19.  கரையில் மோதும் நினைவலைகள்: துரையப்பா மேயரின் கொலை.

நடேசன்

கொக்குவிலில் ரயில்வே நிலையத்தில்  இறங்கி,  வீடு சென்றபோது இருளாகிவிட்டது. நான் விடுமுறையில் வருவேன் என,  வீட்டு விறாந்தையில் அம்மா உட்கார்ந்திருந்த காட்சி   இன்னமும் விழித்திரையில் பதிவாக  உள்ளது.

இருளில் வந்த  என்னை  முகத்தில்  முத்தமிட்டபடி  வரவேற்ற  அம்மா,  கேட்ட முதற்கேள்வி “அங்கு உனக்குச் சாப்பாடு ஒழுங்காகக் கிடைப்பதில்லையா?  “

 எந்தவொரு தாய்மாரும் தமது பிள்ளைகளிடம்  ஒழுங்காகப்  படிக்கிறாயா ?  என்று கேட்பதற்குப் பதிலாக  உடல் ஆரோக்கியத்தைப்  பற்றியே  கேள்வி கேட்டு  கவலைப்படுவார்கள். பெற்ற மனதின் இயல்பு அது. ஆனால் எனது கவலை வேறுவிதமாக இருந்தது.   மறுநாள்  காலை எவ்வளவு நேரத்தோடு எழுந்து  சியாமளா வீட்டிற்குச் செல்வது என்பதே அக்கவலை.

அக்காலத்தில் அலையற்ற குளமாக  யாழ்ப்பாணம் அமைதியாக இருந்தது. அடுத்தநாள் காலையில் , சைக்கிளில் நான் சுண்டிக்குளியில் உள்ள சியாமளாவின் வீட்டை  நோக்கிச் சென்றேன்.   சென்.  ஜோன்ஸ் கல்லூரிக்கு முன்பாக, அக்காலத்தில் மாநகரத் தந்தை துரையப்பாவின் வலதுகையாக இருந்த ஒருவரை எதிர்கொண்டேன்.

கறுப்பு சேர்ட்டும் பெரிய  மீசையும் கொண்ட அவர்,  உயரத்திலும் உடலமைப்பிலும்  எம் ஜி ஆர் உடன் சண்டையிடும் ஜஸ்ரின் என்ற பயில்வான் போன்றவர்.  நோஞ்சானாக  இருந்த எனக்கு அவரது உடலில்  ஒரு கவனிப்பு இருந்தது.

விடுமுறை கழிந்து   பல்கலைக்கழகத்திற்கு மீண்டும்  வந்த காலத்திலே 1975 ஜூலையில்,  யாழ்ப்பாணத்தின் முக்கிய அரசியல் கொலையாக கருதப்பட்ட  துரையப்பா மேயரின் கொலை நடந்தது. அந்தச் செய்தி எனக்குத் தெரிந்தபோது, அதன் தாற்பரியமோ,  முக்கியத்துவமோ புரியவில்லை. அது திட்டமிடப்பட்ட கொலை,  பிற்காலத்தில் அதுவே  இனத்தின் தூக்குக் கயிறாக விழும் என்பது கொலையை நடத்த உதவியவர்களுக்கே தெரியாது.

பிற்காலத்தில் அறிந்த விடயங்களின்படி,  1960 ஆண்டுகளில் நடந்த பாராளுமன்ற தேர்தல்களில்  அல்பிரட் துரையப்பா, பாராளுமன்றத்திற்குச் சுயேச்சை அங்கத்தவராக யாழ்ப்பாண மக்களால்  தெரிவு செய்யப்பட்டார்.அவருக்கு  ஆதரவு யாழ்ப்பாணத்தின் உயர் சாதியினரிடமிருந்து கிடைக்கவில்லை. பாஷையூர், கரையூரில் வசித்த மீனவர்களும்,  கொட்டடி  கொழும்புத்துறை போன்ற இடங்களில் வாழ்ந்த தமிழ் மக்களும் ,  சோனகத் தெருவில் வாழ்ந்த இஸ்லாமிய மக்களும்,  அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் வசித்த  கிட்டத்தட்ட  2000 சிங்கள மக்களுமே   துரையப்பாவுக்கு வாக்களித்தவர்கள்.

1970 ஆண்டு நடந்த தேர்தலில் யாழ்ப்பாணத் தொகுதிக்கு சி .எக்ஸ் மார்ட்டினை,  கொழும்பிலிருந்து தமிழரசுக்கட்சியினர் கொண்டுவந்தபோதும் துரையப்பாவின் ஆதரவு அசையவில்லை. இறுதிப்பாணமாக சாதிய அரசியல் பேசினார்கள் .    கடைசித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்  சி.  எக்ஸ் மார்ட்டின்,   “ நானும் உங்களைப்போல் கரையான்தான் “ எனப் பாஷையூரில் சொன்னதால் பாஷையூர் மக்கள் இரண்டாகப் பிரிந்தார்கள்.

அப்பொழுதும் நூறுக்குக் குறைந்த வாக்குகளால்  துரையப்பா தோற்றார் என்று அவரது உறவினர் எனக்குக் கூறினார்  . ஜி. ஜி. பொன்னம்பலத்தை விட கூடுதலான வாக்குகளும் பெற்றார். ஆனாலும் மீண்டும் துரையப்பா யாழ்ப்பாண மேயராகிறார். இந்த விடயங்களையெல்லாம் பற்றி, பின்னாளில் அவரைச் சுட்ட பிரபாகரன்  யோசித்திருக்க முடியாது.   அப்போது  அவர்  ஒரு  ஏவல் கருவியாகவே  நடந்துள்ளார் என்பதையே அனுமானிக்க முடியும்.

 ஒரு விதத்தில் விடுதலைப்புலிகளுக்கு டக்ளஸ் தேவானந்தா  எதிர்வினையாக  இருந்ததுபோல்,   துரையப்பா அன்று  தமிழரசுக்கட்சிக்கு  சிம்ம சொப்பனமாக  இருந்தார்.   துரையப்பா 1975 இல் கொலை செய்யப்படுகிறார். அதன்பின்பு 1977 இல்  வெற்றிவேல்  யோகேஸ்வரனால் யாழ்ப்பாணம் பிரதிநிதியாக முடிகிறது.

இவரையும் விட்டுவைக்கவில்லை.  1989 இல் இவரும் கொழும்பில் அமிர்தலிங்கத்துடன் சேர்த்து கொல்லப்படுகிறார்.

அத்துடன் ஆட்டம் முடியவில்லை. பின்னர் விதவைக்கோலத்துடன்  யாழ். மேயராக வந்த திருமதி சரோஜினி யோகேஸ்வரனையும் சுட்டுக்கொன்றது, அதன் பின்னர், 1998 இல் யாழ்ப்பாணம் மேயர் சட்டத்தரணி பொன். சிவபாலனையும் கூரையில் கிளைமோர் குண்டுவைத்து கொன்றது யார்? .

மொத்தத்தில் யாழ்ப்பாணத்திலிருந்த குறைந்தஅளவானவான  ஜனநாயகத்தை கருவில் சிதைத்தவர்கள் யார்?

இனி எப்படி நல்வவர்கள் அரசியலுக்கு வருவார்கள்?

ஏசுவை கொன்று சிலுவையில் அறைந்துவிட்டு மீண்டும் அவர் வருவார் என எதிரபார்கிறவர்கள்போல் நாம் ஜனநாயகத்தை குண்டுகளால் தகர்த்துவிட்டோம் ; ஜனநாயகத்தை, நாம் கொலை செய்தவர்கள்.

எப்படி சிங்களவர்களிடம் எதிர்பார்ப்போம்

எனது கதையில் கொஞ்சம் அரசியல் கலந்துவிட்டது . ஆனால் தவிர்க்க முடியாது.

——-

விடுமுறை முடிந்து மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு  வந்ததும் எங்கள் பிரிவில்  படித்த சீதா என்ற பெண்ணின் தந்தை  மாத்தறையில்  இறந்துவிட்டார்.  அந்த  மரணவீட்டிற்கு சகல மாணவர்களும்  சென்றோம்.  முதல் முறையாக  அப்போதுதான் தென்னிலங்கையின் பக்கம் சென்றேன்.   மரண வீடுகளுக்குத் தவறாது செல்வது என்பது நமது பழக்கமென நினைத்தேன்.  ஆனால்,  அது மிகவும் முக்கிய கடமையாக  சிங்கள மக்கள் மத்தியிலிருந்ததைக் காணமுடிகிறது .

சில வருடங்களுக்கு முன்பாக   நான் இலங்கை சென்ற வேளையில்,   முன்னாள் அமைச்சர் ரோகித போகல்லகம காலை  பத்து   மணிக்கு வரும்படி சொல்லியிருந்தார்.

நான் போய் அவருக்காகக் காத்திருந்தபோது மதியமாகிவிட்டது. எனது பசிக்கு அவரது வீட்டிலிருந்தவர் சிற்றுண்டி தந்தார். இறுதியில் மாலை மூன்று மணியளவில் ரோகித போகல்லகம வந்து,  நான்கு மரண வீடுகளுக்குப் போக வேண்டியதாக இருந்ததால் தாமதமாகிவிட்டது என்று மன்னிப்புக்கேட்டார்.

தேர்தலை நோக்கிய  அரசியல்வாதிகளுக்கு,  மரண வீடுகள்  முக்கியமாக அமைந்து விடுகிறது.

மரணவீடு என்பதால்  மாத்தறை செல்லும்போது,  கவலை தோய்ந்த முகத்தோடு சென்றாலும் மாத்தறையிலிருந்து கொழும்புக்கு திரும்புகையில்  பாடியபடி  மகிழ்ச்சியோடு  வந்தோம். ஆனால்,  அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. அரச போக்குவரத்து பஸ்கள் அனைத்தும் ஸ்தம்பிதமாகிவிட்டது.  வேலை நிறுத்தம். கொழும்பிலிருந்து செல்லும்  சகல போக்குவரத்துகளும் நின்று விட்டன.

 அக்காலத்தில் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் அரசு பதவியிலிருந்தது. அதிக அளவு தனியார் போக்குவரத்து சேவைகள் இல்லை. தொழிற்சங்கங்கள்,  அக்கால அரசைத் துப்பாக்கி முனையில் வைத்திருந்த காலமது.  அதேபோன்று வேலைநிறுத்தங்கள்  பிற்காலத்தில் நடைபெற்றதாக வரலாறு இல்லை. பல விடயங்களுக்காக நான் ஜே.  ஆர் ஜெயவர்த்தனாவை வெறுப்பவன்.  ஆனால்,  போக்குவரத்தில் தனியார் துறையை அனுமதித்தது இலங்கை மக்களைப் பொறுத்தவரையில் நன்மையான விடயம்.

பெண் மாணவிகளில்  பெரும்பாலானவர்கள் கொழும்பைச் சேர்ந்தவர்கள் என்பதால்,  அவர்கள் கொழும்பைச் சேராதவர்களை தங்கள் வீடுகளுக்கு அழைத்துச் சென்றார்கள். ஆண்களைப் பொறுத்தவரை ஜெயவர்த்தன என்ற சகமாணவன்,    கொழும்பில் இரத்மலானையில் வசிப்பவன்.  அதுவும் ஆண்களோடு.  அன்று நாங்கள் பத்துபேர்,  அவனது வீட்டில் தங்கினோம். தமிழர்களில் ஒரு மாணவன்  மகேந்திரா மட்டுமே மாத்தளையைச் சேர்ந்தவனாதலால்  அவனுக்குச் சிங்களம் பேசமுடியும்.  என்னுடன் சேர்த்து மற்றைய நான்கு தமிழ் மாணவர்களுக்கும் சிங்களம் சுட்டுப்போட்டாலும் வராது.

அந்த பஸ் –  ரயில் வேலை நிறுத்தம் எப்பொழுது  முடிவுக்கு வரும்  என்பதும்  தெரியாது.  மாற்றி அணிவதற்கு வேறு உடைகளும் இல்லை. ஒழுங்கான உணவில்லை.   படுக்கும்போது ஒரு சிலர் யன்னல் திரைச் சீலைகளை அணிந்தபடியிருந்தார்கள். எந்த விடயத்தையும் சிந்திக்க முடியாத நிலையிலிருந்தபோது,  ஐந்து சிங்கள நண்பர்களும் மகேந்திராவும் சிங்களத்தில் பேசியபடியிருந்தார்கள்.

 அப்பொழுது  மகேந்திராவிடம் ,    “ என்ன பேசுகிறீர்கள் ?   “ எனக்கேட்டேன்.  அதற்கு மகேந்திரா,    “ உனக்குச் சிங்களம் மொழி பெயர்ப்பது எனது வேலையில்லை   “ என்றான்.

உடனே  நான் துர்வாசராக மாறினேன்.  ஆனாலும்  அடக்கியபடி  அவனிடமிருந்து விலகினேன். ஒருவன்  மொழி ஒன்று தெரியாதபோது,   கல்வி பண்பாடு எதுவுமற்று அவன் மொழியற்ற கற்காலத்திற்குத் தள்ளப்படுகிறான். அவனுக்கு  உணர்வுகளை வெளிப்படுத்த முடியாது போகிறது.

இலங்கையில் சுதந்திர காலத்தில்  ஆறு  வீதமான இலங்கையருக்கே ஆட்சிமொழியாக இருந்த ஆங்கிலம் தெரியும். அந்த நேரத்தில்  தமிழ் தெரியாத சிங்களவர்களும்,  சிங்களம் தெரியாத தமிழர்களும்  எப்படி இருந்திருப்பார்கள் என்பதை உணரமுடிந்தது .

அந்த வீட்டில் அந்த நேரத்தில் வந்த  சினத்தை நான் கட்டுப்படுத்தினேன்.  ஆனால்,  இலங்கை அரசியல்வாதிகள் அந்தச்  சினத்தை தங்கள் அரசியல் முதலாக்கி வரவு வைத்து அரசியலில் முன்னேறினார்கள் . 

மாற்றாக  இரண்டு மொழிகளையும் கட்டாயமாக கற்கவேண்டியதாக பாடத்திட்டம் பாடசாலையிலிருந்திருந்தால் இலங்கையில் எந்தப்  பிரச்சினையும் வந்திராது என நான் கருதுகிறேன்.

 சென்னை

எழுதிய பேனையை மேசையில் வைத்துவிட்டு சுற்றியிருந்தவர்களைப் பார்த்தேன். அந்த அறையில் இருந்தவர்கள் ஈழ விடுதலைக்காக போரிட்ட இயக்கத்தின் பிரதிநிதிகள். ஏனக்குப் பக்கத்தில் இருந்தவர்கள் டாக்டர் சிவநாதன், டாகடர் ஜெயகுலராஜா, டாக்டர் சாந்தி இராஜசுந்தரம்.

எனக்கு வயிற்றைக் கலக்கியது. அமைப்பின் காரியதரிசியாக இருந்து தமிழர் மருத்துவ நிலயத்தில் நடந்த கூட்டமொன்றில் விபரங்களை குறிப்பெடுத்த என்னை நிறுத்த வைத்தது.

வெளியே சென்னை வெயில் தெருச்சண்டியன் போல் ஆர்ப்பரித்தது. அவனது வார்த்தை போல் உள்ளே வந்த காற்று சூடாக இருந்து. சூளைமேடு நெடுஞ்சாலையில் போகும் வாகனங்களின் இரைச்சலும் புகையும் மேலே எழுந்து 144 இலக்க முதல் மாடியில் இருந்த எமது காது, மூக்குத் துவாரங்களை மோதி அடைந்தன.

1985 ஜூலை சென்னை மரினா கடற்கரையில் தொடர் உண்ணாவிரம் நடத்த ஈழத்து இயக்கங்கள் தீர்மானித்தன. அதற்கு ஓருங்கிணைப்பாளராக தமிழ் மக்கள் விடுதலைக் கழக வாசுதேவா, என்னை முன்மொழிய விடுதலைப்புலிகளின் யோகியால் கைவிரல் மட்டும் உயர்த்தப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது

ஏற்கனவே ஈபி ஆர் எல் எவ் தலைவர் பத்மநாபா இப்படி தொடர் உண்ணாவிரம் நடத்த வேண்டும் என என்னிடம் பிரஸ்தாபித்திருந்தார். அக்காலத்தில் விடுதலைப்புலிகளுடன் மற்றய இயக்கங்கள் சேர்ந்து இருந்த காலம். தங்களது ஒற்றுமையை வெளிக்காட்ட அவர்கள் செய்யும் அரசியல் முயற்சி என நினைத்து மறந்திருந்தேன்

இதில் நான் முன் தள்ளுப்படுவேன் என எதிர்பார்க்கவில்லை. ஏற்கனவே விடுதலைப்புலிகள் ஆதரவாளர் டாக்டர் ஜெயகுலராஜா இருந்தார். அவர் எமது நிறுவனத்தின தலைவர் மடடுமல்ல வயதாலும் பெரியவர். அத்துடன் வெலிக்கடை பின்பு மட்டக்கிளப்பு சிறைகளில் இருந்தவர்.

அவரை விட்டு என்னை பிரேரித்ததை மற்றய இயக்கங்களும் அப்படியே ஏற்றுக் கொண்டனர்.

அக்காலத்தில் இயக்கங்கள் சேர்ந்திருந்தாலும் தங்களுக்குள் செல்லமாக ஒருவரை ஒருவர் சுட்டபடி இருந்தவர்கள். எல்லோரும் ஏகமனதாக ஒருவனை அங்கீகரிக்கும்போது என்னுள் பெருமைக்குப் பதிலாக பயம் ஏற்பட்டது. ஒருவிதத்தில் கிடாய் ஆட்டிற்கு மாலை போடுகிறார்களா என்ற எண்ணம் ஏற்பட்டது.

மனத்தைத் திறந்து நினைத்ததை வெளியே சொல்ல முடியாது. இயக்க ஒற்றுமைகள் பற்றி பலரிடம் நான் வலியுறுத்தியவன். வெலிகடையில் இறந்தவர்கள் பற்றிய விழிப்புணர்வை உண்ணாவிரதம் இருந்து ஏற்படுத்துவது நல்ல காரியம் என்பதாலும் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.

இதுவரையும் மருத்துவ விடயங்களில் ஈடுபடும்போது மனத்தில் எதுவித தயக்கமில்லை . இந்த விடயம் உண்ணாவிரதம் என்று சொன்னாலும் ஒரு அரசியல் பிரச்சாரம். அதுவும் தமிழக மக்களிடையே ஈழத்தின் தேவையை எடுத்து செல்லும் வழி என்பது புரிந்தால் தயக்கம் ஏற்பட்டது.

வேறு வழியில்லை. ஏற்றுக் கொண்டேன்

அதற்கான வழிமுறைகள் பேசப்பட்டன. இந்தியக் கட்சிகளின் அரசியல் தலைவர்களைக் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளப் பண்ணுவது அதேபோல் தமிழ் இயக்கத் தலைவர்கள் பிரமுகர்களை அழைப்பது என முடிவு செய்யப்பட்டது. வேலைகள் பிரித்தளிக்கப்பட்டது என்னைப் பொறுத்தவரை அதிக வேலை இருக்கவில்லை. வருபவர்களை வரவேற்பது அவர்களுடன் பேசுவதும் கொடுக்கப்பட்டது.

எந்த இயக்கமும் நேரடியாக உண்ணாவிரதத்திற்கு சம்பந்தப்படவில்லை.

சிலகாலம் முன்பாக யாழ்பாணத்தில் உண்ணாவிரதத்தை குழப்பிய விடுதலைப்புலிகள், உண்ணாவிரமிருந்தவர்களை இந்தியாவுக்கு தூக்கி வந்திருந்தார்கள். மற்றவர்களுக்கும் உண்ணாவிரதம் தங்களது வழியல்ல எனக்காட்ட வேண்டும். இலை குழை எங்கள் உணவு அல்ல. இது சாதாரண ஈழ மக்களின் உண்ணாவிரதம். எல்லாருக்கும் பொதுவானது. இயக்க அரசியல் இல்லாதது எனக் காட்டவேண்டியிருந்தது.

மரினா கடற்கரையில் தெருவிற்கும் மணற்பிரதேசத்திற்கும் இடையில் புல் முளைத்த பிரதேசத்தில் பந்தல் போட்டு பானர் கட்டி மூன்று நாட்கள் நடந்த இந்த உண்ணாவிரத நிகழ்சிக்கு நான் நேரடியாக பல தலைவர்களை சென்று அழைத்தேன். என் நினைவில் இருப்பவர்கள் அக்கால எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் மற்றும் வக்கீலாக இருந்த வானமாமலை போன்ற கம்யுனிஸ்ட் கட்சித் தலைவர்.

அமிர்தலிங்கம் தம்பதியினரை மிகவும் நினைவில் இருப்பதன் காரணம் வீடு சென்ற அழைத்தபோது அவர்கள் வருவோம் என்று சொன்ன நேரத்திற்கு பத்து நிமிடங்கள் முன்பாக வந்துவிட்டார்கள் மற்றயவர்கள் எல்லோரும் சொல்லிய நேரத்திற்கு பிந்தியே வந்தார்கள்.

கத்தரி வெயில் எரிக்கும் பகல் முழுவதும் உண்ணாவிரதம் நடக்கும். குறைந்த பட்சம் நூறு பேர்களாவது பந்தலில் எப்போதும் இருப்பார்கள். இயக்கத்தினர்கள் தமிழநாட்டு பிரமுகர்கள் பலர் வந்து அமர்ந்து பேசி செல்லுவார்கள்.

வாழ்கையில் விரதமே இருக்காத நான் உண்ணாவிரமிருந்த நாட்கள். பெரும்பாலானவர்கள் வந்து சிலமணி நேரமிருந்து போவதால் ஒரு அடையாள உண்ணாவிரதம் எனத்தான் சொல்லவேண்டும். நாங்கள் எதிர்பார்த்தபடி தமிழ்நாட்டு பத்திரிகைள் எல்லாம் படத்துடன் பிரசுரித்தன.

இந்த நிகழ்சியை இலங்கை ஊடகங்கள் பதிவு செய்தார்களா எனத் தெரியாத போதும் ஈழவிடுதலை இயக்கங்கள் ராஜீவ்காந்தி, ரொமேஸ் பண்டாரி போன்றவர்கள் முன்பாக கட்டாயமாக ஓன்றாக கூட்டங்களில் கலந்து கொண்டார்கள். இவர்கள் மூன்று நாட்கள் தன்னார்வமாக இருந்தததனால் உண்ணாவிரதம் இருந்த நாட்கள் முக்கியமானது.

30 வருடங்கள் பின்பாக இந்த மூன்று நாட்களில் எனது மனத்தில் நிற்கும் இரண்டு விடயங்கள் முக்கியமானதாக கருதுகிறேன்.

உண்ணாவிரதத்தின் முதல்நாள் என்னை நோக்கி மஞ்சள் அரைக்கை சட்டையும் அழகான மீசையும் கொண்ட சிவந்த நிறமான ஒருவர் வந்து கை கொடுத்தார். நானும் கை கொடுத்தவிட்டு பக்கத்தில் நின்ற வாசுதேவாவைப் பார்தேன்

‘இவர்தான் உமா மகேஸ்வரன்’ என்றார்.

நான் அது வரையிலும் உமாவை நேரில் பார்த்ததில்லை இலங்கையில் இருந்தபோது படங்களில் பார்த்திருக்கிறேன்.

அவருடன் கை குலுக்கியது எனக்குள் சந்தோசத்தை ஏற்படுத்தவில்லை.

அக்காலத்தில் தமிழர் மக்கள் விடுதலைக் கழகத்தில் நடந்த கொலைகளை கேள்விப்பட்டிருநதேன் அதைவிட எனது மனைவியின் உறவினர் மகன் உமாவின மெய்காப்பாளர்களில் ஒருவராக இருந்தார். அவரது பெற்றோர்கள் இயக்கத்தின் உட்கொலைகளினால் எப்போது மகனை யார் மூலம் இயக்கத்தில் இருந்து கழட்டி கனடா அனுப்பலாம் என்று பேசிக்கொண்டிருந்ததும் அதற்கு அவர்கள் பணம் தருவதற்கு தயாராக இருந்ததும் எனக்குத் தெரியும். இப்படியான விடயங்களால், காணாமலே உமாவின் மீது ஒரு வெறுப்பு ஏற்பட்டது.

உமா பார்பதற்கு அழகான மனிதர் மடடுமல்ல அவரது தோற்றம் தன்னம்பிக்கையை காட்டும் தன்மையுள்ளது. தலைமைக்குத் தேவையான கவர்ச்சி உள்ள மனிதர். இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளில் அமிர்தலிஙகம் அவர்களுக்கு இருந்த அதே கவர்ச்சி உமாவிடம் இருந்தது. தோற்றத்தில் அப்படியானவர்கள் இன்னமும் ஈழத்தமிழ் அரசியல்வாதிகளில் நான் காணவில்லை ஆனால் அவர்கள் இருவரும் அதை சரியாக பயன்படுத்தவில்லை என்பது உண்மை.

உமா மகேஸ்வரன் மீது ஏராளமானவர்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள். ஒரு காலத்தில் 15000 இளைஞர்கள் அவரை நம்பினார்கள். அதில் 6000 மேல் ஆயுதப் பயிற்ச்சி பெற்றவர்கள். அவரிடம் சிறந்த தளபதிகளாகவும் இரண்டாம் கட்டத்தலைவர்களாக இருந்தவர்கள் பலரை தனிப்பட்டரீதியில் அறிந்தவன். தமிழ்நாட்டில் முதல்வர் எம் ஜி ஆர் கூட நம்பிக்கை வைத்திருந்தார். தன்னிடம் இருந்த சிறந்த விதை நெல்லை சோறாக்கிய மனிதர் என்பது எனது கருத்து. சமீபத்தில் அவரது இயக்கத்தில் முக்கியமான பொறுப்பில் இருந்த ஒருவரை சந்தித்தபோது அவர் சொல்லிய விடயம் ஆச்சரியம் அளிக்கவில்லை.

அவர் சொன்னார் “ தமிழ்மக்கள் விடுதலைக்கழகத்தின் மத்திய கூட்டம நடக்கும்போது எவரும் குறிப்பு எடுப்பதில்லை காரணம் குறிப்பு லீக்காகிவிடும் என்பதால். ஆனால் உமா எழுதும்போது ஒரு பக்கத்தில் மற்றவர்கள் கருத்தை செவி மடுத்து எழுதுவார்.

ஒரு நாள் மற்றய அங்கத்தவர் சொன்னார் இன்றைக்குப் பார் இந்த குறிப்புக் கடுதாசிக்கு என்ன நடக்கிறது என்று.

நான் தொடர்ந்து உமாவைப் பார்த்தபோது அந்த கடுதாசி ஆரம்பத்தில் மடிக்கப்பட்டது பின்பு வெளியே செல்லும்போது மிகவும் கசக்கப்பட்டு, மெதுவாக நடைபாதையில் எறியப்பட்டது’

இந்த விடயத்தை மனக்கண்ணில் கொண்டுவர வேண்டுமா?

கற்பனை தேவையில்லை

சமிபத்தில் இராஜவரோதயம் சம்பந்தன் பத்திரிகையை பார்த்தபடி சிறையில் வாடும் கைதிகளை பற்றி பேசியது முகநூலில் உள்ளது

நாம் நம்பிய தமிழ்த் தலைவர்கள் பெயர் மாறினாலும் ஒரேமாதிரியான நிழல்கள் போல் தொடர்வதை காட்டவே இந்த சம்பவத்தைக்குறிப்பிட்டேன்.

மனிதர்களின் நிழல்களில் உருவ வித்தியாசம் தெரிவதில்லைத்தானே?

உண்ணாவிரதத்தின் போது முதல் இரண்டு நாளிலும் விடுதலைப்புலி இயக்கத்தினரில் முக்கியமானவர்கள் வரவில்லை என்பது ஒரு குறையாகத் தெரிந்தது. அவர்களும் ஏற்றுக்கொண்டே இந்த உண்ணவிரதம் அரங்கேறியது

தமிழகத்தில் இருந்த காலத்தில் எப்பொழுதும் சிலர் என்னுடன் இருப்பார்கள் அவர்கள் இயக்கத்தவர்களாகவோ இல்லை மருத்துவ நிலயத்தில் என்னுடன வேலை செய்பவர்களாகவே இருக்கும்.

மூன்றாம் நாள் மாலை ஏதோ வேலை செய்து கொணடிருந்த

என்னிடம் சில மட்டக்கிளப்பு நண்பர்கள் ‘அண்ணே காசியண்ணை வந்திருக்கிறார்’

‘சரி அவரை கூட்டிக்கொண்டு வந்து பந்தலில் இருந்துங்கோ. நான் வந்து பேசுகிறேன்’ என்று சொல்லி விட்டு, மீண்டும் அவர்களிடம் சொன்னேன் விடுதலைப்புலிகளும் சேர்ந்து கூட்டாக இருக்கிறபோது அந்த வவுனியாவில் ஏன் ஈபி ஆர் எல் எவ் தோழர் ஒருவரை சுட்டார்கள் எனக்கேள். அவர்களும் போராடத்தானே வந்தார்கள்?’

அக்காலத்தில் வவுனியாவில் பலஸ்தீன விடுதலை இயக்கத்தில் இராணுவப் பயிற்சி பெற்ற றீகன் என்ற தோழர் ஒருவர் எதுவித காரணமும் இன்றி விடுதலைப்புலிகளால் சுடப்படடிருந்தார்.

மாலை நேரமானதால் வங்காளகுடாவின் அலை மோதுவதற்கு போட்டியாக கடற்கரையில் மக்கள் வந்து கொண்டிருந்தார்கள். எங்களையும் ஆவலுடன் பார்த்தார்கள். அவர்கள் தலைவர்கள் செய்து கொண்டிருந்த விடயங்களை ஈழத்தவர்கள் ஏன் செய்கிறார்கள் என்ற கேள்வி அவர்கள் மனத்தில் எழுந்திருக்கும்.

எனது பொறுமையும் கடைசி நாளானதால் குறைந்து விட்டது.

வேலைகள் பல முடிக்கவேண்டும் என்பதால் பரபரப்படைந்தேன்.

வந்தவர்களுக்கு நன்றி கூறவேண்டும். உண்ணாவிரதத்தை முடிக்கும் நேரம் வந்து விட்டது பந்தலை கலைக்கவேண்டுமென்பதாலும் என பல விடயங்கள் மனத்தில் இருந்ததால் நம்நாட்டு புரட்சிக் கவிஞரை மறந்துவிட்டேன்.

எல்லா விடயங்கள் முடித்தபின்பு அந்த மட்டக்கிளப்பு நண்பர்களிடம் கேட்டேன் ‘என்ன நடந்தது கவிஞர் காசியானந்தன் வரவில்லையா?’

‘அண்ணே நீங்க என்னை வவுனியாவில் ஈபி ஆர் எல் எவ் தோழரை சுட்டது என் எனக் கேட்க சொன்னதால் நாங்கள் கேட்டோம் அதற்கு அவர் தம்பியிடம் கேட்டு சொல்கிறேன்’ என வந்த ஓட்டோவில் அடையாறு திரும்பிவிட்டார்’ என சிரித்தார்கள்.

பந்தலுக்கு வராமல் சென்ற காசியானந்தனை 2002ல் எஸ் போ நடத்திய சென்னை இலக்கிய மகாநாட்டில் எனது பக்கத்து சீட்டில் இருந்தபோது இன்னும் தம்பியிடம் வவுனியாவில் ஈபி ஆர் எல் எவ் தோழரை ஏன் சுட்டது என்று கேட்கவில்லையா எனக் கேட்க நினைத்தேன்.

இரண்டு விடயங்கள் என்னைத் தடுத்தன.

பக்கத்தில் இருந்த மனைவி மற்றது, அந்த கூட்டத்தில் இருந்து தம்பிடம் கேட்க என எழுந்துபோனால் எனது வண்ணாத்திக்குளத்தை பதிப்பித்த எஸ்போவிற்கு மனம் குழம்பி விடும் என்பதால் அவர் பக்கமே திருப்பாமல் மூன்று மணித்தியாலம இருந்தேன்.

நான் நினைக்கிறேன் மீண்டும் அந்த கேள்வியைக் கேட்டால் ஆனால் ‘அதற்குள் தம்பி 2009 மே18 ல் போய்விட்டது’ எனப் பதில் வரலாம்.

“19.  கரையில் மோதும் நினைவலைகள்: துரையப்பா மேயரின் கொலை.” மீது ஒரு மறுமொழி

  1. அலெக்ஸ்பரந்தாமன். Avatar
    அலெக்ஸ்பரந்தாமன்.

    தங்களின் இப்பதிவின் மூலம் இதுவரை புலப்படாத பல சங்கதிகளை அறியக்கூடியதாக உள்ளது. தெரிந்த உண்மைகள் அனைத்தும் இன்னும் வெளிச்சத்திற்கு வரட்டும் எழுத்து வடிவத்தில்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: