நடேசன்
2008 பெப்ரவரி மாதத்தில் உதயத்தில் எழுதியது.
இலங்கையின் வட-கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு செல்வநாயகம் – அமிர்தலிங்கம் தலைமையிலான கூட்டணியினர் தமிழ் ஈழம் என்ற பட்டு வேட்டிக்கு ஆசைப்படவைத்தனர்.பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் இப்பொழுது கோவணத்துணியும் இல்லாமல் அம்மணமாக விட்டு விட்டார்கள்.
தற்பொழுது மகிந்த இராஜபக்ச தலைமையில் உள்ள இலங்கை அரசாங்கம் உலக நாடுகளினதும் இந்தியாவினதும் வற்புறுத்தலின் பேரில் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை அமுல் நடத்துவதாக வாக்களித்தது மூலம் தனது தோளில் தொங்கும் கரும் சிவப்பு துண்டை வட-கிழக்கு வாழும் தமிழ் மக்களுக்குக் கொடுத்து கோவணமாக அணியும்படி கொடுத்திருக்கிறார்.
இந்த திருத்தச் சட்டத்தை ஆதரிப்பதா இல்லையா என்ற கேள்வி வெளி நாட்டுத் தமிழர்கள்பலரிடம் உள்ளது. உள் நாட்டுத் தமிழர்கள் இலங்கை இராணுவம் விடுதலைப்புலிகள் மற்றும் பிள்ளையன் குழு என அடங்கி வாழவேண்டி இருக்கிறது. மேலும் இவ்வளவு காலம் நடந்த போருக்கும் அழிவுக்கும் இலங்கை அரசாங்கமும் புலிகளும் மட்டுமல்லவெளிநாட்டுத் தமிழர்கள்.அந்த எரியும் தீயில் நெய் ஊற்றி வளர்த்தவர்கள். இவர்கள் சுயநலத்துடன் முட்டாள்தனத்தையும் கலந்து ஊதி போர்க்கனல் வளர்த்தார்கள்.
முன்னாள் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவின் இந்தியா -இலங்கை ஒப்பந்தத்தில் இந்த திருத்தச் சட்டம் தற்காலிக வட-கிழக்கு இணைப்புடன் வந்தது. அக்காலத்தில் கிடைத்த வட-கிழக்கு இணைப்பு இப்போது இல்லை. சந்திரிகா குமாரதுங்கா காலத்தில் நீலன் திருச்செல்வம்த்தால் உருவாக்கப்பட்ட தீர்விலும் குறைவானது.
இப்படியான ஒரு தீர்வை ஏன் நாம் ஆதரிக்கவேண்டும்?
தற்போது தமிழர்கள் இராணுவ , அரசியல், பொருளாதார, மனிதவளத்தில் வரலாறு காணாத நிலையில் பின் தள்ளப்பட்டு உள்ளார்கள். வடமாகாணம் பெரும்பகுதி அரசாங்க படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண தமிழர்கள் பெரும்பான்மையோர்அகதி வாழ்க்கை நடத்துகிறார்கள். இலங்கையில் வாழும் வட-கிழக்கு தமிழர்கள் நாட்டின் நாட்டின் 12 விழுக்காட்டிலிருந்து 8 விழுக்காடாகிவிட்டனர்.
இதற்கு விடுதலைப்புலிகளுக்கு நன்றி உரித்தாகுக.
தற்போதைய அரசாங்கம் சிறுபான்மை அரசாங்கம். இதன் ஆட்சியதிகாரம் ஜனதா விமுக்தி பெரமுனையின் ஆதரவில் தங்கி இருக்கிறது. ஜயவர்தனாவின் அரசுக்குப் பின்பு எந்த அரசுமே விரும்பினாலும் எதுவும் செய்ய முடியாதநிலையில் இருந்தன. சந்திரிகாவால் உருவாக்கப்பட்ட தீர்வை ஐக்கிய தேசிய கட்சியும் விடுதலைப்புலிகளும் குழப்பினார்கள்.
வட-கிழக்கு தமிழ் மக்கள் இணைந்த தீர்வு வேண்டும் என்பவர்கள் தற்போது கிழக்கு வாழ் மக்கள்
இந்த இணைப்புக்குச் சம்மதிக்கிறார்களா என்பதைச் சிந்திக்கவேண்டும். ஆராய்ந்து பார்த்தால் தமிழ்பேசும் இஸ்லாமியர்களும் கருணாவின் பிளவின் பின் பெரும்பாலான தமிழர்களும் வடக்கு மாகாண மக்களோடு இணைந்து வாழத்தயாராகவில்லை. வட மாகாணத்தவருக்கு கிழக்கு மாகாண மக்களோடு இணைந்து வாழவேண்டிய தேவையும் இல்லை. சிறிய மாநிலங்களாக இருப்பது அபிவிருத்தி அடைவதற்கு இசைவானது என்பது இந்தியாவின் அனுபவம். உத்தரப் பிரதேசத்திலிருந்து உத்தரகண்ட் எனவும் மத்தியப் பிரதேசத்திலிருந்து சத்திஸ்கார் எனப் பிரித்தார்கள். இப் பின்தங்கிய பிரதேசங்கள் தற்போது பொருளாதார முன்னேற்றம் அடைந்து இருப்பதால் ஆந்திராவிலிருந்து தெலுங்கானாவைப் பிரிப்பது உசிதம் என நினைக்கிறது இந்திய மத்திய அரசு.
தற்போது வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்கள்; அகதி நிலையிலிருந்து மீண்டும் சாதாரண மனிதர்களாக வாழும் நிலையை உருவாக்க இந்த பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் உதவும். மேலும்; இதை ஆரம்பப் புள்ளியாகக்கொண்டு வளர்த்து எடுக்கவேண்டும்.
இப்படி ஏற்று நடந்தால்
வடக்கில் டக்ளஸ் தேவானந்தாவையும் கிழக்கில் பிள்ளையனும் அரசியல் அதிகாரத்துக்கு வர வழிவகுக்கும்.. இது தற்போது உள்ள வன்முறை நிலையிலும் மேலானது.. இவர்கள் மண்ணின் மைந்தர்கள்தான்;. தற்போதுள்ள கள நிலையில் விடுதலைப் புலிகள் இராணுவம், சிங்கள குடியேற்றம் என்பவற்றுக்கு எதிராக இவர்கள் மட்டும் தான் தாங்கிப்பிடிப்பார்கள். இவர்களில் குறை காண்பவர்கள் உணரவேண்டியது வடக்கு-கிழக்கு மாகாணங்கள் எப்பொழுது ஜனநாயகம் தளைத்துச் செழித்த மண்ணல்ல. மேற்கு நாடுகளில் ஜனநாயக காற்றைச் சுவாசிக்கும் தமிழர்கள் கூட அமிர்தலிங்கம் , நீலன் திருச்செல்வம் போன்ற ஜனநாயக வாதிகளைக் கொன்ற போது களிப்படைந்து பாலசிங்கம், தமிழ்செல்வனுக்கு வாரக்கணக்கில் துக்கம் அனுஷ்டித்தவர்கள்தான்.
தற்போதைய கள நிலை
இந்தியாவில் நின்ற போது மூன்று விடுதலைப்புலிகள் எனச் சந்தேகத்தில் டெல்லியில் பிடித்த மறுநாள் முன்னாள் வட- கிழக்கு முதல்வர் வரதராஜப்பெருமாளை கொலை செய்யத் திட்டமிட்டதாகப் புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் பலர் பிடிபட்டனர். இதன்பின்பு கருணாநிதி ஆட்சிக்கு நெருக்கடி உருவானது. கூட்டணியின் அங்கமான காங்கிரஸ் கட்சியும் எதிர்க்கட்சியான அ. தி.மு.க வும் சேர்ந்து கலைஞரைப் புலி ஆதரவுஎனக் குற்றம் சாட்டினர். கலைஞர் தனது ஆட்சியைக் காப்பாற்றத் தமிழ் நாட்டு உளவுத் துறையான Q பிரிவை முடுக்கிவிட்டார். சென்னையில் வாழும் புலிகளுடன் அகதித் தமிழர்களுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் காங்கேசன் துறை முதல் பொத்துவில் வரையான கிழக்குப்பகுதி இலங்கைஇந்தியக் கடற்படைகளின் கூட்டு முயற்சியால் கடற்புலிகளின் போக்குவரவு தடைசெய்யப்பட்டுள்ளது. இராமேஸ்வரம் அண்டிய (தங்கச்சிமடம்) தமிழ் நாட்டுக் கரையிலிருந்து மன்னாரின் வடக்கு கரை (விடத்தல் தீவு) பகுதிகளுக்கே இப்பொழுது எரிபொருளும் கண்ணி வெடிக்குரிய மூலப்பொருட்களும் கடத்தப்படுகிறது. இந்த கடல்பகுதி ஆழம் அற்ற பகுதி. பாரிய கடல் படை கப்பல்கள் செல்லமுடியாது..இந்த கடத்தலைப் புலிகள் நேரடியாகச் செய்வதில்லை. தமிழக கடத்தல்காரரிடம் கொந்தராத்து விட்டுள்ளார்கள். இவர்கள் ஏழை மீனவர்கள் மூலம் இதைச் செய்கிறார்கள்.
இதை விடப் பலரது கருத்துப்படி விடுதலை புலிகளின் இராணுவ நடவடிக்கை உளவுப்பொறுப்பாளர் பொட்டம்மனிடம் சென்றுவிட்டது. இத்துடன் பிரபாகரனது காயத்தைப்பற்றிய செய்தியும் பலமாக உலாவுகிறது.. இதன்படி புலிகளின் தாக்குதல் சாதாரண சிங்கள மக்களுக்கு எதிராக மேலும் முடுக்கிவிடப்படலாம். இது இலங்கை அரசாங்கத்தின் கையை மேலும் பலப்படுத்தும்.ஏற்கனவே பல சக்திகள் புலிகளுக்கு எதிராக ஓவர்டைம் வேலை செய்கிறார்கள். பாகிஸ்தான் விமான ஓட்டிகள் குண்டு விமானம் ஓடுகிறூர்கள். 150 இலங்iகை விமான ஓட்டிகள் மிக் ரக விமானங்களுக்கு இந்திய பைலட்டுகளாலே இலங்கையிலே பயிற்றப்படுகிறார்கள். இந்தியக் கப்பற்படைகள் புலிகளுக்கு எதிராக ரோந்து செய்கின்றன. இது மட்டுமல்ல இலங்கை இராணுவ முகாங்களில் இந்திய ஆலோசகர்கள் உள்ளார்கள் என சில தகவல்கள் கசிகிறது.
இந்த நிலையில் வன்னியில் சிறுவர்களையும் தலை நரைத்த மத்திய வயதானவர்களையும் புலிப்படையில் சேர்த்து நிகழ்காலத்தை மட்டுமல்லாது தமிழர் எதிர்காலத்தையும் அழிப்பதா இல்லை 97ல் இறந்த ஈழத்தைக் கடந்த 20 வருடமாக விடுதலைப்புலிகள் இழுத்து திரிந்க இந்த பிரேதத்தை எரித்து சாம்பலை காடாத்திவிட்டு பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் ஏற்றுக்கொள்வதா என்பதே இப்பொழுது தமிழர் முன் உள்ள பிரச்சினையாகும்..
புல விடயங்களில் திராவிட இயக்கம் மோசமான முன் உதாரணமாக இருந்தாலும்திராவிடப்பிரிவனையை விட்டு இந்தியாவின் ஒருமைப்பாட்டை ஏற்றுக்கொண்டது நாம் எல்லோரும் கவனித்துப் பின்பற்ற வேண்டியதொன்றாகும்.
இதேவேளையில் திராவிடக்கோசம் தமிழ் நாட்டில் அவர்களை அரசுக் கட்டில் ஏற்றியது ஆனால் எங்களுக்கு……
மறுமொழியொன்றை இடுங்கள்