10.கரையில் மோதும் நினைவலைகள்

வாழ்வின் அர்த்தங்கள்.

ஹரிச்சந்திரா

ஒவ்வொரு பரீட்சையும் வாழ்வின் சோதனைகள்தான். இதனாலோ என்னவோ யாழ்ப்பாணத்தில் பரீட்சையைச் சோதனை என்பார்கள்.. எடேய் சோதனை எப்படி ? உன்ர சோதனை முடிந்துவிட்டதா? இவள் எங்கே சோதனை பாஸ் பண்ணுவது ? ஒரு  படிமமான ஒரு பெயரை வைத்து அழைத்தார்கள். சுட்டபழம் என்பதுபோல் யாரோ ஆரம்பத்தில் வைத்திருக்கவேண்டும்.

பத்தாம் தரத்தில் பரீட்சை எடுத்து, அதன்  கர்ப்பகால முடிவுகள் வெளி வருவதற்கு  நான்கு மாதங்கள்  காத்திருக்கவேண்டும். இரண்டாவது தடவை எடுத்து பெயிலாகினால்  பாடசாலையை விட்டு வெளியேறவேண்டும். அத்துடன்  கல்விக்கு முற்றுப்புள்ளி .  பணமுள்ள குடும்பத்தினர் இரண்டாம் முறையாகக் குண்டடித்த ஆணை அக்கவுண்டனாகவோ  வழக்கறிஞராக வரக் கொழும்பு அனுப்புவார்கள். பெண்ணாக இருந்தால் நல்ல வேலையில் உள்ள அல்லது வெளிநாட்டு மாப்பிளையைத் தேடித் திரிவார்கள்  எனது தந்தை கஞ்சத்தனமான  ஏழை என்பதால் என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரிந்திருந்தது.

 தீவுப்பகுதியின் தனிக் கலாச்சாரமாக, பத்தாவது பெயலானவர்களை  தென்னிலங்கையில் உள்ள உறவினர்களது சோற்றுக்கடைக்கோ , சுருட்டுக்கடைககோ உதவியாளராக அனுப்புவார்கள்.  கொஞ்சம் கணக்கு தெரிந்தால் கடைகளில் கணக்கெழுதுபவராக வயிற்றைக் கழுவுவார்கள். இப்படிப் பல முதலாளிமார்களை தீவுப்பகுதியினர்  உருவாக்கியது உண்மைதான். எல்லாராலும் முதலாளியாக முடியுமா? தொடர்ச்சியாகக் கடைகளில் எடுபிடிகளாக வாழ்ந்து அங்கே இறந்தவர்கள் இருந்தார்கள்.

பரீட்சையின் பெறுபேறுகள்  வரும் வரையில் எனது நேரங்கள்,  யாழ்ப்பாணம் நூல் நிலையத்தில் கரைந்தது. தென்னிந்திய  நாவல்கள் அதிலும் கல்கி, அகிலன் எனத் தொடங்கி ஜெயகாந்தனில் முடிந்தும்,   தமிழ்ப்படம்போல் தமிழ் நாவல்கள் அலுத்துப்போக  ஆங்கில நாவல்களைத் தேடினேன். துப்பறியும் மற்றும் நீதிமன்ற விசாரணை நாவல்களே அப்பொழுது கிடைத்தது .அக்காலத்தில் துப்பறியும் நாவல்களை எழுதிய  நிக் காட்டர் என்பவரது நாவல்களில் பல பக்கங்கள் யாழ்பாணநூல் நிலையத்தில் காணாமல் போயிருக்கும் . காரணம்  பல பக்கங்களில் காமரசம் வழிந்திருக்கும். யாரோ ஒருவன் அதைத்  நக்கக்   கிழித்து அந்தப்பக்கங்களை  வீட்டுக்கெடுத்துக் கொண்டு போயிருப்பான். அதில் உள்ள விடயங்களை நான் கதை ஓட்டத்திற்கு  மாறாமல் கற்பனை செய்து கொள்வேன்.

எல்லாப் பாடங்களும் சித்தியடைந்தபின்  இந்துக்கல்லுரியில் 11ம் தரத்திற்கு போகும்போது, ஏற்கனவே வில்லங்கப் பட்டதால்  “ஒழுங்காக படிப்பாய் என நம்புகிறேன் “என்ற எச்சரிக்கையுடன் அதிபர்  சபாலிங்கத்தாரால் வகுப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டேன் . இருவரும் பிற்காலத்தில் விடுதலைப்புலிகள் – ஈழ விடுதலை இயக்கங்கள் ஒருவரை ஒருவர்  83-  86 வரை பொறுத்துக் கொண்டதுபோல் நடந்தோம்.

11ம் தரத்தில் எனது நண்பர்கள் ரஞ்ஜித் சிங் ,  ரவிந்திரராஜ் என பலர் மிகவும் புத்திசாலிகளாகவும்,   சென்ட் ஜோன் மானிப்பாய், இந்துக் கல்லூரி  போன்ற  பாடசாலைகளிலிருந்து கல்வி கற்று வந்து ,கற்கையில் ஈடுபாடு கொண்டவர்களாக இருந்ததால் , பசுக்களோடு சேர்ந்து நானும் தாவர பட்சணியாக இருந்தேன் . படிப்பில் அக்கறையற்று  இந்தியாவோ அல்லது பிரித்தானியாவுக்கு செல்வோம் என நினைத்தவர்கள் பலர் என்னுடன் படித்தாலும் அவர்கள்  எனது உள்வட்டத்தில் இருக்கவில்லை .

அவர்களைக் குறை சொல்ல முடியாது. அக்காலத்திலே மொழிவாரியான தரப்படுத்தல் வந்து  பலரைச் சேர்வடைய செய்கிறது. படித்தும் பயனில்லை என்ற நிலைக்கு படித்தவர்கள்,  பலர் தள்ளப்படுகிறார்கள். படிக்காதவர்களுக்கு  இது ஆயுதமேந்த உற்சாகம் கொடுக்கிறது. இக்காலத்திலே இந்தக்கல்லூரியில் இருந்து தீவிரவாதம் பேசியவர்கள் உருவாகிறார்கள் . முதல் முறையாக பொலிசார் தேடியபோது சயனைட்டை  அருந்தி இறந்த பொன்னத்துரை சிவகுமார், இந்துக்கல்லூரியில் படித்தவர். தரப்படுத்தலுக்கு எதிராக முன்னணிக்கு வந்தவர்கள் எனது கல்லூரி மாணவர்களே .

எம்மில்  சிலர் எப்படியும் படிக்கவேண்டும் என நினைத்ததால், ஆசிரியர்கள் நன்றாக கற்பிக்காத பாடங்களில்  ரியுசன் சென்றோம் .

11ம் தரத்தில் படிப்பித்தவர்களில்,  மறைந்த பிரான்சிஸ்  மாஸ்டர் புரிந்து கொள்ளக்கூடியதாக   மிருகவியலைப் படிப்பித்தார் . மற்றவர்கள் கற்பித்தது,  கேட்பதற்கு கோவிலில் உச்சரிக்கும் சமஸ்கிருதமாக இருந்தது; தலையில் ஏறவில்லை; அர்த்தம் புரியவில்லை; அரோகரா போட்டு விட்டு வெளியேறுவோம். இந்த நிலையில் இரசாயனத்திற்கு வீ ரீ கந்தசாமி மாஸ்டர் என பிரபலமாக இருந்தவரிடம் சென்றேன். அக்காலத்திலே  ரஜனிகாந்துபோல் ஒரு கையில் எரியும் சிகரட்,  மறுகையில் எழுதும் சோக்கும் இருக்கும்  . அவரது  வகுப்பில் ஆண்கள் பெண்கள் கலந்து இருந்த இடம் . இந்தக் காலத்தில்  இந்தக்கல்லூரியில் இருந்து வந்தவர்களது மற்றய கலவன் பாடசாலை மாணவர்களது  நடத்தையும் மாறுபடும் . முக்கியமாக  பலருக்கு பெண்களிடம் எப்படிப் பேசுவது என்பது புரியவில்லை. என்னைப் பொறுத்தவரையும் அந்தக் குறைபாடு இருந்தது. இதனால் இரு வகையான  நடத்தைகள் வெளிப்படும். ஒன்று  வெட்கமாகவும் மற்றது ஒருவித கரடு முரடான கடும் போக்காகவும் வெளிப்படும். இதை உணர்ந்ததால் பிற்காலத்தில் எனது மகனைக்  கலவன் பாடசாயைில் சேர்ப்பது என முடிவு செய்தேன்.

சிறு வயதில் ஆண் பெண்ணைப் பிரித்து வைத்தல் தென் ஆசியச் சமூகத்தில்  முக்கியமான கூறாகும். இதை மதம்,   கலாச்சாரம்,   ஏன் இனத்தின் பெயராலும்  செய்யப்படுகிறது. இந்த சமூக வழக்கம், நெருங்கிய உறவினர்கள் மத்தியில் திருமணம் செய்வதுபோல் தவிர்க்கப்படவேண்டியது மட்டுமல்ல பல சமூகக் கேடுகளை  உருவாகிறது. ஆனால் பலர் இதை ஒரு முக்கிய  விடயமாகவே நினைப்பதில்லை.

ரியுசன் காரணத்தால்   கள்ளியங்கட்டிலிருந்து  மீண்டும் இடம் பெயர்ந்து இந்துக் கல்லூரியருகில் வீட்டை வாடகைக்கு எடுத்தோம்.   கல்லூரியின் பின்பாக  இது மாலையில் ரீயுசன் செல்ல வசதியாக இருந்ததுடன், எனது சகோதரர்கள், நகரத்தில்  உள்ள பாடசாலைகளில் படிக்கத் தொடங்கினர்.

சென்னை

சென்னையில் நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள் நிறைந்த பாண்டிபஸாரில் நான்கு மாடிக்கட்டிடம். அதன் கீழ்ப்பகுதியில் கல்யாணமண்டபம் மேல்பகுதிகளில் சிறிய அறைகள் வாடகைக்கு விட்டிருந்தார்கள். ஆண்கள் மட்டும் இருப்பதற்காக அமைந்தவை.

இரவு நடுநிசி வரையும் ஜனநடமாட்டமான பிரதேசமானதால் நாங்களும் பம்பலாக இருந்தோம். நண்பர் விசாகனுடன் சேர்ந்து இருந்த காலம் சில மாதங்களே ஆனாலும் சுவாரஸ்யமானது.

விசாகன் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் படித்தவர். திருமணமாகி மனைவியையும் குழந்தையையும் பிரிந்து என்னைப்போல் வந்திருந்ததால் எனக்கு அவருடன் இணக்கமாக இருக்க முடிந்தது. அவர் நகைச்சுவை உணர்வுடன் அரசியலும் பேசுபவர்.

யாழ் பல்கலைக்கழகத்தில் படித்ததால் பல இயக்கத்தினரையும் தெரிந்து வைத்திருந்தார். அக்காலத்தில் இடதுசாரி அரசியல் பேசுவதுடன் மட்டுமல்ல பல இடதுசாரிகளையும் அறிந்து வைத்திருந்தார்.

இலங்கை கம்மியூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்து பின் செந்தமிழர் இயக்கத் தலைவராக இருந்த வி பொன்னம்பலம் அவர்களை எனக்கு அறிமுகப்படுத்தியவர்.

வி. பொன்னம்பலம் நேர்மையான அரசியல்வாதியென எல்லோராலும் அறியப்பட்டவர். எனக்கு அவர் நடமாடும் பல்கலைக்கழகமாகத் தெரிந்தார் என்பது மட்டுமல்ல பிற்காலத்தில் எனக்கு பலரை அறிமுகப்படுத்தி தமிழ் நாட்டில் வேலை செய்வதற்கும் உதவினார்.

அவர் எனக்கு முதலாவதாக அறிமுகப்படுத்தியவர் சாவித்திரி தேவநேசன்; என்ற பெண்மணி. இவர் இந்தியாவில் பேராசிரியர் சந்திரன் தேவநேசன் என்ற சென்னை கிறீஸ்துவ கல்லூரியில் கற்பித்த தமிழ்நாட்டு பேராசிரியரை மணம் முடித்த, இலங்கையின் பிரபல இடதுசாரியான லெஸ்லி குணவர்தனாவின் சகோதரியாவார்.

சாவித்திரி தேவநேசன் கூரையற்றவர்களுக்கு கூரை (Roof For the Roofless) என்ற தன்னார்வு நிறுவனத்தை சென்னையில் நடத்துபவர். அவரது நிறுவனத்தில் சேர்ந்து செங்கல்பட்டு மாவட்ட கிராமங்களில் மிருக வைத்தியராக ஒரு மாதம் வேலை செய்தேன்.

அக்காலத்தில் தி. நகரில் தோழர் வி பொன்னம்பலத்திடம் உரையாடச் செல்லும்போது அவரது இடத்தில் ஒண்டிக்குடித்தனம் செய்யும் மாவை சேனாதிராஜாவை சந்திப்பேன். தமிழ் அரசியலின் பல விடயங்களின் முடிச்சுகளை புரிந்து கொள்ளுவதற்கு தோழர் பொன்னம்பலம் உதவியாக இருந்தார். அவரிடம் உமா மகேஸ்வரன், பத்மநாபா என்போர் அடிக்கடி வருவார்கள். இளம் தலைமுறை இயக்க இளஞர்கள் அரசியலுக்கு ஒரு பாலமாக இருந்தார்.ஆனால் – அவரது கருத்துகள் ஏற்கப்பட்டு செயல்படுத்தியதாக நான் அறியவில்லை.

நண்பர் விசாகன், மானிடவியல் பட்டதாரி. சமூகவியல் மற்றும் அரசியல் விடயங்களில் ஆர்வமானவர் சென்னைப் பல்கலைகழகத்தில் படிப்பதற்கு வந்து நிற்பதாகக் கூறினார். அவரைப் பொறுத்தவரை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தவுடன் விரிவுரையாளராக சேராததற்குக் காரணம் பேராசிரியர் இந்திரபாலா என்று அடிக்கடி கூறுவார். ‘அவர் தன்னை அறுத்ததாக’ தினமும் கூறுவார்.

இது உண்மையாகவும் இருக்கலாம். பொய்யாகவும் இருக்கலாம்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மட்டுமல்ல பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் இப்படியாக விருப்பு வெறுப்பு பார்த்து மாணவர்களை தெரிவு செய்தல் நடந்திருக்கிறது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் மகாலிங்கத்தினால் நான்கு முறை மைக்கிரோபயலஜியை மீண்டும் மீண்டும் எடுக்க வேண்டியிருந்ததால் எனது சிறப்பு சித்தி மற்றும் கிளாஸ் என்பன இல்லாமல் போய்விட்டது.

ஆண் பேராசிரியர்களின் பாலியல் பலவீனங்கள் விருப்பு வெறுப்புக்கு முதன்மையான காரணமாகிறது. என்னைப் பொறுத்தவரை சாதாரணமாகவோ இல்லை சிறப்பு சித்தி எடுத்தோ பல்கலைக்கழகத்தை முடித்து வந்தாலும் மிருகவைத்தியராக வருவதைத் தடுக்க முடியாது.ஆனால் விசாகனின் குறை தொடர்ச்சியாக நீடித்தது. இப்படியான சுய வரலாறு இலங்கையில் பலருக்கும் இருந்தாலும் அதை தினமும் சொல்லி தண்ணியடிப்பதற்கு விசாகனால் மட்டுமே முடியும்.

பேராசிரியர் இந்திரபாலாவை அதிகமாக நினைவு கூர்ந்த மாணவன் எனது நண்பன் விசாகன் மட்டுமே என்பதில் பேராசிரியர் பெருமை கொள்ள முடியும்.

சென்னையில் கோடைகாலத்தில் ஒரு நாள் – வழக்கத்திற்கு மாறாக நேரத்தோடு அறைக்கு சென்றுவிட்டோம். விசாகனது வட்டமான அவரது முகம் நீண்டு இருந்தது. மிகவும் கவலையுடன் இருந்தார். அன்று மாலை வழக்கமாக பேராசிரியரை சொல்லியபடி மது அருந்த பணமும் இல்லை.

‘என்ன வழக்கத்தைவிட அப்படி என்ன கவலை’

‘விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சமீபத்தில் ஒரு களையெடுப்பு நடந்ததாம் என செய்தி வந்தது. எனது மச்சானுக்கு ஏதாவது நடந்திருக்குமோ என நினைக்கிறேன்’ எனச் சொல்லிவிட்டு எழுதமுடியாத பல வார்த்தைகளால் விடுதலைப்புலிகள் தலைவருக்கு அர்ச்சனை நடந்தது.

சென்னையில் நான் இருந்த காலத்தில், அதிக களையெடுப்புகளை தமக்குள் நடத்தியவர்கள் உமா மகேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைக்கழகம் – PLOT.

இந்த களையெடுப்பு என்ற வார்த்தை நாங்கள் சிறுவயதில் இருக்கும்போது விவசாயப் பின்புலம் இல்லாத மாணவர்கள் மத்தியிலும் பிரபலமானதற்கு காரணம் அறுபதுகளின் பிற்பகுதியில் வந்த டட்லி சேனாநாயக்கா அரசாங்கத்தின் காலத்தில் யாழ்.குடாநாட்டு மாணவர்களை களை பிடுங்குவதற்கு பஸ்களில் கிளிநொச்சி பரந்தன் முதலான நெல்விளையும் பிரதேசங்களுக்கு கொண்டு செல்வார்கள்.

அக்காலத்தில் மாணவர்கள் பிடுங்கிய நெற்கதிர்கள், களைகளிலும் பார்க்க அதிகமாகும். அதன் பின்பு இந்த வார்த்தை துரோகிளை களையெடுப்பதற்கான இரட்டைப் பதமாக தமிழ் அரசியல்வாதிகள் வாய்களில் மத்திரமாகி பின்னர் மாணவர் இளைஞர் என ஆட்கொண்டது.

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் விசாகனின் மனைவியின் தம்பி,  ஹரிச்சந்திரா அக்காலத்தில் சேலத்தில் இருந்தார்.

அப்பொழுது நான் சொன்னேன்:-

‘விடுதலைப்புலிகள் என்ன செய்தார்கள் என அறிய முடியாது. என்னிடம் ஐம்பது ரூபாய் மட்டுமே உள்ளது. அதைத் தருகிறேன் என்னவாவது செய்யுங்கள். ஆனால் இன்று இரவுக்கு எனக்கு மச்சத்துடன் சோற்றுப் பார்சல் மட்டும் வேண்டித்தர வேண்டும். நாளையை,  நாளை பார்ப்போம்’ என்றேன்.

சிறிது உற்சாகத்துடன் உடை மாற்றிக்கொண்டு கீழே சென்றவர் ஒரு மணிநேரத்தில் இரண்டு பார்சல்கள் கொண்டு வந்தார். அத்துடன் அவரது கையில் வெள்ளை நிறமான சாராயப் போத்தலும் இருந்தது.

இந்தியாவில் தயாரிக்ப்படும் மிகச் சிறந்த குடிவகை. இலங்கையில் உள்ள மிக மலிவான சாராயத்திற்கு மட்டுமல்ல கிராமங்களில் வடிக்கும் வடிசாராயத்திற்கும் ஈடாகாது.

இலங்கையில் வடிசாராயம் காய்ச்சுபவர்கள் அதை ஒரு சமூக சேவையாக, பக்தி சிரத்தையோடு செய்வார்கள். எப்பொழுதாவது வடிசாராயம் குடித்து எவராவது அங்கு இறந்ததாக இலங்கைப் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளதா…?

நீர்கொழும்பு வடிசாராயமான தங்கொட்டுவை வடிசாராயம் உண்மையில் ரஷ்ய வொட்காவிற்கு இணையானது. சிங்கள சமூகத்திற்கும் மட்டும் சொந்தமானது இந்தக்கலை. இலங்கையர் வசிக்கும் மத்திய கிழக்கு நாடுகளில்கூட இது பிரசித்தமானது.

விசாகன் கொண்டு வந்த சாராயப் போத்தலின் விலை நாற்பது ரூபாய். மிகுதி பத்து ரூபாய்க்கு உணவு கொண்டு வந்தார். என்னால் சிறிதளவுக்கு மேல் அருந்த முடியவில்லை. வயிறு எரிந்தது. ஆனால் நண்பர் போத்தலை காலியாக்கிய பின்பு சாப்பாட்டுப் பார்சலை பார்த்த போது அது தனி சோற்று பொதியாக இருந்தது.

வெறும் சோறை எப்படிச் சாப்பிடுவது எனக்கேட்டுபோது கோழிக்கறி என்று சொல்லி சிறிய பார்சலைத் திறந்தார். அதைப் பார்த்தபோது கோழியின் சிவப்பு கொண்டையுடன் அலகுகள் மற்றும் சிவப்பு விரல்கள் இருந்தன. அத்துடன் குடலும் இருந்திருக்கலாம். மிருக வைத்தியரான எனக்கு அது லெக்கோன் கோழியின் பகுதிகள் என்பது மட்டும் புரிந்தது.

ஆத்திரத்துடன் ‘ எங்கே வாங்கினீர்கள்?’ எனக்கேட்டேன்.

சாராயத் தவறணைக்குப் பக்கத்தில் இருந்த பெட்டிக்கடை என்றார்.

எனக்கு விளங்கிவிட்டது. சென்னையில் ஒவ்வொரு தவறணைக்கும் பக்கத்தில் சிறிய பாத்திரங்களுடன் இப்படி விற்பவர்கள் இருப்பார்கள்.

எதுவும் பேசாமல் ஒரு பிடி சோற்றை விழுங்கி சாராயத்தால் ஏற்பட்ட வயிற்று எரிவை தணித்துக் கொண்டேன். பணம் வேறு எதுவும் இல்லாததால் பட்டினி கிடப்பதைத் தவிர வேறுவழியில்லை.

‘ ஒரு நேர சாப்பாடு இல்லாமல் பட்டினியாக இருந்து, நாட்டு விடுதலைக்காக எத்தனை பேர் போராடுகிறார்கள். எப்படி இயக்க பொடியள் கஷ்டப்படுகிறார்கள் தெரியுமா? எத்தனை செல்வந்த குடும்பத்தில் இருந்தவர்கள், தங்களை ஒறுத்து ஆயுதப்பயிற்சி எடுக்கிறார்கள்?’என தொடர்ச்சியாக நான் நித்திரைக்கு செல்லும் வரை உபதேசம் நடந்தது.

பேராசிரியர் இந்திரபாலாவின் செயலால் ஏற்பட்ட கவலையுடன் அவரது மனைவியின் தம்பியாகிய ஹரிச்சந்திராவை நினைத்து கவலையுடன் போதையில் இருக்கும்போது எனது பக்க நியாயத்தை எப்படிச் சொன்னாலும் அது எடுபடப்போவதில்லை என்பதால் மவுனமாக இருந்தேன்.

ஒரு சில நாட்களில் நடந்த மற்றுமொரு சம்பவம் இதைவிட வேடிக்கையானது.

மாலைவேளையில் வரும்போது பாண்டி பஜாரில் இறங்கி உள்ளுர் குளிர்பானம் ஒன்றை வாங்கி அதில் பாதியை குடித்துவிட்டு மிகுதிக்கு சாராயத்தை ஊற்றி நிரப்பி நின்று கொண்டே குடித்துவிட்டு வருவது விசாகனின் வழக்கம்.

தமிழ்நாட்டில் குடிப்பதென்றால் பெரிய ஹோட்டலுக்குப் போகவேண்டும். அல்லது தவறணைகளுக்குப் போகவேண்டும். தவறணைகளில் சென்னையின் தொழிலாள வர்க்கத்தினருடன் சேர்ந்து மது அருந்தவேண்டும். அங்கு இலங்கையர்களின் நடை உடை பேச்சு எல்லாம் அந்நியப்பட்டுவிடும.; இடைப்பட்ட மத்திய வகுப்பினர் குடிப்பதற்கு இடங்கள் இல்லை. பல மத்திய வகுப்பினர் மறைவில் அடிப்பதும் குளிர்பானத்துள் விட்டு குளிர்பானம்போல் அருந்துவதும் வழக்கம்.

நான் பார்த்தவரை சந்தோசத்துக்காக அளவோடு மது அருந்துபவர்களைப் பார்ப்பது அரிது. பலரும் கிளைமாக்ஸக்குச் செல்லும்வரை குடிப்பதைத்தான் பார்த்திருக்கிறேன்.

ஒரு நாள் அவ்வாறு குளிர்பானத்துடன் அடிக்கும்பொழுது பலரை பாண்டிபஜார் பொலிசார் அப்பிக்கொண்டு சென்று விட்டார்கள். அதில் விசாகனும ஒருவர் என நான் அறிந்து அங்கு சென்றேன்.

நமது நண்பர் உள்ளாடையோடு தமிழ் சினிமாவில் காண்பிப்பதைப்போல் இருப்பார் என நினைத்துச் சென்றபோது அதற்கு மாறாக அங்கு நிலைமை இருந்தது.

ஏராளமானவர்கள் கைகளில் தோல் பேக்குகளுடன் அப்பொழுதுதான் ஒஃபீஸ் விட்டு வந்திருப்பவர்கள் போன்று தெரிந்தார்கள். உள்ளே சென்று ஒரு பொலிசாரிடம் நாங்கள் ஈழத்தவர் எங்களுக்கு சட்டவிதிகள் தெரியாது என்றேன். உடனே இனிமேல் அவ்வாறு செய்யக்கூடாது என்ற எச்சரிக்கையோடு விசாகனை விட்டு விட்டார்கள்.

அக்காலத்தில் ஈழம் என்ற பெயருக்கு மந்திர சக்தி இருந்தது. சாதாரண தமிழக மக்கள் மத்தியில் மதிப்பு மரியாதையும் இருந்தது. ஈழ அகதி என சொல்லிக் கொண்டு ரயிலில் டிக்கட் எடுக்காது போனவர்கள் பலரைத் தெரியும். நம்மவர் செய்கையால் பிற்காலத்தில் செத்த எலியின் வாடைபோல் ஈழவாசனை அங்கு வீசத் தொடங்கியது.

நான் விசாகனை அன்று சிறை மீட்டபோது ‘நான் மட்டுமல்ல பல தமிழ்நாட்டு அரசாங்கத்தின் உயர் பதவியில் வகிக்கும் பிராமணர்கள் இருக்கிறார்கள். அவர்களால், வீட்டில் வைத்து குடிக்க இயலாது’ என்று விசாகன் எனக்கு விளக்கம் சொன்னார.;

மைசூரில் பல்கலைக்கழகத்தில் அக்காலத்தில் படித்த விசாகனின் மனைவியின் தம்பி ஹரிச்சந்திராவை ஒன்றுவிட்ட தம்பியான பிரதாபன் மூலம் தொடர்பு கொண்டு மைசூருக்கு அழைத்து அங்கு சந்தித்து பேசினார்.

அப்பொழுது பல விடயங்களை அறிந்தோம். ஹரிச்சந்திரா விடுதலைப்புலிகளின் மிக நம்பிக்கைக்கு பாத்திரமானவனாகவும் முக்கிய பொறுப்புகள் வகிப்பதையும் அறியமுடிந்தது. ஹரிச்சந்திரா இயக்கத்தின் மீதான விசுவாசத்தையோ அல்லது ஈழத்து அபிமனத்தையோ விட பிரபாகரன் மீதுதான் அபரிமிதமான விசுவாசத்தைக்கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

இந்துக்கல்லூரியில் இரண்டு வருடங்கள் குறைவாகப் படித்த ஹரிச்சந்திராவை நேரில் பார்க்கும்போது அவனிடத்தில் சிநேகமோ சகோதர பாசமோ உடனே தோன்றும். அவனது வார்த்தைகளில் எதுவித பொய்யோ அல்லது யாழ்ப்பாணத்து நக்கல் வார்த்தைகளோ அல்லது தூஷண வார்த்தைகளோ இராது.

எந்த அரசியல் பற்றியும் பேசியோ அல்லது அதில் அவன் ஈடுபட்டதாகவே நான் அறியவில்லை. நான் கல்லூரியில் இருந்து பல்கலைக்கழகம் போனபின்பு தொடர்புகள் விடுபட்டாலும் அவனை , எனது நண்பர்களிடம் விசாரித்தபோது ஹட்டன் நாஷனல் வங்கியில் கொழும்பில் வேலை செய்வதாக கேள்விப்பட்டேன்.

பிற்காலத்தில் என்னோடு படித்த ஜெயக்குமாரின் மூலம் நான் அறிந்த தகவல்:

அவன் 83 கலவரத்தில் அவன் பாதிக்கப்பட்டு ஊருக்கு வந்ததாகவும் பின்பு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்துவிட்டதாகவும் அறிந்தேன். அங்கு லெவ்டினணட் கேணல் இராதாவாகி பிற்காலத்தில் யாழ் மாவட்ட பொறுப்பாளராகி மரணமடைந்தான.

83 கலவரம் அரசியலில் எந்த கவர்ச்சியும் இல்லாதவர்களையும் இயக்கங்களை நாடி போகவைத்தது. வன்முறைக்கு, வன்முறை என்பதே தீர்வாக எண்ண வைத்தது. பயங்கரவாதத்தை பயங்கரவாதத்தைக் கொண்டு எதிர்க்க வேண்டும் என்பது பிரபாகரனது தாரக மந்திரமாகியது.

அவுஸ்திரேலியா

தென் அவுஸ்திரேலியாவிலிருந்த காலத்தில் எனது மாமா மாமி வந்து,  மகள் பேரப்பிள்ளைகளோடு இருந்தார்கள். அவர்கள் எனது மனைவி மேலுள்ள அன்பு பல விதத்தில் எனக்கு கஸ்டமாக இருந்தபோதும், தவிர்க்க முடியாது பிள்ளைப்பாசம். எனது பிள்ளைகளையும்  அவர்கள் வளர்த்தார்கள். நாங்கள் இருவரும் அவுஸ்திரேலியாவில் படிப்பதற்கு அவர்களே முக்கிய காரணம். ஆனாலும்  பேரப்பிள்ளைகள் மீது அவர்களது பாசம் சிலவேளைகளில் எதிர்பாராது. தென் அவுஸ்திரேலியாவிலிருந்து வேலையை விட்டு வீடு வந்தபோது அவர்களது பாசம், எனக்கு வீட்டைவிட்டு அதிக காலம் பிரிந்திருக்கக்கூடாது என நினைக்க வைத்தது.

எனது  மகனது கட்டிலின் கீழ் ஒரு ஒரு கன அடியுள்ள பெட்டி நிரம்ப எம் எம் வகையான சாக்கிலட் வெற்றுப் பெட்டிகளைச் சேகரித்து வைத்திருந்தான் . எப்படி இவ்வளவு பெட்டிகள்? என்றதற்கு கிரண்பா(தாத்தா) வேண்டித் தந்தது என்றான் . நான் இல்லாத ஆறு மாதத்தில்  குறைந்தது ஒரு நாளைக்கு ஒரு பெட்டி வீதத்தில் சாப்பிட்டிருக்கிறான் . இரவுவரை மனைவி வைத்தியசாலையில் வேலை செய்வதால் இது கண்டுகொள்ளப்படவில்லை.

அடுத்த ஆறுமாதங்கள், லோக்கம் என்ற ஆங்கில வார்த்தையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டேன் . ஒரு நாள், ஒரு கிழமை,  இரண்டு கிழமைகள் என மற்றைய வைத்தியர்கள் விடுமுறை எடுக்கும்போது வேலை செய்தேன்.

விக்டோரியாவிற்கும் தென் அவுஸ்திரேலியாவிற்கும் இடையில் உள்ள போடர் ரவுண் என்ற சிறிய  நகரில் ஒரு கிழமை வேலை செய்வதற்காக போனபோது இரவு தங்குவதற்கு அந்த வைத்தியசாலையில் ஒரு அறையில் ஒரு கட்டில் தரப்பட்டது . அந்தக் கட்டில் புளோரஸ் என்ற கறுத்த பூனைக்குச் சொந்தமானது . ஏழு இரவுகள் அந்தப் பூனையுடன் போராடினேன் .எனது முகத்துக்கு அருகில்  படுப்பது அதனது தேவை , ஆனால் அது எனக்குப் பிடிக்காது . இருவரும் வன்முறையைக் கையில் எடுக்காது போராடிவிட்டு,   நடு இரவில்  அந்தப் பூனையுடன் சமாதான ஒப்பந்தம் செய்து  இருவரும் ஒரே கட்டிலில் தூங்குவோம். எனது காலருகில் புளோரஸ் தூங்கும் . முன்பிருந்த மிருக வைத்தியரால் ஏற்பட்ட பழக்கம். எழுவதீவில் கடற்கரையிலிருந்த சில அங்குல காணிக்காக எனது தந்தை பத்து வருடங்கள் போராடியதை அந்தப் பூனை நினைவு படுத்தியது .

இரண்டு  இரவுகள் எனக்கு வேலை வந்தது . ஒரு நாள்  600 கிலோ பசுமாட்டில் 5 மணிநேரமாக சிசேரியன் செய்து கன்றை வெளியே எடுத்தேன் . ஆனால் கன்று இறந்திருந்தது. அந்த பண்ணைக்கு உரிமையாளர்கள் இருவரும் இளம் வயதில் தாய்லாந்தில்  யப்பானிய கைதிகளாக இருந்தவர்கள். போரின் கொடுமையை அவர்கள் மூலம் கேட்டறிந்தேன். சயாம் மரண ரயில் பாதை போட்டவர்களில் அவர்கள் இருந்தார்கள் .அவர்களின் கதையால் சில வருடங்கள் முன்பாக தாய்லாந்து சென்று அந்த இடங்களைப் பார்த்தேன். மனிதர்கள்  எந்த நிலைக்கும் கீழிறங்கலாம் என்பதற்கு அந்த பர்மா இரயில்  பாதை உதாரணமாகும்.

மிருக வைத்தியத்தில் மிருகங்களைக் குணப்படுத்துவதுடன், வித்தியாசமான மனிதர்களைச் சந்திப்பதும், அவர்கள் கதைகளைக் கேட்பதும்  நமக்கு வாழ்வைப் புரிந்து கொள்ள வைக்கும்.

மறு நாள் இரவில் நடு நிசியில் வந்த தொலைப்பேசியை எடுத்தபோது குதிரை குட்டி போட கஸ்டப்படுவதாக பெண் சொன்னார். குதிரைக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம். நான் குதிரையில் அனுபவமற்றவன் ஆனாலும் வருகிறேன் என்று சொல்லிவிட்டு  இருளில் கண்களால் தடவியபடி பல இடங்களில் காரை நிறுத்தி  இடம் பார்த்து,   இறுதியில் வீட்டை அடைந்தேன். வயதான பெண் வீட்டின் வாசலில் வந்து  குதிரை குட்டி போட்டு விட்டது ஆனால்  இளங்கொடி என்ற பிளசன்ரா வரவில்லை  “என்றார்  .

குதிரையில் அதிக அனுபவம் அற்றதால் உள்ளே  கை வைத்து இளங்கொடியை  அகற்றத் தயங்கினேன்  . நல்லவேளையாகப் போட்ட ஊசிக்குப் பயனாக இளங்கொடி வெளித் தள்ளிவிட்டது . மிகவும் சந்தோசமாக எனக்கு உணவும் வைனை தந்து உபசரித்து  வழியனுப்பினார் .ஒரு பெரிய பண்ணை வீட்டில் அவரே தனிமையாக வாழ்கிறார் .அவரது துணையாக ஒரு நாயும் இந்தக் குதிரையும் வாழ்கிறது. அந்த குதிரை ஈன்ற சிவப்பு நிற குதிரைக்குட்டியைக் கட்டியணைத்து   துணியால் துடைத்து உடலில் சூடேற்றியபடி அந்த இரவு முழுவதும் விழித்திருந்தார். சில வருடங்கள் முன்பாக இறந்த அவரது கணவர் குதிரைகளைப் பழக்குபவர். அவர் விட்டுச் சென்றது அந்தக் குதிரை என்றார் .  வாழ்வின் அர்த்தங்கள் பலவகை என நினைத்தபடி வெளியேறும்போது அதிகாலையாக இருந்தது.

அந்த ஒரு கிழமையின் பின்பு மெல்பேன் நகரத்தில் உள்ள வைத்தியசாலையில்   இரண்டு கிழமைக்கு வேலை செய்தேன் . அந்த வைத்தியரின் சிபார்சிலே எனக்கு நிரந்தரமான  மெல்பேனில் வேலை கிடைத்தது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: