16 . கரையில் மோதும் நினைவலைகள்;முதல் ரயில் பயணம்

நடேசன்

பேராதனைப் பல்கலைக்கழகம் செல்லும் பயணமே  எனது  முதல் ரயில் பயணம் என்பதால்,   அந்தப் பயணம் புதிய அனுபவமாக இருந்தது. ஏற்கனவே பிரச்சினைப்பட்டதால், எனது அப்புவுடனான பேச்சு வார்த்தைகள் கஞ்சத்தனமாக    இருந்தது.  கனைப்புகளும் தலையாட்டலும், தந்தையினதும்  மகனதும்  தொடர்பாக  இருந்தது. அதைப்பற்றி  இருவரும் கவலைப்படவில்லை.

கொடிகாமத்தை ரயில் தாண்டியதும் கைப்பையில் வைத்திருந்த உணவின் வாசம்,  நாசியால் சென்று ,  இரைப்பைக்கும்  சிறுகுடலுக்கும் மத்தியில்  போரை உருவாக்கியது . வீரகேசரிப் பத்திரிகையால் மடித்துக்  கட்டித் தந்த பார்சலை திறந்தேன்.   உள்ளே வாட்டிய  வாழையிலையில் ,  புட்டுடன்,  முட்டை பொரியல்,  உருளைக் கிழங்குக் கறியை  வைத்துக்   கட்டிய  எனது உணவுப் பார்சலை திறந்தபோது, அப்புவும் திறந்தார்.  அம்மா எனக்கு இரண்டு முட்டைகளை ஒன்றாகப் பொரித்ததால் பெரிதாக இருந்தது.

 மூத்தவனாக எனக்கு எப்பொழுதும் பாரபட்சம் வீட்டில்  இருக்கும். யாழ்ப்பாணம்  இந்துக்கல்லூரி விடுதியிலிருந்த காலத்தில் தொடங்கியது. வார விடுமுறைகளில் வீடு சென்றால் முட்டைகள் பொரித்த மீன்கள்,  சோற்றுக்கு வெளியில் ஒன்று  அடியில் ஒன்று என இருக்கும்.   அவன் பாவம் கிழமை முழுவதும் போடிங்கில் வயிறு காய்ந்து விட்டு வாறான் என்பது அம்மாவின் பதில்.

விசில் ஊதியபோது பந்தயத்தில் ஓடும் விளையாட்டு வீரர்களாக,  அவசரமாக பலர் உணவருந்த,  ரயில் முழுவதும் உணவுக் கூடமாகியது. தொடர்ந்து பிரயாணம் செய்வதால் இலகுவாகச் சாப்பிடப் பாண் ரொட்டி எனப் பலர் வைத்திருந்தனர். நீற்றுப்பெட்டியில் அவித்த புட்டை இருந்த இடத்திலிருந்து கொண்டு உண்பது எனக்குச் சவாலாக இருந்தது.  

இரயில்,  இரவை டெயிலரின் கத்திரியாக கிழித்தபடி  தொடர்ந்து சென்றபோது கண்ணை மூடியபடி,  அனுராதபுரம் செல்லும்வரை   சியாமளாவுடன் நினைவுகளில் பயணித்தேன்.  தனிமை என்பது எக்காலத்திலும் என்னை வாட்டுவதில்லை.  மனிதர் நிறைந்த இடத்தில்   முகங்களைப் படித்துக் கொண்டிருப்பேன். எவரும்  இல்லாதபோது கனவுலகத்தை உருவாக்கிவிடுவேன். அதிலும் காதல் கொண்ட காலத்தில்  எனக்குத் தேவையான  உலகத்தை மயனாக அமைத்துவிடுவேன்.

நடு இரவின் பின் சில மணிநேரம் தூங்கிவிட்டேன்.

அதிகாலையில் பொல்காவலையில் இறங்கினோம் . அங்கிருந்து இரு மணிநேரத்தின் பின்பு கண்டி செல்லும்  ரயிலில் பயணம் செய்ய வேண்டும். அப்பு பத்து வருடங்கள் மலைநாட்டில் ஆசிரியராக வேலை செய்துகொண்டு  1958 இனக் கலவரம்வரை  கடையொன்று வைத்திருந்தவர். அவருக்கு இந்த ரயில் பயணம்  பழக்கமானது.

பொல்காவலையில் என்னைப்போலப் பல மாணவர்கள் சிறு கூட்டங்களாக நின்றார்கள். ஆனால்  எனக்குத் தெரிந்தவர்கள் எவருமில்லை. அக்காலத்தில் றாக்கிங் பெரிதாக இருந்ததால்  என்னை நான் பல்கலைக்கழக மாணவனாக இனம் காட்ட விரும்பவில்லை. பரீட்சை முடிவுகள் வந்தவுடன் ஒரு சிலரை யாழ்ப்பாணத்திலே வைத்து றாக்கிங் செய்தது கேள்விப்பட்டேன். பல்கலைக்கழகம் போகுமுன்பே காதலி இருந்த விடயம் தெரிந்து சிலர் என்னை விசேடமாக றாக்கிங் செய்யத் தயாராக இருப்பதாக ஒரு செய்தி உலாவியது.   மேலும் அப்புவுடன் செல்லும்போது றாக்கிங்கில் நான் மாட்டிக் கொள்ளத் தயாராக இல்லை. அதற்காக  நான் ஒரு விடயத்தைச் செய்தேன்.  பொல்காவலை ரயில் நிலைய கழிப்பறைக்குச் சென்று,  எனது பாண்டை கழற்றி விட்டு எனது நீலக் கோட்டுச் சாரத்தை உடுத்துக் கொண்டேன் . அப்பு என்னைப் பார்த்துவிட்டு சிரித்தபடி இருந்தார்.

 காலை ஆறுமணியளவில் கொழும்பிலிருந்து வந்த ரயிலில் ஏறியதும் அந்த ரயில் சென்ற  பிரதேசம், எனக்குப் புதியது.  யன்னலுக்கு வெளியே தென்னந்தோப்புகள்,   சோலைகள் மற்றும்  வயலும் என மலை சார்ந்த பிரதேசத்தில்   நிலத்திலிருந்து ஆகாயம் நோக்கி   பச்சைக் கம்பளமாக நெய்திருந்தது.  கண்கள் இரண்டையும் அந்தக் காட்சிகள் ரயிலுக்கு வெளியே கடத்திக் கொண்டு சென்றன. மலைகளின் சரிவில் நெல் விவசாயம், எருமைகளால் உழுதல் எனக்குப் புதுமையாக இருந்தது. கிடுகுவேலியால் அடைத்த வரிசையில்,  வீடுகளைப் பார்த்த எனக்கு மலை உச்சிகளிலும் சரிவுகளிலும் வீடுகளை யாரோ கொண்டுபோய் வைத்திருப்பது போலிருந்தது. குகைகளை ஊடறுத்தபடி ரயில் செல்லும்போது சில நிமிடங்கள் காட்சிகள் மறைந்துவிடும் .

காலை எட்டு மணியளவில் பேராதனைப் பல்கலைக்கழகத்திலுள்ள சரசவி உயன என்ற சிறிய ரயில் நிலயத்தை ரயில்  அடைந்தபோது ரயில் பெட்டிகளில் பல மாணவர்கள் ஏறினார்கள். அவர்கள் புதிதாக வந்த மாணவர்கள் இருக்கிறார்களா..?  எனத் தமிழிலும் சிங்களத்திலும் கேட்டார்கள்.  நான் சாரத்தைக் கொஞ்சம் மேலே இழுத்துவிட்டு முழங்கால் தெரிய விறைப்பாக இருந்தேன். பார்த்தவர்கள் பலர் சாதாரணமான பயணிகள் என்ற எண்ணத்தில் எங்களைக் கடந்தார்கள்.  ரயில் மீண்டும் புறப்பட்டபோது, ரயில் நிலையத்தில் இறங்கிய  பல மாணவர்கள் மட்டுமல்ல மாணவிகளும் தங்கள் பெட்டிகளைத் தலையில் வைத்தபடி வரிசையாகச் சென்றார்கள்.  பலரது பெற்றோர்கள் அவர்களைப் பரிதாபமாகப் பார்த்தபடி வாலாக  இழுபட்டனர்.

நாங்கள் கண்டி சென்று அங்கிருந்து வை எம் சி ஏ எனப்படும் கட்டிடத்தில் ஒரு அறையில் தங்கினோம். மதியத்தின் பின் வெளியே கண்டி வாவி உள்ள பிரதேசத்திற்குச்  சென்றபோது அங்கும் வரிசையில் சில மாணவர்களை வைத்து பழைய மாணவர்கள் அணிவகுப்பு நடத்தியதைக் கண்டேன்.

அடுத்த நாள் காலை எனக்கு தரப்பட்ட சென்ட்  கில்டா விடுதிக்கு சென்று பதிவு செய்துகொண்டதும் அப்பு திரும்பிச் சென்றுவிட்டார்.

எனக்குத் தரப்பட்ட   அறையில் நான் மூன்றாவது ஆளாகச் சென்றேன். எனது அறையில் சசி கிருஷ்ணமூர்த்தி (விடுதலைப்புலிகள் தாக்கியழித்த  விமானத்தில்  கொல்லப்பட்டவர்) என்ற யாழ்ப்பாணத்தவரும்   சார்ள்ஸ் தேவசகாயம் என்ற திருகோணமலையைச் சேர்ந்தவரும் இருந்தார்கள்.

ஜெய்பூர் கால்கள் – டொக்டர் பிரமோத் கரன் சேத்தி நினைவுகள்

தமிழர் மருத்துவ நிதியத்திற்கு சிறிது சிறிதாக பணம் சேர்ந்தபோது எமது நடவடிக்கைகளை அகலப்படுத்த முயற்சித்தோம். அப்போது எனது மனைவி சியாமளா மட்டும் மருத்துவ நடவடிக்கைகளை கவனித்தவண்ணமிருந்தார். அதிகமாக மருத்துவ வசதிகளைப் பயன்படுத்தியவர்கள்,  எமக்கு அருகில் இருந்த ஈழமக்கள் விடுதலை முன்னணியினர். அதைவிட அந்தப் பகுதியில் இலங்கையில் இருந்து இடம் பெயர்ந்து வந்திருந்த இலங்கைத் தமிழர்களும் சிகிச்சைக்காக வந்தார்கள். அயலில் இருந்த சென்னை வாழ் தமிழர்களும் வரும்போது எமக்கு வேலைப்பளு கூடியது.

மருத்துவ அறிவை தமிழ்நாட்டு அகதி முகாம்களில் உள்ளவர்களுக்கு ஊட்டும் விடயத்தில் முகாம்களில் வாழும் கல்வி கற்றவர்களில் முக்கியமாக இளம்பெண்களை சென்னைக்கு அழைத்து வந்து ஒரு வாரகாலத்துள் அடிப்படையான உடல்நல விடயங்களை கற்பித்தும் மற்றும் முதல் உதவி போன்றவற்றை பயிற்றுவிப்பதற்கும் திட்டமிட்டு செயற்பட்டோம்.

அகதிமுகாமில் மருத்துவ விழிப்புணர்வூட்டிய சிலரைத் தேர்வு செய்து திருப்பூரில் உள்ள அரசுசார்பற்ற நிறுவனம் ஒன்றின் மூலம் மேலும் இரண்டு வாரகாலப் பயிற்சிக்கும் ஒரு உடன்படிக்கையைச் செய்தோம்.

அக்காலத்தில் சென்னையில் உள்ள பல மருத்துவ நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு நாங்கள் கடிதம் கொடுத்தபோது குறைந்த பணத்திலோ அல்லது இலவசமாகவோ செய்தார்கள். அக்காலத்தில் தமிழ்நாட்டில் ஈழம் என்ற சொல் மந்திரமாக இருந்தது. இதைத் தவறாக பாவித்தவர்களையும் முக்கியமாக சில தமிழர்கள் தம்மை அகதி எனச் சொல்லி,  தமிழ்நாடெங்கும் உள்ள கோயில்களுக்கு இலவசமாக இரயில்களில் யாத்திரை செய்தவர்களையும் எனக்குத் தெரியும்.

அகதி முகாம்களில் வசிப்பவர்களுக்கான மருத்துவ பயிற்சியை எனது மனைவியும் செய்யும்போது முகாம்களுக்குச் சென்று பயிற்சிக்கு ஆட்களை அழைத்துவருவதும் எனது தொழிலாகியது. கன்னியாகுமரி , தூத்துக்குடி முதலான இரண்டு மாவட்டங்களையும் தவிர்த்து மற்றைய எல்லா மாவட்டங்களுக்கும் சென்று வந்துள்ளேன். சென்னையில் இருந்து தெற்கே மண்டபம் வரையுமுள்ள தமிழ்நாட்டு கடற்கரையெங்கும் இலங்கை அகதிகள் இருந்த புயல் பாதுகாப்பு மண்டபங்களெங்கும் கால்கள் மணலில் புதைய தோளில் சுமந்த பொதியுடன் நடந்த காலங்கள் இனிமையானவை. ஏதோ ஒரு முக்கியமான கடமையை ஆற்றுவதற்காக இந்தியா வந்துள்ளேன் என நினைத்த நாட்கள் அவை.

இப்படி ஒரு நாள் நாகப்பட்டிணம் அருகே இருந்த அகதி முகாமிற்கு போக வேண்டியிருந்தது. பஸ்சில் இருந்து இறங்கி சில கிலோ மீட்டர் நடக்கவேண்டும். அன்று என்னுடன் கருணாநிதியும் துணையாக வந்தான். எமக்கு ஈரோஸ் இயக்கத்தைச் சேர்ந்த ஒரு தோழர் (பெயர்கள் நினைவு இல்லாமல் ஈரோஸ் மற்றும் ஈ.பி.ஆர். எல். எஃப். இனரை தோழர் என்பது இலகுவானது) என்னையும் உதவியாக இருந்த கருணாநிதியையும் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு மூன்று பேராக பயணித்தார்.

மூன்று பேர் ஒன்றாக ஒரே சைக்கிளில் செல்வதால் பொலிசின் கண்களில் இருந்து விலகுவதற்காக பிரதான பாதைகளை விலக்கி தோட்டப் பிரதேசங்களுடாக சென்றபோது மதியசூரியன் சுட்டெரித்தது. சைக்கிளில் நான் நடுவிலும் கருணாநிதி பின்னாலும் அமர்ந்திருக்க பழைய மோட்டார் சைக்கிள் சத்தமிட்டபடி அந்தப் பிரதேசத்தை ஊடறுத்துப் பயணித்தது. பனைகளும் தென்னைகளும் ஆங்காங்கு இருந்த மணல் தன்மையான தோட்டப்பிரதேசம்.

மழைக்காலத்தில் மானாவாரியாக அங்கு கச்சான் கடலை சாகுபடி செய்து அறுவடைக்கு பயிர்கள் தயாராக இருந்தது. எதிரில் இருந்து வந்த காற்றில் கலந்திருந்த உப்புச்சுவை நாக்கில் கரித்தபோது கடற்கரைக்கு சிறிது துரம்தான் இருப்பதை உணர முடிந்தது.

பல பனை மரங்கள் வரிசையாக பாதையின் இருபுறமும் அணிவகுத்திருக்கும் காவலாளிபோல் நின்றிருத்த பிரதேசத்தில் பாதையூடாக சென்றபோது, திடீரென மரத்தின் மறைவில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் எமது மோட்டார் சைக்கிளை சூழ்ந்து கொண்டதும் எமது சைக்கிள் நிறுத்தப்பட்டது. திரும்பிப் போகும்படி கூச்சலிட்டபடி வந்தவர்கள்,  தர்ம அடியாக கைகளினால் எங்களை அடித்தார்கள். அடிகளில் விரோதமான வேகம் இருக்கவில்லை. மோட்டார் சைக்கிளில் நான் நடுவில் இருந்ததால் பெரும்பாலான அடி கருணாநிதிக்கும ஈரோஸ் தோழருக்கும் பட்டது. கருணாநிதி இறங்கி தனது தலையை பொத்திக் கொண்டதால் அடிகள் அவனது தோளில் விழுந்தது. அடி, உதைகளை வாழ்க்கையில் பார்க்காத நான் இன்னமும் சைக்கிளில் உறைந்து போய் இருந்தேன்.  ஈரோஸ் தோழர் தலையில் ஹெல்மெட் இருந்ததால் அவர் தலை தப்பியது. ஆனால் அவருக்கு தோளிலும் நெஞ்சிலும் அடிகள் விழுந்தன. சிறிது நேரத்தில் ஏதோ நினைத்தரோ ‘நாங்கள் ஈழத்தவர்’ என்று அவர் கூவியபோது விழுந்த அடி மந்திரத்தால் கட்டப்பட்டதுபோல உடனே நின்றது.

அடித்தவர்கள் உடனே மன்னிப்புக் கேட்டார்கள்.

அடித்தவர்களில் வெள்ளை வேட்டி கட்டியபடி தலைமை வகித்தவர் விடயத்தை விளக்கினார்.

அந்தக் கடலைத் தோட்டத்தை அறுவடை செய்ய உள்ளுர்த் தொழிலாளர்கள் அதிக கூலி கேட்டிருக்கிறார்கள. அதைக் கொடுக்க மறுத்த தோட்ட உரிமையாளர் வெளியூரில் இருந்து கூலியாட்களை கொண்டுவர இருந்ததால் அப்படி வருபவர்களை அடித்து திருப்பி அனுப்ப உள்ளுர்த் தொழிலாளர் பனைகளிடையே மறைந்திருந்தார்கள். அந்த இடத்தில் அந்த நேரத்தில் நாம் சென்றதால் எமக்கு தர்ம அடி கிடைத்தது. அடித்தவர்கள் தங்களது வீட்டிற்கு அழைத்து எங்களை உபசரித்தார்கள். அவர்களோடு சில நிமிடங்கள் இருந்துவிட்டு அகதி மக்கள் இருந்த புயல் பாதுகாப்பு மண்டபத்திற்கு சென்றோம்.

தமிழ்நாட்டில் வசித்தபோது நான் பார்த்த ஒரு விடயம் தமிழ்நாட்டவர்களிடம் மிக இலகுவாக கூட்டமாக (mob mentality) ஒரே மனப்பான்மைக்கு சென்று விடுவார்கள். இதற்கு அதிக காரணம் தேவையில்லை. ஆனால் தனியாக இருக்கும்போதுதான் உண்மைகளையும் நியாயங்களையும் புரிந்து கொள்வார்கள்.

எமது மருத்துவ நிலையத்தில் காலையில் வைத்திய சேவையளிப்பது என் மனைவியாக இருப்பதால் இரவு நேரத்திற்கு ஒருவரை நியமிப்பது என முடிவு செய்தோம். எமக்கு உதவியாக இருந்த கருணாநிதியுடன் ஒரு வைத்தியரை தொடர்ந்து வைப்பதற்கு முடிவு எடுத்தபோது,  அக்காலத்தில் மலையகத்தில் இருந்து வன்முறையால் பாதிக்கப்பட்ட ஒருவர் பத்மநாபாவால் அறிமுகப்படுத்தப்பட்டார்.

அவரது சகோதரர் ஏற்கனவே ஈழமக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் அல்லது ஆதரவாளர் என நினைக்கிறேன். டொக்டர் பொஸ் எனப்படும் இவர் தோட்ட வைத்திய அதிகாரியாக இருந்தவர். 83 இல் பாதிப்படைந்தவர். இரண்டு குழந்தைகள் உள்ள குடும்பஸ்தர் என்பதால் அவரை வேலைக்கு அமர்த்திவிட்டு பகலில் எனது மனைவி கிளினிக்கைப் பார்த்துக் கொள்வார். இரவில் நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என அவரைக்கேட்டுக்கொண்டோம்.                          “ எங்களால் இந்தியப்பணத்தில் 500 ரூபாய் மட்டும் தரமுடியும். இதனை உங்களுக்கான வேதனமாக நினைக்கவேண்டாம். அப்படி வேதனம் கொடுக்கும் நிலையில் நாங்கள் இல்லை. ஆனால் உங்களுக்கு இந்தப் பணம் உதவும் என்ற நம்பிக்கை உள்ளது “ என்றேன்.

டொக்டர் பொஸ் வேலையை ஏற்றுக் கொண்டார். அவர் எப்பொழுதும் மடிப்புக் கலையாத முழுக்கை சட்டையும் அணிந்து அதனை முழுநீளமாக விடுவார். மலையக சீதோஸ்ணத்தில் பழகிய பழக்கம் சென்னை வெய்யிலிலும் அதை விடமறுத்தார்.

இந்தக் காலத்தில் இயக்கங்களில் கால் இழந்தவர்களையும் எம்மால் பார்க்க முடிந்தது. அப்பொழுது எமக்கு ஜெய்ப்பூர் காலணி பற்றிய விடயங்களையும் அறிய முடிந்தது.

86 ஆம் ஆண்டில் தமிழர் மருத்துவ நிதியத்தின் செயலாளரான நானும் நண்பன் டொக்டர் சிவநாதனும் அக்காலத்தில் ஜெய்ப்பூர் செயற்கை காலை அறிந்து, அங்கு சென்றோம்.

பம்பாயில் பரதம் பயின்ற சுதா சந்திரன் திருச்சியில் நடந்த விபத்தில் காலை இழந்து ஜெய்ப்பூர் செயற்கைக் காலை பொருத்திய பின் நடனமாடி மயூரி திரைப்படத்தின் மூலம் சினிமா நடிகையாக அறியப்பட்டார். இந்த விடயம் அக்காலத்தில் மிக முக்கியமாக பேசப்பட்டது.

எலும்பு சத்திர சிகிச்சை வைத்தியரான டொக்டர் பிரமோத் கரன் சேத்தி                          (Dr Pramod Kran Sethi) , ராம் சந்தரால்                                         ( Ram Chandara ) ஆரம்பத்தில் வடிவமைக்கப்பட்ட  அலுமினியத்தால் ஆன இந்த செயற்கைக் கால்கள் டொக்டர் சேத்தியினால் முன்னேற்றமாக தரப்படுத்தப்பட்டு பலருக்கும் பொருத்தப்பட்டது.

இந்தக் கால்கள்,  காலணி அணியாதவர்களுக்கு ஏற்றபடி உள்ளதால் மூன்றாம் உலக நாடுகளில் வாழ்பவர்களுக்கு உகந்தது. மிகக் குறைந்த செலவில் தயாரிக்க முடியும். நிலத்தில் காலை மடித்தபடி இருப்பது, வயலில் இறங்கி வேலை செய்வது முதலான நடைமுறைக்கு இந்த செயற்கைக் கால்கள் இலகுவானது. அக்காலத்தில் போர் நடந்த ஆப்கானிஸ்தான்,  மொசாம்பிக் போன்ற நாடுகளில் மிதிவெடியால் கால்களை இழந்தவர்களுக்கு இது பெரிதும் பயன்பட்டது.

முதலாவதாக ரயிலில் டெல்லி,  பின்பு ஜெய்ப்பூர் சென்றது மறக்க முடியாத அனுபவம். கட்டிடங்களெல்லாம் மென்சிவப்பு நிறத்தில் இருந்ததும் வண்ணவண்ண தலைப்பாக்கள் கட்டிய மனிதர்கள் மொட்டாக்குப் போட்ட கலர்கலரான பெண்கள் பாதைகளில் ஓட்டகங்கள் என ஜெய்ப்பூர் அக்காலத்தில் எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.

ஜெய்பூருக்கு இரவு சென்றதும்,  ஹோட்டலில் தங்கிவிட்டு மறுநாள் நாங்கள் காலையில் சேவா மான்சிங் வைத்தியசாலைக்குச் சென்று விசாரித்தோம். அங்கு உள்ளவர்கள் தொலைபேசியில்   “ இலங்கைத் தமிழர்கள் இருவர் உங்களை தேடிவந்திருக்கிறார்கள்  “  என்றார்கள்.

 “ உடனே அனுப்பவும்  “

அந்த இளம் காலை நேரத்தில் டொக்டர் சேத்தியின் வீட்டில் உபசரிக்கப்பட்டோம்.

டொக்டர் சேத்தி , நாங்கள் சென்ற காலத்தில் தனது வேலையில் இருந்து இளைப்பாறியிருந்தாலும் தொடர்ச்சியாக ஜெய்ப்பூர் கால் விடயத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அழைப்பில் தான் ஆப்கானிஸ்தான் சென்றதையும் அங்கே ஜெய்ப்பூர் செயற்கைக் கால் செய்வதற்கு தாங்கள் பயிற்றுவித்ததையும் எமக்குக் கூறினார் அந்த எளிமையான மனிதர்.

நாங்கள் இலங்கையில் நடக்கும் போரை விளக்கிவிட்டு,                                  “ தற்பொழுது பெருமளவில் தேவை இல்லாவிடினும் எதிர்காலத் தேவையைக்கருதி சிலரை செயற்கை கால் செய்வதில் பயிற்றுவிக்க விரும்புகிறோம்    “  என்றேன்.

அதற்காக  ஆவன செய்வதாக உறுதியளித்தார். காலையுணவை அவரது வீட்டில் உண்ட பின்பு வெளியேறினோம்.

சில மணி நேரம் அவருடன் பேசியதில் அவரது எளிமையும் மனிதாபிமான உணர்வும் சேவை மனப்பான்மையும் என்னை மிகவும் கவர்ந்தது.

உலகப் புகழ் பெற்ற ஓதோபீடிக் சேர்ஜன் என்பதற்கான தன்மை எதுவும் அவரது வார்த்தையில் வெளிவரவில்லை. மருத்துவ சொற்கள் எதுவும் பாவிக்காது சாதாரண மனிதராக அவர் பேசினார்.

இறுதியில்    “ நீங்களா இந்த ஜெய்ப்பூர் காலை வடிவமைத்தது?    “ என்ற எனது கேள்விக்கு அமைதியாக   “ அதன் பெருமை ராம் சந்தருக்கே சேரும் என்றார்.  “

டொக்டர் சேத்தி காசியில் பிறந்தவர்.  மருத்துவராகிய பின்பு எடின்பெரோவில் எலும்பு முறிவு சத்திரசிகிச்சையில் பயிற்றப்பட்டவர். ஆரம்பத்தில் மரத்திலும் இரப்பரிலும் ஜெய்ப்பூர் காலை வடிவமைத்த ராம் சந்தரின் வடிவமைப்பை பிற்காலத்தில் நாங்கள் பார்த்தபோது அலுமீனியத்தை உபயோகித்து அக்கால்களின் நிறையை குறைத்தார்கள்.

அதன் பின்பு மூன்றுதடவை ஜெய்ப்பூர் சென்று 18 இலங்கைத் தமிழர்களை பயிற்றுவித்தோம். இதன் பின்பே இலங்கையர் பலர் அரசாங்கத்தின் சார்பில் பயிற்றப்பட்டனர்.

எலும்பு சத்திரசிகிச்சை மருத்துவராகிய டொக்டர் பிரமோத் கரன் சேத்தி பேராசிரியராக இருந்து இளைப்பாறியவர். இவரது சேவைக்காக இந்திய அரசாங்கத்தால் பத்மஸ்ரீ விருதும், பிலிப்பைன்ஸ் அரசால் ராமன் மாக்சேசே விருதும் அளித்தும் கௌரவிக்கப்பட்டவர்.

இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகத்துக்கே சொந்தமான டொக்டர் சேத்தி தனது 80 ஆவது வயதில் 2008 ஜனவரி 6 ஆம் திகதி காலமானார்

மெல்பன்.

அக்காலத்தில் நான்கு  வருடங்கள் லோட் சிமித் மிருக வைத்தியசாலையில் வேலை செய்தபோது,  வாரத்தில் நான்கு நாட்கள் வேலைக்குப் போனாலும்,  கிட்டத்தட்ட  கிழமையில் எட்டு மணித்தியாலங்கள் பயணத்தில் போய்விடும். பெரும்பாலும் வேலை பத்து மணித்தியாலங்கள்  சிஃப்ட்  ஆக இருக்கும். வீடு வந்தால் அடித்துத் துவைத்த பழைய பருத்திச்   சேலையின் நிலையில் தேகமிருக்கும்.   மேலும் அந்த வைத்தியசாலையில் அந்த நான்கு வருடங்களும் கிட்டத்தட்ட ஒரே வேதனமாக இருந்தது. இரவு ஒன்பது மணியளவில் வந்து சேர்வதும்,   வார விடுமுறை நாட்களில்  வேலை என்பது வீட்டில் பல சிக்கல்களை மனைவி  பிள்ளைகளுக்குக் கொடுத்தது.

இந்த வேலையில் கிடைத்த அனுபவத்தில்,   எனக்கு எங்கும் வேலை எடுக்க முடியும் என்ற துணிவைக் கொடுத்தபோது ஏன் மற்றவர்களுக்கு வேலை செய்யவேண்டும்  நானே ஒரு கிளினிக்கைத் தொடங்கக்கூடாது என்ற தைரியத்தையும்  கொடுத்தது.

மெல்பனின் பல இடங்களில் கிளினிக் அமைக்க  ஒரு இடத்தை தேடியபடி இருந்தேன். ஒரு நாள் எனது மனைவியுடன் காரில்  போகும்போது இரு தெருக்கள் சந்திக்கும் முனையிலிருந்த ஒரு வீட்டைக் காட்டி,  இப்படி ஒரு வீடு விற்பனைக்கு வந்தால்,  வாங்கி கிளினிக் அமைக்கலாம் என்று சொல்லிச் சென்றேன்.  இரண்டு கிழமையில் அந்த வீடு விற்பனைக்கு வந்தது . எந்த பேரமோ,  பேச்சு வார்த்தையும் செய்யாது சொன்ன விலைக்கு வாங்கி,  அதைத் திருத்தம் செய்தேன். ஐந்து வாகனங்கள் நிறுத்துமிடம் இருக்க வேண்டும்.  அத்துடன் பக்கங்களில் உள்ள வீட்டைச் சேர்ந்தவர்கள் மிருக வைத்தியசாலைக்கு ஆட்சேபமில்லை என எழுதித் தரவேண்டும். அவற்றைக் கொண்டு இங்குள்ள நகரசபையில் நான் அனுமதி பெறவேண்டும். அதற்கான சகல வேலையும் செய்து முடிக்க ஆறு மாதங்களாகியது. இதற்கு முன்பாக மருத்துவ கிளினிக் உருவாக்கிய அனுபவம் எனக்கு கை கொடுத்தது. 

வீட்டிலிருந்து மூன்று கிலோமீட்டர் துரத்தில் இந்த இடமென்பது மிகவும் வசதியாக அமைந்தது. அத்துடன் ஏற்கனவே என்னோடு லோட் சிமித் வைத்தியசாலையில்  வேலை செய்ய ஜேனின் என்ற நேர்ஸ் என்னுடன் வந்து வேலை செய்தாள். அறுபது கிலோமீட்டர் தூரத்திலிருந்து பயணித்து வந்தாள் கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் மட்டுமே அவளால் வேலை செய்ய முடிந்தாலும் , அவள் மூலமான ஆரம்பம் எனக்கு மிகவும் முக்கியமானது.

இக்காலத்தில் மெல்பன் தமிழர் மத்தியில் மூன்று சமூக வானொலிகள் இருந்தன. அவைகளெல்லாம் விடுதலைப்புலிகளின் பிரசாரப் பீரங்கியாக இயங்கின . மாற்றுக்குக் கருத்துக்கு எந்த இடமும் இல்லை. அரச வரிப்பணத்தில் தமிழ் மக்களுக்காக இயங்கிய விசேட வானொலி (SBS) அது ஒவ்வொரு  வாரமும்   மாறி மாறி சிட்னியிலும் மெல்பனிலும் இருந்து இயங்கும் .

 மெல்பன் வானொலியில்  விடுதலைப்புலிகளின் பேச்சுவார்த்தைக்குச் சென்ற ஜோய் மகேஸ் என்பவர் நடத்தினார் . அவரைப் பொறுத்தவரையில் தனது சொந்த வானொலியாகவே அதை பிரசாரத்திற்குப் பாவித்தார். .இப்படியான நிலையை இட்டு அக்காலத்தில் பல முறைப்பாடுகள் செய்தபோதும்  மாற்றம் ஏதும் வரவில்லை ( தற்பொழுது கூட எந்த மாற்றமுமில்லை.  ஆனால் சமூகவலைத்தளங்கள் உள்ளதால் வானொலிகளது முக்கியத்துவம் இப்பொழுது இல்லை )

இந்த நிலையில் எங்களைப்போல் சிந்தித்த சிலர் மொனாஷ் பல்கலைக்கழகத்தில் கூடி ஒரு பத்திரிகையை நடத்துவதற்கு ஆலோசனை செய்தோம். அதன் பிரகாரம் மேலும் மூன்று தடவைகள் கூடி,  தனியாரது முக்கியத்துவமில்லாது  அதை ஒரு குழுவாகச் செய்வது என முடிவு செய்தபோது,  ஆரம்பத்தில் வந்தவர்கள் பலர் பின்னடித்தார்கள். சிலர் பணம் தருவதாகச் சொல்லி பின்பு தரமறுத்தார்கள். மிகுதியானவர்களுக்கு 1000-500 டொலர்கள் எனப் பங்குகள் வினியோகித்தோம்.

அக்காலத்தில் எனது கிளினிக்  தொடங்க இருந்ததால் பத்திரிகை நிர்வாகமும் என்னிடம் வந்தது. இது வரை எந்த எழுத்து அனுபவமுமில்லாத என்னிடம் வந்தபோது நண்பர்களான முருகபூபதி,  மாவை நித்தியானந்தன் மற்றும்  சிவநாதன்  ஆகியோர் பல வழிகளில் உதவினார்கள்.

உதயத்தின் முதல் இரண்டு இதழ்களும்  மறைந்த டாக்டர் சத்தியநாதனால் வடிவமைக்கப்பட்டது. அவருக்குப் பக்கத்திலிருந்து  நானும் நண்பர் முருகபூபதியும் உதவினோம்.  அக்காலத்தில் ஆசியர்களை வெளியேற்றவேண்டுமென கோசம் போட்ட போலின் கான்சனிடம் நண்பர் குமரன் தங்கராஜா முதல் பக்க பேட்டி எடுத்துத் தந்தார்.

1997 ஏப்ரல் மாதம் எனது காரில்  உதயம் பிரதிகளை எடுத்து வந்து மெல்பனின் தென்பகுதியில் பல இலங்கை –  இந்தியக் கடைகளுக்கு வினியோகித்தேன்   உதயம் மாத இதழ்,  மெல்பன்  – சிட்னி –  பேர்த் எங்கும்   வினியோகிக்கப்பட்டது.  ஆரம்பத்தில் சேர்த்த பணத்தில் பாதி முதலாவது  இதழ் அச்சடித்தபோது முடிந்து விட்டது. விளம்பரங்கள் சேர்ப்பதற்கு நண்பர் சிவநாதனும் அவரோடு அக்காலத்தில் வேலை செய்த நண்பர்  பால சுந்தரமும் உதவினார்கள்.

இரண்டாவது பத்திரிகைக்கு நான் எனது நடுக்காட்டில் பிரேத பரிசோதனை என்ற எனது முதல் எழுத்தை எழுதி நண்பர் மாவை நித்தியானந்தனிடம் கொடுத்தபோது.  அவர் அதில் பெரிதாக வெட்டிவிட்டு இதை முருகபூபதியிடம் கொடுத்து வடிவாக எழுதவும் என்றார் . அதன்பின்பு அந்தக்கதை இரண்டாவது இதழில் பிரசுரமாகியது.

பத்திரிகையை நிர்வகித்த பின்பு எழுத்தாளராகியது எனது கதை.   

—0—

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: