கரையில் மோதும் நினைவலைகள் 9

கல்வியங்காடு

அந்தக்காலத்தில்  யாழ்ப்பாணத்தை எங்கள் ஊரில்  பட்டினம் என்பார்கள்எழுவைதீவிலிருந்து யாழ்ப்பாணப் பட்டினத்திற்கு ஆறு சகோதரங்களாக  குடி பெயர்ந்தோம். 

அந்த எண்ணிக்கை அதிக காலத்திற்கு நீடிக்கவில்லை.                        

கல்வியங்காட்டில்     இருந்த சில மாதங்களில் எனது கடைசித் தம்பி   திடீரென   இறந்தான் . அப்போது அவனுக்கு இரண்டு   வயதிற்குச் சில மாதங்கள் அதிகமாக இருக்கும். அவன்  எழுவைதீவில் பிறந்த காலத்தில் நான் யாழ்ப்பாணத்திலிருந்தேன்.    அதனால் அவனது குழந்தைப்      பருவம் எனக்கு அதிகம் பரீச்சயமற்றது.

வரிசைக் கிரமமாக ஐந்து குழந்தைகளும் தாய்மையை தின்று வளர்ந்ததால்  அம்மாவிடம் அவனுக்குக் கொடுப்பதற்கு அதிகம் மிச்சமிருக்கவில்லை. தகரப் பால் மாவை மட்டும் குடித்தான்.   ஆனால் வளரவில்லை . மற்றைய உணவுகள்  அவனுக்குச்  செரிமானமடையவில்லை . பின்னர் வந்த  பஞ்சகாலத்தில்  தொலைக்காட்சியில் பார்த்த குழந்தைபோல் காட்சியளித்தான்.  இக்காலத்தைப்போல் பல  வியாதிகளுக்கு அக்காலத்தில் பெயரில்லை . அவன்      இரண்டரை வருடங்களில் தனது வாழ்வை முடித்துக்கொண்டான்.

அவனது பெயர் கமலேசன்.  அவன் பிறந்த பின்பாக  அம்மாவுக்கு  உடல் நலம் குன்றி விட்டது . எழுவைதீவில்                  இருந்தபோது அம்மா தபால் அதிபராக வேலை பார்த்ததால்              பணவிடயத்தில் சுதந்திரம் இருந்தது. குழந்கைளை பார்க்க     பேரன் ,பேத்தி ,  உறவினர் என்று ஆள்  வசதிகள் இருந்தது.             பட்டணம்  பெயர்ந்ததும்   அம்மா நாள்முழுவதும் வீட்டில்  இருந்ததால் அவரது மனநலம் குன்றியிருந்ததா..?              எனப் புரியாத போதிலும் உடல் நலம் பாதித்தது.  அப்படியான உடல் நலம்  குன்றிய அம்மாவிற்கு உறுதுணையாக  இருப்பதற்கு  எனது தந்தைக்குத் தெரியவில்லை.

எனது தகப்பனார்,  தாய் தந்தையை இழந்து தமக்கையரிடம் வளர்ந்தவர். ஒரு விதத்தில் கடுமையான  உழைப்பாளி .    திடகாத்திரமானவர் . தமிழாசிரியராக வேலை செய்தவாறே  வியாபாரமும் செய்து வந்தார்.

1958 வரையில் இலங்கையின் தென்பகுதியில்  எட்டியந்தோட்டையில் கடை நடத்தியவர் . இனக்கலவரத்தின் போது                  வியாபாரம் அழிந்தது . பலாங்கொடை , ஆலிஎல முதலான            இடங்களில் ஆசிரியராக பணியாற்றிவிட்டு ஊருக்கு வந்தார் . ஆசிரியத் தொழிலுடன் ஊரில் பனை ஓலையால் செய்யப்படும் கடகங்களை யாழ்ப்பாணத்திற்கு  தலையில் சுமந்து கொண்டு  வந்து விற்பதன் மூலம் பணமீட்டினார் . நாங்கள்   வளர்ந்த பின்பு,  பின்னாளில்  நகை அடைவு பிடித்து வந்தார் .    பணவிடயத்தில் மட்டுமல்ல அன்பை வெளிக்காட்டுவதிலும்         கஞ்சப் பிசினாறி .

 எனது தந்தை சிறுவயதில் என்னை முத்தமிட்டதாக         நினைவில்லை . இப்படியானவரோடு  அம்மா வாழ்ந்து       எவ்வாறு ஆறு பிள்ளைகளைப் பெற்றார்..?  என்று நான் வியப்பதுண்டு . 

ஆனால்,  இப்பொழுது தெரிகிறது சிறுவயதிலே தாய்            தந்தையற்று, நீரற்ற இடத்தில் முளைக்கும் கற்றாழையாக முட்களுடன் வளர்ந்தவர் என்று . போததற்கு வீட்டை விட்டு ஓடி             சிங்கப்பூரில்  பிரித்தானிய    இராணுவத்தில் மூன்று வருடங்கள்  இருந்து           விட்டு பின்பு அவர்களிடமிருந்து தப்பியோடி இலங்கை    வந்து        ஆசிரியராகியவர்.  பாசம் கிட்டாமல்   கட்டாக்காலி நாய்கள் போல்  வளர்ந்து,   வாழ்வின் கசப்புகளை மட்டும் அனுபவித்தவர்கள்  மற்றவர்களுக்கும் அதையே  கொடுப்பது ஆச்சரியமில்லை . பல ஆண்களது  பிரச்சினையே இதுதான்.

அக்காலத்தில் அம்மா, அப்புவுடனும் வாழ மறுக்கும் கடைசித்தம்பியுடனும், போராடியபோது நான் சில தடவை இவன் விரைவில் இறந்து போய்விடுவான்  என நினைத்தேன் . பிற்காலத்தில் அந்த எண்ணத்தையிட்டு  வெட்கமடைந்தாலும்  உண்மையை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் .

சிறிய உருவமாக  அவன் படுத்திருந்த சவப்பெட்டியை அப்பு தனியொருவராகத் தூக்கியபடி வீட்டிலிருந்து வெளியே சென்றது எனக்கு நினைவிருக்கிறது. அத்துடன் நாங்கள் எல்லோரும் அவனை மறந்துவிட்டோம். அம்மா மட்டும் அவனது சுமையை மனதிலே வாழ்ந்தநாளெல்லாம் சுமந்தபடியிருந்தார்.   அவன் இறக்கும் நாளில் கரைந்த அண்டங் காக்கை பற்றியும்  சத்தமிட்ட பல்லியைப் பற்றியும் மணிக்கணக்கில் பேசவார். அவன் இறப்பதற்கு முன்பாகவும், பின்பாகவும் கண்ட கனவுகளையும்  பற்றி அசை போட்டபடியிருந்தார் .

அம்மாவைப் பொறுத்தவரை  அவன்  கனவிலும் நினைவிலும் வாழ்ந்து வந்தான்.

அக்காலத்தில் மீண்டும் 10 ஆம் தர பரீட்சை  எடுப்பதனால்,  ஒரு சில பாடங்களைத் தவிர்த்து ஏனையவற்றை  ஏற்கனவே படித்ததால் அதிக நாட்கள் பாடசாலைக்குச்  செல்வதில்லை .

ஆங்கிலத்திலும்  மற்றைய சில பாடங்களிலும்   பிரைவேட் ரீயூசன் எடுப்பதற்காக யாழ்ப்பாண நகர் முழுவதும்    அலைந்த அக்காலத்திலே   இந்துக்கல்லூரி அதிபருடன் நல்லூரில்  சண்டையும்  வந்தது.  அதன் பின்பு முற்றாக கல்லூரிக்குப் போவதைத் தவிர்த்தேன் .

 நண்பர்களுடன் திரைப்படங்கள்  பார்ப்பதுடன்,   பெண்கள் பாடசாலைகள் தொடங்கும், நேரங்கள் முடியும் நேரங்களில் அங்கு  ஆஜராகுவதும் முக்கிய வேலை .

அதைவிட மற்றவர்கள் செய்யாத ஒன்றை நான் செய்தேன்.  யாழ்ப்பாண நூலகத்தினுள்ளே சென்று சில மணிநேரம் படிப்பதுடன்,  அங்கிருந்து புத்தகங்களைத் தொடர்ந்து எடுத்துப்போகும் பழக்கத்திற்கும் ஆளானேன்.

 எழுவைதீவு வீட்டில்  வீரகேசரியைத் தினத்தோறும்,  கல்கியை வாரந்தோறும் எடுப்பார்கள் . அக்காலத்தில் அம்மா தீவிரமான வாசகி . கல்கி , பார்த்தசாரதி ,  அகிலன்,  ஜெகசிற்பியன்  போன்றவர்கள் எங்கள் வீட்டில் விரும்பிப் படிக்கப்பட்டார்கள் . பிற்காலத்தில் விடுதியிலிருந்து வாரவிடுமுறைக்கு செல்லும்போது வாசிப்பேன். யாழ்ப்பாணத்தில் தந்தையார் கஞ்சன் ஆனதால் எந்தவொரு  புத்தகமோ பத்திரிகையை வீட்டிற்கு தருவிப்பதில்லை.  எனது வாசிப்பிற்கு தீனிபோட்ட இடம் யாழ் நூலகம்தான். அங்குதான் ஜெயகாந்தனையும் படித்தேன். 

 அந்தக்காலத்தில் காதல் என்று எதுவும் ஏற்படாதபோதிலும் சைக்கிளில் பறவைகளாக பறந்து திரிந்த என்னை  சில பறவைகள் நெஞ்சத்தைக் கொத்தின. .அப்படிக் கொத்திய ஒரு பறவை நல்லூரில் இருந்தது . ஆனால் எனது நண்பர்கள் பல விதமாகச் சொல்லி எனது மனதைக் கலைத்தார்கள் . இன்றுவரையில் அவர்கள் சொன்னது பொய்யாக இருக்கலாம் என நினைக்கிறேன் . அதேபோல் ஒரு நண்பனின் தங்கை என்னை நோக்கி வந்தபோது நானே பின்வாங்கி அந்த நண்பனது வீடு செல்வதைத் தவிர்த்தேன் . அக்காலப் பறவைகள் எதுவும் நகங்களால்ஆழமாக இதயத்தை கீறவில்லை .

நான் படித்த புத்தகங்கள் என்னையறியாது உடலில் ஓடிய ஹோமோன்களை மீறி,  காதல் என்பது நிரந்தரமான விடயம் அதற்காகவே ஒரு பெண்ணைத் தேடவேண்டும்  என்ற நினைப்பை என்னிடம் விதைத்திருந்தது.   அத்துடன் உறவினர்கள் நண்பர்கள்  வீட்டுப் பெண்கள் என்று வரும்போது கவனமாக இருக்கவேண்டும் என்ற சிந்தனையுமிருந்தது.  அத்துடன் அந்த வருட இறுதியில் பரீட்சையும் வந்ததால் கடைசி இரு மாதங்கள்  அதிகமாக அலையாமல் படித்தேன்.

சென்னை தமிழக அமைச்சருடன் சந்திப்பு

காலை எழுந்ததும் எனக்குள் ஒரு அவசரம் , ஆவல், பரபரப்பு என பல உணர்வுகள் நோய்க்கிருமிபோல தொற்றிக்கொண்டன. இலங்கையில் அமைச்சர்கள். அதிகாரிகள் என பலருடன் பேசிப் பழகியிருந்தேன். நான் கடமையாற்றும் கால்நடைத் துறைக்குப் பொறுப்பான அமைச்சர்  தொண்டமானை சந்தித்திருக்கிறேன். அநுராதபுரத்தில் பல சிங்கள அமைச்சர்களுடன் நான் பணியிலிருந்த மதவாச்சிய பிரதேசத்தை அபிவிருத்தி செய்வது விடயமாக பேசியிருக்கிறேன். இப்பொழுது சென்னையில் அகதியாக இருக்கும் காலத்தில் ஒரு அமைச்சரை பார்ப்பதற்கு அதுவும் மற்றவர்கள் தேவைக்காக சந்தித்து பேசுவது என்பது எனக்கு உற்சாகத்தை ஊட்டியது.

சென்னைக்கு வந்த பின்பு எனது உடைகளில் எனது கவனிப்பு குறைந்து விட்டது. சென்னை வெய்யிலும் புழுதியும் என்மீது படிந்தன. கால் நடையாகவோ அல்லது பஸ்சிலோ செல்வதால் வேர்த்து கசங்கி இந்த நகரத்தில் பிதுங்கி வழியும் இலட்சோபலட்சம் மனிதர்களில் நீயும் ஒருவன் என்ற சமத்துவ எண்ணத்தை மனதில் உருவாக்கிவிட்டது. யார் பார்ப்பது? யார் கேட்பது? மனைவியோ குடும்பமோ இல்லை. வேலையே அற்றவன்தானே என்ற நினைப்பு பெரும்பாலும். ரீ சேட்டுகளும் பாட்டா இரப்பர் பாதணியுமாக சென்னை வாசியானேன்.

அன்று வெள்ளை சேர்ட் நீளக்காற்சட்டையும் சப்பாத்தும் அணிந்து ஏழும்பூரில் உள்ள ஈழஏதிலியர் கழகம் சென்றேன். எனக்காக அங்கு காத்திருந்த காசி விஸ்வநாதன் மாஸ்டர் என்னிடம்,      “  பொம்பிளை பார்ப்பதற்கு மாப்பிளை போல வருகிறாய். ஏதாவது சேட்டை விட்டால் அமெரிக்காவில் இருக்கும் மச்சானுக்கு அறிவித்து விடுவேன் “  .எனச் சொல்லிக் கொண்டு அங்கு நின்ற ஓட்டோவில் ஏறினார்.

பதிலளிக்காமல் அவரைப் பின் தொடர்ந்தேன்.

காசி விஸ்வநான் மாஸ்டரைவிட ஈழஏதிலியர் கழகத்தில் ஈழவேந்தன் மூன்று பேரைக் கொண்ட கட்சியை வைத்திருந்தார். அவருடன் பேசிய ஒவ்வொரு தடவையும் மேடம் இந்திராகாந்தியை சந்தித்தது பற்றியே பேசினார். அலுத்துப்போய் மனிதரை தவிர்த்து விடுவேன். செல்வநாயகம் சந்திரஹாசன் வார்த்தைகளை அளந்து பேசுவார். வேறு பலர் இருந்தாலும் எனது பெரும்பாலான விடயங்கள் காசி விஸ்வநான் மாஸ்டரோடுதான் இருந்தது.

அவரது மகனோடு படித்த என்னை நண்பனாக நடத்திய, அவரது சினேக மனப்பான்மை என்னைக் கவர்ந்தது. எந்த அரசியலிலும் சம்பந்தப்படாது தமிழ் மக்களுக்கு உதவி மட்டும் செய்வது என்ற மனப்பான்மை அவரிடம் இருந்தது. வலதுசாரி போக்குடனும்  கொம்யூனிச எதிர்ப்பாளராகவும் அவர் இருந்தாலும் – பத்மநாபாவை “  அவன்தான் இந்த இயக்கத்தவர்களில் ஒழுங்காகவும் நேர்மையாகவும் இருக்கிறான்”   என்றும் அடிக்கடி சொல்லுவார்.

பலகாலம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ஆசிரியராக இருந்ததால் எல்லோரையும் போடா வாடா என்றும் அழைப்பார். அந்த வார்த்தைகளில் அன்பு கசிந்திருப்பதால் எவராலும் அவரைப் புறக்கணிக்க முடியாது. அத்துடன் நேர்மையாக நினைத்ததையே சொல்லிவிடும் இயல்புள்ளவர்.

அவரோடு பழகிய காலங்கள் எனக்கு இனிமையானவை.

அரங்கநாயகம் அமைச்சரை காண்பதற்காக நானும் காசி விஸ்வநான் மாஸ்டரும் அவரது வீட்டு முன்றலில் காத்திருந்தோம். தமிழ்ப் படங்களில் காண்பிப்பதுபோல் வெள்ளை வேட்டி சட்டை அணிந்து, மீசையுடன் கரிய நிறத்தோற்றத்தில், வழுக்கையும் தொப்பையுமாக பெரும்பாலானவர்கள் இருந்தார்கள்.

83 வன்முறையின் பின்பு இலங்கையின் தெற்குப் பல்கலைக்கழகங்களில் தொடர்ந்தும் படிக்க முடியாது,   தமிழ்நாட்டுக்கு வந்தவர்களை அந்த வருடங்களிலே தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கு ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற கோரிக்கை நாம் கைவசம் எடுத்துச்சென்ற கோப்பில் இருந்தது. எம்.ஜி.ஆரின் மந்திரிசபையில் கல்வி அமைச்சரான அரங்கநாயகத்திடம் அதனைக் கையளிக்கவிருந்தோம்.

அந்தக் கோரிக்கை மனுவில் தமிழகம் வந்த இலங்கை மாணவர்கள் சுமார் இருபத்தைந்துபேரின் பெயர்கள் வரையில் இருந்திருக்கலாம். இந்தவிடயத்தில் எங்களை முயற்சி எடுப்பதற்கு தூண்டியவர்கள் யாழ்ப்பாணத்தில் உண்ணாவிரதம் இருந்தபோது விடுதலைப்புலிகளால் தமிழ்நாட்டுக்கு கடத்தி வரப்பட்டவர்களே. அவர்களில் சிலர் ஓஃபர் என்ற ஈழஏதிலியர் கழகத்தில் வந்து இந்தக் கோரிக்கையை வைத்தார்கள். அவர்களால் மீண்டும் இலங்கைக்குப் போய் படிப்பைத் தொடரமுடியாது என்பது தெளிவானபோதே இதை மற்றவர்களுக்கும் ஏற்ற பொதுவான ஒரு கோரிக்கையாக முன் வைத்தோம்.

இப்பொழுது பார்க்கும்போது விடுதலைப்புலிகள் செய்த பொறுப்பற்ற பல செயல்களில் இதுவும் ஒன்றகத் தெரிகிறது. ஆனால் என்ன,  அந்த மாணவர்களைப் பற்றி எவரும் அக்காலத்தில் கவலைப்படவில்லை. அவர்களின் பெற்றோர்கள் மாத்திரம் தமக்குள் குமைந்தபடி இருந்திருக்கலாம். பல காலமாக மதிவதனியின் தந்தையான தமிழாசிரியர்  ஏரம்பு மாஸ்டர் அவரது ஊரான புங்குடுதீவில் விடுதலைப் புலிகளை திட்டிக்கொண்டிருந்தாக அறிந்தேன்.

அமைச்சரிடம் கொடுப்பதற்கான கோரிக்கை மனுவை ஓஃபரை நடத்திய சந்திரகாசனும் காசி விஸ்வநான் மாஸ்டரும் தயாரித்திருந்தார்கள். தமிழ்ப்படங்களில் கதாநாயகனுக்கு துணை செய்யும் துணை நடிகன் போன்று இவர்களுடன் சென்றேன்.

அமைச்சருக்காக  காத்திருந்தோம். எங்களது முறை வந்ததும் உள்ளே சென்றோம். வீட்டின் ஹோலில் அமைச்சர் அரங்கநாயகம் நீண்ட ஷோபாவில் சம்மணமாக வெள்ளை வேட்டி சட்டையணிந்து , புன்னகை செய்வதற்கு விருப்பமற்றவர் போன்று அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றி பலர் நின்றனர்.

அவர் எங்களை ஏறெடுத்து பார்த்தபோது,  விஸ்வநாதன் மாஸ்டர் வணக்கம் சொன்னார். நான் அவருக்கு பின்னால் நின்று இலங்கையில் அமைச்சர்களுக்கு சொல்வதுபோன்று குட்மோர்ணிங் என்றேன்.

அமைச்சர் வார்த்தைகளை வீணாக்க விரும்பாமல் இருந்திருக்கவேண்டும். என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஆனால் மாஸ்டரிடம் இருந்து அந்த மனுவை வாங்கிவிட்டு தலையை ஆட்டினார்.

அமைச்சருடனான சந்திப்பு அத்துடன் முடிந்தது. அமைச்சரின் புறக்கணிப்பு எனக்கு ஏமாற்றமாக இருந்தது. வீட்டின் வாசல்வரை திரும்பி வந்தபோது அவரது காரியதரிசி மிகவும் அவசரமாக வந்து கண்களை அகலமாக விரித்தபடி         “ அமைச்சருக்கு வணக்கம்கூட சொல்லத் தெரியாதா? என்ன படிப்பு படித்திருக்கிறாய்?  “  என மிக சீரியசாகக் கேட்டார்.

கறுத்த குண்டான முன் வழுக்கையான அந்த மனிதரைப் பார்த்ததும், அவர் கேட்டவிதம் எனக்கு சிரிப்பை மூட்டியது.

“  மிருகவைத்தியம் படித்தேன். ” என்றேன்.

அந்தக் காரியதரிசி முகத்தில் கோபம் அடங்காமல், பதில் பேசாமல் திரும்பிப் போய்விட்டார்.

 “ இவங்களுக்கு தலைகுனிந்து வணக்கம் சொல்லவேண்டும். அது நீ செய்யவில்லை. அதுதான் பிரச்சினை.”   என்றார் காசி. விஸ்வநாதன் மாஸ்டர்.

 “  நான் அப்படி இலங்கையில் புத்த பிக்குகளுக்கு மட்டுமே வணக்கம்  சொல்லியிருக்கிறேன்.” என்றேன்.

இலங்கையில் இருந்தபோது அநுராதபுரம் வந்த பல இலங்கை அமைச்சர்கள் அரசாங்க அதிபரால் அறிமுகப்படுத்தப்பட்டதும்,   சிரித்து இரண்டு வார்த்தைகளாவது பேசுவார்கள். அக்கால விவசாய உதவி அமைச்சர் சந்திரா பண்டாரவோடு விவாதித்திருக்கிறேன். வவுனியா மாவட்ட அமைச்சர் மகிந்தசோம எனக்கு கை ஓங்கி அடிக்க வந்து பின்னர் மன்னிப்புகேட்டார்.

தமிழ்நாட்டில் நிலவுடமை சமுதாய அமைப்பு எப்படியான போலிக் கவுரவங்களை காவியபடி செல்கிறது என்பது எனக்குப் புரிந்தது. இலங்கையில் பாதிக்கப்பட்ட சிறுபான்மை சமூகத்தில் இருந்து வந்த நான்,  இலங்கையில் அதிக சுயமரியாதையோடு வாழ்ந்ததாக அந்தச் சம்பவம் எனக்கு உணர வைத்தது.

அந்தக் காலத்து தமிழ் நாட்டு அமைச்சரவையில் பல ஈழத்து அனுதாபிகள் இருந்தார்கள். அதில் முக்கியமானவர் ஓரத்தநாட்டைச் சேர்ந்த சோமசுந்தரம்.  அவர் மற்றும் முதலமைச்சரின் சிபாரிசில் பல மணவர்கள் நேரடியாக தமிழக பல்கலைக்கழகங்களுக்குப் பிரவேசித்தார்கள். விடுதலைப்புலிகளால் கடத்தப்பட்டவர்களில் விடுதலைப்புலிகளின் தலைவருக்கு மனைவியாகிய மதிவதனியைத் தவிர ஏனையோர் இந்தியாவில் படிப்பைத் தொடர்ந்து நல்ல பதவிகளில் , தொழில் துறைகளில் இருப்பார்கள் என நம்புகிறேன்.

——-

நான் ஈழபுரட்சிகர விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் சந்தித்த விசாகனுடன் சேர்ந்து பாண்டிபஜாரில் உள்ள கல்யாணமண்டபத்தில் மேல்மாடியில் ஒரு சிறிய அறை எடுத்து தங்கினேன். அந்த இடம் போக்குவரத்து , உணவு என பலவிடயங்களுக்கும் இலகுவாக இருந்தது. எங்கள் அறைக்குப்பக்கத்தில் சினிமாத் துறையை சேர்ந்தவர்கள் ; உதவி இயக்குநர்கள் தங்கியிருந்தார்கள். அவர்களிடம் பேசுவதன்மூலம் சினிமாவைப்பற்றியும் நாங்கள் அறிந்தோம். அவர்களுக்கு ஈழத்து பிரச்சினையை விளக்கினோம்.

இதில் ஒரு முக்கியமான விடயம் தமிழ்நாட்டில் இலங்கைப் பிரச்சினையை அறிந்தவர்கள் என்றால் இடதுசாரிகள் மட்டுமே. அவர்களுடன் மட்டுமே புத்திசாலித்தனமாக உரையாடலை நடத்த முடியும்.

மற்றவர்கள் தமிழ் சிங்கள இனப்பிரச்சினையை – அதாவது சிங்களவர் தமிழரை கொல்கிறார்கள் என்ற தோரணையில் மட்டுமே புரிந்து கொண்டிருந்தார்கள். அக்காலத்தில் பலருக்கு சிலோன் என்ற பெயர் ஸ்ரீலங்காவாக மாறிவிட்டதும் தெரிந்திருக்கவில்லை.

இதற்கு ஏற்றாற் போலவே தமிழ்நாட்டு ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டன.  இலங்கையில் தென்பகுதியில் தமிழர்கள் வாழ்வதோ இஸ்லாமியர்கள் தமிழ் பேசுவதோ அவர்களுக்குத் தெரியாது. பெரும்பாலான தமிழ் இயக்கங்களும் இந்த விடயத்தை கறுப்பு- வெள்ளையாக வைத்திருப்பது நன்மை என நினைத்து அந்த உணர்வையே அங்கு வளர்த்தார்கள்.

இடதுசாரி இயக்கங்களான ஈழவிடுதலை அமைப்பு , ஈழப்புரட்சிகர விடுதலை முன்னணி என்பனவும் இதையே செய்தார்கள்.

நான் பாண்டிபஜாரில் இருந்த காலத்தில நடந்த சம்பவங்கள் பல சுவையானவை. குறிப்பிடத்தக்தவை

விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டில் அக்காலத்தில் பயிற்சி முகாம்களை நடத்தியபோது அந்த முகாம்களில் பயிற்சிக்குப் பொறுப்பான குகன் என்ற பொன்னம்மான் என்னை கோடம்பாக்கத்தில் தெருவில் ஒருநாள் தான் வந்த ஜீப்பை நிறுத்தி என்னைச்சந்தித்த போது ஆச்சரியத்துடன் வரவேற்றேன்.

குகனது வீடு இருக்கும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு அருகே இருக்கும் சீனியர் லேனில்தான் சிலகாலம் நாங்கள் குடியிருந்தோம் . எனது வீட்டுக்கு அருகில்தான் அவனது வீடும் இருந்தது. குகன் எனக்கு ஒரு வகுப்புக்கு கீழே இந்துக்கல்லூரியில் படித்தாலும் சிநேகிதமாக இருந்தோம்.

குறைந்தது வாரத்துக்கு இருமுறையாவது எனது வீட்டுவாசலில் சைக்கிளை நிறுத்திப் பேசிவிட்டுத்தான் போவான். இது நடந்த காலம் 1971- 1972 அளவில். இதேவேளை எனக்கு ஒரு மேல் வகுப்பு படித்த அவனது அண்ணன் நரேன் , யோகி மாஸ்டர் என்ற பெயரில் பிற்காலத்தில் விடுதலைப்புலிகளின் அரசியல் பொறுப்பாளராக இருந்தவர்.

 ஆனால் அவருடன் பழகி இருந்தாலும் அதனை நட்பு என்று சொல்லமுடியாது உருவத்தில் மாத்திரமல்ல குணத்திலும் இருவரும் வேறானவர்கள். நரேன் காலையில் பறித்த திராட்சைபோலும் குகன் சுல்தானா போலும் இருப்பார்கள். குகன் உணர்வுமயமாகவும் நட்பாகவும் நடப்பான். நரேன் ஒரு கம்பனியை நடத்தும் முதலாளி போன்ற தன்மையுடன் பழகுவான்

குகன் ஆரம்பத்திலேயே விடுதலைப்புலிகளில் சேர்ந்ததால் அவனுடைய குடும்பம் இலங்கை அரசாங்கத்தின் பல நெருக்கடிகளை சந்தித்ததை நான் அறிவேன். குகனில் நட்புடன் அவனது தன்னலமற்ற செயலால் அவன்மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருநதேன்.

சென்னைத் தெருவில் எதிர்பாராமல் அவனைக் கண்டது சந்தோசமாக இருந்தது.

“  இந்தியாவில் என்ன செய்கிறாய்? “  எனக்கேட்டு நேரடியாக விடயத்திற்கு வந்தான்.

 “ நான் ஓஃபர் நிலையத்துடன் தன்னார்வமாக வேலை செய்கிறேன்”  என்றேன்.

 “ இவர்கள் பிரயோசனம் இல்லாதவர்கள். எங்களிடம் வந்து உதவி செய். அத்துடன் உனது மனைவியால் எங்களுக்கு மருத்துவ உதவியளிக்கவும் முடியும். மாதம் வாழ்க்கைச்செலவுக்கு 3000 ரூபாய் தருவதற்கு நான் பொறுப்பு”  என்றான்.

அவசரமாக விலைபேசி முடித்தான்.

 “ எனக்கு பணம் பெரிதல்ல. நான் உங்களுக்கு முடிந்த உதவிகள் செய்ய சம்மதம். அதேவேளை மற்றவர்களுக்கும் நான் உதவிகள் செய்வது உங்களுக்கும் சம்மதமென்றால் நான் தயார். “ என்றேன்.

“அது சரி வராது. நீ எங்களுடன் மட்டும்தான் இருக்கவேண்டும் “

 “ அது எனக்குச் சரி வராது. நான் சுதந்திரமான ஒரு சேவையில் ஈடுபடத்தான் விரும்புகிறேன்.” என்று சொல்லிவிட்டு தமிழ்விடுதலை இயக்கங்களின் ஒற்றுமையை வலியுறுத்தினேன்.

 “  உனது வீட்டில் வேறு ஒருவரை குடியேற்ற சம்மதமா? “   என்ற ஆத்திரமான குரல் அவனிடமிருந்து தொனித்தது.

மேலும் இவனிடம் பேசிப் பிரயோசனமில்லை என கதையை மாற்றினேன்.

                  “  நான் இங்கு வந்து சில வாரங்கள்தான். என்ன செய்வது என யோசிக்கிறேன். மேலும் படிப்பதற்கும்  எண்ணமுள்ளது   “     என்றேன்.

குகன் என்னிடமிருந்து விடைபெற்றான்.

விடுதலைப்புலிகளிடம் இருந்த ஏகபோகமான குத்தகைத்தன்மை அவர்களது தலைவரில் இருந்து வெளிநாடுகளில் அவர்களின் ஆதரவாளர்கள் வரையில் புற்றுநோய்போல் பரவியிருந்தது.

இதுவே இவர்களது உயிர்க்கொல்லியாக மாறியது. இந்தத் தன்மையை பல தமிழ் புத்திஜீவிகள் புரிந்து கொள்ள முடியாது போனது கவலைக்கிடமானது. வேறு ஒரு நாகரீகமான சமூகத்தில் இப்படி ஒரு இயக்கத்தால் தலை எடுக்க முடியாதிருந்திருக்கும்.

விடுதலைப்புலிகளின் ஆரம்ப காலத்து அங்கத்தவர்கள் பலர் விடுதலைப் புலிகளில் இருந்து விலகியபோது வேறு காரணங்களைச் சொல்லியபோதும் இந்தமாதிரியான எதேச்சாதிகாரமான போக்கை ஷோபாசக்தி போன்ற ஓரிருவர் தவிர மற்றவர்கள் வெளிக்கொணரவில்லை.

இலங்கை அரசாங்கத்தையும் இராணுவத்தையும் எதிர்ப்பதற்கு அந்த எதேச்சதிகாரம்தான் வலுவான ஆயுதம் என நினைத்து மவுனம் காத்தார்கள்.

இதன் தொடர்ச்சிதான் பிற்காலத்தில் முழுச்சமூகமும் அழிந்து மீண்டும் புத்துயிர்ப்பு அடைய வேண்டிய தேவையை உருவாக்கியிருக்கிறது.

அவுஸ்திரேலியா

வார்ணம்பூல் போய்ச் சேர்ந்த சில நாட்களில் நான் ஆவலுடன் எதிர்பார்த்த கடிதம் வந்தது . அவுஸ்திரேலியா வந்து மூன்றரையாண்டுகளின் பின்பாக எனக்கு இந்த நாட்டில் தொழில் செய்வதற்கான தகமை கிடைத்தது.

 அக்காலத்தில்  அவுஸ்திரேலியாவின் பொருளாதாரம் நல்ல நிலையிலிருந்தது. அக்காலத்தில் இலங்கையைச் சேர்ந்த நண்பர்கள் ஒரு நாளைக்கு ஒரு தொழிற்சாலைக்குச் சென்று வேலையெடுத்துவிட்டு இரண்டு நாளில் பணமதிகம் கிடைக்குமென  நம்பி வேறு  இடத்தில் வேலைக்குப் போவார்கள். ஒருவர் மூன்று இடங்களில் ஒரு கிழமையில் வேலை பார்த்தாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

 மெல்பன் அவுஸ்திரேலியாவின் கலாச்சார தலைநகர் மட்டுமல்ல,   தொழிற்சாலைகளை அதிகம் கொண்ட நகரம். திறந்த பொருளாதாரக் கொள்கை வந்த  பிற்காலத்தில் உடைகள் ,  பாத அணிகள், மற்றும் தளபாடங்கள் செய்த தொழிற்சாலைகள் இருந்த இடமற்று போய்விட்டன. சீனாவிலிருந்து மற்றும் ஆசிய நாடுகளில் இருந்தும்  குறைந்த செலவில் செய்யப்பட்ட பாவனைப் பொருட்கள் இறக்குமதியாகின்றன. நான் வந்த காலத்தில் ,   நான்கு வகையான கார்கள் அவுஸ்திரேலியாவில் உற்பத்தி செய்யப்பட்டது. இப்பொழுது எல்லாம் இறக்குமதி என்றால் பாருங்களேன்

 எனக்குக் கிடைத்த தகமையை வைத்து தொழிலுக்கு விண்ணப்பித்தபோது,  எனக்கு அடிலயிட்டில் இருந்து 200 கிலோமீட்டர்  வடக்கே தள்ளி ஒரு சிறு நகரத்தில் வேலை கிடைத்தது. குடும்பத்தை மீண்டும் பிரிந்து செல்ல 800 கிலோமீட்டர் தள்ளி வேலைக்குப் போவதனால் எனது மாமா மாமி  ,  மகளோடு இருப்பதற்குத் தயாராகினர். அவர்களுக்குப் பேரப்பிள்ளைகளோடும் மகளோடு இருப்பது எதிர்பாராத சந்தோசம் எனக்கோ அதே அளவு கவலை .

 எனது பழைய காரில் தனிக்குடித்தனத்திற்கு தயாராகச் சென்றேன் . போட்பயரி (Port Pirie ) என்ற  சிறிய நகரத்திலிருந்த   ஈயத்தொழிற்சாலையிலிருந்தே இரண்டாம் உலகப் போரில் அமரிக்கா பிரித்தானிய  படைகளால் பாவிக்கப்பட்ட ஈயக்குண்டுகளின் பெரும்பகுதி ஈயம் வந்திருக்கலாம்.   அவ்வளவு பெரிய தொழிற்சாலை .

மிருக வைத்தியரின் உதவியாளராக எனக்கு வேலை கிடைத்தது. அவரது மனைவி வேலை செய்யாத வைத்தியர்.

புதிய வேலை என்பதால் ஆவலாக இருந்தேன் .

இரண்டு விடயங்கள் அங்கு என்னைப் பாதித்தன .  பகலில் வைத்தியசாலைக்கு கொண்டுவரும் செல்லப்பிராணிகளைப் பரிசோதிப்பேன்.  எனது  பொஸ் பண்ணைகளுக்குப் பகலில் செல்வார்.  இரவில் ஒன்று விட்ட ஒரு நாள் எனக்கு இரவு நேரம் யாராவது கூப்பிட்டால் போக வேண்டும்.

 பல தடவை இரவுகள் யாருமற்ற இடங்களைத் தேடி அலைந்திருக்கிறேன் . சில பண்ணைகள்  பல கிலோமீட்டர் தூரத்திலிருக்கும். அங்கெல்லாம் குதிரைகளுக்கு வயிற்று வலிவரும்போதும்  மாடுகள் கன்று போடுவதற்கும் இரவிலே என்னைத் தேடும்..

 அதற்கப்பால் தொடர்ச்சியாக என்னை அது செய் , இது செய் என்ற வெண்டி என்ற பொஸ்சின்  மனைவியின் தொல்லை, எனது  சிறுவயதில்  அகப்பையை  கையில் வைத்தபடி விரட்டும் ஆச்சியை நினைவு படுத்தும். 

 அவர்களது கார்  ஆறு சிலின்டர்களைக்  கொண்டது.   நான் இரண்டு சிலிண்டர் காரையோடியவன் . அந்தக்காரின் அக்சிலேட்டரில் கால்வைத்தால் அப்பல்லோ ரொக்கட்டாக  பாயும் . பல தடவை இதைச் சொல்லி மறுத்திருக்கிறேன் .

 ஒரு நாள் எனது பொஸ்சின் மனைவி  வெண்டி,   மதிய நேரத்தில் பண்ணையொன்றில் பசுக்கன்றையும் அதே பண்ணையில் உள்ள நாயின் காலில் ஏற்பட்ட காயத்தையும்  பார்த்துவிட்டு வரும்படி சொன்னதோடு,   அந்த ஃபோட் ஃபல்கன் காரை எடுத்துப் போகும்படி வற்புறுத்தினார் .

பயந்து பயந்து பண்ணைக்குப் போய்வர  மாலை மூன்று  மணியாகிவிட்டது . கிறவல் பாதையினூடாக வரும்போது மேற்கிலிருந்து  தெரிந்த சூரியனின் வெளிச்சம் கண்களைக் கூசச் செய்தது . கண்ணை மூடி திறந்தபோது முன்பாக எனக்கெதிரே பிரின்சஸ் ஹைவே எனப்படும் பிரதான பாதை காட்சியளித்தது.  திருப்புவதற்கு முயற்சித்தாலும் முடியவில்லை.  வாகனம் பாதையைப் பாய்ந்து கடந்து முன்பக்கம் உழுதிருந்த கோதுமை வயலுக்குள்  சிரசாசனம் செய்தது.   சீட்பெல்ட்  அணிந்திருந்ததால் நானும் தொங்குகிறேன்.  ஆனால்,  காரின் கண்ணாடி உடைந்ததால் எனது மூக்குக் கண்ணாடி வெளியே விழுந்துவிட்டது . இந்தக்காலம் மாதிரி கைத்தொலைபேசியில்லை .  

என்னால் இறங்க முடியவில்லை.  எதிரே ஒரு பெண்ணும் ஆணும் குழந்தையுடன்  என்னை நோக்கி வந்தார்கள் .

 தாலி கட்டும் நேரத்தில் அடிக்கும் கல்யாண மேளமாக  இதயம் அடித்துக் கொண்டிருந்தது .  அந்த ஆண், குழந்தையைத் தனது மனைவியிடம் கொடுத்துவிட்டு ஓங்கிக்  கதவை இழுத்தபோது கதவு திறந்து கொண்டது. பார்வையற்ற நான் பறக்கும் தட்டிலிலிருந்து இறங்குவதுபோல் மெதுவாக இறங்கி கால்களைத் தரையில்த் தொட்டுச்  சரி பார்த்தவுடன்,   “ எனது கண்ணாடி இங்குள்ளதா “ என்றேன்.  அந்தப் பெண் கண்ணாடியை எடுத்துத் தந்ததும்,   ஆணின் மேல்பொக்கட்டில்   துருத்திக்கொண்டிருந்த  நீல நிற பீட்டர் ஜக்சன்       சிகரட் பெட்டியே எனது கண்ணில்பட்டது .

  “ எனக்கு ஒரு சிகரட் தரமுடியுமா? “ என்று கேட்டபோது அதை அவனே பற்றவைத்து  தந்தான் . இரண்டு தம் இழுத்த பின்பு என்னைப்பற்றிச்  சொன்னதும் அவனது வீட்டுக்கு வரும்படி அழைத்தான்.  அங்கிருந்தே எனது பொஸ்க்கு தொலைபேசியை எடுத்து விடயத்தைக்கூறினேன் .

  “  விபத்து – கார்  சிரசாசனம் செய்கிறது “ என்றதும்   “ அதை விடு. நீர் எப்படி“ என்றான்.

  “எனக்குப் பாதிப்பில்லை “ என்றதும் பத்து நிமிடத்தில் வருவதாகக் கூறினான்.  

 எனது பொஸ் என்னைச் சிறிது நேரத்தில் வந்து அழைத்துச் சென்றபோது,   நான் இந்த இரண்டு காரணங்களைச் சொல்லி வேலையை விடுவதாக சொன்னேன் .

 “உனக்கு அந்த சுதந்திரமுள்ளது. எனக்கில்லை . “ என்றான் நகைச்சுவையாக.

மீண்டும் வார்ணம்பூல் வந்தபோது வேலை தேடவேண்டியிருந்தது .

–0–

“கரையில் மோதும் நினைவலைகள் 9” அதற்கு 2 மறுமொழிகள்

  1. Augustine Jegasothy Avatar
    Augustine Jegasothy

    Nice article. I had a similar incident when I was in a need to get a letter from the late MLA Nekamam Kandasamy of Pollachi to continue my Degree in Tamil Nadu.

  2. It was their culture , can not blame them

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: