
இந்து சமயத்தில் ஹரனும் ஹரியும் சேர்ந்து சபரிமலை ஐயப்பன் என்னும் தெய்வத்தை உருவாக்கினார்கள். இரண்டு ஆண் தெய்வங்களுக்கு வாரிசான ஐயப்பனுக்கு மாலை போட்டால் அம்மாதம் முழுவதும் பெண் உறவை தவிர்க்க வேண்டும்.
இந்த கதையின் அடிமூலத்தை நான் ஆராய விரும்பவில்லை.
எனது கதையில் வரும் ஹரியும் ஒரு விசித்திரப் பிறவி. நமது கதாநாயகன் மெக்சிக்கோவில் ஓர் ஏரியில் பிறந்தான். அதுவும் 250 மில்லியன் வருடங்களுக்கு முன்பாக அவதரித்தவன்.
அந்தக் காலத்தில் மனிதர்கள் தோன்றவில்லை. ஏன் டைனேசர் கூட தோன்றவில்லை. தற்போது காணப்படும் தாவர வகைகள் கூட தோன்றவில்லை.
ஆண்டவன் இருந்தானோ எனக்குத் தெரியாது. ஆனால் எந்தச் சமயமும் அந்தக் காலத்தில் இருக்கவில்லை. மனிதன் தோன்றாமல் மதம் எப்படித் தோன்றியிருக்க முடியும்?
”சக்தி ஓரு நீர் வாழும் பாக்ரீரியா, ஏரியில் தனிமையாக வாழ்ந்தாள். உறவினர் ஒருவருமில்லை. எல்லாரும் இறந்துவிட்டார்கள். சக்தியின் சகோதரியும் கடைசியில் இயற்கை எய்திவிட்டாள். இக்காலம் போல் இனகலவரத்திலோ அல்லது அணுக்குண்டுக்கோ இரையாகி அவர்கள் இறக்கவில்லை. இயற்கையின் அகோரத்தால் அவர்கள் அழிக்கப்பட்டவர்கள்.
மழைவெள்ளத்தால் ஏரி நிரம்பும் போது பல மடங்கான உப்புகளை வெள்ளம் கொண்டு வந்து சேர்த்தது. தொடர்ச்சியாக வந்த உப்பினால் எந்த ஜீவராசிகளும் சுவாசிக்க முடியவில்லை. ஆரம்பத்தில் கடலை விட பலமடங்கு அதிகமாக இருந்த உப்பு கடைசியாக பளிங்காக மாறியது. வாழ்வதற்குத் தண்ணீர் கிடைக்காமல் உப்புத் தண்ணீரில் வாழும் பக்ரீரியாக்களும் மரணத்தை தழுவின.
இயற்கை மாதா இரு கட்டளைகளை எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவாக இட்டாள். எல்லாரும் வாழவேண்டும் அத்துடன் தங்கள் வாரிசுகளையும் உருவாக்க வேண்டும். இந்த கட்டளையை சிரமேற்கொண்டு வாழும் உயிரினங்களில் பக்ரீரியாக்கள் முதன்மையானவை. இவை இரண்டாக பிறந்து தமது வாரிசுகளை உருவாக்கும். இந்த ஜந்துகளுக்கு பெரும்பாலும் கலவி சுகம் கிடைப்பதில்லை. சில இடர்பாடுகள் வரும்போது கலவி செய்து பரம்பரை அலகை (Gene ) மாற்றும் இதன் வழிமுறையில் தான் மனிதன் இப்பொழுது (Genetic Engineering) என புதிய பெயர் கொடுத்தான்.
.
மீண்டும் எமது ஹரியை சந்திப்போம்.
”சக்தி” இரண்டாக பிளந்து ஹரன், ஹரி எனும் இருவாரிசுகளை உருவாக்கிவிட்டுச் சென்றாள்.
மனிதரைப் போலல்லாது பக்ரீரியாக்கள் இருபது நிமிட நேரம்தான் வாழமுடியும். இதற்கும் வாழ்க்கையில் கடைசித்துளியையும் அநுபவித்துவிட்டு வாரிசை உருவாக்கிவிட வேண்டும்.
ஹரனதும், ஹரியினதும் சம்பாஷனையைக் கேட்போம். இருவருக்கும் பளிங்கில் வாழ முடியவில்லை. நடுங்கியபடியே சம்பாஷிக்கிறார்கள்.
ஹரி: உடம்பெல்லாம் வலிக்கிறது. வாழ்க்கையே வெறுக்கிறது;.
ஹரன்: வேறுவழி இல்லை. தற்கொலை செய்வோம்.
ஹரி: டேய் தற்கொலை செய்வது கோழைத்தனம்.
ஹரன்: தற்கொலை செய்வது வீரமாகும். தன் உயிரை எடுப்பதற்குத் துணிவு வேண்டும்;. வீரம் வேண்டும் கடைசிவரையும் இருந்து இழுத்துச் சுருங்கி இறப்பது எனக்குப் பிடிக்கவில்லை.
ஹரி: எம் தாயும் உன்னைப் போல் நினைத்திருந்தால் நாங்கள் உருவாகி இருப்போமா? மேலும் போராடி வாழ்வதே வாழ்க்கை அதுதான் எனக்குப் பிடிக்கும்.
ஹரன்: எனது உடல் பாதி சுருங்கிவிட்டது. மறுபாதி உப்புப் பளிங்காகிவிட்டது. இந்தநிலையில் நீ வாழும் சந்ததியைப் பற்றிப் பேசிக்கொண்டிருகிறாய்.
ஹரி: உன்னைத் திருத்த முடியாது. நான் எங்கள் இனத்துக்கே உரிய கடைசி ஆயுதமாக (Spore) (விதை) ஆகப்போகிறேன்.
ஹரன்: உப்புப்பளிங்கில் விதையாகி என்ன செய்யப்போகிறாய்? எப்பொழுது மீண்டும் உயிர்ப்பெற்று வாழமுடியும். பல மில்லியன் காலங்கள் ஆகலாம். அக்காலத்தில் நீ வாழும் சூழல் இருக்குமா? என் வழிக்கு வரச் சொல்லவில்லை. ஆனால் உனது வாழ்க்கை நிரந்தரமான கேள்விக்குறியாக மாறும் என எச்சரிக்கிறேன்.
ஹரி: நம்பிக்கை இருந்தால் மில்லியன் அல்ல பில்லியன் வருடங்களானாலும் உயிர் வாழலாம். உன்னைப் போல் நான் தற்கொலை செய்யப் போவதில்லை.
ஹரன்: தற்கொலை செய்தால் வீரசுவர்க்கம் அடையலாம். எமது இனத்தில் பலர் உன்னை வாழ்த்துவார்கள். இனிவரும் பக்ரீரியாக்கள் எல்லாம் உன்பெயர் சொல்லும். எதற்கும் சகோதர பாசத்தில் உனக்குச் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டேன். நான் போகிறேன் என்று கூறியபடி தனது கடைசி மூச்சை விட்டது.
ஹரி: தனது உடலைப் போர்வை மூடுவது போல் ஒரு ஆடையை உருவாக்கி> விதை (Spore) ஆகியது. சில நிமிட நேரத்தில் ஹரியைச் சுற்றி உப்புப் பளிங்கு உருவாகியது மட்டுமல்லாமல் முழு ஏரியும் பளிங்குப் பாறையாகியது.
இந்தச் சம்பவம் நடந்து இருநூற்றைம்பது மில்லியன் வருடங்கள் ஆகிவிட்டது. புதிய மிருகங்கள் உருவாகின. வூலிமமத் போன்ற மிருகங்கள் அழிந்துவிட்டன. நதிகள் பல தோன்றின. சில நதிகள் வற்றிப் போயின. டைனோசர் உருவாகிப் பின் அழிந்துவிட்டது. மனிதன் என்னும் புதிய இருகால் விலங்கு உருவாகி நூறாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. சமயங்கள் உருவாகின. ஆண்டவனுக்குப் பல பெயர்கள் சூட்டி மகிழ்ந்தார்கள்.
யேசு கிறிஸ்துநாதர் பிறந்து இரண்டாயிரம் வருடத்தில் சில ஆராய்ச்சியாளர்கள் அகழ்வராச்சியில் பாறைகளை உடைக்கும் போது பாறைகளுக்கு இடையில் உப்புப் பளிங்கைக் கண்டார்கள். உப்பை உருக்கி ஆராய்ச்சி செய்த போது நமது கதாநாயகனாகிய ஹரியைக் கண்டார்கள். ஆனந்தக் கூத்தாடினார்கள். துள்ளிக் குதித்தார்கள். ஹரியின் வயதைக் கணித்தபோது 250மில்லியன் என அவர்களது கணனி காட்டியது.
ஹரியின் கனவு நினைவேறியது. இருபது நிமிடம் வாழத் துடித்த கதாநாயகன் இருநூற்றைம்பது மில்லியன் வருடம் வாழ்;ந்து விட்டுத் தனது வாரிசாக இரு நீர்வாழும் பக்ரீரியாக்களைத் தந்துவிட்டு மறைந்தான்.
இருபத்தைந்து வருடத்துக்கு மேல் தென்னாபிரிக்கச் சிறையில் வாழ்ந்த நெல்சன் மண்டேலோவையும்> இருபத்திரண்டு வருடம் இந்தோனிசிய சர்வாதிகாரி சுகட்டோவினால் சிறை வைக்கப்பட்ட சுபந்தியோவைப் போல் மனிதரால் போற்றப்படாவிட்டாலும், விஞ்ஞானச் சரித்திரத்தில் தன் பெயரைப் பொறித்துவிட்டுத் தன்தாய் சென்ற இடத்துக்கு எமது ஹரியும் சென்றான்.
மறுமொழியொன்றை இடுங்கள்