
எனது அந்தரங்கம் சிறுகதைத் தொகுப்பை வைத்து எழுதும்போது வாசகர்களுக்குப் புதிதாக எதைச் சொல்ல முடியும் என்பதை யோசிக்கிறேன் . எழுத்தாளர் ஜெயகாந்தன் போன்று, நீளமான முன்னுரை எழுத விரும்பவில்லை . கதையில் சொல்லாததை எப்படி முன்னுரையில் சொல்லமுடியும்.?
மற்றவர்கள் சொல்லவேண்டும் என்பதற்காக, நான் பெரிதும் மதிக்கும் நண்பர்களான மாலனும் கருணாகரனும் முன்னுரை மற்றும் மதிப்புரை எழுதியிருக்கிறார்கள். ஆனவே ஒரு சிறிய குறிப்புடன் இங்கு நன்றி மட்டுமே எழுதவுள்ளேன்.
நான் எழுதிய நாவல்கள் திட்டமிடப்பட்டு கருத்தியலை வைத்து எழுதப்பட்டது . எப்படி இனவாதம் இலங்கையில் வாழ்பவர்களை புறந்தள்ளுகிறது என்பதை வண்ணாத்திக்குளத்திலும் , இயக்க மோதல்கள் மற்றும் இனமோதல்களால், மனிதர்கள் மரணத்திலும், உடல் ஊனத்தோடும் நின்றுவிடாது, மனக்காயங்களுடன் வாழ்நாள் முழுவதும் துன்பப்படுகிறார்கள் என்பதை “ உனையே மயல்கொண்டு“ விலும் சித்திரிக்க விழைந்தேன்.
அசோகனின் வைத்தியசாலையில் புதிதாக ஒரு நாட்டிற்கு வருபவனது அனுபவங்களோடு, இன வாதம் குடும்ப வன்முறை என்ற புற வெளிப்பாடுகளோடு மனிதர்களின் மனசாட்சி என்பது எப்படி வாழும் இடத்திற்கு ஏற்ப மாறுபடுகிறது என்பதை நானே புரிந்து கொள்ள முயன்றேன். கானல் தேசம், இலங்கை அரசியலில் தமிழர்கள் மட்டுமல்ல இஸ்லாமியர், சிங்களவர் எப்படி பாதிப்படைந்தார்கள் என்பதையும் ஏன் அவர்களது நிலையை நாம் உணரவேண்டும் என்பதற்கான முயற்சி.
இறுதியாக எழுதிய “பண்ணையில் ஒரு மிருகம்” அச்சுக்கு வரக்காத்திருக்கிறது. தமிழக மண்ணில் எனது அனுபவங்களினதும் அனுமானிப்பிலும் எழுதப்பட்டது . அதில் சாதிகளில் உயர்சாதியினர் மட்டுமல்ல இடைசாதியினரும் வசதியாகச் சாதி வேறுபாடுகளை கடைப்பிடிக்கிறார்கள். என்பதை சொல்லியிருக்கின்றேன். அத்துடன் அடிமட்டத்தில் உள்ள பெண்கள் இந்த சாதி வேறுபாட்டின் அடக்குமுறையுடன் ஆண்களினது அடக்குமுறைக்கும் ஆளாகிறார்கள் என்பதைப் பேசுபொருளாக எடுத்தேன்.
இப்படியாக எனது நாவல்கள், கருப்பொருள்களை வைத்துத் திட்டமிட்டு எழுதப்பட்டவை. மாறாக எனது சிறுகதைகள் நான் கடந்த, அல்லது நான் கேட்ட ஏதோ சிறிய சம்பவத்தை வைத்துப் பின்னப்பட்டவை . எந்தத் திட்டமிடுதலும் அற்றவை . மனதில் அவ்வப்போது தோன்றியவை .
அதைவிட நண்பர் மாலனது கூற்றுப்படி வயிற்றுப் பசிக்கப்பால் மனிதனிடம் ஏற்படுவது காமம். எமது சமூகத்தில் காமத்தை நெருப்பாகக் கருதி நீண்ட துணிகளால் போர்த்தி அணைப்பதே காலாகாலமாக நடக்கிறது . ஆனால், அது துணியை மீறி எரிவதுபோல், காமம் தொடர்ந்து இலக்கியத்தில் மட்டுமல்ல சமூகத்திலும் வெளிப்படுகிறது என்பதே நாம் பார்த்த உண்மை . காதல் -காமம் என்பன பேசுபொருட்களாக இலக்கியத்தில் காலத்தைக் கடந்தவை
அப்படியான கதைகள் பல இந்த சிறுகதைத் தொகுப்பில் உள்ளன . இவை எப்படியானவை?
நிலைத்து நிற்குமா என்பதை வாசகர்களது தீர்மானத்திற்கே விடுகிறேன். மற்றவை அரசியல் வன்முறையைக் கருவாக்கியவை. அரசியலை வாழ்நாள் முழுவதும் கேட்டு வளர்ந்தபோது பல கதைகளில் அவை கருப்பொருளாகியது. இது தவிர்க்கமுடியாதது. மேற்கூறிய இரண்டும் சில சிறுகதைகளில் கலந்துள்ளன.
இந்த தொகுப்பிற்கு முன்னுரை எழுதிய நண்பர்களான கருணாகரன், மாலன் ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தக் கதைகளை வெவ்வேறு காலத்தில் வெளியிட்ட அம்ருதா, ஞானம், நடு இணையம், மலைகள், மற்றும் திண்ணை என்பனவற்றுக்கு நன்றி கூறுவதுடன், இவை வெளிவருமுன்னர் ஒப்புநோக்கிச் சரிபார்த்த நண்பர் முருகபூபதிக்கும் எனது நன்றிகள்.
நான் தொழிலில் மிருகவைத்தியன். ஆனால், பத்திரிகை உலகிற்குத் தற்செயலாகத் தள்ளப்பட்டு அதன் பின்பு இலக்கிய உலகிற்கு வந்துள்ளேன் . இந்த உலகில் நடப்பதற்கு உதவியவர்கள் எஸ். பொன்னுத்துரை, முருகபூபதி மற்றும் கருணாகரன் ஆகிய மூவருமே. இவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளேன் . ஆரம்பத்தில் வண்ணாத்திக்குளம் வாழும் சுவடுகள் பாகம் – 01 மற்றும் 02 இன் பின்பு எனது எழுத்துகளைப் புத்தகமாக்கியவர் நண்பர் கவிஞர் கருணாகரனே .
எனது இந்த சிறுகதைத் தொகுப்பை அவருக்கே சமர்ப்பிக்கின்றேன். அந்தரங்கம் சிறுகதைத் தொகுப்பை பதிப்பிக்க முன்வந்த புலம் புத்தகாலயத்தினருக்கு எனது நன்றிகள்.
மறுமொழியொன்றை இடுங்கள்