
1984-85ம் ஆண்டுகளில் இந்தியாவில் இருந்தபொழுது எனது உடல்நிறை 56மப. அக்காலத்தில் எனக்கு அறிமுகமானவர்களில் ஒல்லியானவர்களை நான் காணவில்லை. சென்னையில் ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் தோழர் என கேதீசை எனக்கு அறிமுகப்படுத்தினார் இரஞ்சன் எனும் பத்மநாபா. தடிப்பான மூக்குக்கண்ணாடி (இந்திய தமிழில் சோடாபுட்டி), மிகவும் தீர்க்கமான பார்வை, ஒல்லியாக உயரமான அவரது தோளில் சிவப்பு கோடிட்ட சேட் ஒரு ஹங்கரில் தொங்குவதுபோல் தொங்கியது. ஒரு 48 கிலோ இருப்பார்.
‘தோழர்’ என என்னை விளித்தார்.
இவரை பார்த்தது என்னிலும் பார்க்க ஒல்லியான ஒருவரை கண்ட சந்தோசம் அடைந்தாலும் இந்த மனிதரை ஈழமக்கள் புரட்சிகர முன்னணிகாரர் சாப்பாடு கொடுக்காமலே கொன்றுவிடப்போகிறார்களே என பரிதாப உணர்வும் மேலிட்டது. இயக்கங்களில் பட்டினியால் கஷ்டப்படுபவர்கள் இவர்கள்தான். கேதீசை பலமுறை சந்தித்ததன் மூலம் கேதீசின் அறிவு கூர்மை உணர்ந்தேன். அதைவிட ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் ஆங்கில பிரசுரங்கள் சகலதும் கேதீசின் புலமைக்கு சான்றுகள் என தெரியவந்தது.
அவுஸ்திரேலியாவுக்கு வந்தவுடன் தொடர்பு அற்றுவிட்டாலும் சத்தியா என்ற பெயரில் டெய்லிமிரரில் எழுதப்படும் கட்டுரைகளை வாசித்துவந்தேன். சத்தியா என்பது கேதீஸ் சில காலத்துக்கு முன்பே அறிந்துகொண்டேன். இந்த கட்டுரைகள் பக்க சார்பாக இல்லாமல் விடுதலைப்புலிகள், அரசபடைகள் எல்லாவற்றினதும் வன்செயல்களுக்கு எதிராகவும், அரசியல் தீர்வை நோக்கியும் அமைந்திருக்கும்.
புலிகள் தலைவர் தமிழர்களின் ஏகப்பிரதிநிதியென்றால் தமிழர்களில் ஏக எதிர்க்கட்சித் தலைவராக டக்ளஸ் தேவானந்தா இருக்க முயல்கிறார் என முதல்முறையாக எழுதியதும் கேதீசேயாகும்.
கேதீஸ் சமாதானபேரவையில் நியமிக்கப்படஇருந்தபோது அவுஸ்திரேலியாவில் உள்ள சில சிங்களவர் கேதீசின் நியமனத்தை எதிர்த்தார்கள். அவர்களில் ஒருவரை நான் சந்தித்தபோது கேதீசை ஏன் எதிர்க்கிறீர்கள்? என்று கேட்டபோது ‘கேதீஸ் புலிசார்பாக இருக்கலாம்’ என நினைக்கிறோம் என்றார். நான் சிரித்துவிட்டு கேதீசை தமிழன் என்ற ஒரே காரணத்தால் மட்டுமே நீங்கள் எதிர்க்கலாம் என்றேன்.
விடுதலைப்புலிகளை பொறுத்தவரை கேதீசின் அபிப்பிராயம் எக்காலத்திலும் ஒரேமாதிரி இருந்தது என நான் நினைக்கிறேன். புலிகளால் தமிழருக்கு நன்மை எதுவும் எக்காலத்திலும் கிடைக்காது என்பதில் தெளிவாக இருந்த மிக சிலரில் ஒருவர். தற்காலத்தில் விடுதலைப்புலி எதிர்ப்பாளர்களான டக்ளஸ் தேவானந்தா, கூட்டணி தலைவர் ஆனந்தசங்கரி போன்றவர்கள் வெவ்வேறு காலத்தில் புலிகளை நம்பியவர்கள்தான். புலிகள் கேதீசை கொலை செய்தது தற்செயலான சம்பவமோ அல்லது உறுதிபடுத்த முடியாத நிகழ்ச்சியோ இல்லை. வெளிநாட்டில் உள்ள புலி ஆதரவாளர்கள் கேதீசை நோர்வேயில் கொலை செய்ய ஒருமுறை முயன்றார்கள்.
87ஆம் ஆண்டு ஒக்ரோபரில் ஒஸ்லோவில் அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனுடன் கேதீசும் மற்றும் மூன்றுபேரும் இலங்கை அகதிகளை சந்தித்து பேசிக்கொண்டிருந்தபோது விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் 50பேர் பொல்லுகளுடனும் மிளகாய்த்தூள் பக்கற்றுகளுடனும் இவர்களை தாக்கினார்கள். சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு ஏற்பட்ட காயத்தில் தையல்போடவேண்டி இருந்தது. கேதீசுக்கு பலமான அடி மிளகாய்த்தூளால் கண்களை திறக்கமுடியாமல் இருந்தது. நுரையீரல் ஓட்டையானது. விலா எலும்பு உடைந்து பலமான அடிவிழுந்தது.

இவ்வளவுக்கும் சுரேஸ் பிரேமச்சந்திரன் நோர்வேயின் அரசாங்க விருந்தாளி. கேதீஸ் நோர்வே விவசாய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர்.
சுரேஸ் பிரேமச்சந்திரன் புத்தி சாதுரியமாக தனது இடத்தை மாற்றிக்கொண்டார்.
கொள்கையில் பிடித்தமாக வாழ்ந்து வந்தார் கேதீஸ்வரன்.
மாற்றுசிந்தனையாளர்கள், புத்திஜீவிகள் எவரும் உயிர்வாழ உரிமை மறுக்கப்பட்ட வரண்ட நிலமாக மாறிவிட்டது எமது தேசம். புத்திசுவாதீனம் அற்ற மனிதர்களிடம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளதே! என தோன்றுகிறது. நீட்சேயோ, ருசோ எவராவது இலங்கையின் வடக்கு-கிழக்கு பகுதியில் ஏன் கொழும்பில் தமிழராய் பிறந்திருந்தால் கூட புலிகளால் கொலை செய்யப்பட்டிருப்பார்கள்தானே என்ற ஆறுதலுடன் இந்த நினைவுக்கட்டுரையை முடிக்கிறேன்.
மறுமொழியொன்றை இடுங்கள்