சுந்தரமூர்த்தியின்  நினைவுகள்    – Dare to Differ-A memoir.

ஒரு தாய் தனது குழந்தையின் அந்தகக் கண்ணில் விழுந்த தூசியை  சேலைத் தலைப்பின் நுனியால்  எடுத்தபின்னர்,  தனது வாயால் கண்ணில் ஊதி பின்பு கன்னத்தில் முத்தமிடுவதுபோல் விடுதலைப்புலிகளை விமர்சிக்காது,   அதே நேரத்தில் மெல்பன் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரது   பல அட்டகாசமான நடவடிக்கைகளை வெளிக்கொணர்ந்திருக்கிறது                                                  Dare to Differ -A memoir என்ற புத்தகம் .

சமீபத்தில் வெளிவந்துள்ள  Dare to Differ  என்ற நூல் மெல்பனில் வாழும் சபாரத்தினம் சுந்தரமூர்த்தியின்  கடந்த கால  நினைவுகளைப் பேசுகிறது.  பொதுவான வாசகர்களுக்கு  இதில் உள்ளவை புரியாதபோதிலும்,  கால் நூற்றாண்டு காலமாகத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தெருச் சண்டியர்களாக நடந்தார்கள் என்பதை  நான் நடத்திய உதயம் பத்திரிகையிலும்  பொதுவெளியிலும் விமர்சித்த எங்களது வரலாற்றையும்  இந்தப் புத்தகம் விடுதலை செய்கிறது. இந்தப் புத்தகம்  சமூகத்தில் இருக்கும்  முக்கியமானவர்கள் எவ்வாறெல்லாம்  நடந்திருக்கக்கூடாது எனவும் சொல்கிறது

நாங்கள் விடுதலைப்புலிகளை ஆதரிக்காதவர்கள்.  ஆனாலும் மெல்பனில் புலிகளுக்கெதிராக  நடக்க வேண்டுமென்ற எந்த நிர்பந்தமுமற்று, தமிழ் அகதிகள் கழகம் ( முருகபூபதி -நடேசன் ) அல்லது பாரதி   பள்ளி  ( மாவை நித்தியானந்தன் ) மேலும்   சமூக சேவைகளைச்  செய்துவந்தவர்களைத்    தமிழ் துரோகிகளாக அடையாளப்படுத்தி , அவமானப்படுத்தி சமூகத்திலிருந்து புறக்கணித்து  மரண வீடு,   கலியாண வீடுகளிலிருந்தும் விலக்கியபோது நாங்கள் இவர்களை எதிர்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். அது பிற்காலத்தில் விடுதலைப்புலிகளது இயக்கத்தின் மீதான எதிர்ப்பாக மாறியது. அது ஆச்சரியமானதோ அல்லது கவலைப்படவேண்டிய விடயமோ அல்ல.  ஆனால்,  விடுதலைப்புலிகளினதும்  தமிழ் மக்களதும்  உண்மையான விசுவாசியாகவும் ஆரம்பகாலத்திலிருந்து அவர்களில் ஒருவரான   சுந்தரமூர்த்தி,   சிவா-விஷ்ணு கோவில் நிர்வாகத்தில், தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவை தலையிடவேண்டாம் எனக் கேட்டதால்  ஒருங்கிணைப்புக்குழு  செயலாளரான ஜெயக்குமாரினால்  அங்கிருந்து வெளியேற்றப்பட்டவர்.

வன்னிக்கு சுந்தர்  சென்றபோது அங்கும் முக்கியமானவர்களைச்  சந்திக்க முடியாது தடுக்கப்பட்டார். உண்மையான விசுவாசிகள் ஊரில் மட்டுமல்ல,  இங்கும்  களை எடுக்கப்பட்ட வரலாறை இந்தப்புத்தகத்தில்  வாசிக்க முடிகிறது. வரலாறுகளை வெளியே சொல்லாவிடில்,  அது மீண்டும் நடக்கும். அந்த விதத்தில் சுந்தரமூர்த்தியின் எழுத்து பாராட்டப்பட வேண்டியதே.  

தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவில்  ஆரம்பகால உறுப்பினராக இருந்த சுந்தரமூர்த்தி , மற்றவர்களிடமிருந்து மாறுபட்டார் . எங்களது அரசியல் கருத்திலிருந்து  மாறுபட்டாலும் சிரித்தவாறு  சில வார்த்தைகள் பேசுபவர் . அவர் முக்கியத்துவராக இருந்த திடோர்( TEEDOR- Tamil Eelam Economic Devolopment Organisation)) என்ற நிறுவனத்தைப்பற்றிச் சொல்லும்போது,  தமிழீழம் கிடைக்கிறதோ இல்லையோ நாங்கள் மக்களுக்குச் சேவை செய்வோம் என்பார் .  அதுபோல் பிற்காலத்தில் போர் முடிந்தபின்னர்,  கேபி என்ற பத்மநாதனோடு  செஞ்சோலை இல்லத்தில்  சிறுவர்  பராமரிப்பு  வேலைகளில் ஈடுபட்டபோது என்னிடமும்  ஆதரவு கோரியபோது,  தயங்காமல் முடிந்த உதவியைச் செய்தேன். போர் முடிந்தபின்னரும்  தொடர்ந்தும் மக்களுக்காக இயங்கியவர் சுந்தரமூர்த்தி.

விஞ்ஞான கட்டுரைகளை எழுதும்போது எங்களுக்குச் சொல்வார்கள்:  எழுதும்போது படர்க்கையான சொற்களைப் பாவிக்கவேண்டும்.  அதாவது வான்வெளியில் எரிநட்சத்திரம் காணப்பட்டது எனச் சொல்லவேண்டுமானால் – எரி நட்சத்திரத்தைக் கண்டேன் எனச் சொல்லக்கூடாது. எவரையும் குற்றம்சாட்டாது,  ஆரம்ப காதலில் பெண்ணின் கன்னத்தில் விரல் தீண்டுவதுபோன்று  மொழியை மென்மையாகப் பாவித்திருக்கிறார் சுந்தரமூர்த்தி .

நமது யாழ்ப்பாணத்தில் வளர்ந்து,  இந்துக்கல்லுரியில் அவர் படித்திருந்தால் அவரது மொழி  வித்தியாசப்பட்டிருக்கும். ஆனால்,  கொழும்பில் வளர்ந்து,  கொழும்பு இந்துவில் படித்த இவர்,  இதுவரை காலமும் எப்படி  கொழும்புவாழ் மக்களோடு சமாளித்தார் என்பதே எனது கேள்வி. 

மெல்பன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் அதிகாரம் – ஆணவம்  என்பவற்றிற்காக இயக்கத்தில் தேனெடுத்தவர்கள்,   பின்னாளில் இயக்கம் அழிந்ததும் விரல்களைச் சூப்பியபடி  கலைந்துவிட்டார்கள்.  ஆயுதம் தூக்கி இனத்திற்காகப்  போராடி அழிந்தவர்களின் உறவுகளையோ  காயமடைந்தவர்களையோ ஆதரவுடன் அணைக்காது, அதெல்லாம்   இராஜபக்க்ஷவினது கடமை என மாறிவிட்டார்கள்.  இது விடயத்தில் சுந்தரமூர்த்தி,    பாதிக்கப்பட்டவர்களுக்காக  தனித்து நடப்பவர்.

தனிமனிதர்கள் வாழ்வில் செய்யும் தவறுகளை அவர்களின்  மரணத்தின் பின்னர்  மறக்கப்படவேண்டும் என கருதுபவர்கள்,   பொதுவாழ்வில் அவர்களது தவறுகளை  மறந்துவிடக்கூடாது.  காரணம்  அதன் விளைவுகள் தலைமுறைகளாகத் தொடரும். உதாரணமாக  அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழத்தலைப்பட்ட  தமிழர்களுக்காக,   விக்ரோரியா மாநிலத்தில் தமிழ் அகதிகள் கழகம் மிகவும் ஒழுங்காகவும் ஆக்கபூர்வமாகவும்  இயங்கியது.  அதை வேரறத்தபின்னர   இப்பொழுது உருப்படியாக எதுவுமில்லை. தமிழ் அகதிகள் பற்றிப் பேச எவருமில்லை. அதேபோன்று  இவர்கள் நினைத்தவாறு  மாவை நித்தியின் பாரதி பள்ளி தமிழ்ப்  பாடசாலையும்  அழித்திருந்தால் தற்போது நிலைமை  என்ன?

Dare to Differ   என்றஇந்தப்புத்தகம் சுந்தரமூர்த்தியின் இளமைக்காலம்,  இயக்க வேலைகள்,  இராணுவத்திடமிருந்து மதில் ஏறிப்பாய்ந்து தப்பிய சாகசம்,  மற்றும் மெல்பன் குத்துவெட்டுகள் எனப் பலவற்றைப் பேசுகின்றன.  நம்மிடையே நடந்தவற்றைப்பற்றி  நம்மிடையே வாழும் மனிதர் எழுதியவை.   எம்மவர்கள் இந்தப்   புத்தகத்தைப் படிக்கவேண்டும் என்பதற்காகவே   புத்தகத்தின் உள்ளடக்கம்  பற்றி  விரிவாக நான் எழுதவில்லை.

—0—

“சுந்தரமூர்த்தியின்  நினைவுகள்    – Dare to Differ-A memoir.” மீது ஒரு மறுமொழி

  1. தருனம் வரும் போது உண்மைகள் வெளி வரும் என்பது யதார்த்தம். உங்கள் பதிவுக்கு நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: