ரத்த புஷ்பங்கள்-ஒரு விமர்சனம்

புதுவை இரத்தினதுரையின் மூன்றாவது கவிதை நூலாக ‘இரத்த புஷ்பங்கள்’ வெளிவந்துள்ளது. ஒரு தோழனின் காதல் கடிதம், வானம் சிவக்கிறது ஆகியவை முன்னர் வெளிவந்த அவரது கவிதை நூல்கள். விருப்பான சொற்களில் கோஷம் எழுப்புவதே இவரது கவித்துவப் பாணி.
இத்தகைய’கோஷ நடையை’ ஒட்டிய கவிதைகளே இரத்த புஷ்பங்களிலும் காணப்படுகின்றன. இவற்றுட் பல இடதுசாரி அரசியல் சார்பான கோஷங்களாகும். இவரது அதி தீவிர இடதுசாரிக் கோஷங்கள், இவருக்கு முற்போக்கு கவிஞர் என்ற புகழைப் பெற்றுக் கொடுத்தன. இப்பொழுது இவர் புரட்சிக் கவிஞர் என்றும் அழைக்கப் படுகின்றார்.இரத்த புஷ்பங்கள் தொகுதியில்26 கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
இவற்றில் ஆறு கவிதைகள் இவரது கவிதைக் கொள்கை பற்றிய பிரகடனங்கள். “சுந்தரிகள் காலிடுக்கு, நிக்கர் கழற்றுகிற நிமிட சுகம், அடுத்த வீட்டுச் சந்திரா, அவளின் மார்புச்சதை வெளித் தெரியும்போது சிந்திடும் அழகு, சுதியான கன்னியரின் பவளச் செவ்வாய் சுந்தரப் பூக் கன்னங்கள், கதலிக் கால்கள், கச்சுமுலை, முலையழகு, மினி பெல்பொட்டம், குன்று, குளிர் நிலவு, குமரிமுலை”போன்றவற்றை பாடுவது அல்ல இவரது கவிதைப்பணி.’என் கவிதை ஏழைகளை எழுப்பிவிட மட்டும்,எழுப்பியபின் புரட்சியதுக் கேவிவிடமட்டும்,மென்னுடலம் வாடி உரைக்கின்ற வரிக்கு மட்டும்,மேதினியில் பொதுவுடமை மிளிர்வதற்கு மட்டும்’என்பது இவரது கவிதைக் கொள்கை. ” மினி பாடி பெல்பொட்டம் பாடிப்பாடி மினைக்கெட்டு வருவோர்கள் பெண்கள் கொஞ்சம் குனிகின்ற போதவரின் குரும்பை பாடிக் குதிப்போடு திரிபவர்கள்” யாரும் இன்று ஈழத்து கவிதையுலகில் இல்லாதபோதிலும் கவிஞர் அத்தகைய கவிஞர்களை கற்பனையில் தனது எதிரிகளாக முன்னிறுத்தியே தனது கவிதைப் பிரகடனத்தை செய்கின்றார். ஆனால் இதே தொகுப்பிலேதான் “விளக்கணைய இருள் பரவ வேண்டும்- நான்விரித்த கவி நின்றுவிட வேண்டும்கல கலத்து அவள் சிரிக்க வேண்டும்- என்கையணைப்பில் துடி துடிக்க வேண்டும்போதுமென அவள் துடிக்க வேண்டும்- நான்பூமகளைப் போட்டுலுப்ப வேண்டும்கோதையவள் மெய்மறக்க வேண்டும்- நான்கோலமவள் மேனியிட வேண்டும்கையிணைந்து கால் பிணைய வேண்டும்-என்காதுடனே அவள் கதைக்க வேண்டும்மெய் முழுதும் நீர்துளிர்க்க வேண்டும்- அவள்மேனியிலே பாட்டெழுத வேண்டும்”என்ற கவிஞரது பாடலும் இடம்பெற்றுள்ளது. ‘என் கவிதை பண்டிதர்க்கும் பாவலர்க்கும் அல்ல- பெண் நினைவால் வாடுகிற காளையர்க்குமல்ல’ என்ற கவிஞரின் கொள்கைப் பிரகடனத்துக்கும் மேற்காட்டிய கவிதைக்கும் எவ்வித உறவுமில்லை.
கவிதை பற்றிய தனது பிரகடனங்களுக்கு ஒத்ததாகத்தான் தனது கவிதை அமைய வேண்டும் என்ற கொள்கை கவிஞருக்கு இல்லைப் போலும். பெண்களைப் பற்றி பாடக்கூடாது என்று சொல்வதிலேயே கவிஞருக்கு ஒரு சுவை இருப்பதை நம்மால் உணர முடிகிறது. கன்னி மார்புக் காய், மார்புச்சதை, குமரிமுலை, கச்சுமுலை போன்ற தொடர்கள் இவரது கவிதைகளில் பயின்று வருவதனை உதாரணமாகக் காட்டலாம்.இவரது கொள்கைப் பிரகடனங்களுக்கு ஏற்ற சில ‘புரட்சி’க் கவிதைகளும் இத் தொகுப்பில் உள்ளன.பெற்ற தாய் எதிராய் வந்து புரட்சியின் போது ஏதும்குற்றங்கள் செய்தா லெங்கள்குண்டுகள் அவளின் நெஞ்சைப்புற்றுக்கள் ஆக்கும் ஆமாம்புரட்சியின் போது நாங்கள்சுற்றமும் துணையும் பாரோம்சூடுகாண் புலிகள் ஆவோம்போன்ற அதி தீவிர புரட்சிக் கோஷங்களும்’அம்மியில் மிளகாய் வைத்து அரைப்பது போன்று பூஷ்வா வம்பரை அரைக்க வேண்டும். வா உடன் படையில் சேரு போன்ற புரட்சி அழைப்புக்களும், சிங்கள- தமிழ்- முஸ்லிம் பாட்டாளி வர்க்கம் ஒன்றுசேர்ந்து புரட்சியை நடத்தியே தீரும் என்று வலியுறுத்தும் கருத்துகளும் இவற்றுள் அடங்கும்.”மாத்தறையில் பொடி மெனிக்கா துவக்கெடுப்பாள்மாதகலில் கந்தையா பொல்லெடுப்பான்நாத்தாண்டியாவினிலே காசீம் லெவ்வைநாருரிக்கும் கத்தியினைக் கரமெடுப்பான்வாடாத கார்ள் மாக்ஸ்சின் தத்துவங்கள்வழிகாட்டும், அந்த வழிநடந்து சென்றுஓடான பாட்டாளி வர்க்க மிங்கும்உயர்ச்சி பெறும்கட்டாயம் இருந்து பாரும்”என்று ஒரு பாடலில் கவிஞர் கூறுகின்றார். ஆனால் வாடாத கார்ள் மாக்ஸ்ஸின் தத்துவங்கள் இவருக்கு வழிகாட்டவில்லை என்று தெரிகிறது.
மார்க்சியத் தத்துவத் தெளிவில்லாமல் வெறும் தீவிர இடதுசாரி அரசியல் கோஷங்களையும் மேலோட்டமான தேசிய ஐக்கியம் பற்றிய கருத்துக்களையுமே இவரது தொகுப்பில் காணமுடிகின்றது. மார்க்சித் தத்துவத்தில் நல்ல தெளிவிருந்தால் 77 ஆகஸ்ட் கலவரம் இவரைச்சிதற அடித்திருக்காது. கலவரத்தின் பாதிப்பினால் தீவிர இடதுசாரிக் கோஷம் எழுப்பிய இக் கவிஞர் தீவிர இனவாதக் கோஷமெழுப்பும் கவிஞாரக மாறியுள்ளார். “எழுந்து வா நெருப்புத்தாயே” “வாசலில் நெருப்பு மூளும்” ஆகிய இவரது தொகுப்பிலே உள்ள கடைசி இரு கவிதைகளும் இதையே புலப்படுத்துகின்றன.
சிங்கள இனவாததிற்குப் பதில் அதற்கு சமதையான தமிழ் இனவாதமல்ல என்பது இந்தப் புரட்சிக் கவிஞருக்கு தெரியவில்லை. இவர் ஒரு மார்க்சியவாதியாக இருந்திருந்தால் “வாசலில் நெருப்பு மூளும்” போன்ற ஒரு மிருகத்தனமான கவிதையை இவரால் எழுதியிருக்க முடியாது. முழுச் சிங்கள இனத்துக்கும் எதிராக இதில் இவர் சாபமிடுகின்றார். சிங்களக் கிணறுகள் யாவும் சீக்கிரம் ஊற்றடைக்க வேண்டும், மணநாளிலும் மரணமே நிகழ வேண்டும், ஆக்கும் சோற்றில் புழுக்கள் நெளிய வேண்டும், சிங்களப் பெண்களெல்லாம் மலடாக வேண்டும், முற்றிய வயல்கள் எல்லாம் பற்றி எரிய வேண்டும், வற்றாத கங்கையும் வற்றி புழுதியாக்க வேண்டும், பஞ்சம் வந்து அவர்கள் சாக வேண்டும் என்று இவர் சாபமிடுகின்றார்.சிங்கள இனத்தைச் சேர்ந்த இனவெறியர்கள் தமிழர்கள் என்ற காரணத்தினால் அவர்களைக் கொடுமைக்குள்ளாக்கியது எவ்வளவு மிருகத்தனமானதோ அவ்வளவு மிருகத்தனமானது சிங்களவர் என்ற காரணத்தினால் அவர்கள் எல்லோருக்கும் சாபம் இடுவதும்.ஒரு சாராரின் இனவெறியினால் அறிவு பிறந்த இனவெறியின் வெளிப்பாடே இதுவும். வற்றாத கங்கை வற்றிப் புழுதியானால் அதனால் பயன்பெறும் தமிழ்ப் பிரதேசத்துக்கும் தண்ணீர் கிடைக்காது போகும் என்பதையும் கவிஞர் தனது இனவெறியில் மறந்துபோனார் போலும்.
கண்ணகி தனது முலை திருகி மதுரையை எரித்தபோது, பசு, பத்தினிப் பெண்டிர், சிறுவர், முதியோர் தவிர்ந்த தீய்த்திறந்தார் பக்கமே செல்க என்று அக்கினிக்கு ஆணையிட்டாள். தீயவர்களை அழிப்பதுதான் பண்டைத் தமிழரின் போர் நாகரிகமாக இருந்தது என்றும் நாம் படிக்கின்றோம்.
அந் நாகரிகத்தின் வாரிசான இக் கவிஞர், ஒரு சாராரின் தாக்குதலுக்காக முழுச் சமுகத்தையும் பழிப்பதந்த நாகரிகத்தின்பாற் பட்டதோ தெரியவில்லை. தமிழ்த் தாயின் பேரால் சிங்கள மிருகம் பெற்ற சிறுக்கரை விழுங்குமிறு வங்கக் கடலைப் பணிக்கின்றார்.எரித்துப் பொசுக்குமாறு தீக்கு ஆணையிடுகிறார்; பெற்ற தாயும் கட்டிய மனைவியும் கற்புடையவர்களானால் இது நடக்கவேண்டுமென்று ஒரு விபரீத பரீட்சையை முன் வைக்கிறார்.
கவிஞரது வர்க்க உணர்வு, மனிதாபிமானம், மார்க்சியத் சித்தாந்தம் எல்லாம் இங்கு செயலற்று போயின. ஆகஸ்ட் கலவரம் தேசிய இனப் பிரச்சனை பற்றியும், இனங்களின் விடுதலை பற்றியும் தீவிரமான சிந்தனைப் போக்குகளைத் தோற்றுவித்தது போல், புரட்சிகர முற்போக்குக் கவிஞர் என்று கருதப்பட்டவரை தீவிர இனவெறிக் கவிஞராக மாற்றியது போன்ற விபத்துக்களையும் தோற்றுவித்துத்தான் உள்ளது.
(புதுசு 1, 1980)
மறுமொழியொன்றை இடுங்கள்