மகாகவி பாரதி மறைந்து நூறு ஆண்டுகள் !

செப்டெம்பர் 11 :

                                           முருகபூபதி

மகாகவி பாரதிக்கு கிடைத்த நண்பர்கள் பல்வேறு குணாதிசயங்கள் கொண்டவர்கள். அவர்களில் சித்தர்கள், ஞானிகள், அறிஞர்கள், வக்கீல், வர்த்தகர், தீவிரவாதிகள், விடுதலை வேட்கை மிக்கவர்கள், பத்திரிகாசிரியர்கள், சாதாரண அடிநிலை மக்கள் , பாமரர்கள் என பலதரத்தவர்களும் இருந்தனர். அவர் சந்தித்த சித்தர்கள் அவருக்கு ஞானகுருவாகியுமிருக்கின்றனர்.

அவ்வாறு அவரது வாழ்வில் மாற்றங்களையும் சிந்தனைப்போக்கில் புதிய திசைகளையும் தந்தவர்களின் வரிசையில்தான் எங்கள் யாழ்ப்பாணத்துச்சாமி அருளம்பலம் அவர்களும் வருகிறார்.


பாரதி தனது வாழ்நாளில் சந்தித்த சித்தர்களில் மாங்கொட்டைச்சாமி என அழைக்கப்பட்ட குள்ளச்சாமி புதுச்சேரியில் அறிமுகமாகிறார். நாலரை அடி உயரமுள்ள அவருடைய ரிஷி மூலம் எவருக்கும் தெரியாது.


வீதியோரத்தில் படுத்துறங்குவார். மண்ணில் புரள்வார். நாய்களுடனும் அவருக்கு சண்டை வரும். கள்ளும் அருந்துவார். கஞ்சா புகைப்பார். பிச்சையும் எடுப்பார். இருந்தும் அவர் துணி வெளுக்கும் தொழிலாளி. ஒரு சமயம் பாரதியிடத்தில் ” நீ நெஞ்சுக்குள்ளே சுமக்கிறாய், நான் முதுகின் மேல் சுமக்கிறேன்” என்றார்.

மற்றும் ஒருநாள் பாரதி, அந்தக்குள்ளச்சாமியிடம்,                             ” ஞானநெறியில் செல்லவிரும்புபவன் எந்தத்தொழிலைத் தேர்ந்தெடுக்கவேண்டும்…? ” என்று கேட்கிறார்.


அதற்கு அந்தச்சாமியார், ” முதலில் நாக்கை வெளுக்கவேண்டும், பொய், கோள், கடுஞ்சொல், இன்னாச்சொல், தற்புகழ்ச்சி என்பன கூடாது. உண்மையைத்தவிர வேறொன்றும் இந்த நாக்கு பேசலாகாது. அச்சத்தை அகற்றவேண்டும். அதற்கு மனதினுள் இருக்கும் இருளைப்போக்கவேண்டும்” எனச்சொல்லியிருக்கிறார். அதன் பிறகு,
உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்…..
அச்சமில்லை… அச்சமில்லை….
மனதிலுறுதி வேண்டும்…   முதலான சாகாவரம் பெற்ற வரிகள் பாரதியிடத்தில் பிறக்கின்றன.

கப்பலோட்டிய தமிழன் வா. உ. சிதம்பரம்பிள்ளை சென்னையில் பெரம்பூரில் குடியிருந்தபோது, அவரைச்சந்திக்க வரும் பாரதி தம்முடன் குள்ளச்சாமியையும் அழைத்துவருகிறார்.

அங்குதான் பாரதியும் குள்ளச்சாமியும் எலுமிச்சை அளவுள்ள ஏதோ ஒரு லேகியம் சாப்பிடுவதை வ.உ.சி அவதானித்துவிட்டு பாரதியிடம் “என்ன சாப்பிடுகிறீர்கள்? ” எனக்கேட்கிறார்.


அதற்கு பாரதி, ” இது மேலுலகத்திற்கு இட்டுச்செல்லும் அருமருந்து” என்கிறார். அந்த அருமருந்துதான் அபின்.                                                        ( ஆதாரம்: பாரதியின் குருமார்களும் நண்பர்களும் நூல் – ஆர். சி. சம்பத்.)

ஞானகுருமார்களினால் இத்தகைய பழக்கங்கள் பாரதிக்கு தொற்றியிருப்பதுபோன்று பாரதியை தமது ஞானகுருவாக பின்னாளில் ஏற்றுக்கொண்ட ஜெயகாந்தனுக்கும் கஞ்சா புகைக்கும் பழக்கம் மற்றும் ஒரு சாமியாரால் தொற்றியிருந்ததை அறிவோம்.

அவர்தான் ஓங்கூர் சாமியார். இவரை ஜெயகாந்தன் தமது விழுதுகள் நாவலில் சித்திரிக்கிறார். புதுவையில் பாரதி சந்தித்த யாழ்ப்பாணத்துச்சாமி அருளம்பலம் அவர்களின் கல்லறை பருத்தித்துறை வியாபாரிமூலையில் இருக்கிறது.

ஆனால், அங்கிருக்கும் பலருக்கு இது தெரியாது! சில வருடங்களுக்கு முன்னர் வடமராட்சிக்குச் சென்றேன். ஊடகவியலாளரும் எனது பிரியத்திற்குரிய இலக்கிய நண்பருமான ரவிவர்மாவை அழைத்துக்கொண்டு, வியாபாரிமூலையில் அமைந்துள்ள பாரதியின் ஞானகுரு யாழ்ப்பாணத்துச்சாமி அருளம்பலம் அவர்களின் சமாதிக்கோயில் தரிசனத்திற்குச்சென்றேன்.

 யாழ்ப்பாணத்துச் சாமிதான் பாரதியின் ஞானகுரு என்பதை ஆராய்ந்து நிரூபிக்கக் காரணமாகவிருந்தவர் எமது ஈழத்து மூத்த எழுத்தாளர் அ.ந.கந்தசாமி . 

அ.ந.க  பணியாற்றிய  ஶ்ரீலங்கா   என்ற இதழில் ‘ ஞானம் வளர்த்த புதுவை. யாழ்ப்பாணத்துச் சுவாமி யார்?’  என்றொரு கட்டுரையினை எழுதியிருந்தார்.

அதன் இணைப்பு:

(https://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%B6%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80_%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_1961.08_(13.9) )

இக்கட்டுரைக்குப் பதிலளித்த புலோலி பொ.சபாபதிப்பிள்ளை ‘பாரதியாரின் ஞானகுருவான யாழ்ப்பாணத்துச்சாமி’ என்றொரு கட்டுரை எழுதியிருந்தார். இதனையும் அ.ந.க ஆசிரியராகவிருந்த ஶ்ரீலங்கா சஞ்சிகை வெளியிட்டது. இதன்  மூலம்தான் யாழ்ப்பாணத்துச்சாமி பற்றிய மர்மம் விடுபட்டது.  இதன்மூலம் அ.ந.க இப்புதிர் விடுபடக் காரணமாகவிருந்தார். 

 (https://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%B6%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80_%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_1962.04_(14.5) )

இந்தத்தகவல்களை கனடாவில் வதியும் பதிவுகள் இணைய இதழ் ஆசிரியர் நண்பர் கிரிதரன் எனக்குத் தந்தார்.


யாழ்ப்பாணத்துச்சாமியின் சமாதி கோயிலுக்கு  வடமராட்சி நண்பர் ரவிவர்மாவை அழைத்துச்சென்று காண்பித்தேன்.

அப்போது அவர், “ தான் வடமராட்சியை சேர்ந்தவன். இந்தக்கோயிலின் பின்னால் இப்படி ஒரு சரித்திரம் இருப்பது தனக்கு இதுவரையில் தெரியவில்லையே!! “ என்றார்.  

இங்கு சென்று திரும்பியபின்னர், யாழ்ப்பாணத்தில் நண்பர் ஈழநாடு குகநாதன் நடத்திவரும் டான் தொலைக்காட்சியகத்திற்கும் நேர்காணலுக்காகச் சென்றேன். எனது பயணம் – மற்றும் எனது ஆய்வு இலங்கையில் பாரதி தொடர்பாக இரண்டு அங்கமாக அந்த நேர்காணலை பதிவுசெய்தார்கள்.

என்னை நேர்காணல் செய்த இளம் ஊடகவியலாளரான யுவதிக்கும் பாரதியின் ஞானகுரு யாழ்ப்பாணத்துச்சாமி பற்றி எதுவும் தெரியாது.

வடக்கின் மாகாணசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தோழர் தவராசா, நான் தங்கிநின்ற கோண்டாவிலுக்கு நேரில் வந்து சந்தித்து உரையாடியபோது, அவரிடத்திலும் பாரதியின் ஞானகுரு பற்றி பிரஸ்தாபித்தேன். அவரும் அந்த சமாதிக்கோயிலுக்கு செல்லும் பாதையை கேட்டுத் தெரிந்துகொண்டார்.

பாரதி பிறந்த எட்டயபுரத்திற்கு 1984 இல் சென்றுவந்து வீரகேசரியில், நான் கண்ட தரிசனங்களை எழுதியிருக்கின்றேன். பாரதி பிறந்த வீடு, அவர் மனைவி செல்லம்மாவுடன் நடமாடித்திரிந்த மாடவீதி, பாரதி அமர்ந்து பாடல்கள் இயற்றிய தெப்பக்குளத்தின் படித்துறை, பாரதி பட்டம் பெற்ற அரண்மனை, மற்றும் பாரதி மணிமண்டபம் யாவும்பற்றியும்  எனது அன்றைய கட்டுரையில் விரிவாக எழுதியிருந்தேன்.

பிறிதொரு சந்தர்ப்பத்தில், பாரதி இறுதிக்காலத்தில் வாழ்ந்த திருவல்லிக்கேணி இல்லத்தையும் பாரதியை மதம்பிடித்த யானை துக்கியெறிந்த சம்பவம் நிகழ்ந்த பார்த்தசாரதி கோயிலையும் தரிசித்துவிட்டு வந்து எழுதியிருக்கின்றேன்.

எனினும், வியாபாரிமூலையிலிருக்கும் யாழ்பாணத்துச்சாமியின் சமாதிகோயிலை தரிசிக்கும் சந்தர்ப்பம்  காலம் தாழ்த்தித்தான்  கிடைத்தது. அதன் வரலாறு பற்றியும் எனது இலங்கையில் பாரதி ஆய்வில் விரிவாக எழுதியிருக்கின்றேன்.

இந்தத் தகவல்களை நண்பர் ரவிவர்மாவிடம் சொன்னதும், அவரும் உடன்வந்து தனது முகநூலில் படங்களுடன் ஒரு பதிவை எழுதியிருக்கிறார். அதற்கு தனது எதிர்வினையாக எழுத்தாளர் நந்தினி சேவியர் எழுதிய குறிப்புகளையும் எனது கவனத்திற்கு அனுப்பியிருந்தார்.

அதனை இங்கு தருகின்றேன்:

யாழ்ப்பாணத்துச் சாமிதான் பாரதியின் ஞானகுரு என்பதை ஆராய்ந்து நிரூபித்தவர் அ.ந.கந்தசாமி. முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 1963 மே மாதம் வியாபாரிமூலையில் இருந்த சாமியின் சமாதியை அடையாளம்கண்டு அதனை ஒரு மண்டபமாக அமைத்தது. அந்தவிழா பற்றி சநாதனிகள் நையாண்டி செய்தபோது அன்றையதினம் நடந்த கவியரங்கில் சில்லையூர் செல்வராசன் தானாகமேடையேறி வந்து,

“ யாழ்ப்பாணச் சாமி தனைக் காழ்ப்பால்
இகழ்ந்தெழுதும்
கூழ்ப்பானைப் பண்டிதரைக் குட்டுதற்கே
வந்துள்ளேன். “ எனத்தொடங்கி

“ கஞ்சாத்துறவியென கையெழுதக் கூசாத
பஞ்சப் பயலும் அவன் பரம்பரையும்
தூ!தூ! தூ!

நீறாகித் தூசாகி நிர்மூலமாகிடுக!
ஆறாத புண்ணை அகத்தேந்தி நீங்குகிறேன். “

என்று அறம்பாடி முடித்தார். அந்த மண்டபத்தின் தூணில் மு.போ.எ. சங்கம் வைத்த கல்பதிவை நான் கண்டிருக்கிறேன். இப்போது அது உள்ளதோ தெரியவில்லை. ரவிவர்மாவின் பதிவு எனக்கு சில நினைவுகளைத் தந்தது. அவருக்கு நன்றி.

பிரிட்டிஷாரின் அடக்கு முறையினால் புதுச்சேரியில் அடைக்கலம் புகுந்த பாரதிக்கு, இங்கும் பல நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்களில் கிருஷ்ணமாச்சாரியார் என்னும் இயற்பெயர்கொண்ட குவளைக்கண்ணன் முக்கியமானவர். இவர்தான் பின்னாளில் 1921 செப்டெம்பர் மாதம் பாரதியை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் மதம் பிடித்த யானையிடமிருந்து காப்பாற்றியவர்.

மனைவி செல்லம்மா அயல்வீட்டிலிருந்து கடனாக வாங்கிவந்த அரிசியையும் ” காக்கை குருவி எங்கள் ஜாதி ” என்று பாடி காகங்களுக்கு அள்ளித்தூவிய இரக்கமுள்ள பாரதி, கோயில் யானைக்கு வாழைப்பழமும் தேங்காயும் கொடுத்தது ஆச்சரியமில்லை. காகம் குருவிகளுக்கு மதம் பிடிக்காது. பாரதியை அவை கொத்தவில்லை. அந்தக்கோயில் யானைக்கு மதம் பிடித்திருந்தது பாரதிக்குத் தெரிய நியாயம் இல்லை. குவளைக்கண்ணன் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கு குதித்து அவரை காப்பாற்றினாலும், அதன் பின்னர் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமலேயே வயிற்றுவலி கண்டு அதே செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி பாரதி மறைந்தார். இறுதியாத்திரையில் சென்ற விரல் விட்டு எண்ணத்தக்க மனிதர்களில் தேம்பித் தேம்பி அழுதுகொண்டு வந்த குவளைக்கண்ணன், புதுவையிலிருந்து சென்னை வரையில் பாரதியின் நெருக்கமான நண்பராகவிருந்தார். இவர்தான் புதுவையில் பாரதிக்கு எங்கள் யாழ்ப்பாணத்துச்சாமியை அறிமுகப்படுத்தியவர்.

பாரதி தமது சுயசரிதையில் இந்தச்சாமி பற்றி இவ்வாறு சொல்கிறார்:

” குவலயத்தின் விழி போன்ற யாழ்ப்பாணத்தான், தேவிபதம் மறவாத தீர ஞானி சிதம்பரத்து நடராஜ மூர்த்தியாவான் பாவியரைக் கரையேற்றும் ஞானத்தோணி, பரமபத வாயிலெனும் பார்வையாளன், காவி வளர் தடங்களிலே மீன்கள் பாயும் கழனிகள் சூழ் புதுவையிலே அவனைக்கண்டேன் “

இவ்வாறு பாரதி தனது சுயசரிதை எழுதுவதற்கும் தூண்டுகோளாக இருந்தவர்தான் குவளைக்கண்ணன்.

பாரதி புதுவைக்கு வந்ததும் முதலில் வீடுகொடுத்து அடைக்கலம் தந்த குப்புசாமி அய்யங்காரின் உறவினர்தான் குவளைக்கண்ணன். புதுவையில் பாரதி வெளியிட்ட இந்தியா பத்திரிகையின் வாசகரான குவளைக்கண்ணன், பாரதியின் அந்த வாடகைக்குடியிருப்புக்கு வரும்போதெல்லாம், நாலாயிர திவ்விய பிரபந்தத்தை பாடுவது வழக்கம்.

“பத்து ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்புத்தான் நாலாயிரம்” என்று குவளைக்கண்ணன் சொன்னதும், பாரதிக்கு உற்சாகம் பிறந்துவிட்டது.

” அவர்கள் பத்துப்பேர் சேர்ந்து பாடினார்கள். இதோ பார்… நான் தனிஒருவனாக ஆறாயிரம் பாடிக்காட்டுகின்றேன்.” எனச்சவால் விட்டு, பாரதி பாடியதுதான் பின்னாளில் பாரதி அறுபத்தாறு என்ற தலைப்பில் வெளியாகின்றன.

இதில் என்ன வித்தியாசம்…? ஆழ்வார்கள் தங்கள் இறைவனைப்புகழ்ந்து பாடினார்கள். ஆனால், பாரதி தான் சந்தித்த நண்பர்களையும் சித்தர்களையும் புகழ்ந்து பாடினார்.

இவ்வாறு பாரதியிடம் புதிய படைப்பை உருவாக்குவதற்கு காரணமாக இருந்த குவளைக்கண்ணனால் அறிமுகப்படுத்தப்பட்ட யாழ்ப்பாணத்துச்சாமி அருளம்பலம் அவர்கள், பாரதி திருநெல்வேலி எட்டயபுரத்தில் பிறப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் அதாவது 1880 இல் இலங்கையில் வடபுலத்தில் அல்வாயில் பிறந்துள்ளார்.

பாரதி மறைந்து சுமார் 21 ஆண்டுகளின் பின்னரே வியாபாரி மூலையில் சமாதியானார்.

இவர் பற்றி பாரதி மேலும் இவ்வாறு சொல்லியிருக்கிறார்:

…. மங்களஞ்சேர் திருவிழியால் அருளைப்பெய்யும் வானவர்கோன், யாழ்ப்பாணத்தீசன் தன்னைச்சங்கரனென் றெப்போதும் முன்னே கொண்டு சரணடைந்தால் அது கண்டீர் சர்வசித்தி.

பாரதி வர்ணித்துப்போற்றியிருக்கும் இந்த யாழ்ப்பாணத்தீசன், பாரதி சென்னையில் 1921 இல் மறையும்போதும் புதுவையில்தான் வாழ்ந்திருக்கிறார். அதன்பின்னர், அவர் இலங்கை திரும்பி, மீண்டும் தமிழகம் சென்று 1942 ஆம் ஆண்டளவில் ஊர் வந்து மறைந்தார்.

பாரதியின் ஞானகுரு பிறந்த அதே  யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்துகொண்டிருக்கும்  காலைக்கதிர் நாளேட்டின் வாரப் பதிப்பில்தான் இலங்கையில் பாரதி  தொடரை நாற்பது வாரங்கள் எழுதினேன்.  பின்னர் அது நூலாக வெளிவந்தபோது, தலைநகரில் அதனை வெளியிட்டு வைத்தேன்.

பாரதி  பிறந்த  நூற்றாண்டுகாலம்  1982 இல் வந்தபோது,   “ நான் கண்ட பாரதி   “ என்ற தொடரை  சிந்தாமணியில் எழுதிய அதன் ஆசிரியர் எஸ். டி. சிவநாயகம் அய்யாவின் ஊடகப்பாசறையில் வளர்ந்த வித்தியாதரன் என்பவர்  பிரதம ஆசிரியராக பணியாற்றும் யாழ். காலைக்கதிரில்தான்  எனது அந்தத் தொடர் வெளிவந்தது.

பின்னர் அது தனி நூலாக வெளிவந்தபோதும் வித்தியாதரன் வருகைதந்து வெளியிட்டு வைத்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 05 ஆம் திகதி இந்நிகழ்வு மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் தலைமையில்  கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடந்தது. 

ஞானம்  மாத இதழ் ஆசிரியர் தி. ஞானசேகரன், எழுத்தாளர்   கௌரி அனந்தன்,  இலக்கிய ஆர்வலர் வானதி ஆறுமுகம்,  செல்வி பாமினி செல்லத்துரை   ஆகியோர் நூல் மதிப்பீட்டுரைகளை  நிகழ்த்தினர்.  எமது பேத்தி செல்வி நுவேதிதா சிவசங்கர் நூலின் பிரதிகளை வெளியிட்டுவைத்தார். புரவலர் ஹாஸிம் உமர்   நூலின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்

கலை, இலக்கிய ஆர்வலரும் எழுத்தாளருமான திரு. உடுவை தில்லை நடராஜா, ஈழத்தின் மூத்த எழுத்தாளர் ( அமரர்) இளங்கீரனின் புதல்வர் திரு. மீலாத் கீரன், திருமதி ஜெயந்தி விநோதன், முன்னாள் பொலிஸ் அத்தியட்சர் திரு. அரசரட்ணம்  ஆகியோர் நூலின் சிறப்பு பிரதிகளை பெற்றுக்கொண்டனர்.

பாரதி என்றும் எம்மோடுதான் !

letchumananm@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: