அவுஸ்திரேலியா -மொழிபெயர்ப்புகள் 

‘எஸ்.பொ’  : ஆபிரிக்க  இலக்கியங்களை  தமிழுக்குத்தந்த முன்னோடி

மூன்று  நூல்களை  மொழிபெயர்த்த                                            ‘ நல்லைக்குமரன்  ‘  குமாரசாமி    

                                                               முருகபூபதி

ஆங்கிலம்  சர்வதேச  மொழி.  அதனால்   ஏராளமான  பிறமொழி இலக்கியங்கள்  ஆங்கிலத்தில்  மொழிபெயர்க்கப்படுகின்றன.  ருஷ்ய இலக்கிய   மேதைகள்  லியோ  டோல்ஸ்ரோய்,  மாக்ஸிம்  கோர்க்கி ஆகியோரினதும்  படைப்புகளின்  ஆங்கில  மொழிபெயர்ப்பின்  ஊடாகவே  சிலர்  அவற்றை  தமிழுக்குத்தந்தனர்.  பல  மேனாட்டு  மொழிகளை தெரியாத   தமிழர்கள்  அவற்றின்  தமிழ்  மொழிபெயர்ப்பின்  ஊடாகவே   அந்தநாட்டு  இலக்கியங்களை  படித்தனர்.

தமிழர்   புலம்பெயரத் தொடங்கியபின்னர்,  அவர்தம்  மத்தியிலிருந்த படைப்பாளிகள்   தமது  படைப்புகளை  ஆங்கிலத்திலும்  மொழிபெயர்த்து வெளியிட  ஆர்வம்  காட்டிவருகின்றனர்.   எனினும்  எதிர்பார்க்குமளவுக்கு  மொழிபெயர்ப்பு  முயற்சிகள்   நடப்பதில்லை.

ஆங்கிலப்புலமையுள்ள   தமிழ்ப்படைப்பாளிகளில்  ஒரு  சிலரைத்தவிர ஏனையோர்  தமது  தமிழ்ப்படைப்புகளை  மொழிபெயர்ப்பு  ஆற்றல் மிக்கவர்களின்  ஊடாகவே   ஆங்கிலத்தில்  வெளியிட்டுவருகின்றனர்.

பெரும்பாலான    மொழிபெயர்ப்பாளர்கள்  குறித்து    இலக்கிய உலகில் கவனிப்பு  குறைவு.

ஈழத்தமிழர்கள்  புலம்பெயர்ந்து  வாழும்  நாடுகளில்  அடுத்த தலைமுறையினர்   தமிழை  மறந்துவிடுவார்கள்  என்ற  அச்சம்  நீடிக்கிறது.   அதனாலும்  எம்மவர்கள்  தமது  தமிழ்ப்படைப்புகளை ஆங்கிலத்தில்   மொழிபெயர்த்து  வெளியிடுவதற்கு  ஆர்வம் காண்பிக்கின்றனர்.   மொழிபெயர்ப்பு  முயற்சிகள்  தொடர்பாக  கடுமையான விமர்சனங்களும்    முன்வைக்கப்படுகின்றன.   சொல்லுக்கு  சொல் மொழிபெயர்த்தால்   நடையில்  வரட்சியிருக்கும்,  படிக்க  முடியாது  என்ற கருத்தும்  இருக்கிறது.

கனடாவில்   வதியும்  இலக்கியவாதி  அ.முத்துலிங்கம்  2008   ஜூன் குமுதம்  தீராநதியில்,    ‘எண்ணாமல்   துணிக’ என்ற  தலைப்பில் மொழிபெயர்ப்புப்பணிகள்   தொடர்பாக  அருமையான  கட்டுரையொன்று எழுதியிருக்கிறார்.

அதில்   அவர்  இரண்டுபேரின்  கருத்துக்களை  பதிவுசெய்கிறார்.  ஒருவர் – ஆங்கிலத்தில்   நவீன  தமிழ்  இலக்கியங்களை   மொழிபெயர்த்து  அனுபவம் பெற்றவர்.   அவரிடம்  மொழிபெயர்ப்புகள்  வெற்றிபெற  என்ன செய்யவேண்டும் ?  என்று  கேட்கிறார்.

பதில்:- “ தமிழ்  வார்த்தை  அடுக்கு  ஆங்கில  வார்த்தை   அடுக்குக்கு எதிரானது.   வார்த்தைக்கு  வார்த்தை  மொழிபெயர்ப்பதைத் தவிர்த்து அர்த்தத்துக்கு  முக்கியத்துவம்  தரவேண்டும்.  ஆங்கில  மரபுத்தொடரில் நல்ல   பரிச்சயம்  தேவை.   எங்கள்  மொழிபெயர்ப்புகள்  அங்கேதான்  சறுக்குகின்றன.”

ஒரு பேராசிரியர்   முத்துலிங்கத்திற்கு  அளித்த  பதில்  இவ்வாறு அமைந்திருக்கிறது:-  “ ஒரு  நல்ல  மொழிபெயர்ப்பு   என்பது பரிச்சயமானதாகவும் அதேசமயம்  அந்நியமானதாகவும்  இருக்கவேண்டும். உண்மையான   மொழிபெயர்ப்பு  என்பது  கருத்தை   மட்டும்  கடத்துவது அல்ல.    ஒரு  மொழியின்  அழகையும்  கடத்துவதுதான்.   மொழிபெயர்ப்பில், இலக்கு  மொழி  உயிர்த்துடிப்புடன்  வரவேண்டும்  என்றால்  மொழிபெயர்ப்பாளரிடம்  ஆழ்ந்த  ஆங்கிலப்புலமையும்,  கற்பனையும்  இருந்தாலே  சாத்தியமாகும்”

 அவுஸ்திரேலியா   பல்லின  கலாசார நாடு.  பல  மொழி  பேசும்,  பல இனத்தவர்கள் , பல  தேசத்தவர்கள்  வாழும்  ஒரு  குடியேற்ற  நாடு. ஒப்பீட்டளவில்  இலங்கையின்  சனத்தொகைதான்  இந்தப்பெரிய கண்டத்திலும்   என்பது  குடிசனமதிப்பீடு  தெரிவிக்கும்  உண்மை. வெள்ளை   இனத்தவர்களிடம்  ஆட்சி  அதிகாரம்  இருந்தபோதிலும் இத்தேசத்தின்  பூர்வீக  உரிமைக்குரியவர்கள்  அபோர்ஜனிஸ்  மக்கள். அவர்களின்  பண்பாட்டுக்கோலங்களில்  அவர்கள்  வரையும் புள்ளிக்கோல  ஓவியங்களும்  டிரிடிடிஜூ   என்ற  வாத்தியக்கருவியும்   முக்கியமானவை.

அபோர்ஜனிஸ்  இனத்தைச்சேர்ந்த  ஹென்றி  லோசன்  என்பவர் புகழ்பெற்ற  இலக்கியப்படைப்பாளி.  இவரது  கல்லறையை அவுஸ்திரேலியா  தஸ்மானியாவில்  போர்ட் ஆதர்  என்னுமிடத்தில் பார்த்திருக்கிறேன்.   அவருடைய  சில  சிறுகதைகளை   ஆங்கில மூலத்திலிருந்து  தமிழுக்கு  மொழிபெயர்த்தவர்  சிட்னியில் மறைந்த மூத்த எழுத்தாளர்  காவலூர்  ராஜதுரையின்  மகன்   நவீனன் ராஜதுரை.    இவர்  தனது  தந்தையின்  சில  கதைகளையும் ஆங்கிலத்தில்  மொழிபெயர்த்து  நூலுருவாக்கியுள்ளார்.

அவுஸ்திரேலியா  கன்பராவில்  வதியும்  ஆழியாள்  மதுபாஷினி உரத்துப்பேச,   துவிதம்,  கருநாவு, நெடு மரங்களாய் வாழ்தல்  ஆகிய  கவிதைத்தொகுப்புகளை வெளியிட்டிருப்பவர்.   இவரும்  ஆங்கில  மொழிவாயிலாக  சில ஆதிவாசிகளின்  கதைகள்,  கவிதைகளை   தமிழுக்கு மொழிபெயர்துள்ளார்.    ஆர்ச்சி வெல்லர்,  சாலிமோர்கன்,  மெர்லிண்டா போபிஸ்,   ஜாக் டேவிஸ்,  எலிசபெத்  ஹொஜ்சன்,  பான்சி  ரோஸ் நபல்ஜாரி  ஆகியோரின்  படைப்புகள்  சிலவற்றை  (சிறுகதை, கவிதை) தமிழுக்குத்தந்துள்ளார்.    தொடர்ந்தும்  மொழிபெயர்ப்பு  பணிகளில் ஆழியாள்   மதுபாஷினி  ஈடுபட்டுவருகிறார்.

அவுஸ்திரேலியாவில்  90   களில்   வெளிவந்த  மரபு (ஆசிரியர்: விமல்  அரவிந்தன்)   இலக்கியச்சிற்றேட்டில்  முன்னாள்  பேராதனை பல்கலைக்கழக  விரிவுரையாளர்  கலாநிதி  காசிநாதன்,   விஜய்தான் தேத்தா   எழுதிய   ஹிந்திக்கதையை   (மனுஷி என்ற இதழில் பிரசுரமானது)  ஆங்கில   மூலத்திலிருந்து ‘ துவிதம்’ என்ற பெயரில் மொழிபெயர்த்து   எழுதியிருந்தார்.   குறிப்பிட்ட  கதை  ‘பஹலி’ என்ற பெயரில்  ஹிந்தியில்   ஷாருகான்  நடித்து  வெளியானது.

 சிட்னியில்  வதியும்  மாத்தளை  சோமு,  அவுஸ்திரேலிய ஆதிவாசிகளின்  கதைகள்  சிலவற்றை   ஆங்கில  மூலத்திலிருந்து தமிழுக்குத்தந்துள்ளார்.   அவை  கணையாழி  அவுஸ்திரேலிய சிறப்பிதழில்  (2000)   வெளியாகியுள்ளன.

அவுஸ்திரேலியாவிலும்  தமிழகத்திலும்  வாழ்ந்து  2014  இல்  மறைந்த   எஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ) சில  ஆபிரிக்க இலக்கியங்களை  தமிழுக்கு  தந்துள்ளார்.  சீநு  ஆச்சுபேயின்  மக்களின் மனிதன்,   செம்பென்  ஒஸ்மானின்  ஹால,   நகீப் மஹ்பூஸின்   மிராமார்,  ஜொன்னி விராவின் வண்ணத்துப்பூச்சி எரிகிறது,   மையகென்ரோவின்  நித்திரையில் நடக்கும் நாடு  ஆகிய ஆபிரிக்க   இலக்கியங்களை  அவர்  தமிழில்  மொழிபெயர்த்துள்ளார்.

எஸ்.பொ.   தமிழகத்திலிருந்தே  இவற்றை  மொழிபெயர்த்து  தமது மித்ர பதிப்பகம்  ஊடாக  வெளியிட்டிருந்தார்.  அவரிடமிருந்த ஆங்கிலப்புலமை,  ஆப்பிரிக்க  இலக்கியங்களை  தமிழ்  வாசகர்களுக்கு   வழங்கவேண்டும்  என்ற  வேணாவாவை பூர்த்திசெய்துள்ளது.

அவுஸ்திரேலியா  மெல்பனில்  வதியும்  நல்லைக்குமரன்  குமாரசாமி  தொடர்ச்சியாக  மூன்று  நூல்களை  மொழிபெயர்த்தவர். தொழில்   ரீதியாக    மொழிபெயர்ப்பாளராக  இங்கு  பணியாற்றும் இவர் , ஆங்கிலத்திலும்  கவிதைகள்  எழுதுபவர்.  நல்லைக்குமரனின் ஆங்கிலக்கவிதைகள்  அமெரிக்காவில்  வெளியான சர்வதேசக் கவிஞர்களின்   தொகுப்பிலும்  இடம்பெற்றுள்ளது.

 இங்கு  உதயம் ( தமிழ்-ஆங்கிலம்  இருமொழி  மாத  இதழ்) வெளியிட்ட நடேசனின்   வேண்டுகோளை   ஏற்ற  நல்லைக்குமரன்  குமாரசாமி, பிரசித்தி   பெற்ற  ஜோர்ஜ்  ஓர்வெல்  எழுதிய Animal Farm  என்ற நாவலை   விலங்குப்பண்ணை  என்ற பெயரில்  மொழிபெயர்த்தார். இந்நாவல்   உதயம்  இதழில்  தொடராக  வெளிவந்து  பின்னர் நூலுருப்பெற்றது.   இதுவரையில்  இரண்டு  பதிப்புகளை  இந்நூல் கண்டுள்ளமை   குறிப்பிடத்தகுந்தது.

Animal Farm    சிலநாடுகளில்  மேல்வகுப்பு  மாணவர்களின் பாடநூலகத்திகழுகிறது.   அத்துடன்  திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவில்  வதியும்  எம்மவர்கள்  ஆங்கில மூலத்திலிருந்து   தமிழுக்குப்  பெயர்த்த  படைப்புகள்  பற்றிய  தகவல் குறிப்புகளை   பதிவுசெய்யும்  அதேவேளை  இந்த மொழிபெயர்ப்பாளர்களின்  ஆங்கில  மொழிபெயர்ப்பு முயற்சிகளையும்   சொல்ல  விரும்புகின்றேன்.

இலங்கையிலிருந்து  புலம்பெயர்ந்து  முன்னர்  பாப்புவாநியுகினியிலும்  பின்னர்  அவுஸ்திரேலியா   சிட்னியிலும் வாழ்ந்துகொண்டிருக்கும்   கவிஞர் அம்பி,  பல   நூல்களின்  ஆசிரியர். தாம்  முன்பு  எழுதிய  கிறீனின்  அடிச்சுவட்டில்  என்ற  நூலை  தாமே ஆங்கிலத்தில்   மொழிபெயர்த்து, Scientific Tamil Pioneer  என்ற  நூலை வெளியிட்டார்.   அம்பி, Lingering Memories, String of Pearls ஆகிய ஆங்கில   சிறுவர் (இலக்கிய) கவிதை  நூல்களையும்   எழுதியுள்ளார்.

 விலங்குப்பண்ணை   மொழிபெயர்ப்பையடுத்து   நல்லைக்குமரன் குமாரசாமி,  இலங்கையிலும்  தமிழ் இலக்கிய  உலகிலும்  அறியப்பட்ட மல்லிகை   ஆசிரியர்  டொமினிக் ஜீவாவின் வரையப்படாத   சித்திரத்துக்கு  எழுதப்படாத  கவிதை (சுயசரிதை) நூலை Undrawn Portrait For Unwritten Poetry என்ற  பெயரில் மொழிபெயர்த்தார்.

 இங்கு  வதியும்  விலங்கு  மருத்துவர்  நடேசனின்   வண்ணாத்திக்குளம் நாவலையும்  நல்லைக்குமரன் Butterfly Lake  என்ற  பெயரில் மொழிபெயர்த்தார்.   இலங்கையில்  பிரசித்திபெற்ற  பதிப்பகம்  விஜித்த   யாப்பா  பப்ளிகேஷன்  இந்நூலை  வெளியிட்டமை குறிப்பிடத்தகுந்தது.

 வண்ணாத்திக்குளம்   நாவலின்  முதற்பதிப்பு  சென்னை  மித்ர பதிப்பகத்திலிருந்து   வெளியானதையடுத்து,  அதனைப்படித்த திரைப்பட  இயக்குநர்   மகேந்திரன்  அதனை  திரைப்படமாக்குவதற்கு முயற்சித்து   திரைக் கதை வசனமும்  எழுதினார்  என்பது பழையசெய்தி.   ஏற்கனவே  சில  நாவல்களை  அவர் திரைப்படமாக்கியவர்   என்பது  கலை,  இலக்கிய  உலகம்  அறிந்த செய்தி.   தமிழில்  எழுதப்பட்ட  வண்ணாத்திக்குளம்  நாவல்  இரண்டு பதிப்புகளைக்கண்டுள்ளது.   அதனை  மடுள்கிரியே  விஜேரட்ன    இலங்கையில்  சிங்கள  மொழியில்  பெயர்த்தார்.

 சிட்னியில்   வதியும்  பேராசிரியர்  ஆ.சி. கந்தராஜாவின்  தேர்ந்தெடுத்த பத்துக்கதைகளின்   தொகுப்பு  ஆங்கிலத்தில்  மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது.    தமிழ்நாட்டைச்சேர்ந்த  ஆங்கிலத்துறை பேராசிரியர்   பார்வதி வாசுதேவ்  என்பவர்  மொழிபெயர்த்தார்.  நூலின் பெயர்:- Horizon.

அத்துடன்,  பார்வதிவாசுதேவ்,  நடேசனின்  உனையே மயல்கொண்டு என்ற  நாவலை Lost In You  என்ற   பெயரில்   மொழிபெயர்தார்.

 தமிழ்நாடு  இராணி  மேரி  கல்லூரியில்  ஆங்கில  இலக்கிய விரிவுரையாளராகப்பணியாற்றிய  கவிஞி  சுமதி தமிழச்சி தங்கபாண்டியன்  சில  வருடங்களுக்கு  முன்னர் அவுஸ்திரேலியாவில்  ஆய்வுப்பணிக்காக  வந்தவர்.  

இங்கு வருவதற்கு  முன்னர்  தமது  கல்லூரியில்  புகலிடத்  தமிழர்களின்  ஆங்கில  இலக்கிய  முயற்சிகள்  பற்றி உரையாற்றும்போது,   அவுஸ்திரேலியா   மெல்பனில் வாழ்ந்த அருண்.விஜயராணியின் ( இவர் கடந்த 2015 டிசம்பரில் மெல்பனில் மறைந்துவிட்டார் )  தொத்து வியாதிகள்  (கணையாழி அவுஸ்திரேலிய சிறப்பிதழில் வெளியானது)   என்ற சிறுகதையை  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து    (Contagious Diseases ) சமர்ப்பித்தார்.

” புத்தாண்டின்  முன்னிரவுப்பொழுது.  வறண்ட  கோடையின் மத்தியில்   வெக்கையானதொரு  இரவு.  திசையெங்கும் திணறடிக்கும்  கும்மிருட்டு..!  காய்ந்த  ஓடைப்பாதையின் புதர்மூடிய  வரப்புகளும்  கண்ணுக்குத்தென்படாத  காரிருள். வானைக்  கருமேகமெதுவும்  சூழ்ந்திருக்கவில்லை.  வறண்ட நிலத்தின்  புழுதிப்படலமும்  தொலைதூரத்தில்  எங்கோ                   எரியும் காட்டுத்தீயின்  புகையுமே  அந்த  இரவின் இருளைக்கனக்கச் செய்திருந்தன.”

இவ்வாறு ஆரம்பிக்கிறது ஹென்றி லோசனின் ஒற்றைச்சக்கர வண்டி  என்ற சிறுகதை.

அவுஸ்திரேலியாவின் மகத்தான சிறுகதையாசிரியர் எனக்கொண்டாடப்படும் பிரபல கவிஞரும் எழுத்தாளருமான ஹென்றி ஹெட்ஸ்பார்க் லோசன் 1867 ஆம் ஆண்டில் நியூ சவுத்வேல்ஸ்  மாநிலத்தில்  க்ரென்ஃபெல் பிரதேசத்தில் ஒரு தங்கச்சுரங்க வயற்பகுதியில் பிறந்தவர்.

இந்தத்தேசத்திற்கு நாம் சூட்டியபெயர்கள்: கங்காரு தேசம், கடல் சூழ்ந்த கண்டம், புல்வெளிதேசம். கைதிகள் கண்ட கண்டம்.

இங்கு தங்க வயல்களும் இருந்திருக்கின்றன. மனிதன் மண்ணை அகழ்ந்தான், மரங்களை வெட்டினான். இயற்கையை அழித்தான். ஜீவராசிகளையும் கொன்றான். மண்ணிலிருந்த தங்கத்தையும், வைரத்தையும் உலோகங்களையும் சுரண்டி எடுத்தான்.

இயற்கைக்கும் கோபம் வருமா..? என்பதை அதன் எதிர்பாராத சீற்றத்தினால் ஏற்படும் பேரழிவுகளிலிருந்தே பார்க்கின்றோம்.

” கோடையில் ஒருநாள் மழைவரலாம்”  என்று கவிஞர்கள் பாடலாம்.

ஆனால், கவிஞராகவும் வாழ்ந்திருக்கும் ஹென்றி லோசன்                      ( 1867 – 1922 ) , ஒரு கோடைகாலத்தை கண்ணையும் கருத்தையும் கவரும் விதமாகவே வர்ணித்திருப்பதையே  இங்கு  சொன்னேன்.

154 ஆண்டுகளுக்கு  முன்னர்இந்த மண்ணில் பிறந்து, 99 வருடங்களுக்கு முன்னர் மறைந்துவிட்ட ஒரு இலக்கியமேதை எழுதியிருக்கும் சிறுகதைகளை எமக்குத்  தமிழில் தந்திருப்பவர், ஹென்றிலோசன் பிறந்த அதே நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் லிவர்ஃபூல் நகரத்திலிருக்கும் கீதா மதிவாணன். இவர் சிறந்த ஒளிப்படக்கலைஞருமாவார்.

இலங்கையில் சித்திரலேகா  மௌனகுரு  பல வருடங்களுக்கு  முன்னர்  தொகுத்து வெளியிட்ட  இலக்கிய  உலகில் கவனிப்புக்குள்ளான  ‘சொல்லாத  சேதிகள்’ கவிதை  நூலில் இடம்பெற்றுள்ள  ரேணுகா  தனஸ்கந்தாவும்  அவுஸ்திரேலியா மெல்பனில்   வசிக்கிறார்.  இவர்  இலங்கையில்  ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியவர்.

 முருகபூபதியின்  புதர்க்காடுகள்  என்னும்  சிறுகதையை  ரேணுகா Bush Walk  என்ற  பெயரில் மொழிபெயர்த்தார்.   இச்சிறுகதை  இலங்கையில்  The Island  பத்திரிகையில் வெளியானது.

 கனடாவில்  வதியும்  சியாமளா  நவரத்தினம்  அங்கு  தொழில் ரீதியாக  மொழிபெயர்ப்பாளராக  பணியாற்றுபவர்.  மும்மொழிகளிலும்  பரிச்சயம்  மிக்க  இவர் (தமிழ், ஆங்கிலம், சிங்களம்)  சில வருடங்களுக்கு  முன்னர்   அவுஸ்திரேலியாவுக்கு வருகைதந்தார்.

 சியாமளா,  அருண்.விஜயராணியின்  ‘கன்னிகாதானங்கள் ‘ கதைத்தொகுப்பிலிருந்த  அனைத்துக்கதைகளையும்,  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.   எனினும்  இந்த  மொழிபெயர்ப்பு  இன்னமும் நூலுருவில்   அச்சாகவில்லை.

 சியாமளா   அவுஸ்திரேலியா  வாழ்  படைப்பாளிகள்  சிலரதும்  இங்கு சிறிதுகாலம்  வசித்தவர்களினதும்  சிறுகதைகளை  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

இவர்  மொழிபெயர்த்த,   எஸ்.கிருஷ்ணமூர்த்தி,  ரவி, கல்லோடைக்கரன்,   நித்தியகீர்த்தி,  அ.சந்திரகாசன்,  புவனா ராஜரட்னம், நடேசன்,  ஆவூரான்,  ரதி,  ஆசி. கந்தராஜா,  அருண்.விஜயராணி, முருகபூபதி,   தி.ஞானசேகரன்,  த.கலாமணி  ஆகியோரின் கதைகளுடன்  நவீனன்  ராஜதுரை  மொழிபெயர்த்த  ஆழியாள் மதுபாஷினியின்  ஒரு  கதையுடன்  மொத்தம்  15  கதைகளின் தொகுப்பு  Being Alive  கடந்த  2011 ஆம்  ஆண்டு  தொடக்கத்தில் கொழும்பில்  நடந்த  சர்வதேச  தமிழ்  எழுத்தாளர்  மாநாட்டில் பேராசிரியர்  எம்.ஏ. நுஃமான்  தலைமையில்   இடம்பெற்ற  மொழிபெயர்ப்பு   அரங்கில்  வெளியிடப்பட்டது.  இதனை அறிமுகப்படுத்தி  உரையாற்றிய  திறனாய்வாளர்  கே.எஸ். சிவகுமாரன்,  பின்னர்  அவுஸ்திரேலியா  வந்தபொழுதும்  அதனை அறிமுகப்படுத்தி  உரையாற்றியதுடன்  Observer  பத்திரிகையிலும் எழுதியிருந்தார்.

 இந்த  ஆக்கம்  தகவல்  குறிப்பேயன்றி  விரிவான  திறனாய்வு  அல்ல.   அவுஸ்திரேலியாவில்  மேற்கொள்ளப்பட்ட  மொழிபெயர்ப்பு முயற்சிகள்  பற்றிய  அறிமுகம்  மாத்திரமே.

இது  இவ்விதமிருக்க  அவுஸ்திரேலியாவில்  வதியும்  சகுந்தலா கணநாதன் என்னும்  இலக்கிய  ஆர்வலர்  ஆங்கிலத்தில்   எழுதிய White Flowers of Yesterday   என்ற  வரலாற்றுப்புதினம்  எழுதியுள்ளார். பிரான்ஸ் நாட்டின்  1711 – 1724  காலகட்டத்தை  சித்திரிக்கும்  புதினம் அது.

முருகபூபதியின் சில சிறுகதைகள் சிங்கள மொழியில் வெளியாகியுள்ளது. குறிப்பிட்;ட மொழிபெயர்ப்பு நூலின் பெயர் மதக்கசெவனெலி. இதன் ஆங்கிலப்பதம் Shadows Of Memories இதனை இலங்கையில் மொழிபெயர்த்தவர் ஏ.சி. எம். கராமத்.

  அவுஸ்திரேலியாவில் ஆங்கில மொழியை  பிரதானமாகப் பயிலும் எம்மவரின்  பிள்ளைகள்,  எதிர்காலத்தில்  தமிழ்  இலக்கியங்களை தமிழில்  படிக்காதுபோனாலும்  ஆங்கிலத்தின்  ஊடாக  படிப்பதற்கான வாய்ப்பிருக்கிறது.

 இதுவரையில்  அவுஸ்திரேலியாவிலும்  தமிழர்  புலம்பெயர்ந்துவாழும்   ஏனைய  நாடுகளிலும்  ஆங்கிலம்  மூலம் கல்வி  பயிலும்  இளம்தலைமுறையினர்  மத்தியில்  வாசிக்கும் ஆர்வமுள்ளவர்களிடம்  இந்த  மொழிபெயர்ப்புகள் சென்றடையவேண்டும்.

அவர்களிடம்   இம்மொழிபெயர்ப்பு  குறித்த  சிந்தனை  எவ்வாறு பதியப்படுகிறது  என்பதை  படைப்பாளிகள்  தெரிந்துகொள்ள வேண்டும்.   சுத்தியும்  சுத்தியும்  சுப்பரின்  கொல்லைக்குள் நின்றுகொண்டு  மூத்ததலைமுறையினர்  மாத்திரம்  பரஸ்பரம் இலக்கியம்   பேசாமல்,  இளம் தலைமுறையினரையும்  தாம்  நடத்தும் இலக்கிய  விழாக்கள்,  சந்திப்பு  அமர்வுகளுக்கு  அழைத்து  அவர்களிடம்  இந்த  ஆங்கில  மொழிபெயர்ப்புகள்  எத்தகைய தாக்கத்தை   ஏற்படுத்தியுள்ளன  என்பதை  அறியவேண்டும்.

 இலக்கிய  உலகில்  மொழிபெயர்ப்பாளர்களுக்குரிய  இடம் இப்பொழுதும்   முறையாக  கவனிக்கப்படுவதில்லை.  இந்நிலை மாறவேண்டும்.

 மொழிபெயர்ப்பு  படைப்புகள்  ஏராளமாக  வெளியாகும்  தற்காலத்தில் அவைகுறித்த  விமர்சனங்களும்  வளர்ந்துகொண்டிருக்கின்றன. இலங்கையிலும்  தமிழகத்திலும்  வெளியாகும்  சிற்றிதழ்கள் மொழிபெயர்ப்புகளுக்கு   சிறந்த  களம்  வழங்கிவருகின்றன.

 இந்த   ஆக்கத்தின்  ஆரம்பத்தில் பதிவுசெய்யப்பட்ட                         அ. முத்துலிங்கம் அவர்களின் இரண்டு  கருத்துக்களை  மீண்டும் நினைவுபடுத்துவதுடன்,   ஜெயமோகன்  தெரிவித்துள்ள  கருத்தையும்   பதிவுசெய்து   நிறைவு   செய்கின்றேன்.

   ஜெயமோகன்  சொல்கிறார்:-  “நல்ல  மொழிபெயர்ப்பானது  அழகான மொழிபெயர்ப்பு  அல்லது  பயனுள்ள  மொழிபெயர்ப்பு  என இருவகைப்படும்.   ஒரு  படைப்பிலக்கியம்  மொழியாக்கம் செய்யப்பட்டால்,  அதன்  படைப்பூக்கத்தின்  பெரும்பகுதியை  நம்மில் கொண்டுவந்து  சேர்க்கவேண்டும்   என்ற   நோக்கத்துடன் அம்மொழியாக்குநர்    செயல்பட்டிருக்கவேண்டும்” (நூல்: எதிர் முகம் –  இணைய  விவாதங்கள்)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: