ஊடகவியலாளர் சிதம்பரப்பிள்ளை சிவகுமார்:அஞ்சலி

ஊடகவியலாளர் சிதம்பரப்பிள்ளை சிவகுமார்

விடைபெற்றார் !

                                                                       முருகபூபதி

 “ வாழ்க்கையின் மீதான விமர்சனத்திலிருந்தே ஒரு படைப்பு உருவாகிறது. சுய அனுபவத்தின் மெய்த்தன்மை படைப்பில் தென்படுமானால் அந்தப்படைப்பு வாசகரின் நம்பிக்கையை பெற்றுவிடுகிறது. நம்பிக்கையைப் பெற்று நம்மை பாதிக்கிறது. இந்தப்பாதிப்பே இலக்கியத்துக்கும் சமூகத்துக்குமான உறவின் அடிப்படையாக அமைகிறது. நல்ல எழுத்து – அனுபவம் சார்ந்து வாழ்க்கையின் சிக்கலைப்பற்றி விவாதிக்கும். வாழ்க்கை இப்படி…இப்படி இருக்கிறது என்று கவனப்படுத்துவதன் மூலம், நமக்கும் வாழ்க்கைக்குமான உறவை ஒழுங்கு செய்யமுயலும், வாழ்க்கையை எதிர்கொள்ளுவதற்கான ஒரு சூழலையும் தயாரிப்பையும் உருவாக்கும். மகிழ்ச்சியான தருணங்களும், துயர நிகழ்ச்சிகளும் எல்லோருக்கும் ஒரே மாதிரியானவை அல்ல என்பது உண்மைதான்.

ஓரே நபருக்குக்கூட இவை எப்போதும் ஒரே மாதிரியானவை அல்ல. மற்றவர் வாழ்க்கை அனுபவங்களும் வேறு வேறானவைதான். ஆனால், எல்லா மனிதர்களுடைய சுக துக்கங்களுக்கும் பொதுவான ஒரு இழை இருக்கிறது. அந்த இழையை உணரச்செய்யும் எழுத்துக்கள் வாசகர் மனதில் பதிந்து வெற்றி பெற்றுவிடுகின்றன.  “

இவ்வாறு அர்த்தம் பொதிந்த எழுத்தை எழுதிய எமது அருமை இலக்கிய நண்பர் சிதம்பரப்பிள்ளை சிவகுமார் அவர்கள் நேற்றைய தினம் கொழும்பில் மறைந்துவிட்டார் என்ற துயரச்செய்தி என்னை வந்தடைந்தபோது, அதிர்ந்துவிட்டேன்.

மலர்ந்துள்ள புத்தாண்டும்  அஞ்சலிக் குறிப்பிற்கான ஆண்டாகத்தான் தொடங்கப் போகின்றதோ என்ற மனவேதனையுடன் இந்தக் குறிப்புகளை எழுத நேர்ந்துள்ளது.

சிதம்பரப்பிள்ளை சிவகுமார் அவர்களை இறுதியாக கடந்த ஆண்டு நடுப்பகுதியில் இலக்கிய நண்பர் நடேசன் ஏற்பாடு செய்திருந்த நம்மவர் பேசுகிறார் மெய்நிகர் அரங்கில்தான் சந்தித்து உரையாடியிருந்தேன்.

    குறிப்பிட்ட  இந்த அரங்கு எம் அனைவரதும் இனிய இலக்கிய  நண்பர்       ‘ மக்கத்துச்சால்வை  ‘ எஸ். எல். எம். ஹனீபாவுடைய படைப்புலகம் மற்றும் அரசியல் , சமூகப்பணி சார்ந்து நிகழ்ந்த உரையாடல் சந்திப்பு.

ஏற்கனவே ஹனீபாவின் படைப்புலகம் பற்றி மாத்திரமன்றி ஏனைய  எழுத்தாளர்களின்  படைப்பாளுமைகள் குறித்தும் இலங்கை – தமிழக ஊடகங்களில் எழுதி வந்திருப்பவர்தான் சிதம்பரப்பிள்ளை சிவகுமார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு கிளிநொச்சியில்  இரண்டு நாட்கள் நடந்த  49 ஆவது இலக்கியச்சந்திப்பில் அவரை சந்தித்து நீண்டநேரம் பேசியிருக்கின்றேன்.

அச்சந்திப்பிற்கு தமிழ்நாட்டிலிருந்தும் அய்ரோப்பா, கனடாவிலிருந்தும் இலங்கையின் பல பாகங்களிலிருந்தும்  பல இலக்கிய ஆளுமைகளும் , தமிழக திரைப்பட கலைஞர்களும்   வருகை தந்திருந்தனர்.

இரண்டு நாட்களும் நடந்த கருத்தரங்குகளில்  சிவகுமார், தனக்கே உரித்தான பாணியில் தனது கருத்துக்களை அழுத்தம் திருத்தமாக முன்வைத்தார்.

இந்த அஞ்சலிக்குறிப்பின் தொடக்கத்தில் சிவகுமாரின் பார்வையில் மனித வாழ்வு மீதான சிந்தனை சொல்லப்பட்டது, இற்றைக்கு 19 வருடங்களுக்கு முன்னர்தான்.

2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09 ஆம் திகதி கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடந்த எனது பறவைகள் நாவல் வெளியீட்டு விழாவில் அவர் உரையாற்றிய நாவல் மீதான வாசிப்பு அனுபவத்தின் தொடக்கம்தான்  அந்த வரிகள்.

அன்றைய அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான சந்திரசேகரன், மற்றும் பேராசிரியர் சோ. சந்திரசேகரன், மல்லிகை ஜீவா முதலான பலர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் சிவகுமார் மாத்திரமே  நாவலைப்பற்றிய பிரதம பேச்சாளர்.

அவுஸ்திரேலியவிலிருந்த என்னால், அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாதிருந்த சூழலிலும், என்னைப் பற்றிய எந்தவொரு அறிமுகமும் இன்றி, எனது நாவலைப் பற்றி மாத்திரம் படித்துத் தெரிந்துகொண்டு உரையாற்றிய அவரை, அதன்பின்னர்தான் சில வருடங்கள் கழித்து ஏரிக்கரை  ( Lake House ) பத்திரிகை காரியாலயத்தில் சந்தித்தேன்.

நீண்ட காலமாக ஊடகத்துறையுடன் நெருக்கமாகவிருந்த அவர், தமிழ்நாட்டின் தரமான இலக்கிய ஏடு கணையாழியிலும் முன்னர் பணியாற்றியிருக்கிறார் என்பது நான் பிந்தியறிந்த செய்தி.

இலங்கை வானொலியிலும், சக்தி வானொலி – தொலைக்காட்சி முதலானவற்றிலும் காத்திரமான பங்களிப்பினை வழங்கியிருக்கும் சிவகுமார்,  யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த தினமுரசு பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியவர்.  ஈழத்து எழுத்தாளர்களினதும் புகலிட படைப்பாளிகளினதும் ஆக்கங்களுக்கும்  தினமுரசுவில் களம் வழங்கினார்.

சில வருடங்களுக்கு முன்னர் இருதய சிகிச்சைக்குட்பட்டிருந்த அவர்,  தன்னைப்பற்றி கவனிக்கத் தவறிவிட்டாரோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

தமது பெருவாரியான நேரத்தை எழுத்து, சமூகப்பணி என ஒதுக்கிவிடும்  பலருக்கு நண்பர் சிதம்பரப்பிள்ளை சிவக்குமார் அவர்களும் ஒரு பாடமாக இருத்தல் வேண்டும் என்றும் இந்தக்குறிப்புகளில் சொல்வதில் தவறில்லை எனக்கருதுகின்றேன்.

சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்.

நமக்கும் வாழ்க்கைக்குமான உறவை   எழுத்தின் ஊடாகவும்,  பணிகள் சார்ந்தும்  ஒழுங்கு செய்ய முயலும் எழுத்தாளர்கள் , சமூகப்பணியாளர்கள், ஊடகவியலாளர்கள்,  தமது சொந்த வாழ்விலும்  அதனை கடைப்பிடித்தல் வேண்டும்.

இம்மாதம் 26 ஆம் திகதி பிறக்கும்போது நண்பர் சிதம்பரப்பிள்ளை சிவகுமாருக்கு 60 வயது பிறக்கிறது. மணிவிழா நாயகனாக வலம் வந்திருக்கவேண்டியவர், அற்பாயுளில் எம்மை விட்டு விடைபெற்றுவிட்டார்.

இலங்கை – இந்திய – புகலி தேசத்து எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்களுடன் நெருக்கமான உறவைப்பேணி வந்திருக்கும் சிதம்பரப்பிள்ளை சிவக்குமார் எம்மிடம் விட்டுச்சென்றிருப்பது அவர் பற்றி பசுமையான நினைவுகள்தான்.

அவரின் மறைவால் ஆழ்ந்த துயரத்தில் மூழ்கியிருக்கும் அன்னாரின் அன்புத் துணைவியார், மற்றும் பிள்ளைகள் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

அற்பாயுளுக்கும் மேதாவிலாசத்திற்கும் நெருங்கிய உறவு இருக்கிறதோ..?  என்றுதான் சிதம்பரப்பிள்ளை சிவக்குமாரின் மறைவும்  எம்மை சிந்திக்கவைக்கிறது.

—0—

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: