நடந்தாய் வாழி களனிகங்கை

       

        ( நதியாக நகரும் வரலாற்றுப்பதிவு )                                          

அங்கம் 05: முருகபூபதி.

உலகம் தோன்றியது முதல் சாமியார்களும் தோன்றிவிட்டனர். இவர்கள்தான் சமயங்களையும் தோற்றுவித்தவர்கள்.  முற்றும் துறந்த துறவிகளையே சாமியார்கள் என அழைக்கின்றோம். யேசுவும் புத்தரும் அவர்களின் பின்னர் தோன்றிய அவர்களின் மார்க்கத்தை பரப்பியவர்களும் சாமியார்களானார்கள். புத்தசமயத்தில் அவர்களை பிக்குகள் எனவும், கத்தோலிக்க சமயத்தில் சாமியார்,  அருட் தந்தை, அருட் சகோதரர் எனவும் அழைக்கிறார்கள்.

இந்துசமயத்தில் தோன்றிய பல சாமியார்களும் முற்றும் துறந்த முனிவர்கள் போன்று ஆசா – பாசங்களை புறம்ஒதுக்கிவிட்டு, சித்தம்போக்கு சிவன் போக்கு என வாழ்ந்து முத்தியடைந்துள்ளனர்.

இக்காலத்தில் காவியுடுத்த பல போலிச்சாமியார்களும் மக்கள் மத்தியில் வலம் வருகின்றனர். இவர்களின் லீலைகள் ஊடகங்களில் செய்தியாகவும் காணொளிகளாகியுமிருக்கின்றன.

களனி கங்கை இலங்கைத்தலைநகரில் கடலுடன் சங்கமிக்கும் முகத்துவாரத்தில் அமைந்துள்ள ஶ்ரீவெங்கடேஸ்வரா மஹா விஷ்ணு தேவஸ்தானம், சிவாலயமான அருணாசலேஸ்வரர் ஆலயம், காளி அம்மன் ஆலயம் என்பனவற்றின் வரலாற்றின் பின்னணியில் ஐதீகக்கதைகள் பலவுள்ளன.

முன்னொரு காலத்தில் இந்தப்பிரதேசத்தில் வாழ்ந்த ஆனைக்குட்டிச்சாமியாரின் சமாதி இங்குதான் அமைந்துள்ளது எனவும் கூறப்படுகிறது. இந்தச்சாமியார் சித்துவிளையாட்டுக்களும் செய்வார் எனவும், நிஷ்டையில் ஆழ்ந்து யோகநிலையிலுமிருப்பார் எனவும் சொல்வார்கள்.

முற்காலத்தில் தோன்றிய ஆலயங்கள் பெரும்பாலும் கங்கைக்கரைகளில் அல்லது குளம் – கேணிகள் – கடற்கரையோரங்களில்தான் எழுந்தருளியிருக்கின்றன.

திருக்கோணேஸ்வரம், நகுலேஸ்வரம், திருச்செந்தூர் முருகன், தொண்டமனாறு செல்வச்சந்நிதி, மாணிக்க கங்கை கரையிலிருக்கும் கதிர்காமம் முதலானவற்றை உதாரணமாகக் கூறலாம்.

கொழும்பு முகத்துவாரத்தில் களனியும் கடலும் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள ஆலயத்தின் வரலாற்றின் பின்னணியில் இலங்கையில் புகழ்பூத்த ஒரு குடும்பத்தினரும் இருக்கிறார்கள்.

சேர். பொன்னம்பலம் அருணாசலம் என்ற பெரியவர் பற்றி அறிந்திருக்கின்றோம். இவரது முயற்சியால் இலங்கையில் பல பணிகள் நடந்திருக்கின்றன. யாழ்ப்பாணம், மானிப்பாயில் பொன்னம்பலம் முதலியார் – செல்லாச்சி தம்பதியரின் மூன்றாவது மகனாக 1853 ஆம் ஆண்டில் பிறந்தவர்.  இவரது அண்ணன்தான் சேர். பொன். இராமநாதன். இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்து பாரிஸ்டர் பட்டம் பெற்றிருக்கும் அருணாசலம், சட்டத்துறையில் நூல்களும் சமய இலக்கிய நூல்களும் எழுதியிருக்கிறார். நீதியரசராக பணியாற்றியவர். இவரது சேவைக்கு இங்கிலாந்து ஐந்தாம் ஜோர்ஜ் மன்னர் பக்கிங்ஹாம் மாளிகையில் சேர் பட்டம் வழங்கினார்.

இலங்கை   தேசிய காங்கிரஸ் என்னும் இயக்கத்தை 1919 இல் தொடக்கியவர். அதன் பின்னர், தமிழர் மகாஜனா அமைப்பையும் தோற்றுவித்து அதன் தலைவரானார்.

1924 ஆம் ஆண்டு, தனது 71 வயதில் மதுரையில்தான் மறைந்தார். இவரது மகன்தான் பின்னாளில் இலங்கை அரசியலில் பிரபலம் பெற்ற அருணாசலம் மகாதேவா.

கொழும்பு காலிமுகத்தில் அமைந்துள்ள பழைய நாடாளுமன்றமாகவும் தற்போதைய ஜனாதிபதி செயலகமாக அமைந்துள்ள கட்டிடத்தின் முன்பாக சேர். பொன். இராமநாதன் – சேர். பொன். அருணாசலம் ஆகியோரின் சிலைகளைப்பார்க்கலாம்.

பேராதனை பல்கலைக்கழகத்தில் ஒரு மண்டபத்திற்கும் அருணாசலம் அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கொழும்பு கொச்சிக்கடையில் அமைந்துள்ள ஶ்ரீ பொன்னம்பலவாணேசர் ஆலயத்திற்கும் முகத்துவாரம் அருணாசலேஸ்வரர் ஆலயத்திற்கும்  இராமநாதன் – அருணாசலம் சகோதரர்களே முன்னர் அறங்காவலர்களாக இருந்தார்கள்.

                    இன்று இந்த ஆலயங்கள் சமயத்திற்கு மாத்திரமின்றி அரசியலுக்கும் முக்கியத்துவம் பெற்றிருப்பதை ஊடகங்களில் பார்க்கின்றோம்.

இலங்கையில் தேர்தல்கள் நடந்து வெற்றிபெறும்  தமிழ் – சிங்கள அரசியல் பிரமுகர்கள் இந்த ஆலயங்களுக்கு வந்து பூசை செய்து, பிரசாதமும், பொன்னாடைகள், மாலைகளும் பெற்றுச்செல்வதை அவதானித்திருப்பீர்கள்.

அவர்களுக்கு அரசியலில் ஏதும் பாதிப்பு ஏற்பட்டாலும் அவர்கள் முதலில் ஓடிவருவது இந்த ஆலயங்களுக்குத்தான். சில வருடங்களுக்கு முன்னர், பொது எதிரணியினர் பந்துல குணவர்தன தலைமையில்  வந்து முகத்துவாரம் காளி கோயிலில் கற்பூரம் கொளுத்தி தேங்காய் உடைத்து அன்றைய  ரணில் – மைத்திரி  நல்லிணக்க அரசுக்கு எதிராக பிரார்த்தனை செய்தனர்.

சரத் பொன்சேக்கா சிறையில் அடைக்கப்பட்டிருந்த தருணத்தில் அவரது மனைவி அனோமா பொன்சேக்காவும் இதே காளி கோயிலுக்கு வந்துதான் அன்றைய ராஜபக்‌ஷ  அரசுக்கு எதிராக தேங்காய் உடைத்து பிரார்த்தனை செய்தார்.

அங்கு எழுந்தருளியிருக்கும் காளி அம்மன்  இவ்வாறு எத்தனைபேரின் பிரார்த்தனைகளைத்தான் செவிமடுப்பார்!?

2008 ஆம் ஆண்டு பிறந்தவேளையில் கொச்சிக்கடை பொன்னம்பலவாணேசர் ஆலயத்திற்கு பிரார்த்தனை செய்யவந்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்து கலாசார அமைச்சருமான மகேஸ்வரன் இனந்தெரியாத ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இயற்கை மரணமோ, செயற்கை மரணமோ, தற்கொலை மரணமோ எது நடந்தாலும் மரணித்தவரின் உடல் தகனம் செய்யப்பட்டதும், களனியும் கடலும் சங்கமிக்கும் முகத்துவாரத்தில்தான் அவர்களின் அஸ்தி (சாம்பலும் எலும்பு எச்சங்களும்) கரைக்கப்படுகின்றன.

இந்த வேடிக்கைகளை இங்கு எழுந்தருளும் தெய்வங்களும் முகத்துவாரமும் பார்த்துக்கொண்டுதானிருக்கின்றன.  அவற்றுக்கு பேசும், எழுதும் சக்தியிருக்குமானால் எமக்குத்தெரியாத இன்னும் பல  கதைகளை நாம் தெரிந்துகொள்ளமுடியும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: