நவஜோதி ஜோகரட்னம்

லண்டன்
கிழக்கிலங்கை கோளாவில் கிரமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி பாலசுப்ரமணியத்தை என் தந்தை அகஸ்தியரின் மூலமாகவே அறிய வந்தேன். பாரிசில், எங்கள் வீட்டில் தங்கியிருந்து முற்போக்கு இலக்கியம், அரசியல் விவகாரம் குறித்து நீண்ட நேரம் உரையாடி மகிழ்ந்திருக்கிறார்கள். ஜேர்மனியில் நடைபெற்ற இலக்கிய சந்திப்பின்போது அகஸ்தியருக்கு வழங்கப்பட்ட கௌரவ நிகழ்ச்சியில் ராஜேஸ் பாலாவும் கலந்து கொண்டு சிறப்பித்திருக்கிறார். அதே போன்று லண்டனில் அகஸ்தியர் நூல் வெளியீட்டின்போதும் ராஜேஸ் பாலா அந்த வெளியீட்டுக் கூட்டங்களை ஒழுங்குபடுத்துவதில் முன்னின்று செயற்பட்டிருக்கிறார். அகஸ்தியரையும் ராஜேஸ் பாலாவையும் இணைத்த ஒரு புள்ளி இலக்கியத்தில் அவருள் கொண்டிருந்த முற்போக்கு அணுகுமுறையாகும். ஒரு பெண் எழுத்தாளராக பெண்ணிய சிந்தனையோடு முற்போக்கு பாதையில் பயணித்ததிற்கு அகஸ்தியர் உயர்ந்த ஒரு கௌரவம் கொடுத்திருந்தார். ராஜேஸ்வரி பாலா அவர்கள் மனிதர்கள்மீது மிகுந்த அக்கறை, மனித நேயம் கொண்டவர்.
பெண்ணிய எழுத்துக்கள் குறித்து ராஜேஸ்வரி அவர்களின் கருத்துக்கள் சற்று வித்தியாசமாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது. ‘திருவள்ளுவரிலிருந்து வைரமுத்துவரை எல்லோரும் பெண்களைத் தங்கள் பாதிப்புரியவர்கள் என்றுதான் படைக்கிறார்கள். கம்பரும், கண்ணதாசனும் தாங்கள் படைத்த இலக்கியங்களில் பெண்களின் கொங்கைகளையும், கொவ்வை இதழ்களையுமே கண்டார்கள். குழந்தைப்பேற்றின் வேதனையையும், மாதவிடாயின் நோவும் மறைக்கப்பட்ட விஷயங்களாகவே இருந்தன. மேலைநாட்டு ஆண் எழுத்தாளர்களும் இதைத்தான் செய்கிறார்கள். தமிழின் சிறந்த நாவல்கள் எனப்படும் ‘அம்மா வந்தாள்’ ‘பள்ளி கொண்ட புரம்’ போன்ற கதைகளில் வரும் சோரம் போன பெண்களைத்தான் ஆண் எழுத்தாளர்கள் படைக்க முடிந்தது. இம்மாதிரியான படைப்புக்கள் ஒரு விதத்தில் ஆண்களின் இச்சையைத்தான் காட்டுகின்றது. பெண்மையின் ஒரு பகுதியை பற்றிய அதாவது உடம்பைப் பற்றிய கதைகளை மட்டுமே விவரித்துக் காட்டுகிறது. பெண்களின் உடம்பு, சமயம், சமுதாயம் என்ற அமைப்புகளைப் பிரதிபலிப்பதற்காக ஆண்களால் ஆசிக்கப்படுகின்றது. பெண்களின் உடம்பு (Sex) உயிரியல் ரீதியாகவும், (Gender)சமூகவியல் ரீதியாகவும் பகுக்கப்படுகின்றது’ என்று ராஜேஸ் பாலா கூறுகின்றார்.
அத்தோடு மேலை நாடுகளில் இன்று பெண்ணிய எழுத்தாளர்கள் பலர் பெண்களைப் பற்றியும் பெண்களுக்காகவும் எழுதுகிறார்கள். இந்தியாவிலும் இலங்கையிலும் விழிப்புணர்வு கொண்ட பெண் எழுத்தாளர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். பெண்ணிய எழுத்துலகில் மாற்றங்கள் வருவதற்குக் காரணமாக மிச்சேயில் பூக்கோவும், ஃபிராய்டும் எங்களிடம் பிறக்க எத்தனையோ வருடங்கள் பிடிக்கும். இன்று பெண் எழுத்தாளர்கள் தங்களுக்குப் போடப்படும் தடைகளைத் தாண்டி, எழுப்பப்படும் கிண்டல்களைச் சட்டை செய்யாது ஆரோக்கியமான ஒரு எழுத்துச் சூழலை உருவாக்க வேண்டும். பெண்களுக்கு எழுத எத்தனையோ இருக்கின்றன. எங்களிடமிருந்து ஒரு சீமொன்டிபூவா(Simon de Beauvoir) , ஜேமன் கிறியா, எமிலி மார்ட்டின்(Emily Martin) (நுஅடைல ஆயசவin), டொனா ஒரலேய், அஞ்சலா டேவிஸ், ஒரு ரோணி மொறிஷன் (Toni Morrison)) பிறக்க வேண்டும். பெண்களுக்கு ஒரு சரித்திரம் இருக்கிறது. அதை ஆண்கள் நிழலாக்கலாம். ஆனால், அதனை பெண்கள் நிஜமாக்க வேண்டும் என்ற உறுதியுடன் பெண் எழுத்துக்களை எழுதியாகவேண்டும் என்கிறார் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்.
ராஜேஸ்’ பாலாவின் படைப்புக்களை சற்றுக் கூர்ந்து கவனித்தால் பெண்களின் குரல் சற்று வித்தியாசமாக ஒலித்திருப்பதை என்னால் உணர முடிகிறது.
ராஜேஸ்வரியின் அண்மையில் வெளியான ‘நேற்றைய மனிதர்கள்’ என்ற சிறுகதைத் தொகுப்பிலுள்ள 12 சிறுகதைகளையும் அவரின் எழுத்துக்கள் மூலம் பயணித்திருந்தேன். ஏன் பயணித்தேன் என்று சொல்கிறேன் என்றால் நான் நேரில் பார்த்திருக்காத பல விடயங்களை இவரது கதைகள் தொகுத்துத் தருகின்ற பாங்கு அலாதி என்று கூறுவேன். உண்மையில்; நேரில் பார்க்காத கேள்விப்பட்டவற்றை, என் சொந்த தேசத்தின் மக்களை குறிப்பாக பெண்களின் வலிகளை யதார்த்மாக சித்தரித்திருக்கிறார். கதை என்பது இன்பம் பயக்கும் ஒரு கலை வடிவம் மட்டுமல்ல அது செய்தி சொல்வதற்கான ஓர் ஊடகமும் கூட என்பதை இவரின் கதைகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. மனிதர்களைப் போலவே கதைகளும் உலகமெல்லாம் பயணம் செய்து கொண்டுதான் இருக்கின்றது. அந்த வகையில்
நான் முதலில் ஹிட்லரின் காதலி என்ற கதையைத்தான் முதலில் வாசித்தேன். உலகமே அவரில் காதல்தானே! சிறந்த பேச்சு வன்மை கொண்ட ஹிட்லர் எந்தக் கூட்டத்திலும் பெண்களைப் பற்றி அழகாகப் பேசுவார். குழந்தைகளைக்கூட கொஞ்சுபவர் தானே! பொதுவாகக் ஹிட்லர் பற்றி எல்லோருக்கும் தெரியும் தான். ஆனால் பெண்களைப் பெரிய பதவியில் வைத்திருப்தை விரும்பாதவர். ஜேர்மன் நாட்டின் வளர்ச்சிக்கு தாய்மார் வீட்டிலிருந்து குடும்பத்தைப்பாதுகாப்பது தேசிய கடமை என்று பிரகடனப் படுத்தியுள்ளார். ராஜேஸ் பாலா அவர்கள் ஒரு நாயின் சம்பாஷனை மூலம் கதையை நகர்த்;திச் செல்வது மிகச் சிறப்பாக உள்ளது. ஹிட்லா பற்றிய விடயங்களை நாம் அறிந்திருந்தாலும் இதனை வாசிக்கும் போது ஹிட்லரின் முழுமையான ஒரு வாழ்க்கைச் சக்கரம்போல் அனைத்தையும் தொகுத்துச் சிறுகதை வடிவத்துள் வழங்கிய யுக்தி பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும். நாய் நன்றியுள்ளது என்பதனை எமது குடும்பம் பாதிக்கப்பட்டபோது எமது வீட்டு நாயின் செயலை அண்மையில் கவிதையாக்கியிருந்தேன். பதிவுகளில் கிரிதரன் உடனேயே அதனைப் பதிவு செய்திருந்தார் என்பதும் நினைவில் வந்து போகிறது
அண்மையில் பெண்கள் அமைப்பில் நான் பல பெண்ணியவாதிகளை பார்த்த மகிழ்வில் அவர்களின் சிறப்பான பேச்சுக்களை பாராட்டியிருந்தேன். பாலியல் வன்முறை செய்யப்பட்ட ஒரு இளம்பெண்ணை நான் லண்டன் பிபிசி செய்தியில் பார்த்த விடயத்தை கூறியபோது. எனது வார்த்தைப் பிரயோகத்தை மாற்ற வேண்டும் என பார்வையாளராக இருந்த ஒரு பெண் வந்து உடனேயே கண்டனம் தெரிவித்தார். நான் பிழையான சொற்பிரயோகம் எதுவும் செய்யவில்லையே!. ஆனால் வேறு ஒரு முக்கிய கூட்டத்தில் நான் பங்கு பற்ற வேண்டி இருந்ததால் நான் ‘மன்னிக்கவும’ ; என்றுவிட்டு அகன்றுவிட்டேன். அதைக் கேட்டுக்கொண்டிருந்த வேறு ஒரு பெண் நீங்கள் ஒரு தவறான சொற்கள் எதுவும் சொல்லவில்லை என்று பின்னர் போன் செய்து கூறியிருந்தார். இப்படியான பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் ஆனால். ராஜேஸ்வரி பாலாவின் ‘காதலுக்கு ஒரு போர்’ என்ற ஒரு நீண்ட கதையை வாசித்த போது நான் கூறிய சொல்லை அவர் எழுத்தில் போட்டிருந்தார். இன்றும் உலகளாவிய ரீதியில் பெண்களுக்கு நடைபெறும் விடயத்தைத்தான் கூறினேன்;.
‘உலகத்தில் நான்காவது பிரமாண்டமான இராணுவப் படையை வைத்திருக்கும் இந்தியப் படை புலிகளைத் தேடி வந்து புலிகளைப் பிடிக்க முடியாததால் பொது மக்களைக் கண்டபாட்டுக்குக் கொலை செய்;தார்கள். ஆயிரக்கணக்கான பெண்கள், ஐந்து வயதிலிருந்து எழுபது வயதான பெண்களை இந்தியப் படையினரின் பயங்கரமான பாலியல் கொடுமைகளுக்கு ஆளானார்கள். இலங்கை இராணுவம் பல வருடப் போர்க்காலத்தில் தமிழர்களுக்குச் செய்யாத அளவிட முடியாத பயங்கரக் கொடுமைகளை இந்தியப் படைகள் ஒரு சில வாரங்களில் செய்து முடித்தார்கள்’ என்று ராஜேஸ் கூறுகின்றார்.
ஹெலன் சிசூ (Helene Cixous) என்னும் பிரெஞ்சு பெண்ணியச் சிந்தனையாளர் இப்படி பின்வருமாறு கூறுகின்றார். இவர் பிரெஞ்சு நாட்டின் பெரும் அறிஞர்களான ஜக் டெறிடா (Jacques Derrida ), ஜக் லெகன் (Jacques Lacan)) , மிஷல் வுக்கோ ((Mishel Foucalt) போன்றவர்களுடன் சேர்ந்து பயணித்தவர் :
‘உன்னையே நீ எழுது. உன் உடம்பின் குரல்களுக்கு செவிசாய் அப்பொழுதுதான் வகுத்துரைக்க முடியாத உனது நனவிலி மனதிலுள்ள மூலவளங்கள் எல்லாம் பொங்கிப் புறப்பட்டு வரும். எழுத்துலகில் இன்னும் லிங்கமைய மரபில் பெண்களுக்குக் கற்பிக்கப்பட்ட குணங்கள் தூக்கி எறியப்படாமல் இருப்பது வெட்கப்படத்தக்க ஒன்றாகும். பெண் அவளுக்கே உரிய பொருட்களையும் அவளுக்கே உரிய உறுப்புக்களையும் ஆழமாகப் புதையுண்டு முத்திரையிட்டுக் கிடக்கும் அவளது உடம்பு சார்ந்த மிகப்பெரிய ஆட்சிப்பரப்பையும் மீண்டும் ஆதி வலுவோடு திரும்பப்பெற வேண்டும். தன்னைத்தானே தணிக்கை செய்வதிலிருந்து கட்டாயமாக விடுதலை பெற வேண்டும்’ என்கிறார். இத்தகைய தாக்கம் எமது தமிழ் இலக்கியப்பரப்பிலும் கால் கொண்டது என்றுதான் கூறத் தோன்றுகின்றது. ராஜேஸ் பாலாவின் இன் சிறுகதைகளிலும் இவை மிகiயாகவே காணப்படுவதை என்னால் அதானிக்க முடிகின்றது.
இவரது ‘மேதகு வேலுப்போடி’ என்ற சிறுகதையும் ஒரு குறுநாவல் போன்றது என்று கூறலாம் ஆனால் அவர் சிறுகதைக்குள் அக்கதையை அடக்கியிருக்கின்றார். கிழக்கு மாகாணத்தில் செய்வினை, சூனியம், பேய் பிசாசுகள் ஓட்டுபவர்கள் இருக்கிறர்கள் நான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் கோளாவில் என்ற இவரது கிராமத்தில் பாம்பு மந்திரம் சாவுகளா? என்று விடாப்பிடியாக வாசித்து அறிந்துகொண்டேன். எனக்கு இதில் நம்பிக்கையே இல்லை என்றாலும் இவரின் கதை பயணித்த விதத்தில், பெண்களின் உணர்வுகளை விவரித்த விதத்தில் ஆடித்தான் போனேன். அண்மையில் நான் பார்த்த ஜேய் பீம் படத்தையும் காட்சிகளாகி விரிந்தன. அந்தப் படம் உடம்பை உலுக்கியது. (பேட்டி) பொன் மாரி விழிப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். பேராசிரியர் கல்யாணி பா.ம.க தோழர்கள் அதனைப் பார்த்தார்கள் என்று கூறியிருந்தாh.
ராஜேஸ் பாலாவின் சிறுகதையில் சித்திர வதைகள் தலைகளை வெட்டி .. என்று இப்படி எழுதுவதற்கும் ஒரு பெண்ணுக்கு மனத்துணிவு என்பதை விட மனவலிமை வேண்டும். இடையில் நான் வாசிப்பதை நிறுத்தி விட்டேன். ஆனால் தொடர்ந்தேன்… வேலுப்போடியார் மனைவி சந்திரவதனாவை அடித்துத் துன்புறுத்திய கொடுமைகள், மகள் மல்லிகாவின் கணவன் மந்திரம் ஏவிவிட்டு வருத்தம் என்று கூறுவதையும், இறுதியில் ஆனால் வலிமையான மடைப்பெட்டியை இழந்து வலிமையற்று வெறும் மணல் புழுவாய் நெளிந்தார்’ என்று கதையை முடிக்கிறார் ராஜேஸ்.
அடுத்து சமூக, அரசியல், வரலாற்று நிகழ்வுகள், பெண்ணை அடிமையாக, பணயப் பொருளாக, ஜடப்பொருளாக, நடத்திய தன்மையும், ஒரு இரண்டாம்தர நிலையிலேயே பெண்ணை வைத்திருந்ததையும் ‘டார்லிங்’ என்ற இவரது சிறுகதை விவரிக்கிறது. ஆணாதிக்கச் சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட கருத்துக்கள் பெண்கள் விழிப்புணர்வு பெற்றதன் பலனாக கேள்வி கேட்;கப்படும் நிலையையும், மீண்டும் அதே அடிமைச் சகதிக்குள் பெண்மனம் விரும்பாத தன்மையையும் இக்கதை வெளிப்படுத்துகின்றது. அக்கதையின் ஞானேஸ்வரி என்ற பெண்ணின் மன உணர்வுகளை தத்ரூபமாக வெளிப்படுத்துகிறார். அவரது காதலனை தமிழ்த் துரோகியாகக் காட்டிக் கொடுத்து பழிவாங்கியதையும், அவள் இறந்து அழியும்வரை அவளின் தொலைந்துவிட்ட பாதி உயிர் – யாழ்ப்பாணத்தில் அவளின் ‘டார்லிங்’ கிருஷ்ணாவின் நினைவில் ஊசலாடிக் கொண்டிருந்தது என்று கதையை நிறைவுசெய்கின்றார் ஆசிரியர். இப்படியாக இவiது கதைகள் எல்லாமே பெண்களின் உயர்வுகளையும் உரிமைகளையும் உணர்த்துகின்றன.
ஆண்களை முற்றாக நிராகரிப்பதைத் தவிர்த்து தோழமையும் புரிதலும் கொண்டவரோடு இணைந்து செயலாற்றிப் புதிய விடுதலைக்கான போராட்டத்தை எடுத்துச் செல்லலாம்தானே! என்று எண்ணத்தோன்றுகின்றது. எமது லண்டன் எலிசபேத் மகாராணியாரை நாம் பார்த்த போதெல்லாம் மகாராணியார்தான் எல்லாம் முன்னின்று செய்வார் ஆனால் துணைவர் பிலிப் அவர்கள் பின்னால் சிரித்துக்கொண்டு செல்வார். அவர் இப்போ இல்லை. எல்லோருக்கும் தெரிந்த செய்தி. அவர் ராணியாரை முன்னிலைப்படுத்தித்தானே செயற்பட்டார்.
இன்று எமது பெண்ணியம் பற்றிய நிகழ்ச்சியை டாக்டர். நடேசன் ஒருங்கிணைத்து வழி நடாத்திக்கொண்டிருக்கிறார் எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் அறிமுக உரையை எமக்கு வழங்கியது மாத்திரமல்ல ‘புலம்பெயர் தமிழ் இலக்கியத்தின் ஊற்றுக்கண்… ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் என்ற ஒரு அருமையான கட்டுரையை பத்திரிகைகளிலும் இணையத்தளங்களிலும் பார்த்து மகிழ்ந்தேன். ஆண்கள்தானே! எமக்கு ஊக்கமளித்து உயர்ந்த இடத்தில் வைக்கின்றார்கள். அகஸ்தியர்கூட பெண்களை மிகவும் உயர்ந்த இடத்தில் பார்த்ததை நான் அவதானித்துள்ளேன். அது போன்று லண்டனில் விமர்சகர் மு.நித்தியானந்தன் அவர்களையும் குறிப்பிட்டுக் கூறலாம் ராஜேஸ் பாலாவின் நூல்களை சிலாகித்துப் பேசியதை நான் பார்த்திருக்கிறேன்.
நேரத்தைக் கருத்தில் கொண்டு சந்தர்ப்பம் வழங்கியமைக்கு நன்றி கூறி ராஜேஸ் பாலா அவர்கள் தொடந்து எழுத்துலகில் பயணிக்கவேண்டுமென விரும்பி விடைபெறுகின்றேன்
4/12/2021 நடந்த சூம் நிகழ்வில் பேசியது
மறுமொழியொன்றை இடுங்கள்