எனது பார்வை

நடேசன்
ஆபிரிக்கா சென்றுபோது அங்கே சில விடயங்களைப் படித்ததில் ஆபிரிக்காவில் நிலங்களில் விவசாயம் செய்து வந்த சமூகங்களில் தந்தை வழிசமூகம் பற்றியும் அறியமுடிந்தது.
அங்கு தந்தை, பின்பு மகன் என குடும்பத்தலைமை தொடர்வதால் தலைமைத்துவம் உருவாகிவிடுகிறது. தந்தையின் பின்பு மகன், இல்லாதவிடத்து தம்பி அந்த சமூககூட்டத்திற்கு தலைமையேற்றுவிடுகிறான்.
ஆபிரிக்காவில் அத்தகைய இடங்களில் ஐரோப்பியர்கள் அதிகாரம் செலுத்தும் போது, அவர்கள் இப்படியான தலைவர்கள் மூலமாக வரி அறவிடல் மற்றும் யுத்தத்துக்கு ஆள்சேர்த்தல் முதலான பணிகளைச் செய்தார்கள். ஐரோப்பியரின் காலனி ஆதிக்கத்தின் வண்டியில் இந்த சமூகத் தலைவர்கள் சக்கரமாக இயங்கினார்கள்.
ஆபிரிக்காவின் சில பிரதேசங்களில் தலைமை இல்லாத சமூகங்கள் இருந்தன. கால்நடைகள் ஆப்பிரிக்கர் மத்தியில் முக்கிய செல்வமாக மதிக்கப்படுவதால், ஓரளவு அதிகமாக கால்நடை வைத்திருப்பவர்கள், அல்லது நிலம் வைத்திருந்தவர்களிடம் ஐரோப்பியர் அதிகாரத்தைக் கொடுத்து சமூகத் தலைவர்கள் (Tribal chief) ஆக்கிவிட்டார்கள்.
ஐரோப்பியர்களால் மக்களிடம் நேரடியாகச் செல்லமுடியாது. அத்துடன் மக்கள் பிரதிநிதிகள் என புதியவர்களை நியமித்து ஜனநாயகத்தை உருவாக்கவும் விருப்பமில்லை. ஆனால் சமூகத்தில் ஐரோப்பியர் உருவாக்கிய இப்படியான திடீர் தலைமைகள் பிரச்சினைக்கு உரியதாகிறது.
இந்தப் புதியவர்களின் அதிகாரத்திற்குப் பலவிதங்களில் அபாயம் வரும். வேறு ஒருவர் பல மாடுகளுக்கு சொந்தக்காரராகிவிட்டாலோ அல்லது நோயால் மாடுகள் இறந்தாலோ அவரது தலைமைக்குக் கேள்வி வந்துவிடும். பாரம்பரியத் தலைமையுள்ள இடங்களில் இந்தப் பிரச்சினை இல்லை.
சரித்திரத்தில் கிட்டத்தட்ட 400 வருடங்கள் மட்டுமே இருந்த யாழ்ப்பாண குறுநில அரசு, இந்தியாவிலிருந்த நாயக்கர்களால் அல்லது வேறு ஒரு குலத்தவர்களால் உருவாக்கப்பட்டது. நிச்சயமாக தெற்கிலங்கைபோல் தலைமை கொண்டதாக உருவாகவில்லை .
சுதந்திரத்தின் பின்பு தொடர்ந்த நிலையில், முக்கியமாக நாம் பெற்ற நாடாளுமன்ற முறையால் மக்கள் பிரதிநிதிகளின் தேவை ஏற்படுகிறது. இதற்காக தலைமைத்துவத்தை நோக்கி அவர்கள் ஆசைப்படும்போது, அங்கும் தலைமைத்துவத்திற்குப் போட்டிகள் வரும். அதனால் ஏற்படும் பயம் இவர்களைக் குறுக்கு வழிகளில் தள்ளுகிறது.
இவர்களது உண்மைக்குப் புறம்பான பல விடயங்களைப் பட்டியல் இடலாம். இலங்கையில் 25 வீதமான சிறுபான்மையினருக்கு ஜி.ஜி. பொன்னம்பலம் 50 வீதம் கேட்டார். அது கிடைக்காது என்பது அவருக்குத் தெரிந்திருந்தது.
பெரும்பான்மைத் தமிழருக்கு ஜி.ஜி. பொன்னம்பலத்தால் தலைமைத்துவம் வழங்கமுடியாது. காரணம் அவருக்கு அரசியல் பகுதி நேரமாகத்தான் இருந்தது. அவரை புறங்காட்ட செல்வநாயகம் தமிழர் அரசாட்சி என தமிழிலும் சமஷ்டி என ஆங்கிலத்திலும் எங்கள் வீட்டுப்பிள்ளை எம் ஜி ஆர் ஆக இரட்டைவேடம் போட்டார்.
கிட்டத்தட்ட 60 வீதம் தமிழரற்ற கிழக்கு மாகாணத்தைத் தனி ஈழ வரைப்படத்தில் புகுத்திய அமிர்தலிங்கம், தனக்கு இரண்டாவது இடத்தில் இருந்த மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினரான இராசதுரையை ஓரம் கட்டுவதற்காக எந்தத் தகுதியும் அற்ற காசி ஆனந்தனை மட்டக்களப்பில் போட்டியிடவைத்து காசி ஆனந்தனை தோல்வியடையப்பண்ணியதுடன், இராசதுரையை அரசாங்கக் கட்சிக்கு மாறவைத்த பெருமையின் மூலம் தனது அரசியல் சாணக்கியமற்ற தன்மையை காண்பித்தார்.
இந்தத் தலைவர்களது வீரப்பேச்சுகள் ஆசனிக் விஷமாக மாறி, அக்கால இளைஞர்களின் தலைகளில் ஏறி , அவர்கள் இவர்களின் நாடகங்களைப் பார்த்து உண்மையென நம்பிவந்து ஆயுதமெடுத்தார்கள்.
இதில் ஏராளமானவர்கள் உணர்வுரீதியாக உயிரை விடத்தயாராகி இருந்தார்கள் . பலர் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுடைய தலைமையை ஏற்கத் தயாராக இருந்தார்கள்.
ஆனால், அவர் எந்த ஒரு நிழலையும் கூட தனக்குப் போட்டியாக நினைத்துப் பயந்து சிறு இயக்கங்களின் தலைவர்களில் இருந்து அமிர்தலிங்கம்வரை தமிழ்த் தலைவர்களைக் கொன்று ஜக் த ரிப்பர் (Jack the Ripper) போன்ற தொடர் கொலைகாரராக மாறினார்.
இந்தக்காலத்தில் சிங்கள இராணுவத்தின் கொடுமைகளால் பாதிப்படைந்தவர்கள் பலர் உண்மையாகவே ஆயுதப்போரை ஆதரித்தார்கள். இதன் விளைவை உணர்ந்த மற்றவர்கள் உண்மையைப் பேசப் பயந்தனர் .ஆனால், மிகச் சிலரே கிட்டத்தட்ட 30 வருடங்களாக ‘தமிழினத்தின் அழிவுக்குக் காரணம் … இலங்கை அரசோ அவர்களது இராணுவமோ அல்ல, நமது தமிழ் தலைவர் கொளுத்திய ஓமகுண்டத்தில் பிறந்து வந்த வல்வெட்டித்துறை பிரபாகரனே’ என்றனர் .
அவர்களில் முக்கியமானவர் ஜோர்ஜ் இ. குருஷ்சேவ் என்ற கனடாவில் தாயகம் என்ற சஞ்சிகையை நடத்தியவர். அவர் தாயகத்தில் தொடர்ச்சியாக கிளிப் பிள்ளையாகச் சொல்லி வந்த விடயம் தமிழின அழிவு எதிர்பார்த்தபடி 2009 இல் வந்தது.
ஜோர்ஜ் குருஷ்சேவ் தத்துவம் அரசியல் படித்தவரோ , அல்லது கனடாவில் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியரோ அல்ல.
அவரது வார்த்தைகள் எதிர்காலத்தை நமக்குச் சொல்லும் அசரீரி போன்றவை.
சாதாரண யாழ்ப்பாணமொழியில் ஊரில் நமது மாமாவோ பெரியப்பரோ, “ தம்பிமாரே இப்பிடிச் செய்தால் ஒன்றும் சரி வராது . அழிவு தான் ஏற்படும் “ என்ற ரீதியில் அவர் சொன்னது நமது கிராமங்களில் சொல்லப்படும் வார்த்தைகள்.
இந்த குறிப்பில் உள்ளது .
நான் ஜோர்ஜ் குருஷ்சேவினது சில வைர வரிகளை மட்டும் இங்கே கோடி காட்டுகிறேன்.
“ புலிகள் இல்லாவிட்டால் சிங்களவன் தமிழனை அழித்துவிடுவான்கள் என்ற நாங்கள், தமிழர்கள் தங்கள் பாட்டில் வாழ்வதை சகித்துக் கொள்ளமுடியாது கொதித்துக்கொண்டிருக்கிறோம். “
“ அமெரிக்கா ,நோர்வே , ஐரோப்பியச் சமூகம், இந்தியா ஜப்பான், சீனா என்ற நாடுகளும் பான் கி மூன் தொடக்கம் சொல்கெய்ம் வரைக்கும் துரோகம் இழைக்காவிட்டால் தலைவர் தமிழீழத்தைப் பெற்றிருப்பார் “ என்று ‘ எங்கள் பிள்ளையை கண்ட கண்ட காவாலிகளும் கெடுத்துப்போட்டாங்கள்’ என்று பழியைப் போடுகிறோம் . இவ்வளவு பேரும் ஆதரவு தந்தால்தான் தமிழீழம் கிடைக்குமென்றால் அதற்குத் தேசியத் தலைவரா வேண்டும்? அதை யாழ்ப்பாணத்தில் சுவீப் டிக்கட் விற்ற வைரமாளிகையால் கூடப் பெற்றிருக்க முடியும் ஏனென்றால் வைரமாளிகைக்கு கொஞ்சம் இங்கிலிஸ் பேசத் தெரியும். “
“ ஒரு காலத்தில் துரோகி என்று கொல்லப்பட்டவர்கள் தோண்டி எடுக்கப்பட்டு, தியாகிகளாக முடிசூட்டப்பட்டதற்கு பல உதாரணங்கள் காட்டலாம் . கொலை கொள்ளை எதையும் செய்ய அஞ்சாத மாபியாக் கூட்டம் தங்களில் யாராவது மனம் திருந்தினால் துரோகம் என்றுதான் சொல்கிறது. தாங்கள் செய்வது சட்டவிரோதமான செயல் என நினைப்பதில்லை “
“அழிந்துபோன புலிகளை அங்கீகரிக்கவேண்டும் என்று இவர்கள் குத்தி முறிவது உத்தியோக பூர்வமாகத் தமிழர்களை மிரட்டி பணம் பறிக்க –! “
இப்படியாக பல வரிகளை நான் எடுத்துக் காட்டலாம் .
ஜோர்ஜ் குருஷ்சேவ் வைரங்கள் நிரம்பிய களஞ்சியம். எல்லாம் பட்டை தீட்டப்பட்டவை . எங்கள் சமூகத்தில் அவை கூழாங்கல்லாகக் கடந்த கால் நூற்றாண்டுகளாக இருந்தது.
நமது சமூகத்தில் புதிய சந்ததி ஒன்று வந்து அதை மீண்டும் பார்க்கவேண்டும் என்பதால் இந்த எழுத்துகள் தூசு தட்டப்பட்டு வைக்கப்படவேண்டுமென நினைக்கிறேன். நடந்தவற்றில் பொய்களைக் கலந்து வண்ணம் தீட்டிய நமது சமூகத்தில் உண்மையை எழுதியவர்கள் மிக அரிது.
ஆனால் ஜோர்ஜ் குருஷ்சேவ் எதிர்வு கூறி எழுதியதே எனக்குப் பிடித்த விடயம்.
நான் எழுதத் தொடங்கிய பின்னர், என்னிடம் இதுவரையில் ஒரு நண்பரே முன்னுரை எழுதிக்கேட்டார்.
இது எனது இரண்டாவது முன்னுரை. அதுவும் நான் விரும்பும் ஜோர்ஜ் குருஷ்சேவுக்கு எழுதுவது மகிழ்ச்சியானது.
மறுமொழியொன்றை இடுங்கள்