அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர் விழாவில்  இன்று !

தமிழக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் 

சிறப்புரை !! 

                                                   முருகபூபதி

ஒரு ஊரில் ஒரு தேநீர் தயாரித்து விற்பவன் இருந்தான். ஒருநாள் அந்த ஊரில் பிரபலமான ஒரு மல்யுத்தவீரன் அவன் கடைக்கு  வந்து தேநீர்கேட்டிருக்கிறான். அந்தத்தேநீர் தயாரிப்பவன் அன்று அந்த மல்யுத்தவீரனுக்கு தேநீர் தயாரிக்க சற்று காலதாமதமாகிவிட்டது. அதனால் கோபமுற்ற அந்த மல்யுத்த வீரன்,  “ எனக்கு உனது தேநீர் வேண்டாம். என்னை காத்திருக்கவைத்து அவமதித்துவிட்டாய். அதனால் நாளை நீ என்னுடன் மல்யுத்தப்போட்டிக்கு வரவேண்டும். உனக்கு நாளை ஒரு பாடம் கற்பிக்கின்றேன்” எனச்சொல்லிவிட்டுப்போய்விட்டான்.

அந்த அப்பாவி ஏழை தேநீர்கடைக்காரன் என்ன செய்வது என்று தெரியாமல் அவதியுற்றான். நாளை மல்யுத்தவீரனோடு எப்படி போட்டிபோடப்போகிறேன்..? அதில் தான் தோற்பது நிச்சயம். தோற்றால் அடி, உதையும் வாங்கிக்கொண்டு என்ன தண்டனை பெறப்போகிறேனோ தெரியவில்லையே…?  என்று மனம்கலங்கினான். அவனால் தொடர்ந்தும் தனது வேலையை கவனிக்கமுடியவில்லை. ஒரு துறவியிடம் தனது இயலாமையைச்சொல்லி வருந்தி, “  இனி நான் என்னதான் செய்வது?   “ எனக்கேட்கிறான்.

அந்தத்துறவி, அமைதியாக நிதானமாக அவனுக்கு ஒரு ஆலோசனை சொல்கிறார். இப்பொழுது முதல் நீ தொடர்ந்து தேநீர் தயாரித்துக்கொண்டே இரு. வேகமாக…. அதிவேகமாகத் தயாரித்துக்கொண்டிரு. ஒரு கணமேனும் ஓய்வின்றி தயாரித்துக்கொண்டிரு. அவ்வளவுதான் நான் உனக்குத்தரும் அறிவுரை.

அந்த அப்பாவிக்கு எதுவும் புரியவில்லை. தனது தேநீர்க் கடைக்குத் திரும்பி அந்தத்துறவி சொன்னவாறே வேகவேகமாக தேநீர் தயாரித்தான். உண்ணாமல் உறங்காமல் ஓய்வின்றி தொடர்ச்சியாகத் தேநீர் தயாரித்துக்கொண்டே இருந்தான். அடுத்தநாள் காலை புலர்ந்துவிட்டது. அப்பொழுதும் அதிவேகமாக தேநீர் தயாரிக்கிறான்.

சொன்னவாறு அந்த மல்யுத்த வீரனும் வருகிறான்.

“ வந்துவிட்டேன். போட்டிக்குத் தயாரா? ” எனக்கேட்கிறான். 

அந்த விநோதப்போட்டியை பார்க்க ஊரே திரண்டுவிடுகிறது.

அந்தத் தேநீர் தயாரிப்பவன் , “ வாருங்கள். போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் ஒரு தேநீர் அருந்திவிட்டு தொடங்கலாமே… இதோ உங்களுக்கு ஒரு தேநீர் தயார் ” எனச்சொல்லிவிட்டு மின்னல் வேகத்தில் தேநீர் தயாரித்துக்கொடுக்கிறான்.

அந்த மல்யுத்த வீரன் தயங்கிவிட்டான். மின்னல் வேகத்தில் தேநீர் தயாரிக்கும் இவன்,  மின்னல் வேகத்தில் என்னை விழுத்தியும் விடுவான். மிகுந்த பலசாலியாகவும் இருப்பான் என நினைத்துக்கொண்டு அந்தப்போட்டியிலிருந்து விலகிக்கொள்கிறான்.

அர்ப்பணிப்பும் தீவிர ஈடுபாடுமே இக்கதை சொல்லும் செய்தி.

இது ஒரு ஜென் கதை. இதனை உலக இலக்கியப்பேருரைகள் வரிசையில் பாஷோவின் ஜென் கவிதைகள் பற்றிய உரையில் தமிழகத்தின் இன்றைய முன்னணி படைப்பாளி எஸ்.ராமகிருஷ்ணன் சொன்ன கதை.

இவ்வாறு பல கதைகளை வாழ்வியல் சிந்தனைகளோடு சிறப்பாக சொல்லும் ஆற்றல் மிக்க தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்  இன்று 14 ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை  அவுஸ்திரேலியா நேரம் இரவு 7-00 மணிக்கு  நினைவும் நிஜமும் என்னும் தொனிப்பொருளில் இலக்கியத்தின் ஆதாரமும் சமகால நிகழ்வுகளும் என்னும் தலைப்பில்  மெய்நிகரில்  சிறப்புரையாற்றுவார்.

மெய்நிகர் இணைப்பு இந்தப்பதிவின் இறுதியில் தரப்படுகிறது. 

எழுத்தாளர்  எஸ்.  ராமகிருஷ்ணன் சென்னையில்  சாலிக்கிராமத்தில் வசிக்கிறார். விருதுநகர் மாவட்டம்  மல்லாங்கிணறு கிராமத்தை பூர்வீகமாகக்கொண்டவர்.

 ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் எடுத்திருக்கவேண்டியவர் தேசாந்தரியாக அலைந்து நூலகங்களிலெல்லாம் பொழுதைக்கழித்து இந்திய தேசத்தை முடிந்தவரையில் சுற்றியலைந்து தரிசித்து, இந்திய இலக்கியங்களையும் உலக இலக்கியங்களையும் கற்றுத்தேர்ந்து நீண்ட காலமாகவே முழுநேர எழுத்தாளராக வாழ்ந்துகொண்டிருப்பவர்.

இலக்கியத்தில் தேடல், பயணங்களில் லயிப்பு, எழுத்தில் வேகம், பேச்சில் ஆழ்ந்த புலமை, நட்புறவாடலில் மேட்டிமையற்ற எளிமை… இவ்வாறு பல   நல்லியல்புகள் கொண்டவர்.   பலருக்கும்  விருப்பத்துக்குரிய படைப்பாளி.

ராமகிருஷ்ணனும் அவுஸ்திரேலியா வந்து சுமார் ஒரு மாதகாலம் இருந்தவர்தான். ஆனால்,  இங்கு எந்தவொரு எழுத்தாளரும் அவரை சந்தித்திருக்கவில்லை. அவர் வந்ததும் தெரியாது.  திரும்பிச்சென்றதும் தெரியாது.

ஜீவாவின் இயக்கத்தில் அவுஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட உன்னாலே… உன்னாலே… திரைப்படத்தின் வசனகர்த்தா ராமகிருஷ்ணன். அவுஸ்திரேலியாவில் பல தமிழ்த்திரைப்படங்கள் எடுக்கப்பட்டன. ஆனால்,  ஜீவாவின் இயக்கத்தில் வெளியான உன்னாலே…உன்னாலே மாத்திரமே அவுஸ்திரேலியாவை, குறிப்பாக மெல்பனை கவிதைநயத்துடன் சித்திரித்த, கண்களையும் நெஞ்சத்தையும் கவரும்விதமாக எடுக்கப்பட்ட படம் என்பது  பலரதும்  அபிப்பிராயம்.

ஜீவா என்ற இளம் இயக்குநர் மாரடைப்பினால் அற்பாயுளிலேயே மறைந்துவிட்டமை தமிழ்த்திரை உலகிற்கு இழப்பு. 

அவுஸ்திரேலியா உதயம் மாத  இதழில் உப்பிட்ட வார்த்தைகள், சிறிது வெளிச்சம் என்பன ராமகிருஷ்ணன்  எழுதிய தொடர்பத்திகள்.  

ஒரு தடவை அவர் மறைந்த தமிழக முன்னணி நடிகை சாவித்திரி பற்றியும் ,   சாவித்திரியின் அந்திம கால ஒளிப்படத்துடன் உதயம் இதழில் எழுதியிருந்தார். 

ராமகிருஷ்ணன், சிறுகதை, நாவல், கட்டுரை, விமர்சனம், பயண இலக்கியம், பத்தி எழுத்து, உலக இலக்கிய மற்றும் இந்திய இலக்கிய ஆளுமைகள் குறித்தெல்லாம் நிறையவே நிறைவாக எழுதியிருப்பவர். சிறந்த பேச்சாளர். அடுக்குவசன உணர்ச்சியூட்டும் பேச்சாளர் அல்ல. அவரது படைப்புகளை வாசிக்கும்போது எப்படி வாசகனையும் தன்னோடு அழைத்துச்செல்வாரோ,  அதுபோன்று தனது பேச்சின்பொழுதும் அதனைக்கேட்டுக்கொண்டிருப்பவர்களை கூடவே அழைத்துச்செல்லும் இயல்பினைக்கொண்டவர். இது ஒருவகை ரஸவாதம்தான்.

ராமகிருஷ்ணனின் உலக இலக்கிய தொடர்பேருரைகள் இறுவட்டில்  வெளியாகியுள்ளன.  அட்சரம் வெளியிட்டிருக்கும் இந்தத் தொடரில் பாஷோவின் ஜென் கவிதைகள், ஹோமரின் இலியட், டால்ஸ்டாயின் ‘அன்னாகரீனா’, தாஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும், ஷேக்ஸ்பியரின் மெக்பெத்,  ஆயிரத்தொரு அராபிய இரவுகள், ஹெமிங்வேயின் ‘கிழவனும் கடலும்’  ஆகியன தனித்தனி தொகுப்புகளாக வந்துள்ளன.

டால்ஸ்டாய், ஹெமிங்வே, தாஸ்தாயெவ்ஸ்கி முதலானோரின் வாழ்வின் புதிர்கள் எம்மை அதிரவைப்பவை. ரஷ்யாவிலிருந்து இயற்கையை வழிபட்ட குற்றத்திற்காக கனடா கியூபெக்கிற்கு நாடுகடத்தப்பட்ட மக்களின் கப்பல் பயண செலவுக்காக தனது புத்துயிர்ப்பு நாவலை எழுதி பணம் தேடிக்கொடுத்த டால்ஸ்டாயின் அந்திமகாலம் ஒரு ரயில் நிலையத்தில் அவரது கதாபத்திரம் (அநாகரினா) போன்று அநாதரவாக முடிந்தமையும்,

 எத்தனையோ வீரசாகசங்கள் செய்து உயிர்பிழைத்த ஒரு இராணுவ வீரனாக வாழ்ந்து நோபல் பரிசும் வென்ற பின்னர், தன்னைத்தானே சுட்டு தற்கொலைசெய்துகொண்ட ஹெமிங்வேயும், 

வாழ்நாள் பூராகவும் வலிப்பு நோயினாலும் வறுமையாலும் வாடியவரும்  துர்க்கனேவ் போன்ற ரஷ்ய இலக்கிய மேதைகளினாலும் அவமதிக்கப்பட்டவருமான தாஸ்தாயெவ்ஸ்கியும் ராமகிருஷ்ணன் வழங்கிய விளக்கவுரைகளில் வருகிறார்கள்.  

தனித்துவத்தையும் ஆழமான தேடலையும் ராமகிருஷ்ணனின் இலக்கியப்பேருரைகளில் அவதானிக்க முடியும்.  உலக இலக்கியம் பற்றிய தீவிர தேடலும் பயிற்சியும் உள்ள ஒருவரினால்தான் அது சாத்தியம்.

இன்று கவிதை உலகில் பெரிதும் பேசப்படும் ஹைக்கூ கவிதைகள்  அதன் முன்னோடிகள் ஜென்கதை சொல்லிகளிடமிருந்து  எமக்கு கிடைத்திருக்கிறது. 

அகவிழிப்பை ஏற்படுத்தும் பாஷோவின் ஜென்கவிதைகள் பற்றிய இலக்கியப்பேருரையில்தான் இந்தப்பதிவின் தொடக்கத்தில்  இடம்பெற்ற அந்த தேநீர் தயாரிப்பவனையும் மல்யுத்த வீரனையும்  காண்கின்றோம். 

ஜென் கவிதைகள் தொடர்பான தனது தேடலை தொடக்கிவைத்தவரும் தீவிரப்படுத்தியவரும் தனது இனிய நண்பர் கவிஞர் தேவதச்சன்தான் என்ற தவலையும்  ராமகிருஷ்ணன் சொல்கிறார். 

தமிழில் முதல் முதல் ஹைக்கூ கவிதைகளின் மேன்மைபற்றி சுதேசமித்திரனில் பாரதியார் எழுதியிருக்கும் செய்தியையும் குறிப்பிடுகிறார்.


அத்துடன் தான் ஓரு கவிஞன் இல்லை என்பதையும் வெளிப்படுத்தும் ராமகிருஷ்ணனின் வசனத்தில் வெளியான பல திரைப்படங்களில் கவித்துவம் இருந்தது.  

ஆற்றல்மிக்க  இந்த இலக்கியவாதியின் திரைப்பட வசனங்கள் வழக்கத்தை விட வித்தியாசமாகத்தான் இருக்கும். ஆல்பம், பாபா, பாப்கார்ன், சண்டக்கோழி, பீமா, உன்னாலே… உன்னாலே… ஆஸ்தி, தாம் தூம், மோதிவிளையாடு, சிக்குபுக்கு, அவன் இவன், யுவன் யுவதி, என்பன ராமகிருஷ்ணன் வசனம் எழுதிய திரைப்படங்கள். 

கர்ணமோட்சம் என்ற தேசிய விருதுபெற்ற குறும்படத்திற்கும் இவர்தான் வசனம்.

எனது இந்தியா என்ற விகடன் பிரசுர நூலில்  ஒரு தேசாந்தரியின் பார்வையில் தனது  தாய்நாட்டை பதிவுசெய்திருக்கிறார். விகடனில் அவர் எழுதிய தொடர் எனது இந்தியா. பல அபூர்வமான படங்கள் இடம்பெற்ற நூல். 

இந்திய சாகித்திய அகடமி விருது,  தாகூர் விருது, கனடா இலக்கியத்தோட்டத்தின் இயல் விருது  உட்பட பல விருதுகள் பெற்றவர்.  அவரது படைப்புகளை ஆய்வுசெய்த சிலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். M Phil பட்டத்திற்காகவும் சிலர் ஆய்வுசெய்துள்ளனர். 

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கம் நடத்தும் இவ்வருடத்திற்கான தமிழ் எழுத்தாளர் விழாவின் மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் ,   இன்று, 14 ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை  அவுஸ்திரேலியா நேரம் இரவு 7-00 மணிக்கும் இலங்கை – இந்திய நேரம் மதியம் 1-30 மணிக்கும் ஐரோப்பா நேரம் காலை 8-00 மணிக்கும்  ராமகிருஷ்ணன் உரையாற்றுகிறார்.

 மெய்நிகர் இணைப்பு: 

https://us02web.zoom.us/j/81928215942?pwd=ZHQ3VUtyZXpudnNDcitpTHVTbm9JQT09

Meeting ID: 819 2821 5942

Passcode: 445435

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: