வாழும்போது வாழ்த்துவோம் – கொண்டாடுவோம்

 “ நம்மவர் பேசுகிறார்  “  அரங்கில்…..

கிழக்கிலங்கையின் ஆத்மாவை இலக்கியத்தில் பிரதிபலித்த எஸ். எல். எம். ஹனீஃபா !

                                                                          முருகபூபதி

ஆளுமைகள்  மறைந்தபின்னர், அவர்கள் குறித்து நாம் பேசுவதும் எழுதுவதும் எம்மை நாமே திருப்திப்படுத்திக்கொள்ளும் மரபாகவே தொடர்வது பற்றி பலரும் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளனர். 

மறைந்தவர்களுக்கு,  நாம் என்ன பேசினோம், எவ்வாறு எழுதினோம் என்பது தெரியாது !

அவர்கள் பூதவுடலாக அடக்கமாவார்கள், அல்லது தகனமாவார்கள். காணாமலும் போயிருப்பார்கள்.

கலை, இலக்கியம், சமூகம், கல்வி, அரசியல்,  ஆன்மீகம் தன்னார்வத்தொண்டு முதலான துறைகளில் ஈடுபட்டு தமது வாழ்நாளை அவற்றுக்காகவே அர்ப்பணித்தவர்கள் உயிருடன் இருக்கும்போது எம்மவர்கள் பேசுவதும் எழுதுவதும் குறைவு.

இங்கு  குறிப்பிடப்படும்  துறை சார்ந்து இயங்கியவர்கள் அனைவருக்கும்  ஆளுமைகள் என்ற மகுடத்தை நம்மால் சூட்டமுடியாது.  அதனால்தான்  “ அர்ப்பணிப்பு  “ என்ற சொல்லையும் இணைத்து, அவ்வாறு அர்ப்பணிப்போடு வாழ்ந்தவர்கள் எனச்சொல்லி  “ ஆளுமை  “ அந்தஸ்தை வழங்குகின்றோம். 

எனினும் அவர்கள்  மறைந்த பின்னர் அவர்கள் குறித்த நினைவுகளை பகிர்ந்துகொள்ளும் மரபுதான் நீடித்துவருகிறது.

சமகாலத்தில்  உலகை அச்சுறுத்திவரும் இந்த கொரோனோ வைரஸ்,  இயற்கைக்கு  புத்துணர்ச்சி தந்திருக்கும் அதேசமயம்   சமூகத்தில் இடைவெளியையும்  உருவாக்கியிருக்கிறது.

 காடுறைந்த  உயிரினங்களும்  வெளியே வந்து வீதிகளில் உலாவின.  மனிதர்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.

கடந்த  2020  ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து இதுதான் தொடர்கதை.

இந்நிலையில் கணினியும் இணையமும் வீடுகளில் முடங்கிய மக்களுக்கு  ஒரு பாதையை திறந்திருக்கிறது.  இந்த வாய்ப்பு வசதியற்ற  மக்கள் குறித்தும்  நாம் கவலையை வெளிப்படுத்தவேண்டியிருக்கிறது.

 அரசுகள் முதல், பாடசாலைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தொழில் நிறுவனங்கள் அனைத்தும் இயங்குவதற்கு இணையம் வழிசமைத்திருப்பதனால்,  ஒவ்வொருவரும் தத்தம் வீடுகளிலிருந்தே உலகின் எந்தப்பாகத்திலிருப்பவர்களுடனும் முகம் பார்த்து பேசவும் கலந்துரையாடவும் முடிந்திருக்கிறது.

இந்த மாற்றத்தை சமகாலத்தில் அனைவரும் குறிப்பாக கலை, இலக்கியவாதிகள் தமக்கு சாதகமாக்கியிருக்கின்றனர்.

சங்க இலக்கியம் முதல் சமகால இலக்கியம் வரையில் இணையவழி காணொளி அரங்கின் ஊடாக பேசப்படுகிறது.

தேசங்களின் நேரம் கணித்து நடத்தப்படும் இந்நிகழ்ச்சிகளில் அவரவருக்கு விருப்பமான தெரிவுகளும் இருப்பதனால்,  வீட்டில் முடங்கியிருந்தே உலகத்தை வலம் வந்துவிட முடிந்துள்ளது.

அண்மையில் அவுஸ்திரேலியாவிலிருந்து  நடத்தப்பட்ட  நம்மவர் பேசுகிறார் என்ற இணைவழி காணொளி அரங்கில் கிழக்கிலங்கையில்  வாழும் இலக்கிய ஆளுமை, மூத்த எழுத்தாளர் எஸ். எல். எம். ஹனீஃபா அவர்களுடனான சந்திப்பு நடந்தது.

இதனை ஏற்பாடு செய்தவர் எமது இலக்கிய நண்பர் நடேசன். ஏற்கனவே அவர் இங்குள்ள அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் சார்பில்,  போர்க்கால இலக்கியங்கள் – போருக்கு முன்பும் பின்பும் என்ற தொனிப்பொருளில் ஒரு இணையவழி அரங்கினையும், கிழக்கிலங்கையைச்சேர்ந்த கவிஞி அனாருடனான கலந்துரையாடல் அரங்கையும் ஒழுங்கமைத்தவர்.

கடந்த வாரம் நடேசன் எஸ். எல். எம். ஹனீஃபா அவர்களுடனான ஒரு கலந்துரையாடலை அவ்வாறு ஒழுங்குசெய்திருந்தார்.

இதற்கான மெய்நிகர் வடிவமைப்பினை அவுஸ்திரேலியா கன்பரா மாநிலத்தைச்சேர்ந்த கலை, இலக்கிய ஆர்வலர் பிரம்மேந்திரன் ஒழுங்கு செய்திருந்தார்.

எஸ். எல். எம். ஹனீஃபா அவர்களின்  வாழ்வையும் பணிகளையும் பற்றிப்  பேசியவர்கள்,  அவர் பற்றி அறியாத பல விடயங்களையும்  கேட்டறிந்துகொண்டனர்.

1946 ஆம் ஆண்டு  கிழக்கிலங்கையில் மீராவோடையில் கடலை நம்பிய தந்தைக்கும் மண்ணை நம்பிய தாயாருக்கும் பிறந்திருக்கும் ஹனீபாவின் எழுத்துக்களும் அவரது நேரடி உரையாடல் போன்று சுவாரஸ்யமானது.

கிட்டத்தட்ட கரிசல் இலக்கிய வேந்தர் கி. ராஜநாராயணனின் வாழ்க்கையைப்போன்றது. பந்தாக்கள், போலியான வார்த்தைப்பிரயோகங்கள் அற்ற வெகு இயல்பான மனிதர்.

இலங்கை, தமிழகம் உட்பட பல உலக நாடுகளிலெல்லாம் இலக்கியவாதிகளை சம்பாதித்தவர்.

அவர் ஒரு சிறந்த கதை சொல்லி என்பதையும் புரிந்துகொள்ளமுடியும்.  1992 இல் இவருடை மக்கத்துச்சால்வை கதைத்தொகுப்பு வெளியானது. குறிப்பிட்ட தலைப்பும் .இவரது பெயரை இலக்கிய உலகில் தக்கவைத்து,       ” மக்கத்துச்சால்வை ஹனீபா” என்று வாழவைத்துக்கொண்டிருக்கிறது.

அந்தத்தொகுப்பில் அவருடைய என்னுரை,  கொடியேற்றம் என்ற தலைப்பில் இவ்வாறு ஆரம்பிக்கிறது:

அந்த நாள்கள் பற்றிய நினைவுகளும், இந்தச் சிறுகதைத் தொகுப்பு வேலைகளிலே ஈடுபட்டிருக்கும்பொழுது, ஏன் வளைய வலம் வரவேண்டும்?

இரவின் ஏதோ ஒரு வேளையில் – அதை வைகறை என்றும் சொல்ல ஒண்ணா-உம்மா எழும்பிடுவா. குப்பிலாம்பின் துணையோடு உம்மாவின் தொழில் துவங்கும்.  நித்திரையில்  ஊருறங்கும். அதனை ஒட்டில் களிமண்ணை ‘தொம்’ மென்று போட்டு உம்மா கலைப்பா. கொஞ்ச நேரத்தில்  ஒட்டில்  குந்திய களிமண் ‘தொம்’ அழகான சட்டியாக, பானையாக, குடமாக உருவெடுக்கும். அந்த  அதிசயத்தை  நாடியில் கை கொடுத்துப்  பார்த்திருப்பென்.

அதிகாலை நான்கு மணிக்கே எழும்பிவிடும் அந்தப் பழக்கம் இன்றுவரை களிமண்ணைப்போலவே என்னில் ஒட்டிக்கொண்டது.

வாப்பாவும் உழைப்பாளிதான். அவரும் வெள்ளாப்பில் எழும்பிவிடுவார். ஊரிலிருந்து  ஐந்து மைல்களுக்கப்பால் கடற்கரை. அங்கேதான் வாப்பா மீன் வாங்கிவரப் போவார்.

அவர் தோளில் கமுகு வைரத்தின் காத்தாடி. அதன் இரு முனைகளிலும் கயித்து உறியில் பிரம்புக் கூடைகள் தொங்கும். “கிறீச் கிறீச்’ என்ற ஓசையுடன் வாப்பாவின் தோளில் கிடக்கும் காத்தாடியின் கூடைகளிரண்டும் கூத்துப் போடும்.

கூடைக்குள் பொன்னிவாகை இலையை நீக்குப்பார்த்தால்….வெள்ளித் துண்டுகளாக மீன்கள் ‘மினுமினு’க்கும்.

எங்கள் ஊரில், அந்தக் காலத்தில், ‘அஞ்சாப்பு’ வரை படித்த நான்கைந்து பேரில் வாப்பாவும் ஒருவர். அவர் எழுத்து குண்டு குண்டாக அழகாக இருக்கும். நாள் தவறாமல் பத்திரிகை வாசிப்பார். வாசலில் தெங்குகள். காற்றில் கலையும் ஓலைக் கீற்றுகளுக்கிடையில் நிலவு துண்டு துண்டாகத் தோட்டுப் பாயில் கோலம் போடும். காசீம் படைப்போர், சீறாப்புராணம், பெண்புத்திமாலை, ராஜநாயகம் என்றெல்லாம் வாப்பா  ராகமெடுத்துப் படிப்பார். வாப்பாவைச் சுற்றிப் ‘பொண்டுகள்’ வட்டமிட்டிருப்பர். வாப்பாவிலும் பார்க்க அதிகமாக வாசிக்கும் பழக்கம் எனக்கும் உண்டு. ” 

இவ்வாறு  தொடங்கும் முன்னுரையிலிருந்து அவரது தொடக்க காலவாழ்வு எப்படி இருந்திருக்கிறது என்பது புலனாகும்.

இந்நூலில் சமர்ப்பணம் இவ்வாறுதான் அமைந்திருக்கும்:

வறுமையாலும் வைராக்யத்தாலும்
என்னை வளர்த்தெடுத்த
உம்மாவுக்கும் வாப்பாவுக்கும்

ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து  விவசாயத்துறையில் பயின்று,  ஆக்க இலக்கியப்படைப்பாளியாகவும்  தன்னார்வத்தொண்டராகவும்,  தாவரங்கள் மீது அதீத பற்றுள்ளவராகவும் வளர்ந்திருக்கும் அவர்  இலங்கை – இந்திய ஒப்பந்தம் வந்தபின்னர்  உருவாக்கப்பட்ட  வடக்கு – கிழக்கு மாகாண சபையிலும் அங்கம் வகித்தவர்.

மூவினத்தவர்களையும் பிரதிநிதித்துவம் செய்த அந்தச்சபை, அன்றைய  மத்திய அரசின் கோல்மால், உட்குத்து வேலைகளினால் சிதைந்தது.

காலப்போக்கில் இணைந்திருந்த வடக்கும் – கிழக்கும் பிரிந்தது. இறுதியில் உனக்கும் இல்லை  – எனக்கும் இல்லையென்றாகிப்போனது.

மீண்டும் மகாணசபைத்தேர்தலை நடத்துமாறு தற்போதையை அரசை கெஞ்சிக்கேட்டு கூத்தாடவேண்டிய நிலை வந்துள்ளது.

மக்கள் கையறு நிலைக்குத்தள்ளப்பட்டனர்.  நாம் கண்ட வரலாறு இதுதான்.

ஹனீஃபா, இந்தக்காட்சிகளையெல்லாம் கடந்துவந்தவர்.

அன்றைய அரங்கில் அவர் தனது வலது கரத்தை அடிக்கடி தூக்கி காண்பித்து,  அது வலுவிழந்திருக்கும் கோலத்தை சொன்னபோது மிகுந்த கவலையாக இருந்தது.

இன நல்லுறவு பற்றியே நாளும் பொழுதும் சிந்தித்துவருபவர்.  அத்துடன் மரங்களை பேணுவோம் என்ற குரலை தொடர்ந்தும் ஓங்கி ஒலித்து பசுமைப்புரட்சிபற்றியும் பேசுபவர்.

அன்றும் அதனைத்தான் அவர் வலியுறுத்தினார்.  தன்னால் வெளிப்பயணங்கள் மேற்கொள்ள முடிந்தால், வடக்கிற்குச்சென்று சப்த தீவுகள் என வர்ணிக்கப்படும் பிரதேசங்களில் மரங்களை நடும் இயக்கத்தை முன்னெடுப்பேன் என்றார்.

அத்துடன், மற்றும் ஒரு செய்தியையும் கூறினார்.

இஸ்ரேலுக்குச்சென்று,  அங்கிருந்து  பாலஸ்தீனம் மீது போர் தொடுக்கும் சிப்பாயை மார்போடு அணைத்து,                                           “  போதுமப்பா… போதுமப்பா… “ என்று வேண்டுகோள் விடுப்பேன்.  “

இவ்வாறு உலக சமாதானம் பற்றிய கருதுகோளுடன் வாழும் ஹனீஃபா, தான் வாழும் கிழக்கிலங்கை பிரதேசத்திலும்  தமிழ் – முஸ்லிம் உறவுக்கு பாலமாக விளங்கியவர்.

அதனால், குறிப்பிட்ட இனத்தைச்சேர்ந்த தீவிரவாதிகளின்  உயிர் அச்சுறுத்தலுக்கும் ஆளானாவர்.

வடக்கு – கிழக்கு மாகாண அலகு சிதைக்கப்பட்டபோது,  தமிழ்நாட்டுக்குச்செல்ல ஆயத்தமான ஈ.பி. ஆர். எல். எஃப் இயக்கத்தின் மூத்த தலைவர்கள், அவரிடம் சென்று                                       “ நீங்களும் எங்களுடன் வந்துவிடுங்கள்  “ என அழைத்ததாகவும்,  ஆனால், அவர் அதனை மறுத்து,  “  நான் எனது மக்களுடனேயே வாழப்போகிறேன்  “ என்று பிடிவாதமாக நின்றாதாகவும் சில பதிவுகளை படித்திருக்கின்றோம்..

அத்துடன் ஒரு விடுதலைப்புலி சிரேஷ்ட தளபதியிடம் சமாதானத்தூதுவனாகவும் அவர் சென்றபோது,                                                “  அமர்தலிங்கத்திற்கு என்ன செய்தோம் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் தூதுவராக வந்துள்ளீர்கள்.  திரும்பிச்செல்லுங்கள்  “ என்று வழியனுப்பிய செய்திகளும் ஏற்கனவே படித்திருக்கின்றோம்.

இலக்கியம், சமூகப்பணி,  பசுமை இயக்கம் தன்னார்வத்தொண்டு, அத்துடன் இலக்கிய நண்பர்களுக்கு அயராமல் கடிதம் எழுதும் வழக்கம்…. இவ்வாறு அனைத்தையும் செய்துகொண்டிருக்கும்  பன்முக ஆளுமை ஹனீஃபா அன்றைய அரங்கில், தான் மற்றவர்களுக்கு எழுதிய கடிதங்களையும், மற்றவர்கள் தனக்கு எழுதிய கடிதங்களையும் காண்பித்தார்.

தமிழக எழுத்தாளர் லா. சா . ராமமிருதம் முதல் இலங்கை எழுத்தாளர் எஸ். பொன்னுத்துரை வரையில் அவருடன் கடிதத் தொடர்பிலிருந்தவர்கள் ஏராளமானோர்.

கடித இலக்கியம் பற்றியும் அன்றைய அரங்கில் பேசினார்.

நோர்வேயிலிருந்து இணைந்துகொண்ட  ஒளிப்படக்கலைஞர் தமயந்தி, எதுவும் விரிவாகப் பேசாமல்,   “  ஹனீஃபா நானா… நிறைய பேசவேண்டியிருக்கிறது. நிலைமை சீரடைந்ததும் உங்கள் ஊருக்கே வருகின்றேன்  நானா “ என்று சொன்ன தொனியிலிருந்து தமிழ் – முஸ்லிம் உறவின் சகோதர வாஞ்சையை நாம் புரிந்துகொள்ளமுடியும்.

இந்த அரங்கில் பேசிய எழுத்தாளர் நடேசனுக்கு ஹனீஃபா அறிமுகமானது 2010 ஆம் ஆண்டிற்குப்பின்னர்தான். ஹனீஃபாவின் எழுத்துக்கள், அவுஸ்திரேலியாவில் வாழும் நடேசனை கிழக்கிலங்கைக்கு வரவழைத்திருக்கிறது என்பதை அந்த அரங்கில் தெரிந்துகொள்ளமுடிந்தது. நடேசன், ஹனீஃபாவுடனான தனது நட்புறவை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.

ஹனீஃபாவின் நீண்ட கால  நண்பரும் ஊடகவியலாளரும் வானொலிக்கலைஞருமான சிதம்பரப்பிள்ளை சிவகுமார், இலங்கையிலும் தமிழகத்திலும் ஹனீஃபாவிடத்தில் கற்றதையும் பெற்றதையும் வெகு சுவாரஸ்யமாகச்சொன்னார்.

வடக்கு – கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள்,  தனது அன்றைய நிருவாகப்பணிச்சுமைக்குள்,  ஹனீஃபாவுடன் நீண்ட பொழுதுகள் செலவிட முடியாமல்போனது குறித்து தனது கவலையை வெளிப்படுத்தினார்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரும் எழுத்தாளருமான சிராஜ் மசூர்,  ஹனீஃபாவின்  இலக்கியச்செயற்பாடுகளை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தினார்.

கிளிநொச்சியிலிருந்து  இலக்கியவாதி சமூகச்செயற்பாட்டாளர் கருணாகரனும் தனது உடல் நிலையை பொருட்படுத்தாமல் இந்த அரங்கில் இறுதிவரையும் இணைந்திருந்தார்.

மேலும் சிலர் ஹனீஃபாவை  “  மாமா  “  என்றும் திருமதி ஹனீஃபாவை  “ மாமி  “ என்றும் விளித்தும் உள்ளார்ந்த உறவை உணர்த்திப்பேசினர்.  அவர்களில் ஒரு குழுந்தை                           “ தாத்தா  “ என்றே  அவரை அழைத்தாள்.

ஹனீஃபா, தமது ஏற்புரையில்  சற்று உணர்ச்சிவசப்பட்டு பேசநேர்ந்தமைக்கு, இந்த அரங்கில் பேசிய அனைவரும் தத்தம் இதயத்திலிருந்து பேசியதுதான் காரணம் என்பதையும் புரிந்துகொள்ளமுடிந்தது.

ஹனீஃபா ஒரு திறந்த புத்தகம். அதிலிருந்து கற்கவும் பெற்றுக்கொள்ளவும் நிறையவுண்டு.  அவற்றில் சுவாரஸ்யத்திற்கும் மனிதநேயத்திற்கும் இன நல்லுறவிற்கும் உகந்த விதைகள் தூவப்பட்டிருக்கும்.

நம்மவர் பேசுகிறார் நிகழ்ச்சியை ஒழுங்குசெய்த நண்பர்கள் நடேசன், கன்பரா பிரம்மேந்திரன் ஆகியோருக்கு எமது வாழ்த்துக்கள்.

letchumananm@gmail.com

“வாழும்போது வாழ்த்துவோம் – கொண்டாடுவோம்” அதற்கு 3 மறுமொழிகள்

  1. Great to know about Haniffa esq! He shd work hard & more to make mutual respect!trust!Understanding!friendship ! Cooperation!among all Tamil speaking people in this critical time in Srilanka!!
    We shd form “Good Citizens Alliance-Sri Lanka” soon to unite all good Citizens & face dangerous situation soon! United we survive! Or China win soon!

  2. Great to know about Haniffa esq! He shd work hard & more to make mutual respect!trust!Understanding!friendship ! Cooperation!among all Tamil speaking people in this critical time in Srilanka!!
    We shd form “Good Citizens Alliance-Sri Lanka” soon to unite all good Citizens & face dangerous situation soon! United we survive! Or China win soon!

  3. Great to know about Haniffa esq! He shd work hard & more to make mutual respect!trust!Understanding!friendship ! Cooperation!among all Tamil speaking people in this critical time in Srilanka!!
    We shd form “Good Citizens Alliance-Sri Lanka” soon to unite all good Citizens & face dangerous situation soon! United we survive! Or China win soon!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: