
“மெல்பேன் தமிழ் உறவுகளிடமிருந்து வரும் போராட்ட நிதி யுத்த நிறுத்தத்தின் பின் குறைந்து விட்டது. பலர் ஊரில் தங்கள் உறவினர் மூலமாக விடுதலைப்புலிகளிடம் கொடுத்துவிடுவதாகச் சொல்கிறார்கள். மற்றவர்கள் இனி சமாதானம் வந்து விட்டது. பணம் ஏன் கொடுக்க வேண்டும் என்கிறார்கள். இந்த நிலை நீடித்தால் மண்ணில் போராடுபவர்களுக்கு எப்படி பணம் அனுப்புவது? மற்ற நாடுகளைப் போல் இலங்கைக்கு விடுமுறையில் செல்பவர்களிடம் விசா மாதிரி பணம் அறவிட்டால் தான் சரிவரும் ” என்று ஒருவர் கவலையுடன் தெரிவித்தார்.
“நீங்கள் சொல்வது போல் எங்களுக்கு பணம் தந்து உதவியவர்கள் ஈழம் செல்லும்போது குறிப்பிட்ட தொகையை தரும்போது மட்டும் விசா இலக்கம் கொடுப்தென ஒரு ஒழுங்கு முறை பற்றி மண்ணில் பொறுப்பாளர்களிடம் பேசியுள்ளேன். ஏற்கனவே சிட்னியில் அது அமுலாக்கப்பட்டிருக்கிறது.” என்றார் ஒருங்கிணைப்பாளர்.
“கல்லில் நார் உரிப்பது போல் பணம் பெற வேண்டியுள்ளது. மக்கள் ஏன் இது எமது போராட்டம் என நினைக்கவில்லை?” என்றார் ஒருவர்.
“சமாதான ஒப்பந்தம்தான் இதற்குக் காரணம்” என்றார் மற்றொருவர்.
அதை மறுத்து இளைஞரான நிதிப்பொறுப்பாளர் எழுந்து தனது சிறிய உதட்டின்மேல் உள்ள பென்சில் கோடு போன்ற மீசையை வருடியபடி இடுங்கிய கண்களில் அனல் தெறிக்கப் பேசினார் “மெல்பேனில் இருந்து வெளிவரும் உதயம் பத்திரிகைதான் இதற்கு முக்கிய காரணம். அவர்கள் அங்கு நடக்கிற மற்றும் நடக்காத விடயங்களைப் பொய்யாக எழுதி மக்களைக் குழப்புகிறார்கள். எந்த வீட்டில் பணத்திற்கு போனாலும் உதயத்தை எடுத்து காட்டி இது உண்மையா எனக்கேட்கிறார்கள். இதற்கு பதில் சொல்லியே எமது நேரம் வீணாகிறது”
அவரது கருத்தைப் பலர் ஆதரித்தார்கள்.
“பத்திரிகையை என்ன செய்வது? பலமுறை சமூகத்தைக் குழப்பவேண்டாம். விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்த வேண்டாம் என சொல்லியாகிவிட்டது. மக்களிடம் அந்த பத்திரிகையை புறக்கணிக்கும்படியும் கூறிவிட்டோம். அவர்கள் தொடர்ச்சியாக தமிழ்த் தேசியத்திற்கு எதிராக செய்திகளை வெளியிடுகிறார்கள்” என்றார் மனோகரன்.
“ஊர் மாதிரி இவங்களை சுட்டுத் தள்ள வேணடியது தான்” என்றார் கறுத்த இளைஞர்.
“பத்திரிகையாசிரியரை ஏதாவது வாகன விபத்தில் மாட்டவைப்பது நல்லது. இல்லையெனில் எமக்கு பிரச்சினை உருவாகும்.” – தலை நரைத்த முதியவர்.
“நீங்கள் தேவையில்லாமல் உங்கள் பத்திரிகையில் எழுதி பின்பு என்னையும் அனுப்பி மன்னிப்பு கேட்டது நினைவில்லையா? நடக்க முடியுமான விடயங்களைப் பேசுவோம்” என்றார் உயரமான மெலிந்த தோற்றமானவர்.
“அப்பிடியெல்லாம் எழுந்தமானமாகப் பேசவோ எழுதவோ நடக்கவோ கூடாது. நாங்கள் அவுஸ்திரேலிய சட்டங்களின் பிரகாரம்தான் நடக்கவேண்டும். அதைத்தான் நமது இயக்கமும் கேட்டுக்கொண்டது” என்றார் ஒருங்கிணைப்பாளர் மனோகரன்.
அவரது குரலில்; எச்சரிக்கைத்தொனி இருந்தது. அவர் வார்த்தைகளை நிதானித்து பேசினார்.
“நான் ஒரு வழி வைத்திருக்கிறேன்” என்றார் நிதிப்பொறுப்பாளர்
“அது என்ன?”
“நேரடியாக கடைகளில் இருந்து பத்திரிகையை அப்படியே கட்டாக தூக்கப்போகிறேன்”
“பிரச்சினை வராமல் வன்முறையில்லாமல் செய்தால் சரி” என்றார் ஒருங்கிணைப்பாளர்.
உதயம் என்ற மாதாந்த பத்திரிகையை ஏற்கனவே வாசித்தும், கேட்டும் இருந்ததால் அதைப் பற்றிய பேச்சுகள் புரிந்தன. ஆனாலும் அந்தப் பத்திரிகையின் மேல் இவ்வளவு குரோதமாக இருப்பது ஆச்சரித்தைக் கொடுத்தது. பத்திரிகைக்கு இவ்வளவு பலமா? ஏன் இவர்கள் இப்படி பயப்படுகிறார்கள்? அந்த விடயம் மட்டும் அசோகனுக்குப் புரியவில்லை.
உயரமான ஒருவர் எழுந்து நின்று “கடைசியாக தலைவருடன் பேசிய போது அவர் உங்கள் நாட்டு சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என திரும்பவும் சொன்னதை நான் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்” என்றபோது மற்றவர்கள் முகம் சுழித்தபடி ஒருவரை ஒருவர் பார்த்தார்கள்.
Edited Version
மறுமொழியொன்றை இடுங்கள்