
13வது திருத்தத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மேலும் பாதுகாக்க இணையுங்கள்..!
–
இலங்கையில் மாகாணசபை முறைமையின் அவசியப்பாடு குறித்த விடயமானது தற்போது தமிழ் பேசும் மக்கள் மத்தியில் மீண்டும் ஒரு பேசுபொருளாக ஆக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் இம் மாகாணசபை எதற்கும் பயனற்றது, இதனை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். மறுபக்கம், இம் மாகாண சபைக்குள் எதுவும் இல்லை என்று கூறிக்கொண்டே இதனை அமுலாக்க இந்தியா அழுத்தம் செலுத்த வேண்டும் என்னும் கருத்தை மறு தரப்பினர் முன்வைக்கிறார்கள்.
இதற்குள் எதுவுமே இல்லை என்ற கண்மூடித்தனமான நிராகரிப்பு வாதத்தைப் புறந்தள்ளி, கிடைத்துள்ள சட்டபூர்வமான தீர்வைக் கையேற்று, இலங்கையின் அரசியல் யாப்பினுள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மாகாண சபையைப் பயன்படுத்தி, ஆக்கபூர்வமான அரசியல் செயற்பாடுகளினூடாக முன்நோக்கி நகர்த்துகின்ற சாதகமான கண்ணோட்டத்துடன் நோக்கும்படி இலங்கை அரசாங்கத்தையும் எதிர்க் கட்சிகளையும் கோருகின்ற நேர்மையான குரல்களும் அழுத்தங்களுமே இன்றைய தேவையாக உள்ளது.
குழப்புவது மக்களை மேலும் அநாதரவாக்குகின்றது….
இலங்கையின் இனக்களுக்கிடையே ஏற்படுத்தப்பட்ட முரண்பாடுகளுக்கான அரசியல் தீர்வு முயற்சிகளில் அதிகாரப் பகிர்வுக்கான தீர்வாக இலங்கை அரசியல் யாப்பினுள் உறுதிப்படுத்தப்பட்ட ஒரே வழிமுறையாக தற்போது இம் மாகாணசபைத் தீர்வே எம் கைகளில் உள்ளது.
அத்துடன், கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக ஜனநாயகத் தேர்தல்கள் மூலம் சட்ட வலுவுள்ள ஆட்சியமைப்புக்கள் ஸ்தாபிக்கப்பட்டு, நிலைநாட்டப்பட்ட அதிகாரப் பகிர்வின் அடிப்படையிலான சட்பூர்வ கட்டமைப்பாக அமைந்த ஒரேயொரு நடைமுறையிலுள்ள அரசியல் தீர்வும் இம் மாகாண சபைத் தீர்வு மட்டுமேயாகும்.
இதைவிட வேறு அரசியல் தீர்வுகளைத் தற்போது பேசுவதும், அத்தகைய ஒன்றுக்காக இப்போது கையில் இருக்கின்ற மாகாணசபைத் தீர்வினையும் கைவிடச் சொல்லிக் குரல் எழுப்புவதும், அதற்குள் ஒன்றுமே
இல்லை என்று நம்பிக்கையீனத்தை மட்டுமே ஊட்டுவதும், அவ்வதிகாரத்தை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கு வகைசெய்வதும், அதனை இல்லாமல் செய்ய உதவுவதும் பாதிக்கப்பட்ட மக்களை அரசியல் ரீதியாக
தொடர்ந்தும் அநாதரவான நிலைக்குத் தள்ளி விடுவதாகவே முடியும் என்பது நிதர்சனமானதாகும்.
தற்போதைக்கு வேறெந்த சிறந்த தீர்வும் இல்லை…
அரை நூற்றாண்டு கால முரண்பாட்டுக்கும், நான்கு தசாப்த யுத்தத்துக்கும் தீர்வாக சர்வதேச அக்கறையுடனும், அதன் தலையீட்டுடனும் முன்வைக்கப்பட்ட ஒரே தீர்வு இம்மாகாண சபையாகும். ஒரு சர்வதேச நாட்டுடனான
ஒப்பந்தத்தின் அடிப்படையில், இலங்கையின் யாப்புக்குள் சட்டமாக ஆக்கப்பட்டு, அதற்கான நிர்வாக ஒழுங்கமைப்பு உருவாக்கப்பட்ட தீர்வும் இதுவேயாகும்.எனவே இதை புறந்தள்ளினால் மீண்டும் உலக நாடுகள் ஏற்றுக்கொள்ள கூடிய அல்லது அவர்களால் வலியுறுத்தக்கூடிய தீர்வுகள் வருவதற்கு வாய்ப்புக்கள் இல்லை என்பதையும் கவனித்தல் வேண்டும்.
நடப்பிலுள்ள இந்த மாகாண சபை அதிகாரங்களை முறையாக பயன்படுத்தி, சுயாதீனமாக இயங்கிய கிழக்கு மாகாண சபையும் தமிழ்ப் பேசும் மக்களைக் கொண்ட மலையக மாகாண சபைகளும் மிகுந்த அக்கறையுடன்
பங்காற்றியதும் நாம் அறிந்ததே. அதன் மூலம் அம் மக்கள், சகலதுக்கும் மத்திய அரசாங்கத்தில் தங்கியிராமல் தமது பல அத்தியாவசிய காரியங்களையும் அபிவிருத்திகளையும் மேற்கொண்டு வந்ததையும் நாம் உதாரணமாக எடுத்து நோக்க முடியும்.
அது மட்டுமன்றி சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாகாண சபைகளும் கூட அந்த அதிகாரங்களை மிகப் பயனுள்ள வகையில் பயன்படுத்தி, அம்மாகாண நலன்களுக்கு எதிராக மத்திய அரசால் நடைமுறைப்படுத்த முயன்ற சில திட்டங்களை கேள்விக்குட்படுத்தியும் தடுத்தும் உள்ளன. திட்டமிட்ட பொய்யான பரப்புரை அபத்தமானது…
இந்த மாகாணசபை முறைமையை கொண்டுவருவதற்கு எடுத்த முயற்சிகளுக்கு மேலாக, வடக்கு கிழக்கில் அந்த அதிகாரங்களை அமுலாக்குவதற்கு எதிராக தடைக்கற்கள் பலவிதமாக கொட்டப்பட்ட போதிலும், இம்மாகாணசபை முறைமையைப் பாதுகாத்து, வலுவூட்டி மேம்படுத்த வேண்டிய அவசியம் பற்றியும், அதற்கான வழி வகைகள் பற்றியும் சிறுபான்மை மக்களாகிய நாம் கரிசனை மிக்க பார்வையைச் செலுத்த வேண்டிய நிலை இன்று எழுந்துள்ளது.
ஆனால் வடக்கு கிழக்கு மாகாண மக்களுக்கு மட்டும், அதிலும் குறிப்பாக வடக்கு மாகாணத்தில் அவ்வதிகாரங்களுக்கூடான நலன்கள் முழுமையாக சென்றடையாமல் இருக்க வகை செய்யும் போக்கே தொடர்ந்தும் நிலவி வந்தது. அத்துடன் மாகாண சபையில் உள்ள அதிகாரங்கள், அதன் செயற்பாடுகள் குறித்த விபரங்கள் திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்யப்பட்டு வருவதும், நம்பிக்கையீனங்கள் பரப்பப்படுவதும் அபத்தமானதும் கவலைக்கிடமானதாகும். சாதகமான அம்சங்கள்….
*மாகாண சபை முறைமையின் மற்றுமொரு சாதகமான அம்சம் யாதெனில் மாகாண மட்டத்தில் இருந்து அப்பகுதி மக்கள் நலன் சார்ந்து செயல்படக்கூடிய புதிய இளம் அரசியல் தலைவர்களை உருவாக்க அது மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்குகின்றது. அத்துடன் தேசிய மட்டத்துக்கான சிறந்த தலைவர்களை உருவாக்கும் களமாகவும் அது பயன்படுகிறது.
*அத்துடன் அந்த மாகாண நலன் சார்ந்து ஜனநாயக முறையில் நியதிச் சட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தும் அப்பியாசத்திற்கூடாக, அது அத்தலைவர்களுக்கு அம்மாகாண மக்களின் பங்கேற்றலுடன் அடிமட்டத்தில் அதிகாரங்களை நடைமுறைப்படுத்தவும், இன்னும் புதிய அதிகாரங்களை பெறுவதற்கான முயற்சியை மக்கள் ஆதரவுடன் முன்னெடுக்கவும் அவர்களுக்கு ஊக்கத்தையும் உத்வேகத்தையும் வழங்க வல்லது.
*இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த மாகாண சபை முறைமையின் அதிகாரப் பரவலாக்கலை கையேற்று அதனை நேர்மையாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் மக்கள் தமது கடந்தகால வேதனை மிகுந்த போராட்டத்தின் பலனாக பெறப்பட்டதும் யாராலும் இலகுவில் அகற்ற முடியாத அதிகாரப் பொறிமுறையாக அவர்கள் கொள்ள முடியும். அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு வாழ் சகல சிறுபான்மை மக்களும் பிரிக்கப்படாத நாடொன்றுக்குள் அர்த்தபூர்வமான அதிகாரப் பரவலாக்கலுடன் சமத்துவமாக வாழ விரும்புகிறார்கள் என்ற நம்பிக்கையை பெரும்பான்மை சிங்கள மக்களிடம் ஏற்படுத்தவும் அது வகை செய்யும்.
*அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகள் ஸ்திரமாகவும், நெறிமுறையாகவும் நடத்தப்பட்டு வலுப்பெறுகையில் அவை நாட்டின் ஏனைய மாகாணங்களுடன் கைகோர்த்து, மாகாண நலன்களுக்கு பாதகமான திட்டங்கள் செயற்பாடுகள் வரும்போது அவற்றை கேள்விக்குட்படுத்தவும், தடுக்கவும் பரஸ்பரம் ஒத்தாசையாக இருக்க முடியும். அதன் மூலம் ஒரு கூட்டுத் தேசிய நலனின் அடிப்படையில் நாட்டின் அடிமட்டத்தை நோக்கிய இந்த அதிகாரப் பரவலுக்கான அடிப்படைப் பாதுகாப்புப் பொறிமுறையை வலுவாக்கி செழுமைப்படுத்தி பாதுகாக்க முடியும். நம்பிக்கையுடன் குரல் கொடுப்பதே காலத்தின் தேவை….
இந்த அடிப்படையில், இலங்கையில் சிறுபான்மை இனங்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள்
இம்மாகணசபை முறையின் சிறப்பான அம்சங்களை இதய சுத்தியுடன் வரவேற்று இப்பொறிஂமுறை எந்த வகையிலும் வலுவிழக்கச் செய்யப்படவோ அல்லது இல்லாமல் செய்யப்படவோ கூடாது என இலங்கை அரசையும், பிரதான எதிர்க்கட்சியையும், ஏனைய தேசியக் கட்சிகளையும் நோக்கி அழுத்தமான கோரிக்கையை கூட்டாக முன்வைக்க வேண்டும். அத்துடன் இந்த முறைமையை உயிர்ப்பித்து நடைமுறைப்படுத்த உடனடியாக தேர்தல்களை நடத்தி அவை சுதந்திரமாக இயங்க அனுமதிக்கும்படி இலங்கை அரசையும், பிரதான எதிர்க் கட்சியையும் கோருவதே சாலச் சிறந்ததாகும்.
அந்த வகையில்,
13ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் அமைந்த மாகாணசபை பொறிமுறை மீதுநம்பிக்கை கொண்டு அந்தப் பொறிமுறை முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும் என உளமார விரும்பும் புலம்பெயர் இலங்கையர்களாகிய நாம், இலங்கையின் தேசியக் கட்சிகளுடன் இணைந்தும், சுயாதீனமாகவும் வடக்கிலும், கிழக்கிலும், மலையகத்திலும் நாட்டின் ஏனைய பகுதிச் சிறுபான்மை மக்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும்அரசியல் கட்சிகள் கூட்டாக ஒரே குரலில் இந்த கோரிக்கையை இலங்கை அரசையும், பிரதான எதிர்க் கட்சியையும் நோக்கி அழுத்தமாக முன்வைக்க வேண்டும் என அன்புடன் கோரிக்கை விடுகின்றோம்.
13ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான மாகாணசபை பொறிமுறையை
ஆதரிக்கும் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள்
தொடர்புகளுக்கு:
செல்லையா மனோரஞ்சன் – கனடா selliahy@gmail.com
பத்மபிரபா மகாலிங்கம் – சுவிட்சர்லாந்து prpraba@hotmail.com
தம்பையா சோதிலிங்கம் – இங்கிலாந்து uksothi@gmail.com
நியூட்டன் மரியநாயகம் – நோர்வே ndpnewton@gmail.com
முருகவேள் யோகராஜா – பிரான்ஸ் murugavelyogarajah@gmail.com
நோயல் நடேசன் – அவுஸ்திரேலியா uthayam12@gmail.com
பின்வரும் இணைப்பின் மூலம் கையொப்பத்தையிட்டு உங்கள் ஆதரவைத் தெரிவியுங்கள் : https://docs.google.com/forms/d/1qaGE4yOa2RHiBihO2-jw2pIHdkAIA23fWp1k1kQSgHM/edit
கூட்டாக குரல் கொடுக்கும்படி
எம்மால் கோரிக்கை விடப்படும் கட்சிகள்.
· ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – திரு. டக்ளஸ் தேவானந்தா
· இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் – திரு. ஜீவன் தொண்டமான்
· தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் – திரு. சிவனேசதுரை சந்திரகாந்தன்
· ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி – திரு. அங்கஜன் இராமநாதன்
· தேசியத் தொழிலாளர் முன்னணி – திரு. பழனி திகாம்பரம்
· தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி – திரு. வீ. ஆனந்தசங்கரி
· தமிழர் சமூக ஜனநாயக கட்சி – திரு. சிறீதரன் திருநாவுக்கரசு
· ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் – திரு. ரவூப் ஹக்கீம்
· ஜனநாயக மக்கள் முன்னணி – திரு. மனோ கணேசன்
· அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – திரு. ரிஷார்ட் பதியுதீன்
· மலையக மக்கள் முன்னணி – திரு. வே. இராதாகிருஷ்ணன்
· தேசிய காங்கிரஸ் – திரு. ஏ.ல்.எம். அதாவுல்லா
· சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு – திரு. முருகேசு சந்திரகுமார்
· தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி – திரு. வினாயகமூர்த்தி முரளிதரன்
· புதிய ஜனநாயக மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி – திரு. சி. கா.செந்திவேல்
· அகில இலங்கைத் தமிழர் மகாசபை – திரு. செங்கதிரோன்
· முற்போக்கு தமிழர் அமைப்பு – திரு. சதாசிவம் வியாழேந்திரன்
· முன்னிலை சோஷலிஸக் கட்சி – திரு. குமார் குணரட்ணம்
· சீறீ ரெலோ மக்கள் அமைப்பு – பரராசசிங்கம் உதயராசா
மறுமொழியொன்றை இடுங்கள்