
சிவவீரசிங்கம் மாஸ்ரரின் ரியூசன் வகுப்புத் தொடங்கியபோதும் எனது சிந்தனை ஒருமுகப்படவில்லை.
இரப்பையில் அமிலம் காட்டாறாகியது. இதயம் வெளியேவர, அவசரமாக நெஞ்சாங் கூட்டைத் தட்டியது.
என்னை மீறிய பரபரப்பில் அடிக்கடி பின்னால் திரும்பிப் பார்த்த படியிருந்ததேன்.
நல்ல வேளை கடைசி வரிசையில் நானிருந்தேன். மற்றவர்களைக் காணவில்லை.
புன்னகை தவழ, இளம் பச்சை சட்டையோடு நான் எதிர்பார்த்தபடி சிட்டுக்குருவி உள்ளே வந்தபோது எனது இதயத்தில் இதுவரை மையம் கொண்ட புயல் அமைதி கொண்டது. முகத்திலிருந்த புன்னகை ‘தம்பி நீ காதல் பாடத்தில் பாஸாகிவிட்டாய்’ என்பதை ஒலிபெருக்கியில் அறிவித்தது.
ஒரு பாடத்தில் நூறு புள்ளிகள் வாங்கியபின் அதற்கு மேல் எடுக்க முடியாது என்ற மனத்திருப்தியில் கழுத்தைத் திரும்பாமல் பாடத்தைக் கவனித்தேன் . ஆனால், மனம் நிலை கொள்ளவில்லை.
எனக்கு பதினெட்டு வயதாகவில்லை. மூன்று தம்பிகள், தங்கச்சி. அம்மா தொடர்ச்சியான நோயாளி . ஒரு சாதாரணமான தமிழ் வாத்தியாரின் மகன். நாட்டில் அக்காலத்திலே மொழி ரீதியான தரப்படுத்தல். இப்படியான எந்த நினைவுகளுமற்று வானத்தில் சிறகடித்தபடியிருந்தேன்.
வகுப்பு முடிந்தபின்பு வெளியாலே நண்பர்களோடு வந்தபோது, சிரித்தபடி எதிரே வந்து “உங்கள் கொப்பி “ எனத் தந்தபோது எனது விரல்கள் பெண் விரல்களால் முதன் முறையாக அழுத்தப்பட்டது. அப்பொழுது பரீட்சை முடிவுகள் கையில் தரப்பட்டது போன்ற உத்தரவாதம் கிடைத்தது.
எனது நண்பன் கணேசன் சைக்கிளிலிருந்தபடி , என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டு “ ஒரு நாள் வரவில்லை அதற்குள் இப்படி நடந்து விட்டதா ? எப்பொழுது எனக்கு விருந்து? “ என்றான்.
“பார்த்து விட்டு விருந்துக்கு அழைக்கிறேன் “ என்றேன் .
வீடு செல்ல நான்கு மைல் சைக்கிள் பயணம் , மனதளவில் ஜன்மாந்திரங்கள் போகவேண்டிய தூரமாகப் பெருகியது. வீடு சென்று கொப்பியை விரித்தபோது மஞ்சள் தாளில் ஐம்பது வார்த்தைகளில் எழுதப்பட்ட கடிதமிருந்தது .
எனது காதல் வெற்றியைக் கொண்டாட இந்துக் கல்லூரி விடுதியில் இருந்தகாலத்தில் உணவுண்ட கடைக்கு நண்பர்களுடன் சென்றேன் . அந்த உணவு என்னை புவியின் விளிப்புக்கு அழைத்துச் சென்றது. யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவர் விடுதியில் சைவ உணவு மட்டும்தான் கிடைக்கும். தீவுப்பகுதிகளில் மீன், நண்டு, இறால் எனச் சாகர புஷ்பங்களை உண்டு வாழ்ந்த எங்களது பொச்சத்தை எப்படித் தீர்ப்பது?
அசைவ உணவிற்கான ஏக்கத்தைத் தீர்க்க வெளிக்கடைகளே ஒரே வழியாக இருந்தது.
விடுதி அதிபரின் சிக்கன கொள்கையின் விளைவால் யாழ்ப்பாண பழைய மார்க்கட்டில் மலிவு விலையில் வேண்டப்படும் மரக்கறிகளான வெண்டிக்காய் கத்திரிக்காயின் உள்ளே உள்ள புழுக்களை உண்பது மூலமே தீர்த்துக் கொள்ள முடியும். ஓரிரு நாட்களில் கத்தரிக்காய் பால் கறியில் எலிகள் விழுந்து எங்கள் பொச்சத்தைத் தீர்க்கும். ஆனால் என்ன? எலி மயிர் பார்க்க அருவருப்பானதால் சாப்பாட்டைத் தூக்கி எறிந்து விடுவோம்.
இதனால் வார இறுதியில் ஐந்து லாம்பு சந்திக்கு அருகில் உள்ள ஹமீதியா ஹோட்டல் என நாமகரணம் சூட்டப்பட்டு எங்களைப் பொறுத்த வரையில் மொக்கன்கடை என்ற உணவகத்திற்குச் செல்வோம். இந்தப் பழக்கம் விடுதியை விட்டுச் சென்ற பின்னும் நீடித்தது. புட்டும், மாட்டுக் குறுமாவும் நாக்கில் எச்சியூற வைக்கும். பிஸ்த்தா என்ற மாட்டு இறைச்சித்துண்டு மிக அருமையாக இருக்கும். விலை விபரமும் எங்கள் கைக்காசுக்கு அடக்கமாக இருக்கும் .
நண்பர்கள் சிலரோடு சென்று ஹமீதியா ஹோட்டலில் சாப்பிட்ட போது, எனது அபிமான பிஸ்த்தா பரிமாறப்பட்டது. அப்பொழுதே அதைக் கடிக்கும் போது சிலந்தி பின்னிய நூல் போல் இழுபட்டது. பழைய இறைச்சி என எனக்குச் சந்தேகம் வந்தது. ஆனாலும் ஆகாமியம் விட்டு வைக்கவில்லை சரியாக ஏழு நாட்களுக்குப் பின் சல்மனெல்லா என்ற அழகிய பெயரைக்கொண்ட பக்ரீரியாவால் ஏற்படும் தைஃபொயிட்டு (நெருப்புக்காய்ச்சல்) நோய் என்னைத் தாக்கியது.
இரண்டு கிழமை வைத்தியசாலையிலிருந்து மிகவும் கஷ்டப்பட்டேன். சமைத்தவன் பின்பக்கத்தில் கையை வைத்து விட்டு, கையை கழுவாமல் , அதே கையால் மசாலா தடவியதால் வந்த வினை என அக்காலத்திலே எனக்குப் புரிந்துவிட்டது.

அந்தக் காலத்தில் சமயம் படிப்பித்த வாத்தியாரின் சொல்லுக்கு ஏற்ற என்பு தோல் போர்த்த உடல் என்ற படிமமாக வெளிவந்தேன். என் உடலிலிருந்த தசை கொழுப்பு முதலான பகுதிகள் என்னிடம் சொல்லிக்கொள்ளாமல் மறைந்துவிட்டன. தலைமயிர் கத்தையாக வசந்த காலத்து லப்ரடோர் நாயின் உடல் மயிர்போல் கையோடு வந்தது. உடல் நிறையில் 22 வீதம் விடைபெற்று வெளியேறியபடியால் ”ஓமகுச்சி” போல் வெளியே வந்தேன்.
அக்காலத்தில் ஓட்டுமடத்தில் டாக்டர் கங்காதரனின் வைத்தியசாலையில் குளோரோமைசிட்டினால் உயிர்பிழைத்தேன்
தைஃபொயிட்டு வருவதற்கு சில வாரத்திற்கு முன்பு காதல் வயப்பட்டு காதலியைத் தேடி இருந்தேன். வைத்தியசாலையிலிருந்து வந்தவுடன் வீட்டில் சொல்லிக் கொள்ளாமல், ஒருவரும் இல்லாத வேளை பார்த்து துவிச்சக்கரவண்டியை எடுத்துக் கொண்டு இரண்டு கிலோமீட்டரில் ஒரு ரியூசன் வகுப்பில் படிக்கும் அவளைத் தேடிச் சென்றேன்.
இரண்டு கிலோமீட்டரைத் தாண்டுவதற்குள் 16 தடவைகள் வண்டியை நிறுத்தி இளைப்பாறினேன். இந்தத் தூரத்தை துவிச்சக்கரவண்டியில் கடக்க எடுத்த நேரம் 45 நிமிடமாகும்.
வண்டியில் செல்லும் போது என் காதலி என்னை அடையாளம் காண்பாளா? சில வாரங்கள் மட்டுமே ஆன புதிய காதலானதால் எனது காதலியின் மனம் மாறிவிடுமா? நான் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவேனா? எனப் பல கேள்விகள் குமிழியிட்டாலும், அந்தக்காலத்திலே தன்னம்பிக்கை சிறிது அதிகமாக இருந்தபடியால், அவளைக் காணச் சென்றேன். அவளது முகத்தில் என்னைப் பார்த்து வந்த சிரிப்பைப் பார்த்த போதுதான் எனக்கு மனம் ஆறுதல் அடைந்தது . சல்மனல்லாவால் என் உயிரை எடுக்க முடியவில்லை. காதலையும் எனது பதினெட்டு வயதில் தோற்கடிக்க முடியவில்லை.
சென்னை
1984 சித்திரை மாதத்தில் நான் இந்தியாவுக்கு சென்றிருந்த காலத்தில் (ENLF) என்றொரு அரசியல் கூட்டணி அக்காலத்து ஆயுத இயக்கங்களான தமிழ் ஈழவிடுதலை இயக்கம் (TELO) ஈழப்புரட்சிகர முன்னணி (EROS) மற்றும் ஈழமக்கள் புரட்சிகர முன்னணி(EPRLF) ஆகிய மூன்றிற்கும் இடையே உருவாகியிருந்தது. இந்தக்கூட்டணியின் தலைவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தலைவர் கருணாநிதியை சந்தித்து படமெடுத்துக்கொண்டனர். இந்தப் படம் தமிழக பத்திரிகைகள் யாவற்றிலும் பிரசுரமாகியிருந்தது.
இந்த நிகழ்வு அக்காலத்தில் பலருக்கும் மகிழ்வைக் கொடுத்தது. எனினும், இந்த நிகழ்வையிட்டு கவலை கொண்டவர்களையும் ஒன்று சேர்க்க உதவியது.
அத்துடன் இந்தக் கூட்டணியினர் அவ்வேளையில் தமிழக முதலமைச்சர் எம்.ஜி. இராமச்சந்திரனின் ஆதரவை இழந்தது என்றும் பல கதைகள் அக்காலத்தில் பேசப்பட்டது. எனக்கும் அந்தச்செய்தி காற்றுவாக்கில் எட்டியது.
இந்தக் கூட்டணி இந்திய உளவு (RAW) அமைப்பால் உருவாக்கப்பட்டது என்றும் பிற்காலத்தில் சொல்லப்பட்டது.
(ENLF) கூட்டணியில் அதன் தலைவர்களுக்கிடையே தனிப்பட்ட ரீதியாக ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசுவதற்கான சுமுகமான உறவும் இருந்தது. இந்த உறவிற்கு அக்காலத்தில் பத்மநாபாவே காரணம் என்பதை பிற்காலத்தில் தெரிந்து கொண்டேன்
இந்த இயக்கங்கள் கூட்டணியாக இருந்த போதிலும் அதிலிருந்தவர்களிடம் பரஸ்பரம் நம்பிக்கையும் தோழமையும் இந்தியாவிலோ இலங்கையிலோ இருந்ததாகத் தெரியவில்லை. சந்தேகம்தான் இவர்களைப் பற்றிய பொது நோயாக இருந்தது. அதற்கான மருத்துவம் அக்காலத்தில் எவரிடமும் இருக்கவில்லை. இயக்கங்களிற்கிடையே மட்டுமல்ல ஒவ்வொரு இயக்கத்துள்ளேயும் இருந்த இந்த நோயின் கூறுகளை நான் கண்டும் கேட்டும் இருந்தேன். அவைகள் பின்னால் வரும்.
இந்தக் கூட்டணியில் இருந்தவர்களுடன் காலம் தாழ்த்தி – அதாவது 84 ஆம் ஆண்டு இறுதியில் விடுதலைப்புலிகள் உறவு கொண்டார்கள். “நாபா, நான் சிறியையோ, பாலகுமாரையோ நம்பி வரவில்லை. உன்னைத்தான் நம்பிவந்தேன் “ என பிரபாகரன் அன்று நாபாவைப் பார்த்து கூறிய வசனத்தை பிற்காலத்தில் பிரபாகரனே மறந்துவிட்டார். அந்த வார்த்தைகள் அக்காலத்தில் எனக்கு ஈழ மக்கள் பரட்சிகர முன்னணியில் இருந்தவர்களால் பிரபாகரனின் நாவில் இருந்து வெளிவந்து காற்றில் கலக்கும்போது எனக்கும் சொல்லப்பட்டது.
விடுதலைப்புலிகளின் இணைவின் உள்நோக்கம் தமிழ் மக்கள் விடுதலை இயக்கம் என்ற புளட்டை இந்தக் கூட்டணிக்கு வெளியே வைத்து தனிமைப்படுத்துவதுதான் என்பது அக்காலத்தில் அரசியல் தெரியாதவர்களுக்கும் புரிந்திருந்தது. பதினைந்தாயிரம் இளைஞர்களை இந்தியாவில் வைத்து பயிற்சி கொடுத்த பெரிய இயக்கமாக புளட் இருந்தது. அந்த இயக்கத்தின் சிதைவு சோவியத் ரஷ்ஷியாவின் சிதைவுக்கு ஓப்பானது.
ஆங்கிலத்தில் Implosion என்ற வார்த்தைக்கு வரைவிலக்கணமாக உமா மகேஸ்வரன் தலைமை தாங்கிய இயக்கம் இருந்தது.
84 ஆம் ஆண்டு இப்படியான விடுதலை இயக்கங்களுக்கு ஒரு பொதுவான மருத்துவ நிறுவனம் உருவாக்குவது பற்றி பலரால் சிந்திக்கப்பட்டாலும், அதற்கு ஆணிவேராக இருந்தவர் அக்கால ஈழ மக்கள் புரட்சிகர இயக்கத்தின் இராணுவப் பொறுப்பாளர் டக்ளஸ் தேவானந்தா. அந்த நிகழ்விற்கான முதல் கூட்டத்திற்கும் என்னையும் அவரே அழைத்திருந்தார். முதல் கூட்டத்தில் சமூகமளித்தவர்கள் சிலரின் பெயர்களை தற்போது மறந்தாலும் எல்லா இயக்கத்தினரும் அன்று அதில் சமூகமளித்திருந்தனர்.
விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகளாக யோகியும் மற்றும் ஒருவருடன் வந்திருந்தார். அதேபோல் புளட் அமைப்பின் சார்பாக மட்டக்களப்பு வாசுதேவாவும் உண்ணாவிரதத்தால் உயிர் இழந்த திலீபனின் அண்ணன் என பிற்காலத்தில் அறிமுகமானவரும் வந்திருந்தார். ரெலோ மற்றும் ஈரோஸின் சார்பில் தலா இருவர் சமூகமளித்திருந்தார்கள்.
இப்படியான மருத்துவ அமைப்பின் தேவையை எல்லோரும் உணர்ந்தாலும் அந்தக் கூட்டத்தில் அதிகம் பேசியவர்கள் வாசுதேவாவும் தேவானந்தாவுமே.
எந்த வார்த்தைகளும் பேசாமல் தலையை அசைத்தபடி இருந்தவர் யோகி என்பது இன்னமும் மனதில் பதிந்துள்ளது. அப்பொழுதே இவர்களுக்கு தலைவர் பிரபாகரனிடம் இருந்து திடமான கட்டளை பேசக்கூடாது என இருந்திருக்கவேண்டும். அமைதியாக அவதானித்து விட்டு வாருங்கள் என்பதாகவே இருக்கவேண்டும் என நான் நினைத்தேன்.
இந்த நிறுவனத்தின் தலைவராக விடுதலைப்புலிகளின் சார்பில் டொக்டர் ஜெயகுலராஜாவும் வாசுதேவாவால் உபதலைவராக டொக்டர் சாந்தி இராஜசுந்தரமும் காரியதரிசியாக மாஸ்டர் காசிவிஸ்வநாதர், தேவானந்தாவால் பிரேரிக்கப்பட்டனர்.
முதல் இருவரும் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது புளட்டையும் ஈரோஸையும் சேர்ந்தவர்கள், அவர்கள் இருவரும் டொக்டர்களாக இல்லை என அந்த முன்மொழிவை எதிர்த்தபோது மிருகவைத்தியரான என்னை டக்ளஸ் தேவானந்தா காரியதரிசியாக்கினார்.
அப்பொழுது பொருளாளராக டொக்டர் சிவநாதன் தெரிவு செய்யப்பட்டார். இப்படியே இந்த இயக்கங்களால் உருவாக்கப்பட்ட மருத்துவ நிறுவனத்திற்கு தமிழர் நல மருத்துவ நிறுவனம் எனப் பெயரிட்டு மருத்துவரான எனது மனைவி அதில் டொக்டராக வேலை செய்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.
இதில் என்னைத் தவிர மற்றவர்கள் அனைவரும் இயக்கங்களிடயேயும் மக்களிடமும் அறியப்பட்டவர்கள். டொக்டர் ஜெயகுலராஜா விடுதலைப்புலிகளுக்கு வைத்தியம் செய்தமையால் கைதுசெய்யப்பட்டு, வெலிக்கடையில் நடந்த தமிழ்க்கைதிகள் கொலைச்சம்பவத்தில் இருந்து உயிர்தப்பிய பின்பு மட்டக்களப்பு சிறையில் இருந்து தப்பி வெளியேவந்தவர்.
டொக்டர் ஜெயகுலராஜா இந்தியாவுக்கு விடுதலைப்புலிகளால் கொண்டுசெல்லப்பட்டவர். அதேபோல் காந்தீய நிறுவனத்தின் நிறுவனராக இருந்து 83 ஆம் ஆண்டு வெலிக்கடைச் சிறையில் வைத்து கொலைசெய்யப்பட்ட டொக்டர் இராஜசுந்தரத்தின் மனைவியே டொக்டர் சாந்தி இராஜசுந்தரம். அவர் தமிழ்நாட்டு அரசின்கீழ் உள்ள எழும்பூர் பொலிஸ் மருத்துவமனையில் முழுநேர வைத்தியராக இருந்தார்.
எமது பொருளாளராகிய டொக்டர் சிவநாதன் வாகரையில் வைத்தியராக இருந்தபோது அந்த வழியாக மட்டக்களப்பு சிறையில் இருந்து தப்பியவர்களுக்கு உதவி புரிந்ததால் பாதுகாப்பு படையால் தேடப்பட்டு தமிழ்நாட்டுக்குத் தப்பிவந்தவர். டொக்டர் சிவநாதன் தமிழ்நாட்டுக்கு புளட் இயக்கத்தால் கொண்டு வரப்பட்டிருந்தார். சிறிதுகாலம் தேனீயில் புளட் புதிதாக பயிற்சி முகாம் அமைத்தபோது அவர்களோடு இருந்தவர். இப்படி இவர்கள் இயக்கங்களுக்கு அறிமுகமானாலும் பொதுவானவர்கள் என்ற கருத்தில் தமிழர் மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர்களாக அவர்கள் நியமிக்கப்பட்டதுடன் இந்த ஐந்து இயக்கங்களின் சார்பில் ஒவ்வொருவர் இயக்குநர்களாக இருப்பார்கள் என்ற நிலையில் உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் அரசு சட்டத்தின் கீழ், ஒரு தன்னார்வ தொண்டு அமைப்பாக பதிவு செய்யப்பட்டது.
ஒரு விதத்தில் எதிர்காலத்தில் அமையவிருக்கும் தமிழ் ஈழத்தின் சுகாதார நிறுவனம் என்ற எண்ணம் அக்காலத்தில் அதற்கு இருந்தது என்பதை என்னால் மறுக்க முடியாது.
இந்த நிறுவனத்திற்கு காரியதரிசியான நான், குடும்பத்துடன் கோடம்பாக்கத்தில் இருந்ததால் இந்த நிறுவனத்தின் அலுவலகம் அதற்கு அருகாமையில் இருப்பதற்காக சூளைமேட்டில் ஒரு சேட்டின் வட்டிக்கடையின் மேல்மாடி வாடகைக்கு எடுக்கப்பட்டது.
இந்த நிறுவனத்தை நடத்துவதற்கு எந்த இயக்கமும் பணம் கொடுப்பதற்கு தயாரில்லை. நாங்கள் எல்லோரும் பணம் வாங்காது தொண்டர்களாக வேலை செய்வதற்கு தயாரானாலும் சேட்டின் வீட்டிற்கு வாடகை கொடுத்தாகவேண்டும்.
அத்துடன் அலுவலகம் நடத்துவதற்கு சில அடிப்படை செலவுகளும் இருந்தன. இந்த நிலையில் கிழக்கு மாகாணத்தில் இருந்து இயங்கிய நாகப்படையில் இருந்து வந்த கருணாநிதி என்ற இளைஞன் சென்னை பல்கலைக்கழகத்தில் படிப்பதாகவும் தங்குவதற்கு இடமில்லாமல் இருப்பதாகவும் தகவல் வந்தது. டொக்டர் சிவநாதனை தொடர்பு கொண்டு கேட்டதின் பிரகாரம் அவனை எங்கள் உதவியாளராக நியமித்தோம். குறைந்த பட்சம் அவன் தங்கியிருக்க வசதியும் செய்து கொடுத்து சாப்பாட்டுக்கும் சிறு தொகை கொடுக்க வேண்டும்.
யாரிடம் கடன் வாங்க முடியும் என சிந்தித்து வெளிநாடுகளில் வசித்த சில தெரிந்தவர்களுக்கு கோரிக்கை வைத்தோம். முக்கியமாக விடுதலை இயக்கங்கள் ஒன்றிணைந்து ஒரு மருத்துவ நிறுவனம் அமைத்தது பலருக்கும் விருப்பமான செய்தியாக இருக்குமென்ற நம்பிக்கை எமக்கு இருந்தது.
அந்தக்காலத்தில் அமெரிக்காவில் டொக்டராக இருக்கும் எனது மனைவியின் சகோதரர் அருள் ரஞ்சிதன் தமது தங்கை பெற்றோரைப் பார்ப்பதற்கு இந்தியா வந்தார். பலகாலமாக வவுனியாவில் இயங்கிய காந்தீயத்திற்கு பண உதவி செய்யும் மனித நேயமுள்ள மனிதர் அவர் என்பது எனக்குத் தெரியும்.
பிற்காலத்தில் அமெரிக்காவில் விடுதலைப்புலிகளின் அமைப்பான தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் தலைவராகவும் அவர் இருந்தார்.
அவர் சென்னை வந்தபோது கோடம்பாக்கத்தில் எங்களுடன் தங்கினார். அவரை ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் அலுவலகத்திற்கு கூட்டிச் சென்று பத்மநாபா உட்பட பல முக்கியமானவர்களை அறிமுகப்படுத்தினேன்.
அங்கு சுவர்களில் தொங்கிய கார்ல்மார்க்ஸ், லெனின் , ஸ்ராலின் படங்களைப் பார்த்ததும் அவருக்கு அடிவயிற்றைப் புரட்டி இருக்க வேண்டும. எனக்கு அப்போது அவரது உணர்வு புரியாவிட்டாலும் பின்பு அவரது செய்கையின் மூலம் புரிந்தது.
என்னையும் ஒரு கம்யூனிஸ்டாக அவர் கருதியிருக்கவேண்டும். ஏற்கனவே அவரது தங்கையை மணம் முடித்து இரண்டு பிள்ளைகளும் இருப்பதால் அமைதியாக அந்த இடத்தைவிட்டு நகரும்பொழுது “ இவங்கள் கம்யூனிசம் கதைக்கிறங்கள். “ என்று மட்டும் சொல்லி விட்டு வெளியேவந்தார்.
அருள் ரஞ்சிதனும் தலைவர் டொக்டர் ஜெயகுலராஜாவும் ஒன்றாக பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள். அவர் எமது மருத்துவ நிறுவனத்தில் இருப்பதை அறிந்து 12 ஆயிரம் இந்திய ரூபாய்களை எமது நிறுவனத்துக்கு கொடுத்ததாகவும், அந்தப் பணத்தை ஜெயகுலராஜா என்னிடமும் சிவநாதனிடமும் தந்தார். அத்துடன் பொதுவாழ்வில் நானும் மனைவியும் இருப்பதால் நூறு அமெரிக்க டொலர்கள் மாதமொருமுறை அவர் தங்கைக்கு அனுப்பியதால் நாம் இருவரும் பணமுடை இல்லாமல் மருத்துவப்பணிகளைத் தொடங்கினோம்.
இதேவேளையில் வெளிநாட்டிலும் பல தமிழர்கள் சிறிது சிறிதாக பணம் அனுப்பத் தொடங்கினார்கள்.
மலேசியாவில் வாழ்ந்த இலங்கை வம்சாவளி தமிழர்கள் பலர் எதுவித கேள்விகளையும் எம்மிடம் கேட்காமல் அனுப்பியது எனது இதயத்தை நெகிழவைத்தது. இயக்கங்களுக்கு கொடுத்தவர்கள் பலரதும் நோக்கங்கள் வேறுபாடானது. சிங்களவரை பழிவாங்குதல் , தனி ஈழம், அதற்கும் அப்பால் தமிழ் வீரர்கள் என்ற ஒரு பழமையான நினைவுகள் அதற்கு காரணமாக இருந்திருக்கலாம். ஆனால், இந்த மருத்துவ சேவைக்கு தந்தவர்களது நோக்கம் மிகவும் தூய்மையானது.
சேட்டின் மேல் மாடி வாடகைக்கும் கருணாநிதி என்ற மாணவனுக்கு மாதம் முன்னூறு ரூபா கொடுப்பதற்குமான சக்தியை எமக்குக்கொடுத்த அருள் ரஞ்சிதனுக்கு நன்றி கூறவேண்டும்.
எமது நிறுவனம் இயங்கும்போது ஆரம்பத்தில் இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு இலவச மருத்துவ சேவை என்றே அந்தக் கிளினிக்கை நடத்தினோம்.
அதன் பின்பு எமது நிறுவனத்தை சுற்றியுள்ள சென்னை மக்களுக்கும் எமது சேவை விஸ்தரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அக்காலத்தில் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்தவர்கள் தங்கி இருந்த முகாம்களுக்கு சிவநாதனும் நானும் சென்று மருந்துகள் விநியோகித்தோம்.அங்கிருந்தவர்களில் சிலரை தேர்ந்தெடுத்து மருத்துவத் தொண்டர்களாக சென்னையில் பயிற்சி கொடுத்தோம்.
முதல் முதலாக ஜெய்ப்பூரில் கால்கள் தயாரிப்பதற்கு இருபதுக்கும் மேற்பட்டவர்களை ஜெய்ப்பூர் அனுப்பி பயிற்சிகொடுத்தோம்.
இயக்கங்களில் இருந்து போரில் காயப்பட்டு வருபவர்களுக்கு சென்னையில் வைத்தியசாலைகளுக்கு செல்வதற்கு எமது நிறுவனம் உதவியது. இவ்வாறு எமது சேவைகள் அங்கு கூடிக்கொண்டு சென்றன.
இதனால் முகாம்களுக்குப் பொறுப்பாக பலரை நியமித்து மேலும் இலங்கையில் இருந்து வந்த வைத்தியர்களை அந்தப்பணிகளுக்கு உள்வாங்கினோம்.
இரண்டு வருடகாலத்தில் பன்னிரண்டாயிரம் ரூபாவில்தொடங்கி பல இலட்சம் ரூபா நிதியை கொண்டு நடத்தும் நிறுவனமாக அதனை வளர்த்தோம்.
வெளிநாட்டில் வாழ்ந்த தமிழர்களுக்கு அக்காலத்தில் இயக்கங்களுடன் நேரடி தொடர்பிருக்கவில்லை. பலர் அவர்களுக்கான பணத்தை எங்களுக்கு அனுப்பி இயக்கங்களுக்கு கொடுக்கும்படி எழுதி இருந்தார்கள். பலருக்கு முகவரி தந்தது தமிழர் மருத்துவ நிறுவனம்.
அக்காலத்தில் இயக்கங்களில் இருந்தவர்களை அவற்றிலிருந்து விடுவிப்பதற்கு நானும் சிவநாதனும் உதவினேம். ஐரோப்பா செல்வதற்காக ஏஜென்டுகளால் சென்னை கொண்டு வரப்பட்டு பின்னர் கைவிடப்பட்ட சில பெண்கள் ஆண்களுக்கும் பல வழிகளில் அவர்கள் மேற்கொண்டு பயணம் செய்ய உதவினோம்.
விடுதலைப்புலிகளின் தலைவரைத் தவிர்ந்த மற்றையவர்களை எக்காலத்திலும் எம்மால் சந்திக்க முடிந்தது. இதனால் எம்மை இந்திய உளவுப்பிரிவு (RAW) தமிழ்நாட்டு இரகசியபொலிசார் (Q Branch) மிகவும் நட்பாக வந்து விடயங்களை அறிந்து கொள்ளவிரும்புவார்கள்
மெல்பன்
பாடப்புத்தகங்களில் படித்து பரீட்சை எழுதிச் சித்தியடைந்தபோதிலும் நாய் பூனைகளுக்குப் பெருமளவில் வைத்தியம் செய்யவில்லை. எக்ஸ்ரே எடுத்தல், எலும்பு முறிவுகளைக் குணப்படுத்தல் என்பனவற்றில் அனுபவம் இல்லை. நாங்கள் படித்த காலத்தில் பேராதனை மிருக வைத்திய பிரிவில் எக்ஸ்ரே இயந்திரம் இருக்கவில்லை.

மெல்பன் லோட் சிமித் வைத்தியசாலையில் எனக்கு வேலை கிடைத்தது அதிர்ஸ்டமென்பேன்.
இந்த வைத்தியசாலையில் முக்கியமான விடயம் பதினைந்து வைத்தியர்கள் வேலை செய்யுமிடமானதால் தெரியாத விடயங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளமுடியும்.
1991 கார்த்திகை மாதத்தில் வேலை கிடைத்தபோது மெல்பன் வந்தேன். குடும்பத்தினர் வார்ணம்பூலில் வசித்தனர். எனது மனைவி அங்கே வைத்தியசாலையில் வேலைசெய்து கொண்டிருந்தபோது பிள்ளைகள் அங்கு பாடசாலையில் படித்தார்கள். தனிக் குடித்தனம் மெல்பனில் ஆரம்பிக்க இருந்த என்னை, நண்பர் தர்மா தர்மசேகரம் தன்னுடன் வந்திருக்கும்படி அழைத்தார். அவரது வீட்டிலிருந்து எனது வைத்தியசாலை அதிக தூரமில்லை. கிட்டத்தட்ட ஒரு மாதம் அவரது வீட்டிலிருந்து வேலைக்குச் சென்றேன். மார்கழி மாதம் வந்ததால் பாடசாலை விடுமுறைகள் தொடங்கியது. அந்தக் காலத்தில் பொக்சில் என்ற மெல்பனின் புறநகரில் மூன்று அறைகள் கொண்ட வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தோம். அவுஸ்திரேலியா வந்து கிட்டத்தட்ட நாலரை வருடங்களின் பின்பாக ஒரு குடும்பமாக மெல்பனில் வாழும் வாய்ப்பேற்பட்டது. இக்காலத்தில் எனது மாமா மாமியினருடன் மனக்கசப்பும் வந்தது . அவர்கள் சிட்னி சென்றார்கள்.
எண்பதாம் ஆண்டு நாங்கள் பதிவுத்திருணம் செய்த போது எனது மனைவி மூன்றாவது வருட மருத்துவ மாணவி. நான் இலங்கையில் மதவாச்சியிலும் பின்பு றாகலையிலும் வேலை செய்திருக்கின்றேன். அதன்பின்னர், இரண்டு குழந்தைகளுடன், 1983 இனக்கலவரத்தைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேற்றம். மூன்று வருடச் சென்னை வாழ்க்கை . அதன்பின்னர் அவுஸ்திரேலியா கண்டம் – சிட்னி, மெல்பன், தென் அவுஸ்திரேலியா, வார்ணம்பூல் என்று காலில் சக்கரங்கள். மீண்டும் படிப்பு – பரீட்சைககள் எனச்சுமைகளைக் காவியபடி இளமையைக் கரைத்த பின்பு குடும்பமாக சொந்தமாக ஒரு வீட்டில் இருப்பதற்கு பதினொரு வருடங்கள் ஆகியது.
இலங்கையிலிருந்து போரால் வெளியேறியவர்கள் பலருக்கும் இப்படியான அலைந்துழல் வாழ்வோ, அல்லது இதைவிடப் பாரதூரமான சம்பவங்களும் இழப்புகளும் நடந்திருக்கும். ஒரு வகையில் நான் அதிர்ஸ்டசாலி. படித்த கல்வி, எனது மனைவி மாமா மாமியார் மற்றும் எங்களை இங்கு வரவழைத்த மனைவியின் சகோதரன் டாக்டர் இரத்தினமோகன், அவரது மனைவி டாக்டர் மாலா இரட்ணமோகன் போன்றவர்களது ஆதரவு பல வகையில் நெருக்கடிகளைக் கடக்க பாலமாக உதவியது. அதனால், எனக்கு எதிர்பாராது கிடைத்தவற்றை மற்றவர்களுக்கும் நான் பகிர்ந்து கொடுக்கவேண்டுமென்ற உணர்வு எக்காலத்திலுமிருந்து.
பிரான்சிஸ் மாஸ்டர் என்ற ஆசிரியர், யாழ்ப்பாணம் இந்துக்கல்லுரியில் படிப்பித்த மிருகவியல் பாடத்தோடு ஒரு நாள் அவர் தாம் செய்ததைச் சொன்னது நினைவிருக்கிறது.
அவர் இருவரை இங்கிலாந்திற்கு விமான சீட்டும் பணமும் கொடுத்து படிக்க அனுப்பிவிட்டு, அவர்களிடம் “ நீங்கள் எனக்குப் பணம் திருப்பித் தரவேண்டாம். அதற்குப் பதிலாக இருவருக்கு உதவுங்கள் “ என்றாராம். அந்தக்காலத்தில் அவர் சொல்லித்தந்த மிருகவியல் மட்டுமல்ல, அவரது இந்த சொற்களும் என்மனதில் தர்மோபதேசமாகத் தங்கிவிட்டது.
வேலை செய்யும் வைத்தியசாலையில் நிகழும் விடயங்கள் சமவெளியில் ஓடும் நதிக்கு ஒப்பானது. எனது மேலதிகாரி எனது நண்பனாக வைத்தியத்தை மட்டுமல்ல புதிய சமூகத்தைப் புரிந்துகொள்ள வைக்கவும் உதவினார். வேலை செய்யுமிடத்தில் எனக்கு எந்த பிரச்சினைகளும் ஏற்படாதிருந்தது. அதனால் என்னால் புறச்சூழலைப் பார்க்க முடிந்தது.
இலங்கையில் அமைதி காக்கவந்து விமர்சனங்களுடனும் படிப்பினைகளுடனும் இந்திய இராணுவம் திரும்பியபோது, அங்கு சமாதானம் ஏற்படும் என்ற எண்ணம் பிழைத்துவிட்டது. இந்தியாவில் நான் பழகிய நண்பர்கள் விடுதலைப்புலி இயக்கத்தால் கொலை செய்யப்பட்டிருந்தார்கள். இருவர் இந்துக்கல்லூரியில் படித்த காலத்து நண்பர்கள். சென்னையில் பத்மநாபாவோடு கொலை செய்யப்பட்ட கிருபாகரன் என்னுடன் விடுதியில் ஒன்றாக இருந்தவன். கொலைசெய்யப்பட்ட சங்கரி இந்துக் கல்லூரியில் அறிமுகம். பத்மநாபா நான் மதித்த முக்கியமான ஒருவர். இவர்களது கொலைகள் எனது மனதில் ஆழமான வடுவை ஏற்படுத்தியது என்றுதான் சொல்லமுடியும்
மெல்பனில் வாழும் தமிழர்களில் என் போன்றவர்கள் பலர் ஏற்கனவே இந்திய அரசின் சமாதான நடவடிக்கைகளை ஆதரித்து, கையெழுத்துப் பிரதியாக மக்கள் குரல் இதழைப் பிரசுரித்து ஒரு அணியாக இருந்தார்கள். அத்துடன் ஏற்கனவே நான் இங்குள்ள அகதிகள் தொடர்பாக, இலங்கை தமிழ் அகதிகள் கழகத்தின் அங்குரார்ப்பணத்திலும் கலந்துகொண்டிருந்தேன்.
இக்காலத்தில் தமிழர்கள் மத்தியில் இயங்கிய சமூக வானொலிகள் எல்லாம் விடுதலைப்புலிகளது இந்திய எதிர்ப்பு நடவடிக்கைக்குச் சார்பாக முழங்கியபடியிருந்தன. எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்தின் கொலைகளை நியாயப்படுத்தினர்.
இந்த நிலையில் அகதிகள் கழகத்தில், ஆரம்பத்தில் சாதாரண அங்கத்தவனாகச் சேர்ந்து கொண்டேன். அதன் மூலம் சில புதிய நண்பர்கள் உருவாகினார்கள். கிட்டத்தட்ட 300 பேருக்கு மேற்பட்ட தமிழர்கள் அகதிகளாக விண்ணப்பித்துவிட்டு காத்திருந்தார்கள்.
இக்காலத்தில் அவுஸ்திரேலியாவில் தொழிற்கட்சி அரசு இருந்ததால் அதனது அமைச்சர்கள் பலருக்கு இலங்கை அரசின் தமிழ் விரோத நடவடிக்கைகளை எடுத்து விளக்கியதோடு, அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பலருக்கு அவர்களுக்கான விசாரணையின்போது சாட்சியாகச் சென்றேன்.
தமிழ் அகதிகள் கழகத்திலிருந்தபோது இலங்கை அரசிற்கு எதிரான தொடர்ச்சியான பிரசாரத்தை நடத்தியபோதிலும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக அந்தப்பிரசாரம் அமையாமலும் பார்த்துக்கொண்டேன். கத்திமீது நடக்கும் இந்தச் செயலை ஏழு வருடங்களாகச் செய்தேன்.
பிற்காலத்தில் எனது இந்தச்செயற்பாடு மெல்பனில் வாழ்ந்த பல விடுதலைப்புலி முக்கியஸ்தர்களுக்கு என்மீது வெறுப்பை உருவாக்கியது. ஒருவர் தங்களுக்கு ஆதரவற்றவர் என்றால் அவரை எதிரியாக மாற்றவேண்டும் என்ற செயலில் அவர்களே ஈடுபட்டார்கள். அவர்களது இந்த இரண்டகத்தன்மையான முடிவுகள் பிற்காலத்தில் அவர்களுக்கே எதிராக முடிந்தது.
வேலையில் சேர்ந்து ஒரு வருடமாகியது . மனைவியும் வேலை செய்வதால் வாடகை வீட்டிற்குப் பணம் கொடுப்பதிலும் பார்க்க, சொந்த வீட்டில் வாழவேண்டும் என்ற எண்ணம் வந்தது. எங்களால் ஒரு புதிய வீட்டை வாங்கமுடியுமென நம்பிக்கை வந்தது. அதனால் வீடு வாங்குவதற்கான படலம் தொடங்கியது. வீட்டு விலையில் பத்துவீதமான சேமிப்பு இருந்தால் வங்கிகள் இங்கு பணம் தரும். மேலும் இருவரும் வேலை செய்யும்போது இந்த நாட்டில் வங்கிகள் எங்களை தேடிவந்து தருவார்கள்.
நான் வேலைக்கு அலைந்து திரிந்த காலத்தில் மெல்பன் புறநகரில் ஒரு சிறிய மிருக வைத்திய கிளினிக் விலைக்கு வந்தது. அதிக விலையில்லை. ஆனால், அதன் விலையில் 50 வீதமான பணத்தைக் கடனாகக் கேட்டபோது வங்கிகள் தருவதற்கு மறுத்துவிட்டன.
வீட்டுக்குக் கடன் எடுப்பது இந்த நாட்டில் மிகவும் இலகுவானது. அதேவேளையில் சொந்தமாகத் தொழில் தொடங்குவதற்கு கடன் எடுப்பது, முக்கியமாக வெளியே இருந்து வந்தவர்களுக்கு கடினமானது.
—0—
மறுமொழியொன்றை இடுங்கள்