அரசியலும் நாடகங்களும்.

நடேசன்

—————————————————————

Bertolt Brecht) 

அரிஸ்ரோட்டல் கருத்துப்படி,  நாடக பாத்திரங்கள் தாம் நடிக்கும்போது   அதன் வழியே மனித உணர்வுகளைத் தூண்டி     பார்வையாளர்களது  உணர்வுகளுக்கு வடிகாலாகவே  நாடகங்களை நடத்தினார்கள் . திகில் ,  நகைச்சுவை   முதலான  இருவகையான நாடகங்களிலும் இதையே  நோக்கமாக  கொண்டிருந்தார்கள். 

நாடகங்களில் வரும் பாத்திரங்களுடன்  தங்களை   ஒன்றவைத்து பார்த்து ரசித்த  மக்கள்,  அந்தப் பாத்திரங்களோடு தங்களைத்  திணித்து, அவர்களது  உணர்ச்சிளை ஏந்திய கிண்ணங்காக வெளியேவருவார்கள்.

ஹோலிவூட் திரைப்படத்துறையிலிருந்து நமது பாரதிராஜாவின் முதல் மரியாதை வரையிலும் இதே போஃர்முலாவை பின்பற்றினார்கள். இப்படியான பாத்திரங்களைப் பார்த்து கண்ணீர், வெறுப்பு, கோபம்,  ஆதங்கம், மற்றும் காதல்  முதலான  உணர்வுகள் ஏற்பட  மூளையின் ரெம்பொரல் பகுதி (Temporal lobe sit behind the ears))  இதற்கு இசைவாக அமைந்திருக்கிறது .

பாசமலரை பார்த்து நாம் அழுவதும் மத்திய வயதில் உள்ளவர்கள் முதல் மரியாதை சிவாஜியாக மாறி ஆதங்கப்படுவதும்,  ஜெயகாந்தனின் சினிமாவுக்குபோன சித்தாளில் கணவனது பனியனுக்கு முத்தம் கொடுப்பதற்கும்   மூளையின் ரெம்பொரலே  காரணம் .

மூளையின் ரெம்பொரல் பகுதி மனிதர்கள் தொடர்ச்சியாக பாதுகாப்பாக வாழ்வதற்காகத் தேவை .

ஆதிகாலத்தில் சிறிய இனக்குழுவாக,   வாழும்போது மிருகங்கள்,  மற்றைய எதிரான இனக்குழுக்களிலிருந்தும்  மட்டுமல்ல, ,   இயற்கையின் சீற்றங்களிலிருந்து உறவுகளைப் பாதுகாத்து,  இனப்பெருக்கமடைந்து வாழ்வதற்கு இசைவாக்கமடைந்த மூளையின் பகுதியாகும்.   இவை எமக்கான வாழ்க்கைப் பாதையில் பச்சை,  சிவப்பு,  மஞ்சள் சமிக்கை விளக்காக  தொழில்படுகிறது .   இந்த மூளையின் பகுதியையே   கிரேக்க நாடகக்காரரிலிருந்து நமது சினிமா, சீரியல்  மற்றும் இலக்கியகாரர்களும் சுரண்டி வாழ்கிறார்கள்.

மதத் தலைவர்கள் அரசியல்வாதிகள் எல்லோரும் சுரண்டும் பகுதியும் இதுவே.  ஒரு விடலைப் பையன்,  பெண்ணின் மார்பகத்தை பார்க்கும் ஆவலுடன் இவர்கள்  பார்க்கிறார்கள். மனித மூளையின் ரெம்பொரல் பகுதியில் தொட்டால் உணச்சிகள் லீட்டர் கணக்கில் சுரக்கும் கேப்பை மாட்டின் மடி போன்ற அமுதசுரபி என்பது இவர்களுக்குத் தெரியும்.

இப்படியான நாடகத்தின்  மெலோ டிராமரிக்கான தன்மையை ரஷ்ஷிய நாடக ஆசிரியர் ஸ்ரனிஸ்லோவாக்கி                                               ( Stanislavski) மாற்றினார்.  நாடகத்தில் உண்மையான தன்மைகளால் உணர்வுகளைக் கொண்டு வரவேண்டும் என நாடகப் பகுதியை மாற்றி அமைத்தார் . ஆனால்,  இங்கும் பார்ப்பவர்கள் பாத்திரங்களின் உணர்வுகளில் பங்கு பற்றுவது தேவைப்படுகிறது . மூளையின் ரெம்பொரல் பகுதிக்கு இங்கும் தேவை இருக்கிறது.

இப்படியாக  ரசிகர்களது உணர்வுகளைச் சுரண்ட மறுத்து  அறிவாக  சிந்திக்க வைக்கும் முறையை நாடகத்தில் புகுத்தியவர் பேர்டல்ட்  பிரட் (Bertolt Brecht) என்ற ஜெர்மனியர்.  இவரது எபிக் நாடகமுறை பார்வையாளரை நாடக கதாபாத்திரத்தில் பங்கு பற்றாது விலகி இருக்க வைக்கும்.

 அதாவது நாடகத்தின் நடைமுறையில்  (Alienation) புதிய விடயங்களைப் புரிய வைப்பதே இவரது நோக்கமாக இருந்தது.  இங்கு பார்வையாளர் தங்களது மூளையின் முன்பகுதியால் (Frontal Lobe) சிந்திப்பார்கள். 

உதாரணமாகக் கயிறு  ஒன்று மனிதனருகே  தூங்குவதைப் பார்த்த பார்வையாளர்கள்,  அங்கு தூக்குத்தண்டனைக் கைதி இருப்பதாகக் கற்பனை செய்யவேண்டும்.  இம்முறையில் அமைந்த ஜோர்ஜ் ஓவலின் 1984 என்ற நாடகத்தைப் பார்த்தேன்.  ஒரு சர்வாதிகார அரசு எப்படி இயங்கும் என்பதை   பார்வையாளர்களுக்கு  சிந்திக்க வைப்பதே  இந்த நாடகத்தின் நோக்கமாக இருந்தது. 

நான் இங்கு குறிப்பிடும்  இந்த மூன்று விதமான உதாரணங்களை தற்போதைய   எமது ஈழ அரசியலில் உள்ள நாடகப்பாணியை புரிய வைப்பதற்காகவே எழுதினேன்.

1950 களின் கடைசியில்   தொடங்கி  சத்தியாக்கிரகம்,  கடையடைப்பு ,  சிங்களஶ்ரீ எதிர்ப்பு போராட்டம்,  பகிஷ்கரிப்பு முதலான  மெலோடிறாமாக்கான  நாடகங்கள்  தமிழ் அரசியலில் நடத்தப்பட்டு,   எங்களது மூளையின் ரெம்பொரல்  அதிகமாக வேலை செய்து,   அதன் மூலம் எங்களுக்குப் பரிசாகக் கிடைத்தது  கடந்து முப்பது வருட யுத்தம்தான் !

 இந்த யுத்தம் உடனே வரவில்லை.   தொடர்ச்சியாக மக்களது உணர்வுகளை செல்வநாயகம் , அமிர்தலிங்கம் காசிஆனந்தன் எனக் கேப்பை மாட்டின் மடியைத் தடவி   பால் கறப்பதற்கு தயார்பண்ணுவதுபோல் இளைஞர்கள்  மனரீதியில் தயார் நிலைக்கு கொண்டு வரப்பட்டார்கள்.

முற்றாக பக்குவப்படாத இளைஞர்களை கஞ்சாப்புகை பாதிப்பதுபோல் கிட்டத்தட்ட 17- 20 வயதான இளைஞர்கள் பலியாகிறார்கள் .  இருபது  வருடங்கள் இந்த புகையடித்த விடயம்  நடந்தது.

இதற்கு எதிர்விளைவாக ரனிஸ்லோவாக்கின் நாடகத்தன்மையான நடவடிக்கை மூலம்  சிங்கள மக்கள் அவர்களது அரசியல்வாதிகளால்  தள்ளப்படுகிறார்கள்.

அவர்கள் விடயத்தில்  உண்மையான யதார்த்தமுள்ளது. அவர்களது  2500 வருட இந்திய எதிர்ப்பு உண்மையானது. சேர சோழ பாண்டிய நாயக்க அரசுகளின் படையெடுப்பால் காலம் காலமாக இலங்கை மக்கள் அழிந்தது உண்மை .

அதேபோல் அவர்கள்  தங்களது பவுத்த மதத்திற்கு இந்தியாவால் ஆபத்துவருமென்று  எண்ணியதால் மகாவம்சம் உருவாகியது.  அதையும் பொய் எனச் சொல்லமுடியாது.

தென்னிந்தியாவில் இருந்து பவுத்த மதம் அழிந்துபோனதை அவர்கள் கண்டார்கள்.  அப்படி தங்களுக்கு வரலாம் என நினைக்கிறார்கள் . அந்தப் பயம் உண்மையா என்பது விவாதமில்லை

போராட்ட இயக்கங்களுக்கு போர் பயிற்சி இந்தியாவில் நடந்தது உண்மையானது  பின்பு ராஜீவ் – ஜேஆர் ஒப்பந்தம் என்பன இந்தியாவின் திணிப்பு நடவடிக்கையே.  பிற்காலத்தில் விடுதலைப்புலிகளைத் தேவையற்றபோது ஒடுக்குவதற்கு உதவினார்கள் என்பது அவர்களுக்கு வசதியானபோதே செய்தார்கள் .

தற்போது தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகள் கூட ஒருகாலத்தில் இலங்கைமீதான இந்தியாவின் ஆதிக்கத்தில்  பணயக் கைதிகளாக முடியும்.

இப்படியான தன்மைகளால் சிங்கள மக்கள் கிராமத்திற்குள் வழிதவறி வந்து மூலைக்குள் ஒதுங்கிய காட்டு மிருகத்தின் நிலைக்கு தள்ளப்படுகிறாரகள். இதுபோதாதென்று இலங்கையில் நடந்த இஸ்லாமிய  தீவிரவாதிகளின் ஈஸ்டர்குண்டு வெடிப்பும் அவர்களை மேலும் பல பக்கங்களிலுமிருந்து வரும் அபாயமெனப் பயமுறுத்துகிறது.  கடைசியாக நடந்த தேர்தல்களின் தெரிவுகள் இதையே காட்டுகின்றன.

75 வீதமான சிங்கள பவுத்த மத மக்கள் கொண்ட  இலங்கையில் சமாதானம்,  இனங்களின்  பரஸ்பர நல்லிணக்கத்தாலேதான்  உருவாகமுடியும். மற்றைய தீர்வுகள் எந்த உருவில் வந்தாலும் எதுவும் நடைமுறைச்சாத்தியமற்றது. இதுவரை வட கிழக்கு தமிழருக்கு மட்டும் இருந்த நூடில்ஸ் போன்ற சிக்கல்  இஸ்லாமியர்களும் இந்த விடயத்தில் சேர்ந்து இடியப்ப சிக்கலாகிறார்கள்.

தமிழர்களுக்கு,  அரசியல்வாதிகளின்  மடியைத் தடவி பால்கறக்க 20 வருடம் தேவைப்பட்டது.  ஆனால் இஸ்லாமியரைப் பொறுத்தவரையில் இந்த வேகத்தில் போனால் பாதிக்காலம்தேவைப்படாது.

தற்பொழுது நமக்கு     தேவையான விடயம் பேர்டல்ட்  பிரட்  (Bertolt Brecht)  நாடகமுறையே. உணர்ச்சிவசப்படாத சிந்திக்கும் அரசியல். மற்றும் நேர்மையான  அரசியல்வாதிகளின் தேவை.

  மூன்று இனங்களும் இனவாதத்தால் கூர்மையாக்கப்படும்போது யாருக்கும் நன்மை வராது தொடர்ச்சியான முறுகல் நிலை ஏற்பட்டால் பாதிப்புகள்தான்  தொடரும் .  இலங்கை மீதோ அல்லது   சிங்கள மக்கள் மீதோ  உலக நாடுகளால் எந்த முடிவையும் திணிக்கமுடியாது. ஆனால்,   இலங்கையை ஒரு ஏமன்  அல்லது   சோமாலியாவாக்க முடியும்.

அது யாருக்கு நன்மையளிக்கும் ?

“அரசியலும் நாடகங்களும்.” மீது ஒரு மறுமொழி

  1. A very good article for the young generation to understand the future. Which is their political leaders determined to poison it with emotional seduction

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: