
சத்தியம் மீறியபோது என்ற V S கணநாதனது சிறுகதை, தொகுப்பில் உள்ள பிரதான கதை மட்டுமல்ல. அது அது ஒரு நெடுங்கதை என்பதுடன் அதுவே கதைத்தொகுப்பின் பிரதான கதையாக உள்ளது . இந்தக்கதை உண்மைச் சம்பவத்தைத் தழுவி எழுதப்பட்ட கதையாக இருந்தாலும் அந்தக்கதை எழுதப்பட்ட விதத்தில் நான் கவரப்பட்டேன். முக்கியமாகக் கதைசொல்லியான பாட்டியின் பாத்திரம் முழுமையானதாக அமைந்திருக்கிறது.
சிறுகதை மட்டுமல்ல, நாவல் எழுதுவதற்குமே மொழி அதிக அளவு தேவையில்லை . ஜப்பானிய மொழியில் பல சித்திர நாவல்கள் உள்ளன. நான் வாசித்த பல சித்திரக்கதைகளில், படங்களுடன் சில வார்த்தைகள் மட்டுமே காணப்படும். பல சிறுவர் கதைகள், படத்துடன் சில வாக்கியங்கள் மட்டுமே காணப்படும், ஆனால் கதையை மறக்கமுடியாது. அவை நம் மனத்தில் அழுத்தமாகப் பலகாலம் பதிந்திருக்கும்.
எனது ஐந்து வயதுப்பேரனுக்கு பீட்டர் என்ற முயலின் கதையை (Tale of Peter the Rabbit) சமீபத்தில் வாசித்தேன் . அந்த கதை பலருக்குத் தெரிந்திருக்கும் .
தாய் முயல் தனது பிள்ளைகளான புளுப்சி, மெர்சி, கொட்டன் ரயில் மற்றும் பீட்டரிடம் , “நீங்கள் போய் விளையாடுங்கள். ஆனால் மிஸ்டர் மக்கிரகரின் தோட்டத்திற்கு போகவேண்டாம் . ஏற்கனவே அங்கு போனதால் திருமதி மக்கிரகர், சில காலத்தின் முன்பு உங்களது தந்தையை தங்களது உணவாக சமைத்து உண்டுவிட்டார்கள். ஆகவே கவனம் ” என எச்சரிப்பார்
பீட்டர் என்ற முயல் மட்டும் தாயின் சொல்லை கேளாது, மக்கிரகரின் தோட்டத்தினுள் புகுந்து சென்று, அதிகமான காய்கறிகளை உண்டது . மக்கிரகர் வந்தபோது அவர்களது தோட்டத்தின் குடிலில் ஒளித்திருந்து ,தப்பி ஓடி வரும்போது போட்டிருந்த உடை, காலணி என்பவற்றை தோட்டத்துள் விட்டு விட்டு, தலை தெறிக்க ஓடிவருகிறது. வீடு வந்தபோதும் , தோட்டத்தில் வயிறு புடைக்கத் தின்றதால், பீட்டர் வயிற்றுவலியால் அவதிப்பட்டது . தாய் கசாயத் தேநீர் கொடுத்து பட்டினியாகப் பீட்டரைப் படுக்க வைக்கும்போது, ஒழுங்காகத் தாயின் சொல்லைக் கேட்ட மற்றைய மூன்று குட்டிகளும் பிளாக்பெரி, பாண், பால் என விருந்துண்டார்கள்.
இந்த சிறிய கதை, சில வசனங்களோடு படங்களாக எழுதப்பட்டிருந்தது . மிகப் பிரபலமாகத் திரைப்படமாகவும் வந்துள்ளது . படம் சிலகாலம் தடை செய்யப்பட்டிருந்தது.
இதில் பீட்டரின் தந்தை, ஏற்கனவே மிஸ்டர் மக்கிரகரின் தோட்டத்துக்குள் சென்ற உணவாகிய விடயத்தை நான் அழுத்தமற்று வாசித்தபோது, எனது பேரன் , பீட்டரின் தந்தைக்கு என்ன நடந்தது என்று கேட்டான் – நான் அதை விளக்கியதும் அவன் கண்ணீருடன் சோகமானான். இருவரும் அத்துடன் அந்த புத்தகத்தை மூடிவிட்டாலும், அவனாலும் என்னாலும் பீட்டர் என்ற முயல் கதை எக்காலத்திலும் மறக்கமுடியாது உள்ளது
காரணம் பீட்டர் என்ற முழுமையான பாத்திரமே
அதே போல் சத்தியம் மீறியபோது என்ற நெடுங்கதையில் பாட்டியின் பாத்திரமே மனத்தில் நிற்கிறது . பாட்டியின் ஒவ்வொரு செய்கையிலும் வார்த்தைகளிலும் பாத்திரத்தின் குணங்கள் முழுமையாக வெளிப்படுத்தப்படுகிறது.
புனைகதைகளுக்கு உரிய புனைவின் மொழியாக எழுதப்படாது கதை. யாழ்ப்பாணத்துப் பேச்சு வழக்கில் உள்ளது.
கதையில் நடந்த சம்பவங்கள், போர்க்காலத்தில் நடந்தவை . நாம் எல்லோரும் வானொலி பத்திரிகை தொலைக்காட்சி என அறிந்த உண்மையான சம்பவங்கள் . ஆனால் பாத்திரத்தின் செயல்களால் விவரிக்கப்படும்போது ஒடிசியசின் சாகச செயல்போல் நமக்கு மனத்தில் வந்து திரையிடுகிறது .
மகனின்மேல் உள்ள அன்பால், மகளுக்குச் செய்த சத்தியத்தை மீறிச் சென்றபோது தாய்ப்பாசம் வெளிவருகிறது – ஒரு தாய் நமக்குக் கிடைக்கிறது. அப்போது நமது தாய்மாரையும் கதை நினைவில் கொண்டுவருகிறது
பிறந்த ஊரின்மேல் உள்ள பாசம் – அங்குப் பேசப்படும் இயக்கப்போராளிகள் சார்பான அரசியலில், மண்ணின் மீதான ஒரு அசாதாரணமான ஈரம் வெளிவந்து நமது இதயத்தில் கசிவை ஏற்படுத்துகிறது.
பிடிவாதம் – குழந்தைகள்போல் வயதானவர்கள் பிடிவாதம் கொண்டவர்கள். அவர்களுக்கு மற்றவர்களோடு ஒத்துப்போய், இனிமேல் எதையும் சாதிக்கவேண்டும் என்ற தேவை இல்லை அதற்கப்பால் மற்றவர்களிலும் பார்க்க, இந்த உலகில் வாழ்ந்து பார்த்துவிட்டோம் என்ற தன்னம்பிக்கை உள்ளது- அதைக் கதையின் பல இடங்களில் பார்க்கமுடியும். முக்கியமாக இந்தியக்கரையில் மற்றைய அகதிகளை அகதி முகாங்களுக்கு எடுத்துச் செல்ல முயன்ற அதிகாரிகளிடம், நான் மகளிடம் போகிறேன் என அந்தப்பாட்டி சொல்வது இலகுவானதல்ல.
நான் தென்னிந்திய அகதிகள் முகாங்களில் வேலை செய்தவன் – அதிகாரிகள் ஏய் , இந்தா – என ஏகவசனத்தில் பேசி குறுநில அரசாக அரசாள்வார்கள்.
பாட்டி, யாழ்ப்பாணத்திலிருந்த காலத்தில் திருமணம் செய்து வெளிநாடு போக இருந்த இளம்பெண்களுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுத்தது மற்றவர்களுக்கு உதவும் குணத்தைக் காட்டுகிறது.
-இரண்டு முருகேசன்களும் என்னைப் பார்த்துக்கொள்வார்கள் என மகன் முருகேசனையும் நல்லூர் முருகனையும் சேர்த்துச் சொன்னது நகைச்சுவை உணர்வை நமக்குக் காட்டுகிறது .அதேபோல் சிவராத்திரியில் நித்திரை வராதிருக்க ஒருவரை ஒருவர் கிள்ளுவோம் என எனநினைத்து படகில் பக்கத்தில் உள்ளவரைக் கிள்ளினால் தடித்த மனிதன் கடலுக்குள் தூக்கி எறந்துவிடுவார் என்று மனத்தில் எழும் குறுகுறுப்பை சொல்லுவது நம்மைப் புன்னகைக்க வைக்கிறது.
யாழ்ப்பாண பாரம்பரியமான ரேடியோப்பு என மூன்று வளையல்கள் ஒட்டியிருப்பதை சொன்னது – இதுவரை எனக்குத் தெரியாது – ஆனால் அக்காலத்தில்யாழ்பாணம் வந்த பிலிப் வானொலியின் முன்பக்கம் அப்படியாக இருந்தது என்பது எனக்கு நினைவு வருகிறது
வாழும் ஆசை என்பது சகல உயிர்களுக்கும் பொதுவானது. ஆனால் மதங்கள் பல இதை மறுக்கிறது . அத்துடன் அடுத்த பிறவியில் உனக்குச் சொர்க்கம் கிடைக்கும் அல்லது பிறவாத நிர்வாண நிலை அடைவாய் என்கின்றன. மொத்தத்தில் நீ பிறந்ததே முற்பிறவியில் செய்த பாவத்தின் சம்பளம் என்பதே அடிநாதமாக உள்ளது.
அதேநேரத்தில் வாழும்போது உணர்வுரீதியாக நன்மையைச் செய்தபடி மன மகிழ்வோடு வாழ்வதையே அல்பேட் காமு நீட்சே போன்றவர்கள் எக்ரென்சலிசத்தின் கருத்துரையாக வைக்கிறார்கள்.
இந்தப் பாட்டி இங்கே இந்த 77 வயதில் கொழும்பில் சகோதரனது வீட்டில் முடங்கிக் கிடந்திருக்கலாம்- இருக்கவில்லை
தாய்ப்பாசத்தில் மூத்தமகனைப் பார்க்கச் சென்ற ஒரு தாயாக யாழ்ப்பாணம் சென்றது எக்காலத்திலும் நடக்கக்கூடியதே – அங்கு யுத்தம் நடந்தபோது, எனது மகனுக்கு நடப்பது எனக்கு நடக்கட்டும். இந்த வயதில் எனக்கு என்ன வேண்டும்? என் மகன் கொள்ளி போடுவான் என யாழ்ப்பாணத்தில் முடங்கியிருக்கலாம்.
ஆனால் சென்னையிலிருந்த மகளிடம் செல்ல கொழும்புத்துறையிலிருந்து படகில், கடல், இலங்கை கடற்படை, மற்றும் இந்தியக் காவல்துறை என்ற தடைகள் கடந்து பயணம் செய்தது பெரிய விடயம் என நீங்கள் கருதலாம். நானும் கருதுகிறேன் ஏன் எழுதிய கணநாதன்கூட கருதியிருக்கலாம்.
ஒரு கதையில் பாத்திரத்தின் தன்மைகளால் அந்தக்கதை சிறப்பாவது உண்மையே. இது ஒரு நல்லகதை எனச் சொல்லி நீங்கள் நகரலாம்
ஆனால் முடியாது. எனக்கு இந்தக் கதையின் உச்சம் வாழ்வின் தத்துவத்தை நமக்குச் சொல்லி உச்சத்தை அடைவதே நான் உணர்ந்தேன்
தனது கடல்ப்பயணம் முடித்து, ரயில் ஏறி, இறுதியில் சென்னையில் ஓட்டோவில் சென்று இறுதியில் மகள் குடும்பத்திடம் தனது கதையைச் சொல்கிறார். அந்தக்கதை முடிவில் வரும் இறுதி சம்பவமே முக்கிய இலக்கிய உணர்வாகிறது.
இதுவரையும் அசைவ உணவு உண்ணாது 77 வருடங்கள் வாழ்ந்த ஒருவர் மகளிடம் முட்டைப் பொரியல் தேவை எனக் கேட்டு அதை ருசித்து உண்பதே இந்தக்கதையை நல்ல கதை என்றதற்கப்பால் ஒரு சிறப்பான கதை என்ற தத்துவ முத்திரை பதித்து முத்திரைக் கதையாக்கியது..
கதையை வாசிக்க
மறுமொழியொன்றை இடுங்கள்