
கார்த்திகா முல்லைத்தீவில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்பாக கிளிநொச்சி முகாமுக்கு வந்திருந்தாள். அங்கு அவள் கண்ட காட்சிகள், பிணங்களில் இருந்து வந்த துர்நாற்றம், பாதிக்கப்பட்டவர்களின் அழுகுரல்கள் என்பன அவள் மனதில் ஆழமாக பதிந்து கனவிலும், நினைவிலும் கரப்பான் பூச்சிகளாக தொடர்ந்தன. விலகிச் செல்ல முடியவில்லை. சதாமுகத்தை மொய்த்தன. இரண்டு நாட்கள் மட்டுமல்ல எத்தனை வருடங்கள் கடந்தாலும் அவை அவளை விட்டு தொலையாது என்ற உணர்வைக் கொடுத்தன. இது போன்ற அனுபவம் அவள் வாழ்க்கையை எதிர்கொள்ளவரும் என அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. அவளுக்கு இயற்கையின் சீற்றம் ஆவேசமான புதியமொழியாகத் தெரிந்தது.
மனிதர்கள் அகந்தை, பொறமை நோய்களால் பீடிக்கப்பட்டு இருப்பதை பார்த்து பொறுத்தது போதும் என பொங்கிய சமுத்திரத்தின் சீற்றம் எப்படி இருக்கும் என்பதை மனிதர்களுக்கு புரிய வைப்பதற்கான நேரடி விபரிப்பு போலிருந்தது அந்த சுனாமி. சில நிமிட நேரத்தில் குறும்விவரணத்தை நடத்திக்காட்டிவிட்டு மீண்டும் கடலாக ஒதுங்கி அமைதியடைந்திருந்தது.
இயற்கையின் பொறுமையை மனிதர்கள் சோதித்து பார்க்கும்போது ‘இதோ எனது சக்தியை பாருங்கள்’ என்று சமுத்திரம் எச்சரித்ததா? ‘உங்கள் கொலைகள், அனர்த்தங்கள், அழிவுகள் எல்லாம் எனக்கு ஒரு சிறுபிள்ளை விளையாட்டு. விளையாட்டு என்றால் இதுவே விளையாட்டு பாருங்கடா! சமுத்திரத்தின் தாண்டவத்தை எத்தனை பேர் புரிந்து கொண்டார்கள் என்பதை எதிர்காலம்தான் சொல்லும்? நான் ஆதிகாலத்திலும் செய்ததை வரலாறாக படித்துக்கொண்டாடுகிறீர்கள். ஒவ்வொரு உயிரிலும் ஒற்றை ஜோடியை மட்டும் நோவாவை காப்பாற்றவைத்து விட்டு மீதியை அழித்த செயலிற்கு வானவில்லை சாட்சியாக வைத்தேனே? அந்த வானவில் ஏதும் உங்களுக்கு சொல்லவில்லையா? வரலாற்றை அறிந்தும் கற்காத உங்களை வேறு எப்படி திருத்துவது?
எதற்காக அப்பாவி மக்களும் குழந்தைகளும் தண்டிக்கப்பட வேண்டும்? அவர்கள் என்ன பிழை செய்தார்கள்? குற்றம் செய்தவர்கள் மட்டும் தண்டிக்கப்படுவதுதானே நியாயம்? இயற்கையும் இலங்கையின் அரச படைகள் போல் அப்பாவிகளை தண்டித்து செயல்படுகிறதே? இயற்கையின் சீற்றத்திற்கு இறைவன் காரணமானால் இதைவிட அநீதி இருக்காதே?
நீங்கள் மட்டும் பாரம்பரியம் பேசவில்லையா? அப்பனின் சொத்திற்கு பாத்தியதை கொள்ளவில்லையா? நல்லவற்றிற்கு உரிமை கொண்டாடும் வேளையில் அநீதிகளுக்கு யார் பொறுப்பு ஏற்பது? இயற்கையில் இதுவே நீதி. இதுவே தர்மம்.
நான் பார்த்த முல்லைத்தீவுக் கரையோரத்தைப் போல் மற்ற இடங்களும் இருக்குமே! அங்கெல்லாம் வாழும் ஏழை மனிதர்கள் என்ன பாவம் செய்தார்கள்? அவர்கள் தாங்குவார்களா?
பல கோணத்தில் கார்த்திகா சிந்தித்தாள். அப்பா அவளுக்கு சொல்லிப் போதித்த பொதுஅறிவு, தர்மம் மற்றும் அறம் அவளது மனச்சாட்சியாக நிலைகொண்டது. அவளும், அவளது மனச்சாட்சியும் எதிரும் புதிருமாக வெற்றியின்று வாதிட்டார்கள். வெற்றி தோல்வியற்ற வாதம். இறுதியில் சோர்வடைந்தாள்
ஒரு வாரம் முல்லைத்தீவில் சுனாமி நிவாரணப்பணியில் ஈழ அகதிகள் அமைப்போடு இணைந்து ஈடுபட்டிருந்தாள். மரணம் நடந்த வீட்டுக்குச் சென்று வந்தால் குளிக்க வேண்டும் என்று சிறு வயதிலே அம்மாவால் திருப்பித் திருப்பி சொல்லப்பட்டிருந்ததால் முகாமுக்கு வந்ததும் சவர்க்காரத்தை முழுமையாக தேய்த்துக் குளித்தாள்.
ஒரு மரணமா நடந்தது?
“முழு இயக்கமே இந்த சோப்பையும் கிணற்றையும் நம்பியிருக்க நீ மட்டும் சோப்பைத் தேய்த்து கிணத்துத் தண்ணியையும் முடித்தால் எப்படி?” என்றாள் செல்வி.
“ஒரு செத்த வீட்டிற்கா போனோம்? ஊரே செத்திருந்தது. இல்லையா?”
உடலைக் கழுவும் சவர்க்காரம் மனதை கழுவுமா? அதற்கு இந்த லைஃபோய் சவர்க்காரம் உதவுமா? இந்த சுனாமியில் எவ்வளவு மனிதர்கள் இறந்திருக்கிறார்கள்? வாழ்விலே முதல்த் தடவையாக மரணத்தை பார்த்திருக்கிறாள். அதுவும் எத்தனை? நூற்றுக்கு மேற்பட்ட நிர்வாணமான உடல்கள். விறைத்து வீங்கி நீலம் பாரித்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என பேதமற்று சமரசமாக அடுக்கப்பட்டிருந்தன. பலர் மீனவர்கள், மீன்களால் கடிக்கப்பட்டு அங்கங்களை இழந்திருந்தார்கள். மீன்களுக்கு, மீனவரை பழிவாங்கும் சந்தர்ப்பம் அரிதாகத்தான் கிடைக்கும். அது கிடைத்திருக்கிறது. அவை குதூகலத்துடன் மற்றைய கடல் வாழ் உயிர்களுடன் சுற்றம் சூழ விருந்தோம்பியிருக்கின்றன.
இயக்கத்தில் சேர்ந்து முதல் மூன்று மாதங்கள் பயிற்சி முகாமில் எதைப் பற்றியும் சிந்திப்பதற்கு நேரமில்லை. உடற்பயிற்சிகள் பின்பு ஆயுதப் பயிற்சி மிகுதி நேரத்தில் உணவு தயாரித்தல், முகாமை சுத்தப்படுத்தல் என நேரம் கரைந்து விடுவதால் உடல் களைப்பில் படுத்த சில நிமிடத்தில் தூக்கம் இழுத்துக் கொண்டு கனவுகளின் உலகத்தில் இறக்கிவிடும்;. அங்கு கோட்டை கொத்தளங்களாக புதிய ஈழம் பல வர்ணத்தில் திரைப்படமாக விரியும். வண்ண வண்ண கனவுகளில் கார்த்திகா தோகை மயில்போல் பவனி வந்தாள். பயிற்சி முடிந்தபின் அரசியல் பிரிவில் மகளிர் பிரச்சாரப் பகுதியில் இணைந்த பின்பு சிறிது நேரம் கிடைத்தாலும் அது படிப்பதிலும் பரப்புரை விடயங்களை தயார் செய்வதிலும் கழிந்துவிடுகிறது.
இறப்பையோ நோயையோ அல்லது வாழ்வின் துன்பங்களையோ அவள் எண்ணிப் பார்க்கவில்லை. ஒரு நெருக்கடியில் இருந்து தப்புவதற்கு வீட்டைவிட்டு ஓடிவந்ததால் ஏற்பட்ட வைராக்கியத்தோடு பயிற்சிக் காலத்தின் கஸ்டங்களைப் பொறுத்திருந்தாள். பயிற்சியின்போது தோள்கள் விரிந்து மார்பிலும் தொடைகளிலும் தசைகள் இறுகுவதை தொட்டுப் பார்த்து ஆனந்தமடைந்தாள். சிறிது தூங்கிய மார்புகள் நிமிர்ந்து இறுகியதை தோழிகள் சொல்லிக்காட்டியபோது வெட்கத்தில் சிரித்தாலும் உள்ளே மகிழ்ந்தாள். உடலின் இரசாயன, பௌதீக மாற்றங்கள் அவளுக்கு பெருமையாக இருந்தன. போர்நிறுத்தம் நிலவிய சமாதான காலமானதால் இயக்கத்தில் அதிக திருமணங்களும் குழந்தைப் பேறுகளும் நிகழ்ந்தன; அத்தகைய மூத்தபோராளிகளைக் கண்டபோது அவளுக்கு போர்காலத்து அழிவுகளை நினைக்க முடியவில்லை. மாவீரர் சமாதிகள், கால், கை, கண்களென அங்கங்களை இழந்த போராளிகள் அவள் எண்ணத்தில் நிஜம் அற்ற நிழல்களாக மட்டும் தோன்றினர்.
வானத்தில் இறக்கையை நேர்கோட்டில் வைத்தபடி பறந்த பறவையொன்று மரக்கிளையில் மோதி காயத்துடன் புவியில் வீழ்ந்து உறைபனியில் புதைந்தது போன்று இருந்தது சுனாமி அழிவுகள். இதுவரை இருந்த அவளது கனவுலகத்தை முற்றுப்புள்ளியிட்டு மூடியது. சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களது துன்பங்களை பார்த்ததும் அவர்கள் நிலையில் நான் இருந்தால் என எண்ணும் சிந்தனை கார்த்திகாவை கருநிழலாக மூடியது.
கிளிநொச்சிக்குப் பதிலாக முல்லைத்தீவில் அந்த கடற்கரையோரத்து முகாமில் நான் இருந்திருந்தால் எனது பிணமும் இப்பொழுது உடையற்று ஊதிப் பெருத்திருக்கும். எந்தச் சமரிலும் பங்கு பற்றாது நாட்டுக்கும் வீட்டுக்கும் பிரயோசனமற்று இறந்திருப்பேன் என்ற நினைவில் கண்கள் ஈரமாகியது. அம்மாவின் மடியையும் தோள்களையும் நினைத்தாள். துன்பத்தின்போது அம்மாவை விட ஆறுதலானது உலகத்தில் இல்லை.
மரணித்த உடல்களில் இருந்து வெளிச்சென்ற உயிர்கள் பேய்களாக அவளை துரத்துவதுபோல் இருந்தது. எல்லோரும் எத்தனை ஆசைகளைத் தேக்கி வைத்தபடி எதிர்காலக் கனவுகளோடு வாழ்ந்திருப்பார்கள்? சிதைந்த அந்தக்கனவுகளுக்கு யார் பதில் சொல்வது?
கடந்த மாதம் முருங்கனுக்கு சென்று என்னால் சேர்க்கப்பட்ட மூன்று பெண்கள் நல்ல வேளையாக முல்லைத்தீவு கடலில் இருந்து சிறிது தூரவிருந்த முகாமில் வைக்கப்பட்டிருந்தார்கள் என்பது மட்டுமே சிறிது ஆறுதலான செய்தியாக இருந்தது.
செல்வியுடன் மீட்புப்பணிக்காக சென்றிருந்தபோதுதான் சுனாமியின் கோரம் புரிந்தது. அவள் இரவு சென்று முகாமில் தங்கிவிட்டு அதிகாலை ஐந்து மணிக்கு கடற்கரை நோக்கிச் சென்றாள். கிழக்கே இன்னமும் ஆதவன் எழாதபோதும் கண்ணுக்குத் தேவையான வெளிச்சம் தெரிந்தது. மோட்டார் சைக்கிளில் கடற்கரையை சென்றடைந்தனர். தலைக்கு மேலாக ஏராளமான காகங்கள் கரைந்தபடி பறந்தன.
“என்னடி செல்வி, இவ்வளவு காகங்கள். வாழ்க்கையிலே காணவில்லை?”
“நான் நினைக்கிறன் சாப்பாட்டுக்கு கடற்கரைக்கு போகின்றன. காலை நேரத்தில் மீனவர்கள் மீன்களை வெட்டி குடல் எறிவதும் வலையை சுத்தப்படுத்துவதும் நடப்பதால் இவற்றிற்கு உணவு கிடைக்கிறது.”
“உனக்கு எப்படித் தெரியும்?”
“நான் யாழ்ப்பாணம் காக்கைதீவு அருகால் பஸ்சில் போனபோது பார்த்தேன்”
இருவரும் கடற்கரையை அடைந்தபோது இதுவரை கேள்வி ஞானமாக இருந்த விடயங்களை நேரில் காட்சிகளாகப் பார்ப்பது எவ்வளவு துன்பத்தைத் தரவல்லது என்பது புரிந்தது.
கடற்கரையில் இருந்து இரண்டு கிலோமீட்டர்கள் தூரத்திற்கு கடல் வந்ததாக சொன்னார்கள். அதற்கு அடையாளமாக கட்டிடப்பொருட்களான மரங்கள், ஓடுகள், ஓலைகள் மற்றும் வீட்டுப் பொருட்கள் தளபாடங்கள், சமையல் பாத்திரங்கள் உரல்கள், உலக்கைகள் என எங்கும் பரவிக்கிடந்தன. மீனவர்களின் வள்ளங்கள் அடித்து ஒதுக்கப்பட்டிருந்தன. ஒரு படகு பெரிய பாலை மரத்து கிளைகளுக்கு இடையே முன்பகுதி செருகப்பட்டு அதன் கீழ்ப்பகுதி நிலத்தில் தொட்டபடி நின்றது. அந்தப் படகின் அணியத்தில் யாரோ பெண்ணினது சிவப்புச் சேலை சுற்றப்பட்டிருந்தது. நிலத்தைத் தொட்ட கீழ்பகுதியில் யாரோ ஒருவரது மரப்பெட்டி திறந்தபடி கிடந்தது. அந்த மரப் பெட்டிக்குள் அரைப்பகுதிக்கு மணல் அடைந்து இருந்தது. மணலுக்குள் பாதி புதைந்தபடி பிளாஸ்டிக் பொம்மையின் சிவப்பு தலை தெரிந்தது. அந்த இடத்தை சுற்றி சிறிய மரங்கள் முறிக்கப்பட்டும் தென்னை மரங்கள் சாய்க்கப்பட்டுமிருந்தன. வேம்பு,பாலை போன்ற பெரிய மரங்கள் மட்டும் எதிர்த்து சாட்சியாக நின்றன. பாடசாலைக்குச் செல்லும் அவசரத்தில் சிறுவர்களால் கிறுக்கப்பட்ட குட்டிச் சுவர்போல் கடற்கரை காட்சியளித்தது.
வளர்ந்த செடிகள் பற்றையாக அடர்ந்து தோள் உயரத்தில் இருந்த ஒரு இடத்தில் சிறிய ஃபைபர் கிளாஸ் வள்ளங்கள் பல கோணங்களில் கடல் அலைகளால் எடுத்தெறியப்பட்டு கிடந்தன. அவற்றின் மேல் முறிந்த மரக்கிளைகள் தாறுமாறாக கிடந்தன. அருகில் இரண்டு பெரிய இரும்புக் கேடர்கள் நீளமாக கடற்கரையில் இருந்து கடல்வரையும் சென்றது. கடற் புலிகளின் இறங்குதுறையாக இருக்கலாம் என ஊகிக்க முடிந்த ஒரு இடத்தில் இயக்கத்தினரை மட்டுமே காணமுடிந்தது.. ‘மக்கள் இல்லையா? என்றபோது ‘ இந்த இடங்களில் மக்கள் வசிக்கவில்லை. இயக்க பயிற்சிகள் மற்றும் ஆயுதங்களைக் கொண்டு வருவது மட்டும் நடக்கும் இடம் எனப் பதில் வந்தது.
அங்கிருந்து அவள் முதலாவதாக சென்ற இடம் முல்லைத்தீவு கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த கடற்புலிகளின் பயிற்சி முகாம். வழக்கமாக சென்றி, பயிற்சி மைதானம், பங்கர் கொட்டில் என இருக்கும் விஸ்தீரணமான அந்த இடத்தில் மணல்மேடு சுற்றி இருந்தது. அது ஏற்கனவே சுத்தமாக்கப்பட்டிருந்தது. நடுவில் கிணறு போன்று பத்தடி ஆழமான குழி தோண்டப்பட்டு இருந்தது. அங்கு நூற்றுக்குமேல் சிறுவர்கள் கடற்புலிகளின் பயிற்சிக்காக கொண்டு வரப்பட்டிருந்தார்கள். அவர்களில் பலர் இறந்திருக்கிறார்கள். அவர்களின் பல உடல்கள் வெளியே எடுக்கப்பட்டன. அவை ட்ரக்ரரில் ஏற்றி அனுப்பப்பட்டதாக சொன்னார்கள். ஆனாலும், இன்னும் பலரைக் காணவில்லை. அவர்கள் கடலோடு மீண்டும் கொண்டு செல்லப்பட்டார்களா இல்லை மண்ணில் புதைந்தார்களா என்பது சந்தேகமாக இருப்பதால் இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள பிரதேசத்தை உழவு இயந்திரத்தால் ஆழமாக உழுவதற்கு திட்டம் இருப்பதாக தெரிந்தது.
கடலோரத்தில் புதர்களுக்கு இடையில் பாதுகாப்பாக மறைத்து வைத்திருந்த பல வள்ளங்கள், புதைத்து வைத்திருந்த ஆயுதங்கள், பல மோட்டார் வள்ள எஞ்ஜின்கள், கடற்கரையருகே இருந்த பட்டறைகள் எல்லாம் அழிந்து விட்டதாக கடற்புலிகளில் ஒருவர் கூறினார்.
மக்களது நிவாரணப்பணியில் பங்கேற்பதற்காக மகளிர் அமைப்பினால் வரவழைக்கப்பட்டிருந்ததால் புதுக்குடியிருப்பிற்கு சென்ற கார்த்திகாவிற்கும் செல்விக்கும் மக்களுக்கு உணவு, தண்ணீர், உடை கொடுக்கும் அகதிகள் உதவியமைப்போடு சேர்ந்து வேலை செய்யும்படி பணிக்கப்பட்டது.
பல குடும்பங்களில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்திருந்தனர். ஒரு குடும்பத்தில் பத்துப்பேர் கடலால் மூடுண்டு இறந்துவிட ஐந்துவயதுச் சிறுவன் மட்டும் தப்பி பிழைத்திருந்தான். அம்மாவைப் பார்க்கவேணும், ஆச்சியை பார்க்கவேண்டும் என கேட்டுக்கொண்டு முகாமில் சுற்றி வந்த அவனை செல்வி தூக்கியபடி திரிந்தாள். அவளுக்கு ஒரு தம்பி அந்த வயதில் இருந்தான். சிறுவயதில் அவனைத் தூக்கி வளர்த்ததை நினைத்துக் கொண்டாள். செல்வி யாழ்ப்பணத்தில் மானிப்பாயை சேர்ந்தவள். இயக்கத்தில் விரும்பி வந்தவர்களில் அவள் ஒருத்தியானதால் கார்த்திகா அவளோடு நெருக்கமாகி விட்டாள்.
மக்கள் பாடசாலைகளிலும் தேவாலயங்களிலும் இருந்தார்கள். அவர்களுக்கு உணவு, உடைகள் விடுதலைப்புலித் தொண்டு நிறுவனங்களால் கொடுக்கப்பட்டன. உணவிலும் பார்க்க தங்களது சோகக் கதைகளை சொல்வதற்கே பிழைத்திருந்தவர்கள் விரும்பினார்கள். உணவுப்பொருளை ஏனோதானே என பெற்றுக்கொண்டவர்கள், தங்கள் சோகத்தை சொல்ல நினைத்தபோது இயக்கத்தில் இருந்து உதவியளிக்க வந்தவர்களுக்கு கேட்பதற்கு நேரமோ பொறுமையோ இல்லை என்பதைத் தெரிந்தபோது அவர்களின் சோகம் மழைக்கால வன்னிக்குளங்களாகியது.
கணவனையும் இரண்டு பிள்ளைகளையும் பறிகொடுத்த தாயிடம் கார்த்திகா உணவுப் பொதியை நீட்டியபோது நாற்பது வயதான அவள் கையில் பிடித்து இழுத்து கன்னத்தில் முத்தமிட்டாள். “இராசாத்தி இயக்கத்துக்கு போகவேணாம் போகவேணாம் என பொத்திப் பொத்தி வளர்த்த உன்னை மாதிரி இரண்டு குமர் குஞ்சுகளை கடல் அரக்கன் கொண்டு போயிட்டது. நான் மட்டும் உயிரோட இருந்து என்ன செய்யப் போகிறேன். இந்த இடத்தில் கொஞ்சம் இருந்துவிட்டு போ” என உணவுப்பொதியை நிலத்தில் கைநழுவ விட்டு கார்த்திகாவின் கையைப் பிடித்திருந்தாள். மெலிந்த அந்த கைகளை உதறி விலத்தமுடியாது அவளருகே இருந்த இடத்தில் மௌனமாக அமர்ந்தாள். கார்த்திகாவின் முகத்தை மெதுவாக தடவியபடி அவள் புலம்பினாள்:
“குஞ்சு, நான் வீட்டுக்கு வெளியே துவைத்த துணிகளைக் காயப்போடுவம் என வந்தபோது அலையால் தூக்கி எறியப்பட்டு முற்றத்து வேப்ப மரக் கிளையில் அம்மணமாக தொங்கினேன். அந்த அம்மணத்தை மறைக்க முடியாமல் கண்ணை மூடிக்கொண்டிருந்தபோது பயங்கரமான இரைச்சல் என் காதில் கேட்டது. வந்தஅலை போனபிறகு கண்ணைத் திறந்து பார்த்தால் வீடிருந்த இடமே தெரியவில்லை. உள்ளே இருந்த புருசனையும் பிள்ளைகளையும் கடல் வீட்டோடு கொண்டு போய் விட்டது. இதற்குப் பிறகு எதற்காக நான் இந்த சாப்பாட்டை சாப்பிட்டு உயிர் வாழ வேண்டும்?”
“அம்மா போனதை திரும்ப யாரால் மீளப் பெறமுடியும்? நீங்கள் மட்டும் ஏன் அந்த நேரத்தில் வெளியே வந்தீர்கள்? அந்தக்கிளையில் நீங்கள் தொங்கியபோது அந்த அலை உங்களை மட்டும் ஏன் விட்டு சென்றது? ஏதோ ஒரு கடமையை செய்வதற்காகத்தான் என நினைக்கிறேன்.”
“இராசாத்தி இப்பிடி அறிவாக கதைக்க உனக்கு ஆரடி சொல்லித்தந்தது?”
“என்ர அப்பாதான் அடிக்கடி சொல்லுவார். நாங்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு நோக்கத்திற்காகத் தான் இந்த உலகத்தில் வந்து சேர்ந்திருக்கிறோம். அந்த நோக்கத்தைப் புரிந்து சரியாக செய்வது நம்மளைப் பொறுத்தது. பிள்ளையை படிக்க பள்ளிக்கூடம் அனுப்பிறது மாதிரி. படிக்கிற பிள்ளை படிக்கிறது மற்றதுகள் விளையாடிவிட்டு போகிறது. நாங்கள் இந்த பூமியில் வாழும்போது எங்கள் வாழ்வின் நோக்கத்தைப் புரிந்து கொள்வது முக்கியம்”
“உன்னோடு பேசியதில இரும்பாய் கனத்த மனம் பஞ்சாகிவிட்டது. யாரு பெத்தபிள்ளையோ? உன்ர உடுப்பைப் பார்த்தால் இயக்கப்பிள்ளை போல இருக்கு. ஆனால் அறிவாக பேசுகிறாய். தொடர்ந்து வாழ்வதற்கு கர்த்தரிடம் செபிக்கிறன். உன்ர பெயரென்ன?”
“கார்த்திகா?”
“சைவப்பிள்ளையா?”
“இயக்கத்தில் சைவம் வேதமெண்டில்லை. நான் போகவேணும் மற்றவர்களும் உங்களைப்போல் பாதிக்கப்பட்டிருப்பார்கள் தானே?”
“அது சரி பிள்ளை, நீ போ. நான் சுயநலக்காரி. உன்னை இவ்வளவு நேரம் மினக்கெடுத்தி விட்டன்”
“என்ர நினைவா நான் ஒன்று தாறன். பார்த்துக் கொள்வீர்களா அம்மா?”
“நீ அம்மா என்ற பிறகு என்னிடம் அனுமதி கேட்க வேணுமா?”
“செல்வி இங்கு வா” என வாக்கி டாக்கியில் அழைத்தாள்.
சிறுவனை தனது இடுப்பில் வைத்தபடி மக்களை விலத்திகொண்டு வந்தாள் செல்வி. ஐந்து வயதுப் பையன் அமைதியாக அவளது இடுப்பில் இருந்தபடி வேடிக்கை பார்த்தான்.
“அம்மா இவனை பார்த்துக் கொள்ளுங்கள். இவனது முழுக் குடும்பமும் உங்களைப்போல் அழிந்து விட்டது. இந்த முகாமில் தனியாக அழுதுகொண்டு அலைகிறான். இவன் சைவமா வேதமா என தெரியாது ஆனால் நீங்கள்தான் இனி அம்மா”;
சிறுவனை கை நீட்டி வாங்கிய அந்த தாயிடம் வார்த்தைகள் வெளிவரவில்லை.
அவனைத் தனது மடியில் இருத்தி உணவுப் பொட்டலத்தை நிலத்தில் வைத்து பிரித்து அவனுக்கு ஊட்டியபோது சிறுவயதில் அம்மாவை நினைவுக்கு கொண்டு வந்தது. கண்ணீருடன் செல்வியை இழுத்துக்கொண்டு அந்த இடத்தில் இருந்து விலகினாள் கார்த்திகா.
சில நாட்கள் அந்தப்பகுதி முகாம்களில் உதவி செய்தபோது அந்த அம்மாவைக் கவனித்தாள். எதுவும் நடக்காததுபோல் அந்தச் சிறுவனைப்பராமரித்ததைப் பார்த்து ஆறுதலடைந்தாள். குறைந்த பட்சம் ஒருவரது துன்பத்தையாவது என்னால் குறைக்க முடிந்ததே என்று திருப்தி அடைந்தாள்.
————-
ஒரு நாள் அதிகாலையில் எழுந்து செல்வியுடன் மோட்டார் சைக்கிளில் பூநகரியை நோக்கி செல்ல வேண்டியிருந்தது.காலையில் பிரயாணிப்பது உடலுக்கும் மனதிற்கும் இதமானது. மெதுவாக காது மடலையும் நுனி மூக்கையும் விறைக்க வைக்கும் காலைப்பனியை ஊடறுத்து குளிர் காற்றை உள்ளே ஆழமாக இழுத்தபடி மேற்கு நோக்கிச் சென்றாள். பச்சைப் பசேலன இருந்த பிரதேசத்தின் ஊடாக சென்ற பாதையில் மயில்கள் கூட்டமாக போவதைக் பார்த்து வாகனத்தை நிறுத்தியபோது செல்வி கையில் வைத்திருந்த ரொட்டித் துண்டை வாய்க்குள் திணித்து வாழைப்பழத்தையும் கடித்தாள். காலை உணவு சாப்பிடாது வெளியேறியதால் பசியை தீர்க்க கையில் கிடைத்ததை பையில் போட்டுக்கொண்டு வந்தது பிரயோசனமாக இருந்தது. இடையிடையே அதை கார்த்திகாவுக்கும் தந்தாள். மாதவலி மற்றும் பயிற்சியில் வரும் உடல் வலி எதையும் தாங்கும் செல்வியால் பசியை மட்டும் தாங்கமுடியாது. எதையாவது நொறுக்கித் தீனாக தின்றபடி இருப்பாள். சாப்பாடு ஒன்றும் அவளில் ஒட்டாது. உயர்ந்து மெலிந்து இருப்பாள்.
கார்த்திகா கிளிநொச்சியில் இருந்து முல்லைத்தீவு செல்லும் பாதைகளில் செல்லும்போது சாதாரண உடையிலும் பூநகரி மற்றும் மன்னார் பிரதேசங்களில் செல்லும்போது இயக்கத்தின் உடையிலும் செல்வது வழமையானது. கொழும்பு – யாழ்ப்பாணம் பிரதான வீதியின் கிழக்கு பக்கத்தில் ஆழ ஊடுருவும் இராணுவத்தின் கண்ணி வெடித்தாக்குதல்கள் மூலம் இயக்க முக்கியஸ்த்தர்கள் உயிர் இழந்தனர் என்பதால் கவனமாக பிரயாணிக்க வேண்டும் எனவும் அதேவேளையில் மேற்குப் பகுதி பாதுகாப்பானது எனவும் இயக்கத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.
பூநகரி பாடசாலையொன்றில் மக்களை சந்திக்க வேண்டும். இந்தப் போர்நிறுத்தம் சமாதானத்தை கொண்டுவரும் என நம்பவேண்டாம் எனக்கூறி யுத்தத்தை தவிர்க்கமுடியாது என்பதை வலியுறுத்த வேண்டும். ஏற்கனவே விதானைக்கு அறிவித்ததால் அவர் சொல்லி வைத்தது போல் கிராமமக்கள் பாடசாலைக்கு வந்திருந்தார்கள். ஆரம்ப காலம் போல் மக்களை விடுதலைப் புலிகளின் மற்றைய பிரிவினர் சந்திப்பது இல்லை. மக்களோடு பிரசாரம் மற்றும் தொடர்பு வேலைகள் எல்லாம் அரசியல்பிரிவினரை சார்ந்தது. மக்கள் நிர்வாக வேலைகளை சிவில் நிர்வாக அமைப்பு பார்த்துக் கொள்ளுகிறது.
அங்கிருந்த ஒரு மூதாட்டி “தங்கச்சி நான் என்ர பேரனைப் பார்க்கவேண்டும்” என்றாள்.
“ஏன் ஆச்சி? ” எனக்கேட்டாள் செல்வி.
“இல்லை நான் செத்துப் போறதாக கனவு கண்டேன். அவனை அதுக்கு முதல் பார்த்தால்தான் எனது கட்டை வேகும் “
“உங்களது பேரனது பெயரையும் உங்கள் விலாசத்தையும் சொல்லுங்கோ?” என கேட்டு செல்வி குறிப்பெடுத்தாள்.
ஒரு இளம் பெண் கார்த்திகாவின் வயதிருக்கும் அருகில் வந்து அவளை கையால் இழுத்து அழைத்துச் சென்று தனது கணவனது மடியில் இருக்கும் குழந்தையின் சட்டையை உயர்த்திக் காட்டினாள்.
ஒரு வயதான ஆண்குழந்தை.
கார்த்திகாவுக்கு எதுவும் புரியவில்லை.
“அவனது சாமானுக்கு கீழே விதையில்லை. இங்க உள்ள டாக்டர் சொல்கிறார் விதை உள்ளே இருக்காம். அதை உடனே வெளியே எடுக்க கொழும்புக்கு கூட்டி சென்றுதான் ஒப்பரேசன் செய்ய வேண்டுமாம்”
கார்த்திகா அதிர்ந்து உள்ளே விறைப்பாகிவிட்டாள். உடலின் ரோமங்கள் குத்திட்டன. குழந்தையின் ஆண்குறியை இப்படி அருகாமையில் பார்ப்பது இதுதான் முதல்தடவை. அதுவும் விதையற்று வெறுமனே இருந்த ஒரு வயதான ஆண் குழந்தை.
“செல்வி இங்கே வா” எனக்கூப்பிட்டு காட்டினாள்.
செல்வியின் பாடசாலைக் காலத்து காதலன் மானிப்பாயில் இருந்து பின்னர் கனடா போய்விட்டான். அதன் பின்பு இயக்கத்தில் சேர்ந்தவள் என்பதால் விதை பற்றிய அறிவு தன்னைவிட செல்விக்கு இருக்கலாம் என நினைத்தாள்.
செல்விக்கும் அதிர்ச்சியாக இருந்தது. மெதுவான சிரிப்பும் வந்தது. அதை மறைத்தபடி “கிளிநொச்சி வந்து அங்கு டாக்டர்களிடம் மருத்துவ சான்றிதழ் எடுத்து பின்பு தலைமை அலுவலகத்தில் மனுக்கொடுங்கள்” என்றாள்.
“தங்கச்சி நாங்கள் எத்தனையோ தரம் மனுக் கொடுத்தோம். ஒன்றும் நடக்கவில்லை.”
“நாங்கள் உங்கள் விபரத்தை சொல்லிப் பார்க்கிறம். கொஞ்சம் விபரம் தாங்க.”
“உங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும்;” என விலகினாள் அந்தப்பெண்.
திரும்பி வந்தபோது “எடியேய், ஏன் என்னைக் கூப்பிட்டாய்?” என்றாள் செல்வி.
“உனக்கு இதைப் பற்றிய அறிவு கொஞ்சம் கூட இருக்கும் தானே?
அண்ணன் தம்பியென பிறந்தனி.”
“உனக்கும்தானே அண்ணை இருக்கிறார்?”
“அவர் எங்களோடு வந்து சேர்ந்தபோது பெரியாளாகத்தான் இருந்தார். எல்லா நேரமும் காற்சட்டை போட்டிருந்தார். இப்ப சந்தோசமா?”
“என்னை நக்கலுக்கு கூப்பிடுகிறாய் என நினைத்தேன்”
“ஏண்டி அப்படி நினைத்தாய்?” நான் ஏன் உன்னை நக்கல் பண்ணுறேன்? ஆனாலும் இந்த மக்களோடு வேலை செய்வது கடினமானது. இராணுவத்தோடு சண்டை பிடிக்கிறது இலகுவானது என நினைக்கிறேன்.”
“அதுதானே சண்டைக்கு ஆள் பிடிக்க வந்திருக்கிறம்” செல்வி சிரித்தாள்.
இப்பொழுது மக்கள் கூட்டம் கலைந்தது. பாடசாலை மணவர்கள், ஆசிரியர்களுடன் பேச வேண்டிய நேரம் இதுவே. இயக்கத்திற்கு ஆட்கள் சேர்ப்பதே முக்கிய விடயம்.
செல்வி கொண்டு சென்ற காக்கி தோள் பையில் இருந்து சிறிய ஆயுதங்களை எடுத்து பாடசாலை முன்றலில் உள்ள வேப்பமரத்தின் கீழ் ஒரு மேசையைத் தருவித்து அதில் பரப்பினாள். ரிவோல்வர், பிஸ்டல், கைக்குண்டு என்பன பளபளத்தன. ஏற்கனவே பாடசாலைக்கு விடுதலைப்புலிகளின் மகளிரணியை சேர்ந்தவர்கள் வருவதாக தெரிவித்திருந்ததால் பாடசாலையில் எந்த பாடங்களும் தொடங்கவில்லை.
அந்தக்காலத்தில் கல்வி இலாகா இன்ஸ்பெக்டர் வருகிறார் என்றால் ஏற்படும் பதட்டத்திலும் பல மடங்கு இப்பொழுது அரசியல்ப் பிரிவு வருவதென்றால் ஆசிரியர்களுக்கு ஏற்படுகிறது. உண்மையில் படிப்பிக்க நினைத்தாலும் பரபரப்பும், இருதயத்துடிப்பும் அவர்களை ஆசனத்தில் அமரமுடியாது செய்துவிடும். பெண்ணாசிரியர்கள் மணிக்கொருதரம் பாத்றூம் போய்வருவார்கள். அதற்காக நாள் முழுவதும் உணவோ நீரோஅருந்தாத ஆசிரியைகள் சிலர் உண்டு. அவர்களுக்கிடையே நடைபெறும் உரையாடல்கள் குறைந்துவிடும். கண்களாலே பல விடயங்களைப் பரிமாறுவார்கள்.
ஆண்களில் முக்கியமாக இளமாசிரியர்கள் கலக்கத்தில் இருப்பார்கள். சில காலத்தின் முன்பு பாடசாலைக்கு வந்த அரசியல் பிரிவினர் சிறந்த கணித ஆசிரியர் என ஒருவரை அறிமுகப்படுத்த அவரை இயக்கத்தின் கணக்கு வழக்குப் பார்க்க என அழைத்து சென்று விட்டார்கள். சமயோசிதமாக அந்த ஆசிரியர் பாடசாலை முடிந்ததும் வந்து வேலை செய்வதாக சொல்லி தற்பொழுது ஒரு வருடமாக இரண்டு வேலையும் செய்தபடி இருக்கிறார்.
பாடசாலை அதிபர் ஏற்கனவே ஆசிரியர்களிடம் முக்கிய விடயத்தை தெரிவித்திருந்தார். விடுதலைப் புலியோடு போக விரும்புபவர்கள் தை மாதத்திலே போனால் நல்லது. நாங்கள் ஏனையோருக்கு படிப்பிக்க முடியும் என்பதை ஆசிரியர்களும் மெதுவாக மாணவர்களுக்கு அறிவித்து விட்டார்கள். கொஞ்சம் துடிப்பும், குழப்படியுமான, படிப்பு மண்டையில் ஏறாத ஆண் மாணவர்கள் இயக்கத்திற்கு போனால் தங்கள் வேலை இலகுவாகிவிடும் என்பது ஆசிரியர்களது எண்ணமாக இருந்தது. பெரும்பாலான ஆசிரியர்களுக்கு பெண் பிள்ளைகளை அப்படி நினைக்க மனதில் தைரியம் வரவில்லை. பாடசாலை அதிபரின் தங்கை இயக்கத்தைச் சேர்ந்த தளபதி ஒருவரை திருமணம் முடித்து இருந்ததால் அவரது சிந்தனை வித்தியாசமாக இருந்தது. அவரும் மருத்துவப்பிரிவில் சில காலம் இருந்து பின்பு ஆசிரியரானவர். இயக்கத்தில் செல்வாக்கும் தொடர்பும் உள்ளவர் என்பதால் ஆசிரியர்கள் அவரது வார்த்தைக்கு எதிர்ப் பேச்சுப் பேசமாட்டார்கள். ஏற்கனவே இவருக்கு முன்பாக இருந்த யாழ்ப்பாணத்து ஆசிரியரை இயக்கத்து செல்வாக்கு மூலம் அவரது ஊருக்கு அனுப்பினவர். அவர் அந்தப்பகுதியில் கருஞ்சிங்கம்போல் இருந்தார்.
ஏற்கனவே பெயர் கொடுத்த பிள்ளைகளை விடுதலைப் புலிகளில் சேர்ந்து போராடத்தயாரான மாணவர்கள் என தலைமையாசிரியரே அறிவித்தார். கார்த்திகாவும் செல்வியும் வரிசையாக நின்ற அந்தப் பிள்ளைகளைப் பார்த்தபோது பலர் துப்பாக்கிகளை தூக்குவதற்கு உடல் பலமானவர்களாக தெரியவில்லை. பெரும்பாலானவர்கள் வயதுக்கேற்ற வளர்ச்சியற்றவர்கள். ஊட்டச்சத்து குறைந்து மெலிந்திருந்தனர். அப்படியான பிள்ளைகளை தவிர்த்துவிட கார்த்திகா நினைத்திருந்தாள். இயக்கத்தின் உணவிலும் பயிற்சியிலும் பிள்ளைகள் உடல் வளர்ந்து திடகாத்திரமடைவதாக இயக்கத்தினர் நினைத்ததால் இயக்கத்தின் கட்டளை எல்லோரையும் சேர்க்கவேண்டும் என்பதாக இருந்தது.
முகாமில் உணவும் பயிற்சியும் கொடுத்தபின் சிலமாதங்களில் பிரயோசனப்பாடாதவர்களை வீட்டுக்கு அனுப்பமுடியும் அல்லது மற்றய சிவில் விடயங்களுக்கு பயன்படுத்தலாம். ஆரம்பத்தில் மாவீரர் குடும்பங்களில் பிள்ளைகளை எடுக்காமல் இருந்த இயக்கம், அதையும் புறந்தள்ளி அங்கிருந்தும் பிள்ளைகளை சேர்ப்பது என்ற தீர்மானம் இயக்கத்தினுள்ளே கசப்பை உருவாக்கியிருக்கிறது. இயக்கத்தில் பிள்ளைகள் சேர்வதால் செல்வாக்கு ஏற்படுகிறதென விரும்பிய குடும்பங்களும் இருந்தன. செல்வி சிறிதாக இருந்த பெண்பிள்ளைகள் பருவம் அடைந்துவிட்டார்களா என்பதை அவர்களிடம் அருகில் சென்று விசாரித்து பெயர் பதிந்து கொண்டாள்.
கட்டளைகளை விருப்பு வெறுப்பின்றி செயல்படுத்தவேண்டும் என மேலிடம் கூறியிருக்கிறது. செல்வியும் கார்த்திகாவும் ஒரே காம்பில் ஒன்றாக பயிற்சி எடுத்து தோழிகளாகியவர்கள். செல்வி சிலகாலம் இயக்கத்தின் உளவு பார்க்கும் செயலில் அமர்த்தப்பட்டு இருந்ததால் கார்த்திகா அவளை சிநேகிதியாக கருதினாலும் முற்றாக நம்பவில்லை. இயக்க விடயத்தில் செல்விக்கு உளவுப்பிரிவுத் தொடர்பு இருக்கலாம் என நினைத்தாள். கார்த்திகா பயிற்சி முடிந்ததும் அந்த உளவு வேலையைத் தவிர மற்ற எந்தவேலையும் செய்யத் தயார் என்று அரசியல் பிரிவில் சேர்ந்தாள்.
அந்தப்பாடசாலையில் அதிபர், ஆசிரியர்கள் ஏற்கனவே மாணவிகளிடம் பேசியிருந்ததால் வழக்கத்தை விட வேலை இலகுவாக இருந்தது. பத்து மாணவிகள் என்பதால் மிகவும் பெரிய விடயம். அதுவும் வந்து இரண்டு மணி நேரத்தில் வேலை முடிந்துவிட்டது; இப்பொழுது அந்தப் பெண்களை இயக்கத்திற்கு அனுப்புவதற்கு வாகனம் வேண்டும். அதை அறிவிப்பதற்கு வாக்கி டோக்கியை எடுத்த அந்தக்கணத்தில் இயக்கத்தைச் சேர்ந்த வெள்ளை பஜிரோ வண்டி ஒன்று வந்து நின்றது.
இறங்கியவர் விடுதலைப் புலிகளின் இராணுவ உடை அணிந்திருக்கவில்லை. ஆனாலும், முக்கிய தளபதியாக இருக்கலாம் என எண்ண வைத்தது.
“கார்த்திகா தானே”
“ஓம் நீங்கள் யார்?”
“எனது பெயர் சாந்தன். உங்களது அண்ணனை எனக்குத் தெரியும். நான் ஒழுங்கு பண்ணித்தான் கிளிநொச்சியில் சந்தித்தீர்கள். என்ன இங்கு நிற்கிறீர்கள்?”
“இல்லை, நாங்கள் இயக்கத்திற்கு ஆள் சேர்த்தோம். இப்பொழுது அவர்களை கிளிநொச்சி அனுப்ப வாகனத்தை வரவழைக்கவேண்டும்.”
“நான் அழைத்துச் செல்கிறேன். இதோ எனது அடையாளம்” என இயக்கத்தின் அடையாள அட்டையைக் காட்டியபோது கார்த்திகா அதிர்ந்தாள். ஏற்கனவே அந்தப்பெயரை அக்காமார் மரியாதையாகச் சொல்லும்போது கேட்டிருக்கிறாள்.
பிள்ளைகளை வாகனத்தில் ஏற்றியபின்பு சாந்தன் வந்தான். “என்ன ஒரு நன்றி கூடச் சொல்லாமல் போகிறீர்களே”குறுப்பாக சிரித்தபடி
நாணத்துடன் “நன்றி” எனத் சிறிது தலைகுனிந்தாள் கார்த்திகா.
அந்த அதிர்ச்சியில் இருந்து வெளியே வந்தபோது செல்வி “என்னடி திகைத்துப்போனாய்? ஆம்பிளையளைப் பார்த்ததில்லை?” எனக்கேட்டாள்.
“இல்லையடி. நான் எதிர்பார்கவில்லை அண்ணனுக்கு தெரிந்த ஒருவர் உயர் மட்டத்தில் இருப்பார் என”
“ஏன் உங்கண்ணன் எப்படி? ஸ்மாட்டா?”
“அண்ணன் நல்ல நிறமும் உயரமும். ஆனால் மிகவும் கெட்டிக்காரன். கணிதத்தில் நூறு மார்க்ஸ் எடுக்கும். அது சரி நீ ஏன் கேட்கிறாய்?”
“ஏதாவது தேவைக்குத்தான்” என சிரித்தாள் செல்வி.
“அது சரி வராது. அண்ணையை ஒரு அவுஸ்திரேலியாக்காரி கணக்குப்பண்ணுவதாக அண்ணன் சொன்னது. நீ நா ஊறாத.”
“யார் நா ஊறுவது எனப்பார்போம்” என்றாள் செல்வி.
“நீ உனது உளவுப்பிரிவுத் திறமையை என்னில் காட்டாதே” எனச்சொன்னாள் கார்த்திகா.
கிளிநொச்சிப்பாதையில் அவர்கள் இருவரும் பயணத்தை தொடர்ந்தார்கள்.
மறுமொழியொன்றை இடுங்கள்