
குடும்ப அமைப்புக்கள் மீது காலங்காலமாக பல்வேறு விதமான உரையாடல்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. திருமணம்/உறவுமுறைகள் போன்றவை தொடர்ந்து அதிகாரத்தைத் தேக்கிவைக்கவும், எதிர்ப்பாலினர் மீது அதிகாரத்தை பிரயோகிக்கவுமே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன என்ற குரல்கள் சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயே உரத்து எழுப்பப்பட்டிருக்கின்றன. சேர்ந்து வாழ்தல் (Living Together) இன்னபிற, திருமணம்/குடும்ப அமைப்புக்களுக்கு மாற்றாக முன்வைக்கப்பட்டாலும், இன்றும் குடும்பம் என்ற அமைப்பு முழுமையாக உடைக்கப்படாமலே -இன்னுமின்னும்- இறுக்கமடைந்து வருகின்றது. மேலும், ஒரளவு அடிப்படை உரிமைகள் சட்டத்தால் வரையறுக்கப்பட்ட குடும்ப அமைப்புக்களின் உள்ளேயே அதிகாரமும் வன்முறையும் அதிகளவு பிரயோகிக்கப்படும்போது, சட்டங்களுக்கு உட்படாத சேர்ந்து-வாழ்தல் போன்றவற்றினூடாக வன்முறை/அதிகார துஷ்பிரயோகம் நிகழ்த்தப்படும்போது சட்டரீதியாக எதையும் அணுகுகின்ற போக்கும் இல்லாதுபோய்விடுகின்றது என்பது கவனத்திற்குரியது.
ஆண்-பெண்-அரவாணிகள் இன்னமும் ஒரு சமத்துவமான சூழலில் வாழமுடியாத நிலை இருக்கும்போது ஆகக்குறைந்தது திருமணம் என்ற ‘சட்டம்’ அங்கீகரிக்கின்ற ஒரு அமைப்பை தமது பாதுகாப்பின் நிமித்தம் பலர் நாடுகின்றார்கள். பொருளாதாரரீதியில் தன்னைத்தானே எவரின் துணையின்றியும் இன்றைய சூழலில் பொருந்தி வாழமுடியும் என்று நினைக்கின்ற பெண்கள்/ஆண்கள் திருமணம் என்ற அமைப்பை உடைத்து, சேர்ந்து-வாழ்தல் என்ற அடுத்த கட்டத்திற்கு நகர முயல்கின்றனர். எனினும் அமைப்புக்குள்ளோ/ அமைப்பின்றியோ எவர் வாழ்ந்துகொண்டிருந்தாலும், இருப்பின் அர்த்தம் எதுவென்ற கேள்வி எல்லோரையும் தொடர்ந்து துரத்திக்கொண்டே இருக்கின்றது.
உனையே மயல் கொண்டு என்ற நாவல், குடும்பம் என்ற அமைப்புக்கூடாக புலம்பெயர்ந்தவர்களின் உளவியல் பிரச்சினைகளை ஒரளவு அக்கறையோடு அணுகுகின்றது. கலாநிதிப் பட்டத்திற்காய் ஆய்வு செய்துகொண்டிருக்கும் சந்திரனையும், அவர் வாழ்வில் குறுக்கிடும் இரு பெண்களையும் சுற்றிக் கதை நகர்கின்றது. பதினெட்டு வயதில் திருமணமாகி, ஒரு வருடத்திற்குள் குழந்தையொன்றையும் பெற்று, அடிக்கடி மனோநிலை மாறுகின்ற ஷோபனாவின் மீதான ஈடுபாடு காலப்போக்கில் சந்திரனுக்குக் குறைகின்றது. மேலும் அடிக்கடி மனவழுத்தத்திற்கு ஆளாகும் ஷோபனாவோடு, குழந்தை பிறந்ததற்குப் பின்பாக ஒரிருமுறைகளே சந்திரனால் உடலுறவில் ஈடுபட முடிகின்றது. அவ்வாறான திருப்தியின்மையில் இருக்கின்ற சந்திரனுக்கு விவாகரத்துப் பெற்ற ஜூலியாவுடன் நெருக்கம் அதிகரிக்கின்றது. சந்திரன் ஏற்கனவே திருமணமானவன் என்றறிந்தும் மனத்தடையில்லாது ஜூலியாவுக்கு சந்திரனோடு இயல்பாய்ப் பழக முடிகின்றது.
இவ்வாறு முக்கோண உறவுகளாய் கதை நகர்ந்துகொண்டிருக்கையில், ஷோபனாவை உளவியல் நிபுணரிடம் கூட்டிச்செல்ல சந்திரன் முயற்சிக்கின்றார். உளவியல் ஆலோசனை பெறுவதே தீண்டத்தகாத விடயமாக இருக்கும் ஒரு சமூகத்தில் ஷோபனாவை வைத்தியரிடம் கூட்டிச்செல்லுதல் அவ்வளவு இலகுவான விடயமல்ல. உளவியல் ஆலோசனைகளின்போது ஷோபனாவால் முழுமையாக குடும்ப உறவில் ஈடுபடமுடியாததற்கு, அவர் 83 ஜூலைக் கலவரத்தில் சிங்களக்காடையர்களால் நிர்வாணமாக்கப்பட்டு வெருட்டப்பட்டிருக்கின்றார் என்று தெரிகின்றது (அதன் நீட்சியில் ஷோபனாவிற்கு bipolar disorder இருக்கின்றதென நாவலில் குறிப்பிடப்படுகின்றது). மேலும் கலவரத்தால் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு இடம்பெயரும் ஷோபனாவின் குடும்பத்திலிருந்து அவரது தமையன் இனப்பிரச்சினை எழுச்சிபெற்ற காலங்களில் போராளிக்குழுவில் சேர்ந்து இன்னொரு போராளிக்குழுவால் கொல்லப்பட்ட பாதிப்பின் படிவும் ஷோபனாவில் இருக்கக்கூடும் என்றும் கதையின் ஓட்டத்தில் சொல்லப்படுகின்றது (ரெலோ-புலிகள் மோதல்). இவ்வாறு பல்வேறு உளவியல் அழுத்தங்களோடு இருக்கும் ஷோபனாவிற்கு உடலுறவு உட்பட எதிலும் முழுமையாக ஈடுபடமுடியாதிருக்கின்றது.
ஷோபனாவின் இந்த உளவியல் பிரச்சினையை(bipolar disorder) அறிந்துகொள்கின்ற சந்திரனுக்கு, தான் ஷோபனாக்குத் தெரியாமல் இன்னொரு உறவில் ஈடுபட்டு வருவது யோசிக்க வைக்கின்றது. என்ன என்றாலும் தன்னை நேசிக்கும்… தன்னிடம் முழுமையாக ஒப்படைத்த ஷோபனாவிற்கு உண்மையாக இருக்கவேண்டும் என்று சந்திரன் சிந்திக்கத்தொடங்குகின்றார். இதற்கிடையில் சந்திரன் கலாநிதிப்பட்டத்திற்கான ஆய்வுகளை எழுதுவதில் மும்முரமாய் ஈடுபடுகையில் ஜூலியா இன்னொரு ஆணுடன் நெருங்கிப் பழக்த் தொடங்குவதும் சந்திரனுக்குத் தெரியவருகின்றது. இனித் தான் நல்லதொரு ‘ஆண்பிளையாக’ இருக்க முயற்சிக்கலாம் என்று நினைக்கின்றபோது ஷோபனா சந்திரனின் இன்னொரு உறவைக் கண்டுபிடிக்கின்றார். இவ்வாறு பல்வேறு சிக்கல்களில் அகப்படுகின்ற சந்திரன் வேலையின் நிமித்தம் இன்னொரு நகருக்கு மனைவியின் கட்டளையின்படி செல்வதோடு நாவல் முடிகின்றது (நீ மெல்பேண் வருவாய்தானே?…./ எனக்கு தற்போது மன ஆறுதல் ஏற்பட சில காலம் தேவை’ ப 147).நாவல் இருவேறு திசைகளை நோக்கி வாசகர்களை நகர்த்திக்கொண்டிருக்கின்றது.
உளவியல்ரீதியான பிரச்சினை வெளிப்படையாகத் தெரிகின்ற ஷோபனாவிற்கும் சந்திரனுக்கும் இடையில் ஒன்றுமாய்.., இன்னொரு பக்கத்தில் சந்திரனுக்கும் ஜூலிக்குமான நெருக்கங்களுக்கிடையில் கதை விரிகின்றது. நாவலில் ஷோபனாவின் உளவியல் பிரச்சினைக்கு காரணம் தேட டொக்ரர் கந்தசாமியிடம் ஆலோசனைப்பெறப்போகின்ற சந்திரன் -தான் இரண்டு பெண்களுக்கிடையில் தத்தளிக்கும்- தனது உளவியல் பிரச்சினை குறித்து எதையும் பகிர்ந்ததாய்க் காணவில்லை. தமிழ்ச்சமூகம் உளவியல் பிரச்சினைகளை அலட்சியமாய் ஒதுக்கித் தள்ளுகின்றது என்கின்ற புரிந்துணர்வு இருக்கின்ற சந்திரன், இவ்வாறு தனது மனைவிக்குத் தெரியாது ஈடுபடுகின்ற உறவு, மனைவிக்குத் தெரியவரும்போது தனது துணை இதைவிட இன்னும் ஆழமான மனச்சோர்வுக்கு ஆளாகிவிடுவார் என்பதை வசதியாக மறந்துவிடுகின்றார்.
சந்திரனின் தனது பேராதனை வளாகக் காதலை பொருளாதார வசதியின் நிமித்தம் நிராகரிக்கின்றபோது, ‘நீ ஒரு அசலான யாழ்ப்பாணத்தான்’ என்று ஒரு சிங்கள நண்பன் கூறுவதை சந்திரன் தனது புலம்பெயர் -ஆஸ்திரேலியா- வாழ்விலும் மிகவும் கவனத்துடனேயே கடைப்பிடிக்கின்றார். தன்னைவிட வயது மூத்த ஜூலியா உடலுறவில் தரும் உயரிய இன்பத்தைப் போல, அதற்குப்பின் அரசியல் தத்துவம் இன்னபிறவற்றை தன்னுடன் உரையாடுவது குறித்து மனம் மகிழும் சந்திரன் பதினம்வயதில் நிற்கின்ற ஒரு பெண்ணைத் திருமணஞ்செய்யும்போது இவற்றை அந்த வளரிளம்பெண்ணால் ஈடுகட்டமுடியாது என்று ஆழமாய் யோசிக்கமுடியாது போந்தது எந்தவகையில் என ஆராய வேண்டியிருக்கின்றது. மேலும் தான் இன்னொருவருடன் உறவில் ஈடுபடுவதை, தமிழ் நண்பர்களிடையே சந்திரன் பகிரப் பயப்பிடுகின்றார். அவர்கள் ஒரு கொலையைப்போலத்தான் எடுத்துக்கொள்வார்களென தனது இந்திய நண்பனிடம் சொல்லிக்கொள்ளவும் செய்கின்றார். இங்கேதான் சந்திரனின் இன்னொரு அசலான யாழ்ப்பாண முகம் வெளிப்படுகின்றது. தனது இருத்தலுக்கு தமிழ் அடையாளத்தை எளிதாய் சுவீகரித்து, கொழும்பிலிருந்து ஒரு இளம்பெண்ணைத் தனது துணையுமாக்குகின்ற சந்திரனுக்கு தனது மனதுக்கு/சமூகத்துக்கு எதிரான விடயமொன்றைச் செய்யும்போது மட்டும் தமிழ் அடையாளம் வெறுப்பூட்டுகின்றது. மேலும் ஜூலியாவை இன்னொரு ஆணுடன் நெருக்கமாய் காண்கின்ற சந்திரன் -வெறுப்பில்- பாலியல் தொழில் செய்யும் விடுதியை நாடிச் செல்கின்றார். அங்கே காத்திருக்கின்ற நேரத்தில் ‘ஞானம்’ பிறந்து –நல்லவேளை எந்தப் பெண்ணும் எனக்குப் பிடிக்காமல் போனது. ஜூலியாவின் மீது ஏற்பட்ட கோபத்தினால் என்னையே கெடுத்திருப்பேன்’ ப -138– என வெளியேறுகின்றார். சந்திரன் பாலியல் விடுதியை விட்டு வெளியேறிவிட்டார்;ஆனால் கதைசொல்லி இன்னும் நகரவில்லை.
இதற்கடுத்து மேலைத்தேய பாலியல் விடுதிகள் பற்றி வாசிப்பவர்களுக்கு கதைசொல்லி விரிவுரை செய்யத்தொடங்குகின்றார். தனிப்பட்ட விருப்பின் பேரிலேயும் அரசாங்கத்தின் அனுமதியுடந்தான் இவர்கள் பாலியல் தொழில் செய்கின்றார்கள் எனவும் எழுதச்செய்கின்ற கதைசொல்லி, பாலியல் தொழில்/பாலியல் தொழிலாளி என எழுதாமல் விபச்சாரம்/விபச்சாரி என எழுதுவதிலேயே அவரது நிறத்தை வெளிக்காட்டிவிடுகின்றார். மேலும் ‘தனிப்பட்டமுறையில் விபச்சாரியுடன் உறவு கொள்ள சந்திரன் விரும்பவில்லை’ (ப 139) எனச் சந்திரனை ஒரு புனிதபிம்பமாக ஆக்கவும் கதைசொல்லி மிகவும் கஷ்டப்படுகின்றார்.நாவலின் முக்கிய குறையாக ஷோபனாவின் பாத்திரம் முழுமையாக வளர்க்கப்படாமல் சிதைக்கப்பட்டதைக் குறிப்பிடவேண்டும். சந்திரனே முக்கியபாத்திரமாகவும், கதை சொல்லி ஒரு ஆணாகவும் இருக்கும்போது ஒரு பெண்ணின் பாத்திரத்தை வளர்ப்பது கடினமானது என்றபோதும், இன்னொரு பக்கத்தில், ஜூலியாவின் பாத்திரத்தின்போது, அவரது மூதாதையர்களின் ஜரிஷ் பின்புலம் குறித்தும் அவரது முன்னைய உறவுகள் குறித்து விரிவாக நாவலில் பேசப்படுவது குறித்தும் கவனிக்கவேண்டியுள்ளது. இதை இன்னொருவகையாய், ஷோபனாவின் பாத்திரம் முழுமையாக வளர்த்தெடுக்கும்போது, நாவலில் சந்திரனுக்கான முக்கிய இடம் இல்லாது தானாகவே ஒழிக்கப்பட்டுவிடும் என்ற பயத்தால், ஷோபனா இடைநடுவில் நிறுத்தப்பட்டிருக்கின்றார் எனவும் ஒரு வாசகர் எடுத்துக்கொளும் வாசிப்புச் சாத்தியமுண்டு. ஓ.எல் பரீட்சையில் சித்தியடையாத ஷோபனாவை, கலாநிதிப்பட்டம் செய்துகொண்டிருக்கின்ற சந்திரன் தனது துணையாக எவ்வாறு தேர்ந்தெடுத்துக்கொண்டார் எனவும் கேள்வி கேட்கவேண்டியிருக்கிறது (கதையில் நேரடியாகச் சொல்லாவிட்டாலும் இவ்வாறான தேர்வுக்கு யாழ்ப்பாணியர்கள் எதிர்பார்க்கும் கொழுத்த சீதனத்தைத் தவிர வேறெதுவும் இருக்குமுடியாதெனத்தான் வாசிக்கும்போது நினைக்கத்தோன்றுகினறது). எனெனில் ஜூலியாவுடனான உறவிலிருக்கும்போது அரசியல் தத்துவம் இன்னபிற ஈடுபாடுகளை ஜூலியா பேசும்போது சந்திரனின் பாத்திரம் மனமுவகை கொள்கின்றது. தனக்கான அலைவரிசையில் ஒருவரைத் தேர்ந்தெடுக்காது இருக்கும் சந்திரன் (அல்லது சந்திரனைப் போன்றவர்கள்) ஷோபனா போன்றவர்கள் உளவியல்ரீதியான பிரச்சினைகளில் இல்லாது இயல்பாய் இருந்தாலும் இன்னொரு உறவைத் தேடி (இங்கே உடல்தேவைக்குப் பதிலாக, உளத்தேவைக்காய்) போகமாட்டார்கள் என்பதை எங்ஙனம் நம்புவது?
மேலும் சந்திரனின் இன்னொரு அறிவுஜீவி முகம் வேறொரு இடத்தில் வெளிப்படுகின்றது. காய்கறிக்கடையில் சந்திக்கும் வயது முதிர்ந்தவர், ‘தம்பி உங்களைப்போல இளம்பிள்ளையல் படிக்க வரலாம். எங்களைப்போல வயதானவர்கள் மருத்துவ வசதியில்லாமல் சாக வேண்டியதா?’ என்று கூறும்போது சந்திரன் மகாத்மாகிவிடுகின்றார். இப்படிப்பட்ட ‘பொய் பித்தாலாட்டங்கள்’ காட்டி வருகின்றவர்கள் மீது சந்திரனுக்கு (அல்லது கதைசொல்லிக்கு) கோபம் வருகின்றது. இந்தச் சந்திரன் தீவிரமான போர்சூழலுக்குள் வாழ முயன்றிருந்தால், என்ன காரணம் காட்டியாவது ஈழத்தை விட்டு புலம்பெயரும் பிறரின் சோகத்தை விளங்கிக்கொள்ள முயன்றிருப்பார். ஆனால் அவர்தான் அசல் யாழ்ப்பாணத்தவர் ஆயிற்றே. படிப்பை முன்வைத்து பறந்துவந்துவிடுவார். படிப்பை மூலதனமாக்க முடியாதவர்கள் எப்படித் தப்பியோடிவருவது என சந்திரன் இன்னொரு ஆய்வை இன்னொரு கலாநிதிப் பட்டத்திற்காய்ச் செய்யவேண்டுமெனச் சொல்லவேண்டியிருக்கின்றது.
சந்திரனின் பாத்திரம் ஒரு சராசரி யாழ்ப்பாண அறிவுஜீவியாக வார்க்ப்பட்டதையும், ஆண்மய்ய பார்வையினுடாக நாவல் படைக்கப்பட்டதன் பலவீனங்களையும் மீறி, புலம்பெயர் சூழலை மையமாக கொண்டு இந்நாவல் எழுதப்பட்டதால் கவனத்துக்குரியதாகின்றது. மேலும் நமது சமூகம் எளிதாய்ப் புறக்கணிக்கும் உளவியல் பிரச்சினை என்பது ஏதேனும் ஒருவகையில் குடும்ப வாழ்வைச் சிதைக்கக் காரணமாகக்கூடுமென நாவல் சொல்லவரும் புள்ளி முக்கியமானது.
நமது தமிழ்ச்சமூகத்தில் பெற்றோராகும், ஆண்/பெண் பிறகு, தமது தனிப்பட்ட வாழ்வு குறித்து அக்கறை கொள்ளாதுபோகும் திசைகள் நோக்கி நாம் நமது உரையாடலை வளாத்தெடுக்கவேண்டும். உடலுறவு/தங்களுக்கென தனிப்பட்ட நேரம் ஒதுக்குதல்/தங்களுக்குப் பிடித்ததைச் செய்யாதிருத்தல் போன்றவற்றோடு குழந்தைகளே தமக்கான அனைத்துமென பெற்றோர்கள் மாறும்போது, -மத்தியவயதுகளில் பெற்றோராக இருப்போருக்கு- தமக்கிடையிலான உறவு மீதான சோர்வும்/சலிப்பும் வருவதைத் தடுப்பற்கான மாற்றுவழிகள் குறித்து நிறைய யோசிக்கவேண்டியிருக்கின்றது.
Elanko DSe https://djthamilan.blogspot.com/
மறுமொழியொன்றை இடுங்கள்