கலைஞர்கள்-   கலைத்துறை

அங்கம்  –  11

களனி கங்கை தீரத்தில் கொகிலவத்தை , மட்டக்குளி, கிராண்ட்பாஸ், பிறின்ஸ் ஒஃப் வேல்ஸ் வீதி, ஆமர்வீதி, புளுமெண்டால் வீதி என்பன எழுத்தாளர்கள், இசைக்கலைஞர்கள், பாடகர்கள், பத்திரிகையாளர்கள், ஓவியர்கள், ஒளிப்படக்கலைஞர்கள்  வாழ்ந்த,  பணியாற்றிய, நடமாடித்திரிந்த பிரதேசங்களாகும்.

இந்த இடங்களில்தான்  தினக்குரல்,  வீரகேசரி, திவயின, The Island, சித்திர மித்ர, முதலான பத்திரிகைகள் வெளியாகின்றன.  கொகிலவத்தையில் 1983 இற்கு முன்னர் மக்கள் விடுதலை முன்னணியின் நியமுவா, ரத்து பலய, செஞ்சக்தி,  Red Power  முதலான பத்திரிகைகள் அச்சிடப்பட்டு வெளிவந்தன.  வீரகேசரிக்காக ஜா- எல , ஏக்கலையில் பல ஏக்கர் விஸ்தீரணத்தில் நிலம் வாங்கப்பட்டிருந்தாலும், தொடர்ந்தும் கிராண்ட்பாஸ் வீதி வீரகேசரியின் பெயரை நிலைத்துவைத்திருக்கிறது.

ஆமர்வீதியில் அமைந்திருந்த கே. ஜி. இண்டஸ்றீஸ் ஸ்தாபனத்தின் உரிமையாளர் கே. குணரத்தினம். இங்கு இயங்கிய ஓவியக்கூடத்தில் இலங்கை தியேட்டர்களில் புதிதாக வெளியாகும் திரைப்படங்களுக்கான பெரிய பெணர்கள் கட்அவுட்டுகள் வரையப்படும். அதற்கென பயிற்சி பெற்ற ஓவியர்கள் இங்கு பணியாற்றினார்கள். நடிகர், நடிகையரின் உருவங்களை தத்ரூபமாக வரையும் தேர்ச்சி பெற்ற ஓவியர்கள் குறிப்பிட்ட கலைக்கூடத்திலிருந்து வரைந்து அனுப்பும் பெரிய வண்ணச்சுவரொட்டிகளும் பெணர்களும் கட் அவுட்டுகளும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்தன. ஆர். முத்துசாமி - தமிழ் விக்கிப்பீடியா

                       பிரிண்ஸ் ஒஃப் வேல்ஸ் வீதியிலும் ஒரு பிரபல முன்னணி இசைக்கலைஞர் வாழ்ந்தார். அவர்தான் ஆர். முத்துசாமி. பல சிங்கள, தமிழ்ப்படங்களுக்கு இசையமைத்தவர். அவரது மகன் மோகனும் நாடறிந்த இசைக்கலைஞர். அவரது இசைக்குழு அப்சராஸ் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் புகழ்பெற்றது.

ராமையா ஆசாரி முத்துசாமி என்ற இயற்பெயர் கொண்டிருந்த இசையமைப்பாளர் ஆர். முத்துசாமி, தமிழ்நாடு நாகர்கோவிலில்  1926 ஆம் ஆண்டு, இசைக்கலைஞர்  ரமையா பாகவதருக்குப்பிறந்து, தன்னையும் இசைக்கலைஞராகவே வளர்த்துக்கொண்டதுடன் நில்லாமல் தனது மகன் மோகனையும் இசைக்கலைஞராக்கியவர்.

அதனால் தலைமுறைகள் கடந்தும் அவரது குடும்பத்தில் இசைகோலோச்சி வாழ்ந்துகொண்டிருக்கிறது.

இலங்கையில் சிங்கள மக்கள் பெரும்பான்மையினராகவிருந்தபோதிலும் சிங்கள சினிமா இங்கு அறிமுகமானது சுதந்திரத்திற்குப்பின்னர்தான். முதலாவது சிங்களப்படம், கடவுனு பொறந்துவ(Broken Promise) .

இந்தத்திரைப்படம் 1947 ஆம் ஆண்டு இலங்கை திரையரங்குகளுக்கு வந்தது. அதற்கு இசையமைத்தவர் ஒரு  இந்தியத் தமிழரான ஆர். நாராயண அய்யர் எனச்சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். அவருடைய உதவியாளராக சேர்ந்துகொண்டு குறிப்பிட்ட திரைப்படத்தில் பணியாற்றியவர்தான் ஆர். முத்துசாமி.

அந்தத்திரைப்படத்தை தயாரித்தவரும் எஸ்.எம். நாயகம் என்ற தமிழர்தான். அந்தப்படத்தின் இசையமைப்பு வேலைகள் சென்னையில்தான் நடந்திருக்கினறன.

தனது வாழ்நாளையே இலங்கை சினிமா துறையிலும் இலங்கை வானொலி கலையகத்திலும் செலவிட்டிருக்கும் ஆர். முத்துசாமி, சிறந்த பாடகருமாவார்.

கந்தானையில் முன்னர் அமைந்திருந்த எஸ்.பி. முத்தையா என்ற தமிழ் அன்பருக்குச்சொந்தமான எஸ்.பி.எம். சவுண்ட் ஸ்ரூடியோவில் இயங்கிய இசைத்துறைக்கான கலையகத்தின் பொறுப்பாளராகவும் பணியாற்றியவர்தான் ஆர். முத்துசாமி.

1947 இல் வெளியான கடவுனு பொறந்துவ திரைப்படத்தில் உதவி இசையமைப்பாளராக பணிபுரிந்த அவர், 1953 ஆம் ஆண்டு சினிமாஸ் குணரத்தினம் தயாரித்த  பிரேம தரங்கய திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக இசையமைப்பாளராக வெளியுலகிற்கு பரவலாக அறியப்பட்டார்.

மறைந்த சிங்கள திரையுலக மேதை லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் சந்தேஷிய திரைப்படத்தில்    ஒலித்த “போர்த்துக்கீஸிகாரயா… ”  என்ற புகழ்பெற்ற பாடலுக்கு இசையமைத்தவரும் ஆர். முத்துசாமிதான். அந்தத்திரைப்படத்தில் அவரது சிறந்த இசைமைப்பிற்காக, தென்னிந்திய ஊடகவியலாளர் சங்கம் விருது வழங்கி பாராட்டி கௌரவித்திருக்கிறது.

கட்டிடக்கலைஞர் வி. எஸ். துரைராஜாவின் தயாரிப்பில் வெளியான குத்துவிளக்கு திரைப்படத்திற்கும் அவர் இசையமைத்துள்ளார்.

இந்தப்படத்தில் பாடகர் எம். ஏ. குலசீலநாதன் பாடும் ஈழத்து இரத்தினம் இயற்றிய ” ஈழத்திருநாடே என்னருமை தாயகமே இருகரம் கூப்புகின்றேன் வணக்கமம்மா…” என்ற  மறக்கமுடியாத பாடலுக்கும் ஆர். முத்துசாமி இசையமைத்தார்.

சில சிங்களப்படங்களில் இடம்பெற்ற பாடல்களுக்கும் பின்னணிக்குரல் கொடுத்திருப்பவர்.  இலங்கை வானொலியில் ஏறக்குறைய 25 வருடங்கள் பணியாற்றியவர்.

அவர் தொடக்கத்தில், இலங்கையில் ஒரு இந்தியப்பிரஜையாகவே வாழ்ந்தவர். எனினும் அவர் இலங்கை சிங்கள சினிமாவுக்கு இசைத்துறையில் வழங்கிய மகத்தான பங்களிப்பிற்காக அன்னாரை பாராட்டி கௌரவிக்கும் முகமாக 1956 இல் அன்றைய பிரதமர் சேர். ஜோன் கொத்தலாவல, அவருக்கு இலங்கைக்கான குடியுரிமைச்சான்றிதழை வழங்கினார்.

இலங்கை அரசமட்டத்திலும் பல விருதுகளை பெற்றுள்ள இசைமைப்பாளர் ஆர். முத்துசாமி அவர்கள், 1988 ஆம் ஆண்டு   மறைந்தார்.

இன்று அவரது செல்வப்புதல்வன்  மோகன் தனது இசையுலக நண்பர் ரங்கனுடன் இணைந்து அப்சராஸ் இசைக்குழுவின் மூலம் இசை நிகழ்ச்சிகளை நடத்திவருகிறார்.

இந்தப்பதிவிலிருந்து ஒரு உண்மையையும் வாசகர்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.  இலங்கையில் சிங்களப்படங்களை தயாரித்த முன்னோடிகளின் வரிசையிலும் சிங்கள சினிமாவில் தொடக்கத்தில் பங்கேற்றவர்களில் வரிசையிலும் தமிழர்கள்தான் இடம்பெற்றுள்ளனர்.

எஸ்.எம். நாயகம், சினிமாஸ் குணரத்தினம், சிலோன் தியேட்டர்ஸ் செல்லமுத்து, எஸ். பி. எம். சவுண்ட் ஸ்ரூடியோ எஸ்.பி. முத்தையா, ஒளிப்பதிவாளர் வாமதேவன், இயக்குநர்கள்  வெங்கட், லெனின் மொராயஸ், ஜோ. தேவானந்த், ஒலிப்பதிவாளர் பாலசிங்கம்  உட்பட பல தமிழர்கள் சிங்கள திரைத்துறையின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் பாடுபட்டுள்ளனர்.

ஆனால், இவர்கள் சம்பந்தப்பட்ட திரைப்படங்கள் வெளியான தலைநகர் சினிமா திரையரங்குகள் பல,  1983 வன்செயலில் கயவர்களினால் தீயிட்டு கொளுத்தப்பட்டு அழிக்கப்பட்டன என்ற துன்பியலையும் நாம் மறந்துவிட முடியாது. அவர்களின் படங்களில் ஒலித்த சிங்களப்பாடல்கள் இன்றும் இலங்கை வானொலியிலும் தொலைக்காட்சி சேவைகளிலும் ஒலிபரப்பாகிக்கொண்டுதானிருக்கின்றன.

கே.ஜி. இன்டஸ் ரீஸ், மற்றும் சினிமாஸ் லிமிடெட், கே.ஜி. பஸ்சேவை முதலான நிறுவனங்களையும் பல திரையரங்குகளையும் நடத்திவந்திருக்கும் கே. குணரத்தினம் அவர்களிடத்தில் ஆயிரக்கணக்கான மூவின மக்களும் பணியாற்றியிருக்கின்றனர்.

அவரது சொத்துக்கள்,  நிறுவனங்கள் 1983 இல் அழிக்கப்பட்டன. அவரும் 1989 இல் இனந்தெரியாதவர்களினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.   எனினும்  இசைக்கும் கலைஞர்களுக்கும்   கலைத்துறைக்கும் வளம் சேர்த்தவர்களின் நினைவுகளுக்கும் அழிவில்லை!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: