இலக்கியம் முதலான துறைகளிலும் நூல்கள் எழுதியுள்ளார்.

அவை அவரது தாய் மொழியான சிங்களத்தில் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் வெளியாகியுள்ளன.

இளம்வயது முதல் மச்சம் , மாமிசம் உண்ணாமல், வேறு தீய பழக்கங்களும் அற்று,  காந்தீயத்திலும் நம்பிக்கை கொண்டிருந்த அவர், இந்தியாவின் உறவை அண்டை நாட்டுக்கான நல்லெண்ணத்தில் மாத்திரமே வைத்திருக்கவிரும்பியவர்.

வடமராட்சியில் லலித் அத்துலத் முதலியின் உத்தரவினால் நடந்த ஒப்பரேஷன் லிபரேஷன் தாக்குதலையடுத்து, இந்தியாவின் தலையீடு இலங்கையில் வந்ததை அவர் அடியோடு விரும்பவில்லை. வரலாற்று முக்கியத்துவம் மிக்க ராஜீவ் – ஜே. ஆர். செய்துகொண்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் கைச்சாத்திடல் நிகழ்வையும் அவர் புறக்கணித்தார்.

இந்திய  அமைதிப்படை   இலங்கையில் நிலைகொண்டிருந்த வேளையிலேயே புலிகள் இயக்கத்தினரை ” My Boys” என விளித்து அழைத்து தலைநகரத்தில் தங்கவைத்து உபசரித்து சமாதான பேச்சுவார்த்தையை நடத்தி, புலிகளுக்குத்தேவையானவற்றையும் வழங்கி உதவினார்.

இறுதியில் அவரது சுச்சரித்த இல்லத்திற்கு அருகில்  சாண்டர் பிளேஸில் ஒரு சிறிய பலசரக்கு கடையில் வேலைசெய்துகொண்டு,  அடிக்கடி அந்த இல்லத்திற்கும் சென்றுவந்த யாழ்ப்பாணம் குருநகர் பகுதியைச்சேர்ந்த பாபு என அழைக்கப்பட்ட குமாரகுலசிங்கம் வீரகுமார் என்ற இளைஞன் துவிச்சக்கரவண்டியில் வந்து பிரேமதாசா நடந்துவந்துகொண்டிருந்த ஊர்வலத்தின் நடுவே குறுக்கிட்டு தன்னையும் மாய்த்து, பிரேமதாச உட்பட 17 பேரின் உயிரையும் போக்கினான்.

அந்த இடத்தில் நினைவுத்தூபி அமைந்துள்ளது. தலைநகரின் பிறிதோர் இடத்தில் அவருடைய முழுஉருவ வெண்கலச்சிலை நிர்மாணிக்கப்பட்டு வருடந்தோறும் அஞ்சலி செலுத்தப்படுகிறது.

களனி கங்கை தீரத்தில் நடந்திருக்கும் அரசியல் கொலைகள் அதிகம். கிராண்ட்பாஸ் அருகில் பாலத்துறை என்ற இடத்திலும் ஒரு  தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் முன்னாள் காணி, நீர்ப்பாசன மகாவலி அபிவிருத்தி அமைச்சர் காமினி திஸாநாயக்க, கொலன்னாவ நாடாளுமன்ற உறுப்பினர் வீரசிங்க மல்லிமாராச்சி உட்பட பலர் தற்கொலைக்குண்டுதாரியினால் கொல்லப்பட்டனர்.

ஓடும் கங்கைகள் மனித உடலங்களையும் தன்னோடு அழைத்துச்சென்றிருக்கிறது. அதன் தீரங்களில் நடந்த பல கொலைச்சம்பவங்களில், அரசியல் தலைவர்கள், பாதாள உலகத்தலைவர்கள், சாதாரண பொதுமக்கள், சமூகவிரோதிகள், தண்டனை பெற்ற குற்றவாளிகள்  பலரும் பலியாகினர்.

நடந்து செல்லும் களனி கங்கையின் வரலாறும்  இத்தகைய துன்பியல்களையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது.

“ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா கொலை” மீது ஒரு மறுமொழி

  1. Yes, Premadasa was a different politician who cared for the poor masses. When he died he had only a little Morris Minor car in his possession, unlike the current politicians.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: