18 கரையில் மோதும் நினைவலைகள்: உதயம்  பத்திரிகை விடுதலைக்கெதிரானது.

நடேசன்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில், 1975 ஏப்ரலில்  நடந்த றாக்கிங்கில் ,  ரூபா ரத்தினசீலி ,  ராமநாதன் விடுதியின் மேல் மாடியிலிருந்து குதித்து இடுப்புக்கு கீழ் இயங்காது போனபின்னரும் அங்கு நடந்த  றாக்கிங் முடிவுக்கு வரவில்லை.  ஆனால் கிட்டத்தட்ட அரைவாசியாக குறைந்ததை அடுத்த வருடத்தில் என்னால் அவதானிக்க முடிந்தது. பிற்காலத்தில் றாக்கிங்கால் இறப்புகள் நடந்த போதும் எமது காலத்தில் நடந்த சம்பவமும்,  அதற்கு ரூபா ரத்தினசீலி என்ற ஏழை மாணவி கொடுத்த விலையும் மிகப் பெரியது. எனக்கு நடந்த சம்பவங்களில் முக்கியமானதாக நான் நினைவு வைத்திருப்பவை சில உண்டு.

ஒரு இரவு சிரேஸ்ட தமிழ் கலைப் பட்டதாரிகள் வந்து,என்னை ஒரு அறைக்கு அழைத்துச் சென்றார்கள்.  சென்ட் கில்டா மண்டபத்தில் ஒரு அறையில்  ஒன்றிரண்டு  பிரிவுகள்  இருக்கும். அதில் ஒன்று சிறிதாகவும் மற்றையது பெரிதாகவும் இருக்கும்.    சிறிய பிரிவுக்குள்  என்னை அழைத்து உடைகளை அகற்றி  நிர்வாணமாக நிற்கச் செய்தார்கள்.

பாதி வெட்டிய பலாப்பழத்தைக் கொண்டுவந்து அதை பெண்ணாக நினைத்து அதற்குள்  புணரும்படி  ஒருவன் சொன்னபோது அதைச் செய்தேன்.   எனது உறுப்புகளில் பலா பிசின் பட்டது. அதைப் பொறுத்தேன்.  ஆனால் எனது பின்பகுதியை ஒருவன் தும்புக்கட்டையால் தடவினான். ஆத்திரத்துடன்  திரும்பி அவனிடம்  ‘வேறு இடத்தில் இப்படிச் செய்திருந்தால் உன்னைக் கொலை செய்திருப்பேன் ‘ என்று உறுமியபோது  அவன் பின்வாங்கினான்.

நான் அவனை முறைத்தபடி எழுந்து நின்றேன்.    அந்த நேரத்தில் என்னைத் தெரிந்த வேறு சீனியர்கள் வந்து என்னைத் தங்கள் அறைக்கு  இழுத்துச் சென்றார்கள். அன்றைய சம்பவம் பெரிதாகாமல் தடுக்கப்பட்டது.   அதைவிட நினைவில் இருப்பது நாணயத்தை ஒருவனது வாய்க்குள் வைத்து எனது  நாக்கால் எடுக்கச் செய்ததும்,   பின்பு சில்லறை நாணயங்களை அறையெங்கும் வாரி இறைத்துவிட்டு அதை என்னை பொறுக்கசொல்லியதுமே. 

சிலவற்றை சகிக்க முடிந்தது.  பல எரிச்சலையூட்டியது. 

எங்கள் காலத்தில் றாக்கிங்கில்  இனத் துவேசமாக எவரும் நடக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை என்மீது வக்கிரமான றாக்கிங் செய்தவர்கள் தமிழர்களே.   சிங்கள மாணவர்களின் ராக்கிங்குகள் பொதுவானதாக இருந்தது.

எங்கள் மிருக வைத்திய பிரிவில் 28 மாணவர்கள்.  அதில் எட்டுப்பேர் மட்டுமே தமிழர்கள்.  பத்து ஆண்கள் . எந்த ஒரு வித்தியாசமுமில்லாதபடி பழகக்கூடிய காலமாக இருந்தது.

அந்தக்  காலத்தில் 1971 இல் நடந்த ஜே வி பி கிளர்ச்சியில்  சிறை சென்ற பலர் பிற்காலத்தில் அவர்களது சிறைக்காலம் முடிந்து பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக் கழகம் வந்திருந்தார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் கிராமப்புறத்து மாணவர்கள் மட்டுமல்ல,  மிகவும் சகோதர வாஞ்சையோடும் பழகினார்கள்.

எனது பிரிவில் படித்த சிங்கள மாணவர்கள் எல்லோருமே நகரத்தவர்கள்.  இது மிருக வைத்தியத்தில் மட்டுமல்ல பொதுவானது. மருத்துவ,  விஞ்ஞான பொறியியல் பகுதிகளில் வந்தவர்கள் நகர்ப்புறங்களை சேர்ந்தவர்கள். அதேபோல் கலைப்பட்டதாரிகள் அக்காலத்தில் கிராமப்புறத்தவர்கள். இந்த விதமான பாகுபாட்டை அங்கு அவதானிக்க முடிந்தது.

இரண்டு கிழமைகளில் றாக்கிங் முடிந்தது. எனக்கு முக்கிய பிரச்சினையாக இருந்த விடயம் உணவே. இலங்கை ஒரே நாடாக இருந்தபோதும் வடபகுதிக்கும் தென்னிலங்கை உணவிற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது .  இடியப்பம் –  பிட்டு என உண்டு வளர்ந்த எனக்குப் பாண் கஸ்டமாக இருந்தது.  மரக்கறிகளில் பூசனிக்காய் ஈரப்பிலாக்காய்  என்பன அதிகம் சாப்பிடாத மரக்கறி வகை.  அதைப்போல் மீன்வகையில் யாழ்ப்பாணத்து பரவைக்கடல் மீன்களுக்கும் தென்னிலங்கை  ஆழ்கடல் மீன்களுக்கும் சுவையில் வித்தியாசமுண்டு. வீட்டிலிருந்து போனதால்  அங்கு சாப்பாட்டுக்கு இசைவாக்கமடைய சிலகாலம் எடுத்தது . முதல் விடுமுறையில் வீடு சென்றபோது கிட்டதட்ட ஐந்து கிலோக்கள் குறைந்திருந்தேன்.

சென்னை

இராசா ஒருவர் தமது ஊரில் தான் பார்த்திராத பழத்தை கொண்டு வந்து காண்பித்தால் இளவரசியை திருமணம் செய்து வைக்கவிருப்பதாகவும், ஆனால் அந்தப்பழம் பற்றி நான் அறிந்திருந்தால் அதையே கொண்டு வந்தவனின் வாயில் திணித்து அனுப்புவதாகவும் அறிவித்தார். பலர் திராட்சை, வாழை என பலதரப்பட்ட பழங்களைக் கொண்டுவந்து காண்பித்தபோது, அவைகளை தான் அறிந்திருந்திருப்பதாக சொன்ன இராசா அவர்களது வாய்களில் அவற்றைத் திணித்து அனுப்பினார் .அவர்கள் சிரித்தபடியே சென்றார்கள். ஒருவன் அன்னாசிப்பழத்தை கொண்டுவந்தான் அப்பொழுதும் இராசா இதை நான் பார்த்திருக்கிறேன் எனச்சொல்லி அவனது வாயில் திணித்தார். அவன் வாய்கிழிந்த போதும் அவன் அழவில்லை அப்பொழுது இராசா கேட்டாராம்

‘வலிக்கவில்லையா ? ஏன் அழுகிறாய்? ’

‘இல்லை எனக்குப் பின்பாக ஒருவன் பலாப்பழத்துடன் நிற்பதை நினைத்து சிரிப்பு வந்தது.” என்றானாம்.

அதுபோல் ஏமாந்துகொண்டிருக்கும் இலங்கைத் தமிழரைவிட விட மிகுந்த அனுதாபத்திற்குரியவர்கள் பல சிங்கள இடதுசாரிகள்.தமிழ் இயக்கங்களின் ஈழவிடுதலைப்போராட்டம் ஒரு நியாயமான போராட்டம் இதன் மூலம் தமிழர்களுக்கு உரிமை கிடைப்பது மட்டுமல்ல சிங்களப் பாட்டாளி மக்களுக்கும் விமோசனம் கிடைக்கும் என நம்பிய பல சிங்கள இடதுசாரிகள் இருந்தார்கள் . அவர்களில் சிலர் புளட் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்தார்கள் என அறிந்தேன். ஆனால் அவர்களை எனக்கு நேரடியாகத் தெரியாது. ஆனால், ஈ.பி . ஆர். எல். எஃப் இயக்கத்துடன் தோளோடு நின்ற விகல்பகண்டாயம் என்ற தயான் ஜயத்திலக குழுவினரை இந்தியாவில் சந்தித்தேன். அதில் நான்கு பேர் என்னிடம் மிகவும் வாரப்பாடாக பழகுவார்கள். இவர்கள் ஜோ செனவிரத்ன , சிதன் டீசில்வா(கமல்) , பியால் மற்றும் சிறிலால் இவர்களால் இலங்கையில் இருக்கமுடியாது என்பதால் சென்னைக்கு அகதிகளாக வந்தவர்கள்.

ஈழத்தமிழ் விடுதலை இயக்கங்களை நம்பிய இலங்கை தமிழ் மக்கள் மிகவும் பாவப்பட்டவர்கள் என்பது எனது கருத்து. அவர்களின் பின்னால் சென்று உயிரையும் உடல் உறுப்புகளையும் இழந்தவர்கள் எப்பொழுதும் எனது நெஞ்சில் இருப்பவர்கள். சில காரணங்களால் அப்படி அவர்களைப்போன்று ஒருவனாக நான் வராமல் இருந்தது எனது அதிஷ்டம். அரசாங்கத்தில் அவமானப்பட்டு அநீதி இழைக்கப்படும்பொழுது ஆத்திரம் கொள்வது மனித இயல்பு. அந்த நிலையில் சில வருடகாலம் நானும் இருந்திருக்கிறேன். எனது மனதில் ஆத்திரம் கொழுந்துவிட்ட காலம் கல்லூரிப்பருவமாகும். பல்கலைக்கழகத்தில் நீறுபூத்து பின்னர் 1983 கலவரத்தில் தணலாக மீண்டது. ஆனால் தமிழினப் போராட்டத்தின் ஒரு தருணத்தைப் பார்த்தபோது அணைந்தது.

நான் கற்ற யாழ். இந்துக்கல்லூரியில் இருந்து வருடாந்தம் குறைந்தது ஐம்பது மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு செல்வார்கள். இந்த எண்ணிக்கை தரப்படுத்தலின் விளைவாக குறைந்து கொண்டு வந்து, நான் பல்கலைக்கழக புகுமுக பரீட்சை எடுத்த 74 இல் மாவட்டரீதியான தேர்வும் சேர்ந்து வந்து கழுதை தேய்ந்து கட்டெறும்பென ஐந்து பேராகியது. நான் மட்டும்தான் உயிரியல் பகுதியில். இரண்டு மாணவர்கள் பொறியியல்துறைக்கும் இருவர் கலைப்பீடத்திற்கும் தெரிவானார்கள். கல்லூரிக்கு வரவேண்டாம் என அடித்துத் துரத்திய அதிபர் சபாலிங்கம் எனக்கு எதிரே கதிரைபோட்டு என்னிடம் பேசினார். இந்தக்காலத்தில் நான் பரீட்சையில் எடுத்த புள்ளிகள் குறைக்கப்பட்;டது தெரிந்தது. அதாவது மருத்துவபீடத்துக்கு தமிழ் மாணவர்கள் 250 புள்ளிகள் நான்கு பாடங்களில் எடுக்கவேண்டிய நேரத்தில 229 புள்ளிகள் மாத்திரம் சிங்கள மாணவருக்கு போதும் என்ற நிலை. இதேபோன்று, பொறியியலுக்கு 250 தமிழ் மாணவருக்கும் 227 சிங்கள மாணவருக்கும் என்றாகியது.

இந்த அதிரடி மாற்றம் தமிழ் மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் ஆத்திரத்தை வரவழைத்தது. அப்பொழுது தமிழ் அரசியல்கட்சிகள் இலங்கையில் தமிழர் போராட்டத்திற்காக முன்வைத்த காரணங்கள் பல இருந்தன. இப்பொழுது பார்த்தால் அவை பெரிதாகத் தெரியவில்லை. குறைந்த பட்சம் உயிரைக் கொடுத்து போராட வேண்டியவைகளா என்ற கேள்வியும் எழும்.

1) ஆரம்பப் பிரச்சினையாகிய மலையக மக்களின் வாக்குரிமை பறிப்பு –உண்மையில் நல்லதல்ல.

ஆனால், இந்திய அரசே அவர்களை இந்தியர்களாக ஏற்றுக் கொள்ளும்போது நாம் என்ன செய்வது…? தொடர்ந்து வந்த இலங்கை – இந்திய ஒப்பந்தமும் அதைத்தானே உறுதி செய்கிறது…?

2)கிழக்கு மாகாணத்தின் அரச காணிகளில் சிங்களக் குடியேற்றத்திலும் கூட கிழக்கு மாகாணத்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்துவிட்டு, ஆறுமாதத்தின் பின்பாகத்தான் மற்றைய மாவட்டத்தவர்களுக்கு வழங்கப்பட்டது. இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் காணியற்றவர்கள் மிகவும் குறைவு. மூன்றாவதாக எமது தமிழ்த்தலைவர்கள் தூக்கிப்பிடித்தது சிங்கள ஸ்ரீ விவகாரம். ஆங்கில இலக்கத்திற்குப் பதிலாக சிங்களம். கொஞ்சம் கடுப்பாக இருந்தாலும் அதற்காக உயிரை விடத்தேவையில்லை. அரசாங்க பஸ்களில் ஸ்ரீ விவகாரத்தைப் பற்றி டி.பி.ஸ் ஜெயராஜ் சொன்ன தகவலின்படி, அன்று புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட பஸ்களில் சிங்கள ஸ்ரீயும்; பழைய பஸ்களில் ஆங்கில எழுத்தும் இருந்தது. பழைய பஸ்களை யாழ்ப்பாணம் அனுப்பினால் அரசாங்கம் பழைய பஸ்களைத் தருகிறது என்ற கூக்குரல் வரும் என்பதாலேயே புதியபஸ்களை அனுப்பியதாக போக்குவரத்துத் துறை அதிகாரி சொன்னாராம். மேலும் சிங்கள ஸ்ரீக்கு தார்பூசுவதற்கு ஆரம்பத்தில் சில தமிழ் இளைஞர்கள் தார்வாளியுடன் சென்றபோது சில தமிழ் எம்.பி. க்கள் அந்தவேலையை தாங்கள் செய்வதாக முன்வந்தார்கள். இந்த இளைஞர்கள் சிலர் தற்பொழுது அமெரிக்காவில் இருப்பதால் அந்தத்தகவலை உறுதிப்படுத்த முடிந்தது என்கிறார் டி.பி.ஸ் ஜெயராஜ். இலங்கைத் தமிழர்கள் தொடர்ந்தும் தங்கள் தலைகளை தமிழ்த்தலைவர்கள் இன்னமும் மிளகாய் அரைப்பதற்கு கொடுத்தபடியே இருக்கிறார்கள்.

3) சிங்கள மொழியை அரசகரும மொழியாக்கிய பண்டாரநாயக்காவின் சட்டம்தமிழர்களைப் பாதிக்கும். ஆனால் மீண்டும் இரண்டு மொழிகளது பாவனைத் திருத்தம் தமிழ் இயக்கங்கள் ஆயுதம் ஏந்த முதல் சட்டமூலமாக வந்து விட்டது.

ஆனால் அதனை அமுல் படுத்துவதில் பல சிக்கல்கள் இருந்தன என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். இவற்றையெல்லாம் பேசித்தீர்த்து உயிர்க்கொலைகளைத் தவிர்த்திருக்கமுடியும்.

இந்த மொழிவாரியான தரப்படுத்தல் மட்டுமே தமிழ் இளைஞர்களை பாதித்தது. பல்கலைகழகம் செல்ல எண்ணியவர்களை மட்டுமல்ல படிக்க விருப்பமில்லாதவர்களும்கூட ‘ என்ன படித்தாலும் சிங்களவன் பல்கலைக்கழகத்திற்கு போக விடமாட்டான்’ என்றவாதத்தை முன்வைத்தனர்.

பிரபாகரன்கூட இப்படி நினைத்திருக்கக்கூடும். யார் கண்டது?

தமிழ் வாத்தியாரின் மகன் மிருக வைத்தியம் படித்ததுபோல் காணி அதிகாரி

வேலுப்பிள்ளையின் மகன் வைத்தியராகவோ பொறியியலாளராகவோ வந்திருக்க முடியும்.

தரப்படுத்தல் இல்லாவிடில் இந்தப் போரே நடந்திராது.

நான் பரீட்சையில் தோற்றிவிட்டு இருந்த காலத்தில்; 1974 ஜுன் மாதம் எமது கல்லூரி மாணவனாகிய சிவகுமாரனின் மரணம் சம்பவித்தது. நானும் நண்பர்கள்

பலருடன் மரண வீட்டுக்குச் சென்றோம்.

நல்ல வேளையாக அக்காலத்தில் நான் வீட்டின் தலைப் பிள்ளையாக வீட்டுப்பொறுப்புகளுடன் இருந்ததுடன் காதலிக்கவும் தொடங்கியதால் வேறு வழியில்லாமல் கிடைத்த மிருகவைத்தியத்துறைக்கு சென்றுவிட்டேன். எனினும் இந்த தரப்படுத்தல் விடயத்தில் அன்றைய இலங்கை அரசாங்கத்தின் மீதான எனது கடுப்பு குறையவில்லை.

நாட்கள் செல்லச்செல்ல பல்கலைகழகத்தின் சூழல் என்னை மாற்றியது. முக்கியமாக சிங்கள நண்பர்கள் கிடைத்தார்கள். அதற்கும் அப்பால் மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து சிறை சென்ற பலர் மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு படிக்க வந்தவர்கள். அவர்கள் பலரோடு நட்புடன் இருந்தேன். இப்படியான நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் என்னை யாழ்ப்பாணத்தின் நிலைப்பாட்டிலிருந்து பிரித்து வைத்தபோதும் 1977 ஏப்ரலில் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் செல்வநாயகம் இறந்தபோது பேராதனைத் தமிழ்மாணவர்கள் சார்பாக பெரியமலர்வளையத்தை கண்டியில் இருந்து வாங்கிக்கொண்டு, ரயிலில் பொல்காவலை வழியாக வந்து அவருடைய மரண ஊர்வலத்தில் கலந்து கொண்டேன்.

1983 கலவரம் மீண்டும் ஆத்திரத்தை கொழுந்து விட்டெரியச் செய்தது.

இந்திய அரசாங்கம் போராளி இயக்க இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி கொடுக்கிறது என்ற தகவல் வந்தபோது குறைந்த பட்சமான ஒரு இறைமை எமக்குக் கிடைப்பது உறுதி என்ற உணர்வு வந்தது. தொடர்ச்சியான இனக்கலவரங்கள் ஏற்படாது தன்மானமாக வாழ்வதற்கு இந்த

ஆயுதப்போராட்டம் வழிசமைக்கும் என்பதை சில வருடங்களாவது நான் நம்பவில்லை என பொய் சொல்ல எனது மனச்சாட்சி இடம் கொடுக்காது. ஆனால் – அந்த நினைப்பை மிக விரைவில் காற்றுடன் போக வைத்த சம்பவத்தையே இங்கு எழுதவிரும்புகிறேன்.

சென்னையில் இருந்த இலங்கைத் தமிழருக்கு வழக்கமாக வரும் இரு நோய்கள் தைபோயிட் – ஹெப்பரைரிஸ். இந்த இரண்டும் சுத்தப்படுத்தாத தண்ணீரால் பரவுவது. உணவுக்கடைகளில் ஒரே வாளியில் உள்ள தண்ணீரில் பாத்திரத்தைக் கழுவுவதும் உடல் உபாதைகளை நீங்கிவிட்டு கைகளை கழுவாததும் இதன் காரணங்கள்.

அங்கு நான் சந்தித்த விகல்ப கண்டாயத்தைச் சேர்ந்த ஜோ செனவிரத்னவுக்கு அவர் சென்னையில்

இருந்தபோது தைபோயிட் நோய் வந்து விட்டது. சிங்களவரான அவரை சென்னை வைத்தியசாலையில் வைத்து குணப்படுத்த விரும்பாமல் ஒரு தனி மாடி வீட்டில்

வைத்திருந்தார்கள் ஈ.பி. ஆர். எல். எஃப் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். அதன்பின்பு அவரை பார்த்துக் கொள்ளும்படி . பத்மநாபா என்னிடம் சொன்னார். அவரது வேண்டுகோளின் பிரகாரம் இரண்டு தரம் எனது மனைவியையும் அழைத்துக்கொண்டு ஜோ செனவிரத்ன இருந்த மாடிவிட்டுக்குச்சென்று உரையாடினேன். கம்யூனிசம் மற்றும் உலகவிவகாரம் என பல விடயங்களைப் பேசுவோம்.

ஒரு நாள் எனது டிவி எஸ் ஐ மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு ஒருநாள் அவரிடம் செல்லும் வழியில் எனக்குஅறிமுகமான ரெலோ இயக்கத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் ‘அண்ணே அநுராதபுரத்தில் பெருமளவு சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்களாம்’ என்றார்.

‘யார் செய்தது?’

‘ வேறு யாரு புலிகள்தான் ” என்றுசொல்லிவிட்டு அவன்அகன்றார்.

அவன் அந்த விடயத்தை பெரிதாக எடுக்கவில்லை என்பது அவனது வார்த்தையில் தெரிந்தது.

இந்த விடயத்தை ஒரு சிங்களத் தோழரிடம் எப்படிச் சொல்வது என எனக்கு மனம் கனத்தது.

இரண்டு நிமிடங்களில் தாவிக்கடக்கும் அந்த மாடிப்படிகள் ஏதோ மலை ஏறுவது போல் இருந்தது.

உள்ளே சென்றதும் ‘என்ன கொம்ரேட்?’ என்றார் ஆங்கிலத்தில்.

நான் விடயத்தை கூறியதும் அந்த சிங்கள நண்பன் தலையில் கைவைத்து ‘ஒக்கம இவறாய்” (எல்லாம் முடிந்துவிட்டது) எனக்கூறினார்.

‘நான் உடனடியாக இருநூறு சிங்களவர்கள் கொல்லப்பட்டுவிட்டதற்காக கூறுகிறீரா …? என வினவினேன்.

இல்லை இதன்பின் இறக்கப்போகும் தமிழர்களை எண்ணித்தான் கவலைப்படுகிறேன்’ என பதிலளித்தார்.

‘ தயவுசெய்து எனக்கு விளக்கமளிக்கும்படி ” கேட்டேன்.

‘தற்போதைய சூழ்நிலையில் தமிழ்ப்போராளிகள், விடுதலைப்போராளிகள் அல்ல.

இவர்கள் பயங்கரவாதிகள் என சிங்களமக்களுக்கும், உலக நாடுகளுக்கும்

ஜே.ஆர்.ஜயவர்தனா கூறுவார். இதன்மூலம் முழுசிங்கள மக்களினதும் உலக

நாடுகளினதும் ஆதரவை அவர் பெறவிரும்புவார்.தமிழ் மக்களுக்கு அரசாங்கம் தீங்கு இழைப்பதாகச்சொல்லி ஆயுதம் ஏந்திக்கொண்டு போராடும்போது சிங்களப் பொதுமக்களை கொல்வதன் மூலம் இலங்கை இராணுவத்துக்கு சமமான நிலைக்கு தாழ்ந்துவிடுகிறார்கள். இது விடுதலைப்போராளிகள் செய்யும் மனிதாபிமான செயல் அல்ல. பழிவாங்கும் செயலாகும். இதனால் விடுதலைப் போராட்டத்திற்கு இழுக்கு வந்துவிடுகிறது.

இரண்டாவது அரசாங்கப்படைகளுடன் போரிட்டாலும் பல சிங்களமக்கள் தம்மை போரில் ஈடுபடுத்துவதில்லை. அதைவிட எம்மைப் போன்ற சிறிய அளவு சிங்களவர்கள் உங்கள் போராட்டத்தில் உள்ள நியாயத்தைப் பார்த்து உதவிசெய்கிறார்கள். சாதாரண சிங்களமக்கள் கொலை

செய்யப்படும்போது இந்த நிலைமாறி இரு இனங்களுக்கு இடையிலான இனப்போராட்டமாக மாறுகிறது. இப்படியான இனப்போராட்டத்தில் நீங்கள் வெல்ல வாய்ப்புகளே இல்லை.

முழுத் தமிழர்களும் சேர்ந்து ஆயுதம் ஏந்தினாலும் உங்களால் சிங்களவர்களை வெல்லமுடியாது.

மூன்றாவதாக சர்வதேச மட்டத்தில் பயங்கரவாதம் எப்பொழுதும் அங்கீகாரம்பெறப்போவதில்லை. நீங்கள் குறுகிய காலத்தில் விளம்பரமும் புகழும் பெற்றாலும் காலப்போக்கில் இதனால் ஒரு பயனும் ஏற்படாது. ( So this is morally, strategically and tactically wrong) என கூறிமுடித்தார்.

அந்த சிங்களத்தோழர்களுடன் பழகிய காலங்கள் இனிமையானது.

சித்தன டீ சில்வா பார்ப்பதற்கு விஜயகுமாரதுங்கா மாதிரி இருப்பார். சிறுவயதிலிருந்து காக்காய் வலிப்பினால் பாதிக்கப்பட்டவர். பியால் தான் பாக்கிஸ்தானில் இருந்த காலத்தை நினைவு கூருவார்.

சிறில் குடும்பஸ்தர். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது

அரசியல் தேர்வால் ஊரே அவரை வெறுத்தது. நான் அவுஸ்திரேலியாவிற்கு வந்த பின்பு தனது குடும்ப நிலையை எழுதி உதவி கேட்டபோது நான் அக்காலத்தில் படித்துக்கொண்டிருந்ததால் எனது நண்பன் திவ்வியநாதனிடம் அக்கடிதத்தைக் காட்டி அவரிடம் பணம் பெற்று சிறிலுக்கு அனுப்பினேன்.

அநுராதபுரத்தில் கொலை செய்யப்பட்ட சிங்கள மக்கள் எனக்கு விடுதலைப்புலிகளின் சுயத்தை அன்றே வெளிப்படுத்தினார்கள். இவர்கள் பயங்கரவாத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டதைப் பார்த்ததும் ஆயுதப்போராட்டத்தில் இருந்த எனது ஆர்வம் முற்றாக மறைந்தது.அதன்பின்னர் தொடர்ச்சியாக நடந்த சம்பவங்கள் நமது போராட்டம் கரைசேராது என்பதையும் தெளிவாக்கியது.

அவுஸ்திரேலியாவுக்கு 1987 ஜுலை வந்தவுடன் சுமார் 50 பேர் கொண்ட கூட்டத்தில் இதைச்சொல்லிவிட்டு, எனது பொக்கட்டில் இருந்த கைக்குட்டையை எடுத்துக்காட்டி ‘ துன்புறும் மக்களுக்கு நீங்கள் கண்ணீரைத் துடைக்க இது மாதிரி பயன்படுவது   நல்லது ’ என்ற போது — அந்தக் கூட்டத்தில் இருந்த விடுதலைப்புலி ஆதரவாளர்கள் பலர் உறுமினார்கள்.  இன்னமும் பலர் ஆங்காங்கு உறுமிக்கொண்டு இருக்கிறார்கள்.

மெல்பன்

நாங்கள் அவுஸ்திரேலியாவில் வெளியிட்ட  உதயம் மாதப் பத்திரிகை  அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளிலும் பரவலாகச் சென்றதால்,  பலரது கைகளுக்கும்  வந்தது.  அதில் பல  விடயங்கள் ஆங்கிலத்தில் வந்தபோது தமிழர்களுக்கும் மற்றைய இனத்தினருக்கும் ஒரு  பாலமாக அமைந்தது.    உதயம்   இரு மொழியில்  வந்தமையால் விடுதலைப்புலிகளின் பிரசாரத்தின் உண்மை நிலையைப்பற்றி மக்கள் கேள்வி கேட்கும் நிலையும்  ஏற்பட்டது.

கேள்விகள்,  விடுதலைப்புலி ஆதரவாளர்களுக்கு எப்போதுமே  பிடிப்பதில்லை.

இந்தியப்படைகள் இலங்கையை விட்டுப்  போனதன் பின்பு நடந்த முக்கிய விடயங்களாக விடுதலைப்புலிகள் கருதியவை முல்லைத்தீவு,  ஆனையிறவுத் தளங்கள்  மீதான  அவர்களது தாக்குதல்களே.

அந்த வெற்றிகரமான தாக்குதல்கள்,  ஒளி வீச்சாகவும்,  செய்திகளாகவும் வந்து அவுஸ்திரேலிய  தமிழர்களைக்  களிகொள்ள வைத்தன. இந்தத் தாக்குதல் செய்திகளை வைத்து விடுதலைப்புலி ஆதரவாளர்கள்  பொது மக்களிடம் இலகுவாகப் பணம் சேர்ப்பார்கள். ஆயுதங்கள் வாங்கவென அவர்கள் கேட்பதில்லை.

ஊரில் பிரபலமான வைத்தியர்கள்,  அகதி அமைப்பு மற்றும் மருத்துவ அமைப்பின் தலைவர்களாக இருந்தார்கள்.  அந்த அமைப்புகள் இங்கு அவுஸ்திரேலிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளானதால்,  விடுதலைப்போராளிகள் காயமடைந்துவிட்டார்கள்,  அவர்களுக்கு மருத்துவம் மற்றும் மாவீரர் குடும்பங்கள் வாழ்வதற்கு உதவி என்பதே அவர்களது பேசுபொருளாக மக்களிடையே  இருக்கும்.

ஆனால்,  அவுஸ்திரேலியத் தமிழர்கள்,  ஐரோப்பியர்கள்போல் அதிகப்பணம் விடுதலைப் புலிகளுக்குக் கொடுக்கவில்லை காரணம் இங்கு வந்து சில வருடத்திலே,  எல்லோரும் குறைந்த வட்டியில் வீடு வாங்கிவிடுவார்கள். அந்தக் கடன் சுமை, ஆபிரிக்க அடிமைகள் கழுத்தில் போட்ட இரும்புச் சங்கிலியாகக் கால் நூற்றாண்டுகள் கிளிங் கிளிங்  என  ஒலித்தபடியிருக்கும்.

 அதனால் இங்குள்ளவர்கள் தங்கள் உபரியான பணத்தைக் கடனைச் செலுத்தவே  காத்திருப்பார்கள். ஆனால்,  ஐரோப்பாவில் வீடுகள் சொந்தமாக வைத்திருப்பவர்கள் குறைவானதால் அவர்களிடம் பணம் உபரியாக இருக்கும்.

இதுவரையில் ஒரு சதமேனும் விடுதலைப் புலிகளது ஆயுதத்திற்குக் கொடுக்காத நான், ஒரு முறை அவர்களது கண்ணி வெடியில் சிக்கவிருந்தேன். விடுதலைப்புலிகளது இரண்டாவது ஆனையிறவு தாக்குதல் நடந்துகொண்டிருந்தது, நல்லூர்த் தேர்த் திருவிழாவின் நேர்முக வர்ணனைபோல் அது   இன்பத்தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகியது. பல தமிழர்கள் உணர்வின் உச்சத்தில்  தாங்களாக முன்வந்து பணம் தருவதாகச் சொல்லி   தங்கள் பெயர்களை வானொலியில்  அறிவித்துக் கொண்டிருந்தார்கள்.  நானும் அந்த வானொலியை சிறிது நேரம் கேட்டு விட்டுத் தூங்கிவிட்டேன்.

ஏதோ ஒழுங்கற்ற கனவிலிருந்த என்னை ஒரு  தொலைபேசி அழைப்பு பரபரப்புடன் விழிக்கப்பண்ணியது. கடிகாரத்தில் நேரம் நடு இரவைக் கடந்திருந்தது. யார் இது..?  இந்த நேரத்தில் என்றபடி,  தொலைபேசியை எடுத்தபோது அடுத்த முனையில்  இங்குள்ள விடுதலைப்புலிகளின் முக்கிய ஆதரவாளரான திலகராஜன்,                           “ டொக்டர்,  நீங்கள் ஆயுதத்திற்குப் பணம் கொடுக்கமாட்டீர்கள் எனத்தெரியும்.  ஆனால்,  ஏராளமான இளைஞர்கள்  காயமடைந்துள்ளார்கள்.  அவர்களின்  வைத்தியத்திற்குக் கொடுக்க முடியுமா “ எனக்கேட்டபோது,  நானும் மனிதாபிமானத்துடன் உடனே சம்மதித்துவிட்டேன்.   “ ஆனால்,  எனது பெயரை வானொலியில் அறிவிக்கக்கூடாது”  என்றேன். ஓம் என உறுதி மொழி கிடைத்ததும்  மீண்டும் வானொலியைக் கேட்டபடி படுத்திருந்தேன்.

ஆனையிறவு ராணுவத்தளம் எனக்கு எப்பொழுதும் எரிச்சல் தருவதே.  80-83   காலப்பகுதியில்  மதவாச்சியில் வேலை செய்யும்போது யாழ்ப்பாணம் போய் வருவேன். எத்தனை ராணுவ முகாம்கள்   ஒரு சிறிய பிரதேசத்தில் என யோசிப்பேன். எக்காலத்திலும் இலங்கையில் என்னைச்  சோதனையிடவோ   தடுத்து வைக்கப்படவோ இல்லை.  

போர் கொண்டாடப்பட வேண்டியதில்லை என்ற நினைவுடன் வானொலியைக் கேட்டபடியிருந்த எனக்கு தூக்கி வாரிப்போட்டதுபோல்,  பணம் தர ஒப்புக்கொண்டதாக  எனது பெயர் அறிவிக்கப்பட்டது . ஆத்திரத்திலிருந்தேன்.  ஆனால்,  அவர்கள் என்னிடம் ஒப்புக்கொண்ட பணத்திற்கு வரவில்லை. பின்பு   ஒரு முக்கிய  நபரோடு பேசியபோது,  அந்த தாக்குதலின் பின்பு  வானொலி நிகழ்வில் கிட்டத்தட்ட 250000 டாலர்கள் கிடைத்தது அதில் 10%   அதனை  சேகரித்துத் தந்த  வானொலிக்கு  கொமிஷனாகப் போய்விட்டது எனக் குறைபட்டார்.

ஆனையிறவுத் தாக்குதலைப் பற்றிய  உதயம்  கட்டுரையில் சிட்னியில் வதியும் மட்டக்களப்பு  வாவியின் கிழக்குப் பகுதியை  ஊராகக்கொண்டிருந்த   சட்டத்தரணி  நாகராஜா எழுவான்கரையான் என்ற பெயரில் , ஆனையிறவுத் தளம் வீழ்வதற்கு  அங்கு குடிதண்ணீர் அற்றுப் போய்விட்டதே காரணம்  எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதனைப்படித்த  விடுதலைப்புலி ஆதரவாளர்கள்,   எமது பத்திரிகை  அவர்களின் வீரத்தைக் குறைத்து மதிப்பிடுவதாகவும் , அத்துடன் எழுவான்கரையான் என்ற சாதிப்பெயரில் நாங்கள் எழுதியதாகவும் இன்பத்தமிழ் ஒலியில் கதறினார்கள். அந்தக் கட்டுரையின் பின்னர்  எமது பத்திரிகைமீது  பல விதமான தாக்குதல்கள்  தொடுத்தார்கள்.

நாங்கள் இக்காலகட்டத்தில் எமது பத்திரிகையில்  விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டவர்களது செய்திகளையும் யாழ்ப்பாணம்  பல்கலைக்கழகத்தினரால் வெளியிடப்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றிய அறிக்கையையும்  பிரசுரித்தோம்.

இப்படியான செய்திகளால்  அவர்களுக்குக் கிடைத்த பணம்  குறையவில்லை.  கிட்டத்தட்ட 90 %   அவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் பணம்  கிடைத்தபோதும்    மக்கள் புலிகளின் தரப்பிலிருந்து   தம்மிடம் பணம் கேட்டு வந்தவர்களிடம்,  எமது   பத்திரிகை  செய்திகளை சுட்டிக்காண்பித்து  விளக்கம் கேட்டார்கள் .

இக்காலத்தில் பிரான்சில் வெளிவந்த ஈழமுரசு என்ற பத்திரிகையை இங்கு எடுத்துப் பதிப்பித்தார்கள் . ஆனால்,  அது ஒருவிதத்தில் தோல்வியாக முடிந்தது.  காரணம் அவர்களால் இங்குள்ள விடயங்களைக் கொண்டுவர முடியவில்லை . ஈழமுரசில் எவரும் ஆசிரியர் என்ற பொறுப்பை எடுக்கத்தயாராயிருக்கவில்லை. புலிகளால் பிரான்சில் கொலை செய்யப்பட்டவரது பெயரே ஆசிரியரது இடத்தில்  இருந்தது.

இக்காலத்தில் இன்பத்தமிழ் வானொலியை நடத்தும்  பாலசிங்கம் பிரபாகரனே  தமிழ்த்தேசியத்தின் முதன்மையான ஊதுகுழலாக மாறியதுமல்லாமல்,  அவரது வெள்ளிக்கிழமை ஆனந்த இரவு நிகழ்வானது  எங்களுக்கு எதிராக அவதூறு சொல்லும் நிகழ்வாக மாறியது.  அத்துடன் அந்த வானொலியில்  சில நேயர்கள் அதனை  நடத்துபவரோடு தூசண வார்த்தைகளும்  பேசினார்.

அந்த வானொலியிலே ஒரு நேயர்  “  இந்த வானொலி பொதுக்கழிப்பிடமாக மாறிவிட்டது  “  என்று சொன்னதை நாங்கள் கேலிச்சித்திரமாகவும்  பிரசுரித்தோம்.

இப்படியான சம்பவங்களால் உதயத்திற்கு எதிராக  அவதூறு பேசும் வானொலியாக அது மாறியதும்,  எங்களது பத்திரிகையின் வாசகர் பரப்பு கூடியது.   இலங்கையைச்சேர்ந்த  சிங்கள மக்களும்   இந்திய மக்களும்  உதயம்  பத்திரிகையை எடுத்துப் படித்தனர்.  அவர்களது கடைகளிலும் உதயம்  வைக்கப்பட்டது.

இதனால் உதயம்  பத்திரிகை விடுதலைக்கெதிரானது என்ற  பிரகடனத்துடன்   அதன் பிரதிகள் மாதிரிக்காக  வன்னிக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிந்து

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: