24  .  கரையில் மோதும் நினைவலைகள்: சித்திரா உருவாகிய கதை

                                           நடேசன்

நான் பேராதனைப் பல்கலைக்கழகம் சென்ற பின்னரே  யாழ். மேயர் துரையப்பா கொலை செய்யப்பட்டார். பல தமிழ் பொலிஸ்காரர்கள் மற்றும் அரச ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக   வடபகுதியில் கொலை செய்யப்பட்ட விடயம் பத்திரிகை  மூலமாகக் கேள்விப்படுவேன்.  விடுமுறையில்  யாழ்ப்பாணம் வந்தால் கொலைகளுக்கான காரணங்கள் நண்பர்களால் விளக்கப்படும்.  காட்டிக்கொடுத்தவர் அல்லது துரோகி என்று அவர்களுக்குப் பெயர் வைத்து மேலே அனுப்பியிருந்தனர்.  துரோகிகள் களையெடுக்கப்பட்டதாக சமூகம் மகிழ்ந்திருக்கும்.

வட – கிழக்குப் பகுதிகளில்  நடந்துகொண்டிருந்த  வன்முறைகளைக் கேள்விப்பட்டு வந்த எனக்கு,   முதல் முறையாக பேராதனைப் பல்கலைக்கழகத்தில் -12 th November 1976  இல் ( அக்காலத்தில் இலங்கைப் பல்கலைக் கழகம்) சிங்கள மாணவர்களுக்கு எதிரான அரச வன்முறையை முதன் முறையாகப்  பார்க்க நேர்ந்தது.

அன்றையதினம்  காலை நேரம்.  கந்தானை மலைப்பகுதியில் பச்சை நிறத்தில்  கம்பளி போர்த்தது போன்ற  மலைக்குன்றுகள்  மிகவும் தெளிவாகத் தெரிந்தன. காலையுணவை முடித்துவிட்டு எமது விடுதியிலிருந்து இறங்கியபோது அதுவரையும் காணாத வன்முறை எனக்குப் புதிதாக இருந்தது.

முதல்நாள் மாணவர்கள் கூட்டம்  கலைப்பீட  மண்டபத்தின் முன்பாக நடந்தது என்ற விடயம் மட்டும் அறிந்திருந்தேன்.   அதைப்பற்றிய காரண காரியங்கள் தெரியாது . சிங்களம் தெரியாதபடியால் பல விடயங்கள் எனக்குப்  புரியாமல் இருந்தது.  அதைவிட  நானும்  இதர தமிழ் மாணவர்களும்  மருத்துவ பீடமாணவர்கள் உள்ள மண்டபத்தில் இருந்ததால்,   எங்களுக்கு இது பிரச்சினை இல்லை என்பது போன்ற மனப்பான்மையுடன் இருந்தோம்.

எம் மத்தியில் சகமாணவனான  ஜோதிரத்தின பண்டா மட்டும் ஜேவிபி சார்பானவன். எங்களைக் குட்டி பூர்ஷுவா என்ற முதலாளி வர்க்கம் எனச் சொல்லிச் சிரித்து விட்டு,  அப்படியான கூட்டங்களில் கலந்து கொண்டுவிட்டு,  எமக்கு  அறிக்கை சமர்ப்பிப்பான். நகைச்சுவைக்கு கூட இனவாதம் கலந்த வார்த்தைகளைப் பாவிக்காதவன். மற்றவர்கள் நகைச்சுவையாகத் தளையா ( தமிழர்கள் நல்லெண்ணெய் தலைகள் என்பது அதன் அர்த்தம்) என்பார்கள்.

இந்த இடத்தில் ஜோதிரத்தின பண்டவை நான் நினைவு கூரவேண்டும்.   உண்மையில் ஜோதி ரத்தின வெலிமடையில் வறிய  விவசாயியின் மகன். மாவட்ட ரீதியான பல்கலைக்கழகத்  தேர்வில் வந்தவன். அப்பொழுது இலங்கை அரசின் மாவட்ட தேர்வை நான் நல்ல விடயமாகப் பார்த்தேன். கிராமத்தவனாகையால் ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் உரையாட கஸ்டப்பட்டான்.  ஆனால்,  இறுதி வருடங்களில் அதைச் சரி செய்துகொண்டான்.  பிற்காலத்தில்  89 களில்  பண்டாரவளை பகுதியில் மிருக வைத்திய திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளராக இருந்த ஜோதிரத்தின,   ரோகண விஜேவீரவிற்கு  மறைந்திருந்து  உதவி செய்தார்  என்ற  குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுக் காணாமல் போய்விட்டார் .  அவரது பிரேதம் கிடைக்கவில்லை.   அவரது மனைவி குழந்தைகளுடன் பிற்காலத்தில் சிட்னிக்கு வந்து குடியேறியதாக  அறிந்தேன். ஜோதியா எனச் சுருக்கமாக நான் சொல்லும் ஜோதிரத்தின பண்டாவின் மரணம் என்னை மிகவும் பாதித்ததிலொன்று .

அந்த வெள்ளிக்கிழமை காலை , எங்களது மார்ஸ் மண்டபத்திலிருந்து இறங்கி ஜயத்திலகா மண்டபத்தின்  முன்றலிலிருந்து பார்த்தபோது,  துப்பாக்கி குண்டுகள் எங்கள் தலைகளுக்கு  மேலாக  “  ஊஸ்… ஊஸ் …  “ எனக் கூவியபடி சென்றன  .  கீழே பல்கலைகழகத்தூடாக செல்லும்  கலகா வீதியிலிருந்து,  பொலிசார் மேலே  சுட்டார்கள்.  மாணவர்கள் பலரை வீதியில் பெட்டிகளைத் தலையில் வைத்து முழங்காலில் நடக்க வைத்தார்கள் . அதன் பின்பாக நாங்கள் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறினோம்.

நான் அந்த மாணவர் போராட்டங்களில்  பங்குபற்றாதபோதிலும்,  மாணவர்களுக்கு எதிரான கொடுமையொன்று,  அக்கால ஶ்ரீமா பண்டாரநாயக்கா அரசினால்  நியமிக்கப்பட்ட உபவேந்தர்  பேராசிரியர் விதானகே தலைமையில்  நடந்தது .  இந்தச் சம்பவம், எட்டு மாதங்களின்  பின்பாக வந்த  தேர்தலில்  இடதுசாரிகளுடன் கூட்டாக இருந்த சுதந்திரக் கட்சியின் வீழ்ச்சிக்கு  அத்திவாரமாக இருந்தது.  இலங்கையில் ஒவ்வொரு கிராமங்களிலும்  இருந்து வந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள்,  அந்த பல்கலைக் கழகத்திலிருந்தார்கள். இந்தச் சம்பவங்கள்  நடப்பதற்கு அக்காலத்தில்  இயங்கிய ஜே வி பியை சேர்ந்த மாணவர்கள் அமைப்பு காரணமாக இருக்கவேண்டும்.  அவர்களே மாணவர்கள் சங்கத்திற்குப் பொறுப்பாக இருந்தார்கள் .

நான் அறிந்தவரை பல்கலைக்கழகத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்கள்  கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்ய முனைந்தபோது  இம்மாணவர்கள், தொழிலாளர்களுக்கு  ஆதரவாகவும்,  பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு எதிராகவும் செயற்பட்டார்கள்.   முதல் நாள்  கலைப்பீட  தியேட்டரின் முன்றலில் நடந்த கூட்டத்தின் முடிவுகளிலிருந்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.   அப்பொழுது 700  இற்கும் மேற்பட்ட  பொலிசார் அங்கு குவிக்கப்பட்டு தடியடி ,  கண்ணீர்ப்புகை , துப்பாக்கி வேட்டுப் பிரயோகம் நடத்தினார்கள்.  அன்று வீரசூரிய என்ற மாணவன் சுடப்பட்டு  கொலை செய்யப்பட்டான் . ஏராளமான  மாணவிகள் காயமடைந்தார்கள்.   உடைகள் கிழிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்கள். காயமடைந்தவர்கள் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டார்கள்.

அந்தச் சம்பவத்தில் ,  பொலிசாரால் ஆயிரக்கணக்கான மாணவர்களைத் தாக்கிய அரசின் அராஜகம் பிற்காலத்தில் வந்த அரசுகளுக்குப் படிப்பினையாக அமைந்தது. அக்கால அரசும் பல்கலைக்கழக நிர்வாகமும் மாணவர்களது எதிர்ப்பை தங்களது கௌரவப் பிரச்சினையாக எடுத்தார்கள். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அரசு வழக்கம்போல் விசாரணைக்காக ஒரு நீதிபதியை நியமித்தது.  அவர்,  அரசாங்கம் அளவுக்கு  மீறிய வன்முறையைப்  பிரயோகித்ததாக  தீர்ப்புக் கூறினாலும்,  எவரும் தண்டிக்கப்படவில்லை . ஆனால்,  துணைவேந்தர்  பேராசிரியர் விதானகே பதவியிருந்து அகற்றப்பட்டார்.  அத்துடன் பொலிசாக  இருந்த  வீரசூரியாவின்  சகோதரருக்கு பதவி உயர்வு கொடுத்து குடும்பத்தைச் சமாதானப்படுத்தினார்கள்.

அப்போது நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பயங்கரத் தோல்வியைச் சந்தித்த சிறிமா அரசு,  பின்பு 17 வருடங்கள் அரசியலில் அஞ்ஞாத வாசமிருப்பதற்கு அந்தச் சம்பவம் வழிகோலியது . அதேவேளையில்,  ஜேவி பியினர் சமூகத்திற்கு நல்லது செய்யவில்லை.  பல வழிகளில் இலங்கையில் சமூக மாற்றம் மெதுவாக நடப்பதற்குத் தடையாக இருந்தார்கள். பிற்காலத்தில் 30 வருடங்கள் விடுதலைப்புலிகள் தமிழ் சமூகத்திற்குச் செய்த அதே விடயத்தை,  இவர்கள் 1990 யில் முற்றாக ஒழிக்கப்படும்வரை, அதாவது  20 வருடங்கள்  பல சமூக அழிவுகள்  செய்தார்கள்.

பேராதனையில் இருந்த முதல் இரண்டு வருடங்கள் எனக்கு மனநிறைவற்ற காலங்கள். பாடங்களில் பெரிதளவு  கவனம் செலுத்தவில்லை.  ஆனாலும் மூன்றாவது வருடத்தை  அடைந்துவிட்டேன் . முதல் இரண்டு வருடங்களும் மருத்துவ மாணவர்களோடு படித்ததால் மிகவும் பெரிய தொகையாக மாணவர்களுக்கு ,  சில பாடங்கள் பெரிய மண்டபங்களில் நடைபெறும். அக்காலத்தில்  எனது கண்களில் கிட்டப்பார்வை மட்டுமே இருந்தது.  ஆனால்,  அந்தக் குறைபாடு  எனக்குத் தெரியாது.   விரிவுரையாளர்கள் கரும்பலகையில்  எழுதியதை,   குறிப்பெடுக்க முடிவதில்லை.

மூன்றாவது வருடத்தில் மிருக வைத்திய மாணவர்கள் என நாங்கள் 27 பேர்.  அதனால்  சக மாணவர்களுடன் நெருங்கிப் பழகவும் அத்துடன் படிப்பிக்கும் விரிவுரையாளர்களுடனும்  உரையாட முடிந்தது.

நான் சந்தித்த பெண்கள்.

இந்தத்  தலைப்பு வித்தியாசமாக இருந்தாலும்,  இதில் ஆழமான கருத்துள்ளது . எனது மிருக வைத்தியவேலையில் இதுவரை சந்தித்தவர்களையும் , அவர்களது செல்லப்பிராணிகளையும் பற்றி  வாழும் சுவடுகள் என்ற எனது நூல்களில் எழுதியுள்ளேன். எனது மிருக வைத்திய தொழிலில் என்னுடன்  ஏராளம் பெண்கள் வேலை செய்துள்ளார்கள்  அதேபோல்  எனது மனைவியின் மருத்துவ நிலையத்தை நானே 25 வருடங்கள் மேற்பார்வை செய்தபடியால் அங்கும் பெண்கள்.   அதைவிட நான் ஐந்து வருடங்கள் வேலை செய்த வைத்தியசாலையிலும் பலரோடு வேலை செய்தேன். மொத்தத்தில் இந்தத்துறைகள் பெண்கள் அதிகம் வேலை செய்யுமிடங்கள்.  அக்காலத்தில் சந்தித்தவர்களை எனது நாவல்களிலும் , சிறுகதைகளிலும் கொஞ்சம் அதிகப்படுத்தப்பட்ட (Dramatized)  பாத்திரங்களாக வந்துள்ளார்கள். நான் எழுத்தாளனாக,  கற்பனைப் பாத்திரத்தை உருவாக்கினாலும்,  ஏற்கனவே நான் சந்தித்தவர்கள் என்னையறியாது  மனதில் வருவார்கள்.  பாத்திரங்கள் மனதில் பதியும். இன்றும்  எனது வண்ணாத்திக்குளம் நாவலைப் படித்தவர்கள், அதில் வரும்  சித்ரா உமது மனைவியா எனக்கேட் பார்கள். அதை எனது வெற்றியாகக் கருதுகிறேன்.   இதுவரையும் கற்பனைகளாகப் பார்த்தவர்களை நான் நிஜமாகச் சந்தித்தபோது,  அவர்கள் சம்பந்தமான  சம்பவங்களை எனது குறிப்புகளாக எழுதப்போகிறேன்.

சித்ரா – வண்ணாத்திக்குளம்

எனது இருபத்தைந்து வயதில் நான் மிருக வைத்தியராக,  முதலாவதாக வேலை செய்யப் போன இடம்  மதவாச்சி என்ற சிங்களப்பிரதேசம்.  அங்கிருந்த நான்கு வருடங்கள் நடந்த சில சம்பவங்களோடு  கற்பனை கலந்து வண்ணாத்திக்குளம் நாவலை எழுதினேன்.  ஆனால்,  கதையின்   காரணத்தைப் பார்ப்போம்.  அங்கு என்னோடு வேலை செய்தவர்களில்  இருவர் பெண்கள்.  அதில் ஒருவர் பிரேமாவதி.   அநுராதபுரத்திற்குப் பக்கத்திலிருந்து வருபவர் .  25 அல்லது 26 வயதிருக்கும்.  சுமாரான அழகி. மற்றைய பெண் லீலாவதி.  இவருக்கு  50 வயதிருக்கும்.  பெரிய பிள்ளைகள் உள்ள  குடும்பப் பெண்.  இவர்களைவிட ஒரு ஆண் உதவியாளர். அவர் பெயர்  சமரசிங்கா.

எனக்கு சிங்களம் தெரியாது.  ஆனால்,   வரும் அரச , மற்றும்  விவசாயிகளின்கடிதங்களை வாசித்துப்  பதிலளிக்க ஒரு பெண்ணை எனது  அலுவலகத்தில்  வைத்திருக்க விரும்பினேன் . எனது உதவியாளர்கள் மூவரும் சட்டப்படி வெளிக்கள வேலை செய்யவேண்டும்.   விவசாயிகளைச் சந்திக்கவேண்டும். கோழிகளுக்கு  தடுப்பூசி போடவேண்டும்.  அரசு ஒரு குறிப்பிட்ட தொகையைப் பிரயாண செலவாக இவர்களுக்கு வேதனத்திற்கு மேல் கொடுக்கிறது . நான் யாராவது ஒருவரை வெளியே அனுப்பாது கந்தோரில்  வைத்திருந்தால்,  அவர்களுக்கு அந்த பிரயாணப்படி கிடைக்காது .

சமரசிங்கா  எப்பொழுதும் வெளிவேலை செய்வதுடன்,  சில சந்தர்ப்பங்களில் மிருக மருத்துவமும் செய்து,  அதன் மூலம் பணத்தைப் பெறுவார். அதற்கப்பால் மாலையில் ஊர் விவசாயிகளோடு தண்ணீ  அருந்தி தாகசாந்தி செய்வார் . அடுத்ததாக லீலாவதி .  இவர் அதிகம் படிக்கவில்லை.  அத்துடன் இவருக்கு எனது ஆங்கிலம் புரியாது.  இறுதியில் இளம் பெண்ணான பிரேமாவதி எனது அலுவலக உதவியாளராக இருந்தார். ஒருவிதத்தில்  அவளே எனது சிங்கள ஆசிரியை .

பிரேமாவதி நல்ல நிறம்.  அத்துடன் வெய்யிலில் அதிகம் செல்லாதமையால்  மேலும் அழகுற்றாள்.   அத்துடன் அவள் பிரயாணம் செய்வதாக நான் பிரயாணப் படிவத்திற்குக்  கையெழுத்து வைப்பேன்.  இப்படி எல்லாம்  அந்த வேலைத்தலம் சுமுகமாக நடந்து கொண்டிருந்தது.

ஏதோ போதாத காலம்.  லீலாவதிக்கும் பிரேமாவதிக்கும் போர் உருவாகியது. அதில் பிரேமாவதி,  என்னை வசியம் செய்வதாகத் தொடங்கி இறுதியில் அவளது  அழகில் நான் மயங்கி அவளுக்குச்  சலுகை செய்வதாகப் பேச்சு ஊரெங்கும் மிதந்து சலசலத்தது.  மணத்தது.

கிட்டத்தட்ட இருவருடங்களாகிய  காலத்தில் நானும்  சிங்களம் பேசுவதற்கு கற்றுக் கொண்டேன் .

பிரேமாவதியிடம் , “ இதுவரை  அலுவலகத்தில் ஐந்து நாளும் வேலை  செய்தது போதும் .  குறைந்த பட்சம் கிழமையில்  இரு நாட்களாவது வெளிக்கள வேலை செய்.   “   என்றேன்

அதற்கு  பிரேமாவதி முகத்தைத் திருப்பி,  தனது இடது தோளில் இடிந்தாள்.

பிரேமாவதியின் காதலன் அக்காலத்தில் மதவாச்சி பஸ் டிப்போவில் மெக்கானிக்காக வேலை செய்வது எனக்குத்  தெரியும். பிரேமாவதியோடு சண்டையிட்டால்  இனக்கலவரம்  ஏற்பட  வாய்ப்புண்டு என்ற கவலையால்  பொறுத்திருந்தேன்.

நான் சொன்னதை  பிரேமாவதி கேட்கவில்லை.  மவுனமாக இருந்தாள். இருவரும் ஒருவருடன் ஒருவர்  பேசவில்லை.   இருவரும் ஒருவரை ஒருவர் எதிரியாகப் பார்க்கத் தொடங்கினோம். மவுனமாகப் போர் தொடுத்தோம்.  கொலை,  வாள் வெட்டு,  கத்திக்குத்து என  எனது மனத்திரையில்  போர் நடந்தது. பிரேமாவதியின் மனத்தில் என்ன ஓடியதோ?

அதேநேரத்தில் முள்ளில் போட்டசீலையாக  எப்படி இந்த விடயத்தைச் சமாளிப்பது என முன் மூளை விசாரணைக் கமிசன்போட்டு ஆலோசித்தது . எந்த முடிவும் எடுக்க முடியவில்லை.  

ஒரு நாள் முற்பகல் பத்துமணியளவில்,  பச்சை சேலையணிந்து அதே நிறத்தில் பிளவுஸ் அணிந்து மிகவும் அமைதியாக  வந்து,  நேரத்தை ஒன்பது மணி எனப்  பதிவு செய்து,  ரிஜிஸ்ரரை எனது மேசையில் வைக்க முயன்றபோது,  எனது ஈகோ, சுப்பர் ஈகோவாகி விசுவரூபம் எடுத்தது,  பிரேமாவதியின் கையிலிருந்த  ரிஜிஸ்ரரை பறித்தபோது இருவரும்  ஒருவரை  ஒருவர் தள்ள வேண்டிவந்தது. அழுதபடி வீடு சென்றாள் பிரேமாவதி.

இது நடந்தது வெள்ளிக்கிழமை.    நான் பேராதனைக்குச் சென்று ,  எனது காதலியான சியாமளாவை  மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வந்து  சனிக்கிழமை,   யாழ்ப்பாணம் சென்றேன். மீண்டும்  திங்கட் கிழமை வேலைக்கு வந்தேன்.

அலுவலக அறையில், கதிரையில் அமர்ந்திருந்தபோது திடீரென ஒருவன் வந்து   “  என்ன கந்தோரா  நடத்துகிறாய்?  பெண்களைக் கட்டிப்பிடிக்கிறாயா?  “  என்று கேட்டு என்மீது பாய்ந்தான். இருவரும் மல்லுக்கட்டினோம். அப்போது வெளியிலிருந்து வந்த சமரசிங்கா புதிதாக வந்தவனை வெளியே இழுத்துக் கொண்டு போய் விட்டார்.  வந்தவன் பிரேமாவதியின் காதலன் என்பது  பின்பு தெரிந்தது.

பிரேமாவதி அதன் பின்னர்  இருநாட்கள் வேலைக்கு வரவில்லை .

நான் கெட்ட எண்ணத்தோடு கட்டிப்பிடித்ததாக பிரேமாவதி சொன்ன விடயம்  மதவாச்சியிலும் வேலை செய்பவர்கள் மத்தியிலும் நல்லவேளையாக எடுபடவில்லை.  காரணம் : சியாமளா.  

எனது தலைமை அலுவலகம் அமைந்திருந்த  கண்டிக்குச் சென்று, அங்கு உதவி பணிப்பாளரான டொக்டர் அரசரத்தினத்திடம் விடயத்தைச் சொல்லி,  என்னை மதவாச்சியிலிருந்து மாற்றுங்கள்,  அல்லது பிரேமாவதியை இடமாற்றம் செய்யுங்கள் . இருவரும் ஒரே இடத்தில் வேலை செய்வது கடினம்  என்றபோது,  அதுவரை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த உதவிப் பணிப்பாளர்,    “ நீ உண்மை சொல்கிறாயா?  அல்லது  ஏதாவது சில்மிசம் செய்தாயா?   “  என்ற தொனியில் கேட்டார் .

நான் அவரது அறையிலிருந்து  உடனே எழுந்து பணிப்பாளராகிய டொக்டர் தனபாலாவிடம் இதே விடயத்தைக் கூறியதும் , அவர் என்னிடம்,   “   நீ போ. நான் பார்த்துக்கொள்கிறேன்.  “  என்றார்.

பிரேமாவதி அநுராதபுரத்திற்கு உடனே மாற்றப்பட்டாள்.  நான் மேலும் இரு வருடங்கள் மதவாச்சியில் இருந்தேன்.

 ஆரம்பத்தில் பிரேமாவதியைப் பாவித்துவிட்டு,   பின்பு திடீரென வெளிக்கள வேலைக்குப்  போகச் சொன்னது மட்டுமல்ல,  முதல் இரண்டு வருடங்கள் பிரேமாவதியை  ஒரு தோழியாகவே நடத்தினேன்.  பிரேமாவதியிடம் தவறு இருந்தாலும் எனது நடத்தையிலும்  தவறு உள்ளது என நான் பிற்காலத்தில் உணர்ந்து மனவேதனைப்பட்டேன். அதற்குப் பரிகாரமாகவே வண்ணாத்திக்குளம் நாவலில்  அவளை சித்ராவாக்கினேன். ஒருவிதத்தில் கதை எழுதுபவனாகியதால் பாவசங்கீர்த்தனம் பெறமுடிந்தது.

2009 இல்  டொக்டர் தனபாலா என்னைச் சந்தித்து  பேராதனை ஓய்வு விடுதியில் விருந்தளித்தார். அத்துடன் எப்பொழுது வந்தாலும் கண்டிக்கு வா என அழைப்பும்  விடுத்தார்  .அவரை நினைக்கும்போது இந்த விடயத்தை நினைவு கூர்வேன்.

இப்பொழுது உங்களுக்கு எனது  வண்ணாத்திக்குளம்   நாவலில் சித்திரா என்ற ஒரு பாத்திரம் எப்படி உருவாகியது எனப் புரிய வைத்துவிட்டேன். 

“24  .  கரையில் மோதும் நினைவலைகள்: சித்திரா உருவாகிய கதை” மீது ஒரு மறுமொழி

  1. நல்ல பதிவு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: