13) கரையில் மோதும் நினைவலைகள்: அம்மாவின் பாசம்

நோயல் நடேசன், புஸ்பராஜா, குடிவரவு அமைச்சர் செனட்டர் நிக் போல்கஸ், விக்கிரமசிங்கம் .

எனது பல்கலைக்கழக புகுமுகப் பரீட்சை, 1974   சித்திரை மாதம்  முடிவடைந்ததும் எல்லா பாடங்களும் தேறிவிடுவேன் என்பதுடன் நல்ல புள்ளகளும் எடுப்பேன் என்பது தெரிந்தது. மற்றைய மாணவர்கள்போல் வைத்தியராகவேண்டுமென்பது பெரிதாக ஆசையில்லை.

ஆனால், அதற்கான சந்தர்ப்பம்  வந்தால்  அந்தத்துறையில் படிக்கப் போவேன் என்ற எண்ணம் முளைத்திருந்தது . எங்களது நெருங்கிய உறவினர்களில் வைத்தியர்களென எவருமில்லை. அத்துடன் சிறு வயதில் பால்வினை தவிர்ந்த மற்றைய சின்னமுத்து,  செங்கமாரி,   ஆஸ்த்மா இறுதியில் தைபோயிட் என நோய்கள் பலவற்றால்  தாக்கப்பட்டிருந்தேன். அம்மாவும் பல நோய்களின் களஞ்சியமாக மாறியபடி இருந்ததால் வைத்தியராக வந்தால் செலவு விரயமாகாது  பார்த்துக்கொள்ள  முடியும் என லாப – நட்டக் கணக்கிருந்தது. பரீட்சை எழுதியதும், எடுப்பேன் என நினைத்த புள்ளிகளைப்  படுக்கும்  கட்டிலின்  அருகே உள்ள அறைச் சுவரில் , பென்சிலால் எழுதிவிட்டு,  படித்த  புத்தகங்களைத் தூக்கி வீசிவிட்டேன். 

யாழ்ப்பாணம் நகருக்குச்சென்று  யாழ். நூல் நிலையத்தில் கதைப்புத்தகங்களை எடுப்பதும்,   மாலையில் நான்கு மைல் தூரத்திலிருந்த  சுண்டிக்குளிக்கு தனியாகவோ அல்லது நண்பர்களுடனோ செல்வது வழமையாகிவிட்டது. மாலையில் எனது காதலி சியாமளா  அவரது வீட்டு வாசலில் நின்று பூக்கும் புன்னகைக்காகக் கிட்டத்தட்ட இரண்டு மணித்தியாலங்களும் சைக்கிளோடுவேன்.

 நான் தோற்றிய  பரீட்சையின்  முடிவுகளில் நம்பிக்கையுடன் இருந்தபோது,   சியாமளா பரீட்சை முடிவில் நம்பிக்கையற்று மீண்டும் பரீட்சை எடுப்பதற்காகப் பிரத்தியேக வகுப்புகளுக்குப் போனதால் அடிக்கடி சந்திக்க முடிந்தது .சியாமளா வெளியே வருவதாக இருந்தால் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கு எதிராக  உள்ள கடையருகே  காத்திருப்பேன்.  அக்காலத்தில் நண்பர்களிடமிருந்து சிகரட் புகைக்கும் பழக்கத்தைப் பெற்றுக்கொண்டேன்.

நண்பர்களோடு சேர்ந்து புகைத்த  எனக்கு,  தனிமையில் காத்திருக்கும்போது பிரிஸ்டல் சிகரட் உற்ற தோழனாகியது. பரீட்சை எழுதிவிட்டதும்,  அக்கால அடையாளங்களாக, சிகரட்டும் பெல்பொட்டமும் வந்து தொற்றிக்கொண்டன . திரைப்படங்களும் எனது வாழ்வில்  நிழலாகத் தொடர்ந்தது. எனக்கு காதலி இருக்கிறாள் எனத் தெரிந்ததும் எனது நண்பன் ஒருவன் தனது அழகான தங்கைக்குக் கிழமையில் இரண்டு நாட்கள் உயிரியல்  பாடம் சொல்லிக்கொடுக்கும்படி கேட்டுக்கொண்டான்.

நான் சிகரெட் புகைப்பது சியாமளாவுக்கு  தெரியாதிருப்பதற்கு,  எனது சைக்கிளின் ஹாண்டில் பாரில் முனைகளில் உள்ள பிளாஸ்டிக்கை கழற்றியிருந்தேன்.

 சிகரட்டை கீழே எறிவதற்குப் பதிலாக அந்த ஹாண்டிலுக்குள் தள்ளினால் சில நிமிடங்களில் எடுத்து மீண்டும்   புகைக்கமுடியும்.

அக்காலத்தில் ஒரு நாள் மாலையில்  எனது நயினாதீவு  நண்பனது வீட்டிற்குச்  சென்றேன்.   அவனது  வீட்டின் பின்பகுதியில் அமைந்துள்ள சிறிய கொட்டிலில்  நாற்காலிகளில்  அமர்ந்து பல விடயங்களைப்பேசிய படியிருந்தேன் . 

அவனது அண்ணன் கதிர்காமன்  அந்த மதியத்தில் தரையில்  உறங்கிக்கொண்டிருந்தான். சரி…,  அவன்  உறங்கட்டும்  என நினைத்து   எனது நண்பன்  புண்ணியலிங்கத்திடம் எனது காதல் விவகாரத்தையும் பேசினேன். நான் பேசியவற்றை கதிர்காமன் கேட்டு,  எனது தந்தையிடம்  தகவல் சொல்லி  எனது காதல் விடயத்தை நிலத்தில் போட்ட தயிர் சட்டியாக்கி விட்டான்.

அக்கால சீதனச் சந்தையில் மாப்பிள்ளைக்குப் பெரிய விலையிருந்தது.  என்னை தனது கையால் உணவு கொடுத்து வளர்த்த  ஆட்டுக்கிடாயாக நினைத்திருந்த எனது தந்தைக்கு அந்தத் தகவல்  அவரது  தலையில் இடியாக விழுந்தது.

ஆனாலும் காதலிப்பவர்கள் பிற்காலத்தில் அதை விட்டுவிட்டு,  சீதனத்துடன்  கல்யாணம் என வரும்போது மாறிவிடுவது வழக்கம்தானே என நினைத்து மவுனமாக  இருந்திருக்கிறார் .

ஒரு நாள் யாழ்ப்பாணத்தில் மழைக்காலம். மெதுவான மழைத்தூறல் . கஸ்தூரியார் ரோட்டில் நான் சைக்கிளைத் தள்ளியபடி வரும் போது சியாமளா எனக்குக் குடைபிடித்தபடி அருகருகே போய்க் கொண்டிருந்தோம்.

எனது கண்முன்  எமதர்மன் வந்தால்கூட சுகம் விசாரித்திருப்பேன்.  ஆனால்,   எனது தந்தையார் வந்து கொண்டிருந்தார். நான் எதுவும் பேசவில்லை . சியாமளாவுக்குச் சொல்லி வீணாகக் குழப்பத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. 

பர்தா அணியும் இஸ்லாமியப்  பெண்ணாக,  காற்சட்டைப்பையில் இருந்த கைக் குட்டையை உருவி எடுத்து தலையை மூடி குனிந்து கொண்டேன். இது எதுவும் தெரியாத  சியாமளா,       நடேசன்,  நடேசன் எனச் சொல்லியபடி நான் நனையாமல்  இருப்பதற்கு அருகில் இழுத்தபோது, இலங்கைப் போக்குவரத்து  பஸ் வண்டிபோல் புகையும் சூடுமாக தந்தையார் என்னைக் கடந்து சென்றார்.   நல்லவேளை நடுரோட்டில் விபத்து எதுவும் நடக்கவில்லை .

தந்தையார் எழுவைதீவில் தொடர்ச்சியாகப் கற்பித்து வந்தார் என்பதாலும்  அவர் பாடசாலை –  ரியூசன் எனப்போவதால்,  எங்கள் வீட்டிலிருந்த  சைக்கிளைப் பாவிப்பதற்கு எனக்கே முன்னுரிமை. தந்தையார் ஒரு கஞ்சப் பிசினாறி.  வீட்டிலிருந்து  டவுனுக்கு பஸ்சில் வந்தால் சில்லறை செலவாகிவிடுமென்பதால் நடந்தே செல்வார்.

அன்றைய தினம் நான் வீடு சென்றதும் வீட்டில் திருவிழா நடக்கும் என்பது தெரியும். மதியம் நல்ல ருசியோடு அம்மா தந்த  மீன் சோறு சாப்பிட்டு விட்டு நாலுமணிவரையும் நித்திரை . அம்மா வந்து தேநீருடன் என்னைத் தட்டி எழுப்பி                  “ தம்பி  உங்கப்பர் வந்து குதிக்கிறார்,  யாரோ பெட்டையோடு  திரிகிறாய் என்று. “ மெதுவாகச்  சொன்னார்

 “ சும்மா போங்கம்மா…  என்னோடு ரீயூசன் படிக்கிறது.  உடன் வந்தால் விலக்கிப்போக முடியுமா?“

அம்மாவின் முகத்தைப் பார்த்தேன். தெளிந்த நீரோடையான முகத்தில்,  ஒரு முத்தம்.  

“சே… போடா…  “

அம்மா என்னை முற்றாக நம்பிவிட்டார்.

எல்லா அம்மாக்களும் இப்படித்தானே!

வெளியே வந்து,  “அது அவனோடு படிக்கிற பெட்டை.  நீங்க ஏன் அவனைச் சந்தேகப்படுகிறீர்கள்.“ என்றது காற்றில் வந்தது.  வார்த்தையில்லை .  அம்மா வைத்திருந்தது  நம்பிக்கையா ? இல்லை  பாசமோ  எனப்புரிந்து கொண்டேன்

அன்று விடயத்தைச் சமாளித்தபோதிலும் கிளிப்பைக் கழற்றிய கிரனைட் நிச்சயமாக வெடிக்கும். எப்போது வெடிக்கும் என்பது மட்டும் தெரியாது.

கடைசித் தம்பி பிறந்ததும்  வந்த ஆஸ்த்துமா  அம்மாவிடமிருந்து பிரிய மறுத்து சொந்தங் கொண்டாடியது. வேப்பிலைப் புகையிலிருந்து,  ஆங்கில மருந்துப்புகைகள் எல்லாம் வேலைசெய்யாதபோது,  பிரிட்னிசலோன் என்ற  ஒரு மருந்து மட்டும் உதவியது.  தொடர்ச்சியாக பிரிட்னிசலோன் என்ற மாத்திரையைப் பாவித்ததால் நோயெதிர்பு குறைந்து அம்மாவுக்குக் காசநோய் வந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் . அக்காலத்தில் மூன்று தம்பிகளும் தங்கையும் பாடசாலை போய்வந்ததால் நானே அடைப்பைக்காரனாகினேன்.  அந்த மூன்று மாதங்கள் எடுத்த பயிற்சியினால்  இன்று வரையும் மீன்,   இறைச்சி என்பன வீட்டில் சமைக்கிறேன்.

—–

சென்னை

The day we see the truth and cease to speak is the day we begin to die -Martin Luther King Jr

நானும் விசாகனும் பாண்டிபஜாரில் இருந்த காலத்தில் நடந்த ஒரு விடயம் மனதை பலகாலமாக நெருடிக்கொண்டிருந்தது.

ஏன் இன்னமும் அந்த விடயம் என்னைப் பாதிக்கிறது?

அது ஒரு சகோதரனை பறிகொடுத்த தொடரும் சோகத்தின் நிழல்.

ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவரான பத்மநாபவை பொறுத்தவரை, நாம் அவரை இரஞ்சன் என அழைப்பதுதான் வழக்கம். 84 ஆம் ஆண்டில் ஒரு காலைநேரம் என்னையும் விசாகனையும் எமது அறையில் சந்தித்து ஒரு இருபது அல்லது இருபத்திரண்டு வயதான இளைஞனை எமக்கு அறிமுகம் செய்து அவரை ஊருக்கு (இலங்கை) அனுப்பும் வரையில் எமது அறையில் சில வாரங்கள் வைத்திருக்கும்படி கேட்டார்.

அவனது பெயர் புனைபெயர் என்பதால் அதை இங்கு எழுதவில்லை. அவனது தோற்றம் மிகவும் திடகாத்திரமானதுடன் வட இந்தியர் போன்ற நிறங்கொண்டவன். பார்த்தவுடன்; பொலிவூட் சினிமா நடிகனின் தோற்றம் மனதில் வந்து போகும். ஆனால் அவனது தமிழ் உச்சரிப்பில் இருந்து அவன் கிழக்கு மாகாணம் அதிலும் தென்கிழக்கு எனப்புரிந்து கொள்ள முடிந்தது. நாங்கள் அவனது ஊரையோ, உறவையே அறிய முற்படவில்லை. அவனும் எங்களிடம் சொன்னதும் இல்லை.

எங்களோடு வெளியே சாப்பிடுவதும் சினிமாப் படம் பார்ப்பதும் என இருந்தாலும் அவனது முகத்தில் ஒரு சோகத்தின் நிழல் படர்ந்திருந்தது. எங்களை ஒரு மூத்த சகோதரர்களாக நினைத்து பழகிவந்தான். அவன் கராத்தே கற்றவன் என்பது நாம் அறிந்து கொண்ட விடயம். உலோக சில்லுகளை எறிவது, கத்தியை வீசுவது போன்ற பாதுகாப்பு கலைகளில் பயிற்சி பெற்றவனாகவும் இருந்தான்.

அவனோடு இருந்த காலத்தில் சென்னையின் பல இடங்களில் நடு இரவு சினிமா பார்த்துவிட்டு இரவுவேளையில் நடந்து வருவோம்

அவன் எங்களை விட்டுச் சென்ற பின்பு மீண்டும், பத்மநாபா எம்மை சந்தித்து அவனை வைத்திருந்ததற்கு நன்றி சொல்லிவிட்டு ‘அவர் இந்தியாவில் பயிற்சி பெற்ற இஸ்லாமியத்தோழர். எங்களோடு சேர்ந்து பலகாலமாக இயங்கியவர். தற்பொழுது கிழக்கு மாகாணத்தில் நடந்த தமிழ் -முஸ்லிம் நெருக்கடியால் கொஞ்சம் மனம் கலங்கிவிட்டார். மேலும் ஊருக்கு போவதற்கும் விரும்புகிறார். அதுவரையும் அவரை மற்றத் தோழர்களோடு கலந்து இருக்கும்போது அவருக்கு மனக்கஷ்டமாக இருக்கலாம். அதுதான் உங்களுடன் சேர்த்துவிட்டேன்’ என்றார்.

பிற்காலத்தில் அந்த இஸ்லாமியத் தோழர் இஸ்லாமிய ஊர்காவல் படையோடு சேர்ந்து இயங்கியபோது ஈரோஸ் இயக்கத்தினரால் கொலை செய்யப்பட்டதாக அறிந்து மிகவும் மனவருத்தப்பட்டேன். பல தடவைகள் ஒரே உணவுப்பொதியில் ஒன்றாக சாப்பிட்டு கிட்டத்தட்ட மூன்று மாதம் வாழ்ந்திருந்தோம்.

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் ஒன்றாக வாழ்ந்த சிறுபான்மை சமூகங்களை இரண்டாக பிளந்ததும், அதற்கான ஆப்பை வைத்ததும் இலங்கை அரசாங்கமோ அல்லது விடுதலைப்புலிகளே அல்ல. இந்த இருதரப்பிலும், இலகுவாக நாம் சேறை வீசினால் அங்கு அழுத்தமாக ஒட்டிக்கொள்ளும். ஏனென்றால் அவர்கள் சென்னை மாநகரத்தில் இரயில்வே தண்டவாளத்தருகே தொடர்ச்சியாக அமைந்திருக்கும் குட்டி சுவர்கள் போன்றவர்கள். அந்தச் சுவரின் அருகே குடிசையில் வாழும் பெண்கள் மாட்டுச்சாணியை வட்டியாகத் தட்டி உலர்த்துவதற்கு பயன்படுத்துவார்கள். ஏற்கனவே அசிங்கமான வசனங்களும் சுவரொட்டிகளில் எழுதப்பட்டிருப்பதால் அதில் எறியப்பட்ட சாணி மேலும் அசிங்கப்படுத்த முடியாது.

84 ஆம் ஆண்டு சித்திரையில், கிழக்குமாகாணத்தில் ,அம்பாறையில் அமைந்த காரைதீவு என்ற கிராமத்தில் முதன்முதலாகக் கலவரம் வெடித்தது. இதில் முஸ்லிம்களின் பங்கு எதுவும் இல்லை என என்னால் கூறமுடியாவிட்டாலும் – அக்காலத்தில் ஆயுதம் தரித்திருந்த ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி மற்றும் தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த காரைதீவு இளைஞர்கள் பங்குபற்றியதால் சாதாரண மக்களிடம் உருவாகிய பிரச்சினை இரு இனங்களிடையே உருவான நெருக்கடியானது. இதற்கு முன்பாக பல இஸ்லாமிய இளைஞர்கள் முக்கியமாக புளட் மற்றும் ஈ பி ஆர் எல்; எஃவ் என்ற இரு இயக்கங்களில் கிழக்கு மாகாணத்தில் இணைந்திருந்தது மட்டுமல்ல, இந்தியப் படைகளிடமும் பயிற்சியும் பெற்றார்கள்.

அவ்வாறு பயிற்சி பெற்ற இளைஞர்கள் அந்தச் சம்பவத்தின் பின்பு மனக்கசப்படைந்து இருந்தபோது அக்காலத்தில் சென்னையில் இலங்கை பிரதி தூதுவர் ஒருவரால் இளைஞர்கள் இயக்கங்களுக்கு எதிராக இயங்குவதற்கு கிழக்கு மாகாணத்தில் முக்கியமாக அம்பாறை மாவட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்டார்கள். இந்த கைங்கரியத்தில் சில கிழக்கு மாகாண அரசியலவாதிகளும் பங்கு பற்றினார்கள். ஏற்கனவே கிழக்குமாகாணத்தில் இயக்கங்களில் சேர்ந்து, பின்னால் விலகியவர்கள் பலர் ஊர்காவல்படைகளில் சேர்ப்பதும், அவற்றை ஒருங்கிணைத்து பயிற்சியளிப்பதிலும் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டனர். அப்படியான அமைப்புகள் மத்தியகிழக்கில் உள்ள பற்றா (Fatah) மற்றும் ஜிகாத் (Jihad) என்ற பெயரில் செயல்பட்டார்கள். இவைகளில் சாதாரணமான இஸ்லாமிய மக்கள், பங்குஏற்ற மக்கள் அமைப்பாக இல்லாதபோதும் – இவைகள் இரு இனங்களைப் பிரிப்பதற்கு பாவிக்கப்பட்டது.

இப்படியாக இந்த அமைப்புகள் எதிர்ப்புரட்சி அமைப்பாக வளர்க்கப்பட்டது. இந்தப் போர்முறையை கொண்டு வந்தவர் அக்காலத் தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி. பிற்காலத்தில் இது மிகவும் பிரயோசனமான புலிப்பொறியாக மாறியது. அவரது முயற்சி உண்மையில் மிகவும் சாணக்கியமானது. இதற்கான பாராட்டுதலை அவர் பிற்காலத்தில்கூட பெறவில்லை. அமைச்சர் லலித் அத்துலத் முதலி மிகவும் சாணாக்கியமானவர். இந்தியாவின் தலையீடு இல்லாமல் இருந்தால் விடுதலைப்புலிகள் 2009 வரை நீடித்திருக்க முடிந்திராது. மேலும் இவ்வளவு தமிழர்கள் சிங்களவர் இறந்திருக்க நேர்ந்திராது.

பற்றா (Fatah) மற்றும் ஜிகாத் (Jihad) அமைப்புகள் செய்த செயல்களுக்கும் பல படிமேலே சென்று, புலிகள் பலமடங்கு பாதகமான செயல்களான காத்தான்குடி பள்ளிவாசல் கொலைகள், வடபகுதியில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றுதல் என்பவற்றில் ஈடுபட்டு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பயங்கரவாதிகள், இன அழிப்பாளர் என்று தங்களுக்கு தாங்களே சூனியம் வைத்துக் கொண்டார்கள்.

——

தமிழ்நாட்டில் நான் வாழ்ந்த காலத்தில் பலர் பல்வேறு வயதில், பின்புலத்தில் எனது நண்பர்கள் ஆகினார்கள். அவர்களது நினைவுகள் என் இதயத்தில் ஆழமானவை. அவர்களில் முக்கியமானவர் தோழர் பாண்டியன் ஈ பி ஆர் எல் எஃவ் இயக்கத்தை சேர்ந்தவர். இவரது குடும்பம் திருகோணமலையில் இருந்து இடம்பெயர்ந்து சென்னையில் குடியிருந்தவர்கள். பாண்டியன் அக்காலத்தில் என்னிலும் பதினைந்து வயது மூத்தவராக இருந்த போதிலும், எமது நட்பு நெருக்கமானது. வல்வெட்டித்துறை பாரம்பரியத்தைக் கொண்ட இவர் – திருகோணமலையில் உதவி மேயராக இருந்தவர். இவரது மனைவி வல்வெட்டித்துறை. இவர்களுக்கு எட்டு ஆண்குழந்கைள் இருந்திருக்க வேண்டும். ஊரில் வசதியாக வாழ்ந்தவர்கள். இவர்களின் ஒரு மகன் அக்காலத்தில் ரெலோ இயக்கத்தில் சேர்ந்திருந்தான். மற்றைய ஒரு மகன் கப்பலில் வேலை செய்தான்.

சென்னையில் ஒரு நாள் இவரது வீட்டிற்குச் சென்று மாலை உணவருந்தியபோது அவரது மனைவி சொன்னார் ‘நம்முடைய இயக்கப் பொடியள் மதியம் வந்து சாப்பிட்டு விட்டுச் சென்றார்கள்’

எனக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. தோழர் பாண்டியன் ஈபிஆர் எல் எவ்ஃ. ஆனால் மகன் ரெலோ இந்த வகையில் அவரது மனைவி “நம்மடை இயக்கமென்பது” யாரை குறிக்கிறது…?

தாங்க முடியாத மனக் குழப்பத்தை தவிர்க்க அவரை தனியே அழைத்துக் கேட்டேன்.

‘உங்கள் மனைவி நம்மட இயக்கமெனச்சொல்வது யார் தோழர.;…?

‘அவ சொல்வது விடுதலைப்புலிகள் இயக்கத்தை’

எனக்கு அதிர்ச்சி தாங்க முடியவில்லை.

அவர் மேலும் சொல்லிய விடயங்கள் ஆச்சரியமளித்தன.

ஏற்கனவே தனது மகன் உட்பட வல்வெட்டித்துறை இளைஞர்கள் எண்ணூறுக்கு மேற்பட்டவர்கள் கப்பலில் வேலை செய்கிறார்கள் எனவும், இவர்கள் மாதம் தலா பத்து பவுண்ட்கள் விடுதலைப்புலிகளுக்கு வழங்குவதாகவும் கூறினார்.

‘உங்களது வல்வெட்டித்துறையினர் எல்லோரும் விடுதலைப்புலிகளின் பின்னால் நிற்கும்போது நீங்கள் மட்டும் ஏன் ஈ பி ஆர் எல் எஃவ் வோடு இருக்கிறீர்கள்…?;”

‘என்ன செய்வது…? இந்த நாபாவோடு பேசித்தொடர்பு வைத்தபடியால் அந்த மனுசனை விட்டுப் போகமுடியவில்லை.’

ஐம்பது வயது இருக்கும்… ஆறு அடிக்கும் மேல் உயரமான பாண்டியன் முப்பத்தைந்து வயதான பத்மநாபவைப் பற்றி பேசிய விதம் எனக்கு மேலும் ஆச்சரியம் அளித்தது.

இந்தச் சம்பவம் மேலும் ஒரு உண்மையை புரியவைத்தது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அசுர வளர்ச்சிக்கு கோழித்தீனியில் கலந்த குறோத்ஓமோன் போன்ற புறக்காரணிகள் தவிர்ந்த சில அகக்காரணிகள் இருந்தன. அதில் முக்கியமானது வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்களது ஒருமித்த பொருளாதார ஆதரவுடன் அவர்கள் காலம் காலமாக சேர்த்து வைத்திருந்த சட்டத்தை மீறிய விடயங்களை செய்த தொழில்நுட்பம் அவர்களால் விடுதலைப்புலிகளிடமும் அப்படியே மாற்றம் (Skill transfer) செய்யக் கூடியதாக இருந்தது.

பிரித்தானிய காலனி ஆட்சியில் மட்டுமல்ல ஏன் அதற்கு முன்பே… வல்வெட்டித்துறையினர் இந்தியா – இலங்கைக்கு இடையில் கடல் வாணிபம் செய்தவர்கள். நியாயமாக அவர்கள் செய்த வாணிபம் பிரித்தானியர் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் சுதந்திரம் கொடுத்தபின்பு சட்டவிரோதமாகியது. அவர்கள் இலங்கை – இந்திய சுதந்திரத்தின் பின்பாக உருவாகிய சட்டத்தை மதிக்கவில்லை. மேலும் நிலத்தின் சட்டம், நீரில் வாழும் அவர்களைப் பாதிக்காது என்று கூட அவர்கள் நினைத்து இருக்கலாம். இலங்கையின் நிலப்பகுதியில் வாழ்ந்தாலும் மனதளவில் மட்டுமல்ல, பொருள் நுகர்வதிலும் தமிழ்நாட்டவர்களைப்போல் தென்பட்டார்கள்.

77ஆம் ஆண்டில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டு இருந்தபோது நான் உட்பட பத்து மாணவர்கள் உடுப்பிட்டியில் தமிழர் கூட்டணியினரால் நிறுத்தப்பட்டு தேர்தலில் நின்ற சிறுபான்மைத் தமிழர் இராஜலிங்கத்திற்கு (அக்காலத்தில் தமிழ்கட்சிகள் பாவித்த சொற்பதம் எனக்கு விரல் கூசினாலும் பாவிக்கின்றேன்) சார்பாக பத்து நாட்கள் பிரசாரம் செய்தோம். அப்பொழுது வல்வெட்டித்துறையின் ஒரு பகுதியான பொலிகண்டி ஊரில் இருந்த ஒவ்வொரு வீடாக சென்றோம். ஒவ்வொரு வீட்டிலும் நான் கண்ட பொருட்கள் பல இந்தியாவைச் சேர்ந்தவை. சுவர்களில் இருந்த உருவப்படங்களில் இருந்தவர்கள் இந்தியத் தலைவர்கள். இப்படி இருந்தது ஆச்சரியமில்லை. அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் பலருக்கு தமிழ்நாட்டு மோகமிருந்தது.

இவற்றுக்கும் மேலாக எனக்கு அதிர்ச்சியளித்த விடயம் என்னவென்றால் எங்களுடன் வந்து பத்துநாளும் வழிகாட்டியாக நடந்த பதினைந்து வயது சிறுவன் கடைசிநாள் என்னிடம் சொன்னதுதான்.

‘நீங்கள் கண்டியில் சிங்களவர்களுடன்தானே இருக்கிறீர்கள.;..? பயமில்லையா…?

‘பிரச்சினையில்லை. ஏன் கேட்கிறாய்?.’ என்றபோது சங்கு மார்க் வெள்ளை சாரம் கட்டியிருந்த அவன் தனது மடியில் இருந்து கறுப்பான சிறிய ரிவோல்வரை எடுத்தபடி ‘என்னிடம் ஒரு ரிவோல்வர் இருக்கு. தேவைப்பட்டால் எடுத்துக்கொண்டு செல்லுங்கள். யாராவது சிங்களவன் உங்களோடு சேட்டைவிட்டால் உதவும்’ என்று எனக்கு நீட்டினான.

‘நான் தேவை வராது என நினைக்கிறேன் ‘ எனச்சொன்னவாறு எனக்கு வந்த அதிர்வை சமாளித்தபடி பின்வாங்கினேன்.

அவனது முகத்தில் தெரிந்த ஏமாற்றம் இன்னமும் நினைவில் தங்கியுள்ளது.

அவனைப் பொறுத்தவரை கண்டி எதிரிகளின் பிரதேசம். எதிரிகள் மத்தியில் நாங்கள் வசிப்பதாக அவனது எண்ணம் இருந்திருக்கவேண்டும்.

ஏராளமான வல்வெட்டித்துறை வீடுகள் கடத்தல் பொருட்களை வைப்பதற்காக பங்கர்களுடன் கட்டப்படவை என வல்வெட்டித்துறை நண்பனே சொல்லியிருந்தான்.

இலங்கை சுதந்திரம் அடைந்தபின்பு வட இலங்கையில் முதல் இராணுவ முகாம்களாக பலாலியிலும் பின்பு ஆனையிறவிலும் உருவாகியது. அவைகள் யாழ்ப்பாணத்தமிழரை அடக்குவதற்காக ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டதல்ல. வல்வெட்டித்துறை கடத்தலைத் தடுக்கவும் இந்தியாவில் இருந்து தோணியில் இலங்கை வருவதைத் தடுப்பதற்குமே இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டன.

தமிழ்நாட்டவர் இலங்கை வருவதை தடுக்கவும் வல்வெட்டித்துறை கடத்தல்காரரை பிடிப்பததற்கும் உருவாகியவை என்பது கசப்பான இரு உண்மைகள்.

சரித்திரகாலமாக நிலத்தில் உள்ள சட்டங்களை புறக்கணித்த இடமான வல்வெட்டித்துறையில் இருந்து எங்களது விடுதலைப் போராட்ட தலைவர்கள் உருவாகியது ஒரு முரண்நகையா…? இல்லை நியதியா…?

வெளிநாடுகளில் உருவாகிய விடுதலை இயக்கங்கள் குறைந்த பட்சம் தங்களுக்குள் சில விதி செய்வார்கள். ஆனால் விடுதலைப்புலிகள் போட்ட விதிகளையே இவர்கள் மீறியது எப்படி…?

இயக்கத்தவர்கள் திருமண விதிகளில் இருந்து- பாதுகாப்புப் படையிடம் சரணடையாமல் தற்கொலை செய்வது போன்ற விதிகள் எல்லாம் மீறப்படுவதற்காகத்தானா?

மெல்பன்

அக்காலத்தில் நான் மெல்பன் வந்தபோது  நான் கற்ற இந்துக்கல்லூரியில் படித்த நண்பன் ரவீந்திரராஜ் பல் வைத்தியராக  அப்பொழுது சாம்பியாவிலிருந்து  அவுஸ்திரேலியா வந்து சில வருடங்கள்  தனியாகவும் , பின்பு குடும்பத்துடனும், மெல்பனில் வசித்ததால், புதிதாக   வீடு வேண்டுவதற்கான புறநகருக்கான    ரவியின் சிபார்சைக் கேட்டேன் 

 “ மெல்பனில் நீ வீடு  வாங்கினால் கிளன்வேவெலியில் வாங்கு. அங்கு தரமான  அரச பாடசாலைகள் உள்ளன  “ என்றான்.

நான்  வார்ணம்பூல் மற்றும்  சிட்னியில்  இருந்த காலங்களில் ரவீந்திரராஜா  மெல்பனில் இலங்கைத் தமிழர்கள் புடைசூழ ஒரு ஊர்  விதானைபோல் பலருடனும்  தொடர்பில்  இருந்தான்.

அதைவிட இங்குள்ள சிவா விஷ்ணு கோவிலின்  நிர்வாகத்தில் நேரடியாக ஈடுபடாதபோதிலும்,  தன்னார்வத் தொண்டனாக  வேலை செய்தபடியிருந்ததைப் பார்த்தேன் . இப்படியான  ஒருவரது அறிவுறுத்தலின்படி வீடு வாங்க  முனைந்தபோது கிளன்வேவெலி பிரதேச வீடுகள் எல்லாம் எமது நிதிநிலைக்கு கட்டுப்படவில்லை.  இறுதியில் வீலேஸ் கில் என்ற பக்கத்து நகரில் வாங்கினேன்.

நாங்கள் வாங்கிய அந்த வீட்டின்  விலை குறைந்திருந்ததன்  சூக்குமம்  ஒன்றைச் சொல்லவேண்டும் . மற்றவருக்கு ஏதாவது விதத்தில் உதவும் என்ற நன்நோக்குடனேயே எனது வாழ்வில் நடந்தவற்றை எழுதுகிறேன்.  அந்த வீட்டில் கால் நூற்றாண்டுகளாக இருந்த பிரித்தானியக் கிழவர்  சுருட்டு புகைப்பார். அந்த சுருட்டுமணம் தரைவிரிப்புகளிலிருந்தது.  பல முறை சுத்தப்படுத்தியும் போகவில்லை .

 அது சாதாரண மணமா ? வெள்ளிவிழாக் கொண்டாடியது அல்லவா!

அவர்கள் வயதானவர்கள். வீட்டை  விற்று விட்டு அவசரமாக  இங்கிலாந்து போக இருப்பதால் தரை விரிப்பை புதிதாக மாற்றுவதற்குச் செலவிட விரும்பவில்லை . இரண்டு முறை ஏலத்தில் போகாததால் அந்த வீட்டை நாங்கள் கேட்ட விலைக்குத் தந்தார்கள்.

அந்த வீட்டிலிருந்து  எமது இரண்டு பிள்ளைகளும் பாடசாலைக்கு ஐந்து நிமிடத்தில் நடந்து செல்லமுடியும் என்பதால் அந்த வீடு எங்களுக்குப் பொருந்தியது . நாங்களும் கால் நூற்றாண்டுகள் அந்த வீட்டிலிருந்தோம் .

விக்ரோரியா மாநில  தமிழ் அகதிகள் கழகத்தில்  நான் செயலாளராகப் பதவியிலிருந்த நாட்களில்,  நடந்த  ஒரு முக்கிய  விடயத்தை இங்கு சொல்லாது கடந்து போக முடியாது.  அந்த விடயம் நடந்தகாலத்தின்  சூழ்நிலையை விவரிக்காது விடயத்தைச் புரிந்துகொள்ள முடியாது . காலம் நமக்கு ஒருமுறைதான்  கதவைத் தட்டும் . ஆனால்,  அதை உள்ளே அழைப்பதும் விரட்டுவதும்  நம்மைப் பொறுத்தது.   பொது வாழ்விலும் தனிபட்ட  வாழ்விலும் நான் பெற்ற அனுபவம். 

 1989 ஜூலை 4 ஆம் திகதி  பீகிங்கில் உள்ள  தியானமன் சதுக்கத்தில் ஆர்பாட்டம் செய்த  பல மாணவர்கள்  சீன இராணுவத்தால் கொலை செய்யப்பட்டபோது உலகமெங்கும் இருந்து கண்டனம் வந்தது. அதன் தொடர்ச்சியாக  அக்கால அவுஸ்திரேலியப் பிரதமர்  பொப் ஹாக் அந்த நிகழ்வைக் பார்த்து அழுதபடி சீனாவைக் கண்டித்து விட்டு , அக்காலத்தில் அவுஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் படித்த 4000  இற்கும் மேற்பட்ட சீன மாணவர்களுக்கு அஸ்திரேலியாவில் சில வருடங்கள்  தங்குவதற்கு  விசா கொடுப்பதாக உறுதி அளித்தார் . அதேபோன்று  1992 பழைய யூகோஸ்லாவியாவின் மாநிலமாகிய பொஸ்னியாவில் நடந்த போரின்போது அகதியான  பொஸ்னிய முஸ்லீம்கள் பலரை  அவுஸ்திரேலியாவிற்கு அகதியாக வரவேற்று அவர்களுக்கு இடைக்கால தங்குதலுக்கான விசா அளித்தார்.

தமிழ் அகதிகள்  கழகத்தில் செயலாளராக இருந்த நான் இவற்றை  அவதானித்தபடியிருந்தபோது,  எனது நண்பரும்  தொழிற்கட்சி உறுப்பினருமான   விக்கிரமசிங்கம்  எனக்கு ஒரு தகவல் தந்தார்.  அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் செனட்டர் நிக் போல்கஸ்,  மெல்பனில் ஒரு ரேஸ்ட் ஒஃப்  இந்தியன் ஃபிளேம் (Taste Of Indian Flame   என்ற மலேசிய உணவகத்திற்கு வரவிருப்பதாகவும்,  அவரை சந்திக்க ஒழுங்கு செய்வதாக  என்னை  அதற்கு வரவழைத்தார்.

வேலையிலிருந்து அவசரமாக வீடு திரும்பி உடைமாற்றிவிட்டு அங்கே  சென்றபோது விக்கிரமசிங்கம் மற்றும்  விக்டோரிய கலாச்சாரக் கழக உபதலைவர் புஸ்பராஜாவுடன் அங்கு வந்திருந்தார்.   விக்கிரமசிங்கம் என்னை அமைச்சருக்கு அறிமுகப்படுத்தினார். அப்பொழுது அவரிடம்,    “  ஏற்கனவே சீன மாணவர்களுக்கும் பொஸ்னிய அகதி மக்களுக்கும் உருவாக்கிய  விசேட சலுகையை,  ஏன் பல வருடங்களாகப் போர் நடந்துகொண்டிருக்கும் இலங்கைக்குத் தரமுடியாது  “ என்று  கேட்டபோது,   அவர்  சிரித்தபடி,  அவரது  ஆலோசகரை  எனக்கு அறிமுகப்படுத்தி  “மேல் மாடி அறையிலிருந்து பேசுங்கள்”  என்றார்.

நான் அந்த ஆலோசகரிடம்  இலங்கைத் தமிழர் பற்றிய நிலையை எடுத்துரைத்தேன்.  அப்பொழுது அவர் அதுபற்றி பரிசீலிப்பதாகச்  சொன்னார்  “ஆனால் இதை இனத்திற்குத் தரமுடியாது,  ஒரு நாட்டுக்கே தரமுடியும் “  என்றபோது,  நான் வருடத்திற்கு 1000 விசேட நிரந்தர விசாக்கள்  தருமாறு  கேட்டு,  அதை எழுத்தில் சமர்ப்பித்தேன்.   இறுதியில் வருடத்திற்கு 250 பேருக்கான விசேட அனுமதிக்கான (Special Humanitarian Visa) திட்டம் வந்தது.

 ஐந்து வருடங்கள் தொழிற்கட்சி ஆட்சி முடியும்வரை அந்தத் திட்டம் தொடர்ந்தது . இரத்த சம்பந்தமான உறவில்லாத , அண்ணளவாக 1000 இலங்கைத் தமிழ்க்  குடும்பங்கள் இதன் பிரகாரம்  அவுஸ்திரேலியாவிற்கு வந்தார்கள். தொடர்ச்சியாக இந்தத் திட்டத்தை  லிபரல் அரசு வந்தபோது நடைமுறைப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் இருந்தாலும் அதைச் செய்வதற்கு இங்குள்ள தமிழர்களே  இடையூறாக இருந்தர்கள்.  என்னையும்  அந்த  தமிழ் அகதிகள் அமைப்பிலிருந்து தூக்கி எறிந்தார்கள்.

எப்படி எறிந்தார்கள் என்பது சிரிப்பானது. 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: