74 ஆம் ஆண்டு இறுதிக் காலத்தில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லுரியிலிருந்து அதிபர் சபாலிங்கத்தால் கல்லூரிக்கு என்னை வரக்கூடாது என விரட்டப்பட்டது பற்றி ஆரம்பத்தில் எழுதியிருந்தேன்.
பரீட்சையில் முதல் தடவையில் சித்தியடையாது போனால் இந்துக்கல்லூரிக்குப் போகமுடியாது . இலங்கை அரசு இரு வருடங்கள் உயர்தர வகுப்பில் படிக்கலாம் என்று மாணவர்களுக்கு அளித்த அடிப்படைக் கல்வி உரிமை எனக்கு அதிபர் சபாலிங்கத்தால் மறுக்கப்பட்டது.
அதற்கும் மேல் காதலித்தபடியால் இவனை மேலும் பல்கலைக்கழகத்தில் காசு செலவழித்துப் படிப்பித்தால் என்ன பிரயோசனம்? இதுவரை செலவு செய்ததே முதலுக்கு வீண். சீதன சந்தையில் இவன் ஊசிப்போன பண்டம் என்ற எண்ணம் சின்னத்தம்பி வாத்தியாரின் மனதில் ஓடியதை அறிவேன்.
கிட்டத்தட்ட பொட்டம்மானால் அனுப்பப்பட்ட ஒரு தற்கொலைப் போராளியின் நிலைக்குத் தள்ளப்பட்டேன். மொழி வாரியான தரப்படுத்தல் ஏற்கனவே அமுலில் இருந்து. பல்கலைக்கழகம் போவதற்கு, ஏற்கனவே தமிழருக்கு தேர்வு எண்களைக் கூட்டும் முறையிருந்தது. அத்துடன் யாழ்ப்பாண மாவட்டம் முன்னேறிய மாவட்டமாகக் கருதி குறைந்த எண்ணிக்கையில் மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை 1975 ஆம் வருடத்தில் வருகிறது .
ஒரு புறம் வேடன் மறுபுறம் நாகம் என்ற எனது நிலை மேலும் இடியப்ப சிக்கலாகியது. எனக்குப் பின்னால் மூன்று தம்பிகள் ஒரு தங்கை எனக் காத்திருந்தார்கள். அக்காலத்தில் இப்பொழுது மாதிரி வெளிநாடு போகமுடியாது. விவசாய நிலமோ சொந்தத் தொழிலற்ற மத்தியவர்க்க குடும்பங்கள் பலரது போன்றதே எனது நிலையும்.
இப்படியான சூழ்நிலை யாழ்ப்பாணத்தவர்களது மனங்களைக் குடநாட்டின் கோடை கிணறுகளாக ஆக்குகிறது . இப்படியான (Nihilism) ஏதுமற்ற நிலையே ஆயுதப் போராட்டத்திற்கு வாய்ப்பாக இருந்தது.
தமிழ் அரசியல்வாதிகள் மாற்று வழியைத்தேடாது மக்களது விரக்தியில் குளிர்காய்ந்தார்கள். இன்னமும் அப்படித்தான் !
எனக்கு அக்காலத்தில் வந்த காதலே நெஞ்சில் பசுமையையும், வாழ்வில் பிடிப்பையும் எதிர்காலத்தில் நம்பிக்கையையும் ஏற்படுத்தி வைத்திருந்தது. இளம் வயதில் பெண்ணின் நினைப்பு செயற்கைக்கோளின் அடியில் வைத்த ரொக்கட் போன்றது.
இக்காலத்தில் எனக்கு ஒரு மொட்டைக்கடிதம் வருகிறது. அதில் தமிழில் “நீ தீவான். உனக்கு என்ன காதல்? உன்னை அடித்துத் திரும்ப வள்ளத்தில் ஏற்றுவோம் ” என்ற மாதிரியான வாசகங்கள் இருந்தன .
இதை எனது காதலி சியாமளாவிடம் காட்டியபோது, சியாமளாவின் அக்காவின் காதலர் தற்போதைய கணவர் எழுதியிருக்கலாம் எனப் பதில் வந்தது.
இதுவரையும் என் காதலுக்கு ஒரு வில்லனே கிடையாது இருந்த எனக்கு இப்படி ஒரு எதிர்ப்பு வந்தது. எதிர்ப்பு என்பது வளரும் செடிக்கு எருப்போன்றது. மற்றைய பிரச்சினைகளை மறக்க வைத்தது.
தற்போது கனடாவிலிருக்கும் எனது நண்பனான ஜெயக்குமாரைக் கூட்டிக்கொண்டு யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் பின்புறமிருக்கும் ஒழுங்கையில் உள்ள சியாமளாவின் அக்காவின் காதலர் வீட்டிற்குச் சென்றேன். இது வரையும் எந்த சண்டையிலும் ஈடுபடாத நிலையில் இருந்த எனக்கு இதயம் மேளமடித்தது. ஆனாலும் எனது பிரச்சினையில் நானே ஈடுபடவேண்டும், எந்தச் சண்டையிலும் தனியாகச் செல்வது உத்தமம். வெற்றியோ தோல்வியோ ஒருவருக்கே சொந்தமாகும் என்ற கொள்கையில் நம்பிக்கையுடன் ஜெயக்குமாரைச் சிறிது தூரத்தில் நிற்கவைத்தேன். அந்த அக்காவின் காதலரின் வீட்டின் வாசலில் நின்று அவரை அழைத்தேன். வந்தவரிடம் “என்ன இது, இந்தக் கடிதம் எழுதியது நீரா? உம்மால் என்ன செய்ய முடியுமோ செய்யும்? ” என கூறிவிட்டு அவர் முன்னால் சைக்கிளால் இறங்கி நின்றேன். இப்படி நான் வீடு தேடி வருவேன் என அவர் எதிர்பார்க்கவில்லை. எந்தப் பதிலும் சொல்லாது உள்ளே சென்று விட்டார்.
விடயம் அத்தோடு முடிந்துவிட்டது. ஆனாலும் பிற்காலத்தில் அவரை பார்க்கும்போது அந்தச் சம்பவம் என் நினைவுக்கு வரும். அவர் மிகவும் நல்ல அமைதியான மனிதர். தனது மச்சினியை கல்லூரியில் படித்தபடி காதலித்து, ஊரெல்லாம் கொண்டு சுற்றியபடி திரியும் காவாலியிடமிருந்து காப்பாற்றும் நன்நோக்கமிருந்தது. அது என்னைப் பொறுத்தவரை என்மீது எறிந்த கிறனைட்டாக இருந்தது.
யாழ்ப்பாணம் நூலகத்தில் உள்ள தமிழ் புனைவு புத்தகங்களைப் படித்து முடித்து, ஆங்கில நாவல்களைப் பார்த்தால் அக்கால பிரபலங்களான (Harold Robinson, Nick Carter ) நாவல்களில் காதல் ரசம் வழியும் 6-8 பக்கங்கள் கிழிந்திருக்கும். யாழ்ப்பாணத்தில் ஆறு தியேட்டர்களிலும் ஒழுங்காக சினிமா பார்த்தேன். கல்லூரிக்கு வரவேண்டாம் என்ற அதிபர் சபாலிங்கத்தின் கட்டளையை வீட்டில் சொல்லவில்லை. வழமைபோல் காலையில் புறப்பட்டு மாலையில் வீடு வந்து சேர்வேன்.
இக்காலத்திலே எனது பரீட்சை முடிவுகள் வந்தன . நான் நினைத்ததற்கு மாறாக புள்ளிகள் எல்லாம் குறைவாக இருந்தாலும், எனது வகுப்பில் அதிக புள்ளிகள் வாங்கியிருந்தேன். அதைப் பார்த்த போது எந்த பகுதியிலிருந்து அழைப்பு வந்தாலும் பல்கலைக்கழகம் போய்விடுவதே நல்லது எனத் தீர்மானித்திருந்தேன்.
அதிபர் சபாலிங்கமும் தந்தை சின்னத்தம்பி வாத்தியாரும் என்னைப் பொறுத்தவரையில் நம்பியார் – அசோகன் போன்றவர்களே. அவர்களைப் பொறுத்தவரை மாணவர்களும் பிள்ளைகளும் தங்களது சொலைக்கேட்டு கீழ்ப்படிந்து நடக்கும் இரண்டு கால் விலங்குகளே.
தாங்கள் பைபிளின் வழியே வந்த தீர்க்கதரிசிகள் என்ற எண்ணமுண்டு. இவர்கள் மட்டுமல்ல, அக்காலத்து பல ஆசிரியர்களின் சிந்தனைகள் மண்ணில் புதைந்து கிடந்த தகர டப்பா மாதிரி துருப்பிடித்தவை. வித்தியாசமான சிந்தனைகளை ஒழுக்கக் குறைபாடு என நினைப்பார்கள்.
மருத்துவம் கிடைக்காதபோது விவசாயம் படிக்க உத்தேசித்திருந்த என்னை, சியாமளாவே மிருக வைத்தியம் படிக்க விண்ணப்பிக்கத் தூண்டினார். என்னைப் பொறுத்தவரையில் யாழ்ப்பாணத்திலிருந்து தப்பியோடுவது நோக்கமாக இருந்தது. அதற்கப்பால் மிருகங்களுக்கும் வைத்தியர் ஒருவர் இருப்பார் என்ற விடயம் உண்மையில் தெரியாதிருந்தது. எழுவைதீவில் ஆரம்ப பத்து வருடங்களில், நாய்கள் பசுக்கள் இருந்தாலும், எக்காலத்திலும் மிருக வைத்தியர் எவரும் அங்கே வரவில்லை . யாழ்ப்பாணத்திற்கு நாம் இடம் பெயர்ந்த பின்னர், எங்கள் ஐந்து பேருடன் எந்த மிருகங்களையும் வளர்க்கப் பெற்றோர் தயாராக இருந்ததில்லை.
அண்ணன் அண்ணி இருவரும் மிருக வைத்தியர்கள் என்பதால் சியாமளாவிற்குக் கொஞ்சம் புரிந்திருந்தது.
75 ஆம் ஆண்டின் ஆரம்பகாலத்தில் என்னை மிருக வைத்திய பிரிவிற்குத் தெரிவு செய்திருந்தார்கள் . அப்பொழுது நான் சபாலிங்கத்தை சந்தித்து இந்தக்கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம் சென்ற ஐவரில் ஒருவராகப் பத்திரங்களைப் பூர்த்தி செய்தேன்.
சென்னை
தமிழர் மருத்துவ நிலையத்தை சென்னையில் தொடங்கிய காலத்தில் எமக்கு வெளிநாடுகளில் இருந்து பல உதவிகள் வந்து சேர்ந்தன. பெரும்பாலானவை தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் வந்தன.
சில உதவிகள் நாங்கள் கேட்காமலேயே எங்களிடம் எதையும் விசாரித்து தெரிந்து கொள்ளாமலேயே அழையாத விருந்தாளியாக வந்து எங்களை சங்கடத்தில் மாட்டின. அவற்றின் விளைவாக தலையைப் பிய்த்துக்கொண்டு நின்றதை இன்று நினைத்தாலும் சங்கடம்தான். அவை எல்லாம் வெளிநாட்டுத் தமிழர்களால் நிகழ்ந்த சங்கடங்கள்தான்.
எமது அலுவலகத்திற்காக ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்த சில காலத்தில் எமது பெயரில் சென்னை துறைமுகத்தில் அமெரிக்காவில் இருந்து ஒரு பெரிய கொல்கலன் (Container) வந்திருப்பதாகவும் அதில் பாவித்த உடைகள் இருப்பதாகவும் தகவல் வந்தது.
நாங்கள் விழித்தோம்.
இப்பொழுது அந்தக் கொள்கலனை நாங்கள் எடுக்காதுவிட்டால் ஒவ்வொருநாளும் சென்னைத் துறைமுகத்தினருக்கு பணம் கட்டவேண்டும். அதேநேரத்தில் முகவர்கள் இல்லாமல் இந்தியாவில் ஒரு விடயத்தை செய்வது எவ்வளவு கடினம் என்பது சிலகாலம் இந்தியாவில் இருந்தவர்களுக்குத்தான் தெரியும். நானும் டாக்டர் சிவநாதனும் தலையறுந்த கோழிகளைப்போல் சென்னைத் தெருவில் ஓட்டோக்களில் ஓடித்திரிந்து கேட்டபோது போராளி இயக்கத்தினர்கள் எமக்கு உதவி செய்ய மறுத்துவிட்டனர்.
இந்தியாவில் இலஞ்சம் கொடுக்காமல் எதுவும் நகராது. அதற்கு எம்மிடம் பணமில்லை. இந்த நிலையில் துறைமுக விடயங்களைக்கவனிப்பது மத்திய அரசு அதிகாரிகள். இவர்களிடம் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் உதவியும் சரிவராது. இந்த நிலையில் ஈழத்து அகதிகள் என்ற அனுதாபத்தை மட்டும் வைத்துக்கொண்டு துறைமுக அதிகாரிகளிடம் பேசி அந்த கொள்கலனை ஒரு கிழமையில் வெளியே எடுத்தோம்.
துறைமுக கொடவுனில் (Godown) ) இருந்து சூளைமேட்டுக்கு கொண்டுவர மட்டுமே பணத்தை செலவளித்தோம். அக்காலத்தில் இப்படி சிங்கப்பூரில் இருந்து வந்த ஆயுத கொண்ரயினர் சென்னைத் துறைமுகத்திலே பிடிபட்டது. அந்தக் கொண்டயினரை புளட் இயக்கத்தினர் வெளிக் கொண்டுவந்திருந்தால் ஈழப்போரின் கதாநாயகர் உமா மகேஸ்வரனாக இருப்பார்.
எமது அமைப்பின் பெயருக்கு வந்த கொன்ரயினரை வெளியே எடுத்தாலும்கூட எமது பிரச்சினை தொடர்ந்தது. அமெரிக்காவில் இருந்து அதை அனுப்பியவர்களை தூற்றியபடியே இருந்தோம். அதிலும் டொக்டர் சிவநாதனுக்கு ஆத்திரம் வந்தாலோ அல்லது கொஞ்சம்போதை ஏறினாலோ அவர் வாயிலிருந்து தூசணம் தாராளமாக வரும். அதைக்கேட்டு ரசித்தடி ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என கலைஞர் தமிழ்நாடு பஸ்களில் எழுதிவைத்த குறளை நினைவில் வைத்து ஓடித்திரிந்த நாட்கள் அவை.
எமது துன்பம் கொன்ரயினரை கொண்டு வந்த பின்னரும் எப்படித் தொடர்ந்தது தெரியுமா…?
அந்தக் கொன்ரயினரில் இலங்கை – அமெரிக்க பெண்கள் அணிந்த உள்ளாடைகள் ஆண்களின் பெனியன்கள் முதலானவற்றுடன் பாண்டுகள் , சேர்ட்டுகள் மற்றும் சேலைகள் என ஐயாயிரத்துக்குக்கும் மேலான உருப்படிகள் இருந்தன. எமது அலுவலகத்தின் கூரைவரையும் முட்டிக்கொண்டு குவிந்திருந்தன. எல்லாவற்றையும் தரம் பிரிக்க வேண்டும்.
இலங்கைத் தமிழ் அகதிகள் வைக்கப்பட்டிருந்த புயல் நிவாரண பாதுகாப்பு மண்டபங்கள் எல்லாம் தமிழக கடற்கரையில் இருந்தன. இவற்றை சுற்றியிருப்பது மீனவ மக்களது கிராமங்கள். இலங்கைப் பெண்கள் சட்டைகள் அணிந்து தங்கள் கணவர்களை வசியம் செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு அகதி முகாம்களுக்கு நாங்கள் சென்றபோது குப்பங்களில் பேசப்பட்டது எமக்குத் தெரியும்.
அங்கு சென்ற இலங்கைத் தமிழ்ப் பெண்கள் இலங்கை வழக்கப்படி கவுணுகள் அணிந்திருப்பார்கள். பெண்களின் கால்களை சினிமாவில் மட்டும் பார்த்த மீனவ குப்பத்து ஆண்களுக்கு இது வித்தியாசமான கலாச்சார அதிர்வாக இருந்தது. பிற்காலத்தில் பல இளம் பெண்கள் தமிழ்நாட்டு பெண்கள்போல் நீளப்பாவாடை தாவணியுடன் உடையணிந்தார்கள் அத்துடன் பஞ்சாபி – சுடிதார் உடையும் வந்து இந்த கலாச்சார அதிர்வை பிற்காலத்தில் குறைத்தது.
‘இந்த உடுப்புகளையெல்லாம் பெட்டையளுக்கு கொடுத்தால் ஆங்காங்கு சிறிய ஈழப் பிரச்சினைகள் குப்பங்ளைச்சுற்றி உருவாகும். அதனால் இதனை நீயே பார்த்துக்கொள்’ எனச் சொல்லிவிட்டு சிவநாதன் போய்விட்டார். அவர் முப்பத்தைந்து வயதையும் தாண்டிவிட்ட திருமணமாகாத ஒழுக்கசீலரான பிரமச்சாரி.
எமக்கு வந்த உடைகளை தரம்பிரிக்கும் வேலை எனது தலையிலும் எங்கள் உதவியாளராக இருந்த கருணாநிதியிலும் விழுந்தது. கருணாநிதி பகலில் பல்கலைக்கழகத்தில் படிக்கச் செல்வதால் ஒரு வாரகாலம் நான் உடைகளைத் தரம் பிரித்தேன்.
அமெரிக்காவில் இருந்து வந்த வண்ண வண்ண சேலைகளை அகதி முகாம் பெண்களுக்கு கொடுத்து அவற்றை அவர்கள் அணிந்தால் அவர்களின் தோற்றம் எப்படி இருக்கு என நினைத்து பார்க்காமல் இருக்க முடியவில்லை. புதிய பறவை திரைப்படம் மனதில் வந்தது. புதிய பறவையில் சௌகார் ஜானகி உடுத்த சேலை அக்காலத்தில் பிரபலமானது.
உள்ளாடைகளை எறிந்துவிட்டேன். சேர்ட்டுகளை முகாம் ஆண்களுக்கு கொடுப்பது என தீர்மானித்தேன் ஆனால் பாண்டுகளைத் தரம் பிரித்தபோது அவை எண்ணிக்கையில் 500 ஆக இருந்தது. 83-84 காலத்தில் இலங்கையில் இருந்து அகதியாக வந்தவர்கள் மன்னார் மாவட்டத்தில் தலைமன்னார், வங்காலைப்பகுதி மீனவர்கள். 85 இன் ஆரம்பத்தில் வந்தவர்கள் திருகோணமலைப்பகுதி மீனவர்கள். அதன் பின்னர் மற்றவர்கள் தமிழகத்திற்கு இடம்பெயர்ந்தார்கள். ஆரம்பகாலத்தில் இலங்கை கடற்படையினரின் நெருக்கடி தாங்காமல் இந்தியாவுக்கு அவர்கள் வள்ளங்களிலே வந்தவர்கள். இலங்கை கடற்படையினர் போராட்ட இயக்கங்களின் ஆயுத மற்றும் போராளிகள் கடத்தலுக்கு மீனவ மக்கள் துணைபோவதாக நினைத்திருந்தார்கள். அது உண்மையும் கூட
அகதியாக வந்தவர்கள் மன்னார் என எப்படித் தெரியும் எனக் கேட்கிறீர்களா…?
இந்திய கடற்கரையில் வந்து ஒதுங்கும் பெரும்பாலான படகுகளில் லூர்து மேரி -அமலோற்பவ மேரி என மடு மாதாவின் பெயர்கள் எழுதியிருக்கும். ஆழ்கடலில் செல்லும் படகுகளுக்கு மடுமாதாவின் பெயர் காப்புறுதி பத்திரம்போல் இருக்கும் என மன்னார் மீனவர்கள் நினைத்திருந்தார்கள்.
அமெரிக்காவில் இருந்து வந்த ஆண்கள் பாண்டுகளை இவர்களுக்கு கொடுக்க முடியாது. அவை நம்மட இயக்கப் பையன்களுக்கு உதவும் என நினைத்தேன். ஆயுதப்போராளிகளும் நல்ல பாண்டுகளை அணிந்து ஆயுதம் ஏந்தட்டும் என நினைத்து பாகுபாடில்லாமல் ஐந்தாகப் பிரித்து தலா நூறு பாண்டுகள் வீதம் ஒவ்வொரு இயக்கத்திற்கும் கொடுக்கத் தீர்மானித்தேன்.
இந்தக் காலத்தில் நாங்கள் விரும்பாத இன்னும் ஒரு செயலில் ஈடுபட நேர்ந்தது. அவுஸ்திரேலியாவில் சிட்னியில் இருந்து இயங்கும் ஈழத் தழிழ் சங்கம் – எழுபத்தையாயிரம் ரூபா இந்தியப்பணத்தை எமது தமிழர் நல மருத்துவ நிலையத்தின் பெயரில் செக்காக எழுதி அதனை விடுதலைப்புலிகளுக்கும் ரெலோ இயக்கத்திற்கும் கொடுக்கும்படி கேட்டிருந்தார்கள்.
இவர்கள் எவ்வளவு முட்டாள்களாக இருக்கவேண்டும் என அவ்வேளை நினைத்துக் கொண்டேன்.
செக்கை அனுப்பினால் அது காசாவதற்கு ஒரு மாதத்திற்கு மேல் செல்லும். மேலும் ஆயுதம் தாங்கிய போராளிக்குழுக்களுக்கு கொடுக்கச் சொல்லி எமது பாதுகாப்பையும் தங்களது பாதுகாப்பையும் சிந்திக்காமல் அனுப்பியிருக்கிறார்களே…? இந்தப் புலம் பெயர்ந்தவர்கள் என நினைத்துக் கொண்டு அந்தச் செக்கை கிழித்து எறியவும் பல தடவைகள் யோசித்தோம்.
ஆனால், போராளிகளின் மேல் உள்ள அபிமானம் எம்மை அந்தச் செக்கை காசாக்கச் செய்தது
கோடம்பாக்கத்து வங்கி முகவர் எங்களது நண்பர் என்பதால் உடனே பணத்தை தரமுடியும் என்றார்.
பாண்டுகளை ஒவ்வொரு இயக்கத்திற்கும் – விடுதலைப் புலிகளைத் தவிர மற்றவர்களிடம் இலகுவாக கொடுக்க முடிந்தது. நன்றியுடன் ஏற்றுக்கொண்டார்கள். தகவல் சொல்லி இப்படி பணமும் நூறு பாண்டுகளும் உங்களுக்காக இருக்கிறது என விடுதலைப்புலிகளிடம் சொல்லியனுப்பிய போது யோகி (நரேன்)வந்தான். ஏற்கனவே இந்துக்கல்லூரியில் படித்தபோது அறிமுகமானவன். இருவரும் கடையில் தேனீர் அருந்திவிட்டு பாண்டுகளை ஓட்டோவில் ஏற்றிக்கொண்டு நண்பகல் நேரத்தில் கோடம்பாக்கம் வங்கியை நோக்கிச் சென்றோம்.
அப்பொழுது ஏற்கனவே இயக்கங்களிடையே உரசல் தொடங்கிவிட்டது. ஏற்கனவே ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் இயக்கத்தில் இருந்த ஒருவரை வவுனியாவில் விடுதலைப்புலிகள் சுட்டுக்கொன்றிருந்த தகவல் எனக்கு தெரிந்திருந்ததால் ‘நரேன், அது சரி நீங்கள் எல்லாம் ஓன்றாக சேர்ந்து இருக்கிறீர்கள். மேலும் ஈழவிடுதலை என்ற நோக்கம் பொதுவானது என்கிறீர்கள். ஏன் வவுனியவில் ஈபிஆர் எல் எவ் காரரை சுட்டீர்கள்’என்று கேட்டபோது
நரேன் என்னைப்பார்த்து புன்னகைத்தபடி சொன்னான் ‘தம்பி சொன்னதால் சுட்டோம்’
எனக்கு அதிர்ச்சியால் உடல் குலுங்கியது. ஒரு கணம் எதுவும் கண்ணுக்குத் தெரிய மறுத்தது. மனிதர்களது கொலைகளை இவ்வளவு எளிதாக எடுக்கும் மனிதனாக இவன் எப்போது மாறினான்?
பாடசாலைக்காலத்தில் மடிப்பு குலையாத சேட்டை முழங்கைக்கு சிறிது கீழே மடித்து விட்டு கிரிக்கட் – உதைப்பந்தாட்டம் எல்லாம் விளையாடியபடி இந்துக்கல்லூரியில் பல மணவர்களுக்கு ஹீரோவாக இருந்தவன், இப்படியான வார்த்தையை எப்படி உதிர்த்தான்?
இவன் என்னோடு பல வருடங்கள் படித்தவன். நண்பனாக இல்லாமல் இருந்தாலும் ஓரே ஓழுங்கையில் பல வருடங்கள் இருந்தவன்.
குறைந்த பட்சம் கொலையை நியாயப்படுத்தியிருக்கலாம். கொலை செய்யப்பட்டவன் சமூகவிரோதி அது இது என்று வழமையான காரணத்தை சொல்லியிருக்கலாம்.
மனம் மரத்து, நடைப்பிணமாக வங்கியுள்ளே சென்று பணத்தை மாற்றி கொடுத்து விட்டேன். அதன் பின்பு எதுவும் பேச மனமில்லை. அப்பொழுது நினைத்தேன் எமது சமூகம் நஞ்சுண்ட சிவனாகி விட்டது என்று. தொண்டையுடன் ஆலகால விஷத்தை தடுத்து நிறுத்த உமாதேவி அங்கிருந்தார் இங்கு யாருமில்லையென—
—–
இந்தக் காலகட்டத்தில் முப்பத்தைந்து வயதான தமிழர் ஒருவர் ஜெர்மனியில் இருந்து வருவதாகவும் ஜெர்மனிய அரசியல் கட்சியொன்றின் (Free democratic party) முக்கிய அங்கத்தவர் எனக் கூறி அத்துடன் அவர் அக்காலத்து ஜெர்மன் வெளிநாட்டு அமைச்சரின் (Hans-Dietrich Genscher) பிரதிநிதி என்றும் சொல்லப்பட்டது.
‘ இலங்கையில் சமாதானம் ஏற்பட்டால் ஜெர்மன் பல கோடி பணத்தில் வட – கிழக்கை அபிவிருத்தி செய்யும். அதன் பொருட்டு இங்குள்ள இயக்க பிரதிநிதிகளை சந்தித்து பேசவேண்டும். அதற்கு உதவி செய்யும்படி அவர் கேட்டார். தனது கட்சியின் அங்கத்துவ கார்டையும் எமக்கு எடுத்து காட்டியபோது நாங்கள் அவரை நம்பினோம்.
நல்ல விடயம்தானே என நம்பி போராளி இயக்கத்தவர்களிடம் அனுமதி பெற்று இந்த மனிதருக்காக சந்திப்பு ஒழுங்கு பண்ணியதோடு ரெலோ இயக்கத்திடமும் சிவநாதன் மற்றும் ஈபிஆர்எல் எவ் இடமும் அவரை கூட்டிச் சென்றோம்.
இயக்கங்களிடம் இந்த மனிதர் ஜெர்மன் முதலீட்டிற்கு பதிலாக போராட்டத்தை நிறுத்தி சமாதானம் பேசும்படி கேட்டதனால் இவர் நோக்கம் வெற்றி பெறவில்லை. அந்த மனிதரும் போய்விட்டார்
அந்த மனிதர் அன்று காலையில்போன பின்பு இந்திய மத்திய உளவு (IB)நிறுவனத்தின் சென்னை அதிகாரி எம்மிடம் வந்து ‘உங்களோடு தங்கிய அந்த இலங்கை அரசின் மனிதர் உளவாளி என கருதுகிறோம் அவரை விசாரிக்கவேண்டும்’ என்றார்.
நாங்கள் திடுக்கிட்டோம்.
‘எங்களுக்குத் தெரியாது’ என்று சொல்லி அவரது நடத்தையை விளக்கினோம்.
பின்பு யோசித்துப் பார்த்தபோது ஜெர்மன் நாட்டில் இருந்து வந்த அந்த மனிதர் படுக்கை வசதியில்லாத எமது அலுவலகத்தில் ஐந்து நாட்கள் நிலத்தில் படுத்து வாழ்ந்தார் என்பது எங்களுக்கு ஆரம்பத்தில் புதுமையாக இருந்தது. அதே நேரத்தில் உளவாளியாக இருக்கலாம் என்ற சந்தேகமும் வலுப்பட்டது.
இதைவிட ஐந்து தமிழர்கள் வடஅமரிக்காவில் இருந்து வந்து சோழா ஹோட்டலில் தங்கியிருந்து என்னையும் டொக்டர் சிவநாதனையும் அழைத்தார்கள். அவர்களை சந்தித்து பேசியபோது அவர்கள் ஒரு பெரிய தொகையை வைத்திருப்பதாகவும் எந்த இயக்கம் ஒரு தாக்குதலை கொழும்பில் நடத்த விரும்புகிறதோ அதற்குத் தருவதற்கு தயார் எனவும் கூறினார்கள். இவர்களை எங்களால் நேரடியாக கண்டிக்கமுடியவில்லை. நானும் சிவநாதனும் இதன்பின்பு அவர்களை தொடர்பு கொள்ளவில்லை. இவர்களது பணம் எந்த இயக்கத்திற்கு சென்றது என்பது நிச்சயமாகத் தெரியாததால் அதைச் சொல்லவில்லை. ஆனால், நிச்சயமாக கொழும்பில் அந்தப்பணம் குண்டாக வெடித்து உயிர்களைக் காவு கொண்டது.
மேற்கூறிய நான்கு சம்பவங்கள் புலம்பெயர்ந்த தமிழர் தொடர்பானவை. அவர்களைப் பற்றிய எனது அபிப்பிராயம் மிகவும் காரமானது.
புலம் பெயர்ந்த தமிழர்களில் 99.9 வீதமானவர்கள் இலங்கையை விட்டு வெளியேறும்போது அரசியலில் ஈடுபட்டவர்கள் அல்ல. இலங்கை அரசியல் மட்டுமல்ல உலக அரசியலும் தெரியாதவர்கள். ஆனால், இயக்க அங்கத்தவர்களாக இருந்தவர்கள் உணர்வு ரீதியாக ஆயுதம் ஏந்த முனைந்தவர்கள். அவர்களில் சிலர் முக்கியமாக புளட் – ஈரோஸ் மற்றும் ஈபிஆர் எல் எவ் . இவர்களுக்கு ஓரளவு அரசியல் தெரிந்தாலும் அவர்களால் புலம்பெயர்ந்த நாடுகளில் இயங்க வசதிகள் இல்லை. தங்களை புதிய வாழ்க்கையில் நிலைநிறுத்துவதே பெரிய பாடாக இருந்தது.
இந்த நிலையில் மேற்கு நாடுகளில் பிற்காலத்தில் விடுதலைப்புலிகள் சார்பாக இயங்குபவர்கள் தங்களை முன்னகர்த்தவும், தங்களது முக்கியத்துவத்தை ஏற்படுத்தவும், இலங்கை அரசாங்கத்தின் பல நடவடிக்கைகள் இவர்களுக்கு முற்காலத்தில் ஏற்படுத்திய பாதிப்பால் ஏற்படுத்திய மனக்கசப்பைக் காட்ட இந்தப் போராட்டம் அவர்களுக்கு சாதகமானது. ஈழப்போராட்டத்தில் தமிழர்களின் தோல்விக்கு இவர்களே காரணம். இவர்கள் எந்தச் சிந்தனைத்திறனும் அற்ற இராட்சதமிருகம் ஒன்றை உணவூட்டி வளர்த்திருக்கிறார்கள். அந்த மிருகம் முள்ளிவாய்கால் கரையில் இறுதி மூச்சை விட்டது. இதனால் தமிழர்களின் நியாயமான பல விடயங்கள் தற்பொழுது உலகமெங்கும் ஏன் போராட்டத்திற்கு உதவிய பல தமிழர்களுக்கு அநியாயமானதாக தோற்றமளிக்கிறது.
மெல்பேன்
இலங்கை தமிழ் அகதிகள் கழகத்தில் ஐந்து வருடங்கள் உபதலைவர், காரியதரிசி, மற்றும் குழு அங்கத்தவர் எனப் பல பொறுப்பிலிருந்தேன். அப்போது சங்கத்தின் சார்பில் பல நிகழ்வுகளை ஒழுங்கு படுத்தினேன். எனது வேலைக்கு விடுமுறை எடுத்து அகதிகள் மேன்முறையீட்டு விசாரணையில் பலருக்கு விசேட சாட்சியாகப் போனேன். அக்காலத்தில் பலர் இலங்கை அரசின் துன்புறுத்தல் காரணமாக வெளியேறியதாகக் கூறி அகதி அந்தஸ்து எடுத்தார்கள்.
ஆனால் , இலங்கை அரசின் கட்டுப்பாடற்ற இடத்தில் அல்லது விடுதலைப்புலிகளின் பகுதியில் இருந்தவர்கள் தங்களை விடுதலைப்புலிகள் துன்புறுத்தியதாக சொல்லி அகதி அந்தஸ்துப் பெற்றார்கள். அப்படிப் பெற்றவர்கள் பலர் விடுதலைப்புலிகளது ஆதரவாளர்களாக மாறி பின்னாளில் அவர்களுக்குப் பணம் சேர்த்தார்கள்.
இதைவிட முக்கிய விடயம் ஒருவரது அகதி அந்தஸ்து கிடைத்ததும் அவரது விண்ணப்பங்கள் நகல் செய்யப்பட்டு அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சிற்கு வழங்கப்படும். இதனால் விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு பிரசாரம் செய்ய வேண்டியதில்லை. இங்கு வந்த அகதிகளும், அவர்களது வழக்கறிஞர்களும் அந்த வேலையைச் செய்தார்கள்.
அதற்கப்பால் அகதி அந்தஸ்து கிடைத்து இரு வருடங்களில் அவுஸ்திரேலிய குடியுரிமை பெற்று மீண்டும் ஊருக்குத் திரும்பி சீதனத்துடன் திருமணமும் செய்து திரும்பி விடுவார்கள். அப்படியாகப் போய்த் திரும்புபவர்கள் மீது இலங்கை அரசு எந்த அக்கறையும் காட்டவில்லை அது என்பதை நிரூபிக்கும். இப்படியான காரணிகளால் இலங்கை அகதிகள் விவகாரம் சிக்கலடைந்தது. பிற்காலத்தில் அகதிகளை அனுமதிக்க அவுஸ்திரேலிய அரசு தயங்குவதற்கும் நம்மவரே காரணமானார்கள்.
இந்தியாவில் இருந்த காலத்தில், இலங்கைத் தமிழர்கள் தங்கியிருந்த கடற்கரைப் பிரதேச புயல் பாதுகாப்பு மண்டபங்களான அகதி முகாம்களுக்கு பஸ்களிலும் கால்நடையாகவும் சென்று வேலை செய்த எனக்கு, இங்கு சமூகப்பணி செய்வது கடினமானதல்ல. என்னோடு ஐந்து வருடமும் அகதிகள் கழகத்தில் இருந்தவர்கள் எல்லோரும் அகதிகளாக வந்தவர்கள். தங்களது அந்தஸ்து கிடைத்ததும் கழகத்தை விட்டு பெரும்பாலானவர்கள் கழன்றுவிடுவார்கள். அதில் இணைந்து வேலை செய்வதற்கு அங்கத்தவர்களைப் பல இடங்களிலிருந்து கொண்டு வந்து நிரப்பவேண்டியிருந்தது. அகதிகளுக்காக வேலை செய்வது தென்னம்பிள்ளை நடுவது போன்றது. பலன் கிடைக்கக் காலம் செல்லும்.
பல இலங்கை வழக்கறிஞர்கள் மெல்பனில் இருந்தார்கள் அவர்களில் பெரும்பாலானவர்களது தொழில் இந்த அகதி விண்ணப்பங்களால் மட்டுமே நடந்தது. ஒரு விதத்தில் அகதிகள் வருகையால் நன்மையடைந்தவர்கள் அவர்கள் எனலாம்.
இங்கே அக்காலத்தில் இயங்கிய இலங்கைத் தமிழ்ச் சங்கம், (பிற்காலத்தில் ஈழம் என்றும் தற்பொழுது விக்டோரியா எனவும் உருமாறியுள்ளது) அக்காலத்தில் தமிழ் அகதிகளை தங்கள் அங்கத்தினராக வைத்திருப்பதற்கு மறுத்தார்கள். அதற்கான காரணம் வினோதமானது. பல குற்றவாளிகள் கூட அகதிகளாக வந்திருக்கலாம் என்றார்கள். அதாவது அவுஸ்திரேலிய காவல் துறை மற்றும் அரசிலும் பார்க்கக் கவனமாக நடந்தார்கள் அக்கால இலங்கைத் தமிழ்ச் சங்கத்தினர்.
ஆனால், உண்மையான காரணம் அக்கால சங்க முக்கியஸ்தர்கள்: பேராசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் கணக்காளர் என்ற உயர்மட்டத்தினர், அகதிகளாக வந்தவர்களின் தோள்களில் உராய விரும்பவில்லை என்பதே. ஆனால், அத்தகைய நிலையே அகதிகள் சங்கமென ஒன்று உருவாகுவதற்கு முக்கிய காரணம் .
அதன் பின்பு அகதிகள் சங்கம் ஓரளவு தன்னை முன்னிலைப்படுத்தியதும், அதை இலங்கைத் தமிழ்ச்சங்கத்தின் கடிவாளத்தைக் கையில் வைத்திருக்கும் விடுதலைப்புலிகளது அமைப்பான, தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பல இடங்களில் அவர்களது விடுதலைப்புலி ஆதரவு நிகழ்வுகளில் இந்த அகதிகள் அமைப்பும் கலந்து கொள்ளவேண்டுமென்று அழைப்பு விடுத்தார்கள்.
அதற்கு நான் முட்டுக்கட்டையாக இருந்தேன். இந்த அகதியமைப்பு அரசியலிற்கு அப்பாற்பட்டது. தனிப்பட்ட விடுதலைப்புலி ஆதரவாளர்களாக நீங்கள் இருக்கலாம், ஆனால், அகதி அமைப்பு அப்படி இருந்தால் எமது கோரிக்கைகள் வலிமை அற்றுப் போகும் என்பது எனது வாதம். ஆனால், அக்காலத்துத் தலைவர்கள் பலர் ஒருங்கிணைப்புக்கு குழுக் கூட்டங்களுக்குச் சென்றோ அல்லது அவர்களது அறிக்கைகளில் கையெழுத்திட்டோ கள்ள உறவு வைத்திருந்தார்கள்.
நானும் சில மனைவிமார், குடும்பத்தைப் பாதுகாக்க கணவனின் ஒழுக்கக்குறைவை கண்டும் காணாதிருந்பதுபோல் நடந்தேன்.
1995 களில் மனைவி சியாமளா பெரிய வைத்தியசாலைகளிலும் அத்துடன் மற்றைய வைத்தியர்களுக்காகவும் வேலை செய்துகொண்டிருந்தார். அக்காலத்தில் எனது இரண்டு மிருக வைத்திய நண்பர்கள் ஒரு கட்டிடத்தை விலைக்கு வாங்கி, மிருக வைத்தியகிளினிக் நடத்துவதற்கு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார்கள்.
இறுதியில் அந்த கட்டிடம் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. மேலும் அது உடைந்து பல திருத்தங்கள் செய்யவேண்டியிருந்தது. அப்பொழுது, “ நீ அதை வாங்குகிறாயா.. ? “ எனக்கேட்டபோது, நான் முன்வந்து அங்கு ஒரு மருத்துவ கிளினிக் அமைத்துக் கொண்டிருந்ததால் தற்காலிகமாக அகதிகள் கழகத்திலிருந்து விலகிவிட்டேன்.
அக்காலத்தில் மெல்பனில் உள்ள வைத்தியசாலையில் நான்கு நாட்களும் மிகுதி நாட்களில் எனது மனைவியின் மருத்துவ கினிக்கில் ரிஸப்ஸனிஸ்டாகவும் வேலை பார்த்தேன். புதிய கட்டிடத்தில் தொடங்கியதால் அதிகமானவர்கள் வருவதில்லை. அத்துடன் பணவருவாய் அற்ற காலம். இந்த மருத்துவ கிளினிக்கை உருவாக்கவேண்டுமென வேலை செய்து கொண்டிருந்தபோது, அக்கால அகதிகள் கழகத் தலைவராக இருந்தவர் எனது நண்பர் கொர்னேலியஸ். அவர் என்னிடம் தொலைபேசியில் “ எனது தனிப்பட்ட காரணங்களால் நான் விலகப்போகிறேன். நீங்கள் இந்த கழகத்தை எடுத்து நடத்தமுடியுமா? “ என்று கேட்டார்.
நான் தயாரில்லை. ஆனாலும் இதுவரையில் உழைத்து உருவாக்கிய கழகம் அழிந்துபோவதற்கு மனம் விடவில்லை . ஏற்கனவே ஒரு இரவு உட்பட ஏழுநாட்கள் வேலை செய்கிறேன். மனைவியும் அக்காலத்தில் தொடர்ந்து வேலை .
சியாமளாவின் பெற்றோர் எங்கள் வீட்டில் இருந்தது ஆறுதலாக இருந்தாலும், வாரவிடுமுறைகளில் வரும் குழந்தைகளது பல வேலைகளுக்கு மத்தியில் நான் தலைமைப்பதவியை பொறுப்பேற்கிறேன் என்று சொன்னேன்.
அதற்கான விண்ணப்பத்தையும் அனுப்பினேன்.
தொடரும்
மறுமொழியொன்றை இடுங்கள்