ராஜம் கிருஷ்ணன்  ( 1925-2014 )

ஒக்டோபர்  20  – நினைவு தினம்

பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்ற ஆளுமை !

                                                                      முருகபூபதி

இலங்கையில் பாரதி நூற்றாண்டு விழாக்கள் நடைபெற்ற 1983 ஆம் ஆண்டு காலப்பகுதியில்  வருகை தந்து கொழும்பு –  யாழ்ப்பாணம்  உட்பட  பல பாகங்களிலும் உரையாற்றியவர் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்.

அவர் மறைந்து இன்றுடன் ( ஒக்டோபர் 20 )  ஏழு வருடங்களாகிவிட்டன.

2012 ஆம்  வருடம்  தமிழகம்  சென்று  ராஜம்கிருஷ்ணனை   அவர்  அனுமதிக்கப்பட்டிருந்த   சென்னை  – பொரூர்  இராமச்சந்திரா மருத்துவமனையில்  இறுதியாகப் பார்த்தேன்.   மருத்துவமனையில்  அவர்  அனுமதிக்கப்பட்டிருக்கும்  தகவலை அமுதசுரபி   ஆசிரியர்  திருப்பூர்  கிருஷ்ணன்  மூலம் அறிந்திருந்தேன். ஒரு  பிராமணக் குடும்பத்தில்  பிறந்தவர்.  ஆசாரம்  பார்க்கும்  மரபார்ந்த   சமூகத்தில்   பிறந்த  இவர்  மீன்கவிச்சி  வாசம்  நிறைந்த மக்கள் வாழும்  கடலோரக்கிராமங்களுக்குச்சென்று  அம்மக்களுடன் வாழ்ந்து  அலைவாய்க்கரையில்  நாவல்  படைத்தார். உப்பளத்தொழிலாளர்  வாழ்வைப்பிரதிபலிக்கும்   கரிப்புமணிகள் படைத்தார்.   இந்நாவல்  தொலைக்காட்சி  நாடகமாகியது. விவசாயமக்களைப்பற்றி   அவர்  எழுதிய புதினம்  சேற்றில் மனிதர்கள்.

இலங்கையில்  1983   இனவாத  வன்செயல்களையடுத்து  அகதிகளாக  இராமேஸ்வரம் மண்டபம்   முகாமில்  தஞ்சமடைந்த  ஈழத்தமிழ்  மக்களை நேரடியாகச்சந்தித்து   அவர்களின்  அவலத்தை   மாணிக்க  கங்கை  நாவலில்  பதிவு செய்தவர்  ராஜம் கிருஷ்ணன். பாஞ்சாலி  சபதம்  பாடிய  பாரதி   பற்றியும்  நூல்   எழுதியவர்.

 அந்த  நூலில்  பாரதியின்  மறைவுக்குப் பின்னர்  பாரதியின்  உறவினர்கள்  குல முறைப்படி  பாரதியின்  மனைவி செல்லம்மாவுக்கு மொட்டையடித்து  மூலையில்  நிறுத்திய கொடுமை   பற்றி  சித்திரித்தார்.  இவ்வாறு   பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில்   தமது  தார்மீகக்கோபங்களை   வெளியிட்ட  துணிச்சலும் ஆளுமையும்   மிக்க  பெண்   ராஜம் கிருஷ்ணன். இலங்கையில்  கிழக்கு  பல்கலைக்கழக  தமிழ்த்துறை விரிவுரையாளர்   அம்மன்கிளி  முருகதாஸ், ராஜம் கிருஷ்ணனின்  படைப்புகளையே    தனது  பட்ட  மேற்படிப்பு  ஆய்வுக்கு   எடுத்துக்கொண்டார்.

பேராசிரியர் கா. சிவத்தம்பி  அவர்களின்   ஒரு  புதல்வி   தமிழ்நாட்டில்   மேற்கல்வியை   தொடர்ந்த  காலத்தில்  அவருடை பாதுகாவலராகவும்  இருந்த ராஜம்கிருஷ்ணனின்   கணவர்  ஒரு   பொறியிலாளர்.  குழந்தைகள் இல்லை.   கணவருடன்    தாம்பரத்தில் வசித்தபோது  1984  இல் நான்காவது  பரிமாணம்  நவம் ( தெணியான் தம்பி – தற்போது கனடாவில்)  எனது  மனைவியின் தம்பி கவிஞர்  காவ்யன்                        (  தற்போது   இலங்கையில் )  ஆகியோருடன்   சென்றிருக்கின்றேன். 1990   இல்  மீண்டும்  எனது  குழந்தைகளுடன்   அவரைப்பார்க்கச்சென்றேன்.

அவரது   கணவர்  மறைந்தபின்பு  தனிமரமானார்.  பூர்வீக  சொத்து மற்றும்  வீட்டை   இழந்தார்.  எஞ்சிய  பணத்தை   ஒருவரை   நம்பி     வங்கியில் வைப்புச்செய்துவிட்டு     நீலாங்கரைப் பக்கமாக ஒதுங்கிவாழ்ந்தார்.   நோயுற்றார்.   உதவிக்கு  ஒரு ஒற்றைக்கண்பார்வையுள்ள  முதியபெண்ணை   வைத்துக்கொண்டார்.    2009     தொடக்கத்தில்    ராஜம்கிருஷ்ணனை  அந்த நீலாங்கரை வீட்டிலேயே   சந்தித்தேன்.  அப்பொழுது     அவர்   சொன்ன   சுவாரஸ்யமான  சம்பவம்  நினைவில் தங்கியிருக்கிறது.   அவரது  ஒரு  கதையை    தொலைக்காட்சி நாடகமாக்க நடிகை   ரேவதி  விரும்பினார்.  அது  தொடர்பான ஒப்பந்தம்   கைச்சாத்திடுவதற்காக  தொலைபேசியில் தொடர்புகொண்டார்.   அப்பொழுது  ராஜம்கிருஷ்ணன்  ஆழ்ந்த உறக்கம். தொலைபேசியை   எடுத்தவர்  அங்கிருந்த  முதியபெண். மறுமுனையில்  ரேவதி,  “ அம்மாவுடன்  பேச  வேண்டும்.  ரேவதி என்று   சொல்லுங்கள்”   எனச்சொன்னதும்,       “ ரேவதியாவது கீவதியாவது…  அம்மா  இப்போ   நித்திரை.  எழுப்பமுடியாது.  போனை வை…”

ரேவதி   அதிரவில்லை.  உடனே    புறப்பட்டு  நீலாங்கரைக்கு  வந்து ராஜம்கிருஷ்ணனின்   சுகநலம்  விசாரித்துவிட்டு,  அந்த முதியபெண்ணிடம்   தன்னை   அறிமுகப்படுத்திக்கொண்டார்.  நான் போயிருந்தபோது   இந்தச்சம்பவத்தை   சொல்லி பெருங்குரலெடுத்துச் சிரித்தார்  ராஜம்  கிருஷ்ணன்.   அவருடன் பேசிக்கொண்டிருந்தால்   நேரம்   போவதும்  தெரியாது. கலகலப்பானவர்.   சிரித்தால் முத்து உதிரும் என்பார்களே…! அத்தகைய சிரிப்பு அவரது !

திடீரென்று  நோய்வாய்ப்பட்டார்  வங்கியில்   வைப்பிலிருந்த பணத்தை    அந்த  நபர்  கையாடியதையடுத்து  நிராதரவானார். படுக்கையில்  நிரந்தரமானபோது   அவரிடமிருந்தது – முதுமை – தனிமை  –  இயலாமை.

    குறிப்பிட்ட  நபரை   சட்டத்தின்   பிடியில்  சிக்கவைக்க  சில படைப்பாளிகள்   முனைந்தபோது  “ வேண்டாம்… அவனை மன்னித்துவிடுங்கள்”   என்று  பெருந்தன்மை   பேசியவர்.  இறுதியாக கலைஞர்  ஆட்சியிலிருந்தவேளையில்  அவருக்கு  உதவிப்பணம் கிடைக்க   சில  படைப்பாளிகள்  ஏற்பாடு  செய்தனர்.  சென்னை  பொரூர்   ராமச்சந்திரா   மருத்துவமனையில் மருத்துவக்கண்காணிப்பாளர்   டொக்டர்  மல்லிகேசனின் நேரடிக்கவனிப்பில்  மருத்துவமனைக்கட்டிலில்  முடங்கியிருந்தார்.

வேலூரிலிருந்து   சென்னைக்கு  வரும் வழியில்   குறிப்பிட்ட மருத்துவமனைக்கு   மனைவியுடன்  சென்றேன்.  மருத்துவர் மல்லிகேசனை   முதலில்  சந்தித்தேன்.  அவருக்கு  அங்கு  உயர்ந்த மரியாதை.   பாதுகாவல்  கடமையிலிருந்தவர்கள்  அவரது அலுவலகத்துக்கு  அழைத்துச்சென்றார்கள்.

என்னை  அறிமுகப்படுத்தியதும்  அவர்  ஏற  இறங்கப்பார்த்தார். அவுஸ்திரேலியாவிலிருந்து   வந்திருக்கின்றேன்    எனச்சொன்னதும் இந்தியரா  – இலங்கையரா…?  எனக்கேட்டார்.  “ இலங்கைத்தமிழன்”   என்றேன்.  அவரது  முகத்தில்  புன்முறுவல்.  அவர்   எதுவும்  சொல்லவில்லை.  தொலைபேசி  எடுத்து  யாருடனோ பேசினார்.   சில    நிமிடங்களில்  ஒரு  தாதி  வந்து  எம்மை அழைத்துச்சென்றார்.

“ பாட்டியை   பார்க்க  வந்தீங்களா….   தற்போது  பார்வையாளர்  நேரம் இல்லை.   சுப்ரீண்டன்    சொல்வதனால்   அழைத்துப்போகின்றேன்.” என்றார்  அந்தத்தாதி;.

எங்களுக்கெல்லாம்   ஒரு   படைப்பாளியாகத்தெரிந்த  –  வாழ்ந்த ராஜம்கிருஷ்ணன்   அந்த  மருத்துவமனையில்  தாதிகளுக்கும் மருத்துவர்களுக்கும்   ஒரு  பாட்டியாக  இருந்திருக்கிறார். அந்த  வோர்டில்   படுத்திருந்த  பெண்கள்    மற்றும்   பணியிலிருந்த தாதிமார்  எம்மை   விநோதமாக  பார்த்துக்கொண்டிருக்கின்றனர். மிகவும் கூச்சமாகவும்  இருந்தது.

“ அதோ… நீங்கள்  தேடிவந்த  பாட்டி…”  என்று   சொல்லி கைகாட்டிவிட்டு   அந்த தாதி   மறைந்தார். ஒரு   மூலையில்  கட்டிலில்  மறுபுறம்  திரும்பி  ஒருக்களித்து படுத்திருந்த  ராஜம்கிருஷ்ணன்   அருகில்  சென்றோம்.

“ அம்மா…” என்றேன்.

“ யாரு…” முகத்தை   திருப்பினார்கள்.  நாம்  முன்பு  பார்த்த செந்தளிப்பான   அந்த  முகம்  எங்கே…?   மீண்டும்  “யாரு…?”

“முருகபூபதி   அம்மா…”

அவரது   முகம்  ஆச்சரியத்தினால்   பிரகாசமானது.  படுக்கையிலிருந்து எழ  முயற்சித்தார். “ முடியலை… எல்லாம்   மாறிவிட்டது….  எல்லாம் மாறிவிட்டது…” என்று   அரற்றினார்.  பிள்ளைகளை   விசாரித்தார்.  திடீரென்று  விம்மி வெடித்து அழுதார்.  கரம்பற்றி  தேறுதல்  சொன்னேன். எனதும்   மனைவியினதும்  முகங்களை   ஊடுருவிப்பார்த்தார்.    “ ஞாபகம்   இருக்கு…இருக்கு.   பார்க்க  வந்தது  சந்தோஷம். செத்துப்போயிடலாம்.   ஏன்  இருக்கோணும்… எல்லாம்   மாறிட்டுது… ஆட்கள்   மாறிட்டாங்க…”

எனது   மனைவி   கைகளை  பிசைந்துகொண்டு  நின்றாள்.  நான் ராஜம்கிருஷ்ணனின்   கரம்பற்றி  தேறுதல்  வார்த்தைகளையே சொல்லிக்கொண்டிருந்தேன்.   அவரது  துயரத்தில்  தேறுதல் வார்த்தைகளின்   ஊடாக  மாத்திரமே   பங்குகொள்ளமுடியும்.

“ அம்மா   உங்களுக்கு  என்ன  வேண்டும்…?”

“ எதுவும்  வேண்டாம்…. இங்கே… எல்லாரும்  நல்லா… பார்க்கிறா… “

“ யாரும்  சமீபத்தில்  பார்க்க  வந்தாங்களா?”

அவரிடமிருந்து   விம்மல்.. ..கண்ணீர்தான்  பதில். மீண்டும்   மீண்டும்  தேறுதல்  வார்த்தைகள்தான்   என்னிடமிருந்து வெளிப்பட்டன.   அதற்கும்  புதிய  சொற்களை  தேடவேண்டிய  இயலாமை என்னைச்சூழ்ந்தபோது  அவரது  தலையை   தடவிவிட்டு விடைபெற்றேன். அவரைப்பார்க்கச் செல்லும்போதிருந்த  ஆர்வம் மறைந்து,   நெஞ்சில் பெரிய  பாரம்  ஏறியதுபோன்ற  உணர்வுடன் அந்த  மருத்துவமனையை   விட்டு  வெளியே   வந்தேன். எதிர்காலத்தில்  நானும்  பலரும்  சந்திக்கப்போகின்ற   முதுமை முன்னே வந்து பயமுறுத்துகிறது.

இறுதிக்காலத்தில்   தன்னை  ஆதரித்து  பராமரித்த  குறிப்பிட்ட இராமச்சந்திரா   மருத்துவமனை   ஆய்வு  கூடத்திற்கே  தனது  உடலை அவர்  தானமாக  வழங்கிவிட்டுச் சென்றுள்ளார். அவர்   தமது  பிரகாசமான கண்களை  நிரந்தரமாக  மூடும்பொழுது  அவருக்கு  90 வயது.

எனது  மேசையில்  சகோதரி  ராஜம்  கிருஷ்ணன்  எழுதிய  கடிதம் என்னைப்பார்த்துக்கொண்டிருக்கிறது. அவர்   இராமச்சந்திரா  மருத்துவமனையில்  அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் நீலாங்கரையிலிருந்து  2009   ஆம்   ஆண்டு  எழுதிய  கடிதம். 

தனக்குத்துணையாக  ஒரு  கண்  மாத்திரம் பார்வையுள்ள   மூதாட்டியை   வைத்துக்கொண்டார்.  அந்த மூதாட்டியும்   ஒரு  குடிகாரக்கணவனால்  கைவிடப்பட்ட  எழைப்பெண்.  எப்பொழுதும்  ராஜம்  கிருஷ்ணன்   பாதிக்கப்பட்டவர்கள்  பக்கமே நிற்பவர்.   அவர்களுக்காக   தனது  எழுத்தின்  மூலமும் செயற்பாடுகளிலும் குரல்கொடுத்து  வந்திருப்பவர். இறுதியில்  –  வாழ்வில்  வஞ்சிக்கப்பட்ட – பாதிக்கப்பட்ட  பெண்ணாகவே   முதியோர்  இல்லத்திலும்  பின்னர் மருத்துவமனையிலும் தஞ்சமடைந்தவர்.

அவர்  எனக்கு  எழுதிய  கடிதத்திலிருந்து  சில   பகுதிகள்: அன்புள்ள   நண்பர்  முருகபூபதிக்கு  வாழ்த்துக்கள்.   தங்கள் தொலைபேசி குரல்  கேட்டுப்பெரு  மகிழ்ச்சிகொண்டேன்.  கடிதமும் கிடைத்தது.   மிக்க நன்றி.  தங்கள்  நூல்கள்  அனைத்தும்  படித்தேன். கங்கை மகள்  –  கல்லும்  சொல்லாதோ  கதை  இரண்டுமே   மிக அற்புதமாக எழுதப்பட்டிருக்கின்றன.

புலம்பெயர்ந்து   வாழும்  மக்களின்  வலிகள் – இலக்கியமாக்கப்பட்டிருக்கிறது.   தமிழ்  எங்கள்  தாய்  நாட்டில்  வணிக   இலக்கியமாக  மனிதநேய  உயிர்த்துவத்தை   வெறும் எழுத்துக்களாக   சத்தற்றுப்போய்விட்ட    காலத்தில் –  வெளியிலிருந்து தங்களைப்போன்றவர்கள்   படைக்கும்  இலக்கியமே   உலக முழுவதுமான   மனிதத்துவத்துக்கு  ஏற்பட்ட  சோதனைகளைப்பதிவு செய்கிறது.

இதை   வெறும்  ஆவணமென்று  சொல்லிவிட்டதாகக் கருதவேண்டாம்.   எம்மவரும்  எங்கெங்கோ  புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள்.   தாய்த்தமிழை   இங்கேயே  வளரும்  தலைமுறைகள் மறந்து   ஆங்கிலத்தில்  எழுதுகிறார்கள். அந்நியச்சூழலில்   வேரறுபட்ட  நிலையில்  படைப்புத்திறனை   ஆங்கில   மொழியில்  வெளியிடுவது  கட்டாயமாகியிருக்கிறது.  அந்த நோக்கில் தங்கள்  மொழிப்பற்றையும்  கலாசாரங்களையும் காப்பாற்றுவதில்   உள்ள  சிரமங்கள்  புரிகிறது.  நான் வியந்து மலைக்கின்றேன். புலம்பெயர்ந்த  நாட்டில்  பழக்கமில்லாத  தொழில் –   மனவலிகள் – அப்படியும்   புரிந்துகொள்ளாத  இளைய   தலைமுறைகள் – இந்தப்பிடிப்பிலும்   பெண்ணுக்கு  வரன்  தேடும்போது ‘சாதி”யைக்குறிப்பாக்கும்   இறுக்கம்.   கதைகளில்  எல்லா   விவரங்களும்   நுட்பமாக  மனதைத்தொடுகின்றன. அந்த  நாட்டின்  மக்கள்  நலத்திட்டங்களில்  ஆசுவாசங்கள்  கூட மன அழுத்தங்களாகும்  தருணங்களை   உணரமுடிகிறது.  அந்த இளம்பிள்ளை அந்தப்போக்குவரத்து   நெரிசலில்  தனது  நண்பனான நாய்க்கு   உணவு  கொடுக்க  ஓடிவருவதை  –   இந்த  மாண்பை எப்படிச்சொல்ல…? இந்த  நூல்களைப்பற்றி  அமுதசுரபி  ஆசிரியர்  திருப்பூர் கிருஷ்ணனிடம்  தெரிவித்தேன்.

மாத  இதழ் – புலம்பெயர்ந்த  மக்கள் –  இலக்கியம்   என்று பொதுவாக   ஓர்  அறிமுகத்துடன்  கட்டுரை   ஒன்று   எழுதி  இன்று அனுப்பியுள்ளேன்.    வணிக  எழுத்துக்களே    மிகுதியான    இக்காலத்தில்   என்  போன்றோருக்கே  எழுத  இடமுமில்லை.   சினிமா –  ரி.வி. ரசனை மிகுதியாகிவிட்டதாலும்   இலக்கிய  இதழ்கள் ஆயிரம்   பிரதிகள்  கூடப்போவதில்லை   என்றறிகின்றேன்.  கடிதங்களில்  பழைய  நண்பர்களை   நினைவுகூர்ந்தேன்.  நடமாட்டம் முடங்கிப்போன   நிலையில்  தங்கள்  அன்பையும்  ஆதரவான நினைவில் அசைபோட்டுக்கொண்டு  ஆறுதல்  பெறுகின்றேன். தாங்கள்   வந்து சென்று  ஒரு வாரத்துக்குள்   மு.நித்தியானந்தனும் அவர்   துணைவியும்  வந்து  ஒரு மணிநேரம்  பேசினார்கள்;. கோத்தகிரி   மாநாட்டில்  நான்   வந்து  பேசியதை  நினைவு  கூர்ந்தார். இர. சிவலிங்கம்  –   திருச்செந்தூரன்  ஆகியோர் காலமாகிவிட்டதாகத் தெரிவித்தார். முன்னர்  தாம்பரத்தில்  எங்கள்  இல்லத்துக்கு  ஈழத்தமிழர்கள்  வந்து உறவாடிய   காலம்  மறக்க  முடியாதது.

மிக்க அன்புடன் ராஜம் கிருஷ்ணன்.

இலங்கைக்கும்   தமிழகத்திற்கும்  இடையே   இலக்கியப்பாலம் அமைத்தவர்    ராஜம்  கிருஷ்ணன்.  அந்தப்பாலத்தில்   பயணித்தவாறே    அவர்தம் நினைவுகளை  சுமந்து வாழ்கின்றோம்.

ராஜம்  கிருஷ்ணன்  பெற்ற விருதுகள் சில:

1950—நியூயார்க் ஹெரால்ட்  ட்ரிபியூன் சர்வதேச விருது

1953—கலைமகள் விருது

1973— சாகித்திய அகாதமி விருது

1975—சோவியத் லாண்ட் நேரு விருது

1991—திரு.வி.க. விருது

இவரின் படைப்புககள்:-

கூட்டுக்  குஞ்சுகள் – வனதேவியின் மைந்தர்கள்  – உத்தரகாண்டம்

மாறி மாறி பின்னும்  – மலர்கள்  –  பாதையில்  பதித்த அடிகள்

உயிர் விளையும் நிலங்கள்  –   புதியதோர் உலகம் செய்வோம்

பெண்  விடுதலை  –  இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை –

காலந்தோறும்  பெண்மை

கரிப்பு   மணிகள்  –  வளைக்கரம்   –  ஊசியும் உணர்வும்

வேருக்கு நீர்   –   பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி   –   இடிபாடுகள்

அலை வாய்க்கரையில்  –   சத்திய தரிசனம்

கூடுகள்   –  அவள்   –  முள்ளும் மலர்ந்தது

குறிஞ்சித் தேன்   –  சுழலில் மிதக்கும் தீபங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: