எஸ். பொன்னுத்துரையின் எழுத்துகள்.

நடேசன்

————————————————-

எஸ் . பொ.  என்ற எழுத்தாளரை நாம் நினைவு கூருகின்றோமோ  இல்லையோ,  அவரது எழுத்துகளை இலங்கைத் தமிழர்கள் நினைவு கூரவேண்டும் – முக்கியமாக இலக்கியத்தை நேசிப்பவர்கள் .

இதைச் சொல்லும்போது அதற்கான விளக்கம் தேவை இல்லையா?

அவர் எனது நான்கு நூல்களைப் பதிப்பித்தவர்.   என் கையைப் பிடித்துக்  கதை எழுதுபவனாக அழைத்துச் சென்றவர்.  அவர் இல்லையென்றால்  ஆஸ்திரேலியாவில் ஒரு மிருக வைத்தியனாகவும் ஓய்வு வேளைகளில்  கையில் விஸ்கி கிளாசுடனும்  வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில்  பொரித்த கோழிக்கால்களைக் கடித்தபடியும்  கொஞ்சம் இலங்கை அரசியல் பேசியிருப்பேன்.

எஸ்.பொ.  ஒரு பதிப்பாளராக நூறுக்கும்  மேற்பட்ட  தமிழ் நூல்களை தமது மித்ர பதிப்பகத்தின் சார்பில் பதிப்பித்தார். ஆனால்,  பின்னாட்களில் அவற்றில்  பல கட்டுக்கட்டாகக் கிடந்ததாக இளம்பிறை ரகுமான் என்னிடம் சொன்னார் .

மாறிவரும் பதிப்புத்துறையால் இதனைத்  தவிர்க்க முடியாது .

மொழி பெயர்ப்பு  புத்தகங்களைப் படிப்பது எனக்குக் கடினமானது.  அது எனது குறையாகவோ, இல்லை மொழி பெயர்ப்பாளரது குறையாகவோ இருக்கலாம்.

எஸ். பொ.  மொழி பெயர்த்த  சில  ஆபிரிக்க நாவல்களை என்னால் எளிதாக வாசிக்க முடிந்தது.

அவரது சிறுகதைகள் பலவற்றை வாசித்துள்ளேன். அவை பெரும்பாலும் 50-60 ஆண்டுகளின் யாழ்ப்பாணம் அல்லது கிழக்கு மாகாணத்தின்,  மனித மற்றும் குடும்ப உறவுகளைப் பேசுகிறது .

அவரது பிரபலமான தேர் என்ற சிறுகதையை பார்ப்போம்.

குடும்ப உறவுகள் காலம் என்ற சக்கரத்தில் மாறுபவை . புலம்பெயர்ந்தவர்கள் மட்டுமல்ல யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களிடம் கேட்டால், இப்படியும்  உறவுகள் இருந்ததா எனக்கேட்பார்கள்.

போரின் பின்னர்,  தந்தை – மகன் உறவு மாறிவிட்டது. சகோதர உறவுகள் சிதைந்துவிட்டன.  தனிமனிதர்கள் தீவுகளாக தங்களை மட்டும் சீரமைத்துக் கொள்கிறார்கள்.

அவரது புனைவுக் கட்டுரைகளான (Creative nonfiction) நனைவிடை தோய்தல் நமக்கு மீண்டும் 50-60 கால யாழ்ப்பாணத்தைக் காட்சிப்படுத்துகிறது. அக்கால மனித உறவுகளையும்,  நிலக்காட்சிகளையும் என்னைப்போன்ற  யாழ்ப்பாணத்தில் அதிகம் வாழாதவர்களுக்கு வாசித்துத் தெரிந்து கொள்ளமுடிகிறது .

நாவலாசிரியராக, அவர் தமது சடங்கு  நாவலில்  நமக்குத் தருவது அக்கால உறவுகளே.  யாழ்ப்பாணத்தவர்கள், கொழும்பில் அரச சேவையை பார்த்துவிட்டு வார இறுதியில்  வாரிசு உருவாக்கும் உத்வேகத்துடன் யாழ்ப்பாணம் வருகிறார்கள். அதனை மாமியார்கள்  எவ்வாறு  முடிவு செய்கிறார்கள் என்பதே இக்கதை.

சீவிய உருத்து வைத்து சீதன வீடுகளை மகளுக்கு எழுதிவிட்டு,  குழந்தைகளைப் பராமரிப்பவர்களும் அவர்களே. அரசனுக்கு மந்திரிபோன்று  சகலதையும் கட்டுப்படுத்துவார்கள். அந்தத் தாய்மாரை மீறி மகள்மார் கணவனுடன் உறவு வைத்துக்கொள்ளமுடியாது என்று,  யாழ்ப்பாண வெள்ளாளரை நக்கலடிக்கிறது எஸ். பொ. வின் சடங்கு.  இதனை  வாசிக்கும்போது எப்பொழுதும் என்கொடுப்புக்குள் சிரிப்பேன்.

யாழ்ப்பாணம் நகரில் வசித்த எஸ். பொ,  எதற்காக பருத்தித்துறையில்,  கதைமாந்தரையும் நில அமைப்பையும் தேடவேண்டும் என்ற கேள்வி எழும்போது அவருக்குத் தெரிந்த பருத்தித் துறையைச் சேர்ந்தவர் யாரையாவது பழி   தீர்க்கும் நோக்கம் அவருக்கு  இருந்ததோ..?  – யார் கண்டது?

அவரது  தீ என்ற நாவல் உடல் இச்சையின் அழிவைப் பேசுகிறது.  காமத்தின் தீ எக்காலத்தில் அணையும் ?  மனித குலம் உள்ள மட்டும் அணையாது!

பாதிரிமார்கள்,  சிறுவர்கள் மீது  நடத்தும் பாலியல் துஷ்பிரயோகம் சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் வெளியாகியதையடுத்து,  அதனை விசாரிக்க  ஆணையம் நியமித்தார்கள் . தொடர்ச்சியாக அமெரிக்கா , கனடாவிலிருந்தும்  இதுபோன்ற   செய்திகள்  வந்து கொண்டிருக்கின்றன.

நமது இலங்கை போன்ற நாடுகளில் இவற்றைக் கிளறமாட்டார்கள்.  அந்தச் சூடு தாங்கமுடியாதது. ஆனால்  துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் அதைச் செய்பவர்களாக மாறுவார்கள். (Victims became perpetrators). துஷ்பிரயோகம் மதம் இருக்கும்வரையில்  நடைபெறும் .  பாதிரிகள் மட்டுமல்ல, ஆசிரியர்கள், வைத்தியர்கள் சமூகத்தில் தங்களது பிரத்தியேகமான இடத்தை தவறாகப் பயன்படுத்துவது தொடர்கிறது.   இதைப்பேசியது அவரது  தீ நாவல்.  விளாடிமிர் நபகோவின் லொலிற்றாபோன்று தீ நாவலும்  காலங்கள் கடந்து பேசப்படும்.  அதைப்போன்று  அவரது வரலாற்றில் வாழ்தல்  சுயசரிதை  நூலும் பேசப்படும்.

இந்தப் புத்தகத்தில் தனது வரலாற்றை மட்டும் அவர் எழுதியிருந்தால்,  அதில்  எஸ்.பொ.வை நேசிப்பவர்கள் மட்டுமே படிக்கவேண்டியிருந்திருக்கும்.  ஆனால் மொத்தமான தமிழர் வரலாற்றை அவர் எழுதியுள்ளார்.

அதனை அவர்  தனது சுயபல்லவி மட்டும் சொல்லும் புத்தகமாக மட்டுமல்லாது,   மானிடவியல் வரலாற்று நூலாகவும்  ஆக்கியிருக்கிறார்.

எம் மத்தியில் சுயசரிதை எழுதுவது வழக்கமில்லை.  ஆனால் ,  இறந்தவர்களுக்குக் கல்வெட்டு எழுதுவோம்.  அக்கல்வெட்டுகளில்   பெயரைத் தவிர மற்றவை எல்லாம் ஒரே மாதிரி, தேவார திருவாசகத்துடன் அமைந்திருக்கும். அந்தியேட்டிச் செலவோடு  அக் கல்வெட்டும் பழைய கடதாசியாகி கடந்து போய்விடும்.

தனது வாழ்கையில் நடந்த விடயங்களைக் காய்தல் உவத்தல் அற்று எழுதுவதோ,  மற்றவரை எழுதுவதற்கு அனுமதிப்பதோ தமிழ் சமூகத்தில் வழக்கத்தில் இல்லாதது . தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் பிற்காலத்து போராட்ட தலைமுறையில் வந்தவர்களைப் பற்றிய குறிப்புகள் எம்மிடமில்லை. அது பற்றி  எழுதுவதற்கும்  எந்த ஏற்பாடுகளும் இல்லை. இது ஈழத்தமிழர் மத்தியில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் இதுதான்  நிலை. கருணாநிதி, எம்.ஜி. இராமச்சந்திரன் போன்றவர்கள் தங்கள் அரசியல் தேவைக்காக எழுதியவை உள்ளன. இக்காலத்திலும் பூரணமாக எம்.ஜி. ஆர் சம்பந்தப்பட்ட ஒரு புத்தகத்தை யாராவது எழுதினால் அவர்களுக்கு உயிராபத்து ஏற்படும்.

வரலாற்றில் வாழ்தல்  –  ஒரு வரலாற்று இலக்கியம்.

ஆங்கிலத்தில் கத்தாசில் (Catharsis or Cathartic literature)) எனப்படுவது,  ஆரம்பத்தில் கிரேக்க அறிஞர் அரிஸ்ரோட்டலினால் இலக்கியத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பொருள் தன்னை சுத்தப்படுத்துதல். மதத்தில் பலிகள் கொடுத்தோ, கழுவியோ கடவுளை வழிபடுவது இந்தவகை.

இப்படியான கத்தாசிஸ் எழுத்தை இரண்டாயிரம் பக்கங்கள் எழுதுவதற்கு எஸ். பொன்னுத்துரைக்கு என்ன தேவை வந்தது?  என்பது உங்களது அடுத்த கேள்வி.

பொன்னுத்துரை ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்ததால்,  அவரை தொடர்ச்சியாக யாழ்ப்பாண சமூகம் புறக்கணிக்கிறது. பாடசாலைகளில் அவரை மாணவராக ஏற்க மறுக்கிறது.  இந்தியாவில் இருந்து பட்டதாரியாக வந்து ஊர்காவற்றுறை கத்தோலிக்க பாடசாலையில் அவரது சாதி தெரியாமல் ஆசிரிய பதவி கொடுத்த பின்னர் அவரது சாதி தெரிந்து அவரை அடித்து உதைக்க முற்படுகிறார்கள். இந்துக்கள் மட்டுமல்ல,  கத்தோலிக்க சமயத்தில் கூட புகலிடம் இல்லையென,கம்பளை ஸாகிரா மகா வித்தியாலயத்தில் தனது ஆசிரிய பதவியைப் பெறுகிறார் .

மட்டக்களப்பில் 17 வருடங்கள், திருமணமாகி அங்கே வாழ்ந்தபோதும் யாழ்ப்பாணத்தவன் என்பது  பாதிப்பிற்கான விடயமாகிறது. இதைவிட எஸ்.பொ.வின் வித்துவத்தில் அதிருப்தியடைந்தவர்கள்,  முக்கியமாக முற்போக்கு எழுத்தாளர் கூட்டமும் ஈழத்து இலக்கிய உலகில் மூடிசூடா மன்னர்களாகிய பல்கலைக்கழக பேராசிரியர்கள் கைலாசபதி,   சிவத்தம்பி போன்றவர்களால் தொடர்ச்சியாக பாதிக்கப்படுகிறார்.  அது அவருக்கு மட்டுமல்ல தமிழ் இலக்கியத்திற்கே செய்த அநீதி.

நவீன எழுத்து எனப்படும் மொடேர்ன் ரையிற்றிங்( Modern writing ) 1900 ஆண்டுகளில் ஆங்கில உலகிற்கு வந்தது.

அதில் வர்ஜீனியா வுல்ஃப்(Virginia Woolf), ஜேம்ஸ் ஜொய்ஸ்Jamws Joyce) , டி. எச். லோரன்ஸ்(D.H  Lawrence) மற்றும் டி.  எஸ்.  எலியட்(T.S Eliot) போன்றவர்கள் பாவித்த எழுத்துமுறையில்  மன உணர்வுகளைச் சிந்தனை மூலம் வெளிப்படுத்தல்  முறையை ( Stream of consciences ) எஸ். பொ. தனது சடங்கு,  தீ இரண்டிலும் பாவித்துள்ளார்.

அக்காலத்தில்  இலங்கை,  தமிழகம் எல்லாம்  பாவித்தது   யதார்த்த எழுத்துமுறை. கல்கி சாண்டிலியன் முதலானோர் அதற்கு முந்தைய 18 ஆம் நூற்றாண்டில் வழக்கொழிந்துபோன  கற்பனாவாத எழுத்தைப் பாவித்தார்கள் என்பது வேறு.

அக்காலத்தில் நமது இலங்கை முற்போக்கு  எழுத்தில் வெளிப்பட்டது சோசலிஸ யதார்த்தம்.  அதாவது லட்சியவாதமான எழுத்து முறையாகும்.  உண்மையில் யதார்த்தத்திற்கு ஒத்துவராதது. ரோமன்டிக் காலத்தைச்  சேர்ந்தது.

ரோமன்டிசிசம்,  யதார்த்தம்,   நவீனம் என்பன பரிணாமமடைந்த   மூன்று வகையான  இலக்கிய வகைகள். அதாவது 20 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்துகொண்டு 18 ஆம் நூற்றாண்டுக்கு   ( 200 வருடங்கள்) தமிழ் இலக்கியத்தைப்  பின் தள்ளிய தமிழ் பேராசியர்களுடன் அபிமன்யூவாக எஸ். பொ.  போரிடுகிறார் என்பது மட்டுமல்ல,  இலக்கிய முன்னுதாரணங்களைப்  படைத்தும் காட்டியுள்ளார். 

சமூக மாற்றத்தைப் பின் தள்ளி,  நமது தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் நடந்ததுபோல்  இலக்கியத்தை பின் தள்ளியபோது, அவர்   தனி ஒருவனாகப் போராடி  நவீன பாணியில் தீயையும் சடங்கையும் எழுதினார்.

இவற்றுக்கப்பால் எஸ். பொ.  என்ற எழுத்தாளர் நமக்கு இரண்டு வகையான இலக்கிய எழுத்து வகைகளைக் கொடுத்துள்ளார்.  அந்த வகையில் இலங்கையின் தனிப்பெரும் எழுத்தாக அவர் எழுத்துகள் நிலைத்து நிற்கும்.

17/12/2021 சூம் நிகழ்வில் நினைவு கூர்ந்து பேசியது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: