இன உறவுக்கு; மடுள்கிரியே விஜேரத்ன

தமிழ் – சிங்கள இலக்கிய

 மொழிப் பரிவர்த்தனைக்கு பாலம் அமைத்த

 மடுள்கிரியே விஜேரத்ன

                                                                                  முருகபூபதி

“ இன நல்லிணக்கத்திற்காக  இலங்கையிலும் வெளிநாடுகளில்    புலம் பெயர்ந்தும்  வாழும்  தமிழ் – சிங்கள எழுத்தாளர்கள் கடுமையாக உழைக்கவேண்டும்”

இவ்வாறு கடந்த 2017 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு வருகை தந்திருந்தபோது, மெல்பனில் நடந்த 17 ஆவது தமிழ் எழுத்தாளர் விழாவில் உரையாற்றியவர்  மடுள்கிரியே விஜேரத்ன.

இவர் மீண்டும்,  மெல்பன் – கன்பரா இலக்கியவாதிகள் இணைந்து  மொழிபெயர்ப்பு இலக்கியத்தில் தமிழ் என்னும் தொனிப்பொருளில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதி நடத்தவிருக்கும் மெய்நிகரூடான கருத்தரங்கில் உரையாற்றவுள்ளார்.

 ” தமிழ் – சிங்கள  இனங்களினதும் தாய்மொழிகளுக்கு இடையில் கருத்து ரீதியாக  அதிகம்  ஒற்றுமை இருக்கிறது. மொழிகளுக்கிடையில் இருக்கும் தொன்மையான உறவு இனங்களிடத்திலும் நீடித்திருக்கவேண்டும்” என்றும்  அன்றைய தமிழ் எழுத்தாளர் விழாவில் அவர் மேலும் பேசுகையில் குறிப்பிட்டிருந்தார்.  

தமிழில் சரளமாக உரையாடும் ஆற்றல் மிக்கவரான அவர்,   இலங்கையில் சில  தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் எழுத்தாளர்களின் படைப்பு  இலக்கிய நூல்களை தமது தாய்மொழியான சிங்களத்திற்கு மொழிபெயர்த்திருப்பதுடன்,  பல சிங்கள இலக்கியங்களையும் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.

  குறிப்பிட்ட  தமிழ் எழுத்தாளர் விழாவில் மடுள்கிரியே விஜேரத்ன தொடர்ந்து பேசுகையில் கூறியவற்றிலிருந்து சில வரிகளை மீண்டும் அவர் அவுஸ்திரேலியா நடத்தவிருக்கும் அரங்கு ஒன்றில் உரையாற்றுவதற்கு அவர் இணையும் வேளையில் நினைவூட்டலாம்.

  ”   ஆறுமுகநாவலர் இலங்கையில் தோன்றியிராவிட்டால், இலங்கையில் தமிழ் மொழி தழைத்து ஓங்கியிருக்காது. அவர் தமிழுக்கும் சைவத்திற்கும் ஆற்றியுள்ள தொண்டு மகத்தானது. நான் எனது பட்டப்படிப்பு  ஆய்விற்கு அவரது வாழ்வையும் பணிகளையுமே தெரிவுசெய்தேன்.

சின்னஞ்சிறுவயதிலேயே சகோதர தமிழ் மொழியையும் நேசித்து படித்தமையால்,  பின்னாளில்  சங்க இலக்கியம் முதல் நவீன தமிழ் இலக்கியம் வரையில் மட்டுமல்ல இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்ற எம்மவர்களின் படைப்பு இலக்கியங்களையும் படித்து அவற்றையும் சிங்கள மொழிக்கு பெயர்த்து எமது சிங்கள வாசகர்களுக்கு  அறிமுகப்படுத்திவருகின்றேன்.

இவ்வாறு  இரண்டு தரப்பிலும் மொழிபெயர்ப்பு முயற்சிகள்   தொடர்ந்து நடைபெறல் வேண்டும். இரண்டு இனங்களும் பரஸ்பரம் மொழிகளை எழுதவும், பேசவும் முயன்றால், இனங்களின் உணர்வுகளையும் பண்பாட்டுக்கோலங்களையும் புரிந்துகொள்ள முடியும். நாம் இனநல்லிணக்கத்திற்காக கடந்து செல்லவேண்டிய தூரமும் அதிகம். சமகால ஈழத்து எழுத்தாளர்கள் மட்டுமல்ல புலம் பெயர்ந்து வாழும் எழுத்தாளர்களினாலும் அந்தத்தூரத்தை விரைந்து கடக்க முடியும் “

இவ்வாறு உறுதியான நம்பிக்கை தெரிவிக்கும் அவர், இலங்கை  மலையக நாட்டார் பாடல்கள் சிலவற்றையும் கவிஞர் வைரமுத்துவின் சில கவிதைகளையும்  சிங்களத்தில்  மொழிபெயர்த்தவர்.  அத்துடன் அந்த பாடல்களை தமிழிலும் அதே ராகத்துடன் சிங்கள  மொழிக்கு பெயர்த்து  பாடியும் காண்பிக்கும் ஆற்றல் மிக்கவர்.

சுவாமி விபுலானந்த அடிகளார் பற்றியும் சிங்களத்தில் நூலொன்றை எழுதியிருப்பவர் மடுள்கிரியே விஜேரத்ன.

இந்தப்பதிவை படிக்கும் வாசகர்களுக்கு அவரை  மேலும் அறிமுகப்படுத்துவதற்கு விரும்புகின்றேன். 

வவுனியாவின் எல்லையில்   மடுக்கந்தை என்ற  அந்த  அழகிய  கிராமத்தில்  வசித்த  மக்கள்  துயில்              எழுந்திருக்காத   புலராத பொழுதிலே,  அந்தச்சிறுவன் அதிகாலை நான்கு  மணிக்கு முன்பே எழுந்து, கால்நடையாக  சுமார்  ஆறுமைல் தூரம்   ஒற்றையடிப்பாதையிலும்  வயல் வரப்புகளிலும்  நடந்து  சமணங்குளம்  தமிழ்ப்பண்டிதரிடம்            வருவான்.  அவ்வேளையில் அவன் வவுனியா இரட்டைப்பெரிய குளத்தில்  தனது  ஆரம்பக்கல்வியைத் தொடர்ந்துகொண்டிருந்தான். தாய் மொழியும் வீட்டு மொழியும் சிங்களம். ஆங்கிலம் படிக்க சரியான வசதி  வாய்ப்புகள்  இல்லை.  அயல் கிராமங்களில் வாழ்ந்தவர்கள்  தமிழர்கள். அதனால், அவர்களுடன் பழகி உறவாடும் சந்தர்ப்பங்களும்  அச்சிறுவயதில்  அவனுக்கு  கிடைக்கிறது.

தமிழைப்பேசவும்  புரிந்துகொள்ளவும் பழகிவிடுகின்றான். ஆங்கிலம் அந்நிய தேசத்திலிருந்து வந்த மொழி. அருகிலேயே தொன்மையான தமிழ் மொழி வாழ்கிறது. இதனைவிட்டு விட்டு எதற்காக அந்நியமொழிக்காக ஏங்கவேண்டும்  என்ற  சிந்தனை அந்த இளம் உள்ளத்தில்  பிறக்கிறது. அயலில் சமணங்குளத்தில் பண்டிதர் கந்தையா என்றொருவர் ஆசிரியராகவும்  அதேசமயத்தில்  விவசாயியாகவும்                          வசிப்பதாக அறிந்துகொள்கின்றான்.

அவரைத்தேடிச்  சென்று, தனக்கு தமிழ் சொல்லித்தரும்படி கேட்கின்றான். அவர்  ஒரு  நிபந்தனை  வைக்கிறார். ” என்னிடம் தமிழ் படிக்கவருவதாயிருந்தால்,  அதிகாலை 4 மணிக்கு முன்பே வந்துவிடவேண்டும்.  நான் காலை 6 மணிக்கெல்லாம் வயலுக்குப்போய்விடுவேன். அதன் பின்னர் பாடசாலைக்குச்செல்வேன். மாலையில்  வீடு திரும்பினாலும் உனக்கு தமிழ்ப்பாடம் சொல்லித்தருவதற்கு எனக்கு நேரம் இல்லை. மீண்டும் வயல், தோட்டம்  என்று  போய்விடுவேன். அதனால் உனக்கு தமிழ் சொல்லித்தருவதற்கு  அதிகாலை  வேளைதான்  உகந்தது. அதற்கு சம்மதமாயிருந்தால்  நாளை முதல் வந்துவிடு.” 

அதிகாலைக்குளிரில்  வீட்டில்  போர்த்திப்படுத்திருக்க    வேண்டிய அச்சிறுவன்  தமிழ் மீது  கொண்டிருந்த காதலினால், ” காலை எழுந்தவுடன்  படிப்பு”  என்று  பாடிக்கொண்டே  காடு, மேடு,  குளம், குட்டை  கடந்து  ஒற்றையடிப்பாதையால்  வந்து  பண்டிதர்              கந்தையாவிடம்  தமிழ்  எழுதவும்  பேசவும் கற்றுக்கொள்கின்றான். பாரதியிலிருந்து  தமிழை  எளிமையாகச்சொல்லிக்கொடுத்த அந்தப்பண்டிதரும்,  செய்யுள்கள்,  இலக்கணம்,  நன்னூல், பத்துப்பாட்டு, திருக்குறள்,  சிலப்பதிகாரம்,  கம்பராமாயணம்  எல்லாம்                சொல்லிக்கொடுக்கிறார்.

இளைமையில்  கல்வி  சிலையில்  எழுத்து  என்பார்களே… அவ்வாறே தனது  பால்ய காலத்திலேயே  தமிழை ஆழ்ந்து நேசித்துக் கற்று தமிழ்ப்பண்டிதர்  பரீட்சையிலும்  தேறி  பின்னாளில்                        எழுத்தாளராகவும்  சிறந்த  மொழிபெயர்ப்பாளராகவும், நூலாசிரியராகவும்   மிளிர்ந்திருப்பவர்தான்  மடுளுகிரியே விஜேரத்தின.

தனக்கு  தமிழ் கற்பித்துத்  தந்த பண்டிதர் கந்தையா  தன்னை தமது மகன்போன்று  அன்புசெலுத்தியதை  நினைவுபடுத்துகிறார். அந்த அதிகாலைவேளையில் அவரிடம் சென்றால்,  பசியோடு வரும்  எனக்கு  அவர் தோசை, இடியப்பம், புட்டு முதலான  காலை உணவும் தந்து  உபசரித்தார்  எனவும்  நன்றியோடு  கூறுகிறார்  மடுளுகிரியே விஜேரத்தின.

அதென்ன  மடுளுகிரியே என்று உங்கள் பெயரின் முன்னால் ஒரு சொல்வருகிறதே  எனக்கேட்டேன். உடனே  அவர், ” மாவை நித்தியானந்தன், மாவை  சேனாதிராஜா, திக்குவல்லை  கமால்,  சில்லையூர்  செல்வராசன்,  முல்லை மணி, வாகரை வாணன்,  காவலூர்  இராசதுரை  என்றெல்லாம்  தங்களது                  இயற்பெயர்களுக்கு  முன்னால்  தாங்கள் பிறந்த ஊரின்  பெயரையும் வைத்துக்கொள்வதில்லையா…?  அதுபோலத்தான்  எனது பிறந்த ஊர் மடுக்கந்தை.  அதன்  அர்த்தம்  மடுளுகிரிய. ” எனச்சொன்னவரிடம் முழுப்பெயரும்  கேட்டபொழுது,  அவர் மீதான வியப்பு மேலும் பன்மடங்காகியது. அவரே சொன்னார்: சுபசிங்ஹ முதியான்சலாகே கம்மஞ்சிராலகே நங்ஹமிகே விஜேரத்ன.

வவுனியாவின்  எல்லைக்கிராமமான மடுக்கந்தையில்   ஆரம்பப்பாடசாலையில்  படித்துக்கொண்டிருந்த 15 வயது  மாணவர்தான்  விஜேரத்ன. வவுனியா இரட்டைபெரிய குளத்தில் 1956 ஆம் ஆண்டு பிறந்த இவருடைய வாழ்விடம் தமிழ் சூழ்ந்த பிரதேசமாக  இருந்தமையால், பால்ய காலத்திலிருந்தே தமிழில் பேசும்  இயல்பும்  வந்திருக்கிறது.

தனது  ஆரம்பக்கல்வியை  இரட்டைப்பெரிய குளம், மற்றும் உளுக்குளம்  அரசினர் பாடசாலைகளிலும்  உயர் வகுப்பை வவுனியா காமினி வித்தியாலயத்திலும்  பயின்ற விஜேரத்ன, வவுனியாவில் தமிழ்சங்கத்தின்  தமிழ்ப்பண்டிதர் பரீட்சைக்கும் தோற்றியிருக்கிறார். களனி பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் பயின்று கலைப்பட்டதாரியுமானார்.  

 பேராதனை, கொழும்பு பல்கலைக்கழகங்களில்  தொலைத்தொடர்பு மூலம்  பட்டங்களை (Post Graduate ) பெற்றுக்கொண்டிருக்கும் இவர், முதுகலைமானிப்பட்டத்தை  ஶ்ரீ ஜெயவர்தன புர பல்கலைக்கழகத்திலும்,  தத்துவம் தொடர்பான  கற்கை நெறியில் கலாநிதிப்பட்டத்தை  களனி பல்கலைக்கழகத்திலும் பெற்றிருப்பவர். 

தமது வாழ்நாளில் பெரும்பகுதியை கற்றலிலும் மொழிபெயர்ப்பிலும் செலவிட்டிருக்கும் மடுளுகிரியே விஜேரத்ன, சந்தைப்படுத்தல் (Higher Diploma in Marketing)  மற்றும் வங்கித்துறையிலும் (Higher Diploma in Banking ) பயின்று தேர்ச்சி பெற்றிருக்கின்றார்.  தேடல் மனப்பான்மையுடன் அயராமல் இயங்கியிருக்கும் இவர்,   பழந்தமிழ் இலக்கியங்களையும்  நவீன தமிழ் படைப்பிலக்கியங்களையும்  தொடர்ந்து படித்துவந்தவர்.

தான் படித்து  மொழிபெயர்க்க விரும்பிய தமிழ் நூல்களையும் சிங்கள மொழிக்கு  வழங்கியிருக்கிறார். 


  1. இலங்கை   தமிழ்ச்சிறுகதைகள் சிலவற்றை  தெரிவுசெய்து  உருமைய ( உரிமை) என்ற பெயரிலும் தந்திருக்கும்  இவர்  மொழிபெயர்த்த  இதர  தமிழ்  நூல்கள் பின்வருமாறு:

    மமதா ஒபமவெமி ( நான் என்னும் நீ – எம். எச். எம் அக்ரோஸ் எழுதியது) சுவாமி விபுலானந்தர் வாழ்க்கைச்சரிதம்,                   பத் பிட                                                           ( இலங்கைத்தமிழ்ச்சிறுகதைகள்) நிராய                                          ( துன்பக்கேணியில் – செ. யேகாநாதன் எழுதிய நாவல்) ஒகய ( கானல் – நாவல் – கே. டானியல் எழுதியது) சமணலவெவ ( வண்ணாத்திக்குளம் – நாவல் – நடேசன் எழுதியது) ஹிம வெஸி ராத்திரிய ( பனிபெய்யும் இரவுகள் – ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் எழுதியது) மலேசியன் ஏர்லைன் ( சிறுகதைகள் – நடேசன் எழுதியது)  ரத்தரங் ஹிரகெதர வெசன மினிஸ்ஸு – (பொற்சிறையில் வாடும் புனிதர்கள் நாவல் – தெணியான்)  அபார யாத்ரா – நீண்ட பயணம் ( நாவல் – செ. கணேசலிங்கன்) ரது அஹச                                             ( செவ்வானம்  நாவல் –                                                                            செ. கணேசலிங்கன்)  யாப்பணே ராத்திரி (யாழ்ப்பாணத்து ராத்திரிகள் – கதைகள் – செங்கைஆழியான்)

இவை தவிர பல சிங்கள எழுத்தாளர்களின் படைப்புகளை தமிழுக்கும் மொழிபெயர்த்துள்ளார். சிறந்த சிங்களச்சிறுகதைகளை தெரிவுசெய்து தமிழுக்கு வழங்கியிருக்கும் மடுளுகிரியே விஜரத்ன, அதற்கான சுதந்திர இலக்கிய விருதினையும்  1990  இல் பெற்றவர்.

  பேராசிரியர் சோமரத்ன பாலசூரிய, சேபாலி மயாதுன்ன, குணசேகர குணசோம, குணசேன விதான, சிபில் வெத்தசிங்க, வண. கங்கொடவில சோம தேரர், தெனகம ஶ்ரீவர்தன, கமால் பெரேரா, வண. போதி பாலதேரர் ஆகியோரின் நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்தவர்.

அத்துடன் தமிழ் கிராமியக்கதைகளை இரண்டு பாகங்களில் சிங்களத்திற்கு வரவாக்கியிருக்கிறார். சிங்கள மொழி பேசுவோர், இலகுவாக தமிழைக்கற்கும் வகையில் பயிற்சி நூல்களும் எழுதியவர். இவ்வாறு மொழிபெயர்ப்பு பணிகளுக்கிடையே படைப்பிலக்கியத்துறையில் ஈடுபட்டு,  தமது தாய்மொழியில் ஆறு சிறுகதைத்தொகுதிகளையும், இளையோருக்கான இரண்டு நாவல்களையும் சிறுவர் இலக்கியம் சார்ந்த நூலும் எழுதியிருக்கிறார்.

தமிழ் – இந்து கலாசார நூல்களின் வரிசையில் மகா சிவராத்திரி, தைப்பொங்கல், தீபாவளி, நவராத்திரி, சிங்கள – தமிழ் புதுவருடப்பிறப்பு ஆகியன பற்றியெல்லாம் எழுதியிருப்பவர் மடுளுகிரியே விஜேரத்ன.

 மகாகவி பாரதி, அழ. வள்ளியப்பா  கவிதைகள் சிலவற்றையும்  சிங்கள வாசகர்களுக்கு  வரவாக்கியிருக்கும் இவரை பன்னூல் ஆசிரியர் என்றே சுருக்கமாக குறிப்பிடலாம்.

இலங்கையிலும் இந்தியாவிலும் இவரது பணிகளுக்காக விருதுகளும் கிடைத்துள்ளன. இரண்டு மொழிகளிலும் தேர்ச்சியிருந்தமையால், இன நல்லிணக்கம் தொடர்பாக வடக்கு – கிழக்கு உட்பட தென்னிலங்கையில்  நடைபெற்ற பல நிகழ்ச்சிகளிலும் உரையாற்றியவர்.  சிறந்த  சிங்களப்படங்களுக்கான                         தேர்விலும் நடுவராக  பணியாற்றியவர்.

தமது வாழ்நாளில் பெரும்பகுதியை மொழிபெயர்ப்பிற்கும், படைப்பிலக்கியத்திற்கும் இன நல்லிணக்கத்திற்கும் அர்ப்பணித்திருக்கும் மடுளுகிரியே விஜேரத்ன, இலங்கை வங்கியில் உயர் அதிகாரியாகவும் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

வவுனியாவின்  எல்லைக்  கிராமத்திலிருந்து வந்த ஒரு சிங்கள மைந்தனை தமிழ்  இலக்கிய உலகம்  திரும்பிப்பார்க்கின்றது.   தமிழ் – சிங்கள  தேசிய ஒருமைப்பாடு என்பது  இருவழிப்பாதை என்பதை  முழு இலங்கைக்கும்  உணர்த்தியிருக்கும்   இவரின் உள்ளார்ந்த  நல்லெண்ணங்களும்,  அர்ப்பணிப்பு மிக்க  உழைப்பும் தமிழ் – சிங்கள  மொழித்தொண்டுகளும்  மற்றவர்களுக்கு முன்மாதிரியானவை.

மடுள்கிரியே விஜேரத்ன,  எதிர்வரும் 02 ஆம் திகதி                               ( 02-10-2021) சனிக்கிழமை அவுஸ்திரேலியா நேரம் இரவு 9-00 மணிக்கு,  இலங்கையில் தமிழ் – சிங்களம் மொழிப்பரிவர்த்தனை என்ற தலைப்பில் உரையாற்றுவார்.

படைப்பு இலக்கியம் – மொழிபெயர்ப்புத்துறையில் ஈடுபாடுகாண்பிக்கும் எழுத்தாளர்களை இந்நிகழ்வில் இணைந்துகொள்ளுமாறு அழைக்கின்றோம்.

Meeting ID: 882 2535 8534
Passcode: 068150

Join Zoom Meeting:

https://us02web.zoom.us/j/88225358534?pwd=KzFqaisvMWFtakM5RWxERUhyU0tYUT09

—-0—-

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: