கர்ப்பம்

நடேசன்.

நான் ஒரு மிருகவைத்தியர். 

அந்த சனிக்கிழமை வேலைக்குச் சென்றபோது, வாசலில் வைத்தே கதவைத் திறந்தபடி   “ இன்று ஒரு நாயை எக்ஸ்ரே எடுக்க வேண்டும்.”  என்று எனது நேர்ஸ் சொன்னாள்.

வழக்கமாகவே சனிக்கிழமையில் அப்படி வேலை இருப்பதில்லை. வெளி நோயாளர்களைப் பார்ப்பது மட்டுமே.  ஏதாவது அவசரமாக இருக்கலாம். அல்லது தன்னார்வத்தில் அவளே தீர்மானித்தாளா?  எக்ஸ்ரே எடுக்க அரைமணியிலிருந்து  முக்கால் மணிநேரம் எடுக்கும். மனிதர்கள்போல் இலகுவானதல்ல. ஒத்துழைக்காத அல்லது பயந்த பூனை , நாயானால்  சில நேரத்தில் மயக்க மருந்து கொடுக்க வேண்டியிருக்கலாம். அதன் பின் அவை மயக்கம் தெளியும்வரை  காத்திருக்கவேண்டும். நான்கு மணி நேரத்தில் இவை நடக்குமா?

  “என்னத்திற்காக எக்ஸ்ரே?”

“பெண் நாய்,  கர்ப்பமா எனப்பார்க்க வேண்டும் “

 “சரி”  என்றேன்.

அன்று அதிகம் பிசியாகவில்லை.

மெல்பனில் குளிர்காலம்.  இரு நாட்கள் முன்பாக  கொரோனோ என இரண்டு கிழமைகள் மெல்பன் நகரம் மூடப்பட்டிருந்தது. பலருக்கு முக்கிய வேலைகள் பல  இருக்கலாம்.

காலை 11 மணியளவில் நடுத்தர வயதுப் பெண் எக்ஸ்ரேக்கு நாயைக் கொண்டு வந்தார். பெண் அரேபிய  ஒலிவ் நிறம்.  ஆனால் அவுஸ்திரேலியாவில் பிறந்ததால் அவுஸ்திரேலிய ஆங்கிலத் தொனி , உடை,  பாவனையுடன் இருந்தார். நாய்க்குப் பெயர்  லூசி -ஸ்பிரிங்கர் ஸ்பனியல் இனம். சிவப்பு நிறம். மூன்று வயது இருக்கும்.    முயல் மற்றும் பறவைகளின் வேட்டைக்கு இந்த நாயைப் பாவிப்பார்கள்

 “ இன்றைக்குக் குட்டி போடும் நாள்,  எந்த அறிகுறியுமில்லை என்பதால் எக்ஸ்ரே எடுத்துப் பார்ப்போம் எனக்கொண்டு வந்தேன். “ என்றார்

நாய்களுக்கு இரண்டு மாதம் கர்ப்பம்.  இந்த இன நாய்களுக்கு 5-6 குட்டிகளாவது இருக்கும். ஏற்கனவே ஒரு மிருக வைத்தியரைக் கலந்தாலோசித்து அவரது சிபார்சிலே இங்கு வருகிறார்  என்பதால் எந்த விடயத்தையும் துருவிக் கேட்காது நாயை,   நேரடியாக எக்ஸ்ரே அறைக்குக் கொண்டு சென்று,  எக்ஸ்ரே எடுத்தோம்.

எந்தப்  பிரச்சினையுமில்லாது எக்ரே எடுக்க முடிந்தது .  எக்ஸ்ரேயில் எந்த நாய்க்குட்டிகளும் தெரியவில்லை . நிறைமாத கர்ப்பமாக இருக்கும் நாயில்  முள்ளந்தண்டுகள்,  தலை எலும்புகள் தெளிவாகத் தெரியும்.

எனது உதட்டை பிதுக்கி  “கர்ப்பமில்லை. நான் கையால் சோதிக்கிறேன் “ என  அதன் வயிற்றை அழுத்தினேன்.  நிச்சயமாகப் பெரிய வயிறு,  ஆனால்,  உள்ளே எதுவும் கையில் தட்டுப்படவில்லை.

எனது பரிசோதனை அறைக்குக் கொண்டு வந்து மீண்டும் கைகளால் பரிசோதித்தேன்.  நிச்சயமாக வயிறு பெரிதாக உள்ளது . முலைகளில் பிடித்துப் பிதுக்கியபோது பால் வந்தது.

மீண்டும் இரண்டாவது தடவையாக வயிற்றை வேறுவிதமான கோணத்தில் வைத்து  எக்ஸ்ரே எடுத்தேன்.  குறைந்தது இரண்டு எக்ஸ்ரேக்கள் எடுக்க வேண்டும்.

 “நிச்சயமாகக் கர்ப்பமில்லை.  ஆனால்,   இதை நாங்கள் பன்ரம் பிறக்னன்சி (Phantom pregnancy) என்போம்.  இதில் கர்ப்பப்பை முலை என்பன  எல்லாம் விருத்தியடைந்து குட்டித்தாச்சி நாய் போலிருக்கும் . இரண்டுமாத முடிவில் குட்டி போடுவதற்கு முயலும். இது உடலில் உள்ள  ஓமோனின் தாக்கத்தால்  ஏற்படும் மாற்றம் “ என்றேன்

“நான் இதுவரையில் கேள்விப்பட்டதில்லை  “  என்று கண்களை அகல விரித்தார்.

 “பல நாய்களில் நான் கண்டிருக்கிறேன். ஆண் நாய் கூடும் காலம் சரியாக இல்லாதபோது கருக்கட்டுதல் தவறிவிடும். ஆனால் இப்படியான நிலை ஏற்படும் “

கொரோனோ  கலத்தில் நாய்க்குட்டிகளின் விலை பல மடங்காகி விட்டது. வீடுகளில் அடைபட்டுக் கிடப்பவர்களுக்கும் குழந்தைகளுக்கும்,  நாய்கள் முக்கியமான தோழமையாகியது. பலர் புதிதாக நாய் வளர்க்கத் தொடங்கியுள்ளனர்.  வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கு மனரீதியான உற்சாகத்தை மட்டுமல்ல நாய்களைக் கூட்டிக்கொண்டு நடப்பதற்கு அனுமதியுள்ளதால் உடல்ரீதியான ஆரோக்கியத்தையும் பெறமுடிகிறது. பலர் நாய்களை வியாபார நோக்கத்தில்  குட்டிக்காக வளர்க்கத் தொடங்கியுள்ளார்கள்.  நாய்க்குட்டிகளை  விற்பவர்கள் அவற்றின் விலையையும் கூட்டிவிட்டார்கள். பொருளின் தேவை அதிகமாகும்போது அதனது விலை அதிகரிப்பது நியாயமானதே!

அந்தப் பெண்ணின் முகத்தில் மேகமாகப் படர்ந்த  ஏமாற்றம் மறைந்து ஒரு சுமுகமான நிலைக்கு வந்தபின்னர், அந்தப்பெண் “சமீபத்தில் நான் கூட மார்பைப் பரிசோதிக்க எக்ஸ்ரே எடுத்தேன். அப்போது எனது சுவாசப்பையிலிருந்து கட்டியான கான்சர் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டு,  அதை வெட்டி எடுத்தார்கள் “ என்றார்.

ஒரு கணம் திகைத்து சுதாரித்துக் கொண்டேன். சொந்த விடயங்களைப் பேசுமளவு வரும்போது அவர்களுக்கு என்னில் நம்பிக்கை வந்துள்ளது என்பதோடு நானும் பொறுப்பாக நடக்கவேண்டுமென்ற உணர்வும் தானாக வந்துவிடும். பேசும் வார்த்தைகளில் அவதானம் ஏற்பட்டுவிடும், அதிலும் பெண்களாக இருந்தபோது மேலும் கவனமெடுப்பேன்.

அதன்பின் எங்கள் உரையாடல் மீண்டும் நாயின் கர்ப்பத்தில் வந்தது

அப்பொழுது நான் சொன்னேன்  “ கர்ப்பத்தில் உருவாகும் ஓமோன்கள் எத்தனையோ மாயம் செய்யும். எனக்குத் தெரிய, ஒரு  பெண் தனது இறந்த பிள்ளையை உயிருடன் இருக்கிறது எனப் பல வருடங்கள் நம்பியபடி இருந்தார். “

அந்தப் பெண்  “ உங்களோடு பேசினால் நேரம் போவது தெரியவில்லை .  எனது மகனை சொக்கருக்கு கொண்டு செல்லவேண்டும்  “ எனச் சிரித்தபடி சொல்லியவாறு  வெளியே சென்றாலும் என் மனதின் ஆழத்தில்  புதைந்திருந்த கதையொன்று  எகிப்திய பிரமிட்டில் இருந்து பல்லாயிரம் வருடங்கள் பின்பாக வெளியெடுக்கப்பட்ட மம்மியாக அகக் கண்ணில் தரிசனமாகியது.

——

நான் ஆஸ்திரேலியாவுக்கு வந்த காலம்.  87 ஆம் ஆண்டின் பின்பகுதியில் நானும் எனது மனைவியும் ஒன்றாக ஆங்கில வகுப்பிற்குச் சென்றோம்.  வைத்திய மற்றும் பல் வைத்தியர்கள் இங்கு வந்ததும் ஆங்கிலத்தைப் படித்து அதில் சித்தியடைந்த பின்பே,                                                                                                                                                                                                                                                                                                                                                                   

அவர்களது  தொழில்த் துறைக்கான  பரீட்சைகள் எடுக்கலாம் என்பது விதியாகும். ஆஸ்திரேலிய அரசாங்கம் இந்தக் காலகட்டத்தில் ஆங்கிலம் படிப்பதற்குப் பணம் கொடுக்கிறார்கள்.

இலங்கை –  இந்தியா போன்ற பிரித்தானிய காலனி நாடுகளிலிருந்து வந்த என் போன்றவருக்குப் பெரிதாக ஆங்கிலம் தேவையில்லாதபோதும்,   மற்றைய ஆசிய,  அரேபிய மற்றும் கிழக்கு ஐரோப்பாவிலிருந்து வந்தவர்களுக்கு  இந்த ஆங்கிலம் கற்பித்தல் முக்கியமாகிறது .

மெல்பனில் நடந்த இந்த வகுப்பில்  பல நாட்டவர்கள் இருந்தார்கள். ஒரு விதத்தில் ஐக்கிய நாடுகள் சபை  போல் இருந்தது.

அங்கு நான் சந்தித்த பெண் சோபியா . அக்கால யூகோஸ்லாவியாவின் ஒரு பகுதியான குரேசியாவைச் சேர்ந்த  மிருக வைத்தியர். 28 வயது. கத்தரித்த  பொன்னிற கேசங்கள்.  நீலக்கண்கள்.  கன்னக் கதுப்புகள் சோபியா லோரனை நினைவு படுத்தித் தூக்கலாக அமைந்திருக்கும். நல்ல உயரம்– தடுக்கியபடி ஆங்கிலம் பேசுவாள்.

 மற்றைய அங்க அவயவங்கள் மீண்டும் ஒரு ஆணைத் திரும்பிப் பார்க்க வைக்கும்  அழகாக அமைந்திருந்தாலும்,  அவளது முகத்தில் சோகத்தின்  சாயல்,  மாலை நேரத்து நிழலாகத் தெரிந்தது. 

முகத்தில் சோகத்தின் நிழல் என எப்படி என்னால் சொல்லமுடியும் என்கிறீர்களா?  ?

சோபியாவுக்கு இயற்கை அழகை அள்ளிக் கொடுத்தாலும்,  அது தெரிவதில்லை. கண்கள் ஆன்மாவின் வாசல் என்பார்கள்.  அவளது பெரிய கண்கள் பியூசாகிய பல்புபோல்   ஒளியற்றது. சில பெண்களுக்கு இயற்கையிலே சோகமான முகம். சிரித்தாலும் சோகரசம் முகத்தில் வழிந்து ஹோலிப் பண்டிகைகையில் முகத்தில் ஒட்டிய நிறங்களாகத் தெரியும்.  அது எப்படி என்று என்னால் உங்களுக்குப் புரிய எழுதமுடியாது . காரணத்தை என் மனத்தில் அனுமானித்தபோது பல பதில்கள் வந்தது.  சோபியா தாயின் வயிற்றில் இருக்கும் போது தாய் கஸ்டப்பட்டிருக்கலாம் அல்லது  சிறு வயதில் மற்ற குழந்தைகளால் வீட்டிலோ பாடசாலையிலோ கொடுமைக்கு ஆளாகி இருக்கலாம். ஆனால்,  அவளது ஆன்மாவில் கலந்த ஆழமான சோகத்தை அவளது கண்களின் வழியாக  என்னால் எட்டிப்பார்க்க முடிந்தது.

பெரும்பாலும் எனது அருகே இருப்பாள்.  அத்துடன் தொட்டுத் தொட்டுப் பேசுவாள்.  அப்படி அவள் பேசும்போது எனது மனைவியின் கண்கள் அவளைப் பார்த்தபடியிருக்கும். எனக்கு அந்தரமான நாட்கள் அவை.

ஒரு நாள் என் மனைவி,  ஏன் எல்லோரையும் விட்டு விட்டு உங்களிடம் ஏன் பேசுகிறாள் எனக் கேட்டபோது,  எனக்கு மனைவியின் பொறாமை புரிந்தாலும்,   “ சோபியா ஒரு  மிருக வைத்தியர் என்பதால் என்னிடம் பேசுகிறாள்  “ என்றேன். அது திருப்தியான பதிலாகத் தெரியவில்லை  ஆனாலும் என் மனைவி எப்பொழுதும் அவள் முன்பாக  முகம் சுழித்ததாகவோ அல்லது அதிருப்தியாகவோ காட்டிக் கொள்ளவில்லை .

மதியத்தில்  உணவருந்தப் போகும்போது சோபியா வருவாள். அன்று ஒரு முறை நான் தனியாக கன்ரீனில் நின்றபோது,  கோப்பி வாங்கித் தரும்படி கேட்டாள். நான் வாங்கிக் கொடுத்தேன். அப்பொழுது,   “எனது தந்தை மிகவும் பணக்காரர்.  ஏன் இங்கு வந்து கஸ்டப்படுகிறேன். இங்கு பரீட்சையில் சித்தி பெற்றாலும் நான் வேலை செய்யமாட்டேன் ”என அலுத்துக்கொண்டாள். அத்துடன் விட்டிருந்தால் பரவாயில்லை. அப்படியே வகுப்புக்குப்  போய் எனது மனைவியிடம் நான் கோப்பி வாங்கித்  தந்ததாகச் சொன்னாள்.

இவள் ஏன் என் மனைவியிடம் போய்ச் சொன்னாள் ?

அக்காலத்தில் அரச உதவிப் பணம்,  அடிப்படைத் தேவைகளுக்கு மட்டுமே போதும் என்பதால் எண்ணி எண்ணி செலவு செய்யும் காலமது. நாங்கள் இருவரும் ஒரு கோப்பியை வாங்கி பிரித்துக் குடிப்போம். இவளுக்கு வாங்கிய கோப்பியால் இன்றைக்கு குருஷேத்திரம்  என நினைத்தபோது மனைவி அதைப் பற்றிக் கேட்கவில்லை.  ஆனால்,  எனக்குத் தெரியும்.  பெண்கள் இப்படியான விடயங்களை மறப்பது கிடையாது. பிற்காலத்தில் அம்பறாத்தூணியில் வேறு அஸ்திரங்கள் இல்லாதபோது இது கர்ணனின்  நாகாஸ்திரமாக உபயோகிக்கப்படும் என்பது எனக்குத் தெரியும். தலையை எப்படிக் குனிந்து தப்புவது என்ற யோசனையிலிருந்தேன்

மெல்பனின் வசந்தகாலம். ஞாயிற்றுக்கிழமை.    எங்கும் பச்சைபசேலன்ற இலைகளில் பட்டுத் தெறிக்கும் சூரிய ஒளி கண்ணைக் கூசவைத்தாலும் மிதமான காற்றும் அதில் வரும் நறுமணங்களும்  சேர்ந்து வெளியே வா என்றழைத்தது. வீட்டுக்குள் இருக்காது வெளியே போவோம் என்றால் கையில் பணமில்லை.  வாகன வசதியில்லை.   பஸ்சில்   நானும் மனைவியும் எனது மூன்று வயதான மகளோடு மெல்பனில் உள்ள விக்டோரிய மார்க்கட் சென்றோம். அங்கு காய்கறி,  மீன்,  இறைச்சி  என்பன மலிவாக வாங்கமுடியும் என்பதால் ஒரு கிழமைக்கான பொருட்களை வாங்குவது எங்கள்  நோக்கம்.

இரண்டு மணிநேரம் அந்த மார்க்கட்டை சல்லடைபோட்டு நாங்கள் இரண்டு கைகளிலும் சாமான்கள் நிரம்பிய  பைகளை சுமந்து கொண்டு மார்க்கட்டை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தோம்.  கொஞ்சம் நடந்தே பஸ் ஏறவேண்டும். அப்பொழுது எதிர்பாராதவிதமாக சோபியா எதிரில் வந்தாள்.

 வழக்கமாக முழங்கால்வரை கவுனாக போட்டிருப்பவள் அன்று கறுப்பு ஜீன்சும்,  வெள்ளை மேலாடையும் அணிந்து அளவுக்கு மேலான அழகோடு  இருந்தாள் .   நாங்கள் அவளைக் கண்டு சிரித்தவுடன்,  எங்களுக்குப் பின்னால் தாயின் கையிலுள்ள பை ஒன்றைத் தொட்டபடி வந்து கொண்டிருந்த  எனது மகளை அப்படியே வாரியணைத்துத் தூக்கிவைத்து, நெஞ்சருகே அணைத்துப் பல முறை  முத்தமிட்டாள் .

எங்களை மார்க்கட்டை விட்டு வெளியேறாமல் தடுத்து,  மகளைத் தூக்கித்  தோளில் வைத்துக் கொண்டு கடைகளுக்குச் சென்றாள். ஒவ்வொரு கடையையும் காண்பித்து, அவளிடம் என்ன வேண்டுமெனக் கேட்டாள்.  மகள் வெட்கத்தில் அவளது பிடியிலிருந்து இறங்க நெளிந்தாள். சோபியா விடவில்லை பலமுறை வற்புறுத்தி,    என்ன வேண்டும் என எனது மகளைக் கேட்டாள்.   இறுதியில் நாங்கள் தடுத்தாலும்  கடையில் ஒரு பெரிய கரடிப் பொம்மையை வாங்கி எனது மகளுக்குக் கொடுத்தாள்.

அவள் என் மகளோடு  நடந்து கொண்டது எனக்கு வியப்பாக இருந்தது. பல காலம் குழந்தையைப் பிரிந்த ஒரு தாய் எப்படி மகளோடு நடப்பாளோ அதே மாதிரி இருந்தது. அவளது உடல் மொழி மாறியிருந்தது. அவளது முகத்தில் புது ஒளி வந்து பூரண நிலவாக ஒளிர்ந்தது. நீலக் கண்கள் அகன்று விரிந்து ஒளிர்ந்தது.  நான் கண்ட  சோகம் படர்ந்த கண்கள் எங்கோ தொலைந்திருந்தது.

இது வரையும் அவள் மகளைத் தோளில் தூக்கி வைத்திருந்தாள் எனது மகளைக் குனிந்து கீழே விட்டு, அந்த கரடிப்பொம்மையை மகளது கையில்  கொடுத்தபோது,  அவளது கறுத்த  ஜீன்சுக்கும் வெள்ளை மேலாடைக்கும் இடையில் சிறிய இடைவெளி, நாடக மேடையின் திரையாக விலகியபோது,   என் கண்களுக்கு சிறிய இரண்டு வெள்ளிக் கீறல்கள் சமாந்தரமாக மேலிருந்து கீழ்நோக்கி ஓடி ஜீன்சுக்குள் மறைந்தன . இவள் தாயாகி இருந்தாளா? என்ற எண்ணம் உடனே வந்தாலும்  , சே…  அப்படி  இருக்கமுடியாது.  உடல் பருத்து  பின்பு மெலிந்தவர்களுக்கும்  அப்படியான கோடுகள் இருப்பது உண்டே!   எனக்குள் சொல்லிக்கொண்டேன்.

இதெல்லாம் தேவை இல்லாத ஆராய்ச்சி என்று எனது  அறிவு சொன்னபோதும்,   மனதில் வரும்  நினைப்புகள் தவிர்க்க முடிவதில்லை. இப்படியான விடயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளமுடியாது என்ற எனது நினைவுகள் முட்டையிட்டன.  

 “ இப்படி ஒரு மூன்று வயது மகள் ஊரில் எனக்கு  இருக்கிறாள்”  என்று பளிச்சென சோபியா என் மனைவியைப் பார்த்து  சொன்ன வார்த்தைகள், என் மனதிலிருந்த கற்பனைகள் நிலத்தில் விழுந்த முட்டையாகியது.

மனைவிக்கும் வாரிப்போட்டது.  ஆனால் சமாளித்தபடி  “ எங்கே மகள்?  “ எனக்கேட்டதும்,

 “சாகரப்” என்றாள் சோபியா.

ஏதோ இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறாள் என்பது தெரிந்தது.  ஆனால்,  மார்க்கட்டில் வைத்து அதற்கு மேல் பேசமுடியாது.  அவள் சொன்ன விடயத்தில்,  மேலும் அவள் சொல்லாது நாங்கள் பேசுவது நாகரீகமில்லை என நினைத்தேன் . ஆனால்,  எங்களுக்குள் பல நாட்கள் அவளைப்பற்றிப்  பேசினோம்.   ஆனாலும் நான் பார்த்த வெள்ளிக்கம்பிகளை மறைத்துவிட்டேன்.   மனைவிக்குச் சொல்லவில்லை . இப்படி இடை வெளிகள் பார்ப்பதுதான் பழக்கமா? அதுவும் என்னை அருகில் வைத்துக்கொண்டு…  என்றெல்லாம் கேள்விகளும் பதிலும் வரும்.  அதற்கு எந்த பதில் சொல்லியும் சமாளிக்கமுடியாது என்பது எனக்குத் தெரியும்.

               அதன்பின்பு எனது மனைவிக்கு சோபியாவிடம் அனுதாப  உணர்வு .  ஏதோ பிரச்சினையில் இருக்கிறாள் என்பதால் அவளிடம் போய் பேசுவாள். சுகம் விசாரிப்பாள். இறுதிவரையும் தனது மகளைப் பற்றியே  சோபியா பேசவில்லை. நாங்களும் அவளிடம் கேட்கவில்லை.  இடைக்கிடையே சொக்கலேட் எனது மகளுக்கு கொடுக்கும்படி என்னிடமோ மனைவியிடமோ தருவாள். மூன்று மாதங்கள் நடந்த எங்கள் வகுப்புகள் முடிந்தது. இறுதி நாளில் செப்பால் செய்யப்பட்ட குதிரைச் சிலையொன்றை  எனது மகளுக்கு எனப் பரிசளித்தாள். அரசாங்க உதவிப்  பணத்தில் நாங்கள் வாழ்ந்த காலமது. அவளது அந்த விலை  உயர்ந்த பரிசை மறுத்தோம். தனது மகளுக்குத் தருவதாக நினைக்கிறேன் என்றபோது அவளது கண்கள் பனித்தன. வேறு வழியின்றி  வாங்கினோம்.

கடைசி நாளன்று  எனது மனைவியை அணைத்து முத்தமிட்டவளை பார்த்துக் கொண்டிருந்தேன். என்னருகே வந்து என்னை அணைத்தாள். அவள் அணைத்த கைகளை எடுத்து விலகியபோதிலும் அவளது நினைவுகள் பல காலம்  என்னிடம் தேங்கியிருந்தது.  அது வற்றவில்லை. அவள் மீது உறவோ நட்போ  அனுதாபமோ எதுவும் இல்லாதபோதும்,   ஏன் அவளது நினைவுகள் மட்டுமுள்ளது? எனக்கு விடை தெரியாது.  ஆனால் சோபியா,   ஏதோ பாதியில் படித்துவிட்டு விமானத்தில் தொலைத்த சுவாரசியமான புத்தகம் போலிருந்தது

காலங்கள் கழிந்தன நான் பரீட்சையில் சித்தியடைந்து மிருக வைத்தியராக மெல்பனில் வேலை செய்த இடத்தில் ஐந்து வருடங்களின் பின் பெஸ்னிக் என்ற குரேசியாவில் படித்த ஒருவனைச் சந்தித்தேன்.  அவன் மிருக வைத்தியருக்கான   படிப்பை அரைவாசியில் விட்டுவிட்டு  அவுஸ்திரேலியா வந்தவன். மூன்று வருடங்கள் குரேசியத் தலைநகரான சாகரப்பில் படித்தவன்.

மெல்பனில்   எனது உதவியாளராக வந்தான். அவன் அல்பேனிய முஸ்லிம்.   அவன்  படித்துக்கொண்டிருந்தபோது  ஆஸ்திரேலியாவில் உறவினர்கள் திருமணம் பேசியதால் இங்கு வந்துவிட்டான். அவனுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.  மனைவி பிள்ளை என வந்துவிட்டதால் மேற்கொண்டு அஸ்திரேலியாவில் மீண்டும் படிக்கவில்லை. ஏற்கனவே அவனது நாட்டில் பல பிரச்சினைகள் உருவாகிப் பல புதிய நாடுகள்   கருக்கொண்டிருந்த காலத்தில் , அங்கு  இருந்தால் பிரச்சினை உருவாகும் என்ற காரணத்தால் நாட்டை விட்டு வெளியேறுவதே தனது நோக்கம் என்றான். பெஸ்னிக் எனக்கு உதவியாளரென்ற போதும் நண்பர்களாகவே பழகினோம்.

அது ஒரு கிறிஸ்மஸ் காலம்.

வேலைத்தலத்தில் நடந்த கிறிஸ்மஸ்  மதிய விருந்தில் நாங்கள் இருவர் மட்டுமே  வெளிநாட்டவர்கள்.  ஒரே மேசையில் அருகருகே அமர்ந்தோம். பெஸ்னிக் தனது பழைய வரலாற்றைச் சொல்லியபடி இருந்தான். கேட்கச்  சுவாரசியமாக இருந்தது.

அப்போது பினோநுவா (Pinor Noir) வைனை ஊற்றும் பரிசாரப் பெண் நேரே கிளாசில் ஊற்றும்போது,  அவளை நிறுத்தி கிளாசை கையில் எடுத்துச் சரித்து ஊற்ற வேண்டுமென்றபோது, அந்தப் பெண்ணின் முகம் வெட்கத்தால்  அந்த வைனின் நிறமாகியது. 

“ வெட்கமடைய வேண்டாம்.  நானும் சில காலங்கள் ஹோட்டலில் வேலை செய்தபோது பல விடயங்களை அறிந்து கொண்டேன்”  என்றான்.

அவனோடு உணவருந்தியபடி  பேசும்போது “ சோபியா என்ற குரேசிய மிருக வைத்தியர் என்னோடு ஐந்து வருடம் முன்பாக ஒன்றாக மெல்பனில்  ஆங்கிலம் படித்தவள்.  அவளைத் தெரியுமா? ” என்று அவனிடம் மிகச் சாதாரணமாகக் கேட்டேன்.

“அவள் என்னோடு படித்தாள். அவள் ஊருக்கு  இப்பொழுது திரும்பிவிட்டாள். அவளது தந்தை குரேசியாவில் மந்திரி ” என்று  நான் எதிர்பார்க்காத பதிலைக் கூறினான்.  

 “அப்படியா…?  என்னோடு மிகவும் நன்றாகப் பழகினாள் . தனது தகப்பன் வசதியானவர் என்றும் சொன்னாள்.    அவளுக்கு ஒரு குழந்தை இருந்தது என்று கூறினாள். அது  உண்மையா? “

நானும் அவனிடம் சோபியாவின் கதையைத்  தோண்ட,  கிளாஸ் வைனை  மேசையில் வைத்துவிட்டு தயாராகினேன்

“அது பெரிய கதை.  அவள் எனது நண்பனான ஒரு அல்பேனியனைப் பல வருடங்களாகக்   காதலித்தாள். இறுதிப் பரீட்சை முடிந்த காலத்தில்    அவளுக்குக் குழந்தை உருவாகிவிட்டது . அக்காலத்தில் பழைய யூகோஸ்லாவியா பல துண்டுகளாகப் பிரிந்தது தெரியும் தானே.  சேர்பியாவுக்கு எதிராக குரேசியா –  அல்பேனியா எனப் பிரிந்து கொண்டிருந்த காலத்தில் இவர்களது காதலுக்கு அவளது குடும்பத்தில் பயங்கர எதிர்ப்பு.  இவளது தந்தையார் சாகரப்பில் வசதியும் செல்வாக்குமுள்ள மனிதர். அரசியல்வாதியும் கூட.   அத்துடன் ஆழமான நம்பிக்கையுள்ள  கத்தோலிக்க குடும்பம். அவளது  பெரியப்பா கத்தோலிக்க சேர்ச்சில் குருவானவராக இருக்கிறார்.

இருவரும் ஒன்றாக இருந்தபோது சோபியா எட்டு மாதத்தில் வயிற்றில் வலி என வைத்தியசாலையில் சேர்த்தபோது நானும் இவளது காதலனுடன்  கூட இருந்தேன். இவள் வைத்தியசாலையிலிருந்தபோது  காதலனது  வீட்டில் உள்ளவர்கள் வந்து அவனை அல்பேனியாவுக்கு  கொண்டு சென்று விட்டார்கள். அப்பொழுது நான் சோபியாவினது குடும்பத்திற்கு செய்தி அனுப்பினேன். அவர்கள் வந்து அவளைப் பார்த்தார்கள் . அதன் பின்பு எல்லாம் சுமுகமாக முடியும் என நான் நினைத்து அல்பேனியா போய்விட்டேன்.

அதன் பின்பு நடந்த  விடயங்கள் எதுவும் எனக்குத் தெரியாது.  நான் ஒரு நாள் ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தபோது  எதிர்பாராது மீண்டும் சோபியாவை சந்தித்தேன்.  அவளே அதிர்ச்சியளிக்கும் புதிய விடயங்களைச் சொன்னாள்.

சோபியாவுக்கு பெண் குழந்தை இறந்து குறை மாதத்தில் பிறந்தது.    ஆனால் அதை சோபியா நம்பவில்லை.  தனது குழந்தையைத் தனது பெற்றோர்கள்  விரும்பாததால்  யார் மூலமாகவ ஒளித்துவிட்டார்கள் என நினைத்துவிட்டாள்.   பெற்றோரை வெறுத்தாள்.  இரண்டு நாளில் பெற்றோருக்குத் தெரியாமல் வைத்தியசாலையிலிருந்து வெளியேறி பலரிடம் விசாரித்தபடி பைத்தியமாகத் தன் குழந்தையைத் தேடி  அலைந்தாள்.  முக்கியமாக கத்தோலிக்க தேவாலயங்கள் நடத்தும் குழந்தைகள் காப்பகங்கள்  எல்லாவற்றிலும்  தேடியபடி இருந்தாள். யாராவது தத்து எடுத்துவிட்டார்களா என விசாரித்தாள். அந்த நேரத்தில் அவளது சித்தப்பா அவுஸ்திரேலியாவில்  இருந்ததால் இங்கு வந்தாள்.   அப்போதும் கூட சித்தப்பாவிடம்,  தனது குழந்தை இருக்கலாம் என்ற சந்தேகம் அவளுக்கிருந்தது .

நான் ஒரு ஹோட்டலில் வேலை  செய்து கொண்டிருந்தபோது அவளைச் சந்தித்தேன்.  என்னால், என் கண்களை நம்பமுடியவில்லை. எங்களோடு படித்தவர்களில் அவளே அழகி.  நாங்கள் சோபியாவை,  சோபியா லோரன் என்போம். மிகவும் அழகாக உடுப்பாள். அலங்கரிப்பாள். ஆனால்  நான் பார்த்தபோது  எந்தவொரு  ஒப்பனையும்   இல்லாது மிகவும் சாதாரணமான உடையிலிருந்தாள். கண்கள் ஆழமாகி, கன்னம் ஒடுங்கி,  மெலிந்து.  வயதான பெண்ணாக தோற்றமளித்தாள்.

நான் வேலை செய்யும் ஐந்து நட்சத்திர  ஹோட்டல் அட்ரியாரிக் கடலருகே உள்ளது . அமெரிக்கர்கள் , பிரித்தானியர்கள் வருவார்கள். இவள்   அங்கு வந்தவர்களிடம் யாராவது குழந்தையை தத்தெடுத்தார்களா ..?  என்று விசாரித்தாள். அவளை நான் சந்தித்தபோது என்னிடம் கேட்டாள்,  குழந்தைகளைக் கடத்தும் அல்பேனியன் மாபியா கும்பலில் எவரையாவது   தெரியுமா? என்று. தெரிந்தால் அவர்களிடம் தனது குழந்தையைப் பற்றி விசாரித்துச் சொல்லும்படி கெஞ்சினாள்.  அவளைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

அவளுக்கு நட்டுக் கழண்று,  பைத்தியமாகி விட்டாள்  என நான் நினைத்தேன் . இறுதியில் அவுஸ்திரேலியா வந்து விட்டாள் என அறிந்தபோது சந்தோசப்பட்டேன். இனிமேலாவது   சுமுகமான நிலைக்கு வருவாள் என நினைத்தேன்.  ஆனால் இரண்டு  வருடம் இங்கிருந்து விட்டுப் போய்விட்டாள். எனக்கு கிடைத்த தகவலின்படி அவளது பிள்ளை இன்னமும் உயிரோடிருப்பதாக நம்புகிறாள் .

“ மிகவும் சோகமான கதை . ஆனால் இப்படி கர்ப்பத்தில் குழந்தை இறந்தாலும் அதனது ஓமோன்களால் உடலில் ஏற்பட்ட மாற்றத்தால்  அப்படிப் பல பெண்கள் தனக்குக் குழந்தை பிறந்தது என நம்புவார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதைவிட குழந்தை பிறந்த பின்பு பல பெண்களுக்கு மன அழுத்தம் (Post Natal depression) ஏற்படும்.  ஆனால்,  இங்கே அரசியல், காதல்,  மதம் எனப்  பல விடயங்கள் சோபியாவை ஒரே நேரத்தில் அவளுக்கு எதிராக  மாற்றி இருக்கிறது.”

 “ இப்பொழுது திருமணமாகி இருக்கிறாள் எனக் கேள்விப்பட்டேன்”  என்றான்.

 “அது நல்ல விடயம் “

என்னைப் பொறுத்தவரையில் பாதியில் படித்து வைத்த புத்தகத்தின் மிகுதியை மீண்டும்  படித்த உணர்வு ஏற்பட்டது. 

akazhonline.

—0—

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: