டொமினிக் ஜீவாவை நினைவு கூரல்

                                                                                     நடேசன்

எழுத்தாளர் டொமினிக் ஜீவா நான்கு வருடங்கள் முன்பாகவே நினைவுகள் இழந்து வாழ்ந்தவர். அவரது நினைவுகள் அந்தியில் இருக்கும் காலத்தில் அவரது வீட்டில்  அவரை என்னால்  சந்திக்க முடிந்தது.

அவரது இறப்பை ஒரு வரமாக அவரை நேசிப்பவர்கள் கொண்டாடவேண்டும் . அவர் போன்ற ஒருவரது சாதனைகள் இறப்போடு முடிவதில்லை. மற்ற சமூகத்திலும் பார்க்க நமது சமூகத்தில்  இறந்த பின்பே  ஒருவரை நினைவு கூர்வார்கள் அதிலும் எழுத்தாளராக இருந்தால்,   அதுவே  ஒரு விதியாக அமைந்துள்ளது. அந்த விதியை யாராலும்  மாற்ற முடியுமா?

ஒடுங்கிய கஸ்தூரியார் வீதி வழியே ஒரு யானை நடந்தால், அதைப்பார்க்கும்போது, அந்த வீதியருகே கடை வைத்திருப்போருக்கு ஏற்படக்கூடிய மனநிலையைப்போல, பேனாவை ஏந்திய டொமினிக் ஜீவாவின் வாழ்வு, பாரம்பரிய  யாழ்ப்பாண சமூகத்திற்கு மனக்கிலேசத்தை கொடுத்தது .  பிற்காலத்தில் மாற்றம் ஏற்பட்டதா இல்லையா என்பது நமது கவலையல்ல.  அவரை நேசித்த நாம் எப்படி நினைவு கூருவது என்பதே எனது வினா?

அக்காலத்தில் கம்யூனிஸ்கட்சியில்  செயற்பாட்டாளராக இருந்து யாழ்ப்பாண சாதி விதிமுறைகளுக்கு எதிராகப் போர் கொடியேற்றினார் என்பதால் அவரை இடதுசாரிகள் கொண்டாடி தம்மில் ஒருவராக வைத்துக் கொள்ள விரும்பலாம் .  அது அவர்களது உரிமை.   ஆனால் இடதுசாரியம் ஏட்டில் மட்டும் உறங்கிப் போய்விட்ட  நிலை. சாதியம்  நிச்சயமாக தற்போது இருந்த போதிலும் அவர் காலத்தில் இருந்தது போல் இல்லை . அவரது ஆசிரியர்  ‘சிரைக்கப் போ ‘என சொன்னதுபோல் இன்று எவரும் சொல்ல முடியாது. இப்படியான இறங்கு நிலையில் அவரை சாதியப் போராளியாக மட்டும் நினைத்தால் அவரது நினைவும் மங்குமே . சாதியத்துக்கு மட்டும் எதிரான செயல்பாட்டாளராக அவரை நிறுத்தினால்  அடுத்த தலைமுறை கடக்காது.

கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகள் தனியொருவனாக மல்லிகை என்ற சஞ்சிகையை நடத்திய பத்திரிகை ஆசிரியராக அவரை பலர் நினைவு கூரலாம்.  முக்கியமாக அவரால் இனங்காணப்பட்டு வெளிக்கொணரப்பட்ட எழுத்தாளர்கள்,  தங்கள் காலம் முழுவதும் அவரை நினைப்பார்கள்.  ஆனால்,  பெரிய பத்திரிகைகள் , சஞ்சிகைகள் மறைந்துவரும் தற்போதைய  கணினி உலகிது . நித்திய ஜீவியாக ஜீவா வாழ்ந்தாலும்கூட மல்லிகை  நின்று பிடிப்பது கடினமாயிருக்கும்.

அவரால் ஐம்பதுக்கு மேற்பட்ட புத்தகங்கள் பதிக்கப்பட்டது. அந்த புத்தகங்களால் அதன் ஆசிரியர்களது  மனதில் ஜீவா நிலைக்கமுடியும்  என்பது உண்மை . அந்த புத்தகங்களும் அதன் ஆசிரியர்களும் எவ்வளவு காலம் நிலைத்து நிற்பார்கள்?

அவர் ஒரு சிறு கதை எழுத்தாளர். மற்றவர்கள்போல பிரசார எழுத்தற்ற அழகியல் கொண்ட கதைகள் பலவற்றை அவர் எழுதியுள்ளார். ஆனால்,    அவரது கதைகள்  பல பேசப்படாததற்கு முக்கிய காரணம் அவரது மற்றைய அவதாரங்களே . என்னைப் பொறுத்தவரை அவரது கதைகள் அக்காலத்தை நமக்குக் காட்டும் கண்ணாடிகள். புதுமைப்பித்தனின் பொன்னகரம் பேசமுடியுமென்றால் ஜீவாவின்  கதைகளை நாம் பேசலாம்.

இவற்றுக்கப்பால் அவரிடமிருந்த விடயம்  குருஷேத்திரப்போரில் கலந்து கொள்ளாது,  விதுரன் வில்லொடித்ததபோல் தமிழ்த்தேசியத்தின் பேரால் முப்பது வருடங்கள் நடந்த குருதிப்போரில் கலந்து கொள்ளாது முற்றாக ஒரு முனிவராக அதனைப் புறக்கணித்தார் .

இது சாதாரணமான விடயமல்ல.  எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் , அறிவுஜீவிகள் தங்களை மறந்து போருக்கு துணை போனபோது அந்த சுனாமியில் இருந்து  விலகி நின்றார். அவர் மாறாக தமிழ்தேசியராக இருந்திருந்தால் உலகமெங்கும் வலம் வந்திருப்பார். அதற்கான அழைப்பைப் புறக்கணித்து கொழும்புக்கு இடம்பெயர்ந்தார் .   அதற்கப்பால் சிங்கள அறிவுஜீவிகள் எழுத்தாளர்களை மல்லிகையில் தொடர்ச்சியாகக் கொண்டு வந்தார் . தமிழ்ப்பேசும் இஸ்லாமிய சமூகத்தை எதிரியாக நினைத்த   தமிழர்கள் மத்தியில் இஸ்லாமிய எழுத்தாளர்களின் படைப்புகளை  மல்லிகையில் தொடர்ந்து  பிரசுரித்தார்.  இன ஒற்றுமை இலங்கையில் தேவை என்பதற்கு தனி ஒரு மனித உதாரண புருஷராக  நின்றார் .  அதேநேரத்தில் அவரிடம் செவ்வி எடுத்த மடுள்கிரியே  விஜயரத்தினா,  தமிழர் உரிமையைப் பற்றிக் கேட்டபோது   “  நீங்கள் சிறுபான்மையினராகவும் நாங்கள் பெரும்பான்மையாகவும் இருந்தால் எதைக்கொடுப்பீர்களோ  அதையே நாம்  கேட்கிறோம் “   என ஆணித்தரமாகப்  பதிலளித்தார்  என்பதை விஜயரத்தினா என்னிடம் சொன்னார்.  

2001  ஆம் ஆண்டு  பாரிஸுக்கு அவர் அழைக்கப்பட்டபோது  அங்குள்ளவர்கள்  மத்தியில் டொமினிக் ஜீவாவா     “ நான் இலக்கியம் பேசவரவில்லை,   நமது நாட்டிலுள்ள பாசிசத்தைப் பற்றி பேசவந்துள்ளேன் “   எனச் சொல்லக்கூடிய நெஞ்சுரமிருந்தது. அவர் சென்ற அக்காலத்தில் கொழும்பு பாரிஸ்  போன்ற இடங்கள் அமைதிப் பூங்காக்களாக இருக்கவில்லை. 

இப்படி ஆத்ம பலமும் தீர்க்கதரிசனமும் உள்ள ஜீவாவிடம் சில குறைகளிருந்தன.  மல்லிகையை இறுதிக்காலத்தில் மற்றவர்கள் தொடர்ந்து  நடத்த முன்வந்தபோது  அவருக்கு மனம் வரவில்லை.

வர்த்தகம்,  பணம் என்பன  அவருக்குத் தெரியாத பகுதிகள்.  கொடுத்த பணத்தை எண்ணிப் பார்க்காத  மனிதர்.

பிற்காலத்தில் மல்லிகையில் தரமற்ற படைப்புகள் வந்தபோது நேரடியாக கேட்டேன்.     “ கொஞ்சம் தெரிவுசெய்து  போடலாமே    “  என்றபோது   சிரித்தபடி   “   மல்லிகையில் வருமென நம்பிக்கையோடு அனுப்புகிறார்கள்.  அவர்களை ஏமாற்றலாமா ? “   என்றார்

அவரது மகிழ்வான தருணம் 2011 நடந்த சர்வதேசத்  தமிழ் எழுத்தாளர் மகாநாடு !  அப்பொழுது   “  நான் இறந்தாலும் சந்தோசமாக இறப்பேன்.   “  என்று எனது  காது படக்கூறினார் .

இலங்கை சுதந்திரமடைந்த பின்பு இவ்வளவு அறிவுத் தெளிவுடன் தொடர்ச்சியாக  இலங்கையில் வாழ்ந்த யாழ்ப்பாணத்தவர்  எவருமே  எனக்குத் தெரியவில்லை.

என்னைப் பொறுத்தவரை டொமினிக்ஜீவாவை இடதுசாரியாகவோ ,  சாதி எதிர்ப்பாளராகவோ  பதிப்பாளராகவோ  அல்லது மல்லிகை ஆசிரியராகவோ  பார்க்க விரும்புவது பருந்தின்  செட்டையை  வெட்டி கிளிபோல் கூண்டுக்குள்  அடைப்பதான விடயமாகும்.

டொமினிக் ஜீவா, முழு இலங்கைக்கும் சொந்தமான தீர்க்கதரிசனம் கொண்ட தமிழ் இலக்கியவாதி என நான் கருதுகிறேன். அவரை நாம் பல சந்ததிகள் கடந்து  நினைவு கூரவேண்டும். .  

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: