
நடேசன்
1980களில் நான் சென்னையிலிருந்த காலத்தில், என் மாணவப் பருவத்து நண்பனான இரகுபதியை சந்தித்ததேன். அக்காலத்தில்தான் இரகுபதியின் ஆய்வு நூல் சென்னையில் பதிக்கப்பட்டது. இராமாயணத்தில் அணிலாக Early Settlements in Jaffna என்ற ஆய்வு நூலின் பதிப்பில் எனது பங்கும் இருப்பதால் சில உண்மைகளை விளம்ப விரும்புகிறேன்.
வரலாற்றை, வரலாற்றியல் மரபோடு பதிவிட விரும்புவர்கள், அதைத் தாங்களே தேடி அறிந்து பதிவிடுவது நல்லது. மரபைக் கவனிக்காத கூற்றுகளுக்காக ஒதுங்கி இருக்கும் நண்பரை இழுத்து வருவதற்கு எனக்குப் பிரியமில்லை. இருப்பினும், நூல் பதிக்கப்பட்ட காலத்தில் சென்னையில் வாழ்ந்து , விடயங்களைத் தெரிந்துகொண்டு, இந்த நூலுக்கு நிதியுதவி வழங்கியவருள் ஒருவன் என்ற முறையில் எனக்குத் தெரிந்தவற்றைச் சொல்லவேண்டும்.
பத்மநாப ஐயரின் அமுதவிழாவின் சூம் நிகழ்வில், மு. நித்தியானந்தன் கூறிய விடயங்கள் மூன்று; முதலாவது, பத்மநாத ஐயர் அபாயகரமான சூழலில் தனியாக நூற்பிரதியை எடுத்துச் சென்றார் என்பது. பத்மநாப ஐயரும் பொ. இரகுபதியும் ஒன்றாகச் சேர்ந்துதான் கடல் வழியாகப் பயணித்தார்கள் என்பதை பத்மநாப ஐயரே பதிவிட்டிருக்கிறார். நித்தியானந்தன் கூற்று மாறுபட்டுத் தொனிப்பது ஏன்?
இரண்டாவது, நூலாசிரியர் தனது நூலில் பத்மநாப ஐயருக்கு நன்றி தெரிவிக்கவில்லை என்பது. நூலின் நன்றியுரையில் பெயர் குறிப்பிட விரும்பியிராத நண்பர் ஒருவர் (A friend of mine who wishes to remain anonymous) பதிப்பிற்கு முன்முயற்சி எடுத்து அடித்தளமிட்டார் என்று நூலாசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். அது தனக்குரியது என்று பத்மநாப ஐயர் பல ஆண்டுகளுக்குப்பின் பூடகமாக ஏற்றுக்கொண்டதுடன், தன் முயற்சியால் வந்த நூல்களின் பட்டியலில் இந்நூலையும் இணைத்திருக்கிறார். இதை நூலாசிரியர் இதுவரை மறுக்கவில்லை. அது அவர்கள் இருவருக்கும் இடையிலான புரிந்துணர்வு என்று தோன்றுகிறது.
மூன்றாவது , நூற்பதிப்புச் செலவு இந்தியப் பணத்தில் 55000 ரூபா என்றும் , பத்மநாப ஐயரின் முயற்சியால் வந்த பணத்தில் நூல் பதிப்பிக்கப்பட்டு , பின்னர் அது வெளியானபோது திருமதி. இரகுபதியின் பதிப்பாக வெளியானது என்ற பொருட்பட மு. நித்தியானந்தன் பேசியிருந்தார்.
எனக்குத் தெரிந்தவரை, பத்மநாப ஐயரின் சேகரிப்பால் முதலில் க்ரியாவில் வைப்பிடப்பட்ட தொகை 10000 ரூபா. வழங்கிய அன்பர்கள் யாரென்று இரகுபதிக்குத் தெரியாமலே இருந்தது.
ஆய்வு நூற்பதிப்பு அரசியல் பின்னணியற்று இருக்கவேண்டும் என்பதை கருத்திற்கொண்டு இந்த நூற்பதிப்பிற்கான நிதியை எவ்வகையில் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பது பற்றி தனக்கும் பத்மநாப ஐயருக்கும் இடையில் ஒரு முன் உடன்பாடு இருந்ததாகவும், அந்த உடன்பாட்டின் முக்கியத்துவத்தைக் கவனிக்காமல் , பத்மநாப ஐயர் பின்னர் பிறிதொரு நிதியை தனக்குத்தெரியாமல் பெற்றுக்கொண்டதால், தமிழியல் உறுப்பினராக இருப்பதிலிருந்தும் , தமிழியல் ஊடாக இந்த நூலை வெளிக்கொணர்வதிலிருந்தும் விலகிக்கொள்வதாக எழுத்து மூலம் பத்மநாப ஐயருக்கு தெரிவித்துவிட்டேன் என்று இரகுபதி அக்காலத்தில் எனக்கும் கூறியிருந்தார்.
ஏற்கனவே பெறப்பட்ட பணத்தை பத்மநாப ஐயர் யார் யாரிடம் கொடுத்து வைத்திருந்தாரோ அவர்களிடமே விட்டுவிட்டதாகவும், அந்தப் பணத்தில் எதையும் பயன்படுத்தவில்லையென்றும், அதுவரை நடந்த எழுத்துருவாக்கப் பணச்செலவை தனது குடும்பப் பணத்திலிருந்து க்ரியா பதிப்பகத்திற்கு கொடுத்துவிட்டதாகவும் இரகுபதி கூறியிருந்தார்.
இதற்குமேல், நூலின் பக்க உருவாக்கம் ,அச்சிடுதல், நூற்கட்டு போன்றவை க்ரியாவிற்கு வெளியில்வைத்து நூலாசிரியரின் செலவில் செய்யப்பட்டு வந்ததை நான் அறிவேன். நிலையைப் புரிந்துகொண்டு நண்பர்கள் சிலர் இயன்ற தொகையைத் தனிப்பட்ட முறையில் உதவியிருந்தோம். அது நூலில் பதிவிடப்பட்டிருக்கிறது.
நூல் வெளியான பின்னர், அரைவிலைக்கு மொத்த விற்பனையாக ஒரு தொகைப் பிரதிகள் விற்கப்பட்டு சுதர்சன் கிராபிக்ஸ் அச்சகத்தின் பாக்கி அடைக்கப்பட்டதையும் நான் அறிவேன்.
திரிக்கப்பட்ட கூற்றுகளைத் திரும்பத்திரும்பக் கூறி வரலாற்று உண்மைகளாக்க முயற்சிப்பதும் வரலாற்றின் பெயராலேயே நடைபெறுகிறது. கூற்றுகளைச் சீர்தூக்கி உண்மைகளையும் நோக்கங்களையும் உய்த்துணர்வதே வரலாறு என்பதற்காகவே எனது சாட்சியம் இங்கு பதிவாகிறது.
https://www.geotamil.com/index.php/2021-02-11-18-08-43/6820-2021-08-26-17-44-25
மு நித்தியானந்தனின் பதில் – கிரிதரனின் முகநூலில்
அவுஸ்திரேலியாவிலிருந்து நடேசன் அவர்கள் எழுதியுள்ள பதிவைப்பார்த்தேன்.
- பத்மநாப ஐயர் அபாயகரமான சூழலில் தனியாக நூற்பிரதியை எடுத்துச் சென்றார் என்ற கூற்று மாறுபட்டுத் தொனிப்பது ஏன் என்று கேட்டிருக்கிறார். நூற்பிரதியை ஐயர் யாழ்ப்பாணத்திலேயே பெற்றுக்கொண்டு, இந்தியா செல்வதற்கான ஏற்பாடுகளில் இறங்கிவிட்டார். விடுதலைப்புலிகளின் படகில் செல்வதற்கு மாத்தையாவிடம் பேசி பயண ஒழுங்குகள் செய்யப்பட்டுவிட்டன. அந்நிலையில் தானும் அப்படகில் வரவிரும்புவதாக ரகுபதி கேட்டதன் பேரில், ஐயர் மாத்தையாவிடம் கேட்டு, ஐயர் கேட்பதாலேயே தான் அவரின் வேண்டுகோளுக்கு இணங்குவதாக மாத்தையா தெரிவித்துள்ளார். மாத்தையாவிற்கு ரகுபதி ஒரு unwanted appendage. ஐயர் வேண்டுகோளின் பேரிலேயே ரகுபதி அப்பயணத்தில் இணைக்கப்படுகிறார். மாத்தையா இணக்கம் தெரிவிக்காது போயிருந்தால் ரகுபதி அப்பயணத்தில் சென்றிருக்க முடியாது. ,ஆனால், ரகுபதி பயணித்திருக்காவிட்டாலும் ஐயர் தனது ஒழுங்கின்படி நூற்பிரதியைக் கொண்டு போயிருப்பார். ரகுபதி அப்படகில் படகு ஓட்டியுடன் போன நாலைந்து பேர்களில் ஒருவர். அவ்வளவுதான்.நூல்பிரதியைக் கொண்டுவந்தது ஐயர்தான். ரகுபதி ஒருபோதும் தனது நூல்பிரதியை விடுதலைப்புலிகளின் படகில் தனியே கொண்டு போயிருக்க முடியாது. ஐயர் தனியே கொண்டு போயிருப்பார். அந்த பயண ஏற்பாடு ஒழுங்குகளே ஐயர் செய்ததுதான்.பத்மநாப ஐயரும் பொ.ரகுபதியும் ஒன்றாகச் சேர்ந்துதான் கடல்வழியாகப்பயணித்தார்கள் என்பதில் வாதம் செய்ய by எதுவுமில்லை. ஆனால் நூல்பிரதியைப் புலிகளின் படகு வழி கொண்டு சேர்த்தது ஐயர்தான்.
2) அந்நூலில் ஐயருக்கு நன்றி தெரிவிக்கவில்லை என்பது உண்மைதான். என் பெயரைப் போடவேண்டாம் என்று ஐயர் வேண்டியது போலவும் , அவருக்குப்பெயர் போடுவதில் விருப்பமில்லை என்ற தொனியில் விளக்கம் தந்து,ஐயர் அதனைப் பூடகமாகப் புரிந்துகொண்டுவிட்டார் என்றும் இருவருக்குமிடையில் இடையிலான புரிந்துணர்வு இது என்றும் நடேசன் தரும் உரையாசிரியர் விளக்கத்திற்கு பதில் எழுதுவது சரியாக இருக்காது.
3) “எனக்குத் தெரிந்தவரை, பத்மநாப ஐயரின் சேகரிப்பால் முதலில் க்ரியாவில் வைப்பிடப்பட்ட தொகை 10000 ரூபா.வழங்கிய அன்பர்கள் யாரென்று இரகுபதிக்குத் தெரியாமலே இருந்தது” என்று நடேசன் கூறுகிறார். இது ரகுபதி அவருக்குச் சொன்னதாக இருக்கவேண்டும். இந்த நூற்பதிப்புப் பிரச்சினை பற்றி 1987லேயே ரகுபதி தன்னிடம் கூறிய வேறு பல தகவல்களையும் நடேசன் கூறுகிறார்.
- இந்த நூல் பதிப்பிற்கு பாரிஸில் அப்போது வாழ்ந்த கிருஷ்ணகுமாரிடம் ( யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் பதிவாளராக இருந்து ஓய்வு பெற்று, தற்போது யாழ்ப்பாணத்தில் இருக்கிறார்) பத்தாயிரம் ரூபாய் கேட்டு, அவர் பணத்தை வழங்க இணங்கி, யாருக்கு அனுப்புவது என்று கேட்டபோது, எனக்கோ ஐயருக்கோ இந்தியாவில் வங்கிக்கணக்கு இல்லாததால், ரகுபதிக்கு வங்கிக்கணக்கு இருந்ததால் அவருடைய வங்கிக்கணக்கிற்கே அந்த பத்தாயிரம் ரூபாய் அனுப்பப்பட்டது.அந்த பத்தாயிரம் ரூபாய் வழங்கிய அன்பர்கள் யாரென்று ரகுபதிக்குத் தெரியாமலே இருந்தது என்கிறார் நடேசன். ஐயரிடமும் இத்தகவலை உறுதி செய்துகொண்டுதான் இதனை எழுதுகிறேன். நடேசன், இதற்குமேல் நான் உங்களுக்கு என்ன சொல்லமுடியும்?
- 4) பத்மநாப ஐயருக்கும் ரகுபதிக்கும் நிதிபெறுவதில் உடன்பாடு எட்டப்பட்டிருந்தது என்றும் பின்னர் அதனை ஐயர் மீறிவிட்டார் என்று நடேசன் தரும் தகவல் எனக்குப் புதியது.
- 5) தமிழியல் உறுப்பினர்களை எல்லாம் ஐயர் சேர்த்து வைத்திருந்த கதை எல்லாம் எனக்குத் தெரியாது.நான் ஐயருடன் பல தமிழியல் நூல்களை வெளியிடுவதில் சேர்ந்து உழைத்திருக்கிறேன்.ஆனால், நான் தமிழியல் உறுப்பினன் கிடையாது. யாழ்ப்பாணத்தில் ஓர் ஆலயத்திடம் நிதி உதவி கோரியபோது, அந்த ஆலயத்தினர் formal ஆக ஒரு கடிதம் தருமாறு கேட்டபோது, ஒரு letter head தயாரிக்கவேண்டிய நிலையில் ரகுபதி பெயர் உள்ளிட சில பெயர்களைப்போட்டு ஒரு கடிதம் தயாரிக்கப்பட்டது எனக்குத் தெரியும்.. ஒருவேளை அந்த letter head காரர்கள்தான் தமிழியல் உறுப்பினர்களோ என்று எனக்குத் தெரியாது.
6) பத்மநாப ஐயருக்கு எழுத்துமூலமாக ரகுபதி 1987இல் அறிவித்த கதை எனக்குத் தெரியாது. அப்படி ஒரு கடிதமும் அவர் தனக்கு எழுதவில்லை என்று ஐயரிடம் இன்று கேட்டபோது ஐயர் கூறினார்.(continued)
7) அந்நூலின் விலையை 300 ரூபாய் என்று நிர்ணயம் செய்தது நான்தான். அப்போது க்ரியா ராமகிருஷ்ணன் ‘இந்த விலை அதிகமல்லவா?’ என்று கேட்டார்.
- 😎 நூல் இறுதிக்கட்டத்தை எட்டியநிலையில்தான், அவர் தான் அதனை அச்சிட்டுக்கொள்வதாகத் தெரிவித்தார்.
- 9) அதன் பின் அச்சகப் பாக்கி அடைக்கப்பட்ட கணக்கு வழக்கு விபரங்களை நடேசன் 34 ஆண்டுகள் கழிந்தும் துல்லியமாகத் தந்திருக்கிறார்.
- 10) கூற்றுகளைச் சீர்தூக்கி உண்மைகளையும் நோக்கங்களையும் உய்த்துணர்வதே வரலாறு என்பதுதான் எவ்வளவு அரிய உண்மை! தங்களுக்குத் தெரிந்தது அல்லது தங்களுக்குச் சொல்லப்பட்டதுதான் உண்மை என்று நம்பிக்கொள்வது வசதியானதுதான். ஆனால், சீர்தூக்கிப்பார்க்க இரண்டு பக்கங்களில் நடந்தனவற்றை அறிந்து கொள்ளமுயற்சிப்பதுதான் அறிவு நாணயம் சார்ந்தது. தீர்ப்பு வழங்குவதில் அவ்வளவு அவசரம் தேவையில்லை. மாறுபட்ட கருத்துகள் முன்வைக்கப்பட்டதும் அவற்றை திரித்தல், ரேந்தை பின்னுதல் என்று லேபிள் ஒட்டுவது எல்லாம் இன்று மாமுலாகிப்போய்விட்டது. சிலருக்கு இந்த உண்மைகள் சொல்லப்படும்போது, அவை ஜீரணிக்கக் கஷ்டமாயிருந்தால், இதெல்லாம் எப்பவோ முடிந்தகதை என்று
- உபதேசம் அருளும் புனிதர்களாகி விடுகிறார்கள்.
- அந்த நூலாக்கத்தில் ஐயரின் பங்கு நூறுசதவீதமானது என்று நான் உண்மையாகவே நம்புபவன். அவரது பெயர் அந்நூலில் மிகத் தெளிவாகக்குறிப்பிடப்பட்டிருக்கவேண்டும் என்றும் நான் உறுதியாகச் சொல்வேன்.
- ஐயர் இல்லாதிருந்தால் அந்த நூல் 1987இல் ஒருபோதும் வெளிவந்திராது. ஒருவேளை காலம் பிந்தி வெளிவந்திருக்கக்கூடும். நடேசன் அவர்களின் பதிவிற்கும் கிரிதரன் அவர்களின் கேள்விகளுக்கும் மதிப்பளித்து நான் அறிந்தவரையில் சொல்லக்கூடியது இவ்வளவுதான். இதற்குமேல் இப்பிரச்னையைத் தொடர நான் விரும்பவில்லை.
கிருண்ணகுமார் இரகுபதிக்கு அனுப்பவில்லை என்பதற்கு
ஆதாரம் 1
கிருஷ்ணகுமார் ஆகிய நான் தமிழியல் நூல் வெளியீட்டுக்காக நான் பரிஸில் இருக்கும் போது காசு பத்தாயிரம் ரகுபதியின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பியதாக தகவல் ஒன்று அண்மையில் பிரசுரமாகியுள்ளது . இத்தகவல் தவறு. நான் ரகுபதிக்கு எந்தப் பணமும் அனுப்பவில்லை. ஐயருக்குத்தான் நேரடியாகவோ அல்லது கிரியாவின் வங்கிக் கணக்கிற்கோ அனுப்பியிருந்தேன் .
நான் 1986 july இல் யாழ்ப்பாணம் வந்துவிட்டேன்.
நிச்சயமாக, ரகுபதியின் வங்கிக் கணக்கிற்கோ ரகுபதிக்கோ எந்தப்பணமும் அனுப்பவில்லை என்பதை சகலருக்கும் தெரிவித்துகொள்கிறேன் .
1/09/2021
இராசரத்தினம் கிருஷ்ணகுமார்
யாழ்ப்பாணம்
—————————————————————————————————————————
பொ இரகுபதி லெட்டடர்கெட் மனிதராக தொழிற்பட்டால் எப்படி தமிழியலின முதல் புத்தகத்திற்கு முன்னுரை எழுதியிருப்பார் ? இரகுபதி தான் சேகரித்த பணத்திலே அந்த புத்தகம் பதிப்பித்ததாக எனக்கு கூறினார்.
ஆதாரம் 2
ஊரடங்கு வாழ்வு என்ற ந சபாரத்தினத்தின்( முன்னாள் யாழ் இந்துக்கல்லூரி அதிபர் -எனது அதிபரும்கூட) புத்தகம் தமிழியல் சார்பாக பொ ரகுபதியின் முன்னுரையோடு பொ. இரகுபதி சேகரித்த பணத்தில் வெளியாகியது. தமிழ் உலகத்தினர் வாசிக்கவேண்டிய முக்கிய புத்தகம்
ஆதாரம் 3
Early Settlements in Jaffna என்ற நூலின் typesetting மட்டும் முடிந்திருந்த நிலையில் மேற்கொண்டு அதை க்ரியாவில் வைத்துச் செய்வதில் சிக்கல்கள் இருந்தன. திரு இராமக்கிருஷ்ணனின் ஆலோசனைப்படி க்ரியாவில் வேலை செய்துகொண்டிருந்த நான் அதை எனது வீட்டில் வைத்து முனைவர் இரகுபதியின்

சொந்த வேலையாகத்தான் செய்து கொடுத்தேன். பக்கங்கள், நிழற்படங்கள், வரைபடங்கள் என்ற
அனைத்து layout வேலைகளும் முனைவர் இரகுபதி பக்கத்தில் இருந்து பார்க்க இரவு நேரங்களில் செய்யப்பட்டன. இந்த வேலை பல மாதங்களாக நடந்தது. வேலைக்கான முழுச் செலவையும் முனைவர் இரகுபதியிடம் இருந்துதான் நான் பெற்றுக்கொண்டேன்.
S. Sathiamoorthy
Multi Craft
Chennai
01-09-2021



மறுமொழியொன்றை இடுங்கள்