11கரையில் மோதும் நினைவலைகள்:நிரந்தர வேலை

                                                  நடேசன்

“ உங்கண்ணன்கள் மாதிரி வந்திராதே  “  என அடிக்கடி இரண்டு வார்த்தைகள் மந்திரமாக உச்சரிக்கப்படும். எனது இரண்டு அண்ணன்மார்  அக்காலத்தில் காதல் திருமணம் செய்ததால் தங்களது கல்வியையும் வசதியான வாழ்வையும்  தொலைத்தவர்கள் என்பது அம்மாவின் கருத்து.  எனது ஒன்று விட்ட அண்ணர்மார் இருவரை உதாரணமாகக் காட்டுவார்.

காணும் பெண்களை எல்லாம் காம உணர்வோடு பார்க்கும் விடலைப் பருவத்தில் அம்மாவின் வார்த்தைகள் கடல் நீராக நாக்கில் கரிக்கும்.  வீட்டில் வேலை செய்த பெண் சிறுமி ஒருத்தி பெரிய பிள்ளையாகியபோது,  எச்சரிக்கையாக ஆண்பிள்ளைகள் உள்ள வீடென அந்தப் பெண்ணை வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.

 பெரியம்மாவின் மகன் மணியண்ணை,  தனது உறவினரான ஒரு பெண்ணைக் காதலித்து மணந்தபின்,  தனது பிறந்த குடும்பத்தை மறந்து உறவுகளற்று, அக்காலத்திலே தென்னிலங்கையிலே வாழத் தொடங்கியிருந்தார். அதேபோல் சீனியம்மாவின் மகனான அடுத்த அண்ணனை,  அக்காலத்தில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் விட்டுப் படிப்பித்தபோதிலும், அவர் படிப்பைத் தொடராது  விட்டுவிட்டு  ஒரு பெண்ணைக் காதலித்தார்.

இவ்வாறு இவர்கள் இருவரும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தபடியால் அம்மா பல தடவைகள்  “  உங்கண்ணன்மார் போல் வந்திராதே…”   எனக் கூறுவது வழக்கம். அக்காலத்தில் அறிவுரைகள்  ஒரு காதால் கேட்டு அடுத்த காதால் வெளியேறும் என்பது பல பெற்றோருக்குத் தெரிந்திருப்பதால் அவர்களும் அதை அடிக்கடி நித்தியபூசை மந்திரமாக உச்சரிப்பார்கள்.

கல்வியை புறந்தள்ளியவர்களாகினும்,  படிக்கிறோமோ இல்லையோ,   அக்காலகட்டத்தில் ரியூசன் என்பது எங்களுக்குச் சொர்க்க வாசலானது இந்துக் கல்லூரி மாணவர்களாகிய எங்களுக்கு அப்பொழுதுதான் பெண்களைப் பார்க்க முடியும்.

72  ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் யாழ்பாண நகரத்தின்  மத்தியில் தாவரவியல் – அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் பௌதீகவியல் படிப்பதற்கும் கிழமைக்கு தலா மூன்று நாட்கள் நண்பர்களுடன் சென்றேன். எங்கள் கல்லூரியின் இறுதிப்பாடத்தை புறக்கணித்ததால் சைக்கிளில் ஒரு கூட்டமாகச் சென்று,   இரண்டு பெண்கள்  பாடசாலைகள் முடிந்து வெளியேவரும்  அந்தச் சிட்டுகளைத் தரிசிப்போம்.

 அந்தத்  தரிசனம் முடிந்ததும்,   ரியூசனுக்கு  வராதவர்கள் எங்களிடமிருந்து பிரிந்து  வீடு செல்வார்கள்….?

  நானும்  கணேசன் என்ற நண்பனும்  மாலை ஐந்து மணிக்கு ரியூசனுக்குள் அழகிய தரிசனங்கள் கிடைத்த  மனநிறைவோடு நுழைவோம்.

எங்களுக்குத்  தாவரவியல் கற்பித்த ஜெயவீரசிங்கம் மாஸ்டரை அக்காலத்தில் எமது ஹீரோவாகவே  நினைத்தோம்.  அவர் எமக்கு நன்றாக கற்பித்ததோடு,  அழகாகவும்  உடுத்திருப்பார். ஸ்கூட்டரில் மடிப்புக் கலையாத உடைகளுடன் காற்றுக்குச்  சிலும்பாத தலைமயிருடனும் வந்திறங்குவார்.

அவரது வகுப்பில் பெரும்பாலானவர்கள் பெண்கள், குடாநாட்டின் பல பாடசாலைகளிலிருந்தும்  வருவார்கள். யாழ். இந்துக்கல்லுரியில் படித்த எங்களுக்கு,  மலர்வனத்துக்குள் செல்வது போன்ற அனுபவம். இங்கிருந்துதான் எனது வாழ்வின் துணை, ஒரு  பட்டாம்பூச்சியாக தோளில் வந்தமரும் என்ற விடயம் அப்போது  கனவிலும் வந்து போகவில்லை.

ஜெயவீரசிங்கம் மாஸ்டர் முதல்நாள் கற்பித்தவற்றில் கேள்வி கேட்பார். பெண்கள் மத்தியில் நட்ட மரமாக இருப்பதைத் தவிர்ப்பதற்காக அவர்  படிப்பித்தவற்றோடு,  அன்று படிக்க வேண்டியதையும் படித்துவிட்டுச் செல்வேன்.  உயரத்தினால் கடைசி வாங்கில் இருக்கும் என்னிடம் அவரது கேள்விகள் அனைத்திற்கும் பதில் கிடைக்கும். இதனால் பல கழுத்துகள் சரேலென பிடித்துக் கொள்ள என்னை நோக்கித் திரும்பும். அதில் இரண்டு கண்கள் எனது  நெஞ்சத்தில் ஆழமாகக் கீறின.

எனக்குச் சிறுவயதிலே கண்ணில் தூரப்பார்வையில்லை.  கரும்பலகையில் வார்த்தைகள்,  எழுத்துகளின் அணிவகுப்பாகத் தெரியும்.  ஆனால்,   நான் மட்டுமல்ல  அந்தக் குறைபாட்டை எனது  பெற்றோரோ,  ஆசிரியர்களோ கவனிக்கவில்லை. பாடசாலை வகுப்பில் எனது உயரத்தால் கடைசி வாங்கில் இருத்தப்படுவேன். ஆசிரியரது வார்த்தைகள் காதுக்குக் கேட்டு,  விடயத்தைப் புரிந்து கொண்ட பின்பு நல்லெழுத்துள்ள நண்பன் கணேசனிடம் வாங்கி மீண்டும் எழுதுவேன்.

ஒரு நாள் என்னுடன் வரும் எனது நண்பன் கணேசன் அன்று வரவில்லை.

யாரிடம் கேட்பது?

நெஞ்சுக்குள் நாணயத்தைச் சுண்டி பார்த்துவிட்டு,  என்னைப் பார்வையால் துளைத்த  பெண்ணிடமே எனது கண் குறைபாட்டைச் சொல்லாது  “ சில இடங்களை எழுத மறந்து விட்டேன்.  நண்பனும் வரவில்லை ” எனச்சொல்லி அவளிடம்  கொப்பியைக் கேட்டேன்.

அந்தக்  கொப்பியை வீட்டிற்கு எடுத்துச்  சென்று பார்த்தால் அவை புரியாத அன்னிய மொழியாகத் தெரிந்தன.  எதுவும்  புரியவில்லை.   

படிப்பித்த பாடம் புரிந்த எனக்கு,  விடயத்தைப் புத்தகத்தில் குறிப்பெடுக்க முடிந்தது.

மறுநாள் அந்த கொப்பியைக் கொடுத்தபோது தற்செயலாக விரல்கள் முட்டிக்கொண்டன. அத்துடன் முட்டிய எனது விரல்கள் சிலகணங்கள் எனது கைகளை விட்டு எங்கோ தொலைதூரம்  சென்று விட்டதாகத் தெரிந்தது. அந்த முகத்திலும் புன்னகை மாரிக்குளமாக வழிந்தது. சைக்கிளில்  வீடு வரும்வரையில் பாதையில் எந்த வாகனமோ மனிதர்களோ கண்ணுக்குத் தெரியவில்லை. கிட்டத்தட்ட நான்கு மைல் தூரம் வானத்தில் மிதக்கும் பறவையாக வந்தேன். அன்றிரவும் கனவுகளில் கழிந்தது.  அடுத்த நாள் மீண்டும் கொப்பியை வாங்கி அதில் ஒரு காதல்கடிதம்  வைத்துக் கொடுத்தேன். என்ன எழுதினேன் என நினைவுக்கு வர மறுத்தாலும்  அதனை எழுதி முடிப்பதற்குள்  கிட்டத்தட்ட பத்துக்கு மேற்பட்ட கடிதங்கள்  எழுதிக் கிழித்திருப்பேன்.

அதற்கு எதிர்மாறான பதில் வந்தாலோ அல்லது,  மாஸ்டரிடமிருந்து  முறைப்பாடு வந்தாலோ  என்ன செய்வது என்பதை சமாளிப்பதற்கு  வேறு திட்டமும் என்னிடம்  இருந்தது. இந்த ரியூசன் வகுப்பிலிருந்து சத்தமில்லாது விலகுவது என்பதும்  எனது திட்டமாக இருந்தது.. இதற்கேற்றபடி எனது நண்பனும் சில நாட்கள் வரவில்லை. மானம் மரியாதையோடு இரண்டாவது திட்டத்தை  அமுல் படுத்தமுடியும்  என்பதும் எனது எண்ணமாக இருந்தது.

கடிதம் கொடுத்த  மறுதினம் வகுப்பிற்குப் போனபோது அவளைக் காணவில்லை. எனது கடிதத்தால் இந்த ரீயூசனுக்கு அவள் வராது விட்டாளா?  நான் செய்தது எவ்வளவு அநியாயம் என்ற எண்ணத்தில் வகுப்பு தொடங்கும்வரை குற்ற உணர்வுடன் இருந்தேன். அதைவிட  அவளது அண்ணன் தம்பிமார்  யாராவது சண்டியர்களுடன் காத்திருப்பார்களா? என்ற எண்ணமும்  எனது உள்ளத்தின் ஓரத்தே எட்டிப்பார்க்கத்  தவறவில்லை.

யார்? 

ஊர்? 

எங்கிருப்பது? 

எந்தப் பாடசாலை? 

குடும்பம் பற்றி  எதுவுமே  தெரியாது,   இந்தப்பெண் நமக்குப் பிடித்தது என்ற  ஏதோ ஒரு உணர்வு மட்டுமே  நெஞ்சத்தில் இருந்தது.

இப்பொழுது  நினைத்துப் பார்த்தால் அது புரிந்து கொள்ள முடியாத புதிர்-    18  வயதில் காதலின் பெயரால்  உடலில்  ஹோமோன்கள் விளையாடிய சதுரங்கம்.

——

சென்னை.

சியாமளா யாழ்ப்பணத்தில் திருக்குடும்ப கன்னியர் மடத்தினரது வைத்தியசாலையில் வேலை செய்து கொண்டிருந்தபொழுது அதே வைத்தியசாலையில் – 1984 ஜுன் மாதம் 18 ஆம் திகதி எனது மகள் பிறந்ததும்,  அடுத்தது என்ன என்ற கேள்வி எழுந்தது.

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்துக் கொண்டிருந்தது. வேலை செய்யும் வைத்தியசாலைக்கு அருகிலும் அக்காலத்தில் குருநகர் இராணுவ முகாம் இருந்தது. எனது ஆலோசனைப்படி சியாமளா இந்தியா வரத்தயாரானார்.

இந்தக்காலத்தில் சென்னையில் எனக்கும் எதிர்காலம் விடையில்லாத வினாவாக நீடித்து இருந்தது. அடுத்து என்ன செய்வது…?

ஒரு சமூகமே பிறந்து வளர்ந்த நாட்டை விட்டு வெளியேறி அகதியாக அலையும் வேளையில்,   எனது மனைவிக்கு இந்தியாவுக்கு வெளிக்கிடும் நேரத்தில் ஏற்கனவே சொல்லியபடி அங்கு மேல் படிப்பு படிப்பதற்கு விருப்பமில்லை. ஓஃபர்  என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில்  செய்த வேலைகள் எனக்கு முற்றாகத்  திருப்தி தரவில்லை.

குகன்(பொன்னம்மான்) மூலம் விடுதலைப்புலிகளிடம் இருந்து வந்த அழைப்பை நிராகரித்து விட்டேன் . இந்த நிலையில் ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியில் இருந்த குணசேகரம் என்ற குண்சியை சந்தித்தேன். நாம் இருவரும் யாழ். இந்துக்கல்லூரியில் ஒரு வகுப்பு முன்-பின்னாக படித்தாலும் ஒன்றாக ஹொஸ்டலில் இருந்தவர்கள்.

சென்னையில் அக்கினி வெய்யில் அடித்தோய்ந்தாலும் இரும்படிக்கும் உலைபோல் இருந்த மாலைப்பொழுதில் சூளைமேட்டில் உள்ள பெட்டிக்கடை அருகே இருவரும் தேநீர் குடித்தபடி வில்ஸ் சிகரட் ஒன்றை நான் பற்றவைத்தபோது,  அவன் தனது ஃபில்டர் இல்லாத சர்மினார் சிகரட்டை நுரையீரல் எங்கும் இழுத்து நிக்கொட்டின் மூளையில் ஏறியதும் தனது தாடியை தடவியபடி “  ஏன் நீ எங்களோடு கும்பகோணம் வந்து தங்கக் கூடாது. இங்கு இருந்து என்ன செய்கிறாய்..? “  என சிறுவர் பாடசாலை வாத்தியாரின் தொனியில் கண்டிப்பாக விசாரித்தான். அப்படி பேசுவதுதான் அவனது வழக்கம்.

 “ நான் எதுவும் முடிவு செய்யவில்லை. மேலும் இந்த விடுதலைப் போராட்டம் பற்றிய தெளிவான அபிப்பிராயம் எனக்கில்லை. அதே நேரத்தில் மக்களுக்கு உதவி செய்ய நினைக்கிறேன்.  “ எனச் சொல்லிவிட்டு நான் யோசித்தபடியே கூர்மையான அவனது கண்களைப் பார்த்தேன்.

 “ நீ சுதந்திரமாக இயங்கலாம்.எங்கள் இயக்கத்துக்கு ஆட்கள் தேவையில்லை. இயக்கத்தோடு சேரவேண்டியதும் இல்லை.  “

அவனது கிண்டலை சட்டை செய்யாமல்,  “  இன்னும் சிலநாட்களில் எனது குடும்பத்தினர்  யாழ்ப்பாணத்தில் இருந்து வருகிறார்கள். அதன் பின்னர் அது பற்றி யோசிக்கிறேன். “  என்றேன்.

“ கும்பகோணத்திலிருக்கும் ஸ்ராலின் அண்ணையின் வீட்டில் நீ தங்குவதற்கு ஏற்பாடு செய்கிறேன். எதைப்பற்றியும் யோசிக்காதே.  “  என்றான்.

இயக்கத்தின் மத்திய குழுவிலும் நிதி விடயங்களுக்கும் பொறுப்பாக குண்சி இருந்தான். மேலும் மட்டக்களப்பு சிறை உடைப்பு சம்பவத்தில் முக்கிய பாத்திரமாகவும் அவன் இருந்தான் என்று கேள்வி. இரகசியமாக விடயங்களை வைத்திருப்பதிலும் மறைந்து திரிவதிலும் அதிசய அசாத்தியமான திறமை அவனிடம் இருந்தது.

அக்காலத்தில் கும்பகோணத்திற்கு அருகே உள்ள சிவபுரத்தில் இவர்களின் பயிற்சி முகம் இருப்பதை அறிவேன். மற்ற இயக்கங்களினது பயிற்சி முகாம்கள் ஓரத்தநாடு – சேலம் – தேனி என தமிழ்நாட்டின் பல இடங்களில் சிதறி இருந்தன.

மனைவி பிள்ளைகளுடன் எனது மாமா மாமியார் விமானமூலம் கொழும்பு ஊடாக சென்னை வந்து இறங்கினர். அவர்களை நண்பன் பரந்தாமனின் வீட்டில் தங்க வைத்தேன் அந்த வீட்டிற்குத்தான் எல்லா ஈழமக்கள் புரட்சிகர முன்னணியிரும் வருவார்கள்.  அங்குதான் எனது மகள் வந்து இறங்கியபோது வரவேற்று உள்ளே அழைத்து சென்றார் பத்மநாபா.

இரண்டு கிழமையில் கும்பகோணம் சென்று ஸ்ராலின் அண்ணாவின் வீட்டில் தங்கினோம்.

இந்த ஸ்ராலின்,   வை. கோபாலசாமி போன்றவர்களோடு ஒன்றாக படித்த வழக்கறிஞர். திராவிடர் கட்சி ஆதரவாளராக இருந்தவர். பெரியாரின் மறைவின் பின்பு வீரமணி – ஆனைமுத்து என பிளவுகள் – சொத்துக்கள் – கொள்கைகள் என பிரிந்தபோது இயக்க கொள்கையுடன் மட்டும் நின்றதுடன் ஈழ மக்களிடமும் அவர்களின் விடுதலை மீதும்  மிகவும் பற்றுக்கொண்ட மனிதர்தான் இந்த ஸ்ராலின், உயரமானவர். மீசை வைத்தவர் மலையாள நடிகர் மம்மூட்டி மெலிந்தால் எப்படி இருப்பாரே அப்படிப்பட்ட தோற்றத்தில் இருப்பார். ஈழமக்கள்  புரட்சிகர முன்னணியின் ஒரு காவலனாக அவர் அங்கு இருந்தார். அவரது வீட்டிற்கு எந்த நேரத்திலும் ஆட்கள் வருவதும் அங்கு தொடர்ச்சியாக சமையல் நடப்பதும் அன்றாடக்காட்சிகள். அண்ணை என சொல்லிக்கொண்டு அவரோடு எப்பொழுதும் குறைந்தது இரண்டு பேராவது இருப்பார்கள்.

அவர்கள் வீட்டில் இருக்கும்போது எனது மாமியாருக்கும் எனக்கும்  பிரச்சினை உருவாகியது. எனது மகளை – தனது பேத்தியை நான் யாரோ ஒரு அந்நியர் வீட்டில் வைத்திருப்பதாகவும் குழந்தை பெற்ற தனது மகளை அங்கு வைத்து கவனிப்பதற்கு வசதிகளும் இல்லை என்றும் படுக்க கட்டில் இல்லை என்றும் என்மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கியவாறு இருந்தார் மாமியார். அவரது நச்சரிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தன.

கும்பகோணத்தில் நான் எதிர்பார்த்த விதமாக வேலை எதுவும் இல்லை. நான் இயக்கத்தின் பயிற்சி முகாமுக்குச் சென்று பார்த்தேன். கும்பகோணத்திற்குப்  புறமே அமைந்த பெரிய தோட்டத்தில் பயிற்சி முகாம் அமைந்த இடம் காவேரியாற்றின் கரையில் அமைந்திருந்த அழகான பிரதேசம். நான் பார்த்த காலத்தில் மிகக்குறைந்த ஆயுதங்களை மட்டும் வைத்துக்கொண்டு பயிற்சி செய்தார்கள். அத்துடன் அங்கு தேகப்பயிற்சியும் நடந்தது. மோட்டார் குண்டுகள் செய்யும் கடைச்சல் பட்டறை ஒன்றையும் அங்கு பார்த்தேன். ஒரு நாள் பத்மநாபா முகாமுக்கு வந்தபோது ஒரு ஏ கே 47 ஐ தூக்கி எனது கையில் தந்தார். கையில் எடுத்துப் பார்த்துவிட்டு வைத்துவிட்டேன்.

எனக்கு ஆயுதங்கள் மீது எக்காலத்திலும் கவர்ச்சி இருந்தது இல்லை. எனது சிறிய வயதுப் பருவகாலத்தில் எங்கள் வீட்டில் ஒரு துப்பாக்கி இருந்தது. அதை எக்காலத்திலும் நான் தொடவேயில்லை. பிற்காலத்தில் மதவாச்சியில் வேலைபார்த்தபோது வேட்டைக்கு போனபோதும்கூட துப்பாக்கியைத் தொட்டதில்லை. செட்டிகுளம் பகுதியில் வேட்டைக்குச்  சென்றாலும் ஆயுதத்தை பாவிப்பது எனது நண்பர்களே.

ஆதிகாலத்தில் இருந்து தன்னம்பிக்கை இல்லாதவர்கள் ஏந்துவதுதான் ஆயுதம் என்பது எனது நினைப்பு. ஆனாலும் ஆயுதம் இல்லாத உலகம் இராது என்பதுதான் நிதர்சனம்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பயிற்சி முகாமில் எனக்கு அதிர்ச்சி கொடுத்த விடயமும் அதேவேளை என்னைக் கவர்ந்த விடயம் ஒன்றும் இருந்தது. அக்காலத்தில் அங்கு இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் எழுதப்படிக்க தெரியாதவர்கள் என்பது,  முக்கியமாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. அதேவேளையில் அங்கு பயிற்சி எடுத்தவர்கள் பயிற்சி முடித்தபோது எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக வெளியேறியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுத்தது. பெரும்பாலானவர்கள் யாழ்ப்பாணத்தின் ஒடுக்கப்பட்ட சமூகத்தையும் மலையகத்தையும் சேர்ந்தவர்கள் என்பதும் இதற்குக் காரணம்.

பயிற்சி முகாமில் உள்ளவர்களுக்கு ஒழுங்காக உணவு கொடுக்க முடியாதிருந்ததையும் அங்கு பார்த்தேன். பெரும்பாலான நாட்களில் அவித்த கொண்டல் கடலையை அல்லது பயறு வகையறாக்களை அவர்களது தட்டுகளில் கண்டேன். அரிசிச் சோறு மதியத்தில் பார்க்க முடியும். பல உறுப்பினர்கள் கும்பகோணத்தை சுற்றியுள்ள கிராமங்களில் உண்டியல் குலுக்கி காசுக்கு கையேந்துவதையும் அரிசி – பருப்பு என கடைக்காரர்களிடம் வாங்கியதையும் பார்த்தேன்.

நாட்டிற்கு விடுதலை வாங்கித்தரப்போகிறோம் என ஆயுதம் ஏந்திய ஏனைய இயக்கங்கள் இவ்வாறு மக்கள் மத்தியில் – அதுவும் தமிழக விவசாய மற்றும் கிராமத் தொழிலாளர் மத்தியில் பணம் திரட்டுவதற்கு இறங்கியிருக்கவில்லை. ஆனால் – இப்படியான சிந்தனைக்கு மாவோயிசம்- லெனினிசத்தில் ஊறிய இந்திய மார்க்சிச தோழர்களுடன் தோழமை கொண்டிருந்த பத்மநாபாவால் மட்டுமே முடிந்தது என நினைக்கிறேன்.

எழுதப் படிக்கத் தெரியாத அந்த இளம் தலைமுறையினர் மத்தியில் மிகவும் வசதியான குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் – பல்கலைக்கழகங்களை அரைவாசியில் விட்டுவிட்டு வந்தவர்கள் என பலர் இருந்தார்கள். நாட்டின் விடுதலை என்ற பேரில் துன்பங்களை தாங்குவது மட்டுமல்ல – ஏழைகள் தொழிலாளர்களுடன் வாழ்வது எப்படி என்பதையும் பயிற்சியாக எடுத்து இயக்கத்தை ஒரு சமூக சீர்திருத்தமான இயக்கமாக பத்மநாபாவின் தலைமையில் சில காலங்களாவது ஈழமக்கள் புரட்சிகர முன்னணி இயங்கியதை அவதானித்து இலங்கையில் தமிழர் மத்தியில் மீண்டும் ஒரு நல்ல தலைமை வருமானால் அவர்களின் கீழ் மக்கள் அணிசேர்வதற்கான சாத்தியம் உண்டென்பதை மட்டும் என்னால் எதிர்வு கூற முடியும்.

ஒரு விவசாய நாடான இலங்கையில் மத்தியதர வர்க்கத்தினரையும் விவசாய தொழிலாளர்களையும் இனத்துவேச அரசியல் பேசாது ஒரே அணியில் சேர்ப்பது என்பது மிகக் கடினம். ஆனால்,  அந்தக் கடினமான வேலை சில வருடங்களாவது பத்மநாபாவின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்தியத் தலையீடு, விடுதலைப்புலிகளின் மிலேச்சத்தனம் என்பன பத்மநாபா மட்டுமல்ல எவருமே எதிர்பார்க்க முடியாதது.

கும்பகோணத்தில் தனிவீடு எடுத்த பின்பு குடும்ப நிலைமை ஒரு அளவில் சீரடைந்தது. இந்தக் காலத்தில் எனது யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி நண்பனாகிய கிருபாகரனை சந்தித்தேன். அவன் கிழக்கு மாகாணம் காரைதீவில் இருந்து வந்தவன். மிக வளமான உடற்கட்டுடன் எட்டாம் வகுப்பில் இருந்து இந்துக்கல்லூரியில் ஹொஸ்டலில் இருந்து படித்தவன். இருவரும் அங்கு நியூ போடிங்  –  ஓல்ட் போடிங் இரு கட்டிடத்திலும் ஒன்றாக இருந்தோம். அவனை சந்தித்தபோது நம்பிக்கையுடன் பேசினான்.  “   ஈழம் வந்திடும். ரோ நமது தோழர்களுக்கு வட இந்தியாவில் பயிற்சி கொடுக்கிறது.”   என்பான். அவனுக்கு அடிக்கடி குலாப் ஜாமுன் வாங்கிக் கொடுப்பேன். அவனுக்கு இனிப்பில் அளவுகடந்த ஆசை.

சில கிழமைகளில் உத்தரப்பிரதேசத்தில் பயிற்சி எடுத்தவர்களை சந்தித்தேன். அதில் ஒரு சுவையான விடயம் இங்கு குறிப்பிட வேண்டும். இலங்கைக் காட்டில் எப்படி கரந்துறைந்து, உயிர் வாழ்வது என்பதுபற்றி அவர்கள் சொல்லியிருந்தார்கள். இலங்கையில் கபரக்கொய்யா என்ற முதலை இனத்தைத் தவிர, மற்ற  எல்லா இறைச்சியையும் சாப்பிட முடியும் என்று சொல்லியிருந்தார்கள். அந்தப் பயிற்சியை முடித்த இருவர் அங்கு நின்ற மெலிந்த கரும்பூனை ஒன்றை துரத்தியதைப் பார்த்தேன். இவர்களால் இலங்கை இராணுவத்திற்கு அபாயம் உண்டாகிறதோ இல்லையோ கோடம்பாக்கத்தில் நின்ற பூனைகளுக்கு ஆபத்து வந்ததுவிட்டது என்பதை உணர்ந்து கொண்டேன்.

இக்காலத்தில் 1984  ஓகஸ்ட் 6 ஆம் திகதி நடந்த ஒரு சம்பவம் முக்கியமானது. மீனம்பாக்கத்தில் பனாகொடை மகேஸ்வரனால் கொழும்புக்கு அனுப்பவிருந்த குண்டு வெடித்தது. இந்தச்  சம்பவம் இந்தியாவை குறிப்பாக தமிழ்நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அக்காலத்தில் சூரியா என்ற இந்திப்பத்திரிகையில் விபரமாக இந்தியா ஈழத்தமிழ் இளைஞர்களுக்கு பயிற்சி கொடுப்பது பற்றி எழுதியிருந்தாலும் இந்தியா தொடர்ச்சியாக அதனை மறுத்தது. ஆனால் – இந்தக் குண்டு வெடிப்பு சம்பவம் குதிருக்குள் இருந்த திருடனை காட்டிக்கொடுத்தது.

கும்பகோணத்தில் இருந்த காலத்தில் பல முறை நான் சென்னை வந்து தங்குவேன். ஒரு நாள் 1984 நவம்பர் முதலாம் திகதி காலையில் எழுந்து காலை ஆகாரத்திற்கு வெளியே சென்றபோது பாண்டிபஜார் முற்றாக வெறிச்சோடியிருந்தது. பெரிய கடைகள் மட்டுமல்ல நடைபாதைக் கடைகள் எல்லாம் மூடப்பட்டு இருந்தன.

வழக்கமாக இடியப்பம் சாப்பிடும் மலையாளியின் கடை நோக்கிச்  சென்றபோது,   அது மட்டுமல்ல அங்கு எந்த உணவுக்கடைகளும் திறக்கப்படவில்லை.மக்கள் நடமாட்டமற்றிருந்தது. சில நிமிடம் நடந்தபோது ஒரு மரத்தடியில் பிச்சைக்காரனைப்போல் தோற்றம்கொண்ட ஒருவரை சந்தித்தேன்.

அவர்,  “   நேற்று இந்தியப்பிரதமர் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டதாகச்   “  சொன்னார். வெளியே உணவுண்ணும் எனக்கு சென்னையில் பட்டினிதான் என நினைத்துக்கொண்டு நடந்து கோடம்பாக்கம் நோக்கி நடந்தபோது மேம்பாலத்தருகில் மூடப்பட்ட ஒரு சிறிய பெட்டிக்கடையில் ஆளரவம் தெரிந்தது. அந்தக் கடையின் கதவைத் தட்டினேன்.

” பந்… நடக்குது. போ சார்  “  என ஒருவர் விரட்டினார்.

பசிக்கிறது என்றபோது நாலு பழங்களைத் தந்து   “ சீக்கிரம் வீடு போ சார்.  “  என்றார்.

நான் நாடற்று வீடற்று திரிபவன் என அவருக்குச் சொல்ல முடியுமா?

பணம் கொடுத்தபோது வாங்க மறுத்தார்.

அப்படியே சூளைமேடுவந்து ஈழமக்கள் புரட்சிகர விடுதலை இயக்கத்தின் எபிக் என்ற இடத்தில் உணவு உண்டுவிட்டு அங்கிருந்தவர்களுடன் இந்திராகாந்தியற்ற இந்தியாவையும் அவர் அற்ற ஈழவிடுதலையையும் அங்குள்ள தோழர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன்.

——–

வாணம்பூல் -அவுஸ்திரேலியா

வாணம்பூலில் இருந்து கொண்டே  கிழமைகள், சில நாட்கள் மெல்பேனில் குறுகிய காலம் லோக்கம் வேலை செய்தேன்

 இலங்கையில் நான்கு வருடங்களின் பின்பு  செங்கல்பட்டருகே உள்ள ஒரு சிறிய மாட்டுப்பண்ணையில் வேலை செய்ததால் , என்னால் அவுஸ்திரேலியாவில் உள்ள பால் மாடுகள் உள்ள இடங்களில் வேலை செய்வது இலகு என நினைத்தேன். அத்துடன் வாணம்பூலில் மிருக வைத்தியர்களோடு பல விக்ரோரியப்  பண்ணைகளுக்குச் சென்று பார்த்திருப்பதால் எனது வேலை விண்ணப்பங்களில்  அவுஸ்திரேலிய புறநகரங்களில் வேலை செய்வதற்காக விண்ணப்பித்தேன். எனது 40 -50 வேலை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு பதில் வந்தது.

 இறுதியில் மெல்பனுக்கு அருகாமையில் பால் பண்ணைகள் உள்ள பகுதியான பக்கஸ்மாஷ் என்ற இடத்தில் துணை  வைத்தியர் பணிக்கு  விண்ணப்பித்தபோது,   நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்தது. அங்கு போனபோது எனது வயதான ஒரு மிருக வைத்தியர் என்னுடைய சகல விபரங்களையும் அவதானமாகக் கேட்டு விட்டு,   இறுதியில்                 “ உமது வேலை அனுபவங்கள் எல்லாம் சரியாக இருக்கிறது. இந்த வேலைக்குப் பொருத்தமான ஆள் என்பதில் சந்தேகமில்லை. ஒரே ஒரு பிரச்சனையைப் பற்றித்தான் யோசிக்கிறேன்  “  என முகத்தைப்  பார்த்தபடி கூறினார்.

 “ என்ன? “   என ஆவலுடன் கேட்டேன்

 “ இந்தப்பகுதி பண்ணை விவசாயிகள் எப்படி உம்மை ஏற்றுக்கொள்வார்கள் என்பதே ஒரு யோசனை.  எதற்கும் நான் நன்கு யோசித்தது விட்டு உம்மைத் தொடர்பு கொள்கிறேன்  “  என்றார்.

அந்தப் பதில் எனக்குப் புத்தர் அரச மரத்தின் கீழ் பெற்ற ஞான நிலை மாதிரி இருந்தது. நானும் நிர்வாணமாக நிற்பதாக உணர்ந்தேன்.

இந்த நாட்டில் மாட்டுப்பண்ணைகளில்  நான் வேலை செய்வது கடினம். அப்படி வேலை கிடைத்தாலும் வாழ்க்கை தினம் தினம் போராட்டமாக,  தண்ணீரற்ற குளத்தில் நீந்தும் விடயமாக இருக்கும்.   தேவையான அனுபவம் இல்லாத போதும் நான் நகர்ப்புறங்களில் நாய்,  பூனை போன்ற செல்லப்பிராணிகளோடு வேலை செய்வதற்கு என்னைத் தயார்ப்படுத்தவேண்டும் என நினைத்துக் கொண்டேன்.

அன்றிலிருந்து எனது வேலை விண்ணப்பங்களைஅனுப்புவதற்கு நகர்ப்புறங்களில் உள்ள மிருக வைத்தியசாலைகளையே தெரிவு செய்தேன்

இதேவேளையில்,  அரச மிருக வைத்தியராக விண்ணப்பித்து மாடு,  பன்றிகளை வெட்டுமிடத்தில் இறைச்சியின் சுத்தத்தையும்,  மிருகங்களின் சுகாதாரத்தையும் பராமரிக்கும்  மிருக வைத்தியராக செல்லும்படி  பலர் அறிவுறுத்தினர் . அதில் அதிக சம்பளத்துடன்  நிரந்தரமான அரசாங்க வேலையும்  என்றார்கள்.  அதையும் நிராகரித்துவிட்டு,  மெல்பனில் தொடர்ந்து சில குறுகிய நாள் வேலைகளைச் செய்தேன். மெல்பன் பல்கலைக்கழகத்தில் இன்ரன்சிப்பாக வேலை செய்வதற்கு ஒரு நேர்முகம் வந்தபோது,  அது  கிடைத்தால் மேற்படிப்புக்கும்  வசதி என  அதனை விரும்பினேன்.   அதுவும் கையை விட்டு நழுவியது. மெல்பனில் இன்னுமொரு இடத்தில் நேர்முகத்தில்,  என்னிடம்  ஒரு நாயைத்தந்து அதற்கு  சத்திர சிகிச்சை  செய்ய வைத்தார்கள்.  அதனைச்  செய்து முடித்ததால் அந்த வேலை உறுதியாக கிடைக்குமென்றும்  நம்பியிருந்தேன்.   ஆனாலும் நிராகரிக்கப்பட்டேன்.

மெல்பனில் நோர்த்கோட் என்னுமிடத்தில் ஒரு வைத்தியர் விடுமுறையில் சென்றபோது,   இரண்டு கிழமைகள் அங்கு  வேலை செய்தேன். அக்காலத்தில் நண்பர் தர்மசேகரம் வீட்டில் மெல்பனில்,  தற்காலிகமாக இருந்தேன். இப்படி நான் அலைந்த காலத்தில் குடும்பத்தினர் இன்னமும் வாரணம்பூலிலே இருந்தார்கள். மனைவியிடத்தில்  வேலை இருந்தபடியால்  பணத்திற்கான பிரச்சினை  இருக்கவில்லை. அவுஸ்திரேலியாவுக்கு வந்து கிட்டத்தட்ட நான்கு வருடங்கள்,  ஆனால்,  நிரந்தரமான தொழிலற்ற விரக்தி அதிகமாக இருந்தது.

வார்ணம்பூலில் பிள்ளைகள் பராமரித்தல்,  சமையல் போன்ற  கடமைகளும்,  மாமன் மாமியார் வந்திருந்ததால்  என் கைவிட்டுப் போயிருந்தது. எதற்கும் லாயக்கற்றவன் என்ற பட்டத்துடன் இருந்த  இக்காலத்திலே லோர்ட் சிமித் மிருக வைத்தியசாலைக்கு நேர்முகத்திற்கு அழைப்பு வந்தது.

 மூன்று மணித்தியால காரோட்டத்தில் மெல்பன்   வந்தபோது அது 15 வைத்தியர்கள் வேலை செய்யும்  பெரிய மிருக வைத்தியசாலை என்பது தெரிந்தது.  நேர்முகத்திற்கு வந்த போது போர்த்துக்கீச-கிழக்கு தீமோரில் இருந்து அஸ்திரேலியா  வந்து அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த  தலைமை வைத்தியரை சந்தித்தேன். அவர் எந்தக் கேள்விகளும் கேட்காமல் ,  கணக்காளரிடம்  அழைத்துச்  சென்று   “ இவரே புதிய வைத்தியர் என்றார். எந்தக் கேள்வியும் கேளாது அப்படிச் சொன்னவரை  ஆச்சரியத்துடன் பார்த்தேன். எனது பார்வையைப் பொருட்படுத்தாது,    “ இன்று  முதல் இங்கு வேலை செய்யமுடியுமா ?  “   என  அடுத்த கேள்வி வந்தது.

கரும்பு தின்னக் கூலியா..?  என்ற மன நிலையுடன் எனது வேலையை தொடங்கினேன்.  அன்றைய தினமே  கிட்டத்தட்ட 25  இற்கும்  மேற்பட்ட நாய்-   பூனைகளுக்கு சிகிச்சை செய்தேன்.  

எங்களது ஊரில் அரசினர் மருத்துவமனையில் காத்திருப்பதுபோல் செல்லப்பிராணிகளோடு உரிமையாளர்கள் காத்திருந்தனர்.  வேலை முடிந்த பின்பு அருகில் உள்ள ஒரு மதுபான விடுதிக்கு அழைத்துச் சென்றார். நானும் எதுவும் கேட்காது பின் தொடர்ந்தேன்  எனக்கும் சேர்த்து பியரை ஓடர்பண்ணிவிட்டு   “ ஏன் உம்மை இந்த வேலைக்கு எடுத்தேன்  தெரியுமா?  “ என அமைதியாக கேட்டார்.

 “ இல்லை “  என்றேன் அவசரமாக.

 “ நீர் உமது  விண்ணப்பத்தில்  உமது ரெவ்ரியாக குறிப்பிட்டிருப்பவர் என்னுடன் சில ஆண்டுகள் முன்பாக  இங்கு வேலை செய்தவர். நேற்று  நான் அவருடன் பேசியபோது இரண்டு கிழமைகள் நீர் அவருடன்  வேலை செய்ததை பற்றி நன்றாகச் சொன்னார்.  “  என்றார்.

எனக்கு அப்போதுதான் அந்த  புதிய வேலை கிடைத்ததின்  சூக்குமம் புரிந்தது.   குடித்த பியரும் சுவையாக இருந்தது.

—0—

“11கரையில் மோதும் நினைவலைகள்:நிரந்தர வேலை” மீது ஒரு மறுமொழி

  1. ஶ்ரீஸ்கந்தகுமார். Avatar
    ஶ்ரீஸ்கந்தகுமார்.

    இந்த நிலையில் ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியில் இருந்த குணசேகரம் என்ற குண்சியை சந்தித்தேன். நாம் இருவரும் யாழ். இந்துக்கல்லூரியில் ஒரு வகுப்பு முன்-பின்னாக படித்தாலும் ஒன்றாக ஹொஸ்டலில் இருந்தவர்கள்.
    குணசேகரம், இடைக்காடு செல்வவேல், நான் உயர்தர ஒரே வகுப்பில் 1970-71 இருந்தோம். நான் மட்டக்களப்பு. ஆகவே விடுதியிலேயே தங்கினேன். குணசேகரம் ஏன் இப்படி அழிந்தான் என விளங்கவில்லை. ஆனால் அவரின் உறவினர் செல்வவேல் இன்று கலாநிதி பட்டத்துடன் அமெரிக்காவில்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: