
டொமினிக்ஜீவாவா..? அல்லது புதுவை இரத்தினதுரையா…?
நடேசன்
——————————————————————————————–
டொமினிக் ஜீவாவை, ஈழத்து மார்க்சிம் கோர்க்கி என்று ஒரு சிங்களப் பத்திரிகையில், நண்பர் மடுள்கிரியே விஜேரத்ன எழுதியிருந்தார் . உண்மையான நமது மார்க்சிம் கோர்க்கி என நாம் கொண்டாடவேண்டியவர் கவிஞர் புதுவை இரத்தினதுரையே. அந்தப் பெருமை அதற்கு உரியவரிடம் சேரவேணடும் என்பதால் இதை எழுதுகிறேன்.
“ரஷ்யாவின் சிறந்த கவிஞராகிய ஒருவர் போல்ஸ்விக்குகளால் கொலை செய்யப்படுவதைத் தடுக்கும்படி, லெனினிடம் கேட்டு அந்தக் கொலையைச்செய்ய தயாராகியிருந்தவர்களுக்கு அவசரத்தந்தி மூலம் தகவல் அனுப்புமாறு மார்க்சிம் கோர்க்கி கேட்கிறார்.
ஆனால், அந்தத் தந்தி உரிய இடத்தையடையுமுன்போ அல்லது, திட்டமிட்டபடியோ அந்தக் கவிஞர் கொலை செய்யப்படுகிறார்.
இதனால் மனமுடைந்த கோர்க்கி, 1922 இல் மீண்டும் நாட்டைவிட்டு வெளியேறி இத்தாலி செல்கிறார். அக்காலத்தில் அவருக்கு காசநோயும் பீடித்திருந்தது. அவர் செல்வது ஒருவகையில் லெனினுக்கு மகிழ்வைக் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
” நீ போல்ஸ்விக் டாக்டர்களிடமிருந்தும் ரஷ்யாவிலிருந்தும் தூர இருப்பது எனக்கு மகிழ்ச்சி தருகிறது” என்று லெனின் சொல்லியதாக அறியப்படுகிறது.”
இலங்கையில் குறிப்பிடத்தகுந்த சிறந்த கவிஞரான புதுவை இரத்தினதுரையையும் , அன்று லெனின் சொன்னதுபோன்று பிரபாகரனும் வெளிநாட்டுக்கு அனுப்பியிருந்தால் இப்பொழுதும் நாம் புதுவை இரத்தினதுரையுடன் பேசியிருக்க முடியும்.
அத்துடன் அவரும், தான் எப்படி நமது டொமினிக் ஜீவாவை உயிர் தப்ப வைத்தேன் என்பதை இணையவழி காணொளி அரங்கு – ஜீவா நினைவேந்தல் நிகழ்வில் சொல்லியிருந்திருப்பார்.
அதைச் சிலர் நம்பியும் பலர் நம்பாதும் இருப்பார்கள். ஏன் புதுவையே அதைச் சொல்லவேண்டிய அவசியமில்லை என்று அமைதிகாத்து, ஏனையோரைப்போன்று அமைதியாக ஜீவாவின் இளம்வயது சாதி அடக்குமுறைக்கு எதிரான இயக்கத்தையும் , மற்றும் 47 வருடகாலமாக மல்லிகை இதழை வெளியிட்ட அயராத முயற்சியையும்தான் பேசியிருப்பார். அத்துடன் தான் பீக்கிங் சார்பாக இருந்தாலும் மாஸ்கோ சார்பான ஜீவா தன்னோடு மனிதாபிமான மற்றும் ஜனநாயகப்பண்புடன் தோழமை பூண்டிருந்தார் எனவும் கூறியிருப்பார்.
இலங்கை கம்யூனிஸ்ட்கட்சியின் யாழ். பிரதேச பிரதிநிதியும் தொழிற்சங்க சம்மேளனத்தின் செயலாளருமான விஜயானந்தன் விடுதலைப்புலிகளால் கொலை செய்யப்பட்டதும், அந்தச்செய்தி கொழும்பு ஆங்கில ஊடகமொன்றில் டொமினிக் ஜீவா கொலை செய்யப்பட்டார் என்ற தவறான தகவலாக வந்தது.
அதனால் பதறியவர்கள் பலர் இறுதியில் அந்தச் செய்தி தவறானது என ஊர்ஜிதப்படுத்திக்கொண்டபோதிலும், ஜீவா அவரது சக தோழன் கொல்லப்பட்டமையால் மனமொடிந்து வேதனையுற்றிருந்தாரென அறிந்துகொண்டனர்.

இந்த நேரத்தில் விடுதலைப்புலிகளின் உளவுப்பிரிவுப் பொறுப்பாளரது கடிதம் வந்ததும், அவரை எச்சரித்து கொழும்புக்குப் போகச் சொன்னவர் புதுவை இரத்தினதுரையே ! அவ்வாறு கடிதம் வந்ததென்ற தகவலை ஜீவா, எனக்கும் எழுத்தாளர் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணித்திற்கும் போர்முடிந்த காலத்தில் கொழும்பில் வைத்து டொமினிக் ஜீவா சொன்னார்.
ஆனால், யாரால் தான் உயிர் தப்பினேன் என்பதை ஜீவா சொல்லவில்லை . நான் பின்னர் பல இடங்களில் விரலை விட்டு தோண்டி அறிந்தேன்.
நமது ஜீவா மட்டுமல்ல , புதுவை இரத்தினதுரையால் மற்றும் இரண்டு எழுத்தாளர்களும் உயிர் தப்பியது எனக்குத் தெரியும். அவர்களது சம்மதமில்லாது அவர்களது பெயர்களை வெளியே சொல்வது நாகரீகமில்லை.
அதில் ஒருவர் கவிஞர் மட்டுமல்ல கலைஞருமாவார்.
மற்றவர் எழுத்தாளர் மட்டுமல்ல நாடறிந்த பேச்சாளருமாவார்.
பாரதத்தில் வரும் கர்ணன் போன்று இறுதிவரையிலும், அதாவது “ ஈழப் “ போரின் இறுதியில் சரணடையும் வரையிலும் விடுதலைப்புலிகளுடன் சேர்த்திருந்தது மட்டுமல்லாமல், சரணடைய முன்பு இடுப்பில் சுமந்திருந்த கைத்துப்பாக்கியை புதருக்குள் மறைவாக எறிந்துவிட்டுச் சென்றவர் புதுவை இரத்தினதுரை.
கவிதைபற்றி தெரியாத பேராதனை பல்கலைக்கழகக் காலத்தில் அங்கு புதுவையையும் காசி ஆனந்தனையும் ஒரு கவியரங்க நிகழ்விற்கு அங்கே அழைத்திருநந்தார்கள் . அப்பொழுது நான் புதுவையின் கவிதையால் ஈர்க்கப்பட்டேன்.
நீடித்த போர் முடிவுக்கு வந்த பின்னர் நானும் எழுத்தாளர் முருகபூபதியும் 2010 ஆம் ஜனவரியில் திருகோணமலையில் புதுவையின் குடும்பத்தைச் சந்தித்தபோது இந்த விடயத்தை என்னால் மனதால் மட்டுமே நினைக்க முடிந்தது.
துக்கத்திலிருந்தவர்களிடம் சாதாரண வார்த்தைகள் பேசக்கூட முடியவில்லை.
இப்பொழுது சொல்லுங்கள் 1991 பின்பாக கிட்டத்தட்ட 30 வருடகாலங்கள் டொமினிக் ஜீவாவை வாழவைத்தது யார் ?
எமது இலங்கை மார்க்சிம் கோர்க்கி யார் ?
நாம் டொமினிக் ஜீவாவுடன் சேர்த்து நினைவு கூரவேண்டியவர் யார்..?
இந்தவிடயத்தை நான் இப்போது எழுதாவிட்டால் இனி எப்போது எழுதுவது ?
எழுதிய பின்னராவது இந்த விடயத்தை வெளியே பேசுவதற்குத் துணிவானவர்கள் யார்..??
—0—
மறுமொழியொன்றை இடுங்கள்