25  .  கரையில் மோதும் நினைவலைகள்

குறிஞ்சிக் குமரன் கோவில் -பேராதனை

                                           நடேசன்

இலங்கை,  1977 ஆண்டு பல தரப்பட்ட  வன்செயல்களை சந்தித்தது. அதைப்பற்றிய விபரங்களையும்,  அவை எவ்வாறு  நாட்டினது வரலாற்றையும்  மக்களின்  வாழ்க்கை முறையையும் மாற்றிப்போட்டன என்பதை   பின்னர் பார்ப்போம்.

அந்த ஆண்டுதான்  எனது காதலியும் வருங்கால மனைவியாக அமைந்தவருமான சியாமளா பேராதனை பலகலைக்கழகத்தில் பிரவேசித்தார்.   நான் பல்கலைக்கழகம் செல்வதைவிட, சியாமளா அங்கு பிரவேசித்து படித்து முடித்துவிடவேண்டும் என்பதுதான் எனது பேரவா. என்னைப்பொறுத்தவரை, பல்கலைக்கழகம் செல்வது தடைப்பட்டிருந்தாலும்,  ஏதாவது ஒரு வியாபாரத்துறையில் ஈடுபட்டு செல்வந்தனாகியிருப்பேன்.

சியாமளா தங்கியிருந்த விஜயவர்தனா விடுதிக்கு மாலை ஆறுமணிக்குச் சென்று  அழைத்துக்கொண்டு, சுமார் இரண்டு  மணி நேரம் பல்கலைக்கழகம் எங்கும் சுற்றி விட்டு  இரவு எட்டு மணிக்கே மீண்டும்  அங்கே விட்டுவிட்டு எனது விடுதிக்கு வருவேன்.   தொடக்கத்தில்   யாழ்ப்பாணத்தில்  சியாமளாவை ஒளிந்து மறைந்து  சந்தித்த நான்,    பல்கலைக்கழகம் சென்றபின்னர் விடுமுறை நாட்களில் சியாமளாவின் வீட்டிற்கே சென்று  சந்திக்கும் வழக்கமும் வந்தது.  எங்களுக்கு பேராதனை பல்கலைக்கழகம் முழுமையான சுதந்திரத்தைத் தந்தது. ஆண் -பெண் உறவுக்கு இலங்கையில் பேராதனை பல்கலைக்கழகம் கொடுத்த சுதந்திரம் அளவற்றது .  அது மேற்கு நாடுகளில் இருக்கும் சுதந்திரத்திற்கு ஈடானது. அந்த சுதந்திரத்தைப் பெறும்போது  நம்பிக்கை,  நேர்மையான உறவு பொறுப்புணர்வு,  என்பன ஏற்படுகிறது. அதற்கும்  மேலாக அந்தஸ்து,  கவுரவம், பணம், குடும்பம்,  சமூகம்  முதலான  பாறைகளற்ற  சமத்துவமான வெளியாக  அந்த மகாவலி கங்கைக்கரையில் பள்ளத்தாக்கு இருந்தது.

பல்கலைக்கழகத்தில் ஆரம்ப இரண்டு வாரங்களில் சியாமளாவை மற்றைய மாணவர்களது றாக்கிங் கலாட்டாவிலிருந்து பாதுகாப்பது எனது முக்கிய கடமையாக இருந்தது. இரண்டு வருடங்கள் சீனியராக நான் இருந்தபடியால் அது இலகுவானது . அதற்கப்பால்  சிங்கள மாணவி ரூபா ரத்தின சீலியின் தற்கொலை முயற்சி  சம்பவத்தால் எங்களுக்கு றாகிங் பாதியாக குறைந்துவிட்டது . பெண்கள் மீதான  றாகிங் நடப்பது  அதைவிடக் குறைந்துவிட்டது . என்னைக் கேலி செய்வதும்,  எனக்கு பெண் தோழி இருப்பதாக  கிண்டல் செய்வதுமான சின்னச்சின்ன றாகிங்கை  எனது நண்பர்களே செய்தார்கள்.

பல்கலைக்கழகத்தில்  காதலித்த இருபாலாரும்  சுதந்திரத்துடன் பழகியிருந்தாலும்,  பெற்றோர் அல்லது  சமூகத்தின் சாதிக் கட்டுப்பாடுகளால்  பிரிய நேரிடும்போது , முக்கியமாகப் பெண்களை  அந்தப்பிரிவு பெரிதும் பாதித்தது. நான் அங்கிருந்த காலத்தில்,  நான் கற்ற  இந்துக் கல்லூரியிலிருந்து விவசாய பீடம் வந்த ஒரு மாணவன், ஒரு பெண்ணோடு காதல் கொண்டு பல்கலைக்கழகம் தந்த சகல சுதந்திரத்தையும் பெற்றபின்பு கடைசி வருடத்தில் அந்தப் பெண்ணை கழட்டிவிட்டார் . அந்தப் பெண்ணை பிற்காலத்தில் நான் பார்த்தபோது அந்தப் பெண்,    ஒரு முறை காச நோய் வந்து மூன்று மாதங்கள் வைத்தியசாலையிலிருந்து வந்த எனது அம்மாவிலும் பார்க்க உருக்குலைந்து காணப்பட்டார்.  எனக்கு அவர்களது அக – புற விடயங்கள் தெரியாத போதிலும் நிச்சயமாக யாழ்ப்பாணத்துச் சீதனம் மற்றும் அந்தஸ்து போன்ற விடயங்களே காரணமாக இருக்கலாம் என்று பேசப்பட்டது . அந்த ஆண்,  அம்மையின் முலைப்பால் வாயில்  வடியும்  திருஞானசம்பந்தராக  குன்றத்துக் குமரன் கோயிலில் நிற்கும் சைவப்பழம்.   எப்பொழுதும் வாயில் தேவாரம், நெற்றியில்,  திருநீறு சந்தனம் . ஆனால் அந்த அப்பாவிப் பெண்ணின் காதில் பூ வைத்தார். அந்த மனிதர் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார் என அறிந்தபோதிலும்   நான் எந்தவொரு காலத்திலும் சந்திக்க விரும்பாத மனிதராக  எனக்குத் தோன்றினார்.

அக்காலத்தில் மீண்டும் ஒரு முறை  பல்கலைக்கழகமும் விடுதிகளும் பூட்டப்பட்டது. பலருக்குக் காரணங்கள் தெரியாது . மாணவர்கள்  இருபத்தினான்கு  மணி நேரத்தில் பல்கலைக்கழகத்தை விட்டு விலகி,  வீடு செல்லவேண்டுமெனப்பணிக்கப்பட்டு,  இருபது ரூபா  தந்தார்கள்.

அந்த இருபது ரூபாவை  வாங்கிய நாங்கள்,  அன்று இரவு கண்டி சென்று,  சாராயம் வாங்கிக் கொண்டு, பல்கலைக்கழகம்வரை நடந்து வந்தோம் . பலர் இரு கால்களாலும் ஒரு சிலர் நான்கு கால்களாலும் நடந்தபடி நாம் இருந்த ஜெயதிலகா விடுதிக்கு வந்தோம்.

விடுதிக்கு  திரும்பியவர்கள்,  தொடர்ந்து இரவிரவாக மேலும் நீராபிசேகம்  நடத்தினார்கள். அப்பொழுது  சிலர் , இருபது ரூபாய்களை   மொத்தமாக வாந்தி எடுத்தார்கள். அறையிலிருந்து வந்த வாந்தியின் மணம் கந்தானை மலைகளில் படிந்திருக்கும்.  வாந்தி எடுக்காதவர்கள்  முழு மயக்கத்தில் கட்டிலின் மேலும் கீழும்  விழுந்து தூங்கினார்கள்.

அடுத்த நாள்  முற்பகல் பத்துமணிக்கு  முன்னர் எல்லோரும் விடுதிகளை விட்டுப்  போய்விடவேண்டும் என்ற நிபந்தனை இருந்தது.  எனக்கு சியாமளாவைக் கூட்டிக்கொண்டு யாழ்ப்பாணம் செல்லவேண்டிய  பொறுப்பிருந்தது .

எனது அறை நண்பன் ஆனந்தமூர்த்தியின் மச்சான்- விவசாய பீட மாணவன், தொடர்ந்து வாந்தியெடுத்ததால் உடலில் கனிப்பொருள் (Electrolytes)குறைந்து  வலிப்பு  வந்தது. காக்கை வலிப்பு வந்தவன் போல் நடுங்கியபடியிருந்தான் . நாங்கள்,  ஆள் இதோடு முடிந்துவிடுவான் என்ற பயத்திலிருந்தோம்.  ஆனந்தமூர்த்தியுடன் சில நண்பர்களும் சேர்ந்து எமக்குத் தெரிந்த விரிவுரையாளரது வாகனத்தில்  அந்த மாணவனை கொண்டு சென்று கண்டி வைத்தியசாலையில் அனுமதித்தார்கள் . அங்கு அவனுக்குத் தொடர்ச்சியாக  சேலைன் ஏற்றப்பட்டது.

அறையிலிருந்த நண்பன் ஆனந்தமூர்த்தி கண்டி வைத்தியசாலையில் இருந்ததால்  என்னால் அவனைத் தனியே விட்டுச் செல்ல மனம் வரவில்லை  அடுத்தநாள் காலை சியாமளாவிடம் சென்று பிரச்சினையைச் சொன்னபோது,  சியாமளா,   “ தான்  இருக்கும்  விஜயவர்தன மண்டபத்தில் எல்லோரும் காலி செய்துகொண்டு  போகிறார்கள் . தன்னால் தனியே இருக்க முடியாது  “  என்று அழுதார்.  சியாமளாவை சந்தித்த  ஐந்து வருடகாலத்தில்  முதல் முறையாக அந்தக் கண்ணீரைப் பார்த்தபோது எனக்கு மனம் கலங்கியது.

நல்லவேளையாக மாலையில்,  வைத்தியசாலையிலிருந்து எனது நண்பன் மீண்டும் அறைக்கு வர,  நான் விடயத்தைச் சொல்லி விட்டு மாலையில் சியாமளாவுடன் யாழ்ப்பாணம் நோக்கி சரசவி உயனவில் ரயிலேறினேன். எனது நண்பன் ஆனந்தமூர்த்தி  அன்று இரவு அந்த அறையில் தங்கியதால் அதிகாலையில் வந்த மார்ஸல் எனப்படும் பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரிகளிடம் பிடிபட்டு ஒரு மாதம் பல்கலைக்கழகத்திலிருந்து இடை நிறுத்தம் செய்யப்பட்டான்.

திருமதி விஜயசிங்க – வண்ணாத்திக்குளம்

ஓர் இரவு எமக்கு பழக்கமான விஜயசிங்க என்ற சிங்கள குடும்பத்தினருடன் நாம் தங்கினோம். இருவரும் ஆசிரியர்கள். நான்கு பெண்குழந்தைகள்.

    இவர்களின் வீட்டில் உணவுண்டு விட்டு பத்து மணியளவில் படுக்கப் போனோம். இந்தத் தம்பதிகள் தங்கள் படுக்கையறையை எமக்கு தந்து விட்டு அந்த அறையின் முன்னால்  படுத்தார்கள். நடுநிசியில் எனது காலில் யாரோ தட்டி எழுப்பியது போலத்தோன்றியது.  திடுக்கிட்டு எழுந்தேன்.

 படுக்கைக்கு அருகில் திருமதி விஜயசிங்க,  டார்ச்லைட்டுடன் ஒரு சுழல் துப்பாக்கியுடனும் நின்றார். எனது நெஞ்சில் தண்ணியில்லை. பயம் வாயை அடைத்தது.

திருமதி விஜயசிங்க ரகசிய குரலில் முதலில் பேசினார்.      ‘தயவு செய்து இந்த துப்பாக்கியையும் லைட்டையும் வைத்துக்கொள்ளுங்கள். இந்தத் துப்பாக்கியில் ஒரு சன்னம் இருக்கிறது. உங்களுக்கு ஏதாவது நடந்தால் எங்களுக்கு என்ன செய்யமுடியும் ‘ எனக் கூறி எனது கையில் துப்பாக்கியையும், கண்ணனின் கையில் லைட்டையும் திணித்தார்.

      ‘ உனக்குத் துப்பாக்கி சுடத் தெரியும் என அவருக்கு தெரிந்திருக்கு’ என்றான் கண்ணன்.

 இருவரும் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. ஆனால் விடியும் வரை உறங்கவில்லை.

 காலை எழுந்ததும் தேநீரை கொடுத்து விட்டு       ‘முடிந்தால் எங்கு சென்றாவது உயிர் தப்புங்கள் இந்த நாடு உருப்படாது’. என்றார் விஜயசிங்க. “

எனது வண்ணாத்திக்குளத்தில் வரும் திருமதி விஜயசிங்க  ஒரு ஆசிரியர் பாத்திரமாக  வருவது நினைவிருக்கும் . உண்மையில் அற்புதமான மனிதர்கள். அவரது கணவனும் ஆசிரியரே. அவர்களுக்கு அந்தக் காலத்தில் நான்கு பெண் குழந்தைகள் இருந்தார்கள் 

எனது நண்பனும் மதவாச்சி மாவட்ட வைத்தியருமான டாக்டர் கௌரிபாலனும்  நானும் ஒன்றாக மதவாச்சி வைத்தியசாலை வைத்தியர்கள் விடுதியில்  இருந்தோம் . ஆரம்பத்தில் டாக்டர் கௌரிபாலனோடு நெருங்கிய  நட்புக்கொண்டிருந்த அந்த ஆசிரியர்  குடும்பம் என்னோடும் நண்பர்களாகினார்.

83 ஆண்டு ஜூலை இனக்கலவரம் மதவாச்சியில் எந்தத் தாக்கத்தையும் கொண்டு வரவில்லை . அதற்கு  இரண்டு காரணங்கள் :  மதவாச்சித் தொகுதியின் பிரதிநிதி  சுதந்திரக்கட்சியின் அங்கத்தவராகிய மைத்திரிபால சேனநாயக்கா.  இரண்டாவது:  மதவாச்சி நகரில் ஐக்கிய தேசியக்கட்சியின்  முக்கியஸ்தராக இருந்தவர் யாழ்ப்பாணம் பருத்தித்துறையைச் சேர்ந்த கந்தசாமி என்பவர். அவர் யாழ்ப்பாணம் போவதில்லை. அக்காலத்தில் அரச ஆதரவாளர்களைக் கொலைசெய்யும் விளையாட்டு  யாழ்ப்பாணத்தில் நடந்தது . அவரே மதவாச்சியில் முக்கிய ஐக்கிய தேசியக் கட்சிப் பிரமுகர் என்பதால் அந்தத் தொகுதி  அமைதியாக இருந்தது.  ஆனால்,  எங்களுக்கோ அமைதி இல்லை.  அத்துடன் தமிழர்கள் கொலை செய்யப்பட்டால் அந்தச் சடலங்களை பிரேத பரிசோதனை செய்வதற்கு  இராணுவம் டாக்டர் கௌரிபாலனைத்தேடி வரும். இந்த நியைில் கலவரம் நடந்த நாட்களில் பல சிங்கள நண்பர்கள் இரவுகளில் தங்கள் வீடுகளில் எங்களைத் தங்க வைப்பார்கள் .

அப்படி ஒரு நாள்  நாங்கள் ஆசிரியர் விஜயசிங்க வீட்டில் தங்கினோம்.  அவர்கள் அடிக்கடி கேட்கும் கேள்விகள்:  உங்கள் தமிழீழம் மதவாச்சிவரையும் வருமா ? நாங்கள் எல்லை கிராமம் என்பதால் நாடு பிரிந்தால்கூட எல்லையில் சண்டை இருக்கும் தானே?

இவைகளுக்கு எங்களால் என்ன  பதில் சொல்லமுடியும்?

அன்று ஜூலை 26  ஆம் திகதியாக இருக்கலாம்.   இரவு ஏழு மணியளவில் இருவரும் அவர்கள் வீட்டுக்கு சென்றோம். அனுராதபுரத்தில் நடந்த சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களின் சடலங்கள்,  மற்றும் வவுனியா அருகே கொறவப்பொத்தன வீதியில் நெல்லியடி கூட்டுறவுச்சங்கத்தின் லொறி ஒன்று காடையர்களால் எரிக்கப்பட்டதனால், (  அந்த லொறியில் எரிபொருளும் இருந்ததால் )  அடையாளம் தெரியாதவாறு இருந்த சடலங்கள், அவற்றையெல்லாம்  தான்  எப்படி  பிரேத பரிசோதனை செய்ய முடியும் ?   என டாக்டர் கௌரிபாலன் கேட்டார்.  வடமராட்சியில் நெல்லியடி , கரவெட்டிக்கு அருகில் இருக்கும்  ஊர். அதுவே கௌரிபாலனது ஊரும்  என்றேன் .

அன்று இரவு  அவர்கள் வீட்டில் உணவு அருந்திவிட்டு,  அங்கேயே உறங்கினோம்.  அப்பொழுதுதான் திருமதி விஜயசிங்க தங்களது துப்பாக்கியை எங்களிடம் தந்தார் .   அவர்   ஏன் அதனை எம்மிடம் தருகிறார் என்பதை சொல்லாதபோதிலும் அவரது எண்ணம் புரிந்தது.

எவராவது வந்து தாக்கினால் எங்களால் உங்களைக் காப்பாற்ற முடியாது போய்விடலாம் நீங்கள் இந்தத் துப்பாக்கி மூலம் உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள் என்பதே  அர்த்தம்.

இதை அவர் சொன்னதாக நான் வண்ணாத்திக்குளத்தில் எழுதினேன் .

அடுத்த நாள் எழுந்து போகும்போது அவர்களே,   “ இந்த நாட்டில் இருக்க வேண்டாம்.  நீங்களே வேறு எங்காவது போய் உயிர் தப்புங்கள்  “ என்றார்கள் .

சில நாட்களில் அவர்களிடம் சொல்லிவிட்டே இருவரும் இரண்டு சிங்கள முதலாளிகளுடன்  காரில் கொழும்பு சென்றோம் அப்பொழுது வழி  நெடுக எரிந்துகொண்டிருந்த   நெருப்பு அணையவில்லை .

நேரடியாக உபாலி பிரயாண சேவைக்குப்  போனபோது,  கனடாவுக்கு நேரடி விசா உள்ளது.  நாளை பணத்துடன் வாருங்கள் என்றார்கள் . அப்பொழுது எங்களிடம் பணமில்லை. திரும்பும் வழியில் நீர்கொழும்பில் ஒரு சிங்கள நண்பரது வீட்டில் இரவு நின்று தங்கொட்டுவை சாராயம் குடித்தேன். அதுவே முதலும் கடைசியுமாக கசிப்பு என்ற வடிசாராயம் அருந்தியது.  கௌரிபாலன் மது – மாமிசம் எதுவும் பாவிக்காத நல்ல பிள்ளை .

 மீண்டும் யாழ்ப்பாணம் வந்து பணம் எடுத்துக்கொண்டு சென்றபோது கனடாவுக்குத் திறந்த விசா இல்லை,   உங்களை இலண்டன் அனுப்பமுடியும் என்றார்கள் . அது வேண்டாம் எனத் திரும்பி வந்த  நான் யாழ்ப்பாணத்தில் சில மாதங்கள் நின்றேன்.  கௌரிபாலன் மதவாச்சிக்கு மீண்டும் வேலைக்குச்சென்றார் . 

பிற்காலத்தில் நான் இந்தியாவுக்குச் செல்ல, கௌரிபாலன் லண்டன் சென்றார் .

எனக்குத்  திரு, திருமதி விஜயசிங்க மற்றும் எனது நண்பர்களான சிங்கள முதலாளிகளும்,   “ சமூகத்தில் தவறில்லை.  அதை வழி நடத்துபவர்களே தவறு செய்கிறார்கள்  “  என்பதைக் கற்பித்த ஆசிரியர்கள்  இருந்தார்கள் என்பதை  இக்கட்டுரை ஊடாக நினைவு கூர்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: