நினைவோடையில் நண்பர் சபேசன்

நடேசன்.
https://youtu.be/FDqzNiBA4Go

இந்த நினைவுக் காணொலியை சபேசனுக்காக நண்பர் முருகபூபதியும் நானும் ஒழுங்கு பண்ணியது நண்பர் சபேசனுக்காக மட்டுமல்ல. பல காரணங்கள் உண்டு

1) பொதுவாழ்வில் ஈடுபடுபவர்களை சமூகம் இலகுவாக மறந்துவிடுகிறது. பல முறை அவர்கள் குடும்பத்திலும் நல்ல பெயர் வாங்குவதில்லை . அப்படி இயங்குபவர்கள் எப்படி குடும்பங்களைப் புறந்தள்ளுவார்கள் என்பது எனக்கும் தெரியும். ஆறு நாட்கள் வேலை செய்ததுடன் என ஏழாவது நாளும் உதயத்திற்காக வேலை செய்தேன். அதற்கு முன்பு அஸ்திரேலிய தமிழ் அகதிகள் சங்கம் அதற்கு முன்பு இந்தியாவில் மருத்துவ நிலையம் என நான் ஈடுபட்டபோது எப்படி குடும்பத்தைப் புறக்கணித்தேன் என்பதை எனது மனைவி இன்றும் சொல்லிக்காட்டுவார் .

சொந்தப் பணம் , உழைப்பைத் தொலைத்தபின் ஏமாற்றம் மட்டுமே இறுதியில் வரவாகிறது.

இதுதான் பொது விதியென்றால் யார் பொது வாழ்வுக்கு வருவார்கள்? . நல்லவர்கள் வரமாட்டார்கள். இதுவே அரசியலில் நமது கண்முன்னால் நடக்கிறது.

2) நண்பர் சபேசன் என்னுடன் பேசும்போது அடிக்கடி நினைவுகூரும் வார்த்தை . நீரும் நானும் ராஜாஜி பெரியார் மாதிரி – ஆனால் மனந்திறந்து பேசமுடிகிறது. அது உண்மை இதுவரை தமிழகத்து அரசியல் தலைவர்களில் எனக்குப்பிடித்தவர் ராஜாஜியே, சபேசன் பெரியாரது சீடன் .
நட்புக்குள் அரசியல் இல்லை . அதேபோல் அரசியலுக்குள் நட்பும் இருப்பதில்லை. அரசியல் மற்றும் வியாபாரப்போட்டிகளைக் கடந்து நாம் மானிடராக நிற்கவேண்டும்.
3) நாம் இளமையில் வந்து இந்த நாட்டில் வயது முதிர்ந்தவர்களாகி விட்டோம் . எமது பிள்ளைகள் பேரப் பிள்ளைகளுக்குச் சொத்துக்களோடு நட்பு மரியாதை என்ற சில விழுமியங்களையும் விட்டு செல்லவேண்டும்

1954 ஜூலை 7ஆம் திகதி பிறந்த சண்முகம் சபேசன், 2020 மே மாதம் 29 ஆம் திகதி காலமானார் என்ற போதிலும், 2009 மே மாதத்தில் முடித்த ஈழத்துக்கான போரினால் மனக்காயமடைந்தவர். அந்த மனக்காயங்கள் , முள்ளிவாய்க்காலில் இருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் வெளிநாட்டில் வாழ்ந்த அவருடன் கடந்த பதினொரு வருடங்களாக வலி தந்துகொண்டே இருந்ததை நன்கு அறிவேன். சபேசனது அந்தத் தீராத வலி அவர் மறையும் வரை ஆறவேயில்லை.
அந்தக்காயங்களுடன்தான் அவர் எம்மை விட்டு விடைபெற்றுள்ளார்.

மனப்பாதிப்பை, எழுத்துக்கள் பயணங்கள் மூலம் கடந்து வரவேண்டும் எனச் சொல்லி அவரைத் தேற்றி, சுமுக நிலைக்குக் கொண்டுவர ஓரளவு முயன்றேன். ஆனால் சபேசனது இடுக்கண்கள் , பல வடிவங்களில் தொடர்ந்து வந்து அவரது மூச்சுக்காற்றைத் தடுத்துவிட்டன. உலகெங்கிலும் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்றினால், தொடர்பாடலற்ற நிலைமைகள் விடயத்தை மேலும் சிக்கலாக்கியது.

கடந்த வருடம் நடந்த எனது புத்தகங்களுக்கான ஆய்வு நிகழ்வில் எனது அரசியலற்ற பயண நூலைப்பற்றிப் பேசும்படி அவரை அழைத்தேன்.சந்தோசமாக வந்து கலந்து கொண்டு உரையாற்றி விட்டுச் சென்றார். அந்த நிகழ்வு முடிந்த பின்பு பேசுவதற்காக நான் கொடுத்த புத்தகத்தையும், அதற்காக எழுதி எடுத்து வந்த குறிப்பையும் தரையில் விட்டுச் சென்றிருந்தார். ஏற்கனவே அவர் தனக்கு வரும் ஞாபக மறதியைப் பற்றிச் சொல்லியிருந்தாலும், அன்றைய அந்தச் சம்பவம் என்னைக் கவலை கொள்ள வைத்தது.

சபேசன் விடுதலைப்புலிகளின் அவுஸ்திரேலியா அமைப்பான தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவில் மிக முக்கிய பிரதிநிதியாகவும் ,மெல்பனில் இயங்கிய சமூக வானொலி 3 C.R. தமிழ்க்குரலில் ஒலிபரப்பாளராகவும் இருந்தார்.
சபேசன் சுமார் கால் நூற்றாண்டுகளாக ஒவ்வொரு கிழமையும் குளிர் , மழை, வெக்கை , உடல் உபாதை எனப்பாராது நடத்திய தமிழ்க்குரல் வானொலியிருந்தும் அர்ப்பணிப்புடன் இணைந்து இயங்கியவர்.
இப்படியான பொது வாழ்வுக்காக நண்பர்களாக அவரை நாம் நினைவு கூருவோம்.


About noelnadesan

Commentator and analyst of current affairs.
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.